Skip to Content

06. லைப் டிவைன்

 
பூரண யோகத்தின் தத்துவத்தை விளக்கி பகவான் ஸ்ரீ அரவிந்தர் Life Divine என்ற நூலை எழுதினார். Life Divine என்றால் தெய்வீக வாழ்வு என்று பொருள். வாழ்வை நீத்து தெய்வத்தைத் தேடும் மரபே நம் நாட்டு பழம்பெரும் மரபு. அதற்கு நேர் எதிரான கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தெய்வீக வாழ்வு என்ற பொருள்படும்படி இந்நூல் அமைகிறது.
 
மேலைநாட்டு அறிஞர்கள் பகுத்தறிவையே முதன்மையாகக் கொண்டு வாழ்வை அமைத்துக்கொண்டவர்கள். தெய்வ வழிபாடு நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது. நம்பியவர்களுக்குத் தெய்வம்; நம்பாதவர்களுக்குத் தெய்வம் இல்லை. கண்ணால் கண்டதை மட்டுமே நம்புபவன் பகுத்தறிவுவாதி. தெய்வம் இல்லை என்றும் நம்புவது பகுத்தறிவுவாதம். இதுவே மேல்நாட்டு வாழ்வின் அடிப்படை. மேல்நாட்டு அறிஞர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி பகவான் இந்நூலை எழுதியதால், Life Divine என்ற தத்துவத்தைப் பகுத்தறிவு ஏற்கும் வகையில் எழுதியுள்ளார். தெய்வ நம்பிக்கையைப் பகுத்தறிவு ஏற்கும் வகையில் உள்ள நூல் இது ஒன்றாக மட்டுமே இருக்கும்.

ஸ்ரீ அரவிந்தர் அறிந்த மொழி ஆங்கிலம். அதுவே அவருக்குத் தாய்மொழி போல் அமைந்தது. அவர் செயல்கள் யோக சக்தியால் நிரம்பியதால், அவர் செய்த காரியங்கள் அளவு கடந்து பரவியதுண்டு. இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்று அவர் தவம் இருந்து அது பலித்ததால், இந்தியாவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் சுதந்திரம் அடைந்தன. Life Divine புத்தகத்தை 1914இல் ஆரம்பித்து 1920இல் எழுதி முடித்தார். அப்பொழுது ஐரோப்பாவில் பிரெஞ்சு மொழி பிரபலமாக இருந்தது. உலக மொழியாகும் வாய்ப்பு பிரெஞ்சு மொழிக்கும், ஸ்பானிஷ் மொழிக்குமே இருந்த காலம் அது. அந்த நிலைமை மாறி இன்று ஆங்கிலம் உலக மொழியாகியிருக்கின்றது. அதன் யோக அடிப்படை Life Divine ஆங்கிலத்தில் எழுதப்பட்டது ஆகும். 

Life Divine தத்துவ வியாக்கியானமாக எழுதப்பட்டது. இந்த யோகப் பயிற்சி முறைகளை விளக்கும் நூல் Synthesis of Yoga ஆகும். இவற்றுள் உள்ள அத்தனை பெரிய கருத்துகளும் அடங்கிய சிறு நூல் ஒன்றுண்டு. 547 கருத்துகள் ஒவ்வொன்றையும் ஓரிரு வாக்கியங்களில் குறிப்பிடுவதாகும். Thoughts and Aphorisms என்ற தலைப்புடையது. சிந்தனைகளும், நெறிகளும் என்ற பொருள்படக்கூடியது. இரு புத்தகங்களாகவும், மூன்று பிரிவுகளாகவும் Life Divine அமைக்கப்பட்டுள்ளது. பரம்பொருளும் பூவுலகமும் என்பதைப் பொருளாக அமைத்துள்ளார். தத்துவம் என்பதால் சாதாரண மனிதனால் எளிதில் புரிந்துகொள்ள முடியாது என்பது உண்மையானாலும், பூவுலகத்தைப் பொருளாகக் கொண்டுள்ளதால், மனித வாழ்வைப் புறக்கணிக்காததால், எல்லா மக்களுக்கும் ஓரளவு புரியும் வகையில் அவரது அடிப்படைக் கருத்துகளை எடுத்துச் சொல்ல முடியும் என்பதும் உண்மை. இந்நூலின் ஆன்மீக உயர்வு, எழுத்தின் பெருமை, கருத்தின் மந்திர சக்தி, உயர்ந்த கருத்தை பகவான் நமக்கு அறிமுகப்படுத்தும் முறை, பூவுலக வாழ்வை அவர் தத்துவம் தொடும் இடம், அவற்றை நாம் பக்திபூர்வமாக ஏற்றுக்கொள்ளும் பொழுது நம் உணர்வுக்கு அவை எளிமையாகும் விதம், அறிவுக்கு ஏற்கும் வகையில் அவர் விளக்கும் பாங்கு ஆகியவற்றை மட்டும் இக்கட்டுரையில் குறிப்பிட விரும்புகிறேன்.
 
ஆன்மீக உயர்வு:

கருத்தைத் தாங்கி வரும் எழுத்து மந்திரமாக மாறி, சொல்லுக்கு மந்திர சக்தி ஏற்படுகிறது. அதையும் தாண்டிய நிலையில் அவர் எழுத்து ஆன்மீக உயர்வையும் வெளிப்படுத்துகிறது. அதனால் இந்நூலைப் பயிலும்பொழுது கருத்து தெளிவாக இருந்தால் அதன் உயர்வை நாம் பெறுகிறோம். கருத்து தெளிவாக இல்லாவிட்டாலும் நாம் அதன் உயர்வை உணர்வில் பெறத் தவறுவதில்லை. புதியதாக வந்த இனிப்பை ஒருவர் சாப்பிட்டால் அதன் பெயர் தெரியாவிட்டாலும் ருசியை உணரத் தவறுவதில்லை. அந்த வகையில் அவர் எழுதியவை அமைந்துள்ளன. 

எழுத்தின் பெருமை:

தெய்வ நம்பிக்கையைப் பகுத்தறிவுக்குப் பொருத்தமாக எழுதிய நூல் இது ஒன்றே எனலாம். உலகில் இதுவரை எவரும் முயன்றும் பார்க்காத ஒரு முறையை வெற்றிகரமாக பகவான் கையாண்டிருப்பது அவர் எழுத்தின் சிறப்பு. அத்துடன் இங்கு வேறு ஒரு முக்கியத்துவமும் உண்டு. பகவான் மேற்கொண்ட யோகம் இதுவரை எவரும் மேற்கொள்ளாத ஒன்று. மரணத்தை உலகம் வெல்ல முடியும் என்ற கொள்கை உலகத்திற்குப் புதியது. அத்துடன், “இது நடக்காது” என நாம் கருதக்கூடியது. தெய்வங்களைத் தாண்டிய நிலைக்கு மனிதன் யோகத்தால் முன்னேற முடியும் என்பதும் அப்படிப்பட்ட கொள்கை. இவற்றை எல்லாம் விளக்க அவர் மேற்கொண்ட முறை இதுவரை எவரும் மேற்கொள்ளாத ஒன்று. அம்முறையை அவர் வெற்றிகரமாகப் பின்பற்றிய வகை அவர் யோகமும், கொள்கைகளும் பலிக்கும் என்பதற்கு முன்னோடியாகும். 

கருத்தின் மந்திர சக்தி:
 
எழுத்து மந்திரங்களுக்கும் மேற்பட்ட கருத்தை விளக்குவதால் ஆன்மீகச் சிறப்புடனிருக்கிறது. அதனால் கருத்தை மட்டுமே ஒருவர் புரிந்துகொண்டாலும் மந்திரங்களைப் பயின்ற பலன் ஏற்படும். கருத்து புரியாவிட்டாலும், படிக்கக் கேட்பவர்களுக்கும் அம்மந்திர சக்தி தன் பலனை அளிக்கும். அதுபோல் 20 நாள் தினமும் 1 மணி நேரம் படிக்கக் கேட்டவருடைய பாரிச வாய்வு குணமாயிற்று.
 
உயர்ந்த கருத்தை பகவான் நமக்கு அறிமுகப்படுத்தும் முறை:

முடிவாகச் சொல்ல வேண்டியவற்றை முதலிலேயே சுருக்கமாகச் சொல்வது இவர் எழுதும் முறை. கடைசி அத்தியாயத்தில் விளக்க வேண்டிய கருத்திற்கு முதல் அத்தியாயத்திலேயே வித்திடுகிறார். முதல் அத்தியாயத்தில் உள்ள அத்தனைக் கருத்துகளையும் பூரணமாக ஆய்ந்துபார்த்தால் முடிவான வாதத்தின் முக்கிய பகுதிகளைக் காணலாம்.

56 அத்தியாயங்கள் அடங்கிய இப்புத்தகத்தில் பாதிக்கு மேற்பட்ட அத்தியாயங்களைத் தனிப் புத்தகமாக வெளியிட முடியும் என்ற அளவில் எழுதியிருக்கிறார். அநேகமாக எல்லா அத்தியாயங்களுக்கும் அந்த அமைப்பு ஓரளவுண்டு. தனிப் புத்தகம் போல் எழுதியதுடன் தன் பூரண யோகத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளும் அளவில் ஒவ்வோர் அத்தியாயமும் அமைந்துள்ளது.

ஒவ்வோர் அத்தியாயத்திலும் முதல் பாராவில் அந்த அத்தியாயத்தில் சொல்ல வேண்டிய முழுக் கருத்தையும் சொல்வது வழக்கம். எல்லா அத்தியாயங்களிலும் முதல் பாராவை எடுத்துத் தொடராகத் தொகுத்தால் அது ஒரு தெளிவான புத்தகமாக அமையும். அதேபோல் எந்த அத்தியாயத்திலும் ஒவ்வொரு பாராவின் முதல் வரியில் அப்பாராவிலுள்ள கருத்தை எழுதிவிடுவார். எல்லாப் பாராக்கள் முதல் வரிகளையும் சேர்த்தால் அத்தியாயத்தின் சுருக்கம் கிடைக்கும். அத்துடன் பாராவின் கடைசி வாக்கியம் பொதுவாகப் பாராவின் முக்கியக் கருத்தின் விளக்கத்தை மீண்டும் சொல்வதாக அமையும். 

பூவுலக வாழ்வை அவர் தத்துவம் தொடும் இடம்:

யோகமும், இலட்சியமும், கருத்தும், முறையும் உலகுக்குப் புதியன என்றாலும் அவற்றின் அடிப்படைகள் அனைத்தும் வேதாந்தக் கருத்துகளேயாகும். ஸ்ரீ அரவிந்தருடைய யோகம் வாழ்வை ஏற்றுக் கொள்வதால், அவர் ஏற்றுக்கொண்ட வேதாந்த அடிப்படைகளுக்கும் வாழ்வில் பலன் உண்டு. சர்வம் பிரம்மம் என்ற வேதாந்தக் கருத்தைத் தம் அடிப்படைகளில் ஒன்றாகப் பகவான் கொண்டுள்ளார். நடைமுறை வாழ்வில் இதை எப்படிச் செயல்படுத்துவது? சர்வம் பிரம்மம் என்றால் மலையும், கடலும், மனிதனும், விலங்கும் பிரம்மமே என்றாகும். வாழ்வில் நாம் எப்படி இதை ஏற்றுக்கொள்ளலாம்? எப்படிச் செயல்படுத்தலாம்? அதன் விளைவுகள் எப்படியிருக்கும்?

சர்வம் பிரம்மம் என்பதை ஏற்றுக்கொண்டால் பிணக்குகளுக்கு இடமில்லை. நானும், எதிரியும் பிரம்மமேயானால், “எதிரி என்பதில்லை” என்றாகும். இருவர் ஒரு சொத்தின் மீது உரிமை கொண்டாடினால், ஒருவரிடம் உரிமை இருக்கும்; மற்றவர் வம்பு செய்பவராக இருப்பார். உரிமையுடையவர் சர்வம் பிரம்மம் என்பதை ஏற்றுக்கொண்டால், எதிரியும் பிரம்மமே. சொத்தும் பிரம்மமே. சொத்து இவரிடம் இருந்தாலும், எதிரியிடம் இருந்தாலும் ஒன்றே என்றாகிறது. இதுவே யோக இலட்சியத்தை வாழ்வில் ஏற்றுக்கொள்வதாகும்.

ஸ்ரீ அரவிந்தருடைய பக்தர்கள் அவருடைய யோக இலட்சியத்தை வாழ்வில் ஏற்றுக்கொண்டால், அது ஞானமாக மட்டும் இருக்காது; யோகசக்தி பெற்ற ஞானமாக இருக்கும். அதனால் அதற்குரிய உயர்ந்த விளைவுகளும் இருக்கும். சொத்தின் மீது பிணக்கு ஏற்பட்டபொழுது உரிமையுள்ளவர், இந்த ஞானத்தைச் செயல்படுத்த முனைந்து தாமே முன்வந்து எதிரியிடம் முழுச் சொத்தையும் வலிய ஒப்படைத்தார். அதைச் செய்தபின் ஞானத்தை முழுமைப்படுத்த முனைந்தார். சொத்தைப் பற்றிய எண்ணத்தை முழுமையாக விலக்கினார். 10ஆம் நாள் உரிமையில்லாதவர் தாம் பெற்றதை தாமே முன்வந்து உரிமையுள்ளவருக்கு முழுவதையும் திருப்பிக் கொடுத்தார்.

Life Divineஇல் உள்ள உயர்ந்த கருத்துகள் ஏராளம். அவற்றில் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.

 

  1. சர்வம் பிரம்மம்.
  2. ஞானம் தன்னை அறியாமையாகக் கட்டுப்படுத்தி வெளிப்படுத்துகிறது.
  3. ஒரு பகுதி அதன் முழுமையை (whole) விடப் பெரியது.
  4. மரணம் வாழ்வுக்கு நித்தியத்துவம் அளிக்கிறது.
  5. செயல்கள் மௌனத்தில் உற்பத்தியாகின்றன.
  6. ஆனந்தம் வலியாக மாறுவேடம் பூண்கிறது.
  7. நல்லது, கெட்டதிலிருந்து உற்பத்தியாகிறது.
  8. கெட்டது, நல்லதிலிருந்து உற்பத்தியாகும்.
  9. ஜடம் ஆன்மாவின் உடல்.
  10. ஆன்மா ஜடத்தின் ஜீவன்.
  11. சிறியது, பெரியது என்பது மாயை.
  12. உயர்ந்தது, தாழ்ந்தது என்பது மாயை.
  13. இன்றைய மனிதன் நாளைய தெய்வம்.
  14. பகுத்தறிவு உணர்வின் பிடியிலிருந்து விடுபட்டால் பிரம்மம் காட்சி தரும்.
  15. இன்றைய உலகம் ஓர் அற்புதக் காட்சி.

 

இந்நூலில் உள்ள கருத்துகள் சிலவற்றை வாழ்வில் கடைப்பிடிக்கும்பொழுது அவை எப்படித் தோன்றும் என்பதற்குச் சில உதாரணங்களையும் எழுதுகிறேன்.

 

  1. முடியாதது என்பதில்லை.
  2. எவரும் மற்றவரைவிடப் பெரியவர் என்பதில்லை.
  3. பாவம் என்று ஒன்றில்லை.
  4. நல்லது என்று எதையும் அறுதியிட்டுக் கூற முடியாது.
  5. எதுவும் அழிவதில்லை.
  6. நம்மால் அடிப்படையான எதையும் உற்பத்தி செய்ய முடியாது.
  7. நாம் விரும்பினால் சோகம், சந்தோஷமாக மாறும்.
  8. மரணத்துடன் வாழ்வு முடிவதில்லை.
  9. தோல்வி என்பதில்லை.
  10. கஷ்டம் என்பது உண்மையில் வாய்ப்பாகும்.
  11. வாழ்வின் பலன் நம்மைப் பொருத்ததேயன்றி, வாழ்வைப் பொருத்ததன்று.
  12. தோல்வி என்பதே வெற்றி.

 

நாம் பக்திபூர்வமாக அவர் கருத்தை ஏற்றுக்கொண்டால் நம் உணர்வுக்கு அவை எளிமையாகும் விதம்:

அறிவுக்கும், உணர்வுக்கும் அடிப்படையான வித்தியாசம் ஒன்று. எதை நாம் அறிவால் புரிந்துகொண்டாலும் அதற்குரிய தெளிவு ஏற்படும். மனத்திலுள்ள குழப்பம் விலகும். ஆனால் அதனால் ஒரு பிரச்சினை தீராது. ஏனெனில் அறிவுக்குத் தெளிவுண்டு; திறன் இல்லை. வாழ்க்கைப் பிரச்சினையைத் தீர்க்கும் திறன் அறிவுக்கு இல்லை. அறிவைப் பயன்படுத்தி நாம் ஒரு பிரச்சினையைத் தீர்க்கலாமேயன்றி, அறிவு தெளிவு பெறுவதால் மட்டும் தானே ஒரு பிரச்சினை விலகாது. உணர்வுக்கு அத்திறன் உண்டு. மனதில் ஒரு கவலை இருந்தால், முழுவதுமாக அது ஏற்பட்ட காரணம் நமக்குப் புரிந்துவிட்டால், கவலை அழிந்துவிடும்; கவலையை ஏற்படுத்திய நிகழ்ச்சிகளும் மாறிவிடும். இது உணர்வுக்குரிய திறன்.

ஸ்ரீ அரவிந்தர் வலியும், ஆனந்தமும் ஒன்றே என்கிறார். காலில் ஏதோ ஒரு வியாதி உண்டாகி, அதனால் 3 நாட்களாக அதிக வலிபடும் ஒரு பக்தர் இக்கருத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, பக்திபூர்வமாக ஏற்றுக்கொள்ள முனைந்தால், காலில் உள்ள வலி, வலியாகத் தனித்துத் தெரியும்; தொடர்ந்தும் வலிக்கும். வலிக்கும், அறிவுக்கும் தொடர்பு இருக்காது. அறிவு தெளிவுபடுவதால் காலில் உள்ள வலி குறையாது. பக்திபூர்வமாக இக்கருத்தை ஏற்றுக் கொள்வதென்றால், முதலில் மனம் இதில் உள்ள ஆன்மீக உண்மையை ஆமோதிக்க வேண்டும். மனம் அதற்கு இடம் கொடுத்தால், மனம் ஒரு புறம் இவ்வுண்மையை ஏற்றுக்கொள்வது தெரியும். ஆனால் உடல் வலிபடுவதும் மறுபுறம் தெரியும். மனம் இவ்வுண்மையை ஏற்றுக்கொண்டபின் நாம் படுவது வலியில்லை, ஆனந்தம் என்று உள்ளுணர்வில் நம்ப முயன்றால், நம் உணர்வு பகவான் மீதுள்ள பக்தியால் அவர் கருத்தை நடைமுறையில் ஏற்க முயன்றால், வலி குறைய ஆரம்பித்து, சற்று நேரத்தில் மறைந்துவிடும். தொடர்ந்த முயற்சியால் வலி இருந்த இடத்தில் ஆனந்தம் ஏற்படுவதும் தெரியும். இதுவே பக்திக்குள்ள சிறப்பு. அறிவுக்கு இல்லாத பூரணத்தைப் பக்தி பெற்றுள்ளதை நாம் அனுபவத்தில் பார்க்கலாம்.

அறிவு ஏற்கும் வகையில் ஸ்ரீ அரவிந்தர் விளக்கும் முறை:

பகுத்தறிவுவாதிகளும், மதவாதிகளும் சந்தித்து விவாதம் செய்தால் முக்கியமாக எழும் கேள்வி, “கடவுளை நீ பார்த்து இருக்கின்றாயா? எனக்குக் காட்ட முடியுமா?” என்பவை ஆகும்.

ஸ்ரீ அரவிந்தர் பகுத்தறிவுவாதி சாதித்தவற்றை விளக்கமாக எழுதியபின், அறிவு தன் முடிவான கட்டத்தில் விளங்கிக்கொள்ள முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறார். அறிவுக்குக் கடவுள் எட்டவில்லை என்றால், கடவுள் இல்லை என்று ஆகாது; கடவுள் இருக்கிறார் என்றும் கொள்ள வேண்டாம். ஆனால் அறிவே முடிவானதில்லை. அறிவு Consciousness ஜீவியத்திலிருந்து உற்பத்தி ஆனது. அறிவுக்குப் புலப்படவில்லை என்றால், “ஜீவியத்திற்குப் புலப்படுகிறதா?” என்று நாம் ஆராய்ச்சியைத் தொடர வேண்டும் என்கிறார். கவிஞனும், மேதையும் ஜீவியத்தின் மூலமாகக் காவியத்தை உற்பத்தி செய்வதையும், விஞ்ஞான விளக்கம் பெறுவதையும் நாம் அறிவோம் என்பதால், அவற்றைச் சுட்டிக்காட்டி ஆன்மாவைத் தேடுபவனும் அம்முறையைக் கடைப்பிடிக்கலாம் என்கிறார். அத்துடன் அதுவே வேதாந்த ரகஸ்யம் என்றும் மேற்கோள் காட்டி, சச்சிதானந்தத்தின் பகுதிகளான சத்தியம், சித்தம், ஆனந்தம் ஆகியவற்றை விளக்கி, பகுத்தறிவுவாதியின் சம்மதத்தைப் பெறுகிறார்.

1000 பக்கங்களுக்கு மேற்பட்ட இந்நூலில் 200, 300 வாதங்களை ஆங்காங்கு எழுப்பும் ஸ்ரீ அரவிந்தர், அவற்றுள் எந்த ஒரு வாதத்தையும் “வேதம் சொல்கிறது, நீ ஏற்றுக்கொள்”, “நான் சொல்கிறேன், நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறவில்லை. நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்பட்ட தெய்வ வழிபாட்டை மனித அறிவுக்குப் புலப்படும் வகையில் முதலிலிருந்து கடைசி வரை ஸ்ரீ அரவிந்தர் இந்நூலில் எழுதியுள்ளார்.

ஸ்ரீ அரவிந்தர் புத்தகங்கள் எதுவும் புரியவில்லை என்று பலரும் சொல்வதுண்டு. ஏதாவது ஒரு விஷயம் புரியவில்லை என்றால், ‘இது Life Divine போல் இருக்கிறது’ என்ற வழக்கும் இங்குண்டு. இது நிற்க, அவருடைய வாதங்களைப் பரிசீலனை செய்தால் ஐயம் என்பது ஒரு துளிகூட இல்லாமல் தெளிவாக இருப்பது தெரியும். எளிமையாகப் பிறருக்கும் விளக்கலாம் எனத் தெரியும். Life Divine 3 பக்கம் படித்த ஒரு பெரிய படிப்பாளி, “தலை சுற்றுகிறது; நரம்பெல்லாம் முறுக்குகிறது; உள்ளே என்னவோ செய்கிறது” என்றெல்லாம் சொன்னார். ஆனால் ஆசிரமப் பள்ளியில் 18 வயது பிள்ளைகளுக்கு Life Divine நூலைப் பாடப் புத்தகமாக வைத்து நடத்துகிறார்கள். 3 ஆண்டில் புத்தகம் முடிகிறது. 18 வயது குழந்தைகளானாலும், நூலிலுள்ள கருத்தை தெளிவாகப் புரிந்துகொண்டு ஆசிரியர் எழுதச் சொல்லும் கட்டுரைகளை வாராவாரம் எழுதுகிறார்கள். அவர் எழுதியவை அளவு கடந்த தெளிவுடையனவாக இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. எந்தக் கருத்தை விளக்கும் முன்னும் ஸ்ரீ அரவிந்தர் அதற்கு எதிரான கருத்தையும் எடுத்து விளக்கி, இவையிரண்டும் எதன் பகுதிகளோ அதன் கண்ணோட்டத்திலிருந்து எழுதுவதால் அவர் எழுத்து சிறப்பான தெளிவுடன் விளங்குகிறது.

உதாரணமாகப் பிறப்பை விளக்க முற்படுபவர் அதற்கு எதிரான இறப்பையும் விளக்குகிறார். பிறப்பும், இறப்பும் வாழ்வின் பகுதிகளாகும். எனவே வாழ்வு உயர்ந்தது. இவை இரண்டையும்விட உயர்ந்தது. இவை இரண்டையும் தன்னுள் அடக்கியது. வாழ்வின் நோக்கில் பிறப்பையும், இறப்பையும் ஸ்ரீ அரவிந்தர் விளக்க முற்படுவதால், அவர் விளக்கம் அதிகத் தெளிவுடையதாக இருக்கின்றது.

ஸ்ரீ அரவிந்தர் யோகம் உலகத்திற்குப் பல புதிய கருத்துகளை வழங்கியுள்ளது. மரபிலுள்ள சில கருத்துகளுக்குப் புது உயிர் கொடுத்து, இங்கு முக்கியத்துவம் அளித்து, புதிய பொலிவுடன் விளங்கச் செய்கிறது. அது போன்ற சிலவற்றைக் கீழே குறிப்பிடுகிறேன்.

 

  • தெய்வீக வாழ்வு
  • தீமையை நன்மை வெல்ல முடியும்.
  • தெய்வம் என் புண்ணியத்தைத் திருடிச் சென்றது.
  • தெய்வம் மனிதனை நாடி வருகிறது.
  • சிருஷ்டியில் தெய்வம் புதிய ஆனந்தத்தை நாடுகிறது.
  • சரணாகதியால் மனிதன் பெருந்திறன் பெறுகிறான்.
  • பூரண யோகத்திற்குரிய முறைகள் ஆன்மாவாலும், அறிவாலும் செயல்படுத்தக்கூடியவையாக மட்டும் இருக்க வேண்டும்.
  • உடலாலும், பிராணனாலும் பயிற்சி செய்யக்கூடிய முறைகள் பூரண யோகத்திற்கு உதவா.
  • பிரபஞ்சம் தன்னை மனிதனுக்குப் பல்வேறு அடையாளங்கள் மூலமாகவே அறிவுறுத்துகிறது.

 

உலகத்திற்குத் தான் வழங்கிய புதிய கருத்துகளை அறிஞர்கள் கூர்ந்து கவனிக்கும் வகையில் சிலவற்றை எழுதியுள்ளார். படிப்பவர்கள் அதைக் கடந்து செல்லத் தயங்கும் வகையில் அக்கருத்துகளை எழுதுகிறார். அவற்றில் ஒரு சில:

 

  • ஆதி நாள் முதல் ஆர்வமாக மனிதன் இறைவனைத் தேடுகிறான்.
  • சத்தியஜீவன் பிறப்பது தவிர்க்க முடியாதது.
  • சிருஷ்டி மனிதனுடன் முடியவில்லை. அடுத்த கட்டம் உண்டு.
  • உலகத்தில் உள்ள எந்த ஞானமும் மனிதனுக்குக் கிட்டும்.
  • அறிவு தனக்கு விளங்காததை, விளங்கும்வரை வீரியமாகத் தொடரும்.

 

இவருடைய யோகத்திற்கு கருவான சாதனங்களும், அவற்றைக் குறிக்கும் சொற்களும்:

சமர்ப்பணம்.

சரணாகதி.

விழிப்பு.

திருவுருமாற்றம்.

சைத்திய புருஷன்.

தெய்வம் மனிதனை நாடி வருவது.

சுபாவத்தை மாற்றிக்கொள்ள மனிதன் முன்வருதல்.

Integration எல்லா நிலைகளையும் சேர்த்து ஒருமைப் படுத்துதல்.

பழைய கருத்துகளுக்கு அவர் அளித்த புதிய விளக்கங்களில் சில:

 

  • அறிவு ஜடத்தில் உதிப்பது; ஜடமானது.
  • பிரச்சினை என்பது சுமுகம் குறைவதாகும்.
  • எந்த நிலையையும் எதிர்த்த இரு கூறுகளாகப் பிரித்துக் காண்பிப்பதே இயற்கை வழி (வாழ்வை நமக்கு இயற்கை மரணம், பிறப்பு என்பனவற்றால் அளிக்கிறது).
  • பிரபஞ்சத்திலிருந்து ஜீவனைப் பிரிப்பதே அகந்தை.
  • இறைவனை மட்டும் நம்பி வாழ்வதே தூய்மை.
  • தவம் என்பது அசுரனுக்குரிய வீரியம்.
  • உண்ணாவிரதத்தை உடல் பின்னர் தானே சரி செய்து கொள்ளும் வகையில் அதிகமாகச் சாப்பிட்டுவிடும்.
  • நிஷ்டையில் தபஸ்வி எய்தும் சமாதி நிலை (unconscious state) தன் நிலையை உணராத நிலை.

 

ஸ்ரீ அரவிந்தருடைய நடைக்குரிய சிறப்புகள் பல. அவற்றுள் ஒன்றிரண்டை மட்டும் குறிப்பிடுகிறேன்.

ஒரு பெரிய கருத்தை விளக்க ஒரு முழு அத்தியாயத்தை எழுதியவர் பின்வரும் பகுதிகளில் அதே கருத்தை ஒரு பாராவிலும் எழுதுகிறார். சில சமயங்களில் ஒரு வாக்கியத்தாலும் சொல்கிறார். ஒரு சொல்லாலும் அப்பெரிய கருத்தை அவரால் குறிப்பிட முடிகிறது. இது அவர் நடைக்குரிய சிறப்பு.

ஒருவர் தம் சிந்தனையின் சிறப்பை வளர்த்துக்கொள்ள இந்நூலில் உள்ள வாதங்களுக்குள்ள தொடர்பை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க முயன்றால் போதும். அறிவுக்குள்ள அனுபவத்தைத் தொட்டு அதன் மூலம் அறிவைச் சிந்திக்க வைப்பது அவர் முறை.

Life Divine கடினமான நூல், உயர்ந்த தத்துவ நூல், பேராசிரியர்களும் படிக்க சிரமப்படும் நூல் என்பது தெரிந்தும் நான் இக்கட்டுரையை எழுதியதற்கு ஒரு காரணம் உண்டு. அதன் பகுதிகள் இரண்டு. (1) புரிந்தாலும், புரியாவிட்டாலும் ஸ்ரீ அரவிந்தருடைய முக்கியத் தத்துவ நூல் என்பதால் பக்தர்களுக்கு இந்நூலைப் பற்றிச் சொல்வது அவசியம். (2) பக்திபூர்வமாக நூலை ஏற்பவர்களுக்குக் கடினமான கருத்தும் இனிமையாக விளங்குதல் சாத்தியம்.

ஆங்கிலம் அரசியலாலும், வணிகத்தாலும் வளர்ந்த மொழி. அதற்கும் ஆன்மீகத்திற்கும் ஜீவனுள்ள தொடர்பு கிடையாது; தொடர்பே இல்லை என்றும் சொல்லலாம். Peace என்ற சொல் அவர்களைப் பொருத்தவரை war என்ற சொல்லுக்கு எதிரானது. Peace என்றால் சண்டையொழிந்த சமாதானம் என்று பொருள். சாந்தி என்ற பொருள் peace என்ற ஆங்கிலச் சொல்லுக்கில்லை. Intuition faith என்ற சொற்களைப் பயன்படுத்தும் முன் ஸ்ரீ அரவிந்தர் தம் கருத்தை இச்சொற்கள் சரிவரப் பிரதிபலிக்காவிட்டாலும் வேறு வழியின்றி தாம் அவற்றைக் கையாள வேண்டியிருக்கிறது என்கிறார். தம் ஆன்மீகக் கருத்தை எடுத்துச் சொல்ல தேவையான சொற்களே இல்லாத மொழியில் தம் கருத்தை ஸ்ரீ அரவிந்தர் சிறப்பாக எழுத ஒரு புது எழுத்து நடையை உற்பத்தி செய்து எழுத வேண்டியிருந்தது. நடையைப் பொருத்தும், முறையைப் பொருத்தும் Life Divine ஒரு புதிய மொழி இலக்கியச் சிருஷ்டியாகும்.



book | by Dr. Radut