Skip to Content

03. அன்னையின் அருளும் மனித நம்பிக்கையும்

யோக மாயை:

உலகத்தையும், பிரபஞ்சத்தையும் சிருஷ்டித்த இறைவன் நேரடியாகச் செயல்படுவதில்லை. ஈஸ்வரனுடைய செயலானாலும் சக்தி மூலமே தன் செயலை வெளிப்படுத்துகிறான். சக்தியே செயல்களின் பிறப்பிடம். ஈஸ்வரனே அவற்றின் உறைவிடம். செயலுக்கும், தனக்கும் இடையே யோக மாயை என்ற திரையை ஏற்படுத்தியுள்ளான். மனித வாழ்வில் ஈஸ்வரன் வரும்பொழுது மேலும் தன்னை மறைத்துக் கொள்கிறான். சிருஷ்டியில் மனித வாழ்வு மேல் மட்டத்திலில்லை; கீழேயுள்ளது. மனித வாழ்வில் ஈஸ்வரனுடைய செயல்கள் ஜீவாத்மாவை மூடியுள்ள ஆணவத்தின் மூலமே வெளிப்படுகின்றன.
 
"அனைத்தும் அவன் செயலே" என்கிறோம். மனிதன் மேற்கொள்ளும் யோகமும் இறைவனுடைய செயலே. யோகமும், யோகத்தை மேற்கொள்பவனும் இறைவனே. இறைவனுடைய சக்திக்கு ஜோதியுண்டு, ஞானம் உண்டு, ஆனந்தமும் உண்டு, செயலாற்றும் திறனும் உண்டு. சக்தி தன் சித்தத்தால் யோகியின் ஜீவனில்
செயல்படுகிறது. யோகியின் ஜீவன் மலர்ந்து, விரியும்பொழுது சக்தி தன் ஜோதியையும், ஞானத்தையும், ஆனந்தத்தையும் அதனுள் பொழிந்து சாதனையைச் சாத்தியமாக்குகிறது. உடலின் கிளர்ச்சியும், ஆணவத்தின் அதிகாரமும் இருக்கும்வரை சாதகரின் முயற்சி தேவை.
 
ஜீவாத்மா, பரமாத்மாவையடைந்து ஒன்றிப்போவதை யோகம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம். யோகம் என்ற சொல்லுக்கு ஒன்றிப்போவது என்று பொருள். பரமாத்மாவின் பகுதியான ஜீவாத்மா, உலகில் பிறந்து பிறவிச் சூழலில் சிக்கியுள்ளது. அந்தச் சிக்கலினின்று விடுபட்டு, மீண்டும் தன் பிறப்பிடத்தை அடைந்து, பரமாத்மாத்மாவுடன் ஐக்கியமாவதே இன்று வரை உலகம் அறிந்த யோகம்.
 
ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகத்தில் பிறவிச் சுழலினின்று விடுபடுவதோ, பரமாத்மாவை அடைவதோ, அடைந்து அங்கே நிரந்தரமாக இருப்பதோ இலட்சியமில்லை. ஜீவாத்மா பிறவிச் சூழலில் சிக்கியிருந்தாலும், ஆணவ மலத்தால் கவ்வப்பட்டுள்ளது. பிறவிச் சூழலினின்று விடுபட முயல்வதற்குப் பதிலாக, பூரண யோகம் ஜீவாத்மாவை ஆணவ மலத்திலிருந்து விடுவிக்க முயல்கிறது. விடுபட்டபின், மனித வாழ்வு முழுவதும் பரமாத்மாவுடன் ஒன்றி,
தெய்வீக வாழ்வாக மாறுவதற்கு முயற்சி செய்து, மனித ஜீவனை தெய்வத்தைக் கடந்த நிலையிலுள்ள சத்தியஜீவனாகப் பிறப்பெடுக்கும் இலட்சியத்தைக் கொண்டது.
 
ஜீவாத்மா, பரமாத்மாவுக்குச் சரண் அடைய எடுக்கும் தவ முயற்சியின் அடிப்படை ஜீவனின் ஆர்வம். ஆர்வம் பெருகி, கனிந்து, சரணாகதியாக முடிவதற்குள் இடையில் ஒரு கடமையுள்ளது. ஜீவன் ஆர்வத்தைப் பெருக்கும்பொழுது ஜீவனுள் புதைந்துள்ள அனைத்தும் பெருக்கமடைகின்றன. ஆர்வம் இறைவனை நோக்கிச் சென்றாலும், ஜீவனின் பகுதிகளில் உள்ள குறைகள், குணக்கேடுகள் அசைந்து
வெளிப்படும். அவற்றை ஒதுக்கி விலக்குதல் அவசியம். எனவே ஜீவனின் ஆர்வமும், அதன் பெருக்கத்தால் வெளிப்பட்ட குறைகளை விலக்குதலும், சரணாகதியும் இந்த யோகத்தின் முக்கிய மூன்று பகுதிகளாகும்.
 
மூச்சு உயிரைக் காப்பாற்ற முழு நேரமும் செயல்பட வேண்டும். இமை கண்களைக் காக்க இடையறாத விழிப்புடன் இருத்தல் அவசியம். மனிதன் உயிர் வாழ அவனது எல்லா உறுப்புகளும் உயிருடனிருத்தல் தேவை. அதே போல, ஜீவாத்மாவின் ஆர்வம் அதன் இலட்சியத்தைப் பூர்த்தி செய்ய இடையறாது விழிப்புடனும், முழு நேரச் செயலுடன் இருப்பதுடன், அதன் பகுதிகளான மனத்தின் வேகமும்,
உணர்வின் திறனும், பிராணனின் வலுவும், உடலின் ஒத்துழைப்பும் பூரணமாகத் தேவை. காய்ந்து இறுகிய களிமண் போன்ற உடல், மழையால் நனைந்து உருகி தன்னைச் செப்பனிட அனுமதிப்பதைப் போல, உடலும் தன் சுபாவமும் கனிந்து, விழிப்புற்று தெய்வ சக்தியைத் தன்னுள் அனுமதிக்க விரும்ப வேண்டும். மனிதனுடைய மனம் தன் இலக்கின் மீது அசையாத குறியுடையது. நெறியான அந்த வேகம் இறைவனை மட்டும் நாட முடிவு செய்ய வேண்டும். அப்படிப்பட்ட
ஆர்வமே இறுதியில் இறைவனையடையவல்லது.
 
மனம், ஞானத்தின் கருவியாகச் சிருஷ்டிக்கப்பட்டது. ஆதியில் மனம் மௌனத்தால் சூழப்பட்டிருந்தது. மௌனமான மனத்தில்தான் ஞானம் உதயமாகும். மனிதன் தன் மனத்தில் எண்ணங்களை வளர்த்தான். அவற்றைப் பற்றித் தன் சொந்தக் கருத்தை உருவாக்கினான். அவற்றுள் தனக்குப் பிடித்தவை மூலம் செயல் பட்டான். மனத்திற்கேயுரிய சில பழக்கங்களையும் ஏற்றுக்கொண்டான். இவை மனத்தின் செயலுக்கு ஒரு புதிய அமைப்பைக் கொடுத்தன. இவையெல்லாம் மனிதன் தன் செயலாக ஏற்படுத்தியவை. எனவே ஞானம் செயல்பட, அதன் உறைவிடமான மௌனம் நிலைக்க, மனத்திலிருந்து கருத்து, எண்ணம், பிடித்தவை, பழக்கம், அமைப்பு போன்றவை விலக்கப்பட வேண்டும். பிராணன் ஜீவனின் முக்கிய பகுதி; பிராணமயப் புருஷனால் இயங்க வேண்டியது, என்றாலும் தன் சுபாவத்தால் பிராணன் பெற்றுள்ள தகுதிகளும், குணங்களும், விருப்புகளும் நாம் அறிந்தவை. தனக்குத் தேவைப்பட்டதைக் கட்டாயமாகக் கேட்பதே பிராணனின் சுபாவம். நிர்ப்பந்தப்படுத்தும் தன்மை அதற்குரியது; ஆசை அதன் நிழல், அதன் சிறப்பும்கூட. ஆசைப்பட்டதைப் பெறும்வரை அதையே நினைத்து உருகும் தன்மை உடையது பிராணன். இதன் உணர்ச்சி, கிளர்ச்சியாகும். நினைத்ததைப் பெற உயிரை விடும் திறனுடையது. சுயநலத்தை ஒரு சிறப்பான கருவியாகச் செப்பனிட்டுள்ளது. பெருமை பிராணனுக்கே உரிய குணச்சிறப்பு. தலைவணங்காமல், பேராசையாலும், பொறாமையாலும், காமத்தாலும், சத்தியத்தைக் கண்டு சீறும் வேகத்தாலும் இயல்பாகச் செயல்படுதல் பிராணனின் வழக்கம். இவை எல்லாம் இறைவனையடைய உதவா. இவற்றையெல்லாம்
பொறுமையாக, முழுவதும் விலக்க வேண்டும். திடமான பிராணன் அசையாமல் வலுப்பெற்று, நிலைத்து, பரந்து, மேலிருந்து பொழியும் தெய்வீக சக்தியைத் தொடர்ந்து அளவில்லாமல் பெறுவதே நம் நோக்கம். அந்நோக்கம் நிறைவேற, பிராணனின் குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.
 
உடல் திவ்ய ஜோதியால் நிரப்பப்பட்டு, தெய்வீகத்தைப் பெற்று, அருள், ஆனந்தம், திறன் ஆகியவற்றின் உறைவிடமாக வேண்டுமானால், உடலின் குறைகள் விலக்கப்பட வேண்டும்.
 
மடமைக்கு உரிமையுடையது உடல். சந்தேகம் ஏற்படுவது அதற்கு சகஜம். எதையும் நம்ப மறுப்பதில் பெருமையடைவது காயம். இருளின் உறைவிடம் இதுவே. சிறிய புத்தியையும், பிடிவாதத்தையும் இயல்பாக உடைய கருவி இதுவே. தமோ குணம் உடலில் பிறந்தது. சோம்பேறித்தனத்தில் திளைப்பதுவும் இதுவே. எதையும் மாற்ற உடல் அனுமதிக்காது.
 
சரணாகதி என்பது நம்மிடம் உள்ள குணநலன்களையும், குறைகளையும் ஆண்டவனுக்கு அளிப்பதாகும். அது முதற்கட்டமானால், அடுத்த கட்டத்தில் குணங்களைத் தாண்டி நம் பிறவியில் உள்ள அனைத்தையும் சமர்ப்பணம் செய்ய வேண்டும். குணம், குறை, பிறப்பு, இருப்பு, செயல், அசைவு, அனைத்தையும் சமர்ப்பணம் செய்தாலும் மீதியிருக்கும். ஜீவன் பல கட்டங்கள் உடையது. மனம், பிராணன், உடல், ஆன்மா என்பவையுடன், சூட்சும தேகம் என்றும், அந்தராத்மா
உறையும் உள்மனம் என்றும், உணர்வைத் தாண்டிய நிலையிலுள்ள உடல் இருக்கும் நிலை என்றும், சைத்திய உலகமென்றும் ஜீவன் பல நிலைகளில் உறைவதால், சமர்ப்பணம் பூர்த்தியாக எல்லா நிலைகளின் சமர்ப்பணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 
மனிதன் தன் அளவில் செயல்படுகிறான். வளர்ந்து பெரியவனான பின் சமூகத்தின் கட்டுக்குள் வசிக்கிறான். மனச்சாட்சி விளக்கம் பெற்றபின் அதன் பார்வைக்குள் தன்னை அடக்கிக் கொள்கிறான். நியாயம் அறிந்தபின் நியாய மனப்பான்மையை ஏற்றுக் கொள்கிறான். இவையெல்லாம் மனிதன் வளர்ந்து, உயர்ந்த நிலைகள்.
ஆனால் தெய்வத்தை நாடி தன்னைச் சமர்ப்பணம் செய்ய முன் வந்தால், சமூகம் ஒரு சிறையாகக் காட்சி அளிக்கும்; மனச்சாட்சி பொன் விலங்காகும்; நியாய மனப்பான்மை பார்வைக்கு அகப்படாத சிறையாகும்; சுபாவம் பெருஞ்சிறையாகும்.
 
இறைவன் உயர்ந்த மனிதனை ஏற்றுக்கொள்வதில்லை. உயர்ந்த மனிதனை உலகம் போற்றும். இறைவனுக்கும், அவன் உயர்வு சிறப்பானதே. இறைவனுக்குச் சேவை செய்ய உயர்ந்த குணங்கள் தடையாகும். ஏனென்றால் குணங்களைக் கடந்தவனே இறைவனுடைய சேவகன். நியாயம் புனிதமானது; ஆனால் புத்தியால் உற்பத்தியானது. நியாய மனப்பான்மையால் இறைவனுக்குச் செய்யும் சேவை காட்டில் கொளுத்திய அகல் விளக்காகும். அந்த வெளிச்சம் போதாது. எளிதில்
அணைந்துவிடக்கூடியதாகும். இறைவன் சேவகனைவிட அடிமையை விரும்புகிறான். கொத்தடிமை இறைவனுடைய திருவுள்ளத்திற்கு ஏற்பானது. இறைவனுக்குரிய அடிமையாக மனிதன் சமூகத்திலிருந்தும், மனச்சாட்சியிலிருந்தும், சுபாவத்திலிருந்தும் விடுதலை பெற வேண்டும். அந்த விடுதலையே மனிதனைச் சுதந்திரம் உள்ளவனாக்கும். பூரணச் சுதந்திரமே இறைவனின் சேவைக்கு அஸ்திவாரம். சுதந்திரமாகச் செய்யும் சேவையே பூரணம் பெறும்; சிறப்புறும். பூரணச் சிறப்பு புனிதமானது. அது ஈஸ்வரனுடைய சக்திக்கேயுரியது. மனிதனுடைய செயலுக்குரியது திறமை; சக்தியின் செயலுக்குரியது பூரணச் சிறப்பு (perfection). அதற்குரிய அஸ்திவாரம் சுதந்திரம். சுபாவத்திலிருந்து விடுபட்டுச் சுதந்திரம் பெற்று, சக்தியின் பூரணச் சிறப்பைப் பெற
மனிதனுக்குள்ள இரு உபாயங்கள் சரணாகதியும், சமர்ப்பணமும் ஆகும். சரணாகதியும், சமர்ப்பணமும் சக்தியை மனிதனுக்குக் காட்டும். சக்தி அவனுள் எழுந்தால் அவனுடைய சுய முயற்சி தேவை இல்லை. சக்தி முன்வரும்வரை சுயமுயற்சி தேவை.
 
தமோ குணத்தால் நிரம்பி, தன் ஆன்மீகக் கடமைகளைப் பூர்த்தி செய்யாமல், இறைவனை நோக்கி, "நீயே எல்லாம். என் கடமைகளையும், ஆசைகளையும் பூர்த்தி செய்'' என்பது தன்னையே ஏமாற்றிக்கொள்வதாகும். தன்னைப் பூரணம் செய்வது யோகம்; புனிதப்படுத்துவது சமர்ப்பணம். அவற்றைத் தவிர்த்து, தன்னை
ஏமாற்றிக்கொள்வது மனித தமோ குண சுபாவம்.
 
பரமனின் பேரருளும், பாமரனின் நம்பிக்கையும்:
 
வாழ்க்கைப் பாதை இடர்கள் நிறைந்தது; இன்னல் மிகுந்தது; கவனமாகச் செயல்படவில்லை என்றால், கஷ்டம் தொடரும். யோகப்பாதை சிறந்தவராலேயே ஏற்றுக்கொள்ளக்கூடியது; கரடுமுரடானது; கடினம் மிகுந்தது. இந்தப் பாதையில் வெற்றி சிலருக்கே உரியது. மற்றவர்கள் பாதையின் பயங்கரத்திற்கு ஏதோ ஒரு வகையில் ஆளாவதுண்டு. பூரண யோகம் தனக்கென வகுத்த பாதை மேற்சொன்னவற்றை எளிதாக்குவதாகும். யோகத்தை மேற்கொண்டு, வாழ்க்கையை நடத்தும் பாதை இது. வாழ்க்கையை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையை யோகமாக நடத்துவதே பூரண யோகத்தின் பாதை. மிருகக்காட்சி சாலையில் எல்லாக் கூண்டுகளையும் திறந்துவிட்டபின் அதனுள் உலவி, தன் அன்றாடக் கடமைகளைப் பூர்த்தி செய்வது போலிருக்கும் பூரண யோகத்தில்
அமைந்துள்ள வாழ்வு.
 
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்என்பது பழமொழி. பூரண யோகத்தை உளமாற ஏற்றுக்கொண்டவுடன், ஊரில் உள்ள மனிதர் உள்பட அனைத்தும் உன்னைப் பகைவராகக் கருதும். நெருப்பினுள்ளும் தூங்கலாம்; வறுமையில் கண்ணையும் மூட முடியாதுஎன்றார் புலவர். வாழ்க்கையே வாளாக மாறிப் போர்
தொடுத்தது போல் ஆயிற்றுஎன்றார் ஓர் ஆசிரியர். அன்னை உன்னை அரை நிமிஷம்கூட கைவிடமாட்டார் என்பது உறுதி. ஆனால் அரை மனிதன்கூட உன்னை ஏற்றுக்கொள்ளமாட்டான். எல்லோருக்கும் எளிதான பஸ்ஸில் போவதும், பத்திரிகை படிப்பதும் சாதகனுக்கு ஒரு சாதனையாக மாறிவிடும். அன்னையை மட்டும் நினைத்து, ஆத்ம சமர்ப்பணம் செய்து, மன-மொழி-மெய்யால்
சத்தியசீலனானால், அன்றாட காரியங்களை நிறைவேற்றலாம். உயிரைக் கொடுக்கக்கூடிய நண்பர்கள், யோகத்தை ஏற்றுக்கொண்ட உடன் உயிரை எடுக்கும் எதிரிகளாவர். உனக்கே உரிய சொத்துக்கு ஒன்பது பேர் உரிமை கொண்டாடி, உன்னை மட்டும் விலக்க முற்படுவர். நண்பர்கள், உறவினர், கூட்டாளிகள், சட்டம், சர்க்கார், நாலு பேர், சாட்சிகள், நடைமுறை, பஞ்சாயத்து, நல்லவர், பெரியவர், கெட்டவர், தெரிந்தவர், தெரியாதவர், அனைவரும் ஏதோ ஒரு காரணம் காட்டி எதிரியாவார்கள். அவர்களுக்குள் உள்ள பகைமை, உன் விஷயத்தால் திடீரென்று மாறி நட்பாகும். ஊரும், உறவும், காற்றும், கனலும் கடும் போர் தொடுக்கும். அன்னை மட்டும் உன் பக்கம் அசையாமல் இருப்பார்கள். எளிய காரியங்கள் எட்டாத இலட்சியமாகிவிடும். என்றாலும் எட்டாத காரியங்கள் எளியதாகும். ஊரார் மட்டுமல்லர், உன் திறமையும், நாணயமும், நல்ல பெயரும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அன்னை மீதுள்ள நம்பிக்கை மட்டுமே செயல்படும்; தவறாது பலன் தரும். இந்த நிலையில் நீ ஏற்றுக்கொண்ட இலட்சியம், இதுவரை உலகில் இல்லாதது. வசிஷ்டரும், விஸ்வாமித்திரரும் செய்யாத ஒன்று. தேவர்களையும், தெய்வங்களையும் தாண்டிய ஒன்று. அதனால் மனித நிலையில் உள்ள அனைவரும் எதிரிகளானது போல், மற்ற எல்லா நிலைகளில் உள்ள அனைத்து சக்திகளும் கண்மூடி கண் திறப்பதற்குள் போர் தொடுத்து, பல ஆண்டுப் பலனைத் தரைமட்டமாக்கும்.
 
ரிஷியின் மனைவி அனுசுயா, கற்புக்கரசி. கணவனைத் தெய்வமாகத் தொழுதாள். அவளுடைய கற்பின் சிறப்புக் கருதி கணவனுடைய ஆத்மா மூலம் பரம்பொருளான இறைவன், திருமூர்த்திகளைப் படைத்த இறைவன், அவளுடைய வழிபாட்டை ஏற்றுக்கொள்வதுண்டு. நாரதருக்குக் கலகத்தில் பிரியம். தெய்வ
லோகம் சென்று பார்வதி, லக்ஷ்மி ஆகியோரைப் பார்த்து இரும்பால் ஆன பல குண்டுகளைக் கொடுத்து, வறுத்துக் கொடுக்கும்படிக் கேட்டார்; அவர்களால் முடியவில்லை. நாரதர் அதைச் செய்யும் கற்புக்கரசி உலகில் இருக்கிறாள் என்று அவர்களிடம் சொல்லிவிட்டு, அனுசுயாவை வறுத்துக் கொடுக்கச் சொன்னார். இரும்புக்கடலை அனுசுயாவின் கற்பின் பெருமையை ஏற்றுக்கொண்டு வறுபட்டது. நாரதர் தம் கைங்கர்யத்தைத் தொடர்ந்தார். பார்வதிக்கும், லக்ஷ்மிக்கும் கோபமூட்டினார். அனுசுயாவைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. திருமூர்த்திகள் அதற்கு உடன்பட்டனர்; பழிவாங்க முற்பட்டனர். கற்பின் சிறப்பு, பரம்பொருளை எட்டினால், தெய்வங்களும் எதிரியாகின்றனர். பரம்பொருள் என்றுமே கைவிட்டதில்லை. அனுசுயாவுக்கும் கைகொடுத்தார். திருமூர்த்திகளைக் கைக்குழந்தைகளாக்கினார். கற்பின் பெருமைக்கு வந்த ஆபத்து, அப்பெருமையை மேலும் உயர்த்தியது.
 
பெண்மையின் சிறப்பான கற்பு, பரம்பொருளை எட்டினால் இத்தனை ஆபத்து. பூரண யோகத்தில் பரம்பொருளின் இலட்சியத்தைப் பூவுலக வாழ்க்கையில் எல்லா அரங்கங்களிலும் நிலைநிறுத்த சாதகன் தன்னைக் கருவியாக்கிக்கொண்டால்,
அன்னையும், பரம்பொருளும் தவிர அனைத்தும் அவனுக்கு பரம எதிரியாகும். பயமும், ஆபத்தும், பேராபத்தும் வாழ்க்கையை நிரப்பும். பூரண யோகத்தைப் பூர்த்தி செய்ய உள்ள பாதை இது ஒன்றுதான்.
 
இந்தப் பாதையில் வெற்றியுடன் நடக்க வேண்டியவை இரண்டே ஆகும். ஒன்று, அன்னையின் அருள்; மற்றது, மனித நம்பிக்கை.
 
மனித நம்பிக்கையும், பேரருளும் ஒன்றோடொன்று இணைந்தவை. ஒன்றுள்ள இடத்தில் மற்றதிருக்கும். உன்னுடைய நம்பிக்கை உண்மையானதொன்றாக இருக்க வேண்டும். உண்மையும், நம்பிக்கையும், சரணாகதியுமே உன் பங்கு. தூய்மையான நம்பிக்கை பளிங்கு போன்றது; பூரணமும், சிறப்பும் உடையது. அத்தகைய நம்பிக்கையுடையவனாக இருப்பதே உன் கடமை. நம்பிக்கை வேறு
பல காரணங்களாலும் ஏற்படுவதுண்டு. வேறு உருவங்களைத் தாங்கும் திறனுடையது நம்பிக்கை. தன்னுடைய நம்பிக்கையின் சிறப்பை உணர்ந்து பெருமைப்படும் அளவுக்கு நம்பிக்கை இருப்பதுண்டு; பெருமைக்காகவும், வீண் பெருமைக்காகவும் வளரும் நம்பிக்கையும் உண்டு; பேராசையாலும் நம்பிக்கை உற்பத்தியாவதுண்டு; ஆணவத்தின் அதிகாரம் செல்லும் வரை நம்பிக்கையும் தழைப்பது உண்டு; சிறு ஆசைகளை விடாப்பிடியாய் சாதிப்பவருடைய நம்பிக்கை
மற்றொன்று. இவை எல்லாம் உயர்ந்த நம்பிக்கையில்லை. இருளின் வகையைச் சேர்ந்த புகைமண்டலப் பொக்கிஷங்களே இவை. புகை மண்டலம் மேகமண்டலத்தைத் தாண்டி வானுலகை எட்டியதில்லை.
 
உடலைப் பெற்ற மனிதன் வாழ்வின் கருவியாக அதைக் கொள்கிறான். வாழ்க்கையின் இலட்சியம் புத்திரசந்தானம் என்று கருதுவது கிருகஸ்தன். வாழ்க்கையையும், உடலையும் உதறித் தள்ளுபவன் சன்யாசி. இறைவன் பூவுலகில் தன் ஆட்சியை நிறுவ உனக்கு அளித்த கருவியாக இவ்வாழ்வை நீ ஏற்றுக்கொள்ளவேண்டும். பித்ருக்களுக்குள்ள கடமை, குடும்பத்திற்கான பொறுப்பு, சமூகக் கட்டுப்பாடுகள் உனக்கில்லை. நீ இறைவனின் கருவி. இறைவன் உலகில் வெளிப்பட முனைகிறான். உன் வாழ்வின் மூலம் இறைவன் வெளிப்பட்டு, செயல்பட விழைகிறான். அவனே உனக்கு பித்ரு. நீயே அவனுக்குரிய புத்திர சந்தானம். உன் உலகில் உள்ள ஒரே பிரஜை இறைவன் மட்டுமே. அவனைத் தாண்டி சமூகம் என்று உனக்கொன்றில்லை. அவன் இஷ்டமே உனக்கு அவன் இட்ட கட்டளை. உனக்கு ஆசைப்பட உரிமையில்லை. இஷ்டம் என்பது இனி இல்லை. இஷ்டதேவதையாகப் பரமனையே வரித்தபின், இஷ்டப்பட எதுவும்
இல்லை. இருந்தாலும் இஷ்டப்படப் பிரியப்பட்டால் ஜோதியை நாடு, பவித்திரத்தைக் கருது, அமைதியைத் தேடு, ஆனந்தம் வேண்டும் எனக் கேள், அகண்டத்தில் திளைக்க வேண்டும் என ஆசைப்படு. உன் ஆசைக்குரியவை அவையே; அவை மட்டுமே. திருவுருமாற்றத்தை விருப்பத்தின் இலட்சியமாகக் கொள். மனத்தை அனந்தத்தின் அகண்ட வெளியாக மாற்ற வேண்டும் என்று விருப்பப்படு. வாழ்வை குருக்ஷேத்திரமாக்க பிரார்த்தனை செய். உன் உடல் பரம்பொருளின் பரமபதமாக வேண்டும் என்ற குறிக்கோளை முன் வை.
 
மேலும் ஏதேனும் கேட்கப் பிரியப்பட்டால், கேள். ஆனால் சத்தியத்தையும், சத்தியத்தின் வெற்றியையும், தீயசக்திகளின் தோல்வியையும் கேள். ஆன்மாவுக்குச் சத்தியமுண்டு; இறைவனுக்கும் சத்தியமுண்டு; இதற்கிடையில் உள்ள சத்தியஜீவனுக்கும் அவனுக்கு உரிய சத்தியம் உண்டு. இவையெல்லாம் பூவுலகில் மனித வாழ்வில் நின்று நிலைபெற்று, வெற்றி பெற்று, தங்களாட்சியை நிறுவ வேண்டும் என்றும் ஆசைப்படலாம். இத்தனைச் சத்தியங்களும் உன் ஜீவனில் லிக்க வேண்டும்; உன்னைப் போல் இறைவன் தேர்ந்தெடுத்த ஜீவன்களில் பலிக்க வேண்டும் என்று கேள். இதற்கேற்ற சூழ்நிலை ஏற்பட வேண்டுமெனவும், இதற்கெதிரான சக்திகள் தோல்வியுறும் நிலை வேண்டுமெனவும் இறைவனைக் கேள். உனக்கு இறைவனிடம் கேட்க வேறொன்றும் இருக்கக்கூடாது.
 
நாம் எங்குச் சென்றாலும் உடன் வருவது ஆணவம். அத்துடன் வேறு பல சக்திகளும் வரும். நாம் அவற்றைக் கவனிப்பதில்லை. அவை நம்மை வெகுவாகக் கவனிக்கின்றன. எந்த வேலையை நாம் ஏற்றுக்கொண்டாலும், அவை தங்கள் செயலாக அவ்வேலையை மாற்ற முயன்று, இடைவிடாமல் வெற்றியடைவதை நாம் கவனமாகப் பார்ப்பது இல்லை. இறைவனை நோக்கிச் சென்றால், அன்னையை அழைத்தால், அகந்தை நம் உருவில் நம் சார்பாக இறைவனிடம் செல்லும், அன்னையை தான் அழைக்க முன்வரும். அவற்றின் பிடியிலிருந்து
தப்பிக்க முடியாது; ஆனால் தப்பிப்பது அவசியம்.
 
சரணாகதியை முழுமையாக்கினால் அகந்தைக்கு இடம் இருக்காது; பவித்திரமாக்கினால், மற்ற சக்திகளுக்கு வேலை இருக்காது. உண்மையாகவும், பவித்திரமாகவும், முழுமையாகவும் சரணாகதியைச் செய்தால், அகந்தைக்கோ, மற்றெந்த சக்திகளுக்கோ புகலிடம் இருக்காது.
 
நம்பிக்கையும், உண்மையும், சரணாகதியும் பூரணம் பெறப் பெற அருளின் அளவும், செயலும், திறனும் மேலும் மேலும் அதிகம் ஆகும். அன்னையின் அருளும், ஆதரவும் இருக்கும்பொழுது உன்னை ஒருவரால் தொட முடியுமா! எவருக்குப் பயப்பட வேண்டும்! அருளின் ஒரு பொறி இருந்தால், இன்னல்கள், இடையூறுகள் அனைத்தையும் தாண்டிச் செல்லலாம். பூலோகக் கும்மிருட்டு ஒரு மின்னல்வெட்டில் கலைகிறதன்றோ! அன்னையின் அருளால் பூரணமாகச் சூழப்பட்டால், எவ்வுலகத் தீயசக்தியும் எதிரே வாராதன்றோ! கோரமான பயங்கரம்
உன்னெதிர்ப்பட்டால், அருளால் சூழப்பட்டிருப்பதால் உன்னைக் கண்டு
அவை விலகிப்போகும்! பூவுலகிலும், மற்ற எந்த உலகிலும் உனக்குத் தொந்தரவு செய்ய அதன்பின் ஒரு சக்தி இல்லை!
 
அருளின் திறன் அளப்பரியது; அத்துடனில்லை, அற்புதமானது; மேலும், அபூர்வமானது. தோல்வியைத் துடைப்பதே உதவி. இடர்களைக் களைவதே சிறப்பு. அதுவே பூவுலகம் அறிந்த பெருமை. அருளின் சிறப்பும், பெருமையும் அதற்கப்பால் உள்ளவை. பேர் இடர்களை கிடைத்தற்கரிய வாய்ப்பாக மாற்றும் ஒரு சக்தி இன்று நாம் வாழும் உலகில் செயல்படவில்லை. அருள் அதைச் செய்யும்; தவறாமல் செய்யும்; அதை மட்டுமே செய்யும். தோல்வியை எதிர்கொண்டு, அதன் குணத்தை மாற்றி, நமக்கு வெற்றியை அளிக்கும் திறனைத் தோல்விக்கு அளிக்கும் திறன் அருளுக்குண்டு. திறனற்றவனை ஏற்று, அவன் குறையை எடுத்து ஆய்ந்து, அதனுள் உள்ள தெய்வீக வித்துகளை வெளிக்கொணர்ந்து, அவற்றை முளைக்கச் செய்து, தோல்வியையே அறியாத வலிமையாக மாற்றும் அம்சம் அன்னையின் அருளுடைய முக்கிய அம்சம்.
 
அன்னையின் அருள் பரமனின் திருவுள்ளம்; இறைவனின் உத்தரவு. அவசரச் சட்டம் போல் செயல்படும் அதிகாரம் நிறைந்த இறைவனின் உத்தரவாக அன்னையின் அருள் பவனி வருகிறது. அது பலிக்குமா என்ற கேள்வி இல்லை; லித்தே ஆக வேண்டும் என்ற ஊழிக்கால நிர்ப்பந்தத்தால் உந்தப்பட்டு, எவராலும், எதனாலும் மறுக்க முடியாத, எதிர்க்க முடியாத சக்தியாக உன் வாழ்வில்
செயல்பட அருள் விழையும்பொழுது, அருளமுதம் நிறையும் பாத்திரமாக நீ இருப்பதே உனக்குச் சரி.  



book | by Dr. Radut