Skip to Content

பிரம்மம், புருஷா, ஈஸ்வரா, மாயை, பிரகிருதி, சக்தி

Book II

Chapter II

பிரம்மம், புருஷா, ஈஸ்வரா, மாயை, பிரகிருதி, சக்தி

மேற்சொன்னது இவ்வத்தியாயத்தின் தலைப்பு. சத்தியம், உண்மை, பிரம்மம் (Reality) என்பது ஒன்றே, முழுமையானது. இதைப் பகுதியான மனம் அறிய முடியாது. நம்முள் உள்ள ஆத்மா, அதன் பின்னுள்ள பிரம்மம் அறியும் என்று சுமார் 40 பக்கங்களில் 10 அல்லது 12 வகையான விளக்கங்கள் மூலமாகக் கூறுகிறார். இந்த அத்தியாயத்தின் முக்கியக் கருத்துகளை நீண்ட சுருக்கமாகவும், அதன் முன் மையக் கருத்தைச் சிறு சுருக்கமாகவும் காண்போம்.

சுருக்கம்

1. பிரம்மம் மாயை; புருஷப் பிரகிருதி; ஈஸ்வர சக்தி; என்பவை 6 தனிப்பட்ட அனுபவங்களோ, மூன்று வகையானவையோ இல்லை. அவை அனைத்தும் ஒரே பிரம்மத்தின் மூன்று அம்சங்கள் ஆறாகப் பிரிந்து தெரிகின்றன. தகப்பனார், கணவன், தம்பி, அண்ணன், முதலாளி, வீட்டுக்காரர் என்று ஒருவரை ஆறு பேர் அழைத்தால் அவர் ஆறு வேறு நபர்களில்லை. ஒருவரே. அம்சம் ஆறு, அறுபதாகவுமிருக்கலாம், ஆறு கோடியாகவும் இருக்கலாம்.

2. Transcendent, Superconscient, Inconscient, Supracosmic, Cosmic, Immutable Self, Nihil, Asat; Sat, Chit, Ananda, Nirvana, Mind, Life, Matter பிரம்மம், பரமாத்மா, ஜடம், பிரபஞ்சத்தைக் கடந்தது, பிரபஞ்சம், அக்ஷரப் பிரம்மம், சூன்யம், அசத், சத், சித், ஆனந்தம், நிர்வாணம், மனம், வாழ்வு, உடல் என்று நாம் பலவகைகளாகக் கூறுவது பல அல்ல. ஒன்றே. ஒருவர்க்குத் தம் வீட்டில் தலைவராகவும்,

கணவனாகவும், சமையல் செய்யவும், விருந்தினரை வரவேற்கவும், வீடு பெருக்கவும் உரிமையுண்டு. அவர் வீடு என்பதால் எந்த வேலையைச் செய்யவும் அவரால் முடியும், உரிமையுண்டு. அதனால் அவர் பல நபராகமாட்டார். மனிதன் ஒருவனே. செயல்கள் பல.

3. நம் மரபில் பிரம்மத்தை எதிரெதிரானவைகளாக 10 அல்லது 12 வகைகளாகக் கூறுகிறார்கள். அவை

 

பிரம்மம்    *  சிருஷ்டி

பரமாத்மா *  ஜீவாத்மா

சகுணம்     *  நிர்குணம்

அகண்டம்  *  கண்டம்

ரூபம்         *  அரூபம்

காலம்        *  கடந்தது

இடம்         *  அனந்தம்

பிரபஞ்சம்  *   மனிதன்

மௌனம்   *  சப்தம்

புருஷன்    *  பிரகிருதி

 

மேற்சொன்னவைபோல் இவைகளும் பகுதிகளில்லை, பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத, ஐக்கியமான ஒன்றே. மனிதப்பார்வைக்குத் தெரிவது பிரிந்த நிலை. உண்மையில் பிரிவினை என்பது எங்கும் எப்பொழுதும் இல்லை.

மேற்கூறியவை தத்துவமாகப் புரிவது ஞானம். வாழ்க்கைக்கோ, யோக சித்தி பெறவோ பயன்படாது. அறிவு விளக்கம் பெறும். பக்தியால் இதுவே புரிந்தால் அது உள்ளத்திற்கு விளங்கும். அது நம்பிக்கையால் புரிவது. பக்தி, நம்பிக்கையால் புரிந்தால் இரண்டு வகைப் பலன் உண்டு.

1. யோகத்தில் காலடி எடுத்து வைக்கலாம்.

2. வாழ்வில் தோல்வி என்பது அழிந்து அதிர்ஷ்டம் பிறக்கும்.

இதே கருத்துகளை நீண்ட, சுருக்கமாக தத்துவங்களைச் சில இடங்களில் வாழ்க்கை உதாரணத்தின் மூலம் கீழே காணலாம்.

நீண்ட சுருக்கம் :

சொர்க்கத்தைப் பற்றிப் பேசினால் அது நமக்குத் தெரிவதில்லை. அது மேல் உலகில் உள்ளது. அங்குப் போனால் அனுபவிக்கலாம் என்று கேள்விப்படுகிறோம். ஸ்ரீ அரவிந்தர் பூலோகமே சுவர்க்கம் என்கிறார். நாம் பூலோகத்தைச் சுவர்க்கமாக்கலாம் என்றார். இன்று பூலோகம் சுவர்க்கமாக மாறிவிட்டது. கண் திறந்து பார்த்தால் போதும் என்பது ஸ்ரீ அரவிந்தம். பூலோகத்தைச் சுவர்க்கமாக்கலாம் என ஆரம்பத்தில் கூறிய ஸ்ரீ அரவிந்தர் தம் தவ முயற்சியால் 1956இல் சத்திய ஜீவியத்தை உலகுக்குக் கொண்டு வந்துவிட்டதால் சுவர்க்கம் உற்பத்தியாகிவிட்டது. கண்ணை மூடியவர்க்குத் தெரியாது. கண் திறந்து பார்ப்பவருக்குத் தெரியும். கண் திறக்கும் வகைகள் பல.

1. யோகம் கண்ணைத் திறக்கும்.

2. சமர்ப்பணமான வாழ்வு, வாழ்வளவில் கண் திறக்க உதவும்.

3. தத்துவம் புரிந்தால் அறிவுக் கண் திறக்கும். அறிவுடன் பக்தியும் நம்பிக்கையும் சேர்ந்தால் அற்புதம், அதிர்ஷ்டமாக எழும்.

இம்மூன்றாம் முறையை விளக்கும் அத்தியாயம் இது (Bk II,Ch II). இதன் மேற்கூறிய சுருக்கத்தை சற்று நீளமாகக் கூறுவதே நோக்கம். ஓர் உதாரணம் கூறலாம். Pride and Prejudice என்ற கதையில் pounds50 வருமானமுள்ள எலிஸபெத் என்ற கதாநாயகியை pounds10,000 வருமானமுள்ள டார்சி திருமணம் செய்து கொள்ள

கட்டுக்கடங்காத காதலுடன் தவிக்கிறான். அவளைக் கேட்கிறான். திட்டி திருப்பி அனுப்பிவிடுகிறாள். மனம் மாறி பிறகு அவனை ஏற்கிறாள். நாம் எலிஸபெத் நிலையில் உள்ளோம். மனம் மாறுமா? கீழ்க்கண்ட விளக்கம் மனம் மாற உதவும்.

நாம் கண்டது உலகம். நம்மை நாம் உடலாகவும், மனிதனாகவும் அறிகிறோம். நாம் ஆத்மா, ஜீவாத்மா எனப்படும். அதுவே பரமாத்மா, அதாவது நாமே பிரபஞ்சம் முழுவதும் பரவிய பரமாத்மாவாகும். இதை நம் மனம் அறியாது. நம்முள் உள்ள ஆத்மா அறியும். அதன் பின்னுள்ள பரமாத்மா நன்கு அறியும். நாம் மனத்தால் செயல்படுவதால் நம்மை மனம் என நினைப்பதால், மனம் வெளியில் காண்பது வாழ்வு. அது பயங்கரமானது, ஆபத்தானது, மோசம் நிறைந்தது. உள்ளதையே இங்குக் காப்பாற்ற முடியாது. வெளியில் போனால் உள்ளதும் போகும். இருக்கும்வரை எப்படியோ காலத்தைக் கழித்துவிட்டு, போகிற கதி நல்ல கதியாக இருந்தால் போதும் என மனம் கூறுகிறது. இந்த மனம் தவம் செய்தால் பிரம்மத்தைப் பகுதியாகக் காண்கிறது. பகுத்துப், பகுத்துப் பார்க்கிறது. அதனால் நல்லது வாழ்வில்லை, மோட்சத்திலுள்ளது என மோட்சத்தை நாடிற்று. ஸ்ரீ அரவிந்தம் கூறுவது வேறு,

  • மனிதனாகிய நீ மனமில்லை.
  • மனத்தின் பின் ஆத்மாவுண்டு.
  • மனத்திற்குத் தெரியாதது ஆத்மாவுக்குத் தெரியும்.
  • மனத்தைவிட்டு, ஆத்மாவுக்குப் போய் வாழ்வைக் கண்டால், வாழ்வு அனைத்தும் பிரம்மமாகத் தெரியும். நீ காணும் ஆபத்து இருக்காது.
  • ஆத்மாவின் பிரதிநிதியான சைத்தியப் புருஷனிருந்து கண்டால் ஸ்ரீ அரவிந்தம் கூறும் பூலோகச் சுவர்க்கம் தெரியும்.
  • மனிதன் ஆத்மாவின் கண் திறந்து பார்ப்பானா என அழைக்கிறது.

கேட்ட மனிதன் தயங்குகிறான். அன்று தொழில் செய்ய தடையை ஆங்கில சர்க்கார் விதித்தது. படிக்க ஜாதிக் கட்டுப்பாடு தடையாக இருந்தது. இன்று படிப்பு இலவசம். மேற்படிப்பு அனைவரும் படிக்க வசதியுண்டு. எவரும் தொழில் செய்ய சர்க்கார் ஊக்குவிக்கிறது. இந்தச் சூழ்நிலையில் படித்துச் சம்பாதிக்க முடியவில்லை என்பது சரியா? என மேலும் ஸ்ரீ அரவிந்தம் கேட்கிறது. அத்தனையும் கேட்டுக் கொண்டு சமூகம் தடை, ஜாதகம் சரியில்லை என்பவருண்டு. சமூகத்தைக் கடந்து சர்க்கார் உதவுகிறது. பெற மறுப்பானேன்? ஜாதகம், கர்மத்தைக் களைய சத்திய ஜீவிய சக்தி வந்துள்ளது. ஏற்கக் கூடாதா என்பது கேள்வி.

  • இருப்பதை விட முடியாதவர், சமூகத்தைக் கடந்து சம்பிரதாயத்தைக் கடந்து வரமாட்டார்.
  • குணத்தை, மனத்தை மாற்ற மறுப்பவர், கர்மத்தைக் கடந்து வரமாட்டார்.
  • மரபில் கூறியவற்றை பகவான் மாற்றிக் கூறியதைப் புரிந்து கொண்டால், இந்த அத்தியாயம் புரிந்தால் முடியாதவை முடியும்.

எந்த அளவில் மாற மனிதன் முன் வந்தாலும் அந்த அளவில் பலன் உண்டு.

விளக்க முடியாத பிரம்மம் பகுதி. சகுணமாகவோ, நிர்குணமாகவோ கண்ட பிரம்மமும் பகுதி. 14 வகைகளாகப் பிரம்மத்தை நம் முன்னோர் கண்டுள்ளனர். அத்தனையும் பகுதியான பார்வை. பகுதியான பிரம்ம ஞானம் முழுமையான வாழ்வைக் காண உதவாது. இந்த அத்தியாயத்தில் 10 அல்லது 12 வகைகளான பகுதிகளான விளக்கங்களை எடுத்து, பகவான் முழுமை எனக் காட்டுகிறார். அவ்விளக்கம் பிரம்மத்தை முழுமை என அறிய உதவும். இது அறிவானாலும் வாழ்வை முழுமையாகக் காணத் தடையாக இருக்காது. பிரம்மத்தையே பகுதியாக அறியும்

தத்துவ ஞானம் வாழ்வை முழுமையாகக் காண உதவாது, தடை செய்யும். தடையை யோகத்திலும் வாழ்விலும் களைவது நோக்கம்.

எல்லா விளக்கங்களுக்கும் பொதுவான கருத்து ஒன்றே. தத்துவம் பிரம்மத்தைப் பற்றியது என்பதால் 12 வகையான விளக்கங்களை, 12 முறை திரும்பத் திரும்ப பகவான் எழுதியுள்ளார். பொதுவான தத்துவம்:

பிரம்மம் சிருஷ்டித்தது. சிருஷ்டி பிரம்மத்தை நம்பியுள்ளது. நம்பிக்கை தொடர்பு. பிரம்மமும், சிருஷ்டியும் பிரியவில்லை. அவற்றிற்குள்ள தொடர்பு மனத்திற்குத் தெரியவில்லை. தெரியாததால் தொடர்பில்லை என்றது. பிரம்மமே சிருஷ்டி. அவை என்றுமே பிரியவில்லை. மேலெழுந்த பார்வைக்குப் பிரிந்து தோன்றினாலும் அடிப்படையில் ஒன்றே. தொடர்பு தெரிகிறது. முழுப் பார்வைக்கு சிருஷ்டி அனைத்தும் பிரம்மம் எனத் தெரியும்.

பரமாத்மா x ஜீவாத்மா One and the Many, PurushaPrakriti

ஜீவாத்மாவுக்குத் தனியாக நிற்கக் கால்லை. அது மனிதனிலிருந்து விடுபட்டு பரமாத்மாவில் கரைய வேண்டும். அதுவே மோட்சம். புருஷன் சாட்சி, பிரகிருதி இயற்கை. இயற்கை எது செய்தாலும் புருஷன் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கும். புருஷனுக்குப் பிரகிருதி கட்டுப்படாது என்பது இதுவரை நாமறிந்தது. பரமாத்மா என்பது சத் (ஜீவன்) அது ஜீவியமாகி அதனின்று சக்தி (Force) வெளிப்படுகிறது. மனம் சக்தியைப் பல பகுதிகளாக்குகிறது. ஒரு பகுதியை ஜீவாத்மா என்கிறோம். மனம் பகுக்கும்பொழுது சக்தி துண்டாகப் பிரிகிறது. ஜீவனோ, ஜீவியமோ பகுக்கப்படுவதில்லை. சக்திக்கு ஜீவன் உண்டு, ஜீவனின்றி உலகில் எதுவுமில்லை. சக்தியிலுள்ள

ஜீவன் தன் ஆதியான ஜீவனோடுள்ள தொடர்பை எப்பொழுதும் இழப்பதில்லை. ஜீவன் தான் மட்டும் பெற்ற ஐக்கியத்தைப் பல ஆயிரம் ஜீவாத்மாக்களை உற்பத்தி செய்தபின் அவற்றுடன் ஐக்கியமான நிலை ஆழத்திலுள்ளது. பார்வை முதிர்ந்தால் மேல் நிலையிலும் சக்தியே ஜீவியம், ஜீவன் எனத் தெரியும். ஜீவாத்மா பரமாத்மாவினின்று எப்பொழுதுமே பிரியவில்லை. ஐக்கியம் எப்பொழுதும் உண்டு.

மாநிலச் சர்க்காரும், மத்தியச் சர்க்காரும் கருத்தில் வேறுபடுவதுண்டு, ஆனால் இரண்டும் சர்க்காரே. அதேபோல் சர்க்காரில் நிதி இலாகாவும், கல்வி இலாக்காவும் கடுமையாக வாதம் செய்வதுண்டு. எதிரியாகப் பேசுவதுண்டு. ஆனால் இரண்டும் ஒரே சர்க்காரின் இரு பிரிவுகள். குடும்பத்தில் அண்ணன் தம்பி பல ஆண்டுகளாகப் பேசாமலிருப்பதுண்டு. ஆனால் நேரம் வரும்பொழுது சேர்ந்து கொள்வார்கள். அண்ணன், தம்பி என்பது ஒரே குடும்பத்தின் இரு அம்சங்கள். கை வேலை செய்யும் கால் சும்மாயிருக்கும். கால் நடக்கும்பொழுது கை சும்மாயிருக்கும். கை வேறு, கால் வேறில்லை. இரண்டும் ஒரே உடலின் இரு பகுதிகள்.

இந்த ஒற்றுமையை முக்கியமாகக் காலத்தில் எடுத்துக் கூறுகிறார். காலம் உலகத்திற்குரியது. காலத்தைக் கடந்தது பிரம்மம். ஆனால் பிரம்மம் இல்லாமல் காலமில்லை. காலத்தின் அடிப்படை காலத்தைக் கடந்த பிரம்மம் என்பதை இவ்வத்தியாயத்தின் முடிவில் விளக்கமாக 3 பக்கங்களில் எழுதுகிறார். அவையிரண்டும் சந்திக்குமிடத்தில் உள்ளது ஆன்மாயில்லை, சைத்தியப் புருஷன். ஆன்மா சாட்சியானது, மாற்றமில்லாதது. சைத்தியப் புருஷன் வளரும் ஆன்மா. ஆன்மாவுக்கும் (புருஷன்) காலம் செயல்படும் இயற்கைக்கும் (பிரகிருதி) தொடர்பானது வளரும் ஆன்மா என்ற சைத்தியப் புருஷன்.

நாம் மேல் மனத்தில் செயல்படுகிறோம். அங்கு ஆன்மா இல்லை. உள் மனத்தில் மனோமயப் புருஷன் உண்டு. இதற்கு வளர்ச்சியில்லை. அடிமனத்தில் சைத்தியப் புருஷன் உண்டு. இதற்கு வளர்ச்சியுண்டு. இதுவே வாழ்வுக்கும் ஆன்மாவுக்கும் தொடர்பாக வாழ்வில் உள்ளது.

பிரம்மம் என்பது அடிப்படை. சிருஷ்டி, ஜீவாத்மா, சகுணம், கண்டம், ரூபம், காலம், இடம், மனிதன், சலனம், பிரகிருதி என்பவை சிருஷ்டிக்குரியவை. இதுநாள்வரை பகுதி எனக் கேள்விப்பட்டுள்ளோம். மேற்சொன்னபடி இப்பகுதிகளின் அடியில் வளரும் ஆன்மா, சைத்தியப் புருஷன் உண்டு. அதனால் பிரம்மம் முழுமை, வாழ்வு முழுமை, பகுதியென நாம் அறிந்த அனைத்தும் முழுமையே. பகுதி என்பது தோற்றம். இந்த ஞானத்தைத் தத்துவமாக மட்டும் பெறாமல், பக்தி நம்பிக்கையுடன் வாழ்வில் பெற்றால் வாழ்வு தன் முழுமையைத் தோல்வியற்ற வாழ்வாக, அதிர்ஷ்டமான வாழ்வாக வெளிப்படுத்தும். வாழ்வு ஆரம்பம், யோகம் முடிவு.

வாழ்வை அதிர்ஷ்டமாக ஆரம்பித்து, எந்த அளவு முன்னேற விரும்புகிறார்களோ அந்த அளவுக்கு முன்னேற இம்முழுமையை விளக்கும் 20 அல்லது 30 பகுதிகள் Life Divineல் உள்ளவை தத்துவார்த்தமாகப் பயன்படும். அதுபோல் அதிகமாகப் பயன்படும் அத்தியாயம் இது.

******



book | by Dr. Radut