Skip to Content

12 - தேடி வந்த செல்வம்

அன்று நான் குடும்பத்தோடு ஸ்ரீ அரவிந்தாசிரமத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். வாசல் கதவை மூடிப் பூட்டவிருந்த சமயத்தில் என் மைத்துனியும், அவருடைய கணவரும் விருந்தாளிகளாக வந்து சேர்ந்தனர். அன்று ஆசிரமத்தில் தங்கி விட்டு மறு நாள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பது என் திட்டம். இந்த நிலையில் விருந்தினர்கள் வருகை புரிந்திருக்கிறார்கள்!

அதுவும் இக்கட்டான நிலை, வந்திருக்கும் விருந்தினர்களை மட்டும் வீட்டில்விட்டுச் செல்வது அவர்களை அவமதித்தது போலாகிவிடும். எங்களுடன் அவர்களை அழைத்துச் சென்றாலோ, என்னுடைய தெய்வ நம்பிக்கையை அவர்கள் மீது திணிப்பது போலாகிவிடும். என்ன செய்வது? என் சங்கடத்தை உணர்ந்து கொண்ட என் மைத்துனியின் கணவர், “நாங்களும் உங்களுடன் வரலாமா?” என்று கேட்கவே, என்னுடைய பிரச்சினை தீர்ந்து விட்டது. எல்லோருமாகப் புதுச்சேரிக்குப் புறப்பட்டோம்.

ஆசிரமத்தில் தரிசன நாள்கள் மிக விசேடமான நாள்களாகும். ஆனால், நாங்கள் சென்ற நாள், அது போன்ற விசேட நாள் அன்று. ஆனாலும் எங்களைப் பொறுத்த வரையில், அதை ஒரு விசேடமான நாள் என்றே கூற வேண்டும். அன்னையின் திருவருளால் மகான் ஸ்ரீ அரவிந்தர் தவம் நோற்ற அறைக்குச் செல்ல அன்று என் குடும்பத்தினருக்கு அனுமதி கிடைத்திருந்தது.

அன்னை மகாசமாதி அடைந்தபிறகு, ஸ்ரீ அரவிந்தருடைய அறை தினமும் திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள். அதற்குமுன் அன்னையின் அனுமதியைப் பெற்றவர்கள் மட்டுமே ஸ்ரீ அரவிந்தருடைய அறைக்குச் செல்ல முடியும். ஒரு சிலரை மட்டுந்தான் அன்னை அனுமதிப்பது வழக்கம். அதுவும் ஒரு சில நாட்களில்தாம், அன்னையின் அனுமதி கிடைக்கும். இத்தனை கிடைத்ததற்கரிய ஒரு வாய்ப்பினை நான் இழக்க விரும்பவில்லை. ஆகவேதான் என் அன்புக்குரிய அந்த விருந்தாளிகளுக்காக என்னுடைய பிரயாணத்தை என்னால் ஒத்திப் போட முடியவில்லை.

என் சகலர் (மைத்துனியின் கணவர்) ஒழுங்குபடுத்தப்பட்ட விற்பனைக் கூடம் (Regulated market) ஒன்றில் சூபரின்டெண்டெண்ட் பதவி வகித்து வந்தார். அங்கு நான்கு வருடங்களாக அவர் வேலை பார்த்து வருகின்றார். அது ஒரு தற்காலிகமான பதவிதான். நிரந்தரப் பதவியைப் பெறுவதாக இருந்தால், அரசால் நடத்தப்படும் சர்வீஸ் கமிஷன் மூலம் அவர் தேர்வு பெற வேண்டும். அதற்கான முயற்சிகளை அவர் செய்தாரா, இல்லையா என்பது எனக்கு அப்பொழுது தெரியாது. ஆனால், அவர் வேறு வேலைகளைத் தேடி விண்ணப்பங்களை அனுப்பி இருந்தார் என்பதும், கூட்டுறவு அலுவலகம் ஒன்றில் அவர் ஆபீஸராகத் தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறார் என்பதும் என் சகலர் சொல்ல எனக்குத் தெரிய வந்தன.

இந்த நல்ல செய்தியை எங்களிடம் சொல்லிவிட்டுப் போகவே, அப்பொழுது அவர் தம் மனைவியுடன் வந்திருந்தார். எனக்கு அதைத் தெரிந்து கொண்டபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ‘புது உத்தியோகத்தை ஏற்றுக் கொள்ள இருக்கும் சமயத்தில் அன்னையின் ஆசியும் அவருக்குக் கிடைக்கப் போகிறது’ என்று நான் நினைத்துக் கொண்டேன். இல்லா விட்டால், எங்களோடு அவரும், அவர் மனைவியும் ஆசிரமத்துக்கு வரத் தூண்டப்பட்டிருப்பார்களா?

ஸ்ரீ அரவிந்தருடைய அறைக்குப் பக்தர்களை அனுமதித்துத் தரிசனம் செய்வித்து அனுப்புகிற பொறுப்பை, ஆசிரமத்தில் உள்ள ஒரு சாதகரிடம் கொடுத்திருந்தார் அன்னை. நானும், என் குடும்பத்தினரும் ஆசிரமத்துக்குச் சென்றவுடன், “உங்களுடன் வந்திருக்கும் உங்கள் விருந்தினர்களும் ஸ்ரீ அரவிந்தரின் அறைக்கு வந்து தரிசனம் செய்ய விரும்புகிறார்களா?” என்று கேட்டார் அந்தச் சாதகர்.

அவ்வாறு அவர் கேட்டது அன்னையின் அருளே என்று நினைத்தேன். ஏனென்றால், முன்அனுமதி பெற்றவர்களுக்குத் தவிர அந்த வாய்ப்புக் கிடைப்பது அரிது. என்னுடைய விருந்தினர்களும் அதை உணர்ந்தவர்களாய் ஸ்ரீ அரவிந்தரின் அறைக்கு வரவிரும்பவே, அந்தச் சாதகர் அன்னையிடம் சென்று ஒப்புதலைப் பெற்று வந்து, அவர்களையும் அறைக்குள் அனுமதிக்க ஏற்பாடு செய்தார்.

ஸ்ரீ அரவிந்தருடைய அறைக்கு எங்களை அழைத்துச் சென்றவர் வயது முதிர்ந்த சாதகர். ஏறக்குறைய முப்பதாண்டு காலம் ஸ்ரீ அரவிந்தரின் அருகிலிருந்து சேவை செய்தவர் அவர். ஸ்ரீ அரவிந்தர் மோனத் தவம் புரிந்த அந்த அறையில் எல்லையற்ற அருளும், அமைதியும் நிறைந்திருந்தன. ஸ்ரீ அரவிந்தர் அங்கே பூத உடலில் இல்லாவிட்டாலும், உணர்வாலும், உள்ளத்தின் நெகிழ்வாலும் அறியப்படுகின்ற சூட்சும உடலால் இருக்கத்தான் செய்கிறார். எனக்கு அவர் தெரிந்தார்; பலவற்றைத் தெரிவித்தார். செலுத்த வேண்டியதைச் செலுத்தி, பெறற்கரியதைப் பெற்றுக் கொண்டு அறையைவிட்டு வெளியேறியபோது, அந்த முதிய சாதகரும் எங்களுடன் தொடர்ந்து வந்தார்.

அவர் மெல்லிய குரலில் ஸ்ரீ அரவிந்தரைப் பற்றியும் அன்னையைப் பற்றியும் பல விவரங்களைக் கூறினார். 1950 வரை ஸ்ரீ அரவிந்தரும் அன்னையும் ஒன்றாய் அமர்ந்து தரிசனம் தந்த இடத்தை எங்களுக்குக் காட்டினார். 1950-ஆம் ஆண்டுக்குப்பிறகு அன்னை மட்டும் அமர்ந்து தரிசனம் அளித்து வந்த இடத்தையும் காண்பித்தார். தரிசன காலங்களில் பக்தர்கள் எப்படி ஒருவர்பின் ஒருவராய் அமைதியாய்ச் சென்று அவர்களுடைய ஆசிகளைப் பெற்றுத் திரும்புவார்கள் என்பதையும் விளக்கினார்.

ஸ்ரீ அரவிந்தரிடம் குடிகொண்டிருந்த அமைதி எத்தகைய சக்தி வாய்ந்தது என்பதையும் அவர் அப்போது கூறினார்.

ஒரு சமயம் ஸ்ரீ அரவிந்தருடைய அறைக்கு வெளியே பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. கூடவே காற்றும் பேய்த் தனமாக வீசியது. அப்பொழுது ஸ்ரீ அரவிந்தரின் அறை ஜன்னல்கள் அனைத்தும் மூடப்படாமல் இருந்தன. அப்படி இருந்தும் அந்த அறைக்குள் காற்றோ, மழையோ தலை காட்டவில்லை. இயற்கையையும் தலை வணங்கச் செய்தது ஸ்ரீ அரவிந்தரின் பேரருட் சக்தி.

மகானுடைய அறையைவிட்டு வெளியே வந்தபிறகும், அவர் அங்கு உபயோகித்த நாற்காலி, புலித்தோல் விரிக்கப்பட்ட படுக்கை, நூல்கள் ஆகியவை, அவர் இன்றும், இப்பொழுதும், இக்கணமும் இருப்பதைப் போன்றதோர் உணர்வை இதயத்தில் பரப்பின. உலக ஆரவாரத்திலிருந்து உள்ளத்தை மீட்டு, எல்லையற்ற அமைதியை அதில் இட்டு நிரப்புவதை உணர்ந்த உவகையோடு வீட்டுக்குத் திரும்பினோம்.

மறு நாள் காலையில் நான் ஒரு நாளிதழைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அருகில் இருந்த என் சகலர், அன்றைய நாளிதழில் வந்திருந்த செய்தி ஒன்றைத் தெரிவித்தார். ‘மார்க்கெட் கமிட்டி சூபரின்டெண்டெண்டுகளுடைய மாதச் சம்பளம் ரூ.140லிருந்து ரூ.200ஆக உயர்த்தப்பட்டுள்ளது’ என்பதுதான் அந்தச் செய்தி. அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. எவ்வாறு தங்களுடைய சங்கம் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக இந்தச் சம்பள உயர்வு கிடைத்திருக்கிறது என்பதை, அவர் ஆர்வத்தோடு விவரித்தார்.

“இது ஒரு நல்ல செய்திதான். சந்தோஷப்பட வேண்டிய திருப்பம்தான். ஆனால், நான் அந்தப் பதவியிலிருந்து கூடிய விரைவில் விலகப் போகிறேன். கூட்டுறவுப் பிரிவில் எனக்குக் கிடைக்கப் போகும் மாதச் சம்பளம் ரூ.140தான். இனிக் கிடைக்க இருக்கும் சம்பள உயர்வால் எனக்கு யாதொரு பலனும் இல்லை” என்று சோகத்தோடு கூறி முடித்தார் சகலர்.

அவருடைய சோகம் நியாயமானதே. எந்தச் சம்பள உயர்வுக்காக அவரும், அவரைச் சார்ந்தவர்களும் பல காலம் பாடுபட்டு வெற்றி அடைந்தார்களோ, அந்த வெற்றியின் பலனைத் தம்மால் அனுபவிக்க முடியவில்லையே என்று அவர் வருந்தியதை, என்னால் உணர முடிந்தது.

என்னைப் பொறுத்த வரையில் செய்தித்தாளில் காணப்பட்ட அந்தச் செய்தி, ‘அன்னையின் அருளால் அவருக்குக் கிடைத்திருக்கிறது’ என்றே தோன்றியது. அன்னையோடு சம்பந்தப்படுகின்றவர்களுக்கு அவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ அருள் கிட்டுவதை, நான் பல நூறு தடவைகளில் பார்த்திருக்கிறேன்.

‘என் சகலர் இப்பொழுது பார்த்து வரும் உத்தியோகத்திலிருந்து விலகாமல் இருக்க வேண்டும். கிடைத்திருக்கும் சம்பள உயர்வை அனுபவிக்கவும் வேண்டும்’ என்று நான் விருப்பப்பட்டேன். ஆனால், ‘என் கருத்தை அவர் ஏற்பாரோ, மாட்டாரோ?’ என்ற தயக்கம் எனக்கு. என்னைவிட அவர் வயதில் சிறியவர்தாம். ஆனாலும், என் விருப்பத்தை என்னால் தெரிவிக்க முடியவில்லை. அவர் அன்னையைப் பற்றிச் சிறிதும் அறியாதவர்; அன்னையிடம் ஈடுபாடோ, பக்தியோ இல்லாதவர். இந்த நிலையில் அன்னையைப் பற்றிக் கூறுவது அன்னையின் மீதுள்ள என் நம்பிக்கையை அவர் மீது திணிப்பது போலாகிவிடும் என்பதால் நான் ஏதும் சொல்லவில்லை.

அவருக்கு ஒரு பக்கம் அதிகச் சம்பளம் பெறும் உத்தியோகம் கிடைத்ததில் மகிழ்ச்சி; இன்னொரு பக்கம் இதுவரை வகித்து வந்த பதவியிலிருந்து விலகிப் போகிறோமே என்பதில் வேதனை. இத்தகைய இரு விதமான எண்ணங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் ஆட்பட்டுத் தவித்துக் கொண்டிருந்த அவரிடம், “இப்பொழுது இருக்கும் உத்தியோகத்திலேயே தொடர்ந்து இருந்து கொண்டு, அதிகமாகக் கிடைக்கவிருக்கும் ஊதியத்தைப் பெற்றுக் கொள்வதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா?” என்று கேட்டேன்.

“எனக்கு விருப்பம்தான். ஆனால், probation பூர்த்தியாகாததால் என்னுடைய வேலை நிரந்தரமாக்கப்படவில்லை” என்று பதில் அளித்தார் அவர். அதற்குமேல் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

என் சகலர் வெளியில் சென்றிருந்த ஒரு சமயத்தில் என் மைத்துனியோடு நான் பேசிக் கொண்டிருந்தேன். தன் கணவரைப் போலவே அவருக்கும் சம்பள உயர்வு கிடைப்பதில் சந்தோஷம். பதவியைவிட்டு விலகுவதில் வருத்தம். அப்பொழுது நான், “உன்னுடைய கணவர், ‘என் வேலை இன்னும் நிரந்தரமாக்கப் படவில்லை’ என்று சொன்னதன் பொருள் என்ன?” என்று கேட்டேன்.

“அவர் அக்கவுண்ட் டெஸ்ட் பாஸ் செய்யவில்லை. அதனால்தான் அவர் பதவியும் நிரந்தரமாக்கப்படவில்லை” என்றார் என் மைத்துனி.

“அதனால் என்ன? இன்னொரு முறை எழுதிப் பாஸ் செய்து விடலாமே?”

“இரண்டாவது தடவையும் எழுதிப் பார்த்துவிட்டார். பாஸ்தான் ஆகவில்லை”.

அவருடைய பேச்சிலிருந்து நான் கடைசியாகவும் தெரிந்து கொண்டது: அவரும், அவர் கணவரும் உத்தியோகத்தை விடவோ, அதன் மூலம் கிடைக்கவிருக்கும் கூடுதலான சம்பளத்தை இழக்கவோ விரும்பவில்லை. அது புரிகிறது. ஆனால், இன்னொன்றைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. அக்கவுண்ட் டெஸ்டில் அவர் ஏன் பாஸாக முடியவில்லை? அதைப் பற்றி அவர்கள் மனம் திறந்து பேசவில்லை. ஏதோ ஒரு தயக்கம் அவர்கள் மனத்தில் திரை போட்டு மறைக்கிறது. அதை நான் ஏன் விலக்கிப் பார்த்து விளங்கிக் கொள்ள முயல வேண்டும் என்று பேசாமல் இருந்துவிட்டேன்.

நான் என் மனைவியிடம், “அவர் இன்னொரு தடவை, ‘அக்கவுண்ட் டெஸ்ட் எழுத அனுமதிக்க வேண்டும்’ என்று விண்ணப்பித்து அனுமதி பெற்றுப் பரீட்சை எழுதலாமே?” என்று சொல்லிக் கொண்டிருந்தது என் மைத்துனியின் காதில் விழுந்திருக்க வேண்டும்.

“மூன்றாவது தடவை பரீட்சை எழுதுவதற்கு என் மாமாவின் உதவியால் அனுமதி கிடைத்தது. அப்பொழுதும் அவரால் வெற்றி பெற முடியவில்லை”, என்று துக்கத்தோடு கூறினார் என் மைத்துனி.

என் மனைவிக்கு அன்னையைப் பற்றியும், அன்னையின் அருட்பெருஞ்சக்திகளைப் பற்றியும் நன்கு தெரியும் என்பதைச் சாட்சியமாக வைத்து விளக்கியபின், “உன் கணவருக்கு அன்னையின் அருளால் இந்த ஊதிய உயர்வு கிடைத்திருக்கிறது. அன்னை வழங்கிய ஒன்றை அனுபவிக்காமல் விலகிப் போக முடியாது. அதற்கு அக்கவுண்ட் பரீட்சை இனி நிச்சயம் இடையூறாக இருக்க முடியாது. உன் கணவர் திறமையாகப் பணியாற்றக் கூடியவர் என்ற நற்பெயர் எடுத்திருக்கிறார். அதனால் அவருடைய மேலதிகாரி அவருக்குப் பரீட்சை எழுத இன்னும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுப்பார் என்று எனக்கு நிச்சயமாகத் தோன்றுகிறது” என்றேன்.

அதில் அவருக்கோ, அவர் கணவருக்கோ நம்பிக்கை ஏற்பட்டதாகத் தெரியவில்லை. என் சகலர் புதிய உத்தியோகத்தை ஏற்றுக் கொள்ள முடிவு செய்துவிட்டார். அந்த உத்தியோகத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்னால், சிறிது காலம் அவர் பயிற்சி பெற்றாக வேண்டும். அந்தப் பயிற்சி முடியும் வரையில் தன் மனைவியை எங்கள் வீட்டில் இருக்கும்படிச் சொல்லிவிட்டு, தம் கிராமத்துக்குக் கிளம்பிப் போய்விட்டார்.

என் சகலரின் வேலையைப் பற்றியோ அல்லது அவருடைய எதிர்காலத்தைப் பற்றியோ அதிக அக்கறை காட்ட வேண்டாம் என்று என் மனைவி என்னை எச்சரிக்கை செய்தாள். அதற்குக் காரணம், உத்தியோகத்தில் உள்ள சிக்கலைப் பற்றி என் சகலரும், என் மைத்துனியும் மனம் திறந்து பேச விரும்பாததுதான்.

நாட்கள் நகர்ந்தன. மேலும் சில புதிய செய்திகள் கிடைத்தன. ஓர் அரசியல்வாதியின் சிபாரிசால் நான்காவது தடவை பரீட்சை எழுதவும் என் சகலருக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனாலும் பலன் இல்லாமல் போய்விட்டது. அது மட்டுமன்று; விவசாயப் பாடத்திலும் ஒரு பரீட்சையை அவர் பாக்கி வைத்திருந்தார்.

இதுவரை புரியாமல் இருந்து வந்த புதிர் எனக்குத் தெளிவாகிவிட்டது. இத்தனை குறைகளை வைத்துக் கொண்டு என் சகலர் தற்போதைய வேலையில் நீடிப்பது என்பது நடவாத காரியம்.

இந்த நிலையில் அவருக்கு எதிர்பாராத விதமாக அன்னையின் அருள் கிடைத்திருக்கிறது. பயிற்சியைப் பூர்த்தி செய்து புதிய உத்தியோகத்தை ஏற்றுக் கொண்டபிறகு, ஆறு ஆண்டு காலம் பணியாற்றிய பின்னரே அவருக்கு ரூ.200 சம்பளம் கிடைக்கும். அதில் இன்னொரு சோகமும் இருந்தது. இதற்கு முன்னால் அவர் பார்த்த வேலையில் நான்காண்டுகள் பணி செய்திருந்தாலும் அது கணக்கில் சேராமல் போய்விடும். இதில் ஒரு நான்கு வருடங்கள், இனியோர் ஆறு வருடங்கள்-ஆக மொத்தம் பத்து வருடங்கள் விரயமாகப் போய்விடுகின்றன. பத்து ஆண்டுகள் என்பதை அரசாங்க உத்தியோகத்தில் ஒரு சாதாரண விஷயமாகக் கருத முடியாது. ஒரு நாளாக இருந்தாலும் அது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

எந்த அருள் அவருக்குச் சம்பள உயர்வைக் கொடுத்ததோ, அந்த அருள் செயல்படுவதற்கு அவருடைய நம்பிக்கையும், ஒத்துழைப்பும் தேவை. இந்த இரண்டுந்தான் தனக்குத் தேவை என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. நானும் அதை அவரிடம் எடுத்துச் சொல்லக் கூடிய நிலையில் இல்லை.

அருள் வலியது; அற்புதங்களை நிகழ்த்தக் கூடியது. அது முன்வந்து பூக்கும்; காய்க்கும்; கனியும். பொறுமையாக இருப்பது, விலகி நிற்பது, நிகழ்வது எதிலும் சம்பந்தப்படாமல் சாட்சியாக இருந்து பார்ப்பது என்ற அளவில் நான் இருந்தேன்.

ஒரு நாள் எனக்குத் தெரிந்த அன்பர் ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். என்னிடம் அவர், “நான் ஆறு ஏக்கர் நிலத்தில் செய்திருந்த பயிர் அழிந்து போகும் நிலையில் இருந்தது. நான் அன்னையிடம் பிரார்த்தித்துக் கொண்டேன். அதனால் அழிவிலிருந்து மீண்டு பயிர் அற்புதமான விளைச்சலைக் கொடுத்தது” என்றார்.

அவர் கூறியதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த என் மைத்துனிக்கு, அன்னையின் அருளில் நம்பிக்கை பிறந்திருக்க வேண்டும். அவர் என்னிடம் வந்து, “என் கணவருக்குக் கிடைத்திருக்கும் புதிய வேலையைப் பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று முதல் முறையாக மனம் திறந்து கேட்டார்.

நான் அதையே விரும்பினேன். அவருடைய கணவரின் வேலையைப் பற்றி நான் என்ன புரிந்து கொண்டிருந்தேனோ, அதை அவரிடம் சுருக்கமாகக் கூறினேன். மேலும், “அன்னையின் அருளில் நம்பிக்கை வைத்து, செய்ய வேண்டிய முயற்சியைக் குறை இல்லாது செய்தால், எல்லாச் சிக்கல்களும் தீர்ந்து நல்ல வழி பிறக்கும்” என்றேன்.

சில நாட்களுக்குப்பிறகு என் சகலர் எங்கள் வீட்டுக்கு வந்தார். அவரும் அவர் மனைவியும் தனியாகக் கலந்து பேசினார்கள். பிறகு அவர் என்னிடம் வந்து, புதிய உத்தியோகத்தை விட்டுவிட்டுப் பழைய உத்தியோகத்திலேயே தொடர்ந்து இருப்பது என்றும், எப்படியாவது எல்லாப் பரீட்சைகளையும் எழுதிவிடுவது என்று தானும், தன் மனைவியும் முடிவு எடுத்திருப்பதாகவும் கூறினார். இந்த முடிவுக்குக் காரணம் அவருடைய மனைவி அவரிடம் அன்னையின் அருளைப் பற்றி எடுத்துக் கூறியதுதான் என்பதை நான் புரிந்து கொண்டேன். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

என் சகலர் இந்த முடிவை எடுத்த நாளிலிருந்து அவரைச் சூழ்ந்து கொண்டிருந்த தொல்லைகள் மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தன. உதவிகள் அவரைத் தேடிவரத் தொடங்கின. அவருடைய மேலதிகாரி இளகிய மனம் படைத்தவர். அவர் என் சகலருக்கு இன்னும் ஒரு முறை பரீட்சை எழுதுவதற்கு அனுமதி கொடுத்தார். பரீட்சை சம்பந்தமான விஷயங்களில் அவருக்குத் தெரிந்த ஒருவர் பேருதவியாக இருந்தார். எல்லாத் தரப்புகளிலிருந்தும் அவருக்குத் தேவைக்கு அதிகமான உதவிகள் கிடைத்தன. அவர் எழுதிய இரண்டு பரீட்சைகளிலும் வெற்றி பெற்றார். இருந்த உத்தியோகத்திலேயே அவர் நிரந்தரமாக்கப்பட்டு, கூடுதலாகக் கிடைத்த சம்பளத்தையும் பெற்றுக் கொண்டார்.

இரண்டு ஆண்டுகள் சென்றன. அவர் என் வீட்டுக்கு வந்தார். இப்பொழுது மாற்றலாகி இராமநாதபுரம் மாவட்டத்தில் வேலை பார்ப்பதாகக் கூறினார். “அத்தனை தூரத்தில் உள்ள ஒரு மாவட்டத்துக்கு நீங்கள் ஏன் மாற்றலாகி இருக்கிறீர்கள்?” என்று நான் கேட்டேன். “இப்பொழுது நான் செகரெட்டரி பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளதால் அங்கே போக நேரிட்டது” என்றார் அவர்.

அந்த மாவட்டத்துக்கே அவர்தான் மேல் அதிகாரி. மாவட்டத்தில் உள்ள எல்லா சூபரின்டெண்டெண்டுகளும் அவருடைய ஆணைக்கு உட்பட்டுத்தான் செயலாற்ற வேண்டும். சமீபத்தில் அவர் பணி புரிந்து வந்த மார்க்கெட் கமிட்டித் துறை விரிவாக்கப்பட்ட காரணத்தால், பல செகரெட்டரிப் பதவிகள் ஏற்படுத்தப்பட்டன. என் சகலருக்குச் சூபரின்டெண்டெண்ட் பதவியில் பத்து வருட அனுபவம் இருந்ததால் அவருக்குச் சுலபமாகச் செகரெட்டரி பதவி உயர்வு கிடைத்தது. இந்தத் துறை மட்டும் விரிவு செய்யப்படாமல் இருந்திருந்தால், அவருக்குக் காரியதரிசிப் பதவி கிடைப்பதற்கு இன்னும் ஆறேழு ஆண்டுகள் பிடித்திருக்கும்.

பாதாளத்தை நோக்கித் தள்ளப்பட்டவர், அன்னையின் அருளில் நம்பிக்கை வைத்தவுடனேயே உச்சிக்கு உயர்ந்துவிட்டார்.



book | by Dr. Radut