Skip to Content

15 - அன்னையின் அருளில் நம்பிக்கை

1985-ஆம் வருடம், நவம்பர் மாதம் 12, 13 தேதிகளில் தமிழ்நாட்டிலும், சென்னை மாநகரிலும் மழை விடாதுபெய்து கொண்டிருந்தது. அதோடு புயலும் சேர்ந்து கொண்டது. பிறகு வெள்ளப் பெருக்குக்குக் கேட்பானேன்?

அது சென்னையில் தாழ்வான பகுதியில் உள்ள மாடி வீடு. அதன் கீழ்ப் பகுதியில் “அமுதசுரபி” வாசக அன்பர் ஒருவர் வசிக்கிறார். மாடிப் பகுதியில் வீட்டின் சொந்தக்காரர் வசிக்கிறார்.

12-ஆம் தேதி இரவு மழை பலத்தது. ஏற்கனவே அந்த வீட்டைச் சூழ்ந்து கொண்டிருந்த தண்ணீரின் மட்டம் அதற்குப் பிறகு நிமிடத்திற்கு நிமிடம் அதிகமாகிக் கொண்டே போயிற்று. வீட்டின் கீழ்ப் பகுதியில் வசித்து வந்த அன்பருக்கு அதைப் பார்த்ததும் பயம். “எந்த நேரத்தில் வீட்டுக்குள் வெள்ளம் புகப் போகின்றதோ?” என்ற அச்சத்தில், தம் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு போய் மாடியில் வசித்து வந்த வீட்டுக்காரரின் குடும்பத்தினரோடு தங்கிவிட்டார் அவர்.

பொழுது விடிந்தது. 13-ஆம் தேதி. மழை இன்னும் பலமாகக் கொட்டிக்கொண்டிருந்தது. அன்பர் கீழே எட்டிப் பார்த்தார். வெளியே பரவிக் கிடந்த வெள்ளம், தன் வீட்டிற்குள்ளும் புகுந்திருப்பதைக் கண்டார். அவரும், மற்றவர்களும் எப்படியோ சமாளித்துக் கொண்டு கீழே இறங்கி வந்து கதவைத் திறந்து பார்த்தார்கள். வீட்டிற்குள் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் பரவிக் கிடந்தது. அவரும் மற்றவர்களும் சேர்ந்து, சில முக்கியமான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு போய் மறுபடியும் மாடி வீட்டில் அடைக்கலம் புகுந்து விட்டார்கள்.

வீட்டுக்காரர் அகதிகளாக வந்து சேர்ந்த அன்பருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் அன்புடன் உணவு முதலான வசதிகளைச் செய்து கொடுத்தார்.

மழையில் கரைந்தது பகல். மாலை நேரம் ஒரு பொல்லாத எதிரியைப் போலத் துரத்திக் கொண்டு வந்தது. மழையின் வேகம் அதிகமாயிற்று. வீட்டில் புகுந்த தண்ணீரின் மட்டமும் உயர்ந்து கொண்டே போயிற்று. அது மாடி வீடு என்றாலும் தாழ்வான பகுதியில் உள்ள வீடு. வெள்ளம் மாடிக்கும் வந்து விடக் கூடிய அபாயம். கணத்திற்குக்கணம் கூடிக் கொண்டே போயிற்று.

மாடியையும் வெள்ளம் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டால், பிறகு நிற்பதற்குக்கூட இடம் இல்லை. வேறு பாதுகாப்பான இடத்தைத் தேடிப் போகலாம் என்றாலோ, அந்தப் பகுதி முழுதும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. அதைக் கடந்து செல்ல எளிய மனித சக்தியால் இயலாது.

இனி என்ன செய்வது? தெரியவில்லை.

உயிருடன் தப்புவது எப்படி? புரியவில்லை.

தெரியாத, புரியாத, உதவியை எங்கிருந்தும் எதிர்பார்க்க முடியாத அந்த நெருக்கடியான நிலையில், ‘அன்னையின் அருள் ஒன்றால்தான் உதவ முடியும்’ என்று தீர்மானித்த அந்த அன்பர், அன்னையை வேண்டிக் கொண்டார்.

பிறகு நிகழ்ந்தது என்ன?

அதை அவரே கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

“நான் அன்னையைத் தீவிரமாகப் பிரார்த்திக்க ஆரம்பித்தேன். வேறு சிந்தனையே இல்லாமல் அன்னையை வேண்டிக் கொண்டேன். படிப்படியாக மழை நின்றது. நீர் மட்டமும் குறைந்து வந்தது. மறு நாள் பொழுது விடிந்ததும் கீழே எட்டிப் பார்த்தபொழுது தண்ணீர் முழுதுமாக வடிந்திருந்தது”.

சாதாரண மனிதனின் நம்பிக்கை, புறச் சூழ்நிலைகளிலும், மற்றவர்கள் மீதும்தான் உள்ளது. சில சமயங்களில் இந்த நம்பிக்கை கைகொடுப்பதில்லை. அவன் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகிறான். அப்பொழுது, தான் செய்து கொள்ளும் பிரார்த்தனையின் மீது அவனுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிடுகின்றது. அதாவது பிறர் மீது வைத்த நம்பிக்கைக்குப் பதில் தன் மீதே அவனுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிடுகின்றது. அந்தச் சென்னை அன்பரின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்ச்சி, பிறர், பிறவற்றின் மீது இருந்த நம்பிக்கை மாறி தன் (சுய) நம்பிக்கையால் கிடைத்த பலனைக் குறிக்கின்றது.

இனி வேறொரு நிகழ்ச்சியை நோக்கலாம்.

1983-லிருந்து அந்த அன்பர் என்னோடு கடிதத் தொடர்பு வைத்திருப்பவர். அவர் அவ்வப்போது எனக்குத் தன் நிலையை விளக்கிக் கடிதம் எழுதி, என் ஆலோசனையைக் கூறுமாறு கோருவார்.

ஆரம்பத்தில் அவர் எழுதிய கடிதம், அவருக்கு இருந்த நம்பிக்கை-அதாவது மற்றவர்கள் மீதும், புறச் சூழ்நிலைகள் மீதும் இருந்த நம்பிக்கை-ஆட்டம் கண்டுவிடவே, ‘இனி என்ன செய்வது?’ என்று அறியாமல் திணறிக் கொண்டிருக்கின்றார் என்பதைச் சுட்டிக்காட்டியது. இந்தச் செய்தி ‘அமுதசுரபி’ செப்டம்பர் 84 இதழ்க் கட்டுரையில் வெளியாகி இருக்கின்றது.

அந்தப் பெண் வாசகர் ஒரு வங்கியில் கிளார்க்காகப் பணிபுரிபவர். அவருக்கு மூன்று சகோதரிகள். குடும்பத்தில் அவரையும் சேர்த்து நான்கு பெண்களும் திருமண வயதை அடைந்துவிட்டவர்கள். மூத்த சகோதரர் திருமணமானவர். அவருக்குத் தம் தங்கைகளுக்குத் திருமணம் முடிக்க வேண்டுமே என்ற நினைப்பே இல்லை. பெற்றோர்களும் அதற்கான முயற்சியைச் செய்யவில்லை.

நான்கு பெண்களுமே உத்தியோகம் பார்ப்பவர்கள். ஆனாலும் அவர்களுக்கு அமைதி இல்லை. மூத்த பெண் ஒரு பள்ளி ஆசிரியை. ‘நமக்கு வயதாகிவிட்டதே! இனி நமக்கு ஊர், உலகத்தைப் போலத் திருமணம் நடக்குமா?’ என்ற கவலை சதா சர்வகாலமும் அவரை வாட்டியது. அதனால் அவருக்குத் தம் பணியில் ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது. அடுத்த பெண் வங்கிக் கிளார்க். அவர் தம் துறை சம்பந்தப்பட்ட சில தேர்வுகளை எழுதினார். அத்தனையிலும் தோல்வி. அதனால் அவருக்கு மனவேதனை. மூன்றாவது பெண்ணுக்குத் தபால், தந்தித் துறையில் வேலை. அதுவும் உள்ளூரில் அன்று; வெளியூரில். அங்கு அவருக்குத் தனியாக இருக்க வேண்டிய நிலை. அதனால் விளைந்தன பல தொல்லைகள். கடைசிப் பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவர் பெண்ணாக இருந்த காரணத்தால், அவருக்கு நிறுவனத்தில் ஏற்பட்ட சில சங்கடங்கள்.

‘இந்தப் பிரச்சினைகள் விலக அன்னை அருள் செய்ய வேண்டும்’ என அந்த வங்கிப் பெண் எனக்கு எழுதி இருந்தார்.

“அன்றாடம் அன்னையிடம் உங்களுடைய குறைகளையும், உங்கள் சகோதரிகள், அவர்களுடைய குறைகளையும் எடுத்துக் கூறி, அவற்றை விலக்குமாறு கேட்டு வந்தால், அன்னை அவற்றை விலக்கி உதவுவார்” என்று நான் அவருக்குப் பதில் எழுதினேன்.

அதற்கு ஏற்ப அவரும், அவருடைய சகோதரிகளும் அன்றாடம் அன்னையிடம் வேண்டிவர, அவர்களுடைய குறைகளும் ஒவ்வொன்றாக நீங்கி வந்தன.

முதல் பெண்ணுக்குத் திருமணம் முடிந்து ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இரண்டாவது பெண் அதுவரை தோல்வியையே தந்து கொண்டிருந்த தேர்வில் வெற்றி பெற்றார். வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மூன்றாவது பெண் மாற்றலாகி உள்ளூருக்கே வந்து குடும்பத்தோடு சேர்ந்து கொண்டார். நான்காவது பெண்ணுக்கு வேறொரு நல்ல நிறுவனத்தில் இரண்டு மடங்கு சம்பளத்தில் வேலை கிடைத்தது.

இந்த நிகழ்ச்சிகள் அந்த நான்கு சகோதரிகளுக்கும் பிரார்த்தனையின் சிறப்பைப் புரிய வைத்ததோடு தன்னம்பிக்கையையும் பரிசாக அளித்தன.

இந்தக் கட்டத்தில் அந்த வாசகர் (வங்கிப் பெண்) எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் உள்ள செய்தியைப் பார்ப்போம்:

“நான் என்னைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே எழுதி இருக்கின்றேன். இடையில் நீண்ட நாட்களாக உங்களுக்குக் கடிதம் எழுத முடியாமல் போய்விட்டது. என் தந்தை காலமாகி விட்டார். அன்னையின் அருளால் என் அக்காவிற்குத் திருமணமாகி ஓர் ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. என் இரண்டு தங்கைகளுக்கும் தேவையான நகைகளைச் சேகரித்து வைத்திருக்கிறேன். எனக்கு அடுத்த தங்கைக்கு ஒரு வரன் கூடி வந்துள்ளது. அது நல்லபடியாக நடந்தவுடன் என் கடைசித் தங்கைக்குத் திருமணம் முடிய வேண்டும். அதுவும் முடிந்த பிறகு கடைசியாகக் கல்யாணத்திற்கு நிற்பவள் நான் ஒருத்திதான். அண்ணன் இருந்தும் எந்த வித உதவியும் இல்லை. தந்தையும் காலமாகிவிட்டார். என் தாயோ பலவித நோய்களால் பாதிக்கப் பட்டுள்ளார்”.

“இந்த நிலையில் என் எதிர்காலம் என்னவாகுமோ என்று கவலையாக இருக்கிறது. இப்பொழுது எனக்கு வயது 30. இதுவரை நம்பிக்கையோடு இருந்து வந்த எனக்கு, இப்பொழுது நம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது. நான் வருந்தியும், உருகியும் அன்னைக்குத் தினமும் பிரார்த்தனை செய்து வருகின்றேன். பலன் ஏற்படவில்லை. மேற்கொண்டு நான் எப்படிப் பிரார்த்தனை செய்ய வேண்டும்? எப்படிப் பிரார்த்தனை செய்து கொண்டால் எனக்கு நல்ல எதிர்காலம் ஏற்படும் என்பதற்கு உங்கள் உதவியை நாடுகின்றேன். உங்கள் அறிவுரையை எழுதி அனுப்பும்படி கேட்டுக் கொள்கின்றேன்”. இது கடிதம். கடிதத்தில் ஒரு செய்தி. ‘நான் வருந்தியும் உருகியும் அன்னைக்குத் தினமும் பிரார்த்தனை செய்து வருகின்றேன். பலன் ஏற்படவில்லை’ என்பது அந்தச் செய்தி. இருக்கட்டும், இதற்குப் பிறகு வருவோம்.

‘நம்பிக்கை இரு வகையின’ எனப் பார்த்தோம். ஒன்று: மற்றவர்கள் மீதும், சூழ்நிலைகள் மீதும் வைக்கப்படும் நம்பிக்கை. மற்றொன்று: தன்னுடைய செயலில் வைக்கும் நம்பிக்கை. முதல் வகையான நம்பிக்கை உதவிக்கு வாராதபொழுது தன்னம்பிக்கை உதவியதை மழையால் தவித்த சென்னை அன்பரிடத்தும், வங்கியில் பணி புரியும் அன்பரிடத்தும் பார்த்தோம்; ஆனால், இரண்டாவது அன்பருடைய வாழ்க்கையில், தன்னம்பிக்கையே (‘இதுவரை நம்பிக்கையோடு இருந்து வந்த எனக்கு, இப்பொழுது நம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது’) உதவாமல் போய்விட்டது என்பதைப் பார்க்கின்றோம். ‘நான் வருந்தியும், உருகியும் அன்னைக்குத் தினமும் பிரார்த்தனை செய்து வருகின்றேன். பலன் ஏற்படவில்லை’ என அவர் விரக்தியோடு குறிப்பிடுகின்றார். ‘தன்னம்பிக்கை’ என்பதன் வேர்கள் வீழ்ந்த இடம் இதுதான்.

‘தன்னம்பிக்கை இழந்த ஒருவர் என்ன செய்ய வேண்டும்?’ என்பதை இனிப் பார்ப்போம்.

அன்னைக்குப் பிரார்த்தனை செய்வதால் பலன் ஏற்படுகின்றது. அதனால் பிரார்த்தனை தன்னம்பிக்கையை விளைவிக்கின்றது. இது மற்றவர்கள் மீதும், சூழ்நிலைகள் மீதும் வைக்கும் நம்பிக்கையைவிடச் சிறந்தது. ஆனால், அன்னையின் அருளில் மட்டுமே வைக்கின்ற நம்பிக்கைக்கு உள்ள சிறப்பும், புனிதத்துவமும் இதற்குக் கிடையா. தன்னம்பிக்கையில் ஏற்படுகின்ற பலன் ஒரு வரையறைக்கு உட்பட்டுத்தான் இருக்கும். அன்னையின் அருளில் மட்டுமே வைக்கின்ற நம்பிக்கைக்கு வரையறையே கிடையாது.

இந்த இடத்தில் மற்றவர் மீது வைக்கும் நம்பிக்கைக்கும், தன் மீது வைக்கும் நம்பிக்கைக்கும், அன்னையின் அருள் மீது வைக்கும் நம்பிக்கைக்கும் உள்ள வேறுபாடுகளைத் தெரிந்து கொள்வதானது, குழப்பத்தைத் தவிர்க்கும்.

மற்றவர் மீது வைக்கும் நம்பிக்கை, எங்கிருந்தோ நன்மையை எதிர்பார்க்கின்றது. தன் மீது வைக்கும் நம்பிக்கை, ஒரு துணையைப் (பிரார்த்தனையை) பற்றி, தனக்கு நன்மையைத் தேடிக் கொள்ள முயல்கிறது. இந்தச் சுய தேடல் முயற்சியால் நன்மைகள் கிடைக்கலாம். ஆனால், முற்றுமாகக் கிடைக்கும் என்று கூற முடியாது. அன்னையின் அருள் மீது வைக்கும் நம்பிக்கை, தேட வேண்டிய அவசியம் இல்லாமலே நன்மைகளை வாரி வழங்குகின்றது.

இளநிலை, இடைநிலை ஆகிய முன்னிரு நம்பிக்கைகளையும் கடந்து முதுநிலையாகிய அன்னையின் அருள் நம்பிக்கையைப் பெறுவதே அரியது; பெரியது.

அந்த வங்கி அன்பரைப் போல் தன்னம்பிக்கை இழந்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நான் சொல்லியே ஆக வேண்டும்.

அவர்கள் அதாவது தன்னம்பிக்கை இழந்தவர்கள் தளராது, அதனினும் உயர்ந்த (அன்னையின் அருள்) நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, குறுக்கிடும் இடையூறுகளைக் கடந்து செல்ல வேண்டும்.

அன்னையின் அருளில் மட்டுமே நம்பிக்கை வைக்கத் தெரிந்தவர்களுக்கு எந்தச் சிக்கலும் தீரும்; எந்தத் துன்பமும் விலகும். தீராத பிரச்சினை என்பதே இருக்க முடியாது.



book | by Dr. Radut