Skip to Content

02 - ஸ்ரீ அரவிந்தாசிரமம்

யோகத்துக்குப் புது இலட்சியம் ஒன்றைக் கற்பித்த ஸ்ரீ அரவிந்தர், ‘வாழ்க்கை எப்படிச் சத்திய ஒளியாக மலர வேண்டும்?’ என்பதை விளக்கி அதன்பாற்பட்ட யோகக் கருத்தை Life Divine என்ற நூல் மூலம் தெரிவிக்கின்றார். அன்னை தம் வாழ்க்கையை முழுதுமாக ஸ்ரீஅரவிந்தருடைய இலட்சியத்திற்கு அர்ப்பணித்தபிறகு, ‘உலகில் அந்த இலட்சியம் செயல்படுவதற்கு முதல் கட்டமாக ஓர் ஆசிரமம் நிறுவப்பட வேண்டும்’ என்று கருதினார். மகான் ஸ்ரீ அரவிந்தர் அந்தக் கருத்திற்கு இசைவு தந்தார்.

‘உலகத்தில் சத்தியம் நிலை பெற வேண்டுமானால், ஒரு சிறு சமுதாயம் உலகத்தின் பிரதிநிதியாக இருந்து அந்த முயற்சியை முன்னோடியாகச் செய்ய வேண்டும். அந்தச் சமுதாயத்திற்கென ஓர் இடம் ஏற்பட்டால், அதற்கு உலகில் தற்போது நிகழும் ஒவ்வொரு செயலுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும். மனித சுபாவத்தின் எல்லா அம்சங்களையும் யோக சக்திக்கு உட்படுத்தி, அவற்றின் கருவை இருளின் பிடியிலிருந்து விடுவித்து, ஒளியின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். அந்தச் சிறு சமுதாயத்தைச் சேர்ந்த சாதகர்கள் தம் வாழ்வில் அத்தகைய மாற்றத்தைக் கொண்டுவர முயன்றால், எதிர்காலத்தில் உலகில் பல நிலைகளில் பரவிக் கிடக்கின்ற வாழ்க்கையின் அடிப்படை மாறி, அது சத்தியத்தின் கருவியாக அமையும்’ என்பதே ஸ்ரீ அரவிந்தாசிரமம் தோன்றுவதற்கான அடிப்படைக் காரணமாகும். ‘உலகத்தில் ஏதாவது ஒரு பெரிய நல்ல காரியம் நடைபெற வேண்டுமானால், அது முதலில் இங்கே (ஆசிரமத்தில்) நடைபெற வேண்டும்’ என்கின்றார் அன்னை.

1968-இல் ஆரோவில் நிர்மாணிக்கப்பட்டபொழுது, ‘ஆரோவில் உள்ளவரை மூன்றாவது உலகப்போர் மூளாது’ என்று கூறினார் அன்னை. இன்றுவரை மூளவில்லை. போர்க்குணமும், வன்முறை உணர்வும், ‘எதிரியை வீழ்த்த வேண்டும்’ என்ற வெறியும் எல்லா மனிதர்களிடமும் உள்ள இயல்புகள். பல நாடுகளிலிருந்து வந்து சாதாரண மனிதர்கள் ஒரே இடத்தில் ஒன்று சேர்ந்து வாழ முனையும்பொழுது நிமிடத்துக்கு நிமிடம் பிணக்குகளும், பூசல்களும், முடிவில் சிறு மோதல்களும் ஏற்பட்டே தீரும்.

ஸ்ரீ அரவிந்தரையும் அன்னையையும் பரிபூரணமாக ஏற்றுக் கொண்டு ‘ஆரோவில்’ என்ற உலகப் பொது நகரில் வாழ்ந்துறையும் பன்னாட்டு மக்கள், அவ்வாறு ஏற்படும் சிறு மோதல்களை ஸ்ரீ அரவிந்தரின் பொன்னொளிக்குச் சமர்ப்பித்துத் தீர்வு காண முயலும்பொழுது உலகில் பெரு மோதல்கள் தவிர்க்கப் படுகின்றன. இந்த முயற்சி முழு வெற்றி அடைவதற்காகவே அன்னை ஆரோவில்லுக்குத் தலைவர் என்ற ஒருவரை நியமிக்கவில்லை; சட்ட திட்டம் எதையும் ஏற்படுத்தவில்லை. அங்குள்ளவர்கள் தம் தம் உள்ளொளிக்கே கட்டுப்பட்டவர்கள். அந்த உள்ளொளி போராட்டத்திலிருந்து மீண்டு வெற்றி பெற்றால், அது உலகத்துக்குக் கிடைக்கும் மாபெரும் வெற்றியாகும்.

1926-இல் ஸ்ரீ அரவிந்தாசிரமத்தை நிறுவிய அன்னை, ‘எதிர்காலத்தில் பொன்னொளியாக ஜோதி உலகை நோக்கி வரும் பொழுது, அதை ஏற்றுத் தக்க வைத்துக் கொள்ள ஓர் இடம் தேவை’ எனக் கருதி அவ்வொளி தங்கி இருக்கத் தேவையான சூழ்நிலைகளை ஏற்படுத்த முற்பட்டார். அதற்காக நிறுவப் பட்டதுதான் ஸ்ரீ அரவிந்தாசிரமம். ஒளி உறைய வேண்டிய இடம் மிகத் தூய்மையாக இருக்க வேண்டும் அல்லவா? அதனாலேயே அன்னை தூய்மைக்கு முதல் இடம் கொடுக்கின்றார்.

ஆசிரமம் தொடங்கப்பட்ட அடிநாளில், ‘அன்னை எங்களுக்கெல்லாம் புத்தகங்களையும், பொருட்களையும் எப்படி அடுக்கி வைப்பது என்பதைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்து அதிலிருந்து சுத்தம், ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவற்றையும் பயிற்றுவித்தார்’ என்று 96 வயதுவரை வாழ்ந்த சாதகர் ஒருவர் கூறியிருப்பதன் மூலம், அன்னை தூய்மைக்குக் கொடுத்த முக்கியத்துவம் நன்கு புரிகின்றது.

“இன்று ஆசிரமத்தில் இருக்கும் நீங்கள் அனைவரும் என் முற்பிறவிகளிலும் கூடவே இருந்தவர்கள். ‘இறைவன் பூவுலகிற்கு வந்து தன் தெய்வீக சத்தியத்தை நிலை நாட்டும்பொழுது நாங்களும் உங்களுடன் இருக்குமாறு அருள் பாலித்திட வேண்டும்’ என்று நீங்கள் உங்களுடைய ஒவ்வொரு பிறவியிலும் என்னிடம் கேட்டுக்கொண்டதால், எல்லாப் பிறவிகளிலும் தொடர்ந்து வந்து, இந்தப் பிறவிக்காக என்னுடன் ஆசிரமத்தில் இருந்து கொண்டு இருக்கின்றீர்கள்!” என்று சாதகர்களிடம் ஒரு முறை கூறினார் அன்னை.

மகான் ஸ்ரீ அரவிந்தரது யோகம் பூரண யோகம். “இந்த யோகம் இறைவனுடைய யோகம்; மனிதன் செய்யும் யோகம் இல்லை. இதை மனிதனால் செய்ய முடியாது. மனிதன் தன்னைப் பூரணமாக இறைவனுக்குச் சரணாகதி செய்த பின்னர், இறைவனே அந்த மனித உடலில் தங்கி யோகத்தை மேற்கொள்கின்றான்” என்று பரிபூரண யோகத்திற்கு விளக்கம் கொடுக்கும் ஸ்ரீ அரவிந்தர், மேலும் சொல்வார்; “நான் யாரையும் இந்த யோகத்தைச் செய்யும்படி அழைப்பதில்லை. ஆண்டவனுடைய அழைப்பு இருக்கின்றது என்பதைத் தீர்க்கமாக உணர்ந்தவர்கள் மட்டுமே இதை ஏற்றுக் கொள்ள முடியும். இந்த யோகத்தை மேற்கொள்ளும்பொழுது, நம்முள் இருக்கும் அனைத்து சக்திகளும் வீரியம் பெற்று இரு கட்சிகளாகப் பிரிந்து போர் தொடுக்கும். அந்தப் போர்க்களத்தை (பொய்ம்மைக்கும் வாய்மைக்கும் ஏற்பட்ட போராட்டத்தை) எதிர்கொள்ளத் தம்மை அர்ப்பணிக்கக் கூடியவர்களால் மட்டுமே இந்த யோகத்தை ஏற்றுக் கொள்ள முடியும்”.

அன்னையைப் பக்தி பூர்வமாக ஏற்றுக் கொண்ட மாத்திரத்தில் வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் அவிழ்வதையும், பிரச்சினைகள் தீர்வதையும், அல்லல்படுத்திக் கொண்டு இருந்த மனம் அமைதி அடைவதையும், நல்ல பெரிய நிகழ்ச்சிகள் எதிர்பாராமல் நிகழ்வதையும் பல அன்பர்கள் கண்கூடாகக் கண்டு இருக்கின்றார்கள். ஒரு கண நேரம் மட்டுமே நினைத்த தம் பக்தன் ஒருவனுக்கு, அவனாலேயே தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாதபடி அவனுடைய மனத்தின் ஆழத்தில் புதைந்து கிடந்த ஓர் ஆசையை அன்னை பூர்த்தி செய்து இருக்கின்றார். தன்னை அறிந்தபிறகு பக்தன் தன் குல தெய்வத்திற்கு ஏதாவது ஒரு பிரார்த்தனை செய்து கொண்டால், அந்தக் குல தெய்வம் இதுவரை பூர்த்தி செய்யாத அந்தப் பிரார்த்தனையை அன்னை அதே தெய்வத்தின் மூலம் இம்முறை பூர்த்தி செய்விக்கின்றார்.

ஓர் அன்பர் காச நோய்க்காக இரண்டு வருடங்கள் பவழ பஸ்பம் சாப்பிட்டார். குணமாகவில்லை. பிறகு ஒரு பத்து வருடங்கள் ஆங்கில வைத்தியம் செய்து பார்த்தார். நோய் அசைந்து கொடுக்கவில்லை. அவருக்கு விரக்தி; வேதனை. இந்த நிலையில் அவர் அன்னையைத் தரிசித்து முறையிட்டார். அதற்கு, “உங்களுக்கு எந்த மருந்து பிடிக்கிறதோ, அதைச் சாப்பிடுங்கள்” என்று மட்டுமே அன்னை கூறினார்.

அன்னையின் வாக்கை மருந்தாக எண்ணிய அந்த அன்பர், நம்பிக்கையுடன் ஏற்கனவே சாப்பிட்ட பவழ பஸ்பத்தை மீண்டும் சாப்பிட்டார். மூன்றே மாதங்களில் காச நோய் அவரைவிட்டு விலகிவிட்டது. பலனே இல்லாமல் இருந்த பவழ பஸ்பத்தில் அன்னையின் அருள் சேர்ந்ததும் நோய் தன்னாலேயே தீர்ந்தது. இங்கே ‘பஸ்பம்’ என்பது ஒரு கருவிதான்.

‘பக்தர்கள் பலவீனமானவர்கள்’ என்பதால், அன்னையின் அருள் விரைந்து செயலாற்றும். சாதகன் என்றால், அவனுக்குச் சட்டம் வேறு.

சாதகன் அன்னையை ஏற்றுக் கொண்டு யோகத்தை மேற்கொண்டவுடன், வாழ்க்கையில் உள்ள எல்லாப் பிரச்சினைகளும் தீவிரம் அடையும். இது நாள்வரை கட்டுப் பட்டிருந்த உள்ளுணர்ச்சிகள் எல்லாம் கட்டு மீறிச் செயல்படும். அதனால்தான் அன்னை சாதகர்களைத் தம் அருகிலேயே வைத்துக் கொண்டு இருந்தார். ஆசிரமத்தில் சேர்ந்தபிறகு சாதகன், அன்னை கொடுக்கும் வேலையைச் செய்ய வேண்டும். அவன் தனக்குப் பிடித்தமான வேலையைக் கேட்கக் கூடாது. அன்னை கொடுக்கும் வேலை பெரும்பாலும் சாதகனுக்குப் பிடிக்காத வேலையாகவே இருக்கும். சமையல் அறைப் பக்கம் எட்டிப் பார்க்கவே பிடிக்காத சாதகனுக்குச் சமையல்கட்டில் வேலை அமையும். அந்நேரத்தில் அன்னையை மட்டும் நினைவில் நிறுத்திக் கொண்டால், சாதகனுக்குள் நடக்கும் அந்தப் போராட்டத்தின் பாரத்தை அன்னை ஏற்றுக் கொள்வார். அதனால் அவனுக்குப் பிடித்தது, பிடிக்காதது என்ற பேதம் நீங்கிப் போகும். அவன் இரண்டு நிமிடம் அன்னையை மறந்து தன்னை நினைக்க ஆரம்பித்துவிட்டால் கோபத்திலும், எரிச்சலிலும் வேக நேரிடும்.

ஆசிரமத்தில் இன்று பல தொழில்கள் மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. அவை தொழில் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டவை அல்ல. சாதகர்கள் யோகம் செய்வதற்கு அவை தேவைப்பட்டன. அந்த நோக்கோடு அன்று அன்னையால் தொடங்கப்பட்ட ஒவ்வொரு தொழிற்கூடமும் யோகக் கூடமே.

‘எந்தச் செயலையும் சிறப்பாகச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போதுதான் இறையொளி அதன் மூலம் வெளிப்படுகின்றது’ என்பது அன்னையின் கோட்பாடு. அன்னை ஓர் அச்சகத்தை அமைத்து ஆசிரமத்தின் வெளியீடுகளைக் கொண்டுவர ஏற்பாடு செய்திருந்தார். அந்த அச்சகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரு பேராசிரியர் வேலை செய்து கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் நடைபெற இருந்த அகில இந்தியத் தத்துவ மாநாட்டுக்குத் தலைமை வகிக்கும்படி அவரைக் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். அது அச்சகம் ஆரம்பித்த தொடக்க காலம். அங்கே வசதிகள் இல்லை. மேஜை, நாற்காலிகளும் இல்லை. அந்தப் பேராசிரியர் சேவை மனப்பான்மையோடு அந்தத் தொண்டை செய்ததால், வசதிக் குறைவைப் பற்றி அவர் நினைத்துப் பார்த்ததே இல்லை. அவர் தம்முடைய மாநாட்டுத் தலைமை உரையை ஒரு பெட்டியில் உட்கார்ந்து கொண்டு, இன்னொரு பெட்டியின் மீது எழுதித் தயாரித்தார். அன்று மிக மிகச் சிறிய அளவில் தொடங்கப்பட்ட அந்த அச்சகம் பிறகு பெரிய அளவில் வளர்ந்து, அச்சுத் தரத்திற்காகவும், தயாரிப்புத் தரத்திற்காகவும் இரு முறை அகில இந்திய அளவில் முதற் பரிசைப் பெற்றது.

1950வரை-அதாவது மகான் ஸ்ரீ அரவிந்தர் இருந்த வரை-அன்னை ஆசிரம வேலைகளில் முழுக்கக் கவனம் செலுத்தினார். ஸ்ரீ அரவிந்தர் அவற்றிலிருந்து முற்றும் விலகி யோகத்தில் ஈடுபட்டிருந்தார். ‘யோகப் பொறுப்புகள்’ என்று வரும்பொழுது, ஸ்ரீ அரவிந்தர் அவற்றை அன்னையின் மூலம் ஏற்றுக் கொண்டார். 1930-இல் சுமார் 150 சாதகர்கள் மட்டுமே இருந்தார்கள். அப்பொழுது அன்னை, “சாதகர்களின் உள்ளுணர்வுகளையும், எல்லாச் செயல்களையும் நான் என் கைக்குள் அடக்கி வைத்து இருக்கிறேன்” என்று கூறினார். பிற்காலத்தில் சாதகர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் பெருகிவிட்டது. என்றாலும் சாதகர்களின் எண்ணமும், செயலும் அன்னையின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கின.

1920-இல் புதுவைக்கு நிலையாக வந்த அன்னை, 1942 வரை தம் பெருஞ்செல்வத்தைக் கொண்டு ஆசிரமத்துச் செலவுகளைச் செய்து வந்தார். சாதகர்கள் ஆசிரமத்தில் சேரும்பொழுது தங்கள் சொத்துகளை அன்னைக்குப் பூரணமாக அர்ப்பணிப்பது வழக்கம். மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்துவிட்ட ஆசிரமத்தின் செலவுகளுக்கு, அவ்வாறு கிடைத்த செல்வமும் பயன்படுத்தப்பட்டது.

1950-இல் மகான் ஸ்ரீ அரவிந்தரின் யோகம், அவரைப் பொறுத்த வரையில் சித்தித்துவிட்டது. ஆசிரமம் ஏற்படுத்தியதன் நோக்கம் ஓரளவு பூர்த்தியாகிவிட்டது. ஸ்ரீ அரவிந்தருக்குப்பின் அன்னையே ஆசிரமப் பொறுப்போடு சேர்த்து யோகப் பொறுப்பையும் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. அதனாலும், ஆசிரமம் ஏற்பட்டதன் நோக்கம் ஓரளவு பூர்த்தியாகிவிட்டாலும், அன்னை அதிக அளவில் சாதகர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. 1973-இல் அன்னை சமாதி அடையும்வரை இந்நிலையே நீடித்து வந்தது.

அன்னை தம் இறுதிக் காலத்தில் ஆசிரமத்தில் சேர விரும்பிய பிரெஞ்சுக்காரர் ஒருவருக்கு, “அது தேவை இல்லை. இருக்கும் இடத்திலேயே யோகத்தை மேற்கொள்ளலாம்” என்று பதில் அளித்துவிட்டு, மேலும் கூறினார்: “நீங்கள் இனிமேல் ஆசிரமத்தில் சேர்ந்தால், உங்கள் ஜீவனின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் சிரமங்கள் கட்டுக்கு அடங்காமல் வெளிப்படும். நீங்கள் வெளியில் இருக்கும்பொழுது, அந்தச் சிரமங்கள் உங்களுக்குள்ளிருந்து கிளர்ந்து வாராமல், வெளியிலிருந்து பிரச்சினைகளின் உருவில் வரும். உள்ளிருந்து கண்ணுக்குத் தெரியாமல் வரும் சிரமங்களைச் சமாளிக்க மனித சக்தியால் இயலாது. ஆனால், கண்ணுக்குத் தெரிந்து வெளியிலிருந்து வரும் பிரச்சினைகளை மனித சக்தியால் எதிர்கொள்ள முடியும்; வெல்லவும் முடியும்”.

“ஸ்ரீ அரவிந்தாசிரமம் அமைந்துள்ள இடம், அகத்திய முனிவர் சமாதியான அருள்தலம்” என ஓர் ஆராய்ச்சி நிபுணர் கூறி இருக்கின்றார். “அப்படித்தான் இருக்க வேண்டும்” என்று உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள் நிறைய இருக்கின்றன. மேலும், அங்கே முத்திரை பதித்து இருக்கின்றது அமைதி. அங்கே அருட்கொலு இருக்கின்றது. காலம் காலமாக அகத்தியரைப் போன்ற முனிபுங்கவர்கள் யோகம் செய்து புனிதப்படுத்திய புதுவை மண்ணுக்கு, ஸ்ரீ அரவிந்தர் பொன்னொளியைக் கொண்டு வந்து சேர்த்தார்; அமைதியைப் பயிர் செய்து அந்த மண்ணில் நல்வண்ணம் இழைத்தார்.

ஜவஹர்லால் நேரு முதல் தடவையாகப் புதுவைக்கு வந்தபொழுது “புதுச்சேரியில் எங்கும் இல்லாத அமைதி தவழ்கின்றது” என்றார்.

பெருந்தொழில் அதிபர் ஜே.ஆர்.டி. டாடா ஆரோவில்லுக்கு வருகை தந்தபொழுது, “இங்கே உயர்ந்த சந்தோஷம் குடி கொண்டிருக்கின்றது” என்றார்.

“ஆசிரமத்தில் என்னதான் நடக்கிறது?” என்று வேடிக்கை பார்க்க வந்த ஓர் 70 வயதுக் கிழவர் அங்கே வசித்த கிழவர்கள் எல்லாம் தடி ஊன்றாமல் நிமிர்ந்து நடப்பதைப் பார்த்து வியந்து, “அது எப்படி?” என்று கேட்டார்.

இதில் வியப்பு ஏதும் இல்லை. டாடா கூறியதைப் போல அங்கே உயர்ந்த (தெய்வீக) சந்தோஷம் இருக்கின்றது. அந்தத் தெய்வீக இன்பத்தில் இருப்பவர்கள் நிமிர்ந்துதானே நடப்பார்கள்?

அரசாங்கத்தில் உயர் பதவி வகித்த ஒரு வேத விற்பன்னர் ஆசிரமத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு, “இங்கே வசிப்பவர்களின் முகம் பிரகாசமாக இருக்கின்றது. மற்ற யோகங்களில் எதைக் கடைசி இலட்சியமாக நாடுகின்றார்களோ, அதை இங்கு ஆசிரமத்திலேயே பெற்று இருக்கின்றார்கள். இது பெரிய அதிசயம்” என்றார். அது அதிசயம்; ஆனால், உண்மை.

“ஸ்ரீ அரவிந்தாசிரமம் என்பது எது?” என்ற ஒரு கேள்விக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஒரு முறை ஸ்ரீ அரவிந்தர் கூறினார்; “ஆசிரமம் என்பது நான் இருக்கும் இந்தக் கட்டிடத்தை மட்டும் அன்று; சாதகர்கள் உள்ள எல்லா இடங்களையும் குறிக்கும், சாதகர்கள் எங்கு இருந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும் அவர்கள் உள்ள எல்லா இடங்களுமே ஆசிரமந்தான்”.



book | by Dr. Radut