Skip to Content

21 - பூரண நம்பிக்கையின் பலன்

‘அமுதசுரபி’ வாசகர்கள் பாக்கியசாலிகள். அவர்கள் அன்னையின் அருள் அமுதைப் பருகி, விதியின் சோதனையிலிருந்தும், வேதனையிலிருந்தும் விடுபட்டு நன்மைகள் பலவற்றை நாளும் பெற்று இன்புற்று வருகின்றார்கள். அத்தகைய அன்பர்கள் சிலரின் கடிதங்களை, ஏராளமான நலன்களைப் பெற்றேயாக வேண்டிய மற்றைய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

கீழ்க்கண்ட கடிதத்தைச் சென்னையிலிருந்து ஒரு பெண் வாசகர் எழுதி இருந்தார்.

“அன்னையின் கருணையை விளக்கி வரும் தங்களின் கட்டுரைகளை ‘அமுதசுரபி’யில் படித்து வரும் பல்லாயிரக் கணக்கான குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. எங்கள் குடும்பத்தில் நாங்கள் அன்னையை வழி காட்டியாக ஏற்றுக் கொண்டுள்ளோம். நானும், என் கணவரும் அவ்வப்போது அன்னைக்குச் சிறு சிறு காணிக்கைகளை அனுப்பி வைப்பது வழக்கம். ஸ்ரீ அரவிந்தர் அன்னை சமாதியைத் தரிசிக்கும் பாக்கியத்தையும் நாங்கள் பல சந்தர்ப்பங்களில் பெற்றுள்ளோம். அன்னையை நாங்கள் ஏற்றுக் கொண்ட நாள் முதலாக எங்கள் வாழ்க்கையில் பல அதிசய முன்னேற்றங்கள் ஏற்பட்டு எங்களுக்கு ஆனந்தத்தையும், வியப்பையும் அளித்து வருகின்றன அன்னையின் அருள். அதற்காக அன்னைக்கு நன்றி செலுத்த நாங்கள் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்”.

“அன்னையின் அருளால் பல சிரமங்களிலிருந்து விடுபட்டு எங்கள் குடும்பம் நிதானமாகப் போய்க் கொண்டிருந்த ஒரு கட்டத்தில், எங்கள் நலனில் அக்கறை கொண்ட குடும்ப நண்பர் ஒருவர், ஒரு வீட்டு மனையை வாங்கிப் போடும்படி எங்களை மிகவும் வற்புறுத்தியதோடு, அவரே தேடி அலைந்து ஓர் இடத்தைப் பேசியும் முடித்துவிட்டார். எங்களுக்கு அது பெரிய மலைப்பாக இருந்தது. ‘ஆயிரம் ரூபாய்கூட ஏற்பாடு செய்ய முடியாத நிலையில், அந்த மனையை ரூ.25,000 கொடுத்து வாங்குவது எப்படிச் சாத்தியம்?’ என்று பயந்து என் கணவர், அதற்கு மறுப்புத் தெரிவித்தார்.

ஆனாலும் அதனூடேயே, ‘அன்னையின் கருணை வழி காட்டும்’ என்ற நம்பிக்கையும் அவருள் நீரூற்றுப் போலப் பெருகியது. நானும், என் கணவரும், என் தாயாரும், என் குழந்தைகளும் உறுதியான நம்பிக்கையோடு அன்னையை இடைவிடாது வேண்டி வந்தோம். அந்த மனையை வாங்குவதற்கான முயற்சியையும் தொடங்கினோம். அன்னையின் அருளால் நண்பர்களும், உறவினர்களும் எங்களுக்கு மனமுவந்து உதவ முன்வந்தார்கள். தேவையான தொகை மளமளவென்று சேர்ந்து விட்டது. வீட்டு மனைக்கான பணத்தைக் கொடுத்துப் பத்திரப் பதிவும் செய்துவிட்டோம். இனி நாங்கள் அன்னையிடம் கேட்பது, ‘வாங்கிய கடனை அடைக்க ஒரு வழி கிடைக்க வேண்டும்’ என்ற வரம் ஒன்றைத்தான்”.

“அன்னையின் கருணைக்கு எல்லையே இல்லை. ‘இப்படியும் கூட நடக்குமா’ என்ற அளவிற்கு அன்னை உதவி செய்வார் என்ற முழு நம்பிக்கையோடு இந்தக் கடிதத்தை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்”.

மதுரையில் இருந்து வந்த இந்தக் கடிதத்தை எழுதியவரும் ஒரு பெண் வாசகரே.

அவர் எழுதி இருந்தார்: “நான் வெகு நாட்களாக ‘அமுதசுரபி’யில் வெளியாகும் உங்களின் அன்னையைப் பற்றிய கட்டுரைகளைத் தவறாமல் படித்து வருகிறேன். என் பிள்ளைகளுக்குத் திருமணம் ஆக வேண்டி இருந்தது. ‘அவர்களுடைய திருமணம் நல்லபடியாக முடிய வேண்டும்’ என்று அன்னையை வேண்டிக் கொண்டு ஸ்ரீ அரவிந்தாசிரமத்திற்கு இரண்டு தடவை என் சிறு காணிக்கைகளை அனுப்பி வைத்தேன். அன்னையின் கருணையால் அவர்களுடைய திருமணம் சிறப்பாக முடிந்தது. மிகக் கொஞ்சமாகப் பக்தி செய்து மிக மிக அதிகமான பலனை அன்னையிடம் இருந்து பெற்றுக் கொண்ட நான், அளவில்லாத மகிழ்ச்சியை அடைந்துள்ளேன்”.

“சமீப காலமாக என் கணவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அவர் பூரண ஆரோக்கியத்தைப் பெறவும், என் ஒரே பெண்ணுக்குச் சிறந்த வரன் அமையவும் அன்னையைப் பிரார்த்தனை செய்து கொண்டு ஸ்ரீ அரவிந்தாசிரமத்திற்கு என் காணிக்கையை அனுப்பி வைத்துள்ளேன்”.

அந்தக் கடிதம் நாக்பூரிலிருந்து வந்திருந்தது. அதை எழுதியவரும் ஒரு பெண் வாசகர்தாம். அவருடைய கடிதத்திலிருந்து ஒரு பகுதியை மட்டும் தருகிறேன்.

“என் கணவர் ஒரு வியாதியினால் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தார். மருந்தினால் தீராத அவருடைய வியாதியைத் தீர்த்து வைக்கும்படி அன்னையிடம் மனம் நெகிழ்ந்து வேண்டிக் கொண்டேன். அன்னையின் அருள் உடனே அனுக்கிரகம் செய்து, என் கணவரின் வியாதியைப் போக்கி, நலத்தை அளித்தது. அவருடைய வியாதியைத் தீர்த்து வைத்ததைப் போலவே என்னுடைய பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தையும் விலக்கி அருள் செய்ய வேண்டும் அன்னை”.

டெல்லியிலிருந்து வந்த இந்தக் கடிதத்தை எழுதியவரும் ஒரு பெண் வாசகர்தாம். அவரின் கடிதத்தில் காணப்பட்ட ஒரு முக்கியமான பகுதி இது:

“அன்னையின் அன்பராகிய நான், டெல்லியிலிருந்து உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அன்னையைப் பற்றி நீங்கள் எழுதி வரும் கட்டுரைகளை ‘அமுதசுரபி’யில் நான் தொடர்ந்து படித்து வருகிறேன். உங்கள் கட்டுரைகளைப் படித்தபிறகு நான் அன்னையின் பக்தையாகிவிட்டேன்”.

“சமீபத்தில் என் கணவருடைய மோதிரம் ஒன்று காணாமல் போய்விட்டது. ‘தொலைந்து போன அந்த மோதிரம் திரும்பவும் கிடைக்க வேண்டும்’ என அன்னையைப் பூரணமான பக்தியோடும், நம்பிக்கையோடும் வேண்டிக் கொண்டேன். அன்னையின் அருளால் தொலைந்து போன அந்த மோதிரம், திரும்பவும் கிடைத்துவிட்டது”.

பெண் வாசகர்களுக்குத்தான் பிரச்சினைகள் அதிகம் இருக்கும் போலும்! அவர்கள்தாம் அதிகமாக எழுதுகின்றார்கள்.

இன்னொரு பெண் வாசகரும் தமக்குள்ள பிரச்சினையைப் பற்றி முதலில் ஒரு கடிதம் எழுதி இருந்தார். தம் கணவர் வேலை ஏதும் செய்யாமல் வீட்டில் வெட்டித்தனமாகக் காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பதாகவும், ஏதேனும் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் அவர் இடக்குச் செய்வதாகவும் கடிதத்தில் வேதனையுடன் குறிப்பிட்டிருந்த அவர், தமக்குத் தாமே இப்படிச் சில கேள்விகளையும் கேட்டுக் கொண்டிருந்தார்: ‘அன்னையிடம் முழு நம்பிக்கை கொண்டுள்ள எனக்கு, அவரின் அருள் கிட்டுமா? வேலை என்பதை வேப்பங்காயாக நினைத்து வெறுக்கும் என் கணவர் மனம் மாறி வேலைக்குச் செல்வாரா?’

விரைவிலேயே அவரிடமிருந்து இன்னொரு கடிதம் வந்தது. அதில், “எனக்கு அன்னையின் அருள் கிட்டிவிட்டது. என் கணவரின் போக்கில் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அவர் இப்பொழுது வேலைக்குப் போகத் தயாராக இருக்கிறார். அவர் அப்படி மாறியவுடன் வேலை கிடைப்பதற்கான ஒரு வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. எங்களுக்குத் தெரிந்த ஒருவர், மைசூரில் உள்ள ஓர் எஸ்டேட்டில் என் கணவருக்கு வேலை வாங்கித் தருவதாக எழுதி இருக்கிறார். அந்த வேலைக்குப் போக என் கணவரும் சம்மதித்துவிட்டார். ‘இவை யாவும் அன்னையின் அருளால் நடந்துள்ள அற்புதங்கள்’ என்று நான் பூரணமாக நம்புகிறேன்” என்று எழுதி இருந்தார்.

கும்பகோணத்திலிருந்து ஜூலை 84-இல் கடிதம் எழுதிய அந்த அன்பரும் ஒரு பெண் வாசகர்தாம். அவர் எழுதி இருந்தார்:

“வணக்கம். கடந்த மே மாதத்தில் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன். அதில், ‘என் பெண்ணின் திருமணம் நல்ல விதமாக முடிய வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தேன். அன்னையை நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்தேன். அன்னை என் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு அருள் செய்தார். அவர் அருளால் என் மகளின் திருமணம் சீரும் சிறப்புமாக ஊரார் வியக்கும் வண்ணம் நிகழ்ந்தது”.

“ஒரு மாதத்திற்குமுன்பு-அதாவது ஜூன் மாதத்தில் திருமணத்தை வைத்திருந்தோம். ஜூன் முதல் வாரத்தில் இடைவிடாது மழை பெய்து கொண்டு இருந்தது. அதைக் கண்டு நாங்கள் அதிகம் கலங்கிப் போனோம். ‘எந்தத் தடங்கலும் இல்லாமல் திருமணம் முடிய வேண்டும்’ என்ற கவலை, எங்களை வாட்டி எடுத்தது. அன்னையிடம் ஈடுபாடு இல்லாத என் கணவர், நிர்ப்பந்தம் காரணமாக, ‘எங்கள் பெண்ணின் திருமணம் தடங்கலின்றி நல்ல விதமாக முடிய வேண்டும்’ என்று அன்னையை பிரார்த்தனை செய்து கொண்டு ஒரு காணிக்கையை ஸ்ரீ அரவிந்தாசிரமத்திற்கு அனுப்பி வைத்தார். அருள் மழையைப் பொழிந்தார் அன்னை. எங்கள் பெண்ணின் திருமணம் குறிப்பிட்ட நாளில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் மூலம், விரைந்து செயலாற்றும் அன்னையின் அருட் சக்தியைத் தெளிவாகப் புரிந்து கொண்ட என் கணவர், இப்பொழுது அன்னையின் பக்தராக மாறிவிட்டார்”.

“இத்தனை நன்மைகளை எங்களுக்கு வாரி வழங்கிய அன்னையின் அருள், என் மகனுக்கு மட்டும் கிட்டவில்லை என்பதை மிகவும் வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவன் வேலை பார்த்து வரும் நிறுவனத்தை மூடிவிடப் போவதாகச் சொல்கிறார்கள். ‘அவனுடைய எதிர்காலம் என்னவாகுமோ?’ என்ற கவலை, எங்களை வருத்திக் கொண்டிருக்கிறது. அன்னையின் அருள் அவனுக்குத் துணை செய்து எங்கள் கவலையைப் போக்க வேண்டும்”.

நான் அந்தக் கடிதத்திற்குப் பதில் எழுதினேன். “உண்மையான நம்பிக்கையும், பக்தியும் உள்ளவர்களிடத்தில் அன்னையின் அருள் தடையின்றிச் செயல்பட்டுச் சகல செல்வங்களையும் பெற்றுத் தரும். ஆகவே நீங்களும், உங்கள் பிள்ளையும் பூரண நம்பிக்கையோடும், பக்தியோடும் அன்னைக்குப் பிரார்த்தனை செய்து வாருங்கள். அன்னை அருள் செய்வார்” என்று நான் அதில் குறிப்பிட்டிருந்தேன்.

அக்டோபர் 84-இல் அந்த வாசக அன்பரிடமிருந்து மற்றும் ஒரு கடிதம் வந்தது. அதில் அவர் எழுதி இருந்தார்:

“நாங்கள் ஸ்ரீ அரவிந்தாசிரமத்திற்குப் பணம் அனுப்பி அன்னையின் திருவுருவப்படத்தை வரவழைத்துப் பூஜை அறையில் வைத்து வணங்கி வருகின்றோம். வேலை செய்த நிறுவனம் மூடப்பட்டதால் வேலையை இழந்து வருந்திக் கொண்டு இருந்த என் மகனுக்கு, அன்னையின் அருளால் ஒரு நல்ல வேலை கிடைத்துவிட்டிருக்கிறது. அவனுக்கு இந்த வேலை நிரந்தரமாக வேண்டுமானால், இப்பொழுது தடையாகவுள்ள சில சிக்கல்கள் நீங்கியாக வேண்டும். ‘அந்தச் சிக்கல்கள் நீங்கி அவனுடைய வேலை நிரந்தரமாக வேண்டும்’ என்று அன்னையை வேண்டிக் கொண்டு, ஒரு காணிக்கையை ஸ்ரீ அரவிந்தாசிரமத்திற்கு அனுப்பியுள்ளேன்”.



book | by Dr. Radut