Skip to Content

22 - அன்னையும், சுவாமிநாதன் என்றோர் அன்பரும்

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். அவருடைய தந்தைக்கு இராணுவத்தில் உத்தியோகம். அவருக்கு வடநாட்டில் வாசம். சுவாமிநாதன் இங்கே தம் மாமாவின் வீட்டில் தங்கிப் படித்து வந்தார். அவர் படிப்பில் சூடிகையானவர். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு கல்லூரிக்குச் சென்றார். நிலை அடியோடு மாறிப் போயிற்று. அவருக்குக் கல்வியில் கவனம் செல்லவில்லை. படித்தனவெல்லாம் மறந்து போயின. பிறகு பரீட்சையில் தேறுவது எப்படி? திரும்பத்திரும்பப் பரீட்சை எழுதினார். திரும்பத்திரும்பத் தோல்வியே கண்டார்.

வெறும் வாயை மெல்பவர்களுக்கு இது அவலாகக் கிடைத்தது. நண்பர்களும், உறவினர்களும் அவரை ஏளனம் செய்தார்கள். அவருக்கு இந்த ஏளனம் பெரிய அவமானமாக இருந்தது. ‘இவர்கள் முன்னால் எப்படியாவது ஒரு பட்டத்தை வாங்கிவிட வேண்டும்’ என்று சபதம் எடுத்துக் கொண்டார். ஆனால், அது முடியும் போல் தோன்றவில்லை. எதைப் படித்தாலும் அது பாறையில் பெய்த மழை நீரைப் போலல்லவா வழுக்கிக் கொண்டு ஓடிவிடுகின்றது!

என்ன செய்வது? புரியவில்லை.

இந்த நிலையில் அன்னையைக் கண்கண்ட தெய்வமாக எண்ணி வழிபடும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர், அவருக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அவர்களுக்குள் அடிக்கடி சந்திப்புகள் நிகழ்ந்தன. அப்பொழுதெல்லாம் அவர்கள் அன்னையைப் பற்றியும் விவேகானந்தர் போன்ற மகான்களைப் பற்றியும் பேசுவார்கள்.

அதற்குப்பிறகு சுவாமிநாதனிடம் நல்ல பல மாறுதல்கள் ஏற்பட்டன. மூடு பனி படர்ந்து கிடந்த அவர் மூளையில் பொல்லொன்று பூக்கள் மலர்ந்தது போல ஒரு புத்துணர்ச்சி பூத்தது. விவேகம் வந்ததும் படிப்பில் வேகம் வந்தது. அதைவிட, ‘இந்தக் குறைந்த படிப்பை வைத்துக் கொண்டு மூக்கில் விரலை வைக்கும் மாதிரி ஒரு வேலையை வாங்கிக் காட்டுகிறேன். என்னை அவமானப்படுத்தியவர்கள் எல்லாம் அதைக் கண்டு அயர்ந்து போகட்டும்’ என்ற வேகம் அவரிடம் அதிகப் பாய்ச்சல் காட்டியது. வடநாட்டு வங்கி ஒன்றுக்கு விண்ணப்பத்தை அனுப்பினார். ‘பட்டதாரிகள்தாம் நாற்காலியில் உட்காரலாம்’ என்ற விதி, முட்டுக்கட்டை போடாத காலம் அது. காலம் அவருக்குக் கனிந்தது. வடநாட்டு வங்கியில் அவருக்கு வேலை கிடைத்தது.

படிப்பை முடிப்பதற்கு முன்பே வேலை கிடைத்துவிட்டதால், அவமானப்படுத்தியவர்களை எல்லாம் ஆச்சரியத்திற்கு ஆளாக்கி விட்டு, வடநாட்டுக்குப் புறப்பட்டுப் போய்விட்டார் சுவாமிநாதன். என்றாலும் பட்டத்தையும், தமிழ்நாட்டில் அன்னையைத் தனக்கு அறிமுகப்படுத்திய நண்பரையும் அவர் மறக்கவில்லை.

ஓய்வு நேரத்தில் உட்கார்ந்து படித்தார். அன்னையின் அருள் அவர் மூளைக்குள் பிரகாசித்தது. திறவாத கதவுகள் திறந்து கொண்டன. புரியாத பாடங்கள் புரியத் தொடங்கின. பரீட்சை எழுதி, பட்டம் வாங்கினார். தமிழ்நாட்டு நண்பருக்குத் தம் வாழ்க்கையில் ஏற்பட்ட புதிய விடியலைப் பற்றி அடிக்கடி எழுதினார்.

இப்பொழுது சுவாமிநாதன் அன்னையின் அன்பர் குழாத்துள் ஒருவராகவே மாறிவிட்டார். அவர் மாதா மாதம் அன்னைக்குக் காணிக்கை அனுப்பிக் கொண்டிருக்கின்றார். அவர் வேலை பார்க்கும் நகரில் பலர் அன்னையின் அன்பர்களாக இருந்தார்கள். அவர் அடிக்கடி அவர்களைச் சந்தித்து அன்னையைப் பற்றி உரையாடுவார். அவர்களோடு சேர்ந்து அன்னையை மையமாகக் கொண்ட தியானக் கூட்டங்களிலும் கலந்து கொள்வார்.

சுவாமிநாதன் தமக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தைப் பற்றி, தமக்கு அன்னையை அறிமுகப்படுத்திய நண்பருக்கு எழுதி இருந்தார். அதை நான் இப்பொழுது இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

சுவாமிநாதனுக்குக் கோவையில் ஒரு நண்பர். அண்மையில் அவருக்குத் திருமணம் நிகழ்ந்தது. அவர் சுவாமிநாதனைப் பார்ப்பதற்காகத் தம் மனைவியுடன் புறப்பட்டு வருவதாக எழுதி இருந்தார். அவர் வருவதாகக் குறிப்பிட்ட நாளில் தம்பதிகளை வரவேற்பதற்காக ரெயில் நிலையத்திற்குப் போயிருந்தார் சுவாமிநாதன். தம்பதிகளும் வந்து சேர்ந்தனர். அவர்கள் ஏனோ ஏராளமான சாமான்களைக் கொண்டு வந்திருந்தனர். சுவாமிநாதன் போர்ட்டர்களைப் பிடித்து ஒரு தள்ளு வண்டியை வாடகைக்குப் பேசி, அந்தச் சாமான்களை அள்ளிப் போட்டுக் கொண்டு வண்டியை நிலையத்தின் தலை வாசலுக்குக் கொண்டு வந்து சேர்த்தார். தம்பதிகள் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது தலைமை டிக்கெட் பரிசோதகர் தம்பதிகளை நிறுத்தி, “உங்கள் சாமான்களை எடை போட வேண்டும்” என்றார். அந்தச் சமயத்தில் போர்ட்டர்கள் தள்ளு வண்டியிலிருந்து சாமான்களை இறக்கி டாக்ஸியில் ஏற்ற ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் சாமான்களை எடை போடுவது என்றால் எப்படி? வாசல்வரை கொண்டு வந்துவிட்ட சாமான்களை மறுபடியும் உள்ளே எடுத்துக் கொண்டு போக வேண்டும். அதுவரை மீட்டர் போடப்பட்ட டாக்ஸியை நிறுத்தி வைப்பது என்றால், வீண் தகராறு செய்வார் டாக்ஸிக்காரர். போர்ட்டர்கள் இரண்டு மடங்கு கூலி கேட்பார்கள். தள்ளு வண்டிக்கும் இரட்டிப்பு வாடகை கொடுக்க வேண்டும்.

இப்படிப்பட்ட ஓர் இக்கட்டான நிலையில் கொண்டு வந்து நிறுத்திவிட்ட தலைமை டிக்கெட் பரிசோதகரின் மீது சுவாமிநாதனுக்குக் கோபம் கோபமாக வந்தது. அவர் அந்தப் பரிசோதகரிடம் சென்று, “சாமான்களை எல்லாம் வெளி வாசலுக்குக் கொண்டு போய்விட்டார்கள். இனி எடை போட முடியாது” என்று கடுமையான குரலில் கூறினார்.

தம்முடைய உத்தரவு மறுக்கப்படுவதையும், மீறப்படுவதையும் எந்த அதிகாரியால் பொறுக்க முடியும்? உடனே அவர் ரயில்வே போலீஸுக்குத் தகவல் கொடுத்து சுவாமிநாதனைக் கைது செய்யச் சொன்னார். போலீஸாரும் வந்துவிட்டார்கள்.

அதுவரை கோபமாகக் கொந்தளித்துக் கொண்டிருந்த சுவாமிநாதனுக்கு, இப்பொழுது மனத்தில் கலவரம்; பீதி. ‘வேண்டாத வம்பு ஒன்றை விலை கொடுத்து வாங்கி விட்டோமே’ என்று உள் மனம் உறுத்திற்று. என்றாலும், இனி அவர் அதன் விளைவுகளைச் சந்தித்துத்தானாக வேண்டும். அவரைப் போலீஸ் பிடித்துக் கொண்டு போகப் போகின்றது. விருந்தாளிகள் ‘அம்போ’ என்று நடுத்தெருவில் நிற்கப் போகின்றார்கள். நாளைக்கு வெளியூரில் நடக்க இருக்கும் அலுவலகம் சம்பந்தப்பட்ட ஒரு பரீட்சையை எழுதப் போக வேண்டும். அவையெல்லாம் இனிச் சாத்தியம் இல்லை.

அந்த அதிகாரியிடமிருந்தும், போலீஸாரிடமிருந்தும் விடுபட இனி வழி என்ன?

இப்பொழுதுதான் அவருக்கு அன்னையின் நினைவு வந்தது! உடனே அவரைத் துவம்சம் செய்து கொண்டிருந்த எரிச்சலும், புகைச்சலும் நெஞ்சிலிருந்து அகன்றன. அமைதியாய்ச் சிந்தித்து, அமைதியாய்ப் புறச் சூழலை நோக்கினார்.

அந்தத் தம்பதிகள் ஸ்தம்பித்து நின்று கொண்டு இருந்தார்கள். அவரைச் சுற்றி நின்ற ஒரு கூட்டம், சுவாரசியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது. போலீஸ் எந்த நேரத்திலும் தோளில் கையைப் போட்டு அவரைத் தள்ளிக் கொண்டு போகும் தயார் நிலையில் இருந்தது.

தள்ளிக் கொண்டு போக வேண்டியதுதானே. அந்தப் பரிசோதகர்தாம் அதற்குப் பரிந்துரை செய்துவிட்டாரே! பிறகு ஏன் இந்தத் தாமதம்? எதை எதிர்பார்த்து இந்தத் தாமதம்?

‘எதுவும் நடக்கக் கூடிய சூழ்நிலையில் எதையும் நடக்க விடாமல் செய்து கொண்டிருக்கும் அன்னையே! இப்பொழுது நீங்கள் ஓர் அற்புதத்தை நிகழ்த்தி, என்னை இந்த இக்கட்டான நிலையிலிருந்து காத்தருள வேண்டும்’ என்று அன்னையை வேண்டிக் கொண்டார் சுவாமிநாதன்.

அதற்குப்பிறகு ஒரு கணம்தான்! அந்தப் பக்கமாக ஒரு ரயில்வே உயர் அதிகாரி வந்தார். போலீஸ் சூழ நின்று கொண்டிருந்த சுவாமிநாதனைத் தற்செயலாகப் பார்த்து எதையோ நினைவு கூர்ந்துவிட்டு, அவரிடம் வந்தார். “என்ன விஷயம்?” என்று கேட்டார். சுவாமிநாதனுக்கு எப்படியோ தெம்பு வந்துவிட்டது. நடந்ததை எல்லாம் கூறினார்.

“அவ்வளவுதானே? பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை. ஆனால், கொஞ்சம் அத்து மீறிப் போய்விட்டது!” என்ற உயர் அதிகாரி, தலைமை டிக்கெட் பரிசோதகரைத் திரும்பிப் பார்த்தார். அவர் இவரைப் பார்த்ததும் குழைந்தார். அவருடைய கோபம் போன இடமே தெரியவில்லை.

உயர் அதிகாரி தலைமை டிக்கெட் பரிசோதகரிடம், “அவருக்கு இளஇரத்தம். ஏதோ கோபமாகப் பேசியதை எல்லாம் பொருட்படுத்த வேண்டாம், மறந்துவிடுங்கள்” என்றார்.

“நான் பொருட்படுத்தாமல் இருக்கத்தான் முயன்றேன். இவர்தாம் விடவில்லை. இவர் தம் செயலுக்காகக் கொஞ்சம் வருத்தம் தெரிவித்து இருந்தாலும் போதும்; இவரை விட்டிருப்பேன். ஆனால், இவரோ, ‘நான் எப்படியாவது உள்ளே போய்த்தான் தீர்வேன்’ என்ற தீர்மானத்தோடு சூடாகப் பேசிக் கொண்டிருந்தார்! என்றாலும், ‘அதன் மோசமான விளைவால் இவர் பாதிக்கப்பட்டுவிடக் கூடாதே’ என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். அதற்காக, இத்தனை பேர் கண் எதிரில் என்னை அவமானமாகப் பேசிய இவரை விடுதலை செய்துவிடவும் என் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. நீங்கள் நல்ல சமயத்தில் வந்து என் சங்கடத்தைத் தீர்த்து, இவரையும் காப்பாற்றிவிட்டீர்கள்!” என்று நிம்மதியாக மூச்சுவிட்டார் தலைமை டிக்கெட் பரிசோதகர்.

இடியாய் இடித்து, மின்னலாய் வெட்டுகின்ற வானம்தான் மழையைக் கொடுக்கின்றது! ‘கைது... போலீஸ்’ என்றெல்லாம் அதிகார ஆர்ப்பாட்டம் செய்த அந்தப் பரிசோதகரின் அடி மனத்தில் எவ்வளவு மனிதாபிமானம் நிறைந்திருக்கின்றது! அதைப் புரிந்து கொண்ட சுவாமிநாதன், அவரிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

உயர் அதிகாரி, சுவாமிநாதனைப் புன்னகையுடன் நோக்கினார். “என்னை உங்களுக்குத் தெரிகின்றதா?” என்று கேட்டார்.

“தெரிகின்றது. சமயத்தில் வந்து உதவி செய்த கடவுளாகத் தெரிகின்றது!” என்றார் சுவாமிநாதன் நன்றிப் பெருக்குடன்.

“நான் அதைக் கேட்கவில்லை. என்னை எங்கேயாவது சந்தித்த மாதிரி ஞாபகம் வருகின்றதா?”

“வருகின்றது. ஆனால், எந்த இடத்தில் என்பதுதான் புரியவில்லை”.

“நீங்களும் அன்னையின் அன்பர்களும் கூடி அடிக்கடி தியானக் கூட்டங்களை நடத்துகின்றீர்கள் அல்லவா? அந்தக் கூட்டங்களுக்கு நான் வருவேன். தியானம் செய்வேன். நான் அங்கே யாரிடமும் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஆனால், நான் உங்களை அடையாளம் புரிந்து வைத்துக் கொண்டிருந்தேன். அது உங்களுடைய நெருக்கடியான கட்டத்தில் உதவி செய்ய எனக்கு ஒரு வாய்ப்பை அளித்தது. அன்னையின் அன்பர் ஒருவருக்கு உதவி செய்யக் கிடைத்த சந்தர்ப்பத்தை அன்னைக்குச் செய்த சேவையாக எண்ணி மகிழ்கின்றேன்” என்றார் அந்த உயர் அதிகாரி.

சுவாமிநாதனின் நெருக்கடியான நேரத்தில் ஏற்கனவே தெரிந்த ஒருவரை அங்கு வருமாறு செய்தும், வந்தவர் ஓர் உயர் அதிகாரியாக இருக்குமாறு செய்தும் அபயம் கொடுத்து விட்டார் அன்னை.

சுவாமிநாதனைக் காப்பாற்ற வந்தவர் தெரிந்தவராக மட்டும் அல்லாமல், அன்னையின் அன்பராகவும் ஏன் இருக்க வேண்டும்? வந்தவர் தலைமை டிக்கெட் பரிசோதகரை நன்கு அறிந்தவராக இருந்தாலே போதுமானது. ஆனால், வந்தவர் ஓர் உச்ச அதிகாரியாக அமைந்தது ஏன்?

சுவாமிநாதன் பிரச்சினை ஏற்பட்டவுடன் அன்னையைத்தான் நினைத்திருக்க வேண்டும். அதற்கு மாறாக அவர் தலைமை டிக்கெட் பரிசோதகரிடம் கோபத்தைக் கொட்டிவிட்டார். அதனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. அதே சமயத்தில் சுவாமிநாதன் அன்னையிடத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். எனவே, பிறகு அவர் அன்னையை நினைத்தவுடன், அன்னை அவரிடம் கொண்டுள்ள நெருக்கமான உறவை உணர்த்தும் வகையில் தம் அன்பர் ஒருவரையே அவருக்கு உதவ அனுப்பி வைத்தார். ‘வந்தவர் ஏன் அன்னையின் அன்பராக இருக்க வேண்டும்?’ என்பதற்கு இது விளக்கம்.

சமூகக் கண்ணோட்டத்தோடு பார்த்தால் சுவாமிநாதன் ஒரு பெரிய புள்ளி அல்லர்; ஒரு சாதாரண வங்கி ஊழியர். ஆனால், சுவாமிநாதன் அன்னையை ஏற்றுக் கொண்டுள்ளதால், அவர் சமூகத்தின் எல்லையைக் கடந்து உயர்ந்து விளங்கும் உன்னத நிலையை அடைந்துவிட்டிருக்கின்றார். உண்மையில் சமூகத்தில் உள்ள எவரும் அவருக்கு நிகரானவர் அல்லர். எனவேதான் சுவாமிநாதனுக்குப் பிரச்சினையாக அமைந்து தொல்லை கொடுத்த தலைமை டிக்கெட் பரிசோதகரைச் சமாளிப்பதற்கு ஓர் உச்ச அதிகாரியே முன்வந்து உதவினார். “வந்தவர் ஓர் உச்ச அதிகாரியாக அமைந்தது ஏன்?” என்பதற்கு இது விளக்கம்.

விளக்கங்கள் எல்லாம் அன்னையின் விலாசங்களே.



book | by Dr. Radut