Skip to Content

24 - காணிக்கை

“உள்ளங்கை ஜலம், வில்ப பத்ரம், ஒரு பழம் இவற்றுள் எதையேனும் ஒன்றை எனக்குக் கொடுத்தால் போதும். உண்மையான பக்தியுடன் நீ சமர்ப்பிக்கும் ஒவ்வொரு சிறிய பொருளும் உன் முழுச் சொத்துகளையும் சமர்ப்பிப்பதற்கு ஒப்பாகும்!” என்று கூறுகின்ற பரம்பொருளாகிய இறைவன், மேலும் சொல்வார்: “அது போன்ற பக்தியுடன் நீ உன் இஷ்ட தெய்வத்திற்குச் செய்யும் சமர்ப்பணத்தையும் நானே பெற்றுக் கொள்கின்றேன். அது மட்டுமன்று; நீ எந்தத் தெய்வத்திற்கு உன்னை உண்மையுடன் சமர்ப்பணம் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்வதும் நானே”. இன்னும் விளக்கமாகக் கூறுவதாக இருந்தால், மனத்தில் உள்ள பக்தியும், ஆர்வமும் முழுமையாகவும், தூய்மையாகவும் இருந்தால், தெய்வத்திற்குச் செய்யும் அர்ச்சனை மட்டுமில்லை; மற்ற மனிதர்களுக்குச் செய்யும் சேவையும் முடிவில் பரம்பொருளைச் சென்று அடைகின்றது.

இழந்த பார்வையைத் திரும்ப வேண்டுபவன் பார்வையைப் பெற்றபிறகு, தங்கத்திலோ, வெள்ளியிலோ கண் செய்து காணிக்கை செலுத்துகின்றான். கோயில்களில் அர்ச்சனை செய்யும்பொழுது தேங்காய் உடைப்பது வழக்கம். எப்படி ஒவ்வொரு மலருக்கும் ஒரு சிறப்புத் தன்மை இருக்கின்றதோ, அது போல ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனித் தன்மை உண்டு.

பிரச்சினைகள் தீர வேண்டும் என்று பிரார்த்திப்பவர் பொருளைக் காணிக்கையாக அளிப்பது வழக்கம். இந்த வழக்கம் எல்லா மதங்களிலும் உள்ள மக்களிடமும் இருக்கின்றது. அது அன்னையிடமும் பொருந்தும். ஆத்ம சிலாக்கியத்தை மட்டும் விழையும் அன்பர்கள் மலர், பத்ரம் (இலை), பழம் முதலியவற்றைக் கொடுப்பார்கள். இவ்வாறாக தெய்வ வழிபாட்டில் ஏதேனும் ஓர் உருவத்தில் காணிக்கை இடம் பெறுகின்றது.

முதியவரான வீரசைவ பிரம்மச்சாரி ஒருவர் அன்னையைத் தரிசிக்க வந்தார். ஆசிரமத்தில் அவருக்கு மேற்கூறிய விளக்கம் தெரிவிக்கப்பட்டது. “அன்னைக்குக் காணிக்கை அளித்தால், அது உங்களுக்குப் பெரிய நன்மையைத் தேடித்தரும்” என்று அவரிடம் கூறப்பட்டது. அவரோ, “நான் காணிக்கை செலுத்தப் போவதில்லை. எனக்குப் பொருள் இலாபம் வேண்டாம். அன்னையின் ஆசீர்வாதம் மட்டும்தான் தேவை” என்று கூறி, அன்னைக்கு மலர்க் காணிக்கையைச் செலுத்தி, அன்னையின் ஆசீர்வாதத்தைப் பெற்றதோடு ஆத்ம விளக்கமும் பெற்றார்.

அவர் ஒரு தொழில் அதிபர். 30 ஆண்டு காலமாகத் தொழில் செய்து வந்தும் பெரிய வளர்ச்சி எதுவும் இல்லை. ஆனால், அன்னையைத் தரிசனம் செய்தபிறகு அவருடைய தொழில் நிலை முற்றிலும் மாறிவிட்டது. இந்த முப்பதாண்டு காலத்தில் கிடைத்த ஆர்டர்களைவிட இந்த ஓராண்டு காலத்தில் ஆர்டர்கள் அதிகமாகக் கிடைத்தன. அதாவது தொழில் 30 மடங்கு உயர்ந்தது. என்றாலும் வருமானம் மட்டும் உயரவில்லை. பழைய வருமானமே நீடித்தது.

அதற்கு என்ன காரணம்? சிந்தித்தார். முன்பு அன்னையைத் தரிசிக்கச் சென்ற சமயத்தில், ‘நான் காணிக்கை செலுத்தப் போவதில்லை. எனக்குப் பொருள் இலாபம் வேண்டாம். அன்னையின் ஆசீர்வாதம் மட்டும்தான் தேவை’ என்று, தாம் கூறியது அவருக்கு நினைவு வந்தது. அவர் விரும்பியது போலவே அன்னையின் ஆசீர்வாதம் கிடைத்தது. ஆர்டர்களும் 30 மடங்கு பெருகின. ‘பொருள் இலாபம் வேண்டாம்’ என்றார். அதனால் இலாபம் கிடைக்காமல் போயிற்று. அவர் தம் தவற்றை உணர்ந்து அன்னையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு காணிக்கை செலுத்தினார். மூன்றே மாதங்களில் 30 ஆண்டு கால வருமானத்தைப் பெற்றார்.

வழிபாட்டில் காணிக்கைக்குள்ள முக்கிய இடத்தைச் சுட்டிக் காட்டும் நிகழ்ச்சியாக அது விளங்குகிறது. வால்டேர் ஓர் அமெரிக்க வியாபாரி. ஆண்டுக்கு ஒரு கோடி வியாபாரமாகும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அவர் இளைய மகன் ஆசிரமத்தில் சேர்ந்துவிட்டார். மகனைப் பார்ப்பதற்கு அவர் ஆசிரமத்திற்கு வந்தார். மகன் தந்தையிடம் அன்னையைத் தரிசிக்குமாறு கூறினார். தந்தை மறுத்துவிட்டார். ‘எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை’ என்றும் கூறினார்.

அடுத்த முறை அவர் மகனைப் பார்ப்பதற்கு ஆசிரமத்துக்கு வந்தார். “நீங்கள் அன்னையைத் தரிசித்தே ஆக வேண்டும். பிறகு நீங்கள் அதன் மேன்மையை அறிவீர்கள்” என்று மகன் அதிகமாக வற்புறுத்த, அவரைத் திருப்தி செய்யும் நோக்கில் அன்னையைத் தரிசித்தார். அந்தக் கணமே வால்டரின் மனத்தில் அன்னையின் ஆன்மிக ஒளி, வெள்ளம் போலப் பெருக்கு எடுத்தது. அன்னையின் ஆளுமையில் தான் உடைந்து சிதறி ஒரு துளிப் பனியாய்ப் போனதை உணர்ந்தார். அதற்குப்பிறகு, ‘அன்னையின் தரிசனம் மகத்தானது என்று நீ ஏன் விளக்கமாகக் கூறவில்லை?’ என்று மகனைக் கடிந்து கொண்டார்.

இவ்வளவு பரவசமாகப் பேசிய வால்டர் அன்னைக்குக் காணிக்கை அளிக்கவில்லை. அதில் அவருக்கு விருப்பமும் இல்லை. இருப்பினும் அன்னையின் அருள் அவரை ஆட்கொண்டு, அவருக்குப் பதினைந்து ஆண்டு காலமாக இருந்து வந்த முதுகு வலியை, மருத்துவத்தின் மிக நவீனமான உத்திகளாலும் இன்னதென்று கண்டு பிடிக்க முடியாத அந்தப் பேய் வலியை நீக்கியது. இத்தனைக்கும் அவர் வேண்டுதல்கூடச் செய்து கொள்ளவில்லை. கேளாமலே கொடுப்பவர் அல்லவா அன்னை?

அதற்கு அடுத்த ஆண்டு மூன்றாவது முறையாக மகனைப் பார்ப்பதற்காகப் புதுவைக்கு வந்தார் வால்டர். அப்பொழுது அன்னை சமாதியாகிவிட்டார். தந்தையைப் போலவே மகனும் சில காரணங்களினால் அமெரிக்காவுக்குப் போய்வர நேர்ந்தது.

அன்னை தம்மைத் தரிசிக்க வருபவர்களுக்குப் பல வகையான ஆசீர்வாதங்களை வழங்குவார். அவர் குழந்தையுள்ளம் படைத்தவர்களைப் பார்த்தால், ‘கலகல’ என்று வாய்விட்டுச் சிரித்து ஆசீர்வாதம் செய்வார். ஆத்ம பக்குவம் நிறைந்தவர்களை மலர்ந்த பெரும்புன்னகையோடு வரவேற்று, அவர்களுடைய கண்களை உற்று நோக்கித் தீவிரமாக ஆத்ம சக்தியைப் பொழிவார். ஓரளவு பழகியவர்களைச் சில சமயம் கேலி செய்வார். மெய்யுருகிப் பரவசம் அடையக் கூடியவர்களின் இரு கரங்களையும் பற்றித் தம் கரங்களில் சேர்த்துக் கொண்டு ஆசீர்வதிப்பார். திருமணமான புதுத் தம்பதிகளாக இருந்தால், ஒருவர் கரத்தை எடுத்து மற்றவர் கையில் வைத்துப் புன்முறுவல் செய்வார்.

அன்னையின் புன்முறுவலை விளக்கப் புகுந்தால், கம்பனுக்கு ஏற்பட்ட தவிப்புத்தான் நமக்கும் ஏற்படும். கம்பன் முதலில் இராமனின் அழகைச் சொல்லிப் பார்க்கின்றான். ‘மையோ, மரகதமோ, மரி கடலோ...’ என்றெல்லாம் சொல்லிப் பார்த்தவனுக்கு, இராமனின் முழு அழகையும் சொல்லிய மாதிரி தோன்றவில்லை. பிறகு என்னதான் சொல்லலாம்? அதுவும் தோன்றவில்லை. ‘ஐயோ, இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்!’ என்று தம் திறம் தோற்ற தன்மையைக் கொண்டே இராமனுக்கு அழகு சேர்த்துவிடுகின்றான் கம்பன்.

அதே போல, அன்னையின் புன்முறுவலை விளக்க முனைந்தால், நம் திறம் தோற்கும். நம் திறம் தோற்கும் இடத்திலேதான் அன்னையின் புன்முறுவல் அழியா அழகுடன் வெளிப்படும்.

இனி வால்டரிடம் வருவோம். கடைசிச் சந்திப்பின்போது அன்னை அவருடைய கைகளை எடுத்துத் தம் கைகளில் வைத்து ஆசீர்வாதம் செய்தார். அன்னை அந்த அரிய பரிசை எல்லோருக்கும் கொடுத்ததில்லை. தம்முடைய பக்தராக இல்லாத வால்டருக்கு அந்த மகத்தான பரிசைக் கொடுத்தார் அன்னை.

அதைக் கண்ணுற்ற வால்டரின் மகன், அத்தகைய அற்புதமான பரிசைப் பெற்ற தம் தந்தை, ‘அன்னையின் பக்தராக வேண்டும்’ என்று விரும்பினார். என்றாலும், அவருடைய இலட்சியம் அதைத் தடுத்தது. ‘தந்தை என்பதற்காகத் தனிப்பட்ட அக்கறை காட்டலாகாது’ என்ற இலட்சியம், அவரைப் பேசவிடாமல் தடுத்துவிட்டது.

வால்டர் ஆண்டு தோறும் தம் மகனைப் பார்ப்பதற்காக ஆசிரமத்திற்கு வந்து போய்க் கொண்டு இருந்தார்.

அவர் அப்படி வந்த ஒரு பயணத்தின்போது சென்னையில் உள்ள ஒரு பெரிய உர நிறுவனத்தினரைச் சந்தித்து, “அமெரிக்காவில் தொழில் தொடர்பான Consultation தேவைப்படுமா?” என்று கேட்டார்.

அது 1974. அன்னியச் செலவாணி கிடைக்காத காலம். அந்த நிறுவனத்தார், “எங்களுக்கு consultation தேவை இல்லை. புதிதாகத் தொடங்க இருக்கும் ஒரு தொழிலுக்கு டாலர்தான் தேவை” என்றார்கள்.

“அதையும் என்னால் ஏற்பாடு செய்ய முடியும்” என்றார் வால்டர். அவர்கள் 70 கோடி ரூபாய்க்கு டாலர்கள் கேட்டார்கள். அமெரிக்க வங்கி ஒன்றில் அதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி, அது பற்றிய விவரங்களை எல்லாம் திரட்டிக் கொண்டு விடை பெற்றார் வால்டர்.

அப்பொழுது அவருடன் அவருடைய மகனும் சென்றிருந்தார். நிறுவனத்தைவிட்டு வெளியேறியதும் அவர் தம் தந்தையிடம், “இவ்வளவு பெரிய கடன் தொகையை உங்களால் ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று கேட்டார்.

“அவர்கள் கேட்டார்கள். ‘அதை ஏற்றுக் கொள்’ என்று என் அந்தராத்மா கூறியது. ஏற்றுக் கொண்டேன். அதற்குமேல் எனக்கு ஒன்றும் தெரியாது” என்றார் தந்தை.

என்றாலும், அவருடைய மகனுக்கு மட்டும் ஏதோ ஒன்று தெரிந்த மாதிரி இருந்தது. ‘உலகத்திலேயே இல்லாத ஒன்றானாலும், கற்பனைக்கே எட்டாத ஒன்றானாலும், மனம் பவித்திரமாக இருந்து, தாமே நிகழும் நிகழ்ச்சிகளை நம் அறிவால் புறக்கணிக்காமல், தொடர்ந்து நம் பங்கை மட்டும் செய்து கொண்டே போனால், அன்னையின் அருளால் அவை நிதர்சனமாக நடக்கும்’ என்பது அவருக்குத் தெரியும். ஆனால், தெரிந்ததை அவர் தம் தந்தையிடம் தெரிவிக்கவில்லை.

வால்டர் அமெரிக்கா சென்றவுடன் ஒரு பெரிய வங்கியின் தலைமை நிர்வாகியைச் சந்தித்து, அந்தச் சென்னை நிறுவனத்தின் தேவையைப் பற்றிக் கூறி, “அதற்கு உங்களால் உதவ முடியுமா?” என்று கேட்டார்.

அந்த நிர்வாகி, “நீங்கள் நல்ல சமயத்தில் வந்திருக்கிறீர்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உர உற்பத்திப் பெருக்கத்திற்கு உதவுவதற்காக, சென்ற வாரம்தான் ஒரு புதிய பகுதியைத் தொடங்கினோம்” என்று கூறி, வால்டருக்கும், அவருடைய இந்திய நிறுவனத்திற்கும் 70 கோடி பணத்தைக் கொடுக்கச் சம்மதித்தார்.

வால்டர் அந்தச் சென்னை நிறுவனத்திற்கு வங்கியில் உதவித் தொகைக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், தமக்கு ஒரு தொகையைக் கமிஷனாகக் கொடுக்க வேண்டும் எனவும், அதற்கு இசைந்தால் ஒரு கம்பெனி ஆர்டராக எழுதி அனுப்புமாறும் தகவல் கொடுத்தார். அந்த நிறுவனம் 40 இலட்ச ரூபாய் கமிஷனுக்கு ஆர்டர் எழுதி அனுப்பியது.

அந்தத் துறையில் மேலும் ஆர்வம் கொண்ட வால்டர், தம் அடுத்த இந்தியப் பயணத்திற்காகத் திட்டமிட ஆரம்பித்த போது, அந்தச் சென்னை நிறுவனம் தற்போது பயன்படுத்தும் டெக்னாலஜியைவிட உயர்ந்ததொரு டெக்னாலஜி இருப்பதை அறிந்து, அதைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்துக் கொண்டார். பிறகு இந்தியப் பயணத்தை மேற்கொண்டார். அந்தச் சென்னை உர நிறுவனத்தினரைச் சந்தித்து, தாம் திரட்டிக் கொண்டு வந்த புதிய டெக்னாலஜியைப் பற்றி விவரித்தார்.

அதைக் கவனமாகக் கேட்ட அவர்கள், “உங்களுடைய புதிய டெக்னாலஜியைப் பயன்படுத்த இந்தியாவில் உள்ள எந்தத் தனியார் நிறுவனத்தாலும் முடியாது. அதை இந்திய அரசாங்கம் மட்டுமே செய்ய முடியும். நீங்கள் எங்களுக்கு வாங்கிக் கொடுக்க இருக்கும் வங்கி டாலர் கடன் ஒன்றே போதும்” என்றார்கள்.

வால்டர் உடனே டெல்லிக்குச் சென்றார். பல மத்திய அமைச்சர்களைச் சந்தித்துப் பேசினார். அனைவரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்கள். ஓர் அமைச்சர், “புதுத் திட்டத்தை 200 கோடியில் செய்யலாம்” என்றார். மற்றோர் அமைச்சர், “இன்னும் அதிகச் செலவாகும்” என்றார். கடைசியில் ரெயில்வே அமைச்சர் அதை, தாம் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார். திட்டத்தை முழுமையாகப் பரிசீலனை செய்து எல்லாம் சரியாக இருந்தால் 800 கோடியில் நிறைவேற்றுவது என முடிவு செய்து, மேலும் அது பற்றிய விளக்கத்தைக் கொடுக்குமாறு வால்டருக்குக் கடிதம் கொடுத்தது ரெயில்வேத் துறை.

திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், வால்டருக்கு சுமார் 5 கோடி ரூபாய் கமிஷனாகக் கிடைக்கும். அவர் இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவுக்குப் போய்ச் சேர்ந்தார். அந்த டெக்னாலஜி பற்றிய எல்லா விவரங்களையும் முழுமையாகச் சேகரித்தார்.

சாதகரான மகன் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமாகப் போய் வந்து கொண்டு இருந்தபொழுது, தம் தந்தையின் வியாபாரம் முன்பைவிடப் பெருகி இருப்பதைப் பார்த்து, “இவையெல்லாம் அன்னையின் தரிசனத்தால் உங்களுக்குக் கிடைத்தன. உங்களுடைய முயற்சிகள் முழு வெற்றியைப் பெற வேண்டுமானால் நீங்கள் அன்னைக்கு 1000 டாலர் காணிக்கை அனுப்ப வேண்டும்” என்று கூறினார்.

“நீ பக்தியின் காரணமாக அதிகமாகக் கூறுகிறாய். நான் செய்த முயற்சிகளுக்குரிய பலன் நிச்சயமாகக் கிடைத்தே ஆக வேண்டும். இதற்காக நான் ஏன் அன்னைக்குக் காணிக்கை செலுத்த வேண்டும்?” என்று கேட்டார் வால்டர்.

மகன் விடவில்லை. இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் வருகிற வீரசைவ பிரம்மச்சாரியின் கதையைக் கூறி, “அன்னைக்கு 10 டாலராவது காணிக்கையாகக் கொடுங்கள்” என்று வேண்டினார். வால்டர் கண்டிப்பாக மறுத்துவிட்டார்.

அதற்குப்பிறகு நிகழ்ச்சிகள் முரணாகத் திரும்ப ஆரம்பித்தன. சென்னை உர நிறுவனம், தான் தொடங்க இருந்த புதிய நிறுவனத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டது. அதற்கு இனி 70 கோடி டாலர் கடன் தேவை இல்லை. அதற்காக வால்டர் எடுத்துக் கொண்ட முயற்சியும், எதிர்பார்த்த கமிஷன் தொகையும் பலன் இல்லாமல் போயின. அவருடைய மனைவிக்கு அவர் இந்தியாவுக்கு அடிக்கடி போய் வருவது பிடிக்கவில்லை. “இந்தியாவுக்குப் போகவர அதிகச் செலவாகிறது. அதே வேலையை அமெரிக்காவில் இருந்து கொண்டு செய்யுங்கள்” என்று கூறிவிட்டார். மனைவியின் குறுக்கீட்டை வால்டரால் அலட்சியப்படுத்த முடியவில்லை. அதன் காரணமாக இந்திய ரெயில்வே அமைச்சர் கேட்ட புதுத் திட்டம் பற்றிய விவரங்களை மேற்கொண்டு சேகரித்துக் கொடுக்க முடியவில்லை. அதனால் அது முயற்சிக் கட்டத்திலேயே முடிந்து போயிற்று.

ஏறக்குறைய அதே சமயத்தில் அமெரிக்க அரசாங்கம் புதுத் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. அதன்படி அரசு பல ஆயிரம் கோடி செலவில், பள்ளி, மருத்துவ விடுதி, நூலகம் போன்றவற்றிற்குப் புதிய கட்டிடங்களைக் கட்டிக் கொடுக்க முன் வந்தது. பொதுவாக, அரசு ஆணை வந்தபிறகு சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி ஆகியவை அதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தைப் பெற்று அவற்றுக்கான கட்டிடங்களைக் கட்ட வேண்டும். நம் நாட்டில் இருப்பதைப் போன்ற அரசாங்க நடைமுறை அங்கேயும் உண்டு. பத்திரிகைகளில் டெண்டர் வரும். பலர் கொட்டேஷன் கொடுப்பார்கள். குறைவான தொகைக்குக் கொட்டேஷன் கொடுத்தவர்களுக்கு அந்தப் பணி ஒதுக்கீடு செய்யப்படும். இங்கு உள்ளதைப் போலவே அங்கும் இந்த நடைமுறைகளைப் பூர்த்தி செய்யப் பல மாதங்களாகும். மேலும் ஒரு விசேடம்: அது அமெரிக்காவுக்கே உரியது.

புதிதாக ஒரு பள்ளிக் கட்டிடத்தைக் கட்ட வேண்டுமானால், ஏற்கனவே உள்ள பள்ளியின் கட்டிட அளவு எவ்வளவு, மக்கட் தொகை எவ்வளவு, பள்ளியில் பயிலும் மாணவர்களின் தொகை எவ்வளவு-என்பன போன்ற விவரங்களைக் குறிப்பதுடன், இனி வரும் 20 ஆண்டுகளில் அங்கு மக்கட் தொகையில் ஏற்படக் கூடிய அதிகரிப்பு, மாணவர் தொகையில் ஏற்படக் கூடிய அதிகரிப்பு, அந்தத் தேவைகளுக்கு ஏற்பச் செய்யப்பட வேண்டிய விரிவு ஆகிய விவரங்களையும் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் டெண்டர் கொடுக்க வேண்டும். மருத்துவ விடுதி, நூலகம் போன்றவற்றுக்கும் அவ்வாறே கணக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

இந்தக் கணக்குகளை எல்லாம் எடுத்து டெண்டர் கொடுப்பதற்குள் அந்த ஆண்டின் கடைசித் தேதி தாண்டி விடும். அவ்வாறு நேர்ந்தால் அந்த ஆண்டிற்காக ஒதுக்கப்படும் தொகையை, நகராட்சிகளும், மாநகராட்சிகளும் அரசுக்குத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். இது அரசின் திட்டம். இதைப் போன்றதொரு பொது நலத் திட்டம் அங்கு முதன் முறையாக வந்ததால், எல்லாக் காண்ட்ராக்ட்டர்களும் அந்த நிலையைச் சமாளிக்க முடியாமல் திணறினார்கள்.

அவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது வால்டரின் நிலை. கடந்த 30 ஆண்டுகளாக அவர் இதைப் போன்றதோர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு நகராட்சிகளுக்கும், மாநகராட்சிகளுக்கும் பல பணிகளை நீண்ட காலமாகச் செய்து வருவதால், நாட்டில் உள்ள அனைத்துக்குமான புள்ளி விவரங்கள் அவரிடம் தயாராக இருந்தன. ‘அவரால் எல்லா மாநகராட்சிகளுக்கும் உடனடியாகத் திட்டங்களைத் தயாரிக்க முடியும். அவர் ஒருவராலேயே டெண்டருக்குக் குறித்த நேரத்தில் திட்டம் கொடுக்க முடியும்’ என்ற நிலை. தொழிலில் அது உச்சபட்சமான அதிர்ஷ்ட நிலை.

அவர் 30 கோடி டாலருக்கும் அதிகமான திட்டங்களைக் கொடுத்து அங்கீகாரம் பெற்றார்.

“என் 30 ஆண்டு காலக் கடுமையான உழைப்பு, இப்பொழுது மொத்தமாகப் பலன் தரப் போகிறது. இப்பொழுது 30 கோடி டாலர்களுக்கான ஆர்டர் என் கையில்! இனி வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான்” என்று வால்டர் தம் மகனிடம் பெருமையாகக் கூறினார்.

ஆனால், வேலையை ஆரம்பிப்பது அப்படி ஒன்றும் சுலபமாக இருக்கவில்லை. வேலையைச் செய்ய அவருக்கு ஓர் உத்தரவு வந்தது என்னவோ உண்மை. என்றாலும், அந்த உத்தரவை வைத்துக் கொண்டு வேலையை ஆரம்பித்துவிட முடியாது. “வேலையை ஆரம்பிக்கலாம்” என்று இன்னோர் உத்தரவு வரவேண்டும். ‘சர்வீஸ் கமிஷனில் செலக்க்ஷனாகி விட்டாலும், போஸ்டிங் ஆர்டர் வந்த பிறகுதான் பணியில் சேர முடியும்’ என்பதைப் போன்ற நிலை அது.

அமெரிக்கக் காங்கிரஸ் பாஸ் செய்த எல்லாச் சட்டங் களையும் ஜனாதிபதி ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட வேண்டும். இந்திய ஜனாதிபதிக்கும் அதே போன்று அதிகாரம் உண்டு. ஜனாதிபதி கையெழுத்துப் போடலாம்; மறுக்கவும் செய்யலாம். அமெரிக்கக் காங்கிரஸ் பாஸ் செய்த பொது நலச் சட்டம், அமெரிக்க ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக எடுத்துச் செல்லப்பட்டது. அதை அவர் ஏற்கவில்லை. தனக்குள்ள விசேட அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்தச் சட்டத்தை ரத்துச் செய்து விட்டார்.

வால்டருக்குக் கைக்கு எட்டியது வாய்க்குக் கிட்டவில்லை. பெரிய பலன்கள் கிடைத்தாக வேண்டிய எல்லாச் சந்தர்ப்பங் களிலும் ஏமாற்றமே எதிர் நின்றது. அவருக்கு இந்த நிலையில் காணிக்கையின் மகத்துவம் புரிந்தது. என்றாலும் அவர் அன்னைக்குக் காணிக்கை அனுப்பவில்லை.

தொடர்ந்து வந்த தோல்விகளால் தொய்ந்து போன வால்டர், ஒரு கோடி பெறுமானம் உள்ள தன் நிறுவனத்தை, தம் பெரிய பிள்ளையிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வு பெற்றார்.

அவருடைய பெரிய பிள்ளை தம் தந்தையைவிடத் திறமைசாலி. தொழிலைப் பல வழிகளிலும் புதுமைப்படுத்தினார். எல்லாம் சரியாகத்தான் இருந்தன. என்றாலும் எங்கேயோ கோளாறு; எதிலோ ஓட்டை. இரண்டே வருடங்களில் நிறுவனம் நொடித்துப் போய்விட்டது. அவர் சுத்தமாகத் திவாலாகிவிட்டார். திவால் ஆனதைக் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டியது ஒன்றுதான் பாக்கி.

புதுவையில் இருந்த அவருடைய தம்பிக்கு இந்தச் செய்தி கிடைத்தது. ‘ஒரு பத்து டாலரை அன்னைக்குக் காணிக்கை அனுப்பச் சம்மதித்தால் இழந்தவை எல்லாம் திரும்பி வரும்’ என்று எழுத நினைத்த அவர், தம் அண்ணிக்கு அதை எழுதினார். அவருடைய கடிதம் கிடைத்ததும் அண்ணி அந்த விஷயத்தைத் தம் கணவருக்குக் கூறினார். அவர் இருபது டாலர் கொடுத்து அதைத் தம் தம்பிக்கு அனுப்பச் சொன்னார். இப்பொழுது வால்டரும் தம் பங்குக்கு 100 டாலர் சேர்த்து 120 டாலராக அனுப்பி வைத்தார். அதே வருடத்தில் இழந்த ஒரு கோடியும் திரும்பக் கிடைத்தது. ஆனால், திரும்பும்போது, அது இரண்டரைக் கோடியாக வந்தது!

இதுதான் காணிக்கைக்குள்ள சிறப்பு.



book | by Dr. Radut