Skip to Content

04 - அன்னையும் இந்திரா காந்தியும்

பகவான் ஸ்ரீ அரவிந்தர் பரம்பொருளின் அவதாரம் ஆவார். ‘எண்ணிலா உலகங்களுக்கும், தேவர்களுக்கும், கடவுள்களுக்கும் தாயாக விளங்கும் ஆதி பராசக்தியே அன்னையாக அவதரித்துள்ளார்’ என்று அன்னையை அடையாளம் காட்டுகின்றார் ஸ்ரீ அரவிந்தர்.

அன்னை மேற்கொண்டிருந்த பணி மிக உன்னதமான ஒரு பணியாகும். ‘மனிதன் தெய்விக நிலைக்கு உயர்ந்து கடவுளரையும் கடந்து நிற்க வேண்டும்’ என்பது அவருடைய பணியின் நோக்கமாகும்.

எக்காரணத்தை முன்னிட்டாவது அன்னையிடம் வரும் அன்பர்களின் விருப்பங்களை, ‘அவர்கள் வெளியிட வேண்டும்’ என்று காத்திராமல், அவர் அதைப் பூர்த்தி செய்து அருள் பாலிப்பதுண்டு.

இப்பண்பு உலக வரலாற்றில் காண இயலாத ஒன்றாகும். முறையிட்டு தவம் செய்து, வேண்டுகோள் விடுத்து தம்முடைய விருப்பத்தை ஒருவர் பூர்த்தி செய்து கொள்வது உலக வழக்கு. அது மட்டுமன்று; பக்தனின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கும் தெய்வம், அவ்வாறு செய்வதற்குப் பல நிபந்தனைகள் விதிப்பதும் உலக வழக்கே. கேட்காமலே கொடுக்கும் தெய்வத்தைப் பற்றி நாம் இதுவரை கேள்விப்பட்டதில்லை. ஆனால், அன்னை கேட்காமலே கொடுப்பவர்!

தமிழ்ப் பண்டிதர் ஒருவரின் மனைவி அடங்காப் பிடாரி. அவள் தன் கணவரோடு சண்டை போட்டுக் கொண்டு பிறந்த வீட்டிற்குச் சென்று நீண்ட காலமாகத் தங்கிவிட்டாள். அவள் திரும்பி வரும் நோக்கத்தில் இல்லை. அதனால் பண்டிதர் வாழ்க்கையில் மிகவும் விரக்தி அடைந்து போயிருந்தார்.

அவர் தற்செயலாக அன்னையைத் தரிசிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அப்பொழுது அவருக்கு அன்னையைப் பற்றி எதுவும் தெரியாது. அவர் அன்னையை வேண்டிக் கொள்ளவும் இல்லை. ஆனால், அவர் அன்னையைத் தரிசித்த சில நாட்களுக்குள் அவருடைய மனைவி தன்னாலேயே அவரைத் தேடி வந்துவிட்டாள்.

அவ்வாறு அன்னையிடம் கொஞ்சமாகக் கேட்டு நிறையப் பெற்றவர் மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தி.

1971-ஆம் ஆண்டு 85 ஆண்டுகளாக அடர்ந்த ஆல மரமாக இருந்த காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது.

அப்பொழுது இந்திரா காந்தி பாரதப் பிரதமராக இருந்தார். பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்த் தரப்பில் சேர்ந்துவிட்டார்கள். ஆகவே இந்திரா காந்திக்குப் போதுமான பலம் இல்லாமற் போயிற்று. அதனால் அவர் தி.மு.க வினர் ஆதரவை நாட வேண்டி இருந்தது. 25 தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்திரா காந்திக்குத் துணையாக நின்று பாராளுமன்றத்தில் அவருக்குத் தேவையான பலத்தைக் கொடுத்து வந்தனர்.

இந்த உதவி பறி போகாமல் இருக்க இந்திரா காந்தி ஒவ்வொரு நிமிடத்தையும் அச்சத்தோடு ஓட்டும்படியாக இருந்தது. எனவே அவருடைய அரசியல் எதிர்காலம் நிச்சயம் இல்லாமல் இருந்தது.

இதிலிருந்து விடுபட அவருக்கு ஒரே வழிதான் இருந்தது. மீண்டும் தேர்தலை நடத்தி மக்களின் பூரண ஆதரவைப் பெறுவதுதான் அந்த ஒரே வழி. ஆனால், ‘தேர்தலை நடத்தினால் தமக்குச் சாதகமாக இருக்குமா? அல்லது நிலை இதைவிட மோசமாகிவிடுமா?’, என்று குழம்பினார் அவர்.

அந்த நேரத்தில் இந்திரா காந்திக்கு நெருக்கமானவரும், அவருடைய அமைச்சரவையில் ஓர் அமைச்சராக இருந்தவருமான ஒரு பெண்மணி, “நீங்கள் அன்னையைத் தரிசித்து ஆசி பெற்றுக் கொண்டால் தேர்தலில் உங்களுக்குப் பூரண ஆதரவு கிடைக்கும்” என்று அவருக்கு ஆலோசனை வழங்கினார்.

அந்த ஆலோசனையை ஏற்று அன்னையைத் தரிசிக்க பாண்டிச்சேரிக்குப் புறப்பட்டு வந்தார் இந்திரா காந்தி.

இந்திரா காந்தி அன்னையைத் தரிசிப்பதற்காக அறைக்குள் நுழைந்து வணங்கினார். அவருக்காகவே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமரும்படி கூறினார் அன்னை.

“நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் எங்கள் கட்சி 250 இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்புக் கிடைக்குமா? 250 இடங்கள் கிடைக்காவிட்டால் எங்கள் கட்சி ஆட்சியை அமைக்க முடியாது” என்று அன்னையிடம் கூறினார் இந்திரா காந்தி.

அவரைத் தம் பார்வையால் பூரணமாகத் தழுவிக் கொண்டு, பெரும்புன்னகை ஒன்றைப் பூத்தார் அன்னை. இவ்வாறு நிகழ்ந்தால், ‘அன்னை அன்பரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு ஆசீர்வதித்துவிட்டார்’ என்று பொருள். ‘தேவையான ஆதரவு கிடைக்கும்’ என்பதற்கு அடையாளமாகப் பலமாகத் தலை அசைத்தார் அன்னை. அது மட்டுமன்று; “நிச்சயமாகக் கிடைக்கும்” என்று தெளிவாகவும் அவர் பதில் அளித்தார்.

கேட்டது 250! கிடைத்ததோ 350! தேர்தல் முடிந்தது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இந்திரா காந்திக்குக் கிடைத்துவிட்டது.

“கேளுங்கள், கிடைக்கும்!” என்பது நாம் அறிந்த நடைமுறை வழக்கு. ஆனால், அன்னையைப் பொறுத்த வரையில், “வேண்டுங்கள்! வான் மழை போல் வரையில்லாது வழங்கப்படும்” என்பது நாம் அன்றாடம் காணும் அனுபவம்.



book | by Dr. Radut