Skip to Content

06 - ஆத்ம சமர்ப்பணம்

‘ஆத்ம சமர்ப்பணம்’ என்பது, ஆன்மா விடுதலை அடைய வழி செய்யும் ஒரு யோக நெறியாகும். யோகம் சித்தி பெற உதவும் உயர்ந்த சில முறைகளுள் இதுவும் ஒன்று. ஸ்ரீ அரவிந்தர் எழுதிய ஏராளமான நூல்களில் தலையாயது யோக நூல். அந்த நூலின் தொடக்கத்திலேயே சமர்ப்பணத்தைப் பற்றி ஓர் அத்தியாயம் இருக்கின்றது. அந்நூலில் காணப்படும் 80 அத்தியாயங்களில், இந்த ஓர் அத்தியாயத்திலேயே தமது யோகத்தின் முழுமையையும் சுருக்கமாகவும், சாரமாகவும் விளக்குகின்றார் ஸ்ரீ அரவிந்தர்.

சாதாரண மனிதனுக்கு வாழ்க்கையை விளக்கம் பெற்றதாக நடத்துவது என்பது, ஒரு தவ முயற்சியை மேற்கொள்வது போன்றதாகும். ஆத்ம சமர்ப்பணத்தின் சிறப்பு, வாழ்க்கை விளக்கத்தில் பெறும் இடத்தைப் பற்றித்தான் நாம் இங்கே பேசப் போகின்றோம்.

‘அன்னைக்குப் பிரார்த்தனை செய்தவுடன் பல பிரச்சினைகள்விலகிவிடுகின்றன’ என்பது உண்மையேயானாலும், ‘சில பிரச்சினைகள் அப்படிச் சுலபத்தில் தீர்வதில்லை’ என்பது, சில பக்தர்களுடைய அனுபவம். ‘அந்த அனுபவத்தில் உள்ள பாதகமான நிலையைப் பிரார்த்தனையின் மூலமே சாதகமான நிலைக்கு மாற்ற முடியும்’ என்ற உண்மைக்கு உட்படுத்தக் கூடியதே ஆத்ம சமர்ப்பணம்.

‘பிரார்த்தனை பலிக்கும்’ என்ற நம்பிக்கையுடன் நாம் சொல்லும்போது மனிதனுடைய குரல் அன்னைக்கு எட்டி, அன்னையின் திவ்யஒளி நம் மீது மட்டும் அல்லாமல், நமது பிரச்சினையின் மீதும் பட்டுவிட்டது என்று பொருள். பிரச்சினையும், அன்னையின் ஒளியும் சந்தித்த மாத்திரத்தில் பிரச்சினை கரைந்துவிடுகின்றது. ‘பிரச்சினை தீரவில்லை’ என்றால் ‘அன்னையின் சக்தி ஒளி பிரச்சினை மீது படவில்லை’ என்று பொருள். ஆத்ம சமர்ப்பணம் அந்தக் குறையை நீக்கி, பிரச்சினையைத் தீர்க்கின்றது.

‘ஆத்ம சமர்ப்பணம்’ என்ற சொல்லுக்கு யோகத்தில் கொள்ளும் பொருளை இங்கு கருதாது, அதன் சாரமான கருத்தை மட்டுமே நோக்குவோம். பிரச்சினைக்கு உரியவர் பிரச்சினையின் கூறுகளை, தன் உள்ளொளிக்குச் சமர்ப்பிப்பதை இங்கு ‘சமர்ப்பணம்’ என்ற பொருளில் கொள்ள வேண்டும்.

நீண்ட காலமாக உள்ளூரிலேயே உத்தியோகம் செய்து வந்த ஒருவர், பதவி உயர்வை எதிர்பார்த்தார். நியாயமான எதிர்பார்ப்புத்தான். அவருடைய பதவி உயர்வுக்கு அலுவலகத்தில் யாரும் முட்டுக்கட்டை போடவில்லை. என்றாலும் ஏதோ ஒன்று தடையாக இருந்தது. அது என்ன என்று கண்கூடாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் அன்னையின் பக்தர். ‘நான் அன்னையை உருக்கமாகப் பிரார்த்தித்துக்கொண்டு வருகின்றேன். பதவி உயர்வைத் தவிர மற்றவை எல்லாம் எனக்கு உடனுக்குடன் கிடைத்துவிடுகின்றன. அதற்கு மட்டும் என்ன தடை என்று புரியவில்லை’ என்று அடிக்கடி கூறி வேதனைப்படுவார் அவர்.

“உங்களுக்கு உள்ளூரைவிட்டுப் போகப் பிரியம் இல்லை. பதவி உயர்வு கிடைத்தால் நீங்கள் வெளியூருக்குப் போக வேண்டியதிருக்கும். அதனால்தான் தடை” என்று அவருக்கு விளக்கும்பொழுது, தமக்குத் தாமே தடையாக இருந்ததை உணர்ந்து, முதல் வேலையாக உள்ளூர் ஆசையைத் துறக்கின்றார். அவருக்கு உடனே பதவி உயர்வு கிடைத்துவிடுகின்றது. மனத்தால் விரும்பும் ஒன்றை, அவர் உணர்ச்சியால் விரும்பவில்லை. ஊரைவிட்டுப் போக விரும்பாத உணர்ச்சி, பதவி உயர்வுக்குத் தடையாக இருந்தது. அதுவே அன்னையின் சக்தி செயல்படத் தடையாகவும் இருந்தது.

ஓர் அடாவடிக்காரனிடம் பணம் கொடுத்து பிராமிசரி நோட்டு எழுதி வாங்கினால், ‘அந்த நோட்டு அவனைக் கட்டுப்படுத்தும்’ என்று நினைப்பது தவறு. அந்தத் தவற்றை உணராத வரையில் அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனைகள், அந்தப் பணத்தைப் பெற்றுத் தாரா. ஆனால், செய்த பிரார்த்தனைகள் வீண் போகா. அவை வேறு காரியங்கள் கூடிவர உதவி செய்யும்.

சம்பந்தப்பட்டவரின் தவறான நினைவு, அந்தச் செயலின் மீது இருள் போலப் படிந்துள்ளது. பிரார்த்தனையால் நம் உள்ளே வரும் ஒளியை அது தடை செய்கின்றது. அது வெறும் இருளாக இருந்தால், அந்த ஒளியே அதைக் கரைத்துவிடும். ஆனால், அது சம்பந்தப்பட்டவருடைய அறிவின் துணையோடு ஏற்பட்ட இருள். அதனால் அன்னையின் ஒளியால்கூட அதைச் சுலபமாகக் கரைத்துவிட முடியாது. அதற்கு நீண்ட காலம் பிடிக்கும். அதுவரை சம்பந்தப்பட்டவருக்குப் பொறுமை வேண்டுமே!

அன்று செய்த தவற்றை இன்று உணர்ந்தால், இருள் நீங்கி, உறுத்திக் கொண்டு இருந்த பிரச்சினை முற்றிலும் உலர்ந்து போகும். அன்னையின் ஒளிக்குப் பிரச்சினையைக் கரைப்பது சுலபம்; ஆனால், மனிதன் தன் அறிவால், சொல்லப் போனால் பிடிவாதத்தால் ஏற்படுத்திக் கொள்ளும் இருளைக் கரைப்பது சுலபம் அன்று. அது கரைய நாளாகும்.

ஒருவர் தவறு செய்வதன் மூலம் பிரச்சினைக்கு ஆளாகிச் சிக்கித் தவிக்கும்பொழுது, அவர் நமக்கு வேண்டியவராக இருந்தால் என்ன செய்கின்றோம்? அவரிடம் அவருடைய தவற்றை எடுத்துக் கூறுகின்றோம். அவர் புரியாமல் தவறு செய்தவராக இருந்தால், நம் அறிவுரையைக் கேட்டபிறகு திருந்தி விடுகின்றார். ‘வம்பு செய்து பிரச்சினையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்’ என்று ஒருவர் தப்புக் கணக்குப் போட்டால், ‘சட்டம் என்ன செய்யும்? எதிராளி என்ன செய்வார்?’ என்ற அறிவுரையைப் பெறும்பொழுது, அவருக்கு இருந்த தவறான செயல் முனைப்பு அடங்கிப் போகும். ஒரு தொழில் கூட்டாளி மற்றவருடைய பங்கை அபகரிக்க முயன்றால், ஒரு மருமகளை மாமியார் கொடுமை செய்தால், மாமியாரை மருமகள் வறுத்து எடுத்தால், ஒரு மாணவன் போலீஸிடம் வீண் வம்பு வளர்த்தால், அரசியல் காழ்ப்புக் காரணமாக ஒருவர் வன்முறையைத் தூண்டிவிட நினைத்தால், அவர்களுக்கு வேண்டிய நல்லவர்கள், அதனதன் பின்விளைவுகளைச் சுட்டிக்காட்டுவார்கள். அது பிரச்சினை வளர்வதைத் தடுக்க உதவும்.

அதே போல நம் மனத்தை நமக்கு வேண்டிய இரண்டாம் நபராக நிறுத்தி, தீராத ஒரு பிரச்சினைக்கு வழி காண நாம் அந்த மனத்தோடு உரையாடி, வழக்குரைத்து வாதாடி, அது செய்த தவற்றையும், அதனால் பிரச்சினை ஏற்பட்ட விதத்தையும் எடுத்துக் கூறும்பொழுது, மனம் நியாயத்திற்கும், அறிவுக்கும் உட்பட்டு அவற்றை ஏற்றுக் கொண்டால், அதன்பிறகு செய்யும் பிரார்த்தனைக்கு உடனே பலன் கிடைத்துவிடுகின்றது. 6 ஆண்டுகளாகப் பலிக்காமல் இருந்த பிரார்த்தனை, தன்னைத் தானே உணர்ந்துவிட்ட கட்டத்தில் நொடிப்பொழுதில் பலித்து விடுகின்றது. இவ்வாறு மனம் தன் பிழையை, செயலை ஆத்ம ஒளிக்குக் கொண்டுசெல்வதற்கு ‘ஆத்ம சமர்ப்பணம்’ என்று பெயர்.

‘பிரச்சினை உருவானது எப்படி?’ என்பதை நாம் விவரமாகத் தெரிந்து கொண்டால்-அதாவது அதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு நமக்குத் தெளிவு இருந்தால் -ஒளி தெளிவின் வழியே விரைந்து செயல்படும். ‘பிரச்சினை ஏன் வந்தது, எப்படி உருவாயிற்று?’ என்று தெளிவு இல்லாத குழப்பத்தில் மனம் உழலுமானால், முதலில் அந்தக் குழப்பத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அன்னையின் ஒளி தன் வேலையைத் தொடங்கும்.

அன்னையிடம் நாம் ஒரு பிரச்சினையைச் சொல்கின்ற பொழுது, அது சம்பந்தமான எல்லா விவரங்களையும் அவர் ஒன்றுவிடாமல் கேட்பார். விவரங்களை எல்லாம் சரியாகவும், முறையாகவும் நாம் சமர்ப்பித்தால், அன்னைக்குச் செயல்படுவது எளிதாகின்றது.

‘உத்தியோகம் போய்விட்டது’, ‘கணவர் என்னைக் கை விட்டுவிட்டார்’, ‘கடன் சுமை தாங்கவில்லை’, ‘நகைகள் காணாமல் போய்விட்டன’ என்பன போன்ற பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ளும்பொழுது, ‘உத்தியோகம் போக என்ன காரணம்? கணவர் கைவிட்டுப் போனதற்கு என்ன காரணம்? கடன் எப்படி ஏற்பட்டது? நகைகள் எப்படிக் காணாமல் போயின?’ என்பன பற்றித் தெளிவாகத் தெரிந்தால், நாம் பிரார்த்தனை செய்து கொண்ட அக்கணமே அன்னை விரைவாகச் செயல்படுவார்.

‘ஆத்ம சமர்ப்பணத்’திற்குத் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் விளக்கத்தை நடைமுறைப்படுத்தும்பொழுது, நமக்கு அந்தத் தெளிவு சுலபத்தில் கிடைத்துவிடும்.

‘எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் ஆதியிலிருந்து ஒவ்வொரு கட்டமாக அதை நினைவு கூர்ந்து அடி முதல் நுனி வரையிலான எல்லா விவரங்களையும் அன்னையிடம் சொல்வதையே ஆத்ம சமர்ப்பணம் என்கிறோம்’, என்பதை தெளிவு கருதி மீண்டும் ஒரு முறை கூறுகின்றேன். அன்னையிடம் அந்தப் பிரச்சினையைப் பற்றிய வாக்குமூலத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும்பொழுதே, ‘நாம் அலட்சியமாக நினைத்தவை எல்லாம் எத்தனை பெரிய இடையூறுகள்?’ என்பது புரியும். அதற்கப்புறமும்கூடச் சிலருக்குப் புரியாமல் இருக்கவும் கூடும். என்றாலும் அன்னையிடம் அவர்கள் தம் பிரச்சினையின் தோற்றத்தை ஓரளவு சொன்ன காரணத்தால், பின்னர் பிரச்சினையின் மொத்தப் பரிமாணத்தையும் அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைப் பெற்றுவிடுவார்கள்.

நாள் தோறும் மீண்டும் மீண்டும் பிரச்சினையின் வரலாற்றை அன்னையிடம் சமர்ப்பித்துக் கொண்டு வந்தால் நம்முடைய பிரச்சினையும், அன்னையின் ஒளியும் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து ஒரு நாள் சந்திக்கும். அந்தச் சந்திப்பு நிகழும் நேரத்தில் பிரச்சினை பளிச்சென்று தீரும்.

‘பிரார்த்தனை பலிக்கவில்லை’ என்றுகூடச் சிலர் நினைக்கின்றார்கள். அது உண்மையே. அப்படி நினைக்கின்றவர்களுடைய குறைபாடு வெளிப்படையாக எல்லோருக்குமே தெரியும். ஆனால், அவர்களுக்குத் தெரிவது இல்லை. நோய் தெரியாமல் மருந்துண்ணுவது எப்படி? அவர்கள் முதலில் தங்களின் நோய் என்னவென்று புரிந்து கொள்ள வேண்டும். அதாவது தங்களுடைய குறைபாடு என்னவென்பதை நுணுகிச் சலித்து அறிய வேண்டும். அது முடியாத பட்சத்தில், நெருங்கிப் பழகுபவர்களிடம் பிரச்சினைக்குக் காரணமான நம் குறைபாடு என்ன என்பதைக் கேட்டறிந்து அந்தக் குறைபாட்டை விலக்கியபின், பிரார்த்தனை செய்வது முதல் வழி. இந்த முதல் வழியைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தபிறகு, பிரச்சினையின் முழு விவரத்தையும் தினந்தோறும் ஒரு முறை அன்னையிடம் சொல்ல வேண்டும். இது இரண்டாவது வழி. முதல் வழியைப் பின்பற்றுவதன் மூலம் பிரச்சினை நாள் கடந்து தீரும். இரண்டாவது வழியின் மூலம் பிரச்சினை நிச்சயமாகத் தீரும். ஆனால், விரைவில் தீராது. ஏனென்றால் பிரார்த்தனைக்கு இரு கடமைகள் உண்டு. முதலில் பிரார்த்தனை, பிரச்சினைக்கு உரிய குறையை அகற்ற வேண்டும். பின்னர் பிரச்சினையைக் கரைக்க வேண்டும்.

ஒருவர் ஆலை முதலாளி. 10 கோடி மூலதனத்துடன் 500 தொழிலாளர்கள் வேலை பார்க்கும் ஆலை அவருடையது. வேலை பார்க்கும் ஒவ்வொரு தொழிலாளியும் ஒவ்வொரு பிரச்சினையுடன் வந்து சந்தித்தபோது அவர் எரிச்சலுடன், “இப்படி ஒவ்வொருவராக வந்து என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள். எல்லாத் தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து சங்கம் அமையுங்கள். தலைவரை நியமியுங்கள். உங்கள் எல்லோருக்குமாகச் சேர்த்து அவரை என்னிடம் அனுப்புங்கள்” என்று சொல்லிவிட்டார். பிறகு என்ன? ஆலைக்குள் சங்கம் வந்தது; தலைவர் வந்தார். கூடவே தாங்க முடியாத அளவுக்குப் பிரச்சினைகளும் வந்தன. இத்தனையும் வந்தபிறகு வழக்கமாக வரும் கோஷம், ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தம் போன்றவையும் வந்து ஒரு போராட்டத்தைத் தூண்டிவிட்டன.

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தவர் அந்த ஆலை முதலாளிதான். சங்கத்தை ஆரம்பிக்கச் சொன்னவர் அவர்தாமே! வம்பை விலை கொடுத்து வாங்கிச் சிக்கலில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கிய நிலையில் அவர் என்னைச் சந்தித்து, “சிக்கல் தீர வழி கூறுங்கள்” என்று வேண்டினார்.

“சொல்லப் போனால் வேலை நிறுத்தத் தலைவர் நீங்கள் தான். அதாவது சிக்கலுக்குக் காரணமான சங்கத்தை ஆரம்பிக்கச் சொன்னவர் நீங்கள் தானே? அன்னையிடம் இந்தப் பிரச்சினைக்குத் தோற்றுவாயாக அமைந்த உங்கள் குறைபாட்டைக் கூறிப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றேன் நான்.

அவர் தம் தவற்றை உணர்ந்து, தம் குறையை அன்னையிடம் சமர்ப்பித்து, நிவாரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்தார். சில நாட்களில் வேலை நிறுத்தம் பிசுபிசுத்தது. கடைசியில் யூனியனே காணாமல் போய்விட்டது!

‘பெண்ணிற்குத் திருமணம் செய்தபிறகு, பெண்ணையும், மாப்பிள்ளையையும் வீட்டிலேயே வைத்துக் கொண்டால், வீட்டில் உள்ள மகனின் வாழ்வு கெட்டுப் போகும்’ என்று நம்பும் வழக்கம் நம்மிடம் இருக்கின்றது. அந்த மரபுப்படியும், உளவியல் தத்துவப்படியும், வேறு எந்த வகையில் பார்த்தாலும் இது தவறுதான். உற்றோரும் மற்றோரும் கூறியதை எல்லாம் புறக்கணித்துவிட்டு இந்தத் தவற்றைச் செய்தார் ஒரு தொழில் அதிபர். 15 ஆண்டுகளுக்குப்பிறகு அவருடைய மகன் திடீரென்று மரணம் அடைந்தார். மாப்பிள்ளை திவால் ஆனார். அதற்குப்பிறகே அவர் தம் மாப்பிள்ளையைத் தனியாக அனுப்பினார். வசதி உள்ளவர்கள் பெண்ணின் மீதுள்ள பாசத்தால் இதைச் செய்கின்றார்கள்.

பல ஆண்டுகளுக்குமுன் 700 ரூபாய் வருமானம் உள்ள ஒரு கல்லூரி ஆசிரியர், ரூபாய் 30,000 கடன் வாங்கினார். அவருக்குக் கடன் வாங்க வேண்டிய அவசியமே இல்லை. சிறிய குடும்பம்தான். ஆனாலும் ஆடம்பரக் குடையை விரித்துப் பழகிவிட்டார். அதனால் கடன். நாளாக நாளாக கடன் சுமை அவரை அழுத்தத் தொடங்கிவிட்டது. கவலைப்பட்டுக் கவலைப்பட்டு அவருடைய உடல் நலம் ஒரேடியாகக் கெட்டது. அவர் அன்னையின் பக்தர். அன்னையிடம் பிரார்த்தனை செய்து கொண்டார். நாளெல்லாம் அவர் செய்து கொண்ட பிரார்த்தனையால் கடன் குறைந்தது. மூச்சு முட்டும் அளவுக்கு இருந்த கடன் சுமை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து சுமக்கக் கூடிய அளவுக்கு இறங்கிவிட்டது. ‘இனிமேல் வருமானத்திற்கு மேல் செலவு செய்வதில்லை’ என்று அவர் முடிவு செய்து கொண்டார். இந்த முடிவே அவருடைய பிரச்சினைக்கு ஏற்பட்ட முடிவாகவும் அமைந்தது.

ஒருவன் வாயைத் திறந்தால் நீதியும், நேர்மையும் கரை புரண்டோடி வரும். ஆனால், தன் சொந்த வாழ்க்கையில் தன் மனைவியைக் கண்கலங்க வைத்துவிட்டு ஒழுங்கீனமான வழியில் உல்லாசமாய் வாழ்கின்றான். பிரச்சினை பூதாகாரமாகிறது. அப்பொழுது தன் பிரச்சினையை உருவாக்கியவர்கள் தன் மனைவியும், ஊராரும் என்றுதான் நினைக்கின்றானே தவிர, பிரச்சினைக்குக் காரணமானவனே தான்தான் என்பது அவனுக்குப் புரிவதில்லை. அதாவது, ஊர் அறிந்ததை அவன் அறியவில்லை.

மன்னிக்க முடியாத குணக் கேடுகளால் ஒருத்தியை ஒருவன் விலக்கிவிடுகின்றான். எல்லோருக்கும் அவளுடைய குணக்கேடுதான் அதற்குக் காரணம் என்பது புரிகின்றது. ஆனால், அவளுக்கு மட்டும் அது புரியாமல் போகின்றது!

இன்னோர் சாரார் இருக்கின்றார்கள். அவர்கள் தம்மைப் பற்றி மற்றவர்கள் புரிந்து கொண்டிருப்பதற்கு எதிர்மாறாகப் புரிந்து கொள்வார்கள். வாய் ஓயாமல் பேசும் ஒரு வியாபாரி, “நான் அளந்துதான் பேசுவேன். அவசியம் இல்லாமல் ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டேன்” என்பார். ‘பிறர் பொருளுக்கு நான் ஆசைப்பட மாட்டேன்’ என்று தம்மைப் பற்றி உண்மையிலேயே நினைக்கக் கூடிய ஒருவர், தம் வியாபார நண்பர்களை அணுகி, “உங்கள் வியாபாரத்தை எனக்குக் கொடுத்துவிடுங்கள்” என்கின்றார். திறமை சிறிதும் இல்லாத, ஆனால், இனிமையாகப் பழகக் கூடிய ஒருவர், தம்மைச் சிறந்த திறமைசாலி என்று நம்புகின்றார்.

கண்ணுக்கு முன்னால் காட்சியாக இருக்கும் விளக்கத்தைப் பார்க்க மறுத்து, இல்லாத ஒன்றை இருப்பதாக நம்புகின்றவர்கள் இன்னொரு வகையினர். தம்முடைய திருட்டுக் கணக்குப் பிள்ளையை விசுவாசத்தோடு வேலை செய்வதாக நினைக்கும் முதலாளி, அடுத்துக் கெடுக்கும் ஒருவரைத் தம் சிறந்த நண்பராகக் கருதும் அப்பாவி, மேலதிகாரியிடம் பொய்ப் புகார்களைக் கூறி வேலைக்கு வேட்டு வைக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் ஒருவரை ‘ஆபத்பாந்தவர்’ என்று நம்பும் ஏமாளி போன்றவர்கள், இந்த வகையில் வருவார்கள். ‘நேர்மையாக இருந்ததாலேயே என் வேலை போய்விட்டது’ என்று ஒப்பாரி வைப்பவர்களையும் இந்த வகையில் சேர்க்கலாம். நேர்மையே உயர்ந்தது. இதில் கொஞ்சம்கூடச் சந்தேகம் இல்லை. ஆனால், ‘அது ஆபத்தானது’ என்பதையும் மறுப்பதற்கில்லை. காந்திஜியைவிட நேர்மையானவர் இந்த உலகில் உண்டா? அவருடைய முடிவு ஆபத்தில்தான் முடிந்தது. நேர்மையோடு விழிப்பும் வேண்டும். இல்லாவிட்டால், அது பார்வையற்ற விழிகளுக்குச் சமானம்.

இவர்களைப் போன்றவர்கட்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டால், பிரச்சினையின் மூல காரணத்தை அவர்களால் அறிய முடியாது. அப்பொழுது அன்னையிடம் பிரச்சினையின் வரலாற்றைச் சொன்னால், அவர் காரணத்தைத் தெளிவுபடுத்துவார். அல்லது பிரச்சினையை விலக்குவார். இத்தகையோர் அன்னைக்குப் பிரார்த்தனை செய்து கொண்டால், உண்மையான காரணத்தைப் புரிய வைக்கக் கூடிய நிகழ்ச்சிகள் நடக்கும். அநேக ஆண்டுகளுக்குமுன் அரசுப் பணியை விட்டுவிட்டு, மாமனார் சொத்துக் கொடுப்பார் என்ற எண்ணத்தால் மாமனார் வீட்டில் போய்த் தங்கி, மாமனாரின் சொத்துகளைப் பன்மடங்காகப் பெருக்கி, பின்னர் அதில் ஒரு பங்கைப் பெற்று, மைத்துனரிடமிருந்து பிரிந்து வந்து, பிற்காலத்தில் வாழ்க்கையில் எந்தப் பக்கம் திரும்பினாலும் பிரச்சினையாக இருப்பதைப் பார்த்த ஒருவர், தாம் அடிப்படையில் செய்த செயல் சரி இல்லாதது என்பதைத் தெரிந்து கொள்ள இயலாதவராக இருக்கின்றார். இத்தனைக்கும் அவர் அன்னையின் பக்தர்! ‘பிரார்த்தனை எல்லா விஷயங்களிலும் பலிக்கின்றது. ஆனால், அடிப்படையான பிரச்சினையில் மட்டும் வழிவிடவில்லை’ எனக் குறைப்படுகின்றார் அவர்.

இவர்களுக்கெல்லாம் உகந்த முறை சமர்ப்பணமாகும். ‘சமர்ப்பணம்’ என்ற தத்துவத்தின் ஆன்மிக அடிப்படைகளைச் சுருக்கமாகக் கீழே தருகின்றேன். 

  1. ‘கடந்தகால நிகழ்ச்சிகள் முடிந்து போனவை. நடந்தது நடந்ததுதான். இனி அது பற்றிச் செய்வதற்கு ஒன்றும் இல்லை’ என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொண்டு இருக்கின்றோம். ‘இறையருளுக்கு அந்த உண்மையும் உட்பட்டது’ என்று நினைக்கப் பழகிக் கொண்டால் நல்லது. நம்பிக்கை அளவற்ற பலனைக் கொடுக்கக் கூடியது. ‘கடந்த நிகழ்ச்சிகளை மாற்ற முடியாது’ என நினைத்தால் நம்பிக்கைக்கு இயற்கையாகவுண்டான பெரும்பலன் குறையும். ‘அருள் கடந்ததையும் மாற்றும்’ என உணர்ந்தால், நம்பிக்கையின் திறம் வரையறையற்றதாக இருக்கும்.
  2. மனிதன் காலத்தால் கட்டுண்டவன். அதனால் கடந்தகால நிகழ்ச்சிகள் அவனுக்குக் கட்டுப்படா. அன்னையின் ஒளி காலத்தைக் கடந்தது. அதனால் கடந்தகால நிகழ்ச்சிகளும் அன்னையின் ஒளியைப் பெற்று, இப்பொழுது பலனாக விளைய முடியும். சமர்ப்பணத்தின் மூலம் கடந்தகால நிகழ்ச்சிகளை அன்னையின் ஒளிக்கு உட்படுத்த முடியும்.
  3. கடந்தகால நிகழ்ச்சிகளின் சுவடுகள் நம் இன்றையச் செயல்களில் படிந்திருக்கின்றன. அந்தச் சுவடுகளைப் புரிந்து கொண்டுவிட்டால் அந்தப் பழைய செயல்களையும், அவற்றின் பாதிப்புகளான இன்றையப் பலன்களையும் மாற்றலாம்.
  4. மனிதனுடைய வாழ்க்கையில் செயல்பட இறைவன் மனிதனுடைய புத்தியைக் கருவியாகப் பயன்படுத்துகின்றான். புத்தியின் செயல் அதன் குணங்களால் நிர்ணயிக்கப்பட்டது. ஆகையால் மனிதனுடைய குண விசேடங்களுக்குப் புத்தியின் செயலைச் சிறப்பாக்கும் ஆற்றல் உண்டு. உயர்ந்த குணங்களின் மூலம் இறைவன் மனித வாழ்க்கையில் சிறப்பாகச் செயல்படுகின்றான்.
  5. செயல்களின் கூறுகளும், குணத்தின் தன்மைகளும் பிரித்துப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டு இருக்கின்றன.
  6. கடந்தகால நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து அவற்றை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தால், கடந்தகால நிகழ்ச்சிகளின் பாதகமான பலன்கள் நீங்கும். ஆனால், அந்நிகழ்ச்சிகளுக்குக் காரணமான குண விசேடங்கள் அழியாமல் அப்படியே இருக்கும்.
  7. அந்தக் கடந்தகால மிச்சம் இன்றைய குணச் சிறப்புகளாக நம்மிடம் ஒட்டிக் கொண்டிருக்கும்.
  8. இன்றுள்ள இந்தக் குணச் சிறப்புகளிலிருந்து விடுபட முயன்றால், ஜீவன் கடந்தகால நிகழ்ச்சிகளின் இன்றையப் பலனிலிருந்து விடுதலை அடையும்.
  9. கடந்தகால நிகழ்ச்சிகளை மீண்டும் மீண்டும் சமர்ப்பணத்திற்காக நினைவு கூர்ந்தால், அவற்றின் வேகம் ஒரு கட்டத்தில் அதிகரிக்கும். அதன்பின் நிகழ்ச்சிகளின் சுவடுகளான குண விசேடங்கள் மனோவேகத்தில் மனக் கண்ணில் தோன்றும்.
  10. மரணத்திற்குமுன் ஆத்மா வெளிவந்து இப்பிறவியின் செயல்களைக் கண நேரம் விமர்சனம் செய்து, அடுத்த பிறவிக்குரிய இடத்தைத் தீர்மானிக்க முயல்கின்றது. புனர்ஜன்மம் எடுப்பதற்கு இந்த மதிப்பீடு அடிப்படையாக இருப்பதைப் போல், நாம் அன்னைக்குச் செய்யும் சமர்ப்பணம் ஒரு சிறு அளவிலான புனர்ஜன்மமாகும். எந்தச் செயலைச் சமர்ப்பணம் செய்கின்றோமோ, அந்தச் செயலின் (கர்மத்தின்) பலன்களிலிருந்து விடுதலை அடைந்து, அதைப் பொறுத்த வரையில் புனர்ஜன்மம் எடுத்த பலன் உண்டு.
  11. கடந்தகால நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து சமர்ப்பணம் செய்தால், அவற்றால் ஏற்பட்ட பிரச்சினைகள் நிச்சயமாகக் கரையும். ஆனால், நிதானமாகக் கரையும். ஆனால், அந்நிகழ்ச்சிகளுக்கு அஸ்திவாரமான உணர்ச்சிகளை (குணங்களை) நினைவு கூர்ந்து சமர்ப்பணம் செய்தால், பிரச்சினைகள் உடனடியாகவும் முழுமையாகவும் கரைந்து போகும்.
  12. ‘ஒரு பிரச்சினையை அழிக்க வேண்டும்’ என்ற தீவிரமான எண்ணத்துடன் முயன்றால், அதற்குச் சமர்ப்பணம் ஒன்றே உரிய கருவி. அவ்வெண்ணம் பூரணமாகச் செயல் படும்பொழுது, மனிதனால் தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவுமே இருக்க முடியாது.

 



book | by Dr. Radut