Skip to Content

09 - இழந்ததைப் பெறலாம்

தொலைந்து போன நகை, பறிபோன உத்தியோகம், திருடு போன பணம், கைவிட்ட வாழ்க்கை போன்றவையும் அந்த நேரத்தில் நேர்ந்துவிட்ட இழப்புகளே. ஆனால், நான் இங்கே கூறப் போவது இந்த இழப்புகளைப் பற்றி அல்ல. இழந்த பெருஞ் செல்வத்தைப் பற்றி.

‘ஒரு காலத்தில் 100 வேலி நிலம் இருந்த பண்ணை அது. இப்பொழுது ஒன்றும் இல்லை. அந்தக் காலத்தில் 60 பஸ்கள் ஓடின. இப்பொழுது ஒரு பஸ்தான் ஓடுகின்றது. இந்தப் பகுதிக்கு கவர்னர் வந்தால் இவர்தாம் வரவேற்பார். இன்று நொடித்துப் போய் மூலையில் கிடக்கின்றார்’ என்பது போன்ற நிலைக்குத் தாழ்ந்துவிட்டவர்களைப் பற்றியே இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.

வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உத்தியோகத்தை இழந்த அதிகாரிக்கும், பொருள்களைப் பறி கொடுத்தவர்களுக்கும், பதவியை இழந்த அரசியல்வாதிக்கும்கூட இனி நான் சொல்லப் போகும் கருத்துகள் எல்லாம் முழுமையாகப் பொருந்தும். என்றாலும், பெருஞ்செல்வத்தை இழந்து இன்று நிலை தாழ்ந்து வறுமையில் உழல்பவர்களையே மனத்தில் கொண்டு இதை எழுதுகின்றேன்.

‘30 வருஷம் வாழ்ந்தவர்களும் இல்லை; 30 வருஷம் கெட்டவர்களும் இல்லை’ என்ற ஒரு பழமொழி உண்டு. ‘செல்வம் சகடக்கால் போல் வரும்’ என்றும் சொல்வார்கள். அவற்றில் உள்ள உண்மையை நான் புறக்கணித்துப் பேசவில்லை. அவற்றை ஆராய்வதை விட்டுவிட்டு அதற்கும் அப்பால் உள்ள இரு உண்மைகளை நான் கருதுகின்றேன்.

மேலை நாடுகளில் செல்வர்களுடைய செல்வம் தொழில்களில் முதலீடு செய்யப்பட்டபிறகு, நம்முடைய பழமொழிகளில் உள்ள உண்மை பொய்த்து, 30 ஆண்டுகள், 70 ஆண்டுகள், 130 ஆண்டுகள், என்ற நிலைகளில் தொடர்ந்து அந்தத் தொழில் நிறுவனங்கள் ஆல் போல் தழைத்து, செல்வ நிலையையும் பன்மடங்காகப் பெருக்கி, வளமாக வளர்ந்து கொண்டு வருகின்றன. அதற்கு மாறி வரும் அரசியல் நிலையும், புதிய சட்டங்களுமே காரணங்கள். ‘அன்னையின் பக்தர்கள் எல்லாச் சட்டங்களுக்கும் அப்பாற் பட்டவர்கள்’ என்பது, அந்த உண்மைகளுக்கும் எல்லாம் மேலான உண்மை. அன்னையின் பக்தர்களால் பெற்ற செல்வத்தை இழக்க முடியாது. இழந்தது போன்று தோற்றும் செல்வத்தை, மீண்டும் அவர்களால் பெற முடியும்.

90 வயதுள்ள ஒரு முதியவர் தம் வாழ்க்கையில் சந்தித்த செல்வத்தை இழந்தவர்களின் பட்டியலைப் புரட்டிப் பார்த்தால், இழந்தவர்கள் இழந்தவர்களாகவே இருப்பார்கள். பதினாயிரத்தில் ஒருவர் உருண்டு புரண்டு இழந்த செல்வத்தைப் பெற்றவராக இருப்பார். முழுச் செல்வத்திற்கும் ஆபத்து வந்து, ஆட்டம் கண்டு, முழுதும் கவிழ்வதற்குள் எப்படியோ சமாளித்துக் கரைசேர்ந்த செல்வர்களும் உண்டு. ஆனால், எல்லாமே போய்விட்டபிறகு, அந்தப் புயலைக் கடந்து மலை போல் நின்ற செல்வர் எவரும் இல்லை. நிற்கும்பொழுது மலை. கரைந்துவிட்டால் மண். இதுதான் செல்வ நிலை.

கரைந்த மண்ணையும் கரையாத மலையாக்க வல்லது அன்னையின் அருள்.

ஒரு கோடி ஆஸ்தியை இழந்த ஓர் அமெரிக்கர், தம்மைத் திவாலாக ரிஜிஸ்டர் செய்யப் புறப்பட்டுக் கொண்டு இருந்தார். அப்பொழுது அவருடைய நண்பரான ஓர் அன்னையின் பக்தர் அவரைத் தடுத்து நிறுத்தி, “அன்னையைப் பிரார்த்தனை செய்து கொண்டால், இழந்த செல்வம் இரண்டு மடங்காகப் பெருகும்” என்று கூற மாஜி கோடீஸ்வரர் மனம் நெகிழ்ந்து அன்னையிடம் தொடர்ந்து வேண்டுதல் செய்ய, ஓராண்டுக்குள் அவர் இழந்ததைப் பெற்று, அடுத்த ஆண்டு இரண்டரைக் கோடி இலாபம் ஈட்டியதை, நான் அடிக்கடி கட்டுரைகளில் குறிப்பிடுவதுண்டு.

அன்னையை ஏற்றுக் கொண்டவர்கள், அவர்கள் இழந்த செல்வம் எத்தனைப் பெரியதாக இருந்தாலும், எத்தனைக் காலம் கடந்து போயிருந்தாலும், அதை மீண்டும் பெறக் கூடிய வாய்ப்பைப் பெறுகின்றார்கள். அவர்களுக்கு அடிப்படையாகத் தேவைப்படுவது நம்பிக்கை. நம்பிக்கை பல வகைகளிலும், பல அளவுகளிலும் இருக்கும். “நோய் தீர்கின்றது, பரீட்சை பாஸாகின்றது, வேலை கிடைக்கின்றது என்பதால் 20 ஆண்டுகளுக்கு முன்னால் நான் இழந்த செல்வத்தை மீண்டும் பெறுவேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை” என்று நினைப்பது இயல்பு. அந்த நினைப்பு உள்ளவர்களுக்கு இந்தக் கட்டுரை பயன்படாது. ‘யாரோ சிலருக்கு அப்படி நடக்கிறது என்றால், அவர்கள் ஜாதகம் அப்படி’ என்று நினைப்பவர், தமக்கு நம்பிக்கை இல்லை என்பதை வேறு வகையில் சொல்கின்றார் என்றாகிறது. தமக்குத் தெரிந்த நாலுபேர் அன்னையை வழிபடுகின்றார்கள் என்பதற்காக அன்னையை வழிபட ஆரம்பிக்கின்ற ஒருவருக்கு, அந்த நாலுபேர்தான் முக்கியம். அன்னை இல்லை.

‘நீண்ட காலத்திற்கு முன்னால் பெருஞ்செல்வம் கற்பூரமாய்க் கரைந்து போயிற்று. அதை மீண்டும் பெற வேண்டும்’ என்று எண்ணும் ஒருவருக்கு, அன்னையிடம் உண்மையான நம்பிக்கை ஏற்பட வேண்டியது அவசியம். ‘அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனையால் இழந்ததை நிச்சயம் பெறுவோம்’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியத்திலும் அவசியம். அத்தகையவர்களுக்கு இதில் சொல்லப்படும் கருத்துகள் மிகவும் உதவும். ஒரு வகையில் சொல்லப் போனால், நான் தெரிவிக்கும் கருத்துகள் எல்லாம் வெறுங்கருவிகள்தாம். நம்பிக்கை மட்டுமே சக்தியுடையது. கருவிகள் துணைக்கு வரும்; வழி காட்டும்; ஒளியூட்டும். அவ்வளவுதான்!

‘அன்னைக்கு எல்லாவற்றையும் ஆள்கின்ற, முறை செய்கின்ற சக்தி எப்படி ஏற்பட்டது? ஏன் அமைந்தது?’ எனில், அன்னையின் ஒளிப்பொறி மனித இதயத்தில் வந்து தங்கியவுடன், அது அவனுடைய வாழ்க்கை முழுதும் பரவி, தன் ஆதிக்கத்திற்குள் கொண்டுவர முயல்கின்றது. ஸ்ரீ அரவிந்தரின் யோகமான பூரண யோகம், வாழ்க்கையை ஏற்றுக் கொள்கின்ற யோகம்; புறக்கணிக்கும் யோகம் இல்லை. ஆகவே அவ்வொளி அவனுடைய ஆத்மாவை ஆட்கொண்டதைப் போல அவனுடைய வாழ்க்கையையும் ஆட்கொள்கின்றது. மேலும் அவ்வொளிக்கு முக்காலமும்-இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்-கட்டுப்பட்டது. மனித மனம் நிகழ்காலத்தில் செயல்படுகின்றது. கடந்தகாலத்தை மனித மனம் நினைவுபடுத்திக் கொள்ளத்தான் முடியும். எதிர்காலத்தைக் கற்பனைதான் செய்ய முடியும். அவனுடைய மனத்தால் நிகழ்காலத்தை மட்டுமே கட்டி ஆள முடியும். ஆனால், அன்னையின் ஒளி மூன்று காலங்களையும் கட்டி ஆள்கின்றது. அதற்கு அந்தத் திறன் இயல்பாக அமைந்தது. இன்று நம் வாழ்க்கையை அன்னைக்குச் சமர்ப்பிப்பது போல், பக்தன் கடந்தகால வாழ்க்கையையும் சமர்ப்பித்துவிட்டால், சென்றகால நிகழ்ச்சிகள் அந்த ஒளியின் ஆட்சியின் கீழ் வரும்; அதன் பலனைப் பெறும்.

அன்னையின் ஒளியும், ஒரு பிரச்சினையும் சந்தித்து விட்டால், அந்தப் பிரச்சினை தீர்கின்றது. கடந்தகாலப் பிரச்சினை இன்று தீர வேண்டுமானால் அன்னையின் ஒளியும், அந்தப் பிரச்சினையின் கூறுகளும் இன்று சந்திப்பதற்கு நம்மாலானவற்றை எல்லாம் செய்ய முன்வர வேண்டும். இதுவே முறை. முறையை முழுதும் விளக்கும்முன், ‘செல்வம் எப்படி இழக்கப்பட்டது? எந்த முறையில் இழக்கப்பட்டது’ என்பனவற்றை நோக்குவோம்.

பெரும்பாலும் பெருஞ்செல்வத்தை இழந்தவர்கள் நிர்வாகத் திறமை இல்லாத காரணத்தாலேயே இழந்தவர்களாக இருப்பார்கள். “அவர்களுக்கு 7 கிராமங்களில் நிலம். உள்ளூரில் மட்டும் 400 ஏக்கர். ஆறு பேர் உடன் பிறந்தவர்கள். 50 வருடங்களுக்கு முன்னால் அவர்கள் சிறப்பாக வாழ்ந்தனர். குதிரைச் சவாரி செய்து நிலத்தைச் சுற்றி வருவார்கள். சகோதரர்கள் ஒருவர்பின் ஒருவராய் இறந்துபோய், கடைசியில் ஒருவர் மட்டுமே மிஞ்சினார். அவர் காலம் வரையில் சொத்து அப்படியே இருந்தது. அவரும் போய்ச்சேர்ந்தார். அவர் போய்ச் சேர்ந்த கொஞ்ச காலத்திற்குள் சொத்து முழுதும் போய் விட்டது!” என்று 1000 ஏக்கர் நிலத்தைக் கட்டி ஆண்ட ஒரு குடும்பத்தைப் பற்றி என்னிடம் ஒருவர் சொன்னார்.

பெரிய செல்வத்தோடு பெரிய நிர்வாகமும் சேர்ந்திருக்கின்றது. அடுத்த தலைமுறைக்குச் சொத்து மாறும்பொழுது நிர்வாகத் திறமையுள்ளவர் ஒருவர் இல்லை என்றாலும், அப்படி ஒருவர் இருந்து அவருக்கு மற்றவர்கள் கட்டுப் படவில்லை என்றாலும், அந்தச் செல்வம் சிதறிச் சீரழிந்து போகின்றது.

திறமையுள்ளவர்கள் நிர்வாகத்தில் கவனத்தைச் செலுத்தாமல் ஆடம்பரப் பொழுதுபோக்குகளில் திளைத்துத் திரியும்பொழுது சொத்துகள் அழிந்து போவதுண்டு. சூதும், குதிரைப் பந்தயமும் பல பெரிய குடும்பங்களைக் கீழ் நிலைக்குக் கொண்டு வந்து இருக்கின்றன. விலை மாதரைச் சுற்றி வண்டாக அலைந்தவர்கள், மதுக்கடலில் மூழ்கி முக்குளித்தவர்கள், வீண் பெருமைக்காகத் தானத்தை அள்ளி வீசியவர்கள், தம்மை மிஞ்சியவர் எவரும் இல்லை என்ற கர்வம் கொண்டு எல்லோரையும் பகைத்துக் கொண்டவர்கள், பரம்பரைப் பண்பைக் காற்றில் பறக்க விட்டுவிட்டுப் பண்பற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள், எதிரிகள் என்று நினைக்கப்படுபவர்களை வன்மத்துடன் வாரிச் சுருட்டிக் குழியில் போட்டு மூடியவர்கள், ‘காசை வீசி’க் காரியங்களைச் சாதித்தவர்கள்-இவர்களைப் போன்றவர்கள்-சொத்தை இழந்தவர்கள் பட்டியலில் இடம் பெறுவார்கள்.

இந்தப் பட்டியலைப் பூர்த்தி செய்வதற்கு முன்னால் நான் சொல்ல விரும்புகின்ற ஒன்று உண்டு. அது இதுதான்: “சொத்து அழிந்ததற்கு ஒரு காரியம் அல்லது பல காரியங்கள் அடிப்படையாக இருக்கும். இந்த ஒவ்வொரு காரியத்திற்கும் அடிப்படையில் ஒரு மனப்பான்மை (attitude) உண்டு. அந்த மனப்போக்கு, அல்லது குணம், அல்லது சுபாவம் இன்றும்கூட அவர்களிடம் இருக்கும். பொருளை இழந்தோர் அதற்கான மூல காரணத்தையும், அதற்கு அடிப்படையாக இருந்த மனப்பான்மையையும் அதாவது குணம், சுபாவம், தன்மைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்த பின்னர் இன்று அந்த மனப்போக்கை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும்”.

முதலாவதாக நம்பிக்கையும், இரண்டாவதாகச் சொத்தை இழப்பதற்குக் காரணமான குணத்தையும் மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கும் மனநிலையும் ஏற்பட்டுவிட்டால், பக்தனின் பங்கு பெரும்பாலும் முடிந்துவிட்டது. நம்பிக்கையே போதுமானது. அதோடு பாதகமாக இருந்த தன் குணத்தையும் மாற்றிக்கொள்ள முன்வரும்பொழுது, அவன் இழந்ததைப் பெறக் கூடிய முழுத் தகுதியையும் பெற்றுவிடுகின்றான். பிறகு பிரார்த்தனைகூட அவ்வளவு முக்கியம் இல்லை. தன் நடைமுறைச் செயல்களை அந்தப் புதிய மனப்பான்மையுடனும், குறிப்பாக பழைய மனப்பான்மையின் வாடை சிறிதும் இல்லாமலும் செய்தால், பக்தன் அன்னையை நினைப்பதற்கு முன்னால் அன்னை அவனை நினைப்பார். அன்னை, பக்தன் பிரார்த்தனை செய்வதற்கு முன்னாலேயே பலனைக் கொடுத்துவிடுவார். இந்த நிலையில், ‘நினைவே வழிபாடு’ என்ற நோக்கோடு செயல்களைப் புரிந்து கொண்டு இழந்ததைப் பெறப் பிரார்த்தனை செய்தால், அந்தப் பிரார்த்தனை அபரிமிதமான அளவில் பலனைக் கொடுக்கும்.

சொத்தை இழந்தவர்களில் பெரும்பாலோர் இதற்கு இசைய மாட்டார்கள். அவர்கள் பிடிவாதக்காரர்களாகவும், தம்முடைய குணம், சுபாவம், பழக்க வழக்கங்களை முக்கியமாக நினைப்பவர்களாகவும் இருப்பார்கள்; எதையும் விட்டுக்கொடுக்கக்கூடிய தாராள நோக்குடையவர்களாகவும் இருக்கமாட்டார்கள். அவர்களை மாற்றுவது நம் குறிக்கோள் இல்லை. ‘எப்படிச் செய்தால் இழந்த நம் சொத்தைப் பெற முடியும்?’ என்று அவாவுகின்றவர்களும், ‘இன்று நம் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டால் அதற்குரிய பெரும்பலன் கிடைக்கும்’ என்பதைத் தெரியாதவர்களும் நிறையவே இருக்கின்றார்கள். அவர்களுக்கு அது தெரிந்தால், நம்முடைய கருத்துக்கு இசைவார்கள். அப்படித் தங்களை மாற்றிக் கொள்ள முன் வருபவர்களுக்கு ஏராளமான விளக்கங்கள் தேவை. அவைதாம் இங்கே தரப்பட்டிருக்கின்றன.

திவாலான ஒருவர் கடைக் குமாஸ்தாவாகப் போனார். அவர் மனைவி படித்திருந்ததால் வேலைக்குப் போனார். மாதத்திற்கு 2000 ரூபாய் செலவு செய்த குடும்பம், இப்பொழுது 200 ரூபாயில் நடக்க வேண்டும். (இப்பொழுது என்றால் இன்று, நேற்று அன்று; முப்பது ஆண்டுகளுக்குமுன்பு) பற்றாக் குறையோடு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த நிலையில் ஒரு நாள் அவர் மனைவியார் தம் பிறந்த வீட்டிற்குப் போயிருந்தார். அவர் போனவுடனே அவரைப் பார்க்கப் புறப்பட்டுவிட்டார் கணவர். புறப்பட்டவர் சும்மா போகவில்லை. தாம் புறப்பட்டு வருவதாக ஒரு தந்தி கொடுத்துவிட்டுப் புறப்பட்டார். தந்தி போய்ச் சேர்ந்தும் மாமியார் வீட்டில் யாரும் சந்தோஷப் படவில்லை. ‘இப்படி ஊதாரித்தனமாய்ச் செலவழித்துத் தாமே இருந்த சொத்தை எல்லாம் அழித்தார், இன்னும் புத்தி வரவில்லையே!’ என்று முணுமுணுத்தார்கள். அவர்கள் முணுமுணுப்பிலும் அர்த்தம் இருக்கின்றது. எந்த மனப் பான்மையுடன் இன்று தேவை இல்லாத செலவைச் செய்து ஒரு தந்தி கொடுத்தாரோ, அதே மனப்பான்மையால்தான் அன்று அவருடைய பெருஞ்செல்வம் அழிந்தது.

சுமார் 40 ஆண்டுகளுக்குமுன்பு நான் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தபொழுது ஓர் ஆசிரியர் இருந்தார். அவர் ஒரு கேரள அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். மிக மிக அடக்கமானவர். அவர் பங்குக்கு அன்று 18 இலட்ச ரூபாய் வந்தது. அவர் பியூனிடம் ஐந்து ரூபாய் கொடுத்து ஏதாவது வாங்கிவரச் சொன்னால், மீதியைக் கேட்க மாட்டார்; எடுத்துக் கொள்ளச் சொல்வார். அவர் ராஜ பரம்பரை. அது சரி. குலத்தளவே ஆகுமாம் குணம்! அதே சமயத்தில் இன்னொரு வரையும் நினைவு கூர வேண்டும். வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பள்ளியில் அட்டெண்டராகச் சேர்ந்து, பிறகு கிளார்க்காக உயர்ந்து 183 ரூபாய் சம்பளம் வாங்கினார். அவர் பஸ்ஸில் பிரயாணம் செய்யும்பொழுது கண்டக்டரிடம் நோட்டைக் கொடுத்தால் சில்லறை வாங்க மாட்டார். ‘நீயே வைத்துக் கொள்’ என்பார். சொத்துப் போய்விட்டது. ஆனால், சொத்துப் போகக் காரணமாக இருந்த அவருடைய குணம் மட்டும் இன்னும் போகவில்லை.

இன்னொருவர் பெருஞ்சொத்தைக் குறுகிய காலத்தில் தொலைத்தவர். அவரைப் பார்க்க அவருடைய நண்பர் ஒருவர் வந்தார். நண்பரிடம் அவர் ‘குடும்பத்தை எப்படி நல்ல முறையில் நடத்த வேண்டும்?’ என்று விரிவாக விளக்கம் கொடுத்துக் கொண்டு இருந்தார். அதைக் கேட்டுக் கொண்டு இருந்த அவருடைய அண்ணன், “நீ ஒன்றும் செய்ய மாட்டாய். ஆனால், பிறருக்கு உபதேசம் மட்டும் நன்றாகச் செய்வாய். உன்னுடைய சொத்துப் போனதற்குக் காரணமே இதுதான். என்று நீ பிறருக்கு யோசனை சொல்வதை நிறுத்துகின்றாயோ, அன்றுதான் உருப்படுவாய்” என்று எரிச்சலுடன் கூறினார்.

இதுபோல் சொத்துப் போனதற்குக் காரணமாக இருந்த ஒவ்வொரு குணத்திற்கும் பல பொருத்தமான உதாரணங்களைக் கொடுக்கலாம்.

முதலில் தேவைப்படுவது அன்னை மீது நம்பிக்கை. அடுத்தது, ‘செல்வம் நம் குடும்பத்தைவிட்டு எப்படிப் போயிற்று?’ என்ற விவரமான அறிவு. நம் ஆராய்ச்சியின் அடுத்த கட்டம், ‘அந்தப் பழக்கங்களுக்கு அடிப்படையான, குணங்கள் எவை? கடைசியாக அந்தக் குணங்கள், இன்று நம்மிடம் எந்த வடிவத்தில், எந்தப் பழக்கத்தில், எந்தச் செயலில் தங்கியுள்ளன?’ என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பலருக்கு இது புரியாது. ‘அப்படி எந்தக் குணமும் நம்மிடம் இல்லையே’ என்று சட்டென்று சொல்லிவிடுவார்கள். இது ஆழ்கடலில் முத்துக் குளிக்கின்ற வேலை. இதில் தேடல் அவசியம். ‘தேடிக் கண்டு கொண்டேன்’ என்பார்கள். இப்படிக் கண்டுகொள்வதை, தன்னை வரவு செலவுக் கணக்குப் போட்டுப் பார்த்துச் சமர்ப்பிப்பதை, ‘உண்மை அறிதல்’ என்கிறார் அன்னை.

ஒரு பக்தர் இந்தக் கட்டங்களை எல்லாம் தாண்டி வந்து விட்டார் என்றால், அவருக்காகக் காத்துக் கொண்டிருக்கும் அடுத்த கட்டம் முதிர்ந்த முடிவு (decision). “எக்காரணத்தை முன்னிட்டும் அந்தப் பழைய குண இயல்புகள் வெளிப்படும்படி நான் நடக்க மாட்டேன். அந்தப் பழைய பழக்க வழக்கங்களை, இனி நான் கிஞ்சிற்றும் அனுமதிக்கப் போவதில்லை” என்ற தீர்மானத்திற்கு வருவதற்குப் பெயர்தான் ‘தீர்ந்த முடிவு’. ‘தீர்ந்த முடிவு’ என்றால், மாற்றம் இல்லாத முடிவு.

இதற்கும் விளக்கம் தேவை என்று நினைக்கின்றேன். இதை ஏதோ ஓர் உந்துதலுக்காக எடுத்த முடிவாக நினைக்காமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டியது முதல் பயிற்சி. அது முடிவை உறுதிப்படுத்தும். அதற்குத்தான் கணக்குத் தேவைப்படுகின்றது. மனத்தை பழைய நிகழ்ச்சிகளை நோக்கிச் செலுத்தி, ஓர் ஆய்வை நடத்தி, அன்றைய மனநிலையை இன்றைய மனநிலையோடு ஒப்பிட்டுப் பார்த்து, ‘பிரார்த்தனையால் இன்றைய நிலை மாறும்’ என்ற வாய்ப்பைச் சிறப்பாகச் சிந்தித்து, ‘எந்தக் குணங்களை மாற்றுவது எளிது, எது கடினம்?’ என்று சோதித்து, ‘எந்தப் பழக்கங்களை விட்டுவிட முடிவு செய்தால் அதை நிறைவேற்றலாம்? எவற்றை நீக்க முற்பட்டால் அவை நம்மை மீறிச் செல்லும்?’ என்றெல்லாம் கணக்குப் போட்டு, நல்லவற்றையும், அல்லாதவற்றையும் வரவு செலவுகளாகக் கருதி, ஆய்ந்து, தோய்ந்து, ஒரு தேர்ந்த தெளிவுக்கு வந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

அத்தகைய உறுதிப்பாட்டுடன் எடுக்கப்பட்ட முடிவு, அந்த பக்தரைப் புதிய மனிதராக்கும். அந்த முடிவை ஏற்றுக் கொண்டவுடன் புத்துணர்வும், புதுப் பொலிவும், தெம்பும், இதுவரை இல்லாத தெளிவும், தைரியமும், எதிர்காலத்தை விடியல் ஆக்குகின்ற நம்பிக்கை ஒளியும் நெஞ்சில் ஊடுருவி, ஜீவனில் புகுந்து, அவருக்கு ஒரு புனர்ஜன்மத்தைக் கொடுக்கும். அன்று புதிதாய்ப் பிறந்த அந்த பக்தரின் வாழ்வில், அடுத்து நடப்பவை எல்லாம் அற்புதங்களே. ஸ்ரீ அரவிந்தரின் ‘சாவித்ரி’ என்ற காவியத்தில், ‘அற்புதங்கள் அன்றாட நிகழ்ச்சிகள் ஆகும்!’ என்ற ஒரு வரி உண்டு. அந்த வரியே அந்த பக்தரின் வாழ்க்கையாக அமையும்.

‘இனி உன் குடும்பத் தலைவன் நீ இல்லை. அன்னை உன் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இருக்கின்றார். உன் நம்பிக்கையாலும், உன் குணங்களை மாற்றிக் கொள்ள நீ செய்த முடிவாலும், அந்த முடிவின் முழுமையாலும் நீ பவித்திரம் அடைந்துவிட்டாய். அதன் மூலம் உன் வாழ்வை நீ அன்னைக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டாய். அன்னை இனி உன்னை முறை செய்தும், வகை செய்தும் வழி நடத்துவார்’.

மாற்றமும் ஏற்றமும் பெற்ற மனத்தில் நம்பிக்கை பிறந்து பெருகிக் கொண்டே இருக்கும். ஒப்பு நோக்கக் கூடிய எந்தப் புற நிகழ்ச்சிகளும் இல்லாமல், அதற்கு அவசியமும் இல்லாமல் நம்பிக்கை தானே வளரும். ஆழ்ந்த அமைதி நமக்கு நிழல் கொடுக்கும். ‘என்ன நடக்கின்றது?’ என்பது அறிவுக்குப் புலப்படாமல் இருக்கும். ஆனால், ஜீவனுக்குப் புலப்படும். புற நிகழ்ச்சிகள் நமக்குப் புரியவும் செய்யலாம்; புரியாமலும் போகலாம். அன்னையின் சந்நிதியில் காரியமும், காரணங்களும் தனித்தனிக் கோலங்களாக இருக்கின்றன.

அவை எப்படிப்பட்ட கோலங்கள்?

நாம் பணி புரியும் இடத்திலும், உறவினர்களைச் சந்திக்கின்றபொழுதும், நண்பர்களிடையே பழகும்பொழுதும் ஒரு சிறப்பான மாறுபாட்டைக் காணலாம். திடீரென்று நம் நிலை உயர்ந்துவிட்டது போல எண்ணி அவர்கள் நம்மை மேன்மையாக நடத்துவார்கள். ஒரு காலத்தில் யாரை நாம் தேடிப் போய் உதவி கேட்டோமோ, அவர்கள் நம் வீடு தேடி வந்து நமக்கு உதவி செய்வார்கள். சிரமப்பட்டு முடிக்க வேண்டிய காரியம், மிக எளிதில் முடியும். இதுவரை நம்மைக் கண்டால் வெறுத்து விலகிப் போனவர்கள், இப்பொழுது விருப்புடன் நம்மை நாடி வருவார்கள். நம் வீட்டைத் தாண்டிப் போகும்பொழுது திரும்பிக்கூடப் பார்க்காத வசதி மிக்க உறவினர்கள், இப்பொழுது ‘என்ன சௌக்கியமா?’ என்று நம் வீட்டுக் கதவைத் தட்டி நலம் விசாரித்துவிட்டுப் போவார்கள். அரிதாகக் கிடைக்கக் கூடிய ஒரு பொருளுக்கு எல்லோரும் ஆலாய்ப் பறக்கின்றபொழுது, நமக்கு அந்தப் பொருள் மிகச் சுலபமாகக் கிடைக்கும். நாம் விவசாயியாக இருந்து பயிர் செய்தால், ஊருக்கு மிஞ்சிய விளைச்சல் நம்முடையதாகத்தான் இருக்கும். நேற்றுவரை நம்மைத் தூற்றிப் புடைத்தவர்கள், இன்று போற்றி மகிழ்வார்கள். உள்ளூரில் வாழும்போது நம்மை உதாசீனப்படுத்தியவர்கள் வெளியூர்வாசிகளானபிறகு, நம்மைச் சந்திக்க ஊர்விட்டு ஊர் வந்து உறவாடிவிட்டுப் போவார்கள்.

சுருங்கச் சொன்னால், ‘நமக்கு நம் பெருஞ்செல்வம் திரும்பிவரப் போகின்றது’ என்பதை, நாம் மனத்தைத் திருத்தித் தெளிவான முடிவை எடுத்தவுடன், மற்றவர்களுக்கு எல்லாம் தெரிந்துவிட்டன போன்ற நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்கிவிடும்.

‘நாம் எடுத்த முடிவை அன்னை ஏற்றுக் கொண்டார்; ஆசீர்வாதம் செய்துவிட்டார்; முடிவு நிறைவு பெறும்; பரிபூரணமாகப் பூர்த்தியாகும்’ என்பதற்குக் கீழ்க்கண்ட இவை சிறப்பான அறிகுறிகள்.

  1. ஜீவன் முழுதும் சாந்தம் பரவும்.
  2. அமைதி நிலையாக நம்மிடம் குடி கொள்ளும்.
  3. ஏற்பட்ட நம்பிக்கை, காரணம் புரியாத அளவுக்கு வளரும்.
  4. மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

அதற்குமேல் நமக்கு வருவது அதிர்ஷ்டம் இல்லை. ‘அதிர்ஷ்டம்’ என நாம் புரிந்து கொண்டு இருப்பது அளவோடு வரக்கூடியது. அது நமக்கு அன்னை கொடுக்கும் பரிசு. அது அளவற்றது. அது வெள்ளமாகப் பெருகி வழியும். எது எப்படியானாலும் நமக்கு இப்பொழுது வருவது, நாம் ஏற்கனவே இழந்ததைவிடப் பெரியது. அது ஒப்பிட முடியாத அளவுக்கு மிகப் பெரியதாக இருக்கும்.

‘அதிர்ஷ்டம்’ என்பது வாழ்க்கை கொடுப்பது. நீ இப்பொழுது பெற்றிருப்பது அன்னை. உன் வாழ்க்கையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அவர் தம் கையால் உனக்கு வழங்கிய பெருங்கொடை. அதிர்ஷ்டத்தின்கை பெரியது. ஆனால், அதற்கு ஒரு கைதான் உண்டு. அன்னைக்கு ஆயிரம் கைகள். உன்னைச் சந்திக்கும் ஒவ்வொரு நபரின் மூலமாகவும், நிகழ்ச்சியின் மூலமாகவும் உனக்கு இடையறாது அன்னை வாரி வழங்கிக் கொண்டே இருப்பார்.

இறுதியாக ஒன்று. இது செல்வத்தைப் பற்றிய கட்டுரை என்றாலும், இதில் கூறியுள்ள கருத்துகள் அனைத்தும், உத்தியோகம், பதவி, வாழ்க்கை ஆகியவற்றில் ஏற்படும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் பொருந்தக் கூடிய உண்மைகள்.



book | by Dr. Radut