Skip to Content

பகுதி 6

76. வெறும் கவர்ச்சி அர்த்தமற்றதுஎன அறிய வேண்டும்.

கவர்ச்சி தவறாது கவரும்.

Pride & Prejudiceஇல் Wickham கவர்ச்சியாய் அதிக இதமாக அவன் பேசும் மொழி இனிமையாக சுவைக்கும். தானே பேசமாட்டான். கேட்டால் பக்குவமாகப் பதில் கூறுவான். சொல்நயம், பொருள்நயத்துடன் இழைந்து, நாகரீகத்தின் நயத்தைக் காட்டும். அவன் பொய்யானவன். அவனால் தீங்கிழைக்க முடிந்தது. Fitz William வில்லியம் அதே கதையில் அவனைப்போலப் பெரும்பாலும் இனிமையானவன். அவன் gentleman நல்லவன். அவனால் எவருக்கும் தீங்கு வரவில்லை. விக்காம் அழகன். அழகன் கவர்ச்சிக்கு அடிபணியாதவரில்லை. கவர்ச்சி பெரியதானாலும், இளைஞர்கள் கண்ணில் படாதவை பெரியவர் கண்ணில் படும். பெரியவர்கள், அதுவும் முக்கிய நேரங்களில் முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் சுபாவத்தைக் காட்டும் செயல்களைக் காணமறுப்பது மன்னிக்க முடியாத காரியம்.

அன்பர்கட்கு, பெரியவருக்கும் இல்லாத அறிவு, சூட்சுமம், ஞானம், பாதுகாப்புண்டு.

அத்தனையையும் புறக்கணித்து கவர்ச்சியை மட்டும் அன்பர் கருதுவாரானால் அது நாம் ஏற்கக்கூடாதது.

முகம், நடை, உடை, பாவனை, சொல், எப்படியிருந்தாலும், செயல் மனிதனைக் காண்பிக்கும்.

செயல் திறமையை குணத்திலிருந்து பிரித்துப் பார்க்க வேண்டும். திறமையுடன் நடத்தை தவறாக அமையலாம்.

நல்ல குணத்துடன் கெட்ட நடத்தை இணைந்து வாராது.

சொல் கடுமையானால், அவன் நல்லவனாக இருக்கலாம். ஆனால் கடுமையான சொல்லும் இதமான செயலும் சேரா.

திருமணம், பார்ட்னர் விஷயங்களில் இது மிகவும் முக்கியம்.

அன்பருடைய அன்றாடச் செயல்கள் திருமணத்திற்குச் சமமானவை.

அன்னையின் அன்பர் என்றால், அவர் சொர்க்கலோகவாசி, உலகில் நடமாட வந்திருக்கிறார்என்று பெயர் (citizens of heaven domociled on earth).

வெறும் கவர்ச்சி தீயசக்திகள் நுழையும் வாயில்.

 கவர்ச்சி கண்ணை மறைக்கும்.

கண் போதாது, திருஷ்டி வேண்டும் என்பவர் கண்ணையும் மறைத்துக் கொண்டால் என்ன செய்வது?

நாம் சொல்லும் ஞானதிருஷ்டி நெற்றிக்கண்ணைவிட உயர்ந்தது.

அந்நிலையில் அன்பர் கண்ணைக் குருடாக்கிக்கொள்வது சரியா?

கவர்ச்சி அறிவை மறைக்கும் அஞ்ஞானத்திரை.

77. அழைப்பு பாக்கியம்என அறிதல். நினைவே ஒரு பாக்கியம். ஆன்மீக நன்றியறிதல்.

அன்னையை அறிதல் அதிர்ஷ்டம்.

அன்னையை அழைப்பது ஆன்மீக பாக்கியம். ஜீவனில் நன்றியில்லாமல் அன்னையை அழைக்க முடியாதுஎன்று இடைவிடாமல் அழைக்க முயன்றவர் அறிவார்.

சோவியத் யூனியனில் ஒவ்வொருவருக்கும் தினமும் ஒரு முட்டை கிடைக்கும் என்பதைக் கேட்டவர் இதென்ன பெரிசு' என்றார்.

அவர் வீட்டில் 8 பேருண்டு. அடிக்கடி முட்டை சாப்பிடுபவர். முட்டை சாப்பிடுவதும், தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதற்கும் உள்ள வேறுபாடு பெரியது.

8 பேர் தினமும் ஒரு முட்டை சாப்பிட மாதம் 240 முட்டை வாங்க வேண்டும். அவர் அந்த மாதம் வாங்கியது 10 முட்டை. தினமும் ஒருவருக்கு 1/24 பங்கு முட்டையுண்டு.

அடிக்கடி, மாதம் ஒரு முறை, அழைப்பில் உட்காருபவர் இல்லை, குறைவு. உட்கார்ந்தால் தூங்குபவர் பலர். ஒரு சிலர் குறட்டையும் விடுவர்.

தினமும் 1 மணி நேரம் அன்னையை அழைப்பவர் டெபுடி கலெக்டரானால், 6 மாத முடிவில் அவர் அகில இந்திய ஸ்தாபனத் தலைவராவார்.

நான் எழுதும் உதாரணமெல்லாம் வசதி பெறுபவை.

அறிவு வளர்வது, ஆதரவு பெருகுவது, மனம் அமைதியடைவது, பிரபலம்

பெறுவது ஆகியவை வசதியுடன் ஒப்பிட முடியாத உயரத்திலுள்ளவை.

அன்னையை அறியாமல் அதன் சாரல் வந்த இனிய பழக்கமுள்ள ஆபீசர் சில ஆண்டுகளில் அகில இந்தியப் புகழ் பெற்றார், பல ஆண்டுகளில் உலகப்புகழ் பெற்றார். இவை அன்னையின் சூழலால் வந்தவைஎனவும் அவர் அறியமாட்டார்.

வாய்விட்டு அழைத்து, அதை மனத்தால் சொல்லி, அழைப்பை நெஞ்சுக்குக் கொண்டுபோய், அங்கிருந்து நெஞ்சுக்குப்பின்னால் கொண்டு போவதில் ஒவ்வொரு கட்டமும் எப்படி முக்கியம், சிரமம் எனத் தெரியும். ஒரு வாழ்நாளில் ஒரு முறையும் இவை சாதிக்கக் கூடியவையல்ல.

யோகத்தில் நாட்டமுள்ளவர் அறியக்கூடிய பாதையிது.

வாயால் அழைப்பதே பாக்கியம்.

அதையும் தொடர்ந்து செய்ய முடியாது.

ஒரு நாளில் சில மணி நேரம் அழைத்தால் பிறகு 1 மாதம் மறந்து போகும்.

பாக்கியத்தைப் பணமாக எண்ணாமல், பாக்கியமாகக் கருதும் மனமிருந்தால் ஒவ்வொரு முறையும் அழைக்கும்பொழுது அது பாக்கியம்' எனக் கூறும்.

பாக்கியம்என்று அறிவிப்பது அறிவு.

அமிர்தம்என உணர்வது உயிர்.

உணர்ந்து பேசமுடியாத உடல் புல்லரிக்கும்.

உடலின் புல்லரிப்பு அங்கு உயிரின் புன்னகை.

நினைவு, உணர்வு, உடல் உணர்வு என்பவை மனம்.

உயிர், உடல் அன்னையால் தீண்டப்பெறுவதாகும்.

78. எந்தக் காரியத்தை எவருக்கு செய்தால் வழிவிடும் என அறிதல்.

பெரியவருக்கு நமஸ்காரம் செய்யத் தடையை அகற்று.

தியானத்தில் ஒரு சில ஆங்கிலேயர் இருந்தனர். நாம் குருவுக்கு

சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதால், அவர்களும் தாமாகவே முன்வந்து செய்தனர்.

நமஸ்காரம்' என் தலையில் கத்தி ஊடுருவுவதுபோலிருக்கிறது என்றார் அந்த மேல்நாட்டார். அவர்கட்குப் பழக்கமில்லை. ஒரு பெரிய ஆத்மாவுக்கு நமஸ்காரம் செய்யும் பக்குவமற்ற ஆத்மா அவர்.

தனக்கு வரவேண்டிய பெரிய பிரமோஷனில் பெருங்கேள்வி எழுந்து, 6 மாதமாகத் தடையாயிருப்பவர் 6 மாதம் முன் வீட்டில் உள்ள அண்ணன் மகனுக்கு வாங்கிய தீபாவளித் துணியை அவனைத் தண்டிக்க வேண்டி கொடுக்காமல் வைத்திருக்கிறார்என்று அறிவதில்லை.

அதைக் கொடுக்கும் நிர்ப்பந்தம் எழுந்தது. அன்றே பிரமோஷன் கிடைத்தது.

நம்சுபாவப்படி நாம் பல காரியங்களைச் செய்கிறோம், பல்வேறு காரியங்களைச் செய்ய மறுக்கிறோம். நாம் செய்த, செய்யாத ஒவ்வொரு காரியத்திற்கு நேரான தொடர்புடைய மற்றொரு காரியம் உண்டு என நாம் அறிவதில்லை.

கவனித்தால் பெரும்பாலும் விளங்கும்.

யோசனை செய்தால் மேலும் விளங்கும்.

சமர்ப்பணம் செய்து, யோசனையுடன் கவனித்தால் அனைத்தும் விளங்கும்.

ஒரு பெரிய சிக்கல் அண்ணனுக்குத் தம்பி தோற்க வேண்டும் என்ற நல்ல' எண்ணம். சிக்கல், பெரும் சிக்கலாகி, உடைந்து, மீண்டும் சிக்கல் ஆயிற்று. 11 வருஷம் கழித்து ஒரு நாள் தம்பி அண்ணனை நோக்கி, "சற்று உதவினால் நல்லது'' என்றார். 11 வருஷமாக அண்ணன் மனநிலையை அறிந்தவர் தற்சமயம் அவர் மனம் சற்று மாறுபட்டிருப்பதை அறிந்து கேட்டார். அண்ணன் இசைந்தார். மறுநாள் சிக்கல் அவிழ்ந்து,

எழுதி, கையெழுத்துப் போட்டு முடித்தனர்.

நம்வீட்டு நிலைமையை "எங்கள் குடும்பம்'' தாயார் அறிவதுபோல் கவனித்தால்,

  • எந்தப் பிரச்சினைக்குரிய முடிச்சும் தெரியும்.

  • எந்த வாய்ப்புக்குரிய வாயிலும் தெரியும்.

பக்தியிருந்தும் பழக்கத்தால் நமஸ்காரம் செய்ய உடல் தயங்கினால், தயக்கம் விலகி நமஸ்காரம் செய்தால், தடை விலகும், வாய்ப்பு பலிக்கும்.

  • கவனிப்பது முக்கியம்.
  • தொடர்பை அறிவது அதைவிட முக்கியம்.
  • இல்லாத தொடர்பைக் கற்பனை செய்பவர் பலனைக் கண்டு நிலையை அறிய வேண்டும்.
  • பகுத்தறிவு பேசுபவர் இதுபோல் கவனித்தால் அவர்கள் பகுத்தறிவுக்கும்' உலகில் தேவைப்பட்ட அறிவுக்கும் உள்ள தூரத்தைக் காண்பர்.

79. உனக்குப் பொறுக்காதவற்றை (sensitive) அறிவதுபோல் வாழ்வை அறிய வேண்டும்.

நமக்கு வரவேண்டிய பிரமோஷன் அடுத்தவருக்குப் போய்விட்டது; பெரிய வரன் வந்தது எனக்கு, முடிந்தது எதிர்வீட்டுப் பெண்ணுக்கு; பந்தியில் மரியாதையில்லாமல் நடத்துவது; வயதில் சிறியவர் வயதிற்குரிய மரியாதை தாராதது; தங்கை என்னிடமிருப்பதைவிட அண்ணனிடம் அதிக நம்பிக்கை வைப்பது; நமக்குக் கீழே வேலை செய்தவன் கீழே நாம் வேலை செய்ய வேண்டிய நிலை பொறுக்க முடியாதவை. பல உதவிகள் நம்மிடம் பெற்றவன் ஓர் உதவி செய்ய மறுப்பது, நமக்கு செய்ய வேண்டிய உதவியைப் பிறருக்குச் செய்வது பொறுக்காதவை. மரியாதை, உரிமை போகும்பொழுது மனம் புழுங்கும். நாம் பாதிக்கப்படுவதுபோல் பிறர் பாதிக்கப்படுவதை நாம் பொருட்படுத்துவதில்லை.

பிறரைக் கடந்த நிலையில் வாழ்வுள்ளது.

நாம் பொறுக்காததுபோல் வாழ்வு பொறுக்காது.

நமக்கு ஜீவன் உள்ளதுபோல் வாழ்வுக்கும் ஜீவன் உண்டு.

அதை அறிவது பெரிய விஷயம்.

நமக்கு உரிமையுள்ளவரை வாழ்வு பொறுக்கும். நம் உரிமையின் எல்லையைக் கடந்து பேசத் தோன்றுவது அதிகப்பிரசங்கித்தனம். அப்படி

செய்தால் வாழ்வு எதிரான பலன் தரும். DMKயைப் பற்றி இராஜாஜியை அவர் முதலமைச்சராக இருந்தபொழுது அபிப்பிராயம் கேட்டார்கள். அவர் அரசியல் தலைவர். DMK அரசியல் கட்சி. நேரு அவர்களை நான்சென்ஸ்' என்றார். அது அரசியல் அபிப்பிராயம். அரசியல் அபிப்பிராயத்தைக் கடந்து religious, spiritual opinion மதாச்சாரியர்கள் போல இராஜாஜி பேசினார், "அவர்கள் ராட்சசர்கள். அவர்களுக்குள்ளே அடித்துக்கொண்டு சாவார்கள்'' என்றார். 10 ஆண்டுக்குள் அவர் DMK மேடையிலிருந்து DMKவை ஆதரித்துப் பேசும் நிலை வந்தது. ஒருவர் நிலம் வாங்க முயன்றார். நண்பர் தாம் விலை பேச முன்வந்தார். முடியும் பொழுது தனக்கு அதில் பாதி வேண்டும் எனக் கேட்டார். பிறர் வாங்கும் சொத்தில் பங்கு எவரும் கேட்கமாட்டார்கள். வாழ்வு அதை அனுமதிக்காது. ஓராண்டுக்குள் இவர் மனையை சொற்ப விலைக்கு சர்க்கார் எடுத்துக்கொண்டது.

  • பிறர் புண்படுவது எளிய செயல்.
  • வாழ்வு புண்படுவது பெரிய செயல்.

மனிதன்நடத்தைத் தவறாக இருப்பது, நாணயம் தவறுவதுண்டு. அதை வீட்டிற்குள்ளே செய்தால் குற்றம். நடத்தை நாணயம் தவறினால் தவறுபவன் தண்டனை பெறுவான். நெருக்கமான இடத்தில் அதைச் செய்தால் வாழ்வு புண்படும். குடும்பம், நட்பு என்பவை வாழ்வு ஏற்படுத்தியவை.

  • தவறு வேறு.
  • வாழ்வை மீறித் தவறுவது வேறு.

ஒருவனை அடித்தால், அது அடிதடி சண்டை; போலீஸ்காரனை அடித்தால் அது சர்க்காருக்கு எதிரான செயல். கோர்ட்டில் எதிரியைத் திட்டுவது திட்டு; ஜட்ஜைத் திட்டினால் (contempt of court) ஜெயிலுக்குப் போக வேண்டும்.

வாழ்வின் நயங்களை அறிந்து, அவை திருப்திப்படும்வகையில்

நடக்க வேண்டும். அவற்றைச் சீண்டக்கூடாது.

80. அழைப்பு ஆழத்தில் ஆனந்த உணர்வு கொடுப்பதைக் கவனி.

அழைப்பு பிரச்சினைகளைத் தீர்க்கும்.

மேலும் அழைப்பு வாய்ப்பை உற்பத்தி செய்யும்.

இவையிரண்டும் வாழ்வுக்குரியவை.

ஆத்மாவுக்குரிய மௌனத்தையும், காட்சி, நேரடி ஞானம், ஞானத்தையும் அடுத்த அடுத்த கட்டங்களில் அழைப்பு தரும்.

அதற்கும் அடுத்தது சுமுக உணர்வு.

சுமுக உணர்வு ஆனந்தம் தருவது சத்தியஜீவியம்.

"என் சந்தோஷம் இரு மடங்காகி ஒரு வாரம் இருந்தது'' என ஒரு அன்பர் எழுதினார். இது யோக சித்தி. Mother's joy welling up.

அன்னையின் ஆனந்தம் பொங்குவது.

ஒரு நிமிஷம் இது கிடைப்பது அனுபவம்.

நிலையாகக் கிடைப்பது சித்தி.

இந்த ஆனந்தத்தில் உலகம் சிருஷ்டிக்கப்பட்டது. ஆனந்தத்தில் தோன்றி, ஆனந்தத்தில் வாழ்ந்து, ஆனந்தத்தை அடைவது சிருஷ்டி.

 

சமர்ப்பணம் இவ்வானந்தத்தால் சரணாகதியாகும்.

அன்றாட எளிய நிகழ்ச்சிகளில் சமர்ப்பணம் இந்த ஆனந்தத்தைத் தருமானால், ஒரு முறையும் தருமானால், அவர் அன்னை விரும்பும் அன்பர். அவருக்குப் பிரச்சினைகள் பிரச்சினையில்லை.

இந்த ஆனந்தமும் மனம், உணர்வு, உடல், ஆத்மா என்ற 4 நிலைகளுள் மேலெழுந்தவாரியாகவும், ஆழ்ந்தும் உண்டு (consciousness and substance).

மனம்பெறும் ஆனந்தம் பரந்தமனம் தரும்.

உணர்வுபெறும் ஆனந்தம் உறவை இனிக்கச் செய்யும்.

உடல்பெறும் ஆனந்தம் நன்றியால் பூரித்து, உடல் புளகாங்கிதம் அடைதல்.

பரந்தமனம் நம் விஷயத்திலும், நமக்கு வேண்டியவர் விஷயத்திலும் அடைவது மேல்நிலை; பிறர் விஷயத்தில் எழுவது ஆழ்ந்த நிலை.

வேண்டியவர் உறவு இனிப்பது சிறியது. எவர் உறவும் இனிப்பது பெரியது.

உடல் பூரிப்பது ஒரு நிலை. புல்லரிப்பு ஆழ்ந்த நிலை.

நோக்கம் இந்த ஆனந்தம் பெறுவதானால் அன்பன் சாதகனாவான்.

ஆனந்தம் அறிவுக்கு அழகாகத் தெரியும்.

ஆனந்தம் ஆத்மாவுக்கு அன்பாகத் தெரியும்.

ஆனந்தம் உணர்வுக்கு சந்தோஷமாகும்.

அருள் உள்ளே வந்தால் அன்பாக வெளிப்படுகிறது.

அருள் உள்ளே ஆனந்தமாக ஆத்மாவில் எழுந்து அன்பாகிறது.

அழைப்பு வாய், மனம், நெஞ்சம், ஜீவன்எனப் பல நிலைகளிலிருந்து எழும்.

ஒவ்வொரு நிலைக்குரிய ஆனந்தம் ஒரு வகை.

இதைக் கவனிப்பது ஆத்ம விழிப்பு.

81. எவரையும் அவருக்குத் தாங்க முடியாத இடத்தில் (Sensitive point) தொடாதே.

சில ஊர்களுக்குக் கெட்ட பெயருண்டு.

சில ஜாதிக்கும் அது சில ஊரில் உண்டு.

ஓர் ஊரில் புகழுடைய ஜாதிக்கு வேறு ஊரில் நல்ல பெயரிருக்காது.

(Sensitive) சூடான சொரணையுடையவருக்கு இது போன்ற விஷயத்தில் positive பாஸிட்டிவாகக் கூறினாலும் கோபம் வரும்.

வக்கீலுக்கு எந்த ஊரிலும் மரியாதை.

மத்தியஸ்தத்தில் வக்கீல் பேசுவதை ஏற்க முடியாதவர் வக்கீல்போலப் பேசுகிறீர்கள் என்றால் வந்த விஷயமே கெட்டுவிடும்.

குடும்பம், ஊர், தொழில், ஜாதி, வயது, படிப்பு, கட்சி, இவற்றைப் பற்றி பேசுதல் மனம் புண்படும். அவற்றை அடியோடு விலக்குதல் அவசியம்.

சிலருக்கு இப்படிப் பேசுவதே பழக்கமாக இருக்கும்.

"கொட்டினால்தான் தேள்'' என்பது அவர் சட்டம்.

அவர்கட்குரிய முறை இது.

இப்படிப் பேச சந்தர்ப்பம் வந்தால் அவர்களால் பேசாமலிருக்க முடியாது. "நீ டிரைவர்தானே?'', "உனக்குப் பேச வயதில்லை'', "இது உங்கள் ஊர் பாஷை'', "படிக்காதவருக்குப் பேச உரிமையில்லை'', "உங்க ஜாதிக்கே முரட்டு ஜாதி, முட்டாள் ஜாதிஎனப் பெயர்'', "நீ கம்யூனிஸ்ட் அல்லவா?'' என்ற சொற்களைச் சொன்னால் வம்பு வரும்.

அந்த சந்தர்ப்பம் வரும்பொழுது பேசத் துடிக்கும்.

குளப்பாக்கம் என்ற ஊர் பெயர் சொன்னாலே சிரிப்பார்கள்.

அந்த ஊர்க்காரரிடம் அதைத் தொட்டுப் பேசக்கூடாது.

இவ்விஷயத்தில் மனத்தைக் கட்டுப்படுத்த முயன்றால் உள்ளே போராட்டம் பெரியதாக இருக்கும்.

அமெரிக்கர் நாகரீகமற்றவர், ஹாலண்டு நாட்டினர், ஸ்காட்லண்ட் நாட்டினர் கருமிகள் எனப் பெயர் பெற்றவர். நாம் வெளிநாடு போனால் நம்மை அந்த நாளில் மகாராஜா, பாம்பாட்டி என நினைப்பார்கள்.

இந்தியாவில் ராஜாக்கள் அதிகம்.

இங்கு தெருவில் பாம்பாட்டியைக் காணலாம்என அறிவார்கள்.

நம்மை "நீங்கள் ராஜாவா, பாம்பாட்டியா?''எனக் கேட்டால் நம்மனம் என்ன பாடுபடும்.

இதுபோன்ற discipline கட்டுப்பாட்டை 1 மாதம் பயின்றாலும் பலனுண்டு; 1 வாரமும் போதும்.

இந்தக் குணமுள்ளவர்க்கே இது பொருந்தும்.

அனைவர்க்கும் பொதுவாகப் பொருந்தும்.

குறிப்பாகப் பொருந்தாது.

82. சிறு தவறும், குறையும் ஏற்படாவண்ணம் 3 நாள் அல்லது குறைந்தபட்சம் 24 மணி நேரம் செயல்படுதல்.

தவறின்றிச் செயல்பட மனிதன் தெய்வமாக இருக்க வேண்டும்.

கடிதம் எழுதி மடித்துக் கவரில் போட்டபின் எடுத்துப் பார்த்தால் நாம் செய்த வேலை நமக்கே சிரிப்பு வரும்; பேப்பர் கோணலாக இருக்கும். ஜவுளிக்கடையில் 1 புடவை வாங்க பெண்கள் பல புடவைகளைப் பரிசீலனை செய்வர். கடையில் அப்புடவையை மீண்டும் மடித்து வைக்கும் நயம், பொறுமை பெரியது. 1 நாள் முழுவதும் நம் செயல்களை நாமே கவனித்தால் எப்படி அவற்றைச் சரியாகச் செய்வது எனப் புரியும். முதல் எப்படி ஒவ்வொரு சிறு காரியத்தையும் (perfectஆக) சிறப்பாகச் செய்வது என விவரமாக முடிவுசெய்யவேண்டும். அம்முடிவு மனத்தில் மகிழ்ச்சியாக மலரும்வரை பொறுமையுடன் பூரிக்க வேண்டும்.

3 நாள் அதைப் பின்பற்ற ஆரம்பித்தால் தவறுஎன வரக்கூடாது. வந்தால் அதிலிருந்து மீண்டும் 3 நாள் தொடர வேண்டும்.

இப்பயிற்சியை மேற்கொண்டபின் நம்மால் எந்த ஒரு சிறு காரியத்தையும் சரிவரச் செய்ய இயலாது, இதுவரை செய்யவில்லைஎனப் புரியும்.

கதவைச் சாத்துவது, காரை ஸ்டார்ட் செய்வது போன்றவை சிறு வேலைகள். சத்தம் போடாமல், கதவு பொருந்தும்படி சாத்த இயலாது; பெருமுயற்சி வேண்டும். கார் ஆடாமல் (jerk) ஸ்டார்ட் செய்ய பாதி பேரால் முடியாது. அவர்களாலும் ஜெர்க் இல்லாமல் நிறுத்த முடியாது. மேஜை மேல் தட்டு, டம்ளர் சத்தமில்லாமல் வைக்க பயிற்சி வேண்டும். தினமும் பரிமாறுபவர் கரண்டியில் சூடாக சாம்பார் எடுத்துப் பரிமாறுகிறார். ஒரு நாளைக்கு அந்த வேலையை நாம் செய்தால் சாம்பார் சிதறும், கை பிடிபடாது; பயிற்சி தேவை. நெடுநாளைய பயிற்சியின்பின் இவற்றைப் பாதிப் பேரே ஒழுங்காகச் செய்வார்கள். சாம்பாரை அழகாகப் பரிமாறுபவர் கவனம் முழுவதும் பரிமாறுவதிலிருக்கும். அவரால் அடுத்த ஒரு காரியத்தை அதேபோல் செய்ய முடியாது.

  • நாள் முழுவதும் நாம் 100க்கு மேற்பட்ட காரியங்களைச் செய்கிறோம்.

ஒவ்வொன்றையும் சரியாகச் செய்ய வேண்டும்.

  • சரியாகச் செய்ய முடிந்தால் படபடப்பு வரும்.Relaxed சல்லிசாக இருக்க முடியாது. இயல்பாக, படபடப்பின்றி, அழகாக அனைத்துக் காரியங்களையும் முகமலர்ந்து செய்வது தெய்வஅம்சம்.
  • அதை முயன்று, கவனித்து, பொறுமையுடன் பெற்று 3 நாள் பயிற்சியாக மேற்கொள்வது நாம் நம் நிலையை அடிமட்டத்தினின்று உச்சிக்கு உயர்த்துவதாகும்.
  • இந்த நாளில் பேனாவுக்கு இங்க் போடவேண்டாம். பென்சில் சீவ வேண்டாம். அவை ஒருவர் நிதானத்தையும், திறமையையும் அளந்து காட்டும் செயல்கள்.

83. 3 மணி நேரம் மனத்துள் ஒரு குறையும் எழாதவாறு கட்டுப்படுத்து.

எப்பொழுதும் யார்மீதாவது குறை சொல்பவருக்கு உகந்த முறையிது.

குறையுடையவர் குறை சொல்வார்.

வாயால் சொல்லாமலிருந்தால் டென்ஷன் வரும்.

மனத்தால் சொல்லாமலிருந்தால் பயித்தியம் பிடிக்கும்.

குறையுடையவர் குறை சொல்வது அவர் வாழ்வு செவ்வனே நடக்க உதவும்.

அவர் குறை சொல்வதைத் தடுக்கக்கூடாது.

தாம் சொல்லும் குறையைக் கண்டு அவரே வெட்கப்பட்டு, குறை கூறக் கூடாதுஎன விரும்பினால், அவருக்கு உதவும் முறையிது.

கடல் அலை எழுவதுபோல் மனத்துள் அவருக்குக் குறையெழும்.

இதுதான் என் சுபாவம். எனக்கு இது வெட்கம் தருகிறது' என்பது முதற்படி.

அதை உணர்பவர் செய்யக்கூடியது என்ன?

அடுத்த முறை நம்மையறியாமல் குறை சொல்லும்பொழுது அதைக் கண்டு நாம் வெட்கப்பட வேண்டும்.

வெட்கம் பூரணமானால், துணி அவிழ்ந்தால் வெட்கப்படுவதுபோல்

வெட்கப்பட்டால், இம்முறையை ஆரம்பிக்கலாம்.

அதன்பின் முடிவாகச் செய்ய வேண்டியது, யார் பிறர்மீது குறை சொல்வதையும் நாம் வாயாலோ, மனத்தாலோ கண்டிக்கக் கூடாது.

அப்படிக் கண்டித்தால் குறை உள்ளே உயிரோடிருக்கிறதுஎனப் பொருள்.

இவரும் நம் போலிருக்கிறார்எனத் தோன்ற வேண்டும்.

குறை கூறாத மனம் நிறையுடையதுஎன்று விளங்க வேண்டும்.

அதன்பிறகு மனத்தைக் கட்டுப்படுத்த முயன்று 3 நிமிஷம், 10 நிமிஷம் என வளர்ந்து 3 மணி நேரம் மனம் அமைதி பெறுவது பயிற்சி முடிவது.

  • ஏன் குறை சொல்கிறேன்என விளக்கத் தோன்றும்.
  • இது சொல்ல வேண்டிய அவசியமாயிற்றேஎனத் தெரியும்.
  • நம்மையும், நம் புதுமுடிவையும் மறந்து குறை கூறுவோம்.
  • இயல்பாக எழுவதை எப்படித் தடுக்க முடியும்எனத் தோன்றும்.
  • வெட்கப்படுவது, உஷாராக இருப்பது, இலட்சியம் நினைவிருப்பது அவசியம்.
  • அப்படியிருப்பது மனம் கட்டுப்படுவது.
  • மனம் குறை விஷயத்தில் கட்டுப்பட்டால் வேறொரு விஷயத்தில் ஓடும்.
  • எந்த விஷயத்திலும் ஓடாதது அமைதி.
  • குறை விஷயத்திலாவது கட்டுப்பட வேண்டியது அவசியம்.
  • 3 மணி நேரம் கட்டுப்பட்டால் பிறகு பொதுவாகக் கட்டுப்படும்.

84. பிறர் கர்மத்திற்குக் கருவியாகக் கூடாது. 1 வாரம் அல்லது 1 மாதம் அதைக் கடைப்பிடிக்கலாம்.

நாம் கர்மத்திலிருந்து விலகுகிறோம். பிறர் கர்மத்தை ஏற்கலாமா?

சம்பாதிக்க முடியாதவன், படிப்பை முடிக்காதவன், திருமணமாகாதவன் பெரிய குடும்பங்களிலும், சிறிய குடும்பங்களிலும் இருப்பதுண்டு.

அத்தைமகளை தன்விருப்பத்திற்கு எதிராகச் செய்து வைத்ததால், திருமணத்தன்றே அவளுடன் வாழப் போவதில்லை' என்றான். சொல்லியவன் கல்லூரி ஆசிரியன். கடைசிவரை வாழவில்லை.

நிலைமை பரிதாபமானது. பலரும் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தனர்.

எவராலும் எதுவும் செய்ய முடியவில்லை. சர்க்காரில் டெபுடி டைரக்டராக இருந்தவன் பிரமோஷனில் சர்க்காருடன் கோபித்துக்கொண்டு ராஜினாமா செய்தான்.

ஓய்வுபெற வேண்டிய வயதிற்குமுன் இறந்துபோனான்.

இவனை மனைவியுடன் இணைக்க எவர் முயன்றாலும், இவனுடைய கர்மம் அவர்களுக்கு வரும். இவனுடைய கல்லூரி ஆசிரியர் முயன்றார்.

அவர் பையன் இவன்போல ஆனான். அவர் தம்பி அகால மரணமடைந்தான்.

இது நல்ல காரியமாயிற்றே செய்யக்கூடாதாஎன்பது கேள்வி.

அவனோ, அவன் மனைவியோ பிரச்சினையை அறிந்து, அதிருந்து மீள விரும்பி, நம்மை அணுகினால் செய்யலாம்; நாமே செய்யக்கூடாது.

பரம்பரை பட்டினியிருப்பவருக்குப் பஞ்சம் நீங்கி சுபிட்சம் வர முயன்றால் அவருடைய பஞ்சம் இரண்டு தலைமுறைக்கு செய்தவருக்கு வருகிறது.

சொந்த சுபாவத்தால் கெட்ட பெயர் வாங்கியவர்க்கு அகில இந்தியப் புகழ் தேடிக் கொடுத்தால் அவர் கெட்ட பெயர் இடம் மாறுகிறது.

கூலிக்காரன் மகன் குடித்தனக்காரனாக முயல்வதை, இது இவன் கர்மம்எனப் புரியாது, நடத்திக்கொடுத்தால் நாட்டை ஆள வேண்டிய அம்சம் உள்ளவருக்கும் நல்லது நடக்கத் தவறுகிறது.

இதைச் செய்ய முயல்பவர் குறைவு.

அவர்களுக்கு இந்த சந்தர்ப்பம் ஒரு நாளைக்கு 10 முறை வரும்.

அவர்களால் கட்டுப்படுத்த முடியாது.

1 மாதம் கட்டுப்பாட்டிலிருந்தால் நாம் எதிர்பார்க்கும் பலன் வரும்.

அவர்களால் ஒரு நாள், ஏன் ஒரு முறையும் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது.

சுபாவம் நம்மை மீறக்கூடியது.

நாம் சுபாவத்தை மீறுவது இலட்சியம்.

அது ஒரு வினாடியும் கட்டுப்படாதது. 1 மாதம் கட்டுப்பட்டால் பெரும் பலன் வரும்.

எந்த விஷயத்தில் சுபாவத்தைக் கட்டுப்படுத்தினாலும் இப்பலன் வரும்.

கர்மம் விஷயத்தில் சுபாவம் கட்டுப்படுவது மிகக் கடினம்.

கடினமான காரியத்தை அருள் சமாளிக்கும்.

அருளை அழைத்து கர்மத்தைக் கரைக்கலாம். நாம் அதில் தலையிடக் கூடாது.

85. முடிவைத் தெளிவாக எடு - 1 வாரம்.

முடிவெடுக்க முடியாதவரை முக்கியமான நேரத்தில் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். chit fundஇல் சேரலாமா, வேண்டாமா என்பது சிறிய விஷயம்.

முடிவு எடுக்க முடியாதவருக்கு அது பாரமாகப் போகும்.

அது நாமேயானால் - நம்மால் முடிவு எடுக்க முடியாமற்போனால் - நமக்கு நிலைமை மிகத்தெளிவாக விளங்கும்.

இரண்டுவரன் வந்தபொழுது மனம் ஊசலாடும்.

இரண்டுவரனிடையே ஊசலாடும் மனம் காபி வேண்டுமா, டீ வேண்டுமா என்றும் அதேபோல் ஊசலாடும். ஊசலாடுவது மனம், ஊசலாட்டுவது விஷயம்எனத் தோன்றும்.

ஆழத்தின் முடிவு மூலத்தின் முடிவு.

இப்படிப்பட்டவர்க்கு தினமும் போராட்டம், எதிலும் போராட்டம்.

ஆயுள் முழுவதும் இவர்கள் அப்படியேயிருப்பார்கள்.

1 வார காலம் இவர்கட்கு நீண்ட காலம். அன்னையை ஏற்று சிறு விஷயத்தில் - காபியா, டீயா - முடிவை ஆட்டங்காணாமல் எடுக்க ஆரம்பித்தால் அன்னை ஆட்டத்தை அகற்றி, மனத்தில் நிம்மதி தருவதைக் காணலாம். அது வெற்றி.அன்னையில்லாமல் இதே வெற்றிபெற ஒரு ஜன்மத்தில் முடியாது. இது என் சுபாவம், இனிமே மாறப்போகிறேனா?' என்பார்கள்.

அன்னையை நம்பினால் 1/2 நிமிஷத்தில் ஆட்டத்தை அகற்றுவார்.

காபி, டீயும் வரனும் சமமாகுமா?'என மனம் கேட்கும். மனம் கேட்டவுடன் பதில் கூறும்வகையில் இரண்டுவரன் வரும். சற்று உள்ளே போய் கூர்ந்து பார்த்தால் முடிவு அதே 1/2 நிமிஷத்தில் எந்த வரன் வேண்டும் எனக் கூறும்.

காபி, டீயும் வரனும் ஒன்று என்று அன்னை காட்டுகிறார்.

இதுவரை நடந்தது அருள்.

இதை 1 வாரம் தொடர்ந்தால் ஊசலாடும் சுபாவம் ஆட்டத்தைக் கைவிடுவது தெரியும். கிடைத்ததைப் பற்றிக்கொண்டால் பலன் உண்டு.

கிடைத்ததுமூலம் அன்னையைப் பற்றிக்கொண்டால் முடிவான பலனுண்டு.

1 வாரத்தில் 50 அல்லது 60 முறை முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும். ஒரே வாரத்தில் நாம் புத்துயிர் பெற்று புது மனிதனாவோம். அன்னையை அறிந்த அன்பர்கள் சில நாட்களில் பெருமாறுதலடைவதைக் கண்டு, பிறர் பேசுவதுண்டு.

விஷயம் சிறியதானாலும் மனம்1/2 நிமிஷம் நிலைத்தால், அன்னை அதன் மூலம் செயல்படுவார். ஆடிக்கொண்டேயுள்ள பலகையில் சித்திரம் வரைய முடியாது.

முடியாத பெரும்பலனை முடிந்த சிறுகாரியம்மூலம்பெற அன்னையின் துணையுண்டு.

சிறு காரியத்தில் பெருநெறி வெளிப்படும்.

86. கடன் பெறுவதைக் கொஞ்ச காலம் நிறுத்தி வை.

கடன் பெறுவதுஎன்பது கடன் தேவைப்படுகிறது என்பதன்று - எவை கிடைக்கும் என்றாலும், அத்தனையையும் முழுக்க அனுபவிக்க வேண்டும் என்ற பேராசை.

ரூ.4000 சம்பளமுள்ளவர்க்கு மாநிலத்தில் பரவிய ஸ்தாபனத் தொடர்பு கிடைத்தவுடன் எத்தனை பேரிடம் அத்தொடர்பால் கடன் பெற முடியுமோ, அத்தனையும் பெற்றார்.

அது 4 இலட்ச ரூபாய். இதற்கு கொள்ளையடிப்பதுஎனப் பெயர்; கடனில்லை. இவரால் கடன் கிடைக்கும்எனத் தெரிந்தால், 1 நாள் சும்மாயிருக்க முடியாது.

1 மணி நேரம் மனம் கட்டுப்படாது.

பணம் தேவை' என்பது சாக்கு. எந்தப் பணமாவது, யாரிடமாவது பெற்று வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை.

அந்த ஆசை 1 நிமிஷம் மனதில் கட்டுப்படாது.

அதைக் கண்டவர், 1 மாதம் கடன் பெறும் பழக்கத்தை நிறுத்தி வைக்க முடியுமானால், அந்த நேரம் அன்னையை இடைவிடாது அழைக்க முடியுமானால்,

  • அவர் தரித்திரம் அதிர்ஷ்டமாகும்.
  • அல்பமாகப் பிறரைக் கேலி செய்பவர்,unhealthy curiosity என்ன விஷயம் எனக் கேட்டுத் துருவி அறிபவர், வாயைக் கட்ட முடியாதவர், தன்பெருமையை வாய் ஓயாது கூறுபவர் போன்றவரால் 1 மணி நேரம் அந்த சுபாவத்தை மனத்தில் கட்டுப்படுத்த முடியாது; செயலை மாதம் தள்ளி வைக்க முடியாது. அது அவசியம்.
  • நாரதரால் கலகத்தை உற்பத்தி செய்யாமலிருக்க முடியுமா?
  • சிலருக்கு நாரதர் ராசியுண்டு. அவர் வந்து போனால் அவர் எதையும் கிளப்பாவிட்டாலும், அங்கு கலகம் பிறக்கும்.

  • நிறுத்திவைப்பது சுபாவத்தை அறிய முற்படுவது.
  • அதன்வழி அன்னை வாழ்வினுள் வர முடியும்.
  • பொதுவாகக் கடன் பெறுவது, பெற்றதைத் திருப்பித் தருபவருக்கு இது பொருந்தாது.
  • வாழ்நாளில் கடன்என வாங்கி நான் திருப்பிக் கொடுத்ததில்லை என்பவர்களையே நான் மனதில் கொண்டு எழுதுகிறேன்.
  • அப்படி ஒருவரால் கொஞ்ச காலம் நிறுத்தி வைக்க முடியும் என்றால், அவர் வாழ்வில் அதன்பின் கடன் வாங்கும் சந்தர்ப்பம் எழாது.
  • தவறான சுபாவம் நல்ல இராசியாகும் முறையிது. அன்பர்கட்கு மட்டும் கிடைக்கும் அரியவரம். வாழ்வில் இந்த வாய்ப்பில்லை.

87. வலிய உதவப் போவதை தள்ளிப்போடு.

பொதுவாகப் பெரும்பாலோர்க்கு அது பிரச்சினையில்லை.

சுயநலமிக்கு இது பிரச்சினையாகாது.

பெருந்தன்மையானவர்க்கும், வீண்பெருமை தேடுபவர்க்கும் இது தவிர்க்க முடியாத பிரச்சினை.

சுயநலமி எப்படிச் சுயநலத்தைக் கருதாமலிருக்க முடியாதோ அதேபோல் பெருந்தன்மை வேறுவகையாகச் செயல்படாது.

உதவுவது வேறு, வலியப் போய் உதவுவது வேறு.

பெருந்தன்மையாக உதவினாலும் தவறாது உதவி பெறுபவரால் தொந்தரவு வரும். உதவி செய்பவர் அதிகாரத்திலிருந்தால், இருக்கும் வரை தொந்தரவு வாராது.

தொந்தரவுஎன எழுந்தால் இப்படிப்பட்டவர்க்கு யார் அதற்கு மூலம்எனப் பார்த்தால் ஒரு காலத்தில் இவரிடம் உதவி பெற்றவராக நிச்சயமாக இருப்பார்.

வீண்பெருமை அடிபடுவது நியாயம்எனத் தோன்றும்.

இருந்தாலும் சட்டம் இருவருக்கும் ஒன்றே.

இவர்கட்குத் தம்மால் உதவ முடியும் என்ற நிலை எழுந்தால் 1 நிமிஷம் தாமதிக்க முடியாது. தள்ளிப்போடுவது இவர்களிடமில்லை.

தள்ளிப்போடுவது சுபாவத்தை மாற்றுவதாகும்.

அதனால் தள்ளிப்போடுவது பலன் தரும்.

தள்ளிப்போட இவர்கள் முயன்றால், தவிர்க்க முயன்றால், இவர்கள் தவிப்பது பார்க்க முடியாது.

தொந்தரவு தருவதைத் தவிர்ப்பது அவசியம்.

தவிர்க்க முயன்று வென்றால் வெல்வது சுபாவத்தை.

சுபாவத்தை வெல்பவர்க்கு அன்னை அருள் அபரிமிதமாக உண்டு.

இப்படிப்பட்ட சுபாவம் உள்ளவர்க்கு இது அரிய, பெரிய பயிற்சி.

உதவினால் வருவது உபத்திரவம்.

வலியப் போய் உதவினால் ஆதாயத்திற்காகச் செய்வதாக நினைத்து ஏற்க மறுப்பார்கள்.

பெற மறுக்கும் கிராக்கி பெரிய கிராக்கி.

எதை அப்படிப் பிறருக்குக் கொடுக்கிறோமோ அது நம்மை விட்டுப் போகும்.

பொருள், பணம், வேலை, உதவி, நன்றி போன்றவை பர்சனாலிட்டி உடையவை.

என்னைத் தகுதியற்றவனிடம் கொடுப்பது தவறு' என அவை கூறும் வகையில் நம்மைவிட்டு அகலும்.

வாழ்நாள் முழுவதும் அது மீண்டும் வாராது.

பொருத்தமான காரியத்தை, அளவோடு, தகுதியுள்ளவர் வேண்டும் பொழுது தரவேண்டும்.

இது விலக்கில்லாத சட்டம்.

88. பிறர் விஷயத்தை அறியும் ஆவலை (curiosity) கைவிடு - 1 மாதம்.

Unhealthy curiosity என்பது ஆங்கிலச் சொல். Prying Paul எனவும்

கூறுவர். இப்படிப்பட்டவர் ஒருவரிருந்தால் ஊர் நாசமாகிவிடும்.

இது என்ன குணம்? எப்படி ஏற்பட்டது?

எவரும் தம்மைச் சேர்க்கவில்லைஎனில் எல்லோருடனும் சேர்ந்து கொள்ள மனிதன் நாடும் உபாயம் இது.

ஒருவரைப் பற்றி முக்கிய விஷயங்களைத் தெரிந்துகொண்டால், அவர் நம் பிடிக்குள் வருவார் என்பது நம்பிக்கை. அதனால் இவர்கள் எல்லா செய்திகளையும் சேகரம் செய்வார்கள்.

முக்கியமான செய்தி கையிலிருந்தால் விஷமம் செய்யத் தோன்றும்.

இது போன்றவரை நிண்டுணி என்று கூறுவார்கள். ஊரார் சேர்ந்து அவரை அடித்துக் கொல்வார்கள்.

கொலை செய்யும் கட்டத்தை ஊர் கடந்துவந்தால், இவர்களுக்கு இடம் கிடைக்கும். இப்படிப்பட்டவர் விஷயம் சேகரம் செய்வதில் மனிதன் இதுவரை கற்ற அதிகபட்ச திறமையிருக்கும். இதுவே தகுதியற்ற மனிதன் மனிதனாக முயலும் பாதை. இதன் சுவடு அனைவரிடமுமிருக்கும். நம்மிடம் தவறாமலிருக்கும்.

 

இது அறவே விலக வேண்டும்.

இது விலகுவதற்கு அடையாளம் இதைப் பிறரிடம் காணும்பொழுது நமக்கு எரிச்சல் வரக்கூடாது. எரிச்சல் வந்தால் நம்மிடம் உள்ளது நம்மை உள்ளே சீண்டுகிறதுஎனப் பொருள்.

எரிச்சல் வாராவிட்டால் ஏன் இந்த குறிப்பிட்ட நபர் இப்படியிருக்கிறார்என யோசிக்க வேண்டும்.

அவருடைய வளர்ப்பு, வாழ்வு எப்படி அவரை இது போலாக்கிற்றுஎனப் புரியும்.

அவருடைய கெட்ட பழக்கம் அவரைப்பொருத்தவரை பழக்கமேதவிர கெட்டதில்லை.

நமக்குக் கெட்டதாகத் தெரிவது அவருக்குக் கெட்டதில்லை.

அவரவருக்கு அவரவர் பழக்கம் சரி; கெட்டதில்லை.

ஆனால் நமக்கு நல்லது, கெட்டதுண்டு.

நாம் பிறரைப் போலில்லாமல் கெட்டதிலிருந்து நல்லவராகி, மீண்டும் அதிலிருந்து விலகி மனிதனாக வேண்டும்.

இந்தக் கோணத்தில் நமது கடந்த வாழ்வைக் கருதவேண்டும்.

இப்பழக்கமுள்ளவர் 1 மாதம் இதைக் கைவிடுவது பலன் தரும்.

அவர் புத்துயிர் பெற்று, புது மனிதனாவார்.

பிறர் விஷயத்தை அறியும் ஆவல் நம் விஷயத்தை அறியும் ஆவலாக மாறும்.

நம் விஷயத்தை அறிவது Self-awareness.

உடலையும், உணர்வையும் அறிந்து மனத்தை அறிய வேண்டும்.

முடிவாக ஆத்மாவை அறிய வேண்டும்.

அதைக் கடந்து ஆத்மா வாழ்வில் வெளிப்படுதல் தெரியும்.

அது புதுவாழ்வு தரும்.

89. பிறருக்கு நல்லது செய்வது ஆனந்தம் தரவேண்டும்.

நல்லது வேறு, பிறருக்கு நல்லது செய்வது வேறு. அதுவும் தெரியாத பிறருக்கு நல்லது என்பது முற்றிலும் வேறு.

பிறருக்கு நல்லது செய்ய நினைத்தால் சாதாரணமாக எழுவது எரிச்சல், கோபம்.

பிறருக்கு நல்லது செய்து, அதன்மூலமாக நமக்குப் பெரிய நல்லது வருகிறதுஎன்றால் பலர் விரும்பிச் செய்வர். சிலருக்கு அதுவும் பிடிக்காது. மற்றவர் "வருவது இப்படித்தான் வரவேண்டுமா?'' என்று அங்கலாய்ப்பார்கள். "அப்படித்தான் வரவேண்டும்என்றால் அது வேண்டாம்'' என்பவரும் உண்டு.

இயல்பாகப் பிறருக்கு நல்லது செய்யத் தோன்ற வேண்டும்.

அதைச் செய்வது மனம் திருப்திப்படுவதாக இருக்க வேண்டும்.

அந்த நிலையில் மனம் இல்லாவிட்டால், அதை அந்த நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.

பிறருக்குச் செய்வது நமக்குச் செய்வது என்பது மூலம்.

பிறருக்குச் செய்வது நமக்கு அதிகமாகச் செய்துகொள்வது.

நமக்கு நாமே சேவை செய்ய சிறந்த வழி பிறருக்கு நல்லது செய்வது.

நல்லதுஎனில் பிறருக்குமட்டும் செய்ய வேண்டும்; நமக்கு நாமே நல்லதைச் செய்யக்கூடாது.

நம் திறமையை நாமே பாராட்டக்கூடாது.

அதைப்போல் நமக்கே நாம் நல்லதைச் செய்துகொள்ளக்கூடாது.

பிறர் என்பது நம் பிரதிபலிப்பு.

பிறர் வேறு, நாம் வேறில்லை.

ஆன்மீகம் அடுத்தவரை நாமாகக் கருத உதவும்.

அதுவே சர்வம் பிரம்மம் எனப்படும்.

நாமே பிரம்மம்.

பிறரும் பிரம்மம்.

பிரம்மத்திற்குச் சேவை செய்ய பிறருக்குச் சேவை செய்யலாம்.

அலிப்பூரில் பகவான் கண்ட நாராயண தரிசனம் அனைத்தும், அனைவரும் பிரம்மம், நாராயணன் என்பதைக் காட்டுகிறது.

அதை மனம் ஏற்றால் பிறருக்கு நல்லது செய்யத் தோன்றும்.

அப்படித் தோன்றுவது சந்தோஷம் தரும்.

சந்தோஷம் ஆனந்தமாக உயரும்.

ஆனந்தம் உணர்வில் வெளிப்படுவது சந்தோஷம்.

நாம் பிறருக்கு நல்லது செய்தால் பிறர் நமக்கு நல்லது செய்வார்கள்.

அது ஆனந்தம் தந்தால் அனைவரும் நமக்கு நல்லது செய்வார்கள்.

பிறர் என்பது நாமே, பிரம்மமே என்பது ஆன்மீகத்திற்கு மட்டும் உரிய ஞானம்.

அதைச் செய்வது ஆன்மீக வாழ்வை ஏற்பது.

90. அளவுக்குமீறிச் சாப்பிடாதே.

Self-control தன்னடக்கம் ஒருவனை மனிதனாக்கும்.

அது இல்லாதவன் அதிகமாகப் பேசுவான், அதிகமாகச் சாப்பிடுவான், அதிக சோம்பேறித்தனமாக இருப்பான். எந்த விஷயத்தில் கட்டுப்பாடு இல்லை என்றாலும் அது lack of control நிர்ணயமற்றவராகும். ஆனால் ஒவ்வொரு விஷயத்திற்கும் வரும் தவறானபலன் அதன் முத்திரையைத் தாங்கிவரும். 22 தோசை சாப்பிடுவது பசிக்கன்று; ருசிக்கும் அல்ல; வயிறு கனப்பது தரும் சந்தோஷத்திற்காக. பசி அடங்கியபிறகு ருசிக்கு சாப்பிடுவது சரியில்லை; ஆனால் சாப்பிடுவதுண்டு; அது புலன் உணர்வு (for the delight of senses). வயிறு கனப்பது ருசிக்கிறது, திருப்தியாக இருக்கிறதுஎனில், அது உடல்உணர்வு. மனிதன் உணர்வுமற்ற மரக்கட்டை (physical hulk) என்றாகும். அப்படி சாப்பிடுபவனுக்குப் பொதுவாக அதிர்ஷ்டமிருந்தால் நிலைமை மாறி சாப்பிட முடியாமற்போகும். அது நல்ல திருப்பம். அவன் துர்அதிர்ஷ்டசாயானால் ஆயுள் முழுவதும் வசதியாக, அளவுகடந்து சாப்பிடும் நிலைமை ஏற்படும். மனிதன் இதை துர்அதிர்ஷ்டம்என அறியாமல் விரும்புவான். சாப்பிட முடியாத நிலை பல வகைகளில் வரும்:

  • சாப்பிட முடியாத ஒரு வியாதி வரும்.
  • சாப்பாடு போடாத மனைவி வருவாள்.
  • அதிகமாகச் சாப்பிட்டால் கேலி செய்யும் சந்தர்ப்பம் நிலையாக வரும்.
  • பிடித்தமான சாப்பாடு கிடைக்காது. எப்படி வந்தாலும் இது ஆத்மாவுக்குரிய அதிர்ஷ்டம்.
  • அளவு மீறிச் சாப்பிடுவது வாய்விட்டுப் படிப்பதைப்போல அநாகரீகமான செயல். வாய்விட்டுப் படிப்பவன் புரியாது மனப்பாடம் செய்வான்; மடமை வளரும். அளவுமீறி சாப்பிட்டால் உடல் பெருக்கும், உணர்ச்சி மந்தமாகும், ஆத்மா இருளடையும், பர்சனாலிட்டி (coarse) மட்டமாகும்.
  • அளவுக்குமீறிச் சாப்பிட்டுப் பெருத்தால் (obese) அதற்குரிய வியாதிகள் வரும்.
  • அளவுக்குமீறிச் சாப்பிடுபவர் பொதுவாக மந்தபுத்தியுடையவராக இருப்பார்கள்.

  • சைத்தியப்புருஷனை அவர்கள் நினைக்கவே முடியாது.
  • ஆத்மாவே அவர்கட்கு நினைவு வாராது. இடைவிடாமல் சாப்பாடு, குழம்பு, இனிப்பு, பாயசம், வடை, அப்பளம், பிரியாணி மனத்தை நிரப்பும்.
  • அவர்கள் இரண்டுகால் பிராணியாக இருப்பார்களேதவிர மனிதகுலத்து உறுப்பினர்களாக இருக்கமாட்டார்கள்.
  • பெருந்தீனி' என்பது வழக்கு.

91. பொங்கிவரும் சந்தோஷம் இயல்பாக வேண்டும்.

சாதாரண மனிதன் நிலை சந்தோஷமில்லாத நிலை.

பலருக்கு விரக்தியிருக்கும். சிலருக்கு எதுவுமிருக்காது.

சந்தோஷத்தை உற்பத்திசெய்ய முயன்றால் விரக்தியோ, எரிச்சலோ வளரும்.

எரிச்சல் உள்ளவர் எரிச்சலைப் போக்க ஆயுள் போதாது; சமர்ப்பணம் செய்யும்.

Supreme ecstasy உச்சக்கட்ட பூரிப்பு வந்தால் அது 3 நிமிஷமிருக்கும். அத்துடன் மீதி நாள் முழுவதும் அதற்கெதிரான வலி, எரிச்சல், விரக்தி இருக்கும் என்கிறார் அன்னை. அந்த நிலையிலிருந்து தானே சந்தோஷம் உள்ளிருந்து எழ நாம் செய்யக்கூடியது ஒன்றில்லை. அது தானே வர வேண்டும். 40 வயதிற்குமேல் நாய்க்குணம் என்பது மனிதகுலத்தின் நீண்டநாள் அனுபவம். அன்னை, சமர்ப்பணம், அருள், சரணாகதி, சேவை, பேரருள், காணிக்கை ஆகியவையுள்ள அன்பர் தாம் செய்யக்கூடியவற்றையெல்லாம் செய்யும் முன் பொதுவாக மனம் சந்தோஷமாக இருப்பதைக் காணலாம். இது அன்பர்க்கு மட்டும் உரிய அரிய வாய்ப்பு. அன்னையை அறிவதால் இதைப் பயிற்சியாலும், பக்குவத்தாலும், பவித்திரத்தாலும் பொங்கிவரும் சந்தோஷமாக மாற்றலாம். ஒரு சிலருக்கு சந்தோஷம் பொங்கிவந்தால் அவருலகம் முழுவதும்

வருத்தத்திலாழ்ந்துவிடும். அது அவர் இராசி, அவர் கொண்ட இலட்சியம். எவரும் சந்தோஷப்படக்கூடாது என்ற கொள்கையுடையவர்.

வேறு சிலருக்கு சந்தோஷம் பொங்கிவந்தால் அவருடன் உள்ள அனைவரும் அதையே உணர்வர்.

நாமுள்ள நிலைமைக்கும் சந்தோஷம் பொங்கிவரும் நிலைக்கும் உள்ள தூரம் சாதாரண மனிதனுக்கும், ஜனாதிபதிக்கும் உள்ள தூரம்.

சமர்ப்பணம், அதுவும் தொடர்ந்த சமர்ப்பணம், அதையும் செய்யும்.

அது பலித்தபின் அது இயல்பாக வேண்டும்என்பது அடுத்த உயர்ந்த கட்டம்.

ஒருவர் ஜனாதிபதியாகலாம். அவரே வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்க முடியுமா?

அதுபோன்ற சாதனை சந்தோஷம் இயல்பாக இருக்க வேண்டும்என்பது.

நம் ஜீவனின் ஆழம் இருண்டது. அதற்குச் சந்தோஷம் ஒத்துவாராது.

நமக்கு சந்தோஷம் எழுந்தால், ஆழம் எதிர்க்கும், எதிரானவற்றைச் செய்யும்.

இயல்பாக சந்தோஷமாக இருக்க இயல்பாக ஆழ்ந்தமனம் நல்லதாக, ஒளிமயமானதாக இருக்க வேண்டும்.

அது திருவுருமாற்றம்.

நாம் அதை நோக்கிப் போகலாம்.

அதை இலட்சியமாகக் கொள்ளலாம்.

அவ்வளவு உயர்ந்த நிலையை இலட்சியமாகப் பெறுவதும் பாக்கியம்.

இலட்சியமாக மனம் ஏற்று, அதில் சிறு துளி பலிப்பதும் பெரியது.

சாதாரணக் குடிமகன் மத்திய மந்திரி சபையில் ஒரு கூட்டத்திற்கு

விசேஷ அழைப்பாளராக வந்தது போன்ற நிலை அது.

92. கோள் சொல்லக்கூடாது.

 

ஆபீஸ் வாழ்வில், அரசியல் தலைமையில், பெரிய குடும்பத்தில் கோள் சொல்வது பரம்பரையான பழக்கம்.

தலைவர் கோள் சொல்வதை கேட்டுக்கொள்ளமாட்டார் என்பது அரிது.

அது சமயம் அவருக்குச் செய்தியைத் திரித்து அனுப்ப முயலும் திறமை மனிதத் திறமைகளில் (negative) பெரியது.

கீழிருந்து செய்தி வாராமல் பெரிய நிர்வாகம் செய்ய முடியாது.

அது கோள் சொல்வதை வளர்க்கும்.

இந்த இரண்டு நிலைமைகளையும் பாஸிட்டிவ்வாக சமாளிக்க, நிர்வாகத்தின் பெரிய நேர்மையான தலைமைக்குப் பொருத்தமான வழிகள் உள்ளன.

அன்னையை மட்டும் நம்பினால், கோள் நம்மிடம் வாராது.

சிறுவர் கோள்என அறியாமல் செய்திகளைக் கூறுவர். வயதானபின்னும் விதரணையற்றவர் எதைச் சொல்வதுஎனத் தெரியாமற்பேசுவர்.

கோள் சொல்வதில் ஆதாயம் தேடுபவர், கோள் சொல்வதில் பிரியமுள்ளவர், நான் இங்கு எடுத்துக்கொள்வது.

நாம் சொல்லியது நமக்கே அன்னையில் உடனடியாகப் பலிக்கும் என்பதை இவர்கள் பார்த்தால் பயந்துவிடுவார்கள். அது தெரியாதது மடமை. கோள்என்பது இல்லாத சௌகர்யத்தைப் பொய் சொல்லிப் பெற முயலும் பழக்கம் - அது தவறு, அல்பம், அசிங்கம் என உணர்வது அன்பராவது. "இந்தச் செய்தி மேலே போகக்கூடாது'' என்று நினைப்பவர் ஆபீசில் வேலைக்கு லாயக்கற்றவர்; குடும்பம் அவருக்கு ஒத்து வாராது. அது அநாகரீகம்என்று அறியாதவர் மனம் மாற வேண்டும். இதையே தொழிலாக உள்ளவர், செய்தி சேகரம் செய்பவர் மனநிலை கூலிக்காரன் மனநிலைக்குத் தாழ்ந்தது.

அத்தனை பேரும் அப்படித்தானேயிருக்கிறார்கள்என நினைப்பது நல்லதன்று. அதிலும் சற்று யோசனை செய்தால், நாம் அவர்களைவிட மட்டமாக இருப்போம்.

  • கோள் சொல்ல முடியாதவன் மனிதன்.
  • பிறர் சொல்லும் கோளைக் கேட்க மறுப்பவன் உத்தமன்.
  • எவரும் அதுபோல் மாறமுடியும்.

  • மாற விரும்புபவர்க்கு அன்னை அமுதசுரபி.
  • மாறவேண்டாம்என நினைப்பவரிடம் நமக்குப் பேச்சில்லை.
  • நமக்கு நாம் மட்டும் பிரச்சினை, பிறரல்லர்.
  • குறைந்தபட்சம் கோள் எப்படி நம்மைப் பாதிக்கிறதுஎன அறிந்து, அத்தவற்றிருந்து விலகுவது முறை.
  • கோள் சொல்பவருக்கு அடையாளம்: பிறர் கோள் சொல்வதாக நினைப்பார்கள், பேசுவார்கள்.

93. காணிக்கை

காணிக்கை நம் பரம்பரையில் சிகரமானது.

நடைமுறையில் எதுவும் முடியாதவர்க்குரிய எளிய முறை.

அரெஸ்ட் வாரண்ட்டிலிருந்து தப்பியபின் காணிக்கையை "நீங்களே கொடுங்கள்''என தப்ப உதவியவருக்குச் சொல்லியது ஒரு பெரிய ஆத்மா.

$10 காணிக்கை கொடுக்க மறுத்து $30 மில்லியன், ரூ.800 கோடி திட்டத்தை இழந்தவர் ஓர் அமெரிக்கர்.

பலன் வரும்வரை காணிக்கையின் அவசியத்தைப் பேசியவர், பலன் வந்தபின் "அவ்வளவு பெரிய மனம் எனக்கில்லை'' என்றார்.

Water Diviner போர் முதலியாராவது வீராப்பாகப் பேசியபின் நடைமுறையைக் கண்டு இரண்டு மாத வருமானத்தைக் காணிக்கையாகக் கொடுத்து முழுப்பலன் பெற்றார். சாதுர்யமாகக் காணிக்கையிலிருந்து தப்ப முயல்வது அன்னை வேண்டாம் என்பது. அன்னையின் அருள் எவர்மூலமாக வருகிறதோ அவரை மனத்திலிருந்தும், செயலிலிருந்தும், தம் வாழ்விலிருந்தும் விலக்க எண்ணி காணிக்கையைப் பெரிய அளவில் வேறொருவர் மூலம் கொடுக்க முயன்ற அன்பர் காணிக்கை, வீட்டில் பூகம்பம் எழுப்புவதைக் கண்டார். உரியவரை விலக்கினால் அதற்கெதிரான hostile force தீயசக்தி வரும் என்பது சட்டம்; ஒருவருக்குப் பேய் மனைவியாக வந்தது; அடுத்தவருக்கு அன்னைமூலம் வந்த அத்தனையும் அழிந்தது; உயிரையும் மாய்த்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

  • அன்னையை அருளாக நினைத்தால் பேரருளாவார்.
  • அன்னையை ஆதாயமாக நினைத்தால் ஆதாயம் வரும்; அன்னை விலகுவார். முடிவில் ஆதாயம் விலகும்; முடிவாக ஆதாயம் நஷ்டமாகும்.
  • அன்னையின் இரகஸ்யம் மனத்தின் உண்மையிலும், அடக்கத்திலும் இருக்கிறது.
  • அடுத்தவரை அண்டி வாழவும் தகுதியற்றவர், அவர்தம் ஆதிக்கத்திற்குட்பட வேண்டும் என்ற கனவு கண்டால், கனவு தலைகீழே தவறாது பலிக்கும்.
  • காணிக்கை எளிய முறை; பவித்ரமானது.
  • பவித்ரமான மனத்துடன் காணிக்கை செலுத்துவது சரி.
  • குள்ளநரி உள்ளம் பள்ளம் பறிக்கும்.
  • அன்னை வாழ்வுமூலம் செயல்படுவார்.
  • அன்னையிடம் நம் தில்லுமுல்லுகளைக் காண்பித்தால் அன்னை நம்மை வாழ்விடம் ஒப்படைத்துவிடுவார்.
  • வாழ்வு தரும் தண்டனை வாள்வீச்சுப்போலாகும்.
  • அன்னை தம்அருளைப் பேரருளாக்கி அவர் பிரசாதத்தை நமக்கு அளிக்கும்பொழுது அவர் அஞ்ஞானத்திற்கு அளிக்கும் காணிக்கை விளங்கும். அது அதிஅற்புதம்.

94. முழுமையான திருவுருமாற்றம்.

முழுப்பொய்க்கு உலகில் போக்கிடமில்லை.

ஆண்டவனும் உள்ளே நுழைய முடியாது.

அதற்கும் திருவுருமாற்றம் உண்டு.

மாறுவது அதன் பங்கு - மாற்றுவது இறைவன்.

 

மாற முடிவு செய்துவிட்டால்

அது எவரும் எட்ட முடியாத முழு மெய்யாகும்.

இதை, கிராமத்தில் கண்டோம்.

பணம் 100% தேதியோடு வந்துவிட்டது.

ஒருவர்கூட பணத்தை பாங்க்கில் கட்டாமல் வீடு சேரவில்லை.

அவர்களுடைய பொய் organised falsehood.

பொய்யை வாழும் கருவியாகப் பயன்படுத்தினான்.

மூட்டை கம்பு 20 ரூபாய். 4 மூட்டை பெரிய விளைச்சல் 100 ரூபாய் அதிக மகசூல். ரூ.100 என்பது 11/2 இலட்சமாயிற்று. 1500 மடங்கு உயர்ந்தது.

எவ்வளவுக்கு எவ்வளவு பொய்யாக இருக்கிறதோ, அது மாறினால் அவ்வளவுக்கு அவ்வளவு பெருகும்.

10,000 ரூபாய் 2,40,000 ரூபாய் ஆனதை, 2000 ரூபாய் அப்படி மாற்றியது எனலாம். 2000 ரூபாய் 11 இலட்சமாயிற்று, 550 மடங்கு.

அதையே 0' ரூபாய் 11 இலட்சம் ரூபாய் என்றால் 11 இலட்ச மடங்கு வளர்ந்தது எனலாம். இது கெட்ட எண்ணம் நல்ல எண்ணத்தின் சேவையால் பெற்றது.

உண்மை என்பது  infinity மடங்கு வளரும். நம் வாழ்வில் infinityயைப் பார்க்க முடிவதில்லை.

எது முக்கியம்?

மாறுவது முக்கியம்.

மாற எடுக்கும் முடிவு முக்கியம்.

ஏன் இந்தப் பெருக்கம்?

This is a Joy Brahman seeks.

This Joy is not there even in heavens now..

Therefore this infinite expansion..

பொய் பெற்ற வாய்ப்பு மெய்க்கில்லை.

பொய் மனம் ஒடிய வேண்டாம்.

இல்லையென்பது இங்கில்லை.

எவரும் வெறும் கையோடு போகவேண்டாம்.

I classம், II classம், ரயிலில் ஒரே வேகமாகப் போகும்.

Equality உண்டு, சுதந்திரம் உண்டு.

நாம் விரும்பி, அறிந்து, முனைந்து, பணிந்து ஏற்க வேண்டும்.

பொய்யும் மெய்யாகும் யோகம் பூரணயோகம்.

95. பொறுக்க முடிந்தது, பொறுக்க முடியாதது, நினைக்கவே பயமானது.

முடிந்ததை 1 மணியும், முடியாததை 1 நிமிஷமும், நினைக்கவே பயமானதை க்ஷணமும் ஏற்றால் இந்த 100 பயிற்சிகளில் பலன் பவித்திரமாகக் கிடைக்கும்.

விளக்கெண்ணெய்,Cod liver oil காட்லிவர் ஆயில், புரியாத புத்தகம், மாமியார் கொடுமை, மருமகள் அட்டகாசம் பொறுக்க முடிந்தவை.

கசப்பின்றி, அறிவால் இவை நம் பிரதிபலிப்புஎன ஏற்று 1 மணி நேரம் கம் சுளிக்காமலிருப்பது பொறுமை.

அதிகாரி பலர் முன்னிலையில் நம்மைத் திட்டுவது, கீழேயுள்ள சிப்பந்தி எதிர்த்துப் பேசுவது, பிறர் உள்ள பொழுது அதிகாரிக்குத் திறமையில்லை எனப் பேசுவது பொறுக்க முடியாதவை. இவையெல்லாம் நாம் இதுவரை பிறருக்குச் செய்தன, மீண்டும் வருகின்றனஎன விளங்கிக்கொண்டு, 1 நிமிஷம் மனம் கசங்காமல், நடக்க வேண்டியது நடக்கிறதுஎன உள்ளே மலர்வது அடுத்த கட்டம்.

பாம்பு உள்ள அறைக்குப் போவது, மகன் ஜெயிலுக்குப் போயிருக்கிறான் எனக் கேள்விப்படுவது, வெளியிலிருந்து உள்ளே வந்தால் தம்பதியுடன் படுக்கையில் வேறொருவரிருப்பது போன்றவை நினைக்கவே முடியாதது. நான் என் கூட்டாளிக்குப் பாம்பாக இருந்தேன், நண்பரிடம் கோபப்பட்டு அவர் மகன் ஜெயிலுக்குப் போக நினைத்தேன், உடந்தையாயிருந்தேன், நடத்தையில் நான் என்தம்பதி போன்றவனேஎன மனம் அறிந்து, உணர்ந்து, ஞானமாக மலர்வது. நாம் மனதால் செய்தது மற்றவர் நமக்குச் செயலாகச் செய்கிறார்என்பது முக்கியம். நம்முடைய பங்கில்லாமல் நமக்கு நல்லதோ, கெட்டதோ வாராது. கர்மத்திற்குக் கட்டுப்பட்டவருக்கு

கடந்தது இல்லாமல் நிகழ்வது இருக்காது. அருளைப் பெறுபவர்க்கு கர்மமோ, கடந்ததோ தேவையில்லை. அருள் தானே, காரணமேயில்லாமல் செயல்படுவது; பிரமேயமில்லாமல் பிரம்மம் செயல்படுவதை அருள் எனவும்; திறமையோ, தகுதியோ, சந்தர்ப்பமோ, அவசியமோ, காரணகாரியமோ இல்லாமல் பெரும்பலனை நம்மேல் திணிப்பது பேரருள்.

  • அருள் செயல்பட கர்மத்தை நம்பக்கூடாது.
  • பேரருள்வர நம் திறமையை நம்பக்கூடாது.

நினைக்க பயமானதை, நம் பங்கினால் மனம் ஏற்றவுடன் பயங்கரமான நிகழ்ச்சி பவித்திரமாக மாறுவதைக் காணலாம். போலீஸ் இன்ஸ்பெக்டர், 4 கான்ஸ்டபிள், விலங்குடன் நாம் வீடு திரும்பக் காத்திருப்பதை அது போல் மனம் ஏற்றால், இந்த நகரின் பாதுகாப்பைக் காப்பாற்றிய விருதை நமக்குச் சின்னமாக - விலங்கை - அளித்து மாலைபோடப்போவது தெரியும்.

96. உலகை தன் மூலம் அறிந்து, அனுபவிப்பது மனித சுபாவம்.

உலகமே தன்னால் மட்டும் நடப்பதாக நினைப்பவருண்டு, பேசுபவருண்டு, நடிப்பவருண்டு. பிரம்மம் எந்த ஜீவனையும் தன் பாணியில் புரிந்து கொள்ளும், தன் சக்தியால் ஆளும், தன்ஆனந்தத்தால் அனுபவிக்கும், இது முடிவான தத்துவம்.

RTO ஆபீஸில் நமக்கு லைசென்ஸ் பெற்று வந்தால், நாம் லைசென்ஸ் பெறும் ஆபீஸ் இதுஎன அறிகிறோம். பாங்க் கடன் கொடுத்தால், பாங்க் கடன் தருமிடம்எனப் புரிகிறது. எனக்கு கடன் கொடுக்காவிட்டால், எவருக்குமே கடன் தாராவிட்டால் பாங்க் இல்லை. அதனால் என்னால்தான் பாங்க் இருக்கிறது. என்னால்தான் RTO ஆபீஸ் இருக்கிறது என்று பேசுபவருண்டு.

பிரம்மம் தன் பாணியில் நம்மை அறிவதை, மனிதன் சுயநலமாக மாற்றி இதுபோல் பேசுகிறான். மனிதன் பேசுவது பிரம்ம பாஷை. பிரம்மம் நம்மை அப்படிப் புரிந்துகொள்வதால், ஆட்சி செய்வதால்,

அனுபவிப்பதால் அது மாறுவதில்லை. பிரம்மத்தின் அனந்தத்தில் இந்த அனுபவம் கரைகிறது.

நாம் பெறும் லைசென்ஸ், கடன் நம்மை மாற்றுகிறது. அதுவே வித்தியாசம்.

கடன் பெறுவதால் நம் நிலை மாறாவிட்டால், லைசென்ஸ் பெறுவதால் நம் நிலை மாறாவிட்டால், நாம் பிரம்மமாவோம்.

நட்பும், உறவும் நம்மை மாற்றுகின்றன.

நட்பு, நட்பாக இருந்து, அதனால் நம்மனம் பாதிக்கப்படவில்லையெனில்; உறவு, சிறப்பான உறவாக இருந்து, உறவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாம் என்றும் போலிருந்தால், சித்திரத்திலலர்ந்த செந்தாமரையாக முகமிருந்தால், நாம் மனத்தால் பிரம்மமாகிவிட்டோம்எனப் பொருள்.

ஒருவரை ஜெயிப்பதால் உயராமல், அவரிடம் தோற்பதால் குறையாமல் இருப்பது பிரம்மத்தின் நிலை.

அந்த பிரம்மம் வாழ்வில் மலரும்பொழுது பிரம்மம் முழுமை பெறுகிறது.

மரம் மலர்வதால் ஆயிரம் விதையுண்டாகி ஆயிரம் மரம் முளைக்க முடியும்.

இது மரம் உடலால் மலர்வது.

மகாத்மா காந்திஜீ இந்த நாட்டில் தூசியான மனிதனை சுதந்திர வீரன் ஆக்கினார் (out of dust he made us into men). அது உயிரால் மலர்வது.

ஒரு சீனுவாச இராமானுஜம் 1000 பேரை அவர்போல மாற்றுவது மனத்தால் மலர்வது.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் நம் ஆன்மாவில் மலர்ந்தால் பக்தன் ஸ்ரீ அரவிந்தராவான்.

அது ஆயிரம் பேரிலும் நடப்பது பிரம்மத்தின்முழுமை மனிதனில் மலர்வது.

அது பூரணபிரம்மம்.

பூரணம் நம்மில் பூரித்தெழுவது நாம் பூரணம் பெறுவது.

அதுவே வளரும் ஆன்மா, சைத்தியப்புருஷன்.

மனிதன் எந்தத் தவற்றைச் செய்தாலும், பாணி பிரம்மத்துடையது. அதனால் உலகில் தீமையில்லை.

97. உயிருக்குயிரானவரை நினைத்தால் உள்ளம் புளகாங்கிதமடைவதுபோல் உயிரை எடுப்பவரை நினைக்கும்பொழுது உள்ளம் புளகாங்கிதமடைய வேண்டும்.

  • இது எப்படி நடக்கும் என்பது கேள்வி.
  • ஆதாயத்திற்காக இதைப் பலரும் செய்கின்றனர். அதை அன்புக்காகச் செய்வதே இம்முறை.
  • வேலையும் போய், மானமும் போய், வருமானமும் போய், மனம் ஒடிந்து விரக்தியின் எல்லைக்கு அனுப்பியவரை மீண்டும் போய் சேர்ந்து கொண்டது ஓர் அனுபவம். இதில் மேலும் விசேஷம் என்னவென்றால் பிரியம் முன்பைவிட இப்பொழுது அதிகமாக இருக்கிறது.
  • ஆதாயம் தேடும்பொழுது வெட்கம், மானம், சொரணையிருக்காது. ஆண்டவனை நாடும்பொழுதும் அவையிருக்கா.
  • பழைய வெறுப்பெல்லாம் நாளாவட்டத்தில் புதிய பிரியமாக மாறுவது அனுபவம்.
  • வெறுப்பானவரிடம் உள்ள ஒரு நல்ல குணத்தை முழுவதும் பாராட்டி புனிதமாக மனம் உணர்ந்தால், அது வளரும்பொழுது படிப்படியாக நிலை மாறும்.
  • பழைய வெறுப்பு நினைவுக்கே வாராது. புதிய மனம் நறுமணமாக இருக்கும்.
  • இம்மாற்றத்தை ஆதாயத்திற்காகச் செய்யாமல் ஆண்டவனை அனுபவிக்கச் செய்யலாம். அதன் தத்துவத்தைப் படிக்கலாம். படித்ததை, நன்றாகப் புரிய முயலவேண்டும். புரிந்தது மனம் ஏற்கவேண்டும். ஏற்றது இனிக்கவேண்டும். இனித்தது தன்னை இழந்து உடலை எட்டிப் புல்லரிப்பது முடிவு.

  • அருணகிரிநாதர், விப்ர நாராயணர் இதுபோன்ற மாற்றம் பெற்றனர்.
  • நமக்கும் இதுபோன்ற அனுபவம் இல்லாமலிருக்காது.
  • அதை எடுத்து யோசனை செய்தால், யோசனை உணர்ச்சியாகும்.
  • எதிரியுடன் சேர்ந்தால் எப்பொழுதும் ஆபத்து.

ஆபத்திலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். மனம்மாற, சம்மதிப்பது முக்கியம். சம்மதித்தால், பிறகு மாறுவது கடினமில்லை. மாறக்கூடாது என்ற முடிவுள்ளவருக்கு இது பயன்படாது.

  • பிரான்சில் மனைவியுடனும், மனைவியின் காதலனுடனும் ஒரே வீட்டில் இருப்பார்கள்.

அப்படிப்பட்ட வீட்டிற்கு பிரெஞ்சு மொழியில் சொல் உண்டு. அதேபோல் கணவனுடனும், அவன் காதலியுடனும் வாழ்கிறார்கள். அதிகபட்ச சொரணையுள்ள இடத்தில் மனிதன் மாறியதற்கு இது அடையாளம். அரசியல் இந்த அனுபவம் உண்டு. இது ஆண்டவனுக்குரிய மனநிலை.

 

98. The sunlit path is always open to us, எந்த நேரமும் முழுச்சந்தோஷம் உண்டு.

சிறுகுழந்தையின் கள்ளமற்ற உள்ளம் மலர்ந்த புன்னகையுடையது.

வேண்டியவர் விஷயத்தில் நாம் இனிமையாக இருக்கிறோம்.

பிறர் கோணத்தில் நாம் அடுத்தவரைக் கண்டால் அனைவரும் வேண்டியவரே.

அன்னைமூலமாகக் கண்டால் அனைவரும் இதமானவரே.

நம்மை விட்டகன்றால், வேண்டாதவர் இருக்கமாட்டார்.

நிகழ்ச்சிகள் இருண்டும், பொருள்கள் தடையாகவுமுள்ளன.

நிகழ்ச்சியின் ஒளியைத் தொட்டு, அதன்மூலம் உலகை நோக்கினால் உலகம் இருளாகத் தோன்றாது; ஒளிமயமாக இருக்கும்.

ஜடமான பொருளின் ஒளி, உலகை விஸ்வரூப தரிசனமாகக் காட்டும்.

மடையன் எப்படி ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்கிறான்என்பது, நமக்கு மடையனின் ஒளியை எட்டுவதாகும்.

திருடனின் நோக்கம் திருவுருமாற்றத்திற்குரிய நோக்கம்.

மடையனிலும், திருடனிலும், விபசாரியிலும் அன்னையின் நோக்கம் பரிணாம இலட்சியம்.

எதிரி நம் வாழ்வை சிறப்பாக்கும் கருவிஎன்று உணர்ந்தால், நமக்கு எதிரியில்லை.

சிறுகுழந்தைக்கு எதிரியில்லை.

மனம் எந்த வயதிலும் சிறுகுழந்தையாக இருக்க முடியும்.

அன்னையின் இலட்சியம் புரிந்தால், அனைவர் முகமும் நம்மை நோக்கி மலரும்.

சிருஷ்டியைப் பரிணாமமாக்குவது அன்னை இலட்சியம்.

ஆயிரம் ஆண்டை 1/2 நிமிஷமாக்குவது இறைவன் வரும் தருணம்.

அன்றாட வாழ்வில் 7 அஞ்ஞானத்தைக் கைவிட முயன்றால் sunlit path  ஒளிமயமான பாதை தெரியும்.

கெட்டது போய், நல்லது வந்து, நல்லது போய் வாழ்வு எழுந்து, வாழ்வு தெய்வீக வாழ்வாவது ஒளிமயமான பாதை.

எந்த நேரமும் ஓர் அடி அப்பாதையை நோக்கி எடுத்து வைக்க முடியும்.

Sunlit pathஅப்பாதை நெடியது. நமக்குரிய இடத்தில் நாம் சேரலாம்.

Non-reaction,no intiation எரிச்சல்படாமல், எதுவும் செய்ய முயலாமல் இருப்பது அவ்வழி.

99. ஆபத்து - அரிய வாய்ப்பு.

அன்பர்கள் வாழ்வில் ஆபத்தின் சுவடு தானேஎழுந்ததாக 50 ஆண்டில் நான் கண்டதில்லை. அது அடிக்கடி வருவதைப் பிறர் வாழ்விலும், என் சொந்த அனுபவத்திலும் நான் அதிகமாகக் கண்டுள்ளேன்.

அரிய வாய்ப்புகள் வாராதவரேயில்லை; பெற்றவர் எவரும் இல்லை.

அரிய வாய்ப்புகள், பெரிய வாய்ப்புகள், நல்ல வாய்ப்புகள், இனிய வாய்ப்புகளை அன்பர்கள் அறிவதில்லை; பெறுவதில்லை; தெரிந்து கொள்வதில்லை. மிகச்சிறிய வாய்ப்புகளையே அன்பர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இதுவே என் அனுபவம். ஆபத்தின் சுவடுகள், ஆபத்தின் சூழல், சிறிய விபத்து, பெரியவை வந்ததேயில்லை. ஒரே ஒரு முறையும் அவை அன்பர்கள் வாழ்விலோ, என் வாழ்விலோ வந்ததில்லை. ஏன் அவை வருகின்றன?

அவை வருமுன் பல நாட்களுக்குமுன் எழும் அறிகுறிகளை நாம் பொருட்படுத்துவதில்லை. ஏன் அவ்வறிகுறிகள் எழுகின்றன? காரணம்

இரண்டு வகை. உயர்ந்த வாழ்வுக்கு எதிரான குணம், செயல், attitude ,நோக்கம், initiative, நாமே விரும்பிச் செய்வது போன்றவற்றை நம்மால் விடமுடிவதில்லை. நாம் அவற்றை அறவே விட்டபின் அதுபோன்ற உறவு, நட்பை விடமுடிவதில்லை. இந்த நிலையிலும் முன்கூட்டி எழும் எச்சரிக்கைகளைக் கவனித்தால், அவற்றை விலக்கலாம். ஏதோ ஒரு நேரம் விழித்துக்கொள்பவருண்டு. அவர் செய்யக்கூடியது என்ன? அப்படி விழித்த நேரம் வேண்டாத குணத்தை, வேண்டாத உறவை மனத்திலிருந்து எடுத்துவிட்டு அன்னையை அழைத்தால், அழைக்க முடியவில்லைஎனத் தெரியும். வாயால் சொல்வதை - அவற்றை விடுவதை - மனத்தால் ஏற்காமல் அழைத்தால் அழைப்பு எழாது. மனம் தெளிவாக எரிச்சல், அல்பமான செயல்கள், அதிகாரம் செய்வது போன்றவற்றை விட முடிவுசெய்தது உண்மையானால் அழைக்க முடியும். அழைப்பு 1/2 மணியிலும் பலன் தரும், 2 நாளிலும் தரும். மனம் அவற்றிலிருந்து விலகியதன் உண்மையைப்பொருத்து நேரம் தேவைப்படும்.

பலனில்லை என்பதேயில்லை.

நேரம் நம்மைப்பொருத்தது.

மேற்சொன்ன சந்தர்ப்பங்களை எங்கள் குடும்பத்தில்' ஒரு 50 அல்லது 100 முறை வீட்டு நிலைமையில் பொருத்தி விளக்கியுள்ளேன். இரண்டாம் பாகத்தில் அப்படிப்பட்ட ஒவ்வொரு வரியையும் எடுத்து 1 பக்கத்தில் பலவாறாகவும் விளக்கியுள்ளேன்.

  • ஆபத்து நமக்கில்லை.
  • தொடர்ந்த அரிய வாய்ப்பு நம் பிறப்புரிமை.
  • தீராத பிரச்சினையில்லை, தீர்க்காதவையுண்டு.
  • வாராத வாய்ப்பில்லை, பெறாதவை ஏராளம்.
  • அன்னையை அறிவது பாக்கியம், பெறுவது பேரருள்.

100. முடியாது என உலகம் முடிவு செய்தது முடியும் எனக் கூறும் முறை.

உலகம் நினைத்துப் பார்க்காததைச் சாதிக்கும் யோகம் இது. சத்தியஜீவன் பிறப்பான்; உலகில் தீமையழியும்; காண்பவையெல்லாம் அற்புதமாக இருக்கும் என நினைத்தவரில்லை, பேசியவரில்லை. பூலோகம் சுவர்க்கமாக வேண்டும் என்றவர், மேலே போய் சுவர்க்கத்தை அனைவரும் அனுபவிக்க நினைத்தனர்; நாம் வாழும் இவ்வுலகமே சுவர்க்க லோகமாகும் எனக் கூறவில்லை. அவர்கள் தீமையற்ற உலகை நாம் நாடவேண்டும் என நினைத்தனர். பகவான் தீமை அற்புதமாக மாறும் என்கிறார்.

முடியாதது முடியும் எனில் அதைச் சாதிக்க முடியும் என்பவற்றைக் கைவிட்டு முடியாததை முடிக்க முன்வரவேண்டும்.

சாவித்திரி எமனை வென்றாள். வென்றாள் எனில் எமனை அழித்தாள்.

நாம் நம்மனத்துள் உள்ள இருளை அழிக்கவேண்டும் - அதுவே முறை. மோட்சம் தவசி பெறுவது.

யோகம் உலகம் முழுவதும் திருவுருமாறச் செய்வது.

யோக இலட்சியம் அவ்வளவு பெரியது என்பதால் யோகசக்தி வாழ்வில் பலித்தால் இதுவரை உலகம் உச்சக்கட்டமாகச் சாதித்தது நமக்குப் பலிக்கும்.

  • பலனைக் கருதாது, முறையைக் கருதுவது முறை.
  • முறையைக் கருதாமல் மூலத்தைக் கருதுவது சிறந்தது.
  • மூலத்தையும் மறந்து அன்னை என் சரணாகதியை ஏற்க வேண்டும் என ஜீவன் விழைந்து, பூரித்து, மலர்ந்து சிறப்பது.
  • அன்னை முடிவு, அவரையடைய சரணாகதியே முடிவு; எனக்கென்று எதுவுமில்லை. வெற்றியுமில்லை, தோல்வியுமில்லை.
  • நாம் தேடுவது ஆத்மா இல்லை. உடலும், வாழ்விலும், மனத்திலும் தோன்றி, மலர்ந்து, பூக்கும் ஆத்மா - சைத்தியப்புருஷன்.
  • நாம் நம்மை மறந்த பிரம்மம் என நினைவுகூர்ந்து, மறந்ததை மீண்டும் அடைவது பரிணாமம்.
  • பிரம்மத்திலெழுந்த சிருஷ்டி பரிணாமம் மூலம் பிரம்மத்தையடைய வேண்டும்.
  • பிரம்மம் அது தேடும் ஆனந்தத்தை நம் வாழ்வில் நாம் காண்பது நம் யோகவாழ்வாகும்.
  • யோகமே வாழ்வு; வாழ்வே யோகம்.

இம்முறை யோகவாழ்க்கையாகும்.

************************



book | by Dr. Radut