Skip to Content

பகுதி 4

  1. ஜடப்பொருளைவிடப் பொருள் (substance) திண்மை வாய்ந்தது, வாழ்வு பாராமுகமாக இருக்க முடிவதில்லை, ஆகியவை சத்தியஜீவியம் செயல்படுவதன் அறிகுறிகள். சாந்தி பொன்னிறம் பெற்றதும், நிர்வாணம் தனித் தன்மை பெற்றதும் அது போன்றதேயாகும்.

சத்தியஜீவியத்தால் ஜடமும் வாழ்வும், சாந்தியும் மாறின.

சத்தியஜீவியம் இன்று உலகில் இல்லாதது. சத்தியஜீவன் (Supramental being) பிறந்தால் ஓரளவு மனிதனைப்போல் அவனிருந்தாலும், அவன் தாய் வயிற்றில் கருவுற்று மனிதன் பிறப்பதைப்போல் பிறக்கமாட்டான். அவனுடல் உணவை ஜீரணம் செய்யும் உறுப்புகளிருக்கா. ஏனெனில் அவனுடைய சக்தி பிரபஞ்சத்திலிருந்து நேராக, அவனுடலில் பாயும். உணவை அவன் உட்கொள்ளும் தேவையிருக்காது. நம்மைப்போல் அவன் வாயால் பேசிக் கருத்தைத் தெரிவிக்கும் அவசியமிருக்காது. அவன் எண்ணம் தானே அடுத்தவரைப் போய்ச் சேரும். தானே தன்னைப் பூர்த்தி செய்து கொள்ளும். அவனுக்கு நடந்து போகும் தேவையிருக்காது. நினைத்த இடத்திற்கு உடனே மாறுவான் என்பன போன்றவற்றை அன்னை கூறியிருக்கிறார். அவன் ஜீவனாக இருப்பானே தவிர ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கமாட்டான்.

மனத்தின் எண்ணம் சூட்சுமமானது. உணர்வு ஓரளவு சூட்சும மானது. உடல் ஜடமானது. அதனால் செறிவும், திண்மையும் வாய்ந்தது. சத்தியஜீவியம் எப்பொருளால் ஆனது? ஜடத்தைவிடச் செறிவும், திண்மையும் அதிகமான பொருளாலானது என்கிறார் அன்னை. திடப்பொருளன்று, ஆனால் திடப்பொருளைவிடக் கனமானது என்கிறார்.

பகவானுடனிருந்த சாதகர்கள் அவருக்கு எலும்பு முறிந்த பின்னர் அவரைத் தூக்கிவிட வேண்டியிருந்தபொழுது, அவருடல், கை, கால்கள் சாதாரண மனித உடலைவிட மிகவும் கனக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். அவருக்குச் சத்தியஜீவியம் பலித்ததால், அவருடலில் சத்தியஜீவியமிருந்ததால் உடலின் செறிவு, திண்மை, கனம் அதிகரித்தது.

மௌனம் என்பதை யோகத்தை மேற்கொண்டவர் அறிவார்கள். அன்னை பக்தர்கள் பலரும் அறிவார்கள். மௌனம் எல்லா நிலைகளுக்கும் உண்டு. பொதுவாக மௌனம் மனத்திலுள்ளது. உணர்விலும், உடலிலும் மௌனம் வந்து குடிகொள்ளும். அவற்றின்

தன்மை மனத்தின் மௌனத்தைப் போலிருக்காது.' தலைவர் என்றால் முனிசிபாலிட்டித் தலைவர், பஞ்சாயத்துத் தலைவர், குடும்பத் தலைவர், பார்லிமெண்ட் தலைவர், போட்டி பந்தயத் தலைவர் என பலர் உண்டு. தலைவர் என்பது நிலைக்கேற்ப மாறும். அதேபோல் மௌனம் சச்சிதானந்தத்திலிருந்து ஜடம்வரை எல்லா நிலைகளுக்கும் உண்டு. சத்தியஜீவிய மௌனம் ரீங்காரம் செய்யும். சத்தியஜீவிய மௌனம் மனத்தைத் தொட்டால் ரீங்காரம் எழும். சாந்தியைப் பக்தர்கள் அனைவரும் அறிவார்கள். சாந்தியும் எல்லா நிலைகளுக்கும் உண்டு. சத்தியஜீவிய சாந்தி பொன் நிறமானது என்கிறார் அன்னை. ஒளியை (ஜோதி) நாம் அறிவோம். முனிவருடைய ஒளி வெளிரிய நீல நிறமானது. தெய்வலோக ஒளி நீலம். சைத்திய ஒளி (pink) ரோஸ் நிறமானது. உணர்வின் ஒளி வயலட். உடன் ஒளி சிவப்பு. மனத்தின் ஒளி மஞ்சள். சத்தியஜீவிய ஒளி பொன்னொளியாகும்.

Personality,individuality ஆகியவற்றைத் தமிழில் சரியாக மொழிபெயர்ப்பது சிரமம். சுபாவச்சிறப்பு, தனித்தன்மை என்று கூறலாம். சத்தியஜீவியம் வருவதற்கு அடையாளமாக அன்னை கூறியவற்றுள் தனித்தன்மை (nothingness) ஒன்றுமில்லை, நிர்வாணம் என்ற நிலையை அடைந்துள்ளது என்கிறார். அவர் கூறும் அடையாளங்கள்

பொருள் ஜடத்தைவிடச் செறிவாக இருப்பது.

வாழ்வு தன் பாராமுகத்தை இழந்தது.

சாந்தி பொன்னிறம் பெற்றது.

தனித்தன்மை ஒன்றுமில்லை என்றானது.

********

  1. கட்டுக்கடங்காதது கட்டுப்பட்டால் நிறைவேற்படும். சிறிய ஆசைகளை நாடிச் செல்வதை விட்டொழித்தால் நிறைவு தேடி வரும். அடியிலுள்ள துவாரத்தை அடைத்தால், நம் நிலை நிறைகிறது. நிறைவுக்குப் பின் செறிவும், வேகமும் ஏற்படுகின்றன.

சிறியதை விட்டால், பெரியது தேடி வந்து நிறைவு தரும்.

கட்டுக்கடங்காத ஆர்வம் ஏற்பட்டால் சக்தி எழுந்து செயல் பூர்த்தியாகும். அந்நிலையைத் தாண்டி அடுத்த நிலையை எய்த கட்டுக்கடங்காதது கட்டுப்படவேண்டும். சிறுகுழந்தையின் சக்தி கட்டுக்கடங்காதது. சக்தி பொங்கி வழிவதால், குழந்தை விளையாடுகிறது, ஆடுகிறது, ஓடுகிறது. அதனால் அதன் உடல் வளருகிறது. குழந்தைப்பருவம் மாறி, பள்ளியில் சேர்ந்தால் கட்டுக்கடங்காமல் ஆடிய நிலை மாறி, கட்டுப்பட்டு வகுப்பில் உட்கார்ந்து பாடம் படிக்க வேண்டும். கட்டுப்படாவிட்டால் பள்ளியும், பாடமும் இல்லை.

சம்பாதிக்கக் கட்டுக்கடங்காத ஆர்வம் தேவை. சம்பாதித்ததை நிர்வாகம் செய்ய, அனுபவிக்க அதே ஆர்வம் கட்டுப்பட்டு நிதானமாக இருக்கவேண்டும். ஒரு நிலையைத் தாண்டி அடுத்த நிலைக்கு வர வேண்டுமானால், முதல் நிலையால் ஏற்பட்ட ஒழுக்கு நிற்க வேண்டும். அது நின்றால் சக்தியும், தெம்பும் சேரும். சேர்ந்தால் செறிவு ஏற்பட்டு, அடுத்த நிலைக்குரிய வேகம் வரும். விளையாட்டு வீரனாக இருந்தவர், தம் கட்டுக்கடங்காத ஆர்வத்தால் பரிசு பெற்று, அதனால் பெரிய உத்தியோகம் பெற்று, அதற்குரிய நிலையில் திருமணம் செய்து குடும்பம் ஆரம்பித்தபின், அடங்காத விளையாட்டு ஆர்வம் அடங்கி நிதானமான பொறுப்புள்ள திறமையாக வேண்டும். அந்தத் திறமை வேலையில் முன்னேற்றத்தையும், குடும்பத்தில் உயர்வையும் அளிக்கும். மீண்டும் விளையாட்டு ஆர்வம் பழைய நிலையில் தலை தூக்கினால் அது உத்தியோகத்தையும், குடும்பத்தையும் பாதிக்கும். முன்நிலை ஆர்வம் இந்நிலைக்குத் துவாரம் போன்ற ஒழுக்கு. துவாரம் அடைந்து, ஒழுக்கு நிற்கும்வரை அடுத்தநிலை உருவம் பெறாது. உருவம் பெற்ற பின்னரே செறிவு வரும். செறிவு நிறைந்து வேகம் எழும்.

மாணவன், பட்டம் பெற்று, ஆசிரியராகி, பண்டிதனாகி, ஆராய்ச்சியை மேற்கொண்டு, எழுத்தாளனாகி, புதிய கருத்தைத் தன்னுள் எழுப்பும்பொழுதும், ஒவ்வொரு நிலையைத் தாண்டும் பொழுதும், மேற்சொன்ன சட்டம் செயல்படும். வாழ்வில் எல்லா நிலைகளுக்கும் பொதுவான சட்டம் இது. வக்கீல், ஜட்ஜ், உயர்மன்ற நீதிபதி, நீதியை நிலை நிறுத்தும் சிந்தனையாளர் என்ற நிலைகளைக் கடப்பவரும் இச்சட்டத்தை ஒவ்வொரு கட்டத்திலும் காண்பார்.

உடல் உழைப்புத்திறம் பெற்று, உணர்வு செறிந்து வளமாகி, அறிவு நிறைந்து, சிந்தனை சிறந்து, ஆன்மா நிதானத்தால் பக்குவமடைந்து இனிமையாவதும் பல கட்டங்களைத் தாண்டி வருவதாகும். ஒவ்வொரு கட்டத்தைத் தாண்டும்பொழுதும் சட்டம் செயல்படும்.

நெப்போலியன்போல் உயர்ந்து சரிந்தவர், சரிவு எழுமுன் சில்லரைச் செயல், ஆசை, குறை துவாரமாகத் தலை எடுப்பதைக் காணலாம். சாக்ரடீஸ் பழுத்த பழமானபின் அர்த்தமற்ற வேகம் ஒன்று அவரைப்பற்றி உலுக்கியது. ஊரில் உள்ள (Wisemen of Athens) விவேகி எனப் பட்டம் பெற்றவர்களைச் சந்தித்து அவர்களுடைய விவேகம் என்ன என்று கேட்டு, "அப்படியானால், உங்களைவிட நான் அதிக விவேகம் பெற்றவன்'' என்றதால் அத்தனைப் பேரும் சேர்ந்து அவருக்கு மரணதண்டனை அளித்தார்கள். விவேகத்தின் சிகரம் சாக்ரடீஸ். உயர்வின் உச்சியை எட்டியபின், இதுபோன்ற எண்ணம் - துவாரம், ஒழுக்கு, சில்லரைக் குணம், ஆசை - எழுவதுண்டு. எழுந்தால் பெரும்பாலும் அதுவே முடிவு. இரண்டாம் யுத்தத்தை உலகத்திற்காக வென்ற வீரர் சர்ச்சில். யுத்தம் முடிந்தபின், இந்திய சுதந்திரத்தை இனித் தள்ளிப்போட முடியாது என வெள்ளிடை மலையாக உலகம் உணர்ந்தபொழுது பிரதமரான சர்ச்சில், "சாம்ராஜ்யத்தைக் கரைக்க நான் பிரதமராக இல்லை'' என்றார்.

சரித்திரத்தின் போக்கை எதிர்க்கும் சிறுபிள்ளைத்தனம் இது. எலக்ஷனில் தோற்றார்.

ரவீந்திரநாத டாகுரைச் சந்தித்து ஐன்ஸ்டீன் கடவுளைப்பற்றி பேசியபொழுது தாகூர் மனிதனைப்பற்றிப் பேசினார். மனிதனே உங்களுக்கு முக்கியமானால், உங்களைவிட எனக்குப் பக்தி அதிகம் என்றார். கடைசிக் காலத்தில் விவேகானந்தர் பரமஹம்சருக்கு தெய்வாம்சம் இருப்பது உண்மையா எனச் சந்தேகப்பட்டார். உலக மேதைகட்கும் உச்சகட்டத்தில் பழைய நிலையின் குறைகள் ஏதாவது ஒரு வகையாக எழும். அதுவே முடிவு, அது எழுந்தால் அடுத்த கட்டமில்லை. இவை போன பின்னரே அடுத்த கட்டம் எழும்.

********

  1. புலன் வழிச் செல்லும் சக்தியைச் சுத்தம் செய்து ஞானயோகமும், ராஜயோகமும் செயல்படுகின்றன. அப்படிக் குவியும் ஏராளமான சக்தி தூய மனத்தைத், தூய ஆன்மாவை நாடச் செய்கிறது.

பூரணமான தியானநிலை, முழுமையான விழிப்பு, அகந்தை அழிதல், ஆகியவை பூரணயோகத்தின் அடிப்படை. இவையனைத்திற்கும் பூரணம் உண்டு. நமக்கு முன்னுள்ள நிலையில் செயல்படாவிட்டால், விரயம் தவிர்க்கப்படும். இதனால் நாம் உள்ள நிலையில் நிறைவு சேரும். அதுபோல் சேர்ந்த சக்தியைத் தூய்மைப்படுத்தினால் நிறைவு வளம் பெறும். அதற்குச் சமர்ப்பணமும், சரணாகதியும் உதவும். நிறைவு செறிந்து வளம் பெற்றால் அடுத்த நிலையை எய்த (evolve) உதவும். எனவே நிறைவு, வளம், தீவிர ஆர்வம் ஆகியவை பூரணயோகத்தின் பகுதிகள்.

நிறைவு, வளம், தீவிர ஆர்வம் ஆகியவை பூரணயோகத்தின் பகுதிகள்.

பூரணயோகத்தைச் செய்ய பகவான் எந்த முறைகளையும் வகுக்கவில்லை. எல்லா யோகங்களுக்கும் உரிய சட்டங்கள், வழிமுறைகள், நிபந்தனைகள் உண்டு. சரணாகதியே மார்க்கம் என்று சொல்லியதைத் தவிர முறை என எதையும் நிர்ணயிக்கவில்லை. சுதந்திரமே முடிவான சட்டம். அதுவே முடிவின் பூர்த்தி என்கிறார். சுதந்திரம் என்பதே சட்டமானால், முறைகளுக்கு இடமில்லை. மேல் மனத்திலிருந்து, உள்மனம் செல்வது ஒரு பிறவி முழுவதும் தவம் செய்து பெற வேண்டியது. இதை முதற்படியாக எல்லா யோகங்களும் கொள்வதுபோல், பூரணயோகமும் கொள்கிறது. அதற்கும் ஒரு சட்டம் விதிக்கவில்லை. நெறியான செயலை மேற்கொண்டால் உள்மனத்திற்கு எவரும் போகலாம் என்கிறார்.

யோகம் பூரணமானதால், பூரணமான ஜீவனுக்கே இது உரியது. கெட்டது என்பதை வாழ்விலிருந்து விலக்கி, நல்லதை அடைவதும், அதிலிருந்து உயர்ந்து கெட்டதற்கு எதிரான நல்லது என்பதிலிருந்து, கெட்டதேயற்ற நல்லதை அடைவதும், அதற்குரிய நெறியுமே ஜீவனைப் பூரணமாக்கும்.

ஞானயோகமும், ராஜயோகமும், அறிவையும், மனத்தையும் புலன்கருந்து பிரித்துத் தூய்மையான மனத்தை எட்டுகின்றன. தூய்மையான மனம், தூய்மையான ஆன்மாவின் எல்லையிலிருப்பதால், எல்லையைத் தாண்டி அவை இலக்கை எட்டுகின்றன. ஜீவனின் 4 பகுதிகளில் உயர்ந்ததான ஒரு பகுதி ஆன்மா விடுதலையடைந்து மீதி (மனம், உணர்வு, உடல்) இருந்த நிலையிலேயே இருப்பதால், இது பூரண யோகத்திற்கு உதவாது.

பூரணத்தைக் குலைத்த அகந்தையை அழித்து, பிரிந்து நின்ற ஜீவனைப் பிரபஞ்சத்துடன் இணைத்து, ஜீவனின் 4 பகுதிகளும் இருளிலிருந்து விழித்து ஒளியைக் கண்டு, ஜீவனின் எல்லாப் பகுதிகளும் தியானத்தை மேற்கொண்டு உச்சியைத் தொட்டால்,

ஜீவன் பூரணமடைகிறது. பூரண ஜீவன், பூரண விழிப்பால் பூரண தியானத்தை மேற்கொண்டால், பிரபஞ்சத்தின் ஆத்மாவும், பரமாத்மாவும் தரிசனம் தருகிறார்கள். முயன்றுயர்ந்து பெற்ற தரிசனம் நிலைக்க, நிலைத்த ஜீவாத்மா பரமாத்மாவாக, தியானநிலை சற்றும் குறையாமலிருக்க வேண்டும். மனம் சிந்தித்தால், பிராணன் ஆசைப்பட்டால், உடல் தன் பழைய பழக்கங்களை மேற்கொண்டால், பழைய நிலை வரும். சேகரம் செய்த சக்தி விரயமாகும். இதுபோல் சக்தியை விரயமாக்காவிட்டால், சக்தி உச்சகட்டப் பூரண தியான நிலையில் சேர ஆரம்பிக்கும். சக்தி சேர்ந்தாலும் அது தூய்மையாக இருப்பதில்லை. முயன்று அதைத் தூய்மைப்படுத்தினால், செறிவு ஏற்படும். செறிவு நிறைவை அடுத்த கட்டத்தில் தரும்.

பெட்டிக்கடையில் வியாபாரம் அதிகமாவது முதல் நிலை வளர்ச்சி (growth). பெட்டிக்கடை பெரிய கடையாவது அடுத்த நிலை வளர்ச்சி (development). கடை பெரியதானதால் ஊரில் அவர் பெரிய மனிதராவது (evolution) அவர் புதிய உயர்ந்த நிலையை எட்டுகிறார் எனப் பொருள். செறிவு ஜீவனில் நிறைவானால் மனிதஜீவன் கடைசிநிலை வளர்ச்சியை (evolve) அடைந்து, சத்தியஜீவனாகப் பரிணாமவளர்ச்சி பெறுகிறது.

*******

  1. இதுவே மனிதனின் பங்கு. அதை அவன் செய்வதில்லை. செய்ய முன்வந்தால் திணறுகிறான். அன்னை இங்கும் உதவுகிறார். அன்னையை அழைத்தால், அழைப்பில் நிறைவு, வளம், தீவிரம் கலந்துள்ளது. அழைப்பு யோகத்தைத் தன்னுள் அடக்கியது. இது மேலெழுந்து மனத்தில் எழுவது. அகந்தையை மீறி எழ வேண்டியிருப்பதால் முயற்சி தேவைப்படுகிறது. அழைப்பு கனிந்து, உள்ளே ஆழத்திற்குச் சென்று, அங்கிருந்து தானே மெதுவாக எழும். அது முழுமையான அழைப்பு, உயர்ந்த சமர்ப்பணம். அதன் தீவிரத்தால் அது சத்திய ஜீவியமாகிறது. தீவிரம் அதிகமாகும்பொழுது, உள் மனம், சூட்சுமமனம், அடிமனம், ஆழ்ந்தமனம் ஆகியவற்றை அது எட்டுகிறது.

வேறு வகையாகச் சொன்னால், மேலிருந்து, உள்ளே சைத்தியப்புருஷனை நாடிச்சென்று, அங்கிருந்து உயர்ந்து ஆன்மீக மனநிலைகளை எட்டுகிறது. அதையே மனம், உணர்வு, உடல் எனவும் சொல்லலாம். ஒவ்வொரு நிலைக்குரிய ஜீவியம், பொருள் உண்டு. எனவே உடலின் பொருள் (substance) கடைசி நிலையாகும்.

ஒவ்வொரு நிலையிலும் முதல் சிரமம் சற்று அதிகமாகும். அஜெண்டாவில் அன்னை உடலின் ஜீவியத்திலிருந்து உடலின் பொருளைத் தான் அடைந்ததை விவரிக்கின்றார்.

அழைப்பு கனிந்து ஆழம் நாடுவது முழுமையான அழைப்பு.

மனிதன் சத்தியஜீவியத்தை அடையும் மார்க்கம் இது. அவன் இதைப் பின்பற்றுவதில்லை. ஏனெனில் தனக்கு அவசியமானதை அல்லது ஆர்வமானதை அல்லது ஆசைப்பட்டதையே அடையமுயல்கிறான். மனிதனுக்குச் சத்தியஜீவியம் அவசியமோ, ஆர்வமோ, ஆசையோ தரவில்லை. பிறகு, ஏன் மனிதன் இதைச் செய்ய வேண்டும்?

ஆனால் சத்தியஜீவியத்தை அடைவதையே தங்கள் ஒரே குறிக்கோளாகக் கொண்டவர்களும், இதைச் செய்வதில்லை. 1956-இல் சத்தியஜீவியம் பூமிக்கு வந்தபொழுது அதை அன்னை மட்டுமே அறிந்தார். அது தவிர மூன்று பேர் அதைக் கண்டு

கொண்டதாகச் சொல்கிறார். வந்த பிறகும் அதை அடையாளம் காணமுடியவில்லை என்றால் என்ன பொருள்? இன்று ஒருவர் சத்தியஜீவியத்தை நாடினால் அவருக்கு ஏற்கனவே நடந்தவை, இன்று பிறர் செய்வது பொருட்டன்று. அவர் செய்யக்கூடியதை இங்கு சொல்கிறார் பகவான். மனிதன் இதைச் செய்ய முன் வருவதில்லை. ஒருவர் முன் வந்தால் அவருக்கு அது பலிக்கும்.

மூளையின் செயல் மனம். மனம் சூட்சுமமானது, மூளை ஜடமானது. மனம் ஜீவியம், மூளை பொருள் (substance). பிராணன், உணர்வு என்பதிலும் ஜீவியம், பொருள் என இரு பகுதிகளுண்டு. ஆசை, பிரியம், கோபம் போன்ற உணர்வுகள் ஜீவியத்தைச் சேர்ந்தவை. இதற்கு அஸ்திவாரமான (substance) உடன் ஜீவியம், அதற்கஸ்திவாரமான உடலின் பொருள்என இரண்டுண்டு. திருவுருமாற்றத்தில் உடலின் ஜீவியத்தை அன்னை மாற்றியபின், உடலின் பொருளை மாற்ற முயன்றபொழுது சிரமம் பல நூறு மடங்கு அதிகமாயிற்று, வேதனை பொறுக்கமுடியவில்லை, வாய்விட்டு ஒயாமல் அலறவேண்டும் போலிருந்தது என்கிறார். அது அவருக்குப் பின் வெளியான அவர் நூல்களில் எழுதப்பட்டுள்ளது.

*******

  1. சக்தியை விரயம் செய்வது எல்லா நிலைகளுக்கும் உண்டு. உடலுக்கு உணர்வு இருப்பதுபோல் மனத்திற்கு எண்ணமுண்டு. எதிர்பார்க்கும் எண்ணமும், அவசரமும் அதற்குச் சமமானவை. உடல் உணர்வைக் கட்டுப்படுத்த, மனத்தின் பொறுமையின்மையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

அவசரம் அதிக விரயம்.

நாம் விரயத்தை முக்கியமாகக் கருதுகிறோம். இயற்கைக்கு விரயம் என்பதில்லை என்கிறார் அன்னை. மரச்சாமான் செய்பவன்,

ஒரு சாமான் உடைந்துவிட்டால், அல்லது கதவு அளவு பொருத்தமில்லாவிட்டால், அது வீணாகிறது என்கிறான். பேப்பர் கம்பனியில் (sheet making) பேப்பர் சரியாக வாராவிட்டால், அதைச் சுருட்டி (pulp) பேப்பர் குழம்பில் போட்டுவிடுவார்கள். விரயம் என்பதில்லை. களிமண் பானையாக உருவாகாவிட்டால், மீண்டும் களிமண்ணாகிறது. அங்கு விரயமில்லை. இயற்கைக்கு விரயம் என்பதில்லை. பல பொருள்களை, உருவங்களை, நிகழ்ச்சிகளை உற்பத்திசெய்ய இயற்கை முயல்கிறது. உருவானால், உருவமே பலன். உருவாகாவிட்டால் இயற்கையின் சக்தி, சக்தியுடன் சேர்ந்து மீண்டும் முயல்கிறது. விரயமில்லை.

திருச்சியிருந்து கோவைக்குப் போகும்பொழுது, தாமதமானால் வேலை கெட்டுவிடுகிறது. போகின்றவர் ஆபீஸில் வேலை செய்பவரானால், அன்றெடுத்த லீவு விரயமாகிறது. ஆனால் அதே பயணத்தைப் பொழுதுபோக்குக்காக வேலையில்லாதவர் ஏற்றுக்கொண்டால், தாமதமானால், விரயமில்லை. பவானியைப் பார்ப்பதற்குப் பதிலாக ஈரோட்டைப் பார்க்கிறார். எங்கு தாமதமாகிறதோ அதைப் பார்க்கிறார். அதுவும் பொழுதுபோக்கு. வீட்டில் வேலையில்லை என்பதால் அங்கும் நஷ்டமில்லை. அதுபோல் இயற்கை ஆயிரம் வழிகளில், ஆயிரம் நிகழ்ச்சிகளையும், உருவங்களையும், பொருள்களையும், மனிதர்களையும், எண்ணங்களையும், உணர்வுகளையும், தன்னைத் தானே அனுபவிக்க, தன் செயலைத் தான் அனுபவிக்க, தன் முயற்சியைத் தானே ரசிக்க, இரண்டு வயது குழந்தைபோல் துள்ளி விளையாடுவதால், இயற்கைக்கு விரயமில்லை. நாம் இயற்கையின் பகுதி. ஒரு குறிக்கோளை நாடிச் செயல்படுகிறோம். பல சமயம் அதுபோல் எதையும் நாடுவதில்லை. மகன் பட்டம் எடுக்க வேண்டும் எனில், ஒரு வருஷம் பாஸாகாவிட்டால், பட்டம் எடுக்கும் குறிக்கோள் ஒரு வருஷம் தள்ளிப் போகிறது. அந்த ஒரு வருஷம் வீணாயிற்று. பட்டம் எடுப்பது குறிக்கோளில்லை, படிப்பதே இலட்சியம் என்றால் 4

வருஷம் படித்தாலும் அது படிப்பு, 5 வருஷம் படித்தாலும் அது படிப்பு. விரயமில்லை.

நாம் எப்பொழுதும் ஒரு குறிக்கோளைக்(பலனை) கருதி செயல்படுவதால் அது தாமதமானால் விரயம் எனக் கருதுகிறோம். மனம் எண்ணத்தால் செயல்படுகிறது. கண், பார்வையால் செயல்படுகிறது. உடல், உணர்வால் செயல்படுகிறது. உடல், உணர்வு பலன் தர, உணர்வு கட்டுப்பட வேண்டும். கட்டுப்படாவிட்டால் செயலில்லை. செயல் இல்லாவிட்டால் பலன் இல்லை. காலையில் 10 மணிக்குப் பள்ளிக்கூடம் போக வேண்டிய பையன், 9 மணியிலிருந்து குறுக்கிடும் செயல்களைப் புறக்கணித்துப் பள்ளிக்குத் தயாராகி புறப்படுகிறான். அந்த நேரம் குமுதம்'' ' வந்தால் பார்த்துவிட்டு வைத்துவிடுவான். அப்புறம் படிக்கலாம் எனத் தனக்கே சொல்லிக் கொள்வான். அண்ணன் அவனைப் புத்தகத்திற்கு அட்டை போட்டுக் கொடு எனில் சாயந்திரம் போட்டுத் தருகிறேன் என்பான். 9 3/4 மணிக்குக் கிளம்ப வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவனைக் கட்டுப்படுத்துகிறது. குமுதம் படிக்கும் ஆர்வம் கட்டுப்படுகிறது. அதனால் பள்ளிக்குப் போகிறான். பலன் வருகிறது. உணர்வு கட்டுப்பட்டால்தான் பலன். வெளி நிர்ப்பந்தத்திற்கு உணர்வு கட்டுப்படுவதைவிட, உள்ளிருந்து கட்டுப்பாடு எழுமானால், பலன் பதின்மடங்காகும். உடல் உணர்வு கட்டுக்கடங்காதது. பசி அவற்றுள் முக்கியமானது. பயம் உலுக்கும். இனஉணர்வு கட்டுப்பாட்டிலிருக்காது. தூக்கம் நம்மை மீறிவிடும்.

உடலின் உணர்வும், மனத்தின் எண்ணமும் தொடர்புள்ளவை. உடலுக்கு உணர்வு என்பதுபோல் மனத்திற்கு எண்ணம் கருவி. மனம் உயர்ந்த கருவி. மனமே உடலை உற்பத்தி செய்தது. மனத்திற்கு உடல் கட்டுப்பட்டால், பலன் அதிகம். இன்று உடலுக்கு மனம் கட்டுப்பட்டிருப்பதால் பலன் சிறியது. எனவே மனத்தில் எண்ணம் கட்டுப்பட்டால், உடல் உணர்வு கட்டுப்படும்.

எதிர்பார்ப்பதும், அவசரமும் மனத்தின் எண்ணங்கள். அவை கட்டுப்பட்டால் பொறுமையின்மை போய் பொறுமை வரும். மனம் கட்டுப்படும். அதனால் உடலுணர்வு கட்டுப்படும். அபரிமிதமான பலனுண்டு.

********

  1. திறமையான வேலை யோகமாகும் - திறம்பட வேலை செய்தால் செயல் நேரடி ஞானம் பிறக்கும்.

நேரடியான ஞானம் செயல் மறைந்துள்ளது - அறிவைச் சரியாகப் புரிந்துகொண்டால் ஜோதி நேரடி ஞானமாகும். பூரணனுக்குரிய சொல் ஜோதி, நேரடியான ஞானம் ஜோதிமயமானது - புலன்களால் சிதைக்கப்படாத பகுத்தறிவு நேரடியான ஞானமாகிறது. பகுத்தறிவு புலன்கருந்து விடுபட்டால் அதன்மூலம் பூரணத்திறமை பூரண ஞானமாகும். வேதாந்தம் செயலின் நேரடி ஞானத்தையும், பூரணனின் ஞானத்தையும் இணைக்க முயல்கிறது.

நாம் மனிதனை உடல், உணர்வு, அறிவு, ஆன்மா எனப் பிரிக்கிறோம். அவை நான்கும் ஒன்றே, அமைப்புச் சற்று மாறியிருக்கும். மனத்திற்கும், ஆன்மாவுக்கும் சூட்சுமம் அதிகம், உணர்வுக்கும், உடலுக்கும் சூட்சுமம் குறைவு. ஒரே கருத்தை வசனமாகவோ, கவிதையாகவோ சொல்லலாம். வசனம், கவிதை வேறுபட்ட தோற்றங்கள். செய்தி ஒன்றே என்பதுபோல் உடலும் ஆன்மாவும் ஒன்றே, ஒரே பொருளால் ஆனவையே.

சூட்சுமம் குறைந்தால் பார்வை குறைகிறது. அறிவும் தெளிவும் குறைகின்றன. உடலுக்குரிய செயல், அறிவுக்குரிய எண்ணத்தைவிட தெளிவில் குறைந்துள்ளது. செயல் உழைப்பாக இருப்பது முதல் நிலை. உழைப்பு அனுபவத்தால் திறமையாகிறது. திறமை செயலின் தரத்தை உயர்த்துகிறது. தரம் முழுவதும் உயர்ந்த நிலையில் திறமைக்கு ஆன்மாவுக்குள்ள தெளிவு வந்து செயல் யோகமாகிறது. கடமையைச் செய்வதே வழிபாடு என்று அனைவரும் உலகில் சொல்வதின் தத்துவம் இது. ஆன்மாவுக்குள்ள தெளிவு ஞானம். அதை நேரடியாகப் பெறுவது நேரடி ஞானம் (intuition).

கம்பனியில் சூப்பர்வைசர், மானேஜர், தொழிலாளி எனப் பலர் வேலை செய்கின்றனர். முதலாளி  முதல் ஏமாந்து போகிறார். பிறகு ஆராய்ச்சியால், அனுபவத்தால் யார் யார் தம்மை ஏமாற்றுகிறார்கள், எப்படி ஏமாற்றுகிறார்கள் எனக் கண்டுபிடிக்கிறார். அதற்குள் 5 அல்லது 10 வருஷமாகிறது. அதன் பிறகு தொழிலுக்குரிய நேரடி ஞானம் வருகிறது. அதன் பின் புதியவரை நியமிக்குமுன், பார்த்தவுடனே இவன் நாணயமானவன், திறமையற்றவன், சுறுசுறுப்பு, சோம்பேறி என அறிகிறார். 5 அல்லது 10 வருஷத்தில் இதைப் பெறுவதற்குப் பதிலாக 5 அல்லது 10 வாரத்தில் திறமை (skill) பெற்றுத் தரும்.

கம்பனி ஆரம்பித்தவுடன், சூப்பர்வைசரை மெஷினை அமைக்கச் சொல்லிவிட்டு தான் வீட்டிற்குப் போவதற்குப் பதிலாக, மெஷின் வாங்கியவுடன், எப்படி அமைப்பது (install) என்பதைத் திறமையுடன், முழுத் திறமையுடன் முதலாளி  கற்றுக்கொண்டால், அந்த மெஷினை அஸ்திவாரம் போட்டு ஏற்றும்பொழுது யார்யார் திறமைசாலி, யார் சோம்பேறி, யார் ஏமாற்றுபவன் என்று பத்து வருஷத்திற்கு பின் வரும் ஞானம் பத்து நாளில் வரும்.

அதேபோல் மானேஜர்என ஒருவரை நியமித்து ஆபீஸைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதற்குப் பதிலாக, தபால், கணக்கு, பைல், வரி, போன்ற எல்லா ஆபீஸ் வேலைகளையும் முதலாளி தாமே

முதலில் முழுத் திறமையுடன் கற்றுக் கொள்ள ஒரு வாரம் ஆகும். அதற்குப் பயிற்சி (training) எனப் பெயர். பயிற்சி முடிவான திறமையைக் கொடுத்துவிட்டால், ஆபீஸ் நிர்வாகத்தில் ஆரம்பத்திலிருந்தே ஞானம் ஏற்படும். விற்பனை, வெளி விவகாரம் ஆகியவற்றிற்கும் இதுவே உண்மை. குடும்பத்தலைவனுக்கும் கணவனாக இருப்பதற்கும், மனிதனாக இருப்பதற்கும், ஆன்மாவாக இருப்பதற்கும் சட்டம் இதுவே.

பயிற்சி பல துறைகளில் உண்டு. எல்லாத் துறைக்கும் பயிற்சியில்லை. கணக்கெழுத, டைப் அடிக்க, மெஷின் ஓட்டப் பயிற்சியுண்டு. வந்தவருடன் பேச, எவ்வளவு உற்பத்தி செய்வது என்பதற்குப் பயிற்சியில்லை. தேங்கிய சரக்கை விற்கப் பயிற்சியளிக்கும் இடமில்லை. பொய் சொல்லும் மானேஜரைச் சமாளிக்கும் பயிற்சி இதுவரை ஏற்படவில்லை. வீட்டிற்கு வந்தால் எதைச் செய்தாலும் திருப்தியடையாத மனைவியை என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பயிற்சிக்கு எங்கு போவது? பணத்தைக் கண்டால் உடனே ரேஸுக்குப் போகும் கணவனை, அல்லது முகஸ்துதியாகப் பேசுபவருக்கு எடுத்துக்கொடுத்துவிட்டு செலவுக்குச் சிரமப்படும் கணவனை எப்படிச் சமாளிப்பது என மனைவிக்கு யார் பயிற்சியளிக்கப் போகிறார்கள்? வாழ்வு ஒரு பயிற்சிக்கூடம். செயல்கள் அதன் அரங்கம். கவனம் அதன் கருவி, பலன் அளவுகோல். முதலாளி - அல்லது தொழிலாளி, கணவன், மனைவி எவராக இருந்தாலும் - தான் செய்யும் செயல்கள் எதிர்பார்க்கும் பலனைத் தருகிறதா எனக் கூர்ந்து கவனித்தால் தெளிவு உயர்ந்து ஞானம் பிறந்து நேரடி ஞானமாகி, முழுப்பலன் வந்து, செயல் யோகமாகும் என்பது கீதையின் வாக்கு. திறமை உச்சகட்டத்திற்குப் போனால் செயல் யோகமாகிறது என்கிறார் கிருஷ்ண பரமாத்மா.

மனிதன் அறிவுடையவன். அவன் அறிவு புலன்களால் செயல்படுகின்றது. கண்ணால் பார்த்து, காதால் கேட்டு, கையால் தொட்டும், நுகர்ந்தும், ருசித்தும் நாம் புறஉலகை அறிகிறோம். அவை சொல்வதை நூற்றுக்கு நூறு பங்கு நம்பி ஏற்றுக் கொள்கிறோம்.

அறிவை, புலன்கள் அறியாமையாக்குகின்றன. ஒரு பென்சிலைத் தண்ணீர் நிறைந்த டம்ளரில் வைத்தால் அது வளைந்து ஒடிந்து தெரிகிறது. வெய்யில் போனால் கானல்நீர் தெரிகிறது. நாம் கண்ணால் கண்டதை நம்பினால் வாழ்வு கானல் நீராகும். பென்சில் உடைந்துவிட்டது என நம்புவோம். நாம் அதுபோல் நம்புவதில்லை. மற்ற இடங்களில் முழுமையாக நம்புகிறோம்.

காலையிலிருந்து நம்மிடம் பேசுபவர்கள் சொல்வதை எல்லாம் முழுமையாக நம்பினால் மாலையில் பயித்தியம் பிடித்துவிடும். அல்லது மாலையில் மடையன் பட்டம் நிரந்தரமாக வரும். நாம் கேட்பதை அப்படியே நம்பாமல் யோசித்து நம்புகிறோம். புலன்கள் விஷயத்தில் நாம் யோசிக்காமல் முழுமையாக நம்புவதால் அறிவு, அறியாமையாகிறது. புலன்களை ஒதுக்கினால் நாம் செவிடாகக், குருடாக, ஜடமாகிவிடுவோம். நிஷ்டையில் புலன்கள் அவிந்து மனம் கண் உதவியின்றி பார்க்கிறது. காதின் உதவியின்றிக் கேட்கிறது. புலன்களை ஒதுக்கியபின் பொருள்களில் உள்ள ஜோதி நமக்குத் தெரிகிறது. அறியாமை அறிவாகிறது. இருள் விலகி ஜோதி தெரிகிறது. அறிவு ஞானமாகி அதை மனம் நேரிடையாகப் பெறமுடிகிறது. அதுவே நேரடி ஞானம் (intuition). மேலுள்ள இறைவன் பூரண ஞானமுடையவன். செயல் நேரடி ஞானம் புதைந்துள்ளது. அதை விடுவிப்பது வேதாந்த ஞானம். வேதாந்த ஞானம் பெற்றால் செயலின் நேரடி ஞானம் பூரண ஞானமுள்ள பூரணனுடன் இணையும்.

**********

  1. ஜோதிக்கும் ஞானத்திற்கும் உள்ள தொடர்பு, திறமைக்கும் வேலைக்கும் உண்டு.

செயலின் ஞானம் திறமை.

தெய்வலோகம் சிருஷ்டியின் பிரபஞ்சப்பகுதியின் உச்சி. சிருஷ்டியை ஒளியின் பகுதி, இருளின் பகுதி அல்லது அறியாமையின் பாகம், அறிவின் பாகம் எனப் பிரித்தால் கீழ்ப்பகுதியின் உச்சியில் தெய்வலோகம் அமைகிறது. தெய்வங்களும், இந்தக் கணக்குப்படி அறியாமைக்குட்பட்டவைகளேயாகும். இந்த லோகம் காலத்தாலும், அறியாமையாலும், இருளாலும், பகுதிகளாகப் பிரிந்து நிற்பது. மேற்பகுதி ஒளி, அறிவு, அனந்தம், காலம் கடந்த நிலை, ஆனந்தம், சத்தியம் ஆகியவற்றாலானது. மனித அறிவு, உணர்வால் அறிய முடியாதது (superconscient) என்பதாகும் இது. சிறு ஜோதியாக, ஒளியாக வெளிப்பட்டுத் தலை நீட்டுகிறது. கீழ்ப்பகுதியில் தெய்வம், மனிதன், ஜடம் உள்ளன. ஜடம் ( inconscient) இருள் செறிந்து, தன் ஆதியை மீண்டும் நினைவுபடுத்த முடியாத அளவு மறந்து, உணர்வற்று, அசைவற்று, செயலற்று, பிறர் நகர்த்தினால் நகரும் நிலையிலுள்ளது. மனிதன் ஓரளவு தன்னையறியும் நிலையிலிருக்கிறான். அறிய விரும்பினால், மனிதன் தன்னை அறியமுடியும். மனிதன் ஜடமில்லை. அவனுள் இருள் உண்டு. ஆனால் ஜடம்போல் இருள் மட்டுமேயில்லை. தன் பிறப்பிடத்தை அறிய விரும்பினால் அதற்குரிய திறமையுண்டு மனிதனுக்கு. (Destiny of man) மனிதப் பிறவிக்கு விதிக்கப்பட்ட முடிவான நிலை எது? என்ற கேள்வியை Life Divineஇல் எழுப்பி பகவான் பதில் சொல்கிறார்.

ஜோதிமயமான மேற்பகுதியைக் கண்ணால் காண முயன்றால் கண்கூசி இருளாகத் தெரியும். கீழ்ப்பகுதி இருளாலானது. ஒன்றான பிரம்மம் இருகூறாகப் பிரிந்து சிருஷ்டியாக நிற்கிறது. மீண்டும் இவை ஒன்று சேர்வது சிருஷ்டியின் முடிவு. அதைச் செய்ய ஒரு கருவி வேண்டும். சிருஷ்டியிலுள்ள தாவரத்தாலோ, விலங்காலோ அதைச் செய்ய முடியாது. ஏனெனில் அவற்றால் தன்னையறிய முடியாது. தெய்வங்கள் ஒளி நிறைந்தவை. ஆனால் அவை உலகத்தில் மாறுதல் என்பது இல்லை. பிறப்பு, வளர்ப்பு, இறப்பு என்ற சூழல் இல்லை. மாறுதலிருந்தால்தான் வளர்ச்சியுண்டு. உடல் வளர்ந்து இறக்கின்றது.

ஆனால் உடலால் சிருஷ்டியைப் பூர்த்தி செய்ய முடியாது. மனமும் வளருகின்றது. மனம் இரு பிரிவாக இருப்பதால், ஒருமையை அதனால் உண்டு பண்ண முடியாது. ஆன்மாவால் அது முடியும். மனிதனில் ஆன்மா சாட்சிப்புருஷனாய், அசைவற்ற, அழிவற்ற நிலையிலிருப்பதால், முடியும் என்றாலும், செயல்படும் நிலையில்லை. சைத்தியம் ஆன்மா என்பதால் அதனால் முடியும். சைத்தியம் வளரக்கூடியது என்பதால் அதனால் முடியும். தெய்வங்களுக்குச் சைத்தியமில்லை. அதனால் அவற்றால் சிருஷ்டியை ஒன்றாக்க முடியாது. மனிதனால் முடியும், அவனுள் பொதிந்துள்ள சைத்தியப்புருஷன் அதைச் செய்யும்.

வேலையைத் திறமையாகச் செய்தால் திறமை மூலமாக நேரடி ஞானம் ஏற்பட்டு மேற்பகுதியிலுள்ள ஒளியை (ஜோதியை) அதனால் அறிய முடிகிறது. மேற்பகுதி ஜோதியாக வெளிப்பட்டுத் தலை நீட்டுவதை நேரடி ஞானம் கண்டு கொண்டு அத்துடன் கீழ்ப்பகுதியை இணைக்கிறது.

*******

  1. மனம் அழிந்துவிட்டது. பழைய பழக்கம் வந்தால் மனம் மீண்டும் வருகிறது என்கிறார் அன்னை.

நாம் செய்வது நாமுள்ள நிலையை நிர்ணயிக்கும். சிந்தித்தால் மனத்தால் செயல்படுகிறோம். உணர்ந்தால் பிராணன் நம் மையம். சிந்தனை நின்றால், நாம் மனத்தைத் தாண்டுகிறோம். எல்லா வகையான எண்ணங்களும் அழிய வேண்டும். திருஷ்டியுள்பட அழிய வேண்டும்.

மனமும், உணர்வும் தன்னுள் அழிந்துவிட்டன. உடல் மட்டுமேயிருக்கிறது என்று அன்னை கூறுகிறார். மனம் அழிந்தது

என்றால் என்ன? புதிதாகக் கற்றுக் கொள்ளும்பொழுது ஒவ்வொரு செயலையும் நினைத்து நினைத்துச் செய்கிறோம். நெடுநாள் பழக்கமாகிவிட்டால், நம்மையறியாமல் செய்கிறோம் - டைப் செய்தல், சைக்கிள் விடுதல், வயலின் வாசிப்பது, எழுதுவது போன்றவை - என்றால் முதலில் மனம் செய்ததை நாளானபின் உடலே செய்கிறது. உடலே அந்த அறிவைப் பெற்றுவிட்டது. இனி அந்தச் செயலுக்கு மனம் தேவையில்லை. அந்தச் செயலைப் பொறுத்தவரை மனம் அழிந்துவிட்டதாகும். வெளியே போகும்பொழுது கதவைப் பூட்டுகிறோம். புதிய வீட்டில் இதை நினைவாகச் செய்கிறோம். நாளானபின் இயல்பாக - ஆட்டோமேடிக் - கதவைப் பூட்டிவிட்டு ஆபீசுக்குப் போனபின் கதவைப் பூட்டினோமா எனச் சந்தேகம் வருகிறது. மனம் இதை நினைவாகச் செய்யவில்லை என்பதால் நினைத்துப் பார்த்தால் நினைவு வருவதில்லை. இதை அனிச்சைச் (reflex) செயல் என்பார்கள். அந்தச் செயலைப் பொறுத்தவரை நினைவும் மனமும் அழிந்துவிட்டதாகும். எல்லாச் செயல்களையும் உடலே கற்று இயல்பாகச் செய்ய ஆரம்பித்தால் இனி மனத்திற்கு வேலையில்லை. மனம் செய்ததை இனி உடலே செய்கிறது என்ற நிலையில் மனம் கரைய ஆரம்பிக்கிறது. அதுபோல் கரைந்து, மனம் தனக்கு அழிந்துவிட்டது என்கிறார் அன்னை. அடுத்த கட்டத்தில் உணர்வும் அது போன்று அழிந்துவிட்டது என்கிறார். அன்னையின் திருவுடல் மனமாகவும், இதயமாகவும் வளர்ந்து திருவுருமாற்றம் அடைந்துவிட்டது. அந்த நிலைக்குப் போன பின்னும், பழைய பழக்கம் வருகிறது. அது வந்தால் மனம் (அழிந்த மனம்) மீண்டும் எழுகிறது என்கிறார்.

மனத்தின் செயல் எண்ணம். மனம் புரிந்துகொள்ள ஆரம்பித்தால் எண்ணம் எழுகிறது. எண்ணம் அற்றுப் போனபின் மௌனம் நிலைக்கிறது. எண்ணம் அழிவது முனிவர் நிலை. மனம் அழியமுடியும் என்று இதுவரை யோக மரபில் இல்லை. ஞானயோகம் எண்ணத்தைக் கருவியாகப் பயன்படுத்துவது. முழு மனத்தையும் கருவியாகப் பயன்படுத்திய யோகம் ராஜயோகம். ராஜயோகம்

கருவியாகப் பயன்படுத்திய மனத்தை அழிப்பது பூரணயோகம். வளர்ந்து அனுபவப்பட்டபின் இனித் தகப்பனார் உபதேசம் தேவையில்லை என்று பையன் மாறுவதுபோல், உடல் வளர்ந்து இனி மனம் தேவையில்லை என்ற நிலையை எட்டியபின் மனம் அழிகிறது. மனிதனுடைய எண்ணமும், முனிவருடைய எண்ணமற்ற சிந்தனையும், ரிஷியின் திருஷ்டியும் மனத்தின் செயல்களானதால், திருஷ்டியுட்பட அனைத்தும் - புரிந்துகொள்ளும் திறனனைத்தும் - அழிந்தால்தான் மனம் அழியும்.

******

  1. எண்ணத்தை அழித்தால் மனம் அழியும். மனம் அழிந்தால் ஜீவியம் முன் வரும். பரப்பிரம்மத்தை அடைய முயல்பவர் தோற்றம், அதனுள் உறையும் சக்தி ஆகியவற்றைக் கடந்து செல்லவேண்டும். அவற்றின் அடிப்படையான பொருளை (substance) அதன் அமைப்பிலிருந்து (structure) விடுவிக்க வேண்டும். இதை மனம், ஆன்மா மூலம் செய்தால் சிருஷ்டிக்கு முன்னுள்ள பரம்பொருளையடையலாம். சத்தியஜீவியம், ஈஸ்வரன் மூலம் இதையே செய்தால் சிருஷ்டியிலுள்ள பரம்பொருளையடையலாம்.

ஈஸ்வரன் சிருஷ்டியிலுள்ள பரம்பொருள்.

வேலைக்குப் போனால் சம்பாதிக்கலாம் எனில், வேலை செய்ய ஆர்வம் வேண்டும். ஆர்வமிருந்தால் சிறப்பாக வேலை செய்யலாம். ஆர்வமில்லாவிட்டாலும் ஓரளவு செய்யலாம். ஆபீசில் வேலை செய்ய நமக்குத் திறமையுண்டு. இத்திறமையை நமக்களிப்பது நமது மனதின் அமைப்பு mental structure . மனம் 14 ஆண்டுகள் படித்துப் படிப்பைப் பெற்றுள்ளது. அதனால் பேசத் தெரியும். ஒரு பேப்பரைக் கொடுத்தால் படித்துப் பதில் எழுதத் தெரியும். பட்டம் பெற்றிருப்பதால் குறித்த

நேரத்தில் வரும் பழக்கமுண்டு. படிப்பும், குடும்ப அனுபவமுமிருப்பதால், ஆபீசில் நம்மை அனுப்பி ஒரு விசேஷத்தில் கலந்து கொள்ளச் சொன்னால், அங்குபோய் நடப்பவற்றைக் கவனித்துத் திரும்பவந்து நடந்ததைக் கோர்வையாகச் சொல்லத் தெரியும். பணம் கொடுத்தால் சரியாக எண்ணி வாங்க முடியும். வெளியூர் போகச் சொன்னால் ரயில், பஸ்ஸில் பிரயாணம் செய்து, போன ஊரில் ஹோட்டல் தங்கி, சொன்ன விலாசத்தைக் கண்டு, கொடுத்த வேலையைப் பூர்த்தி செய்யத் தெரியும். இவற்றிற்கான திறமை (Skill), பொதுத் திறமை (capacity), குறிப்பான திறமை (talent), பண்பு (values), நடத்தை, பழக்கம், சாதுரியம், சமயோசிதம், அனுபவம் ஆகியவை நமக்குண்டு. இவையெல்லாம் சேர்ந்து (mental structure) மனத்தின் அமைப்பாகிறது. இவையில்லாவிட்டால் செயல்பட முடியாது. இவையெல்லாம் இல்லாதவரை இதுபோன்ற வேலைக்குப் போகச் சொன்னால், விசேஷத்திலிருந்து வந்து, ரொம்ப பேர் பேசினார்கள் என்பான். ஊருக்குப் போகச் சொன்னால், திரும்பிவந்து ரயில் டிக்கட் கிடைக்கவில்லை அல்லது போனேன் அந்த ஆபீசில் எவரும் பதில் சொல்ல மறுக்கிறார்கள் என்பன போன்ற பதில்கள் வரும்.

மனிதனுக்கு எல்லா நிலைகளிலும் இதுபோன்ற structure அமைப்புண்டு. அவன் ஜீவியத்திற்கு அமைப்புண்டு. அது கரைந்தால் ஜீவியம் கரையும். ஜீவியம் கரைந்தபின் அதன் அஸ்திவாரமான பொருளிருக்கும்(substance). அதற்கும் அமைப்புண்டு. அதுவும் கரைந்தால் அந்நிலை - உ-ம். மனம், உணர்வு, உடல் - கரையும். மனம் அழிய அதன் ஜீவியமும், பொருளும் அவற்றின் அமைப்பை இழக்க வேண்டும். அமைப்பை இழப்பது என்னஎன்று விளக்குவது சிரமம். நமக்குப் புரிந்த விஷயங்களைப்பற்றிப் பேசினால் ஆர்வமாகக் கேட்கிறோம். புரியாதவற்றைப் பேசினால் கொட்டாவி வருகிறது. ஒன்றுமே புரியாதவற்றைப் பேசினால் குழப்பம் வருகிறது. நம் அறிவுக்கு அதிகமாக மீறிய விஷயங்களைப் பேசினால் தலையே காலியானதுபோலிருக்கிறது. புரிந்த விஷயங்களுக்கு மனதில் அமைப்புண்டு. அமைப்பில்லாத விஷயங்களைக் கேட்டுக் கொண்டால்

உள்ளே போய் விஷயம் பதிவாவதில்லை. புரிந்த விஷயங்களுக்குள்ள அமைப்பை மனதிலிருந்து நீக்கினால் அமைப்பு கரையும். பழக்கத்தை விடுவது போன்ற செயல் இது.

மனம், உணர்வு, உடல், ஆன்மா அத்தனைக்கும் அததற்குரிய ஜீவியம் உண்டு. மனம் கரைந்தால், ஜீவியம் முன்வரும். அது கரைந்தால், பொருள் எழும். பொருள் கரைந்தால் மனம் முழுவதும் - மனமும், அதன் ஜீவியமும், பொருளும், கரையும். ஜீவியமும், பொருளும் கரைந்தபின் பரம்பொருளையடையலாம். பரம்பொருள் இரு நிலைகளிலுள்ளது. நாம் பின்பற்றும் மார்க்கத்தைப் பொருத்து அதற்குரிய பரம்பொருளையடையலாம்.

வறியவனுக்குப் பணம் பெரியது. பணத்தைச் சம்பாதித்துவிட்டால் வறுமை ஒழிகிறது. பெருஞ்செல்வம் பெற்ற வறியவன், சுவர்க்கத்திலிருப்பான். இதை இருவிதங்களில் வாழ்வு அவனுக்கு அளிக்க முடியும். இரண்டும் பணமே. ஒரு வகையில் ஒன்றே. உட்பொருளைக் கருதினால் வேறு. ஒரு செல்வர் அவனைச் சுவீகாரம் எடுத்துக்கொண்டு தம் செல்வத்தை அளித்தால், அவன் உச்சாணிக்கொம்புக்குப் போகிறான். அவனைப் பொறுத்தவரை எல்லாம் பெற்றாயிற்று. அவனே செல்வம் பெறும் திறமை பெற்றுச் செல்வத்தைச் சம்பாதித்தால், அது மேல். சிருஷ்டிக்கு அப்பாலுள்ள பரம்பொருள் செல்வம் போன்றது. சிருஷ்டியிலுள்ள பரம்பொருள் திறமை மூலமாக வந்த செல்வம் போன்றது.

மனத்தை அழிப்பதை இருவகைகளாகச் செய்யலாம். முதல் வழி ஆன்மாமூலம் செய்வது. மனமும், அதன் ஜீவியமும், பொருளும் அவற்றின் அமைப்பை இழந்தால் மனம் அழிகிறது. மீதியாக எதுவும் இல்லை. அது நிர்வாண நிலை. இதனால் ஆன்மா மூலம் நிர்வாணத்தை எய்தி, பரம்பொருளை அடையலாம். மோட்சங்களில் பல்வேறு உயர்வுகளுண்டு. அவற்றுள் இது ஒன்று. ஆன்மா மூலம் செய்யாமல், ஆன்மீக மனம் (முனிவர், ரிஷி, யோகி, தெய்வம்) மூலம் மனத்தை அழித்தால் நாம் சத்தியஜீவியத்தை

அடைகிறோம். அதன் மூலம் ஈஸ்வரனை அடைகிறோம். ஈஸ்வரனே சிருஷ்டிகர்த்தா. அவன் சிருஷ்டியைவிட்டு வெளியே போவதில்லை. ஈஸ்வரன் சிருஷ்டியை நாடி அதிலுள்ள பரம்பொருளை விடுவிக்க முயல்வதால், உலகில் - வாழ்வில் - சிருஷ்டியில் நாம் மனத்திலிருந்து உயர்ந்து பரம்பொருள்வரை உயர்ந்து கொண்டே போகிறோம். இது இறைவன் நாடும் லீலையை நம்மிடம் கொண்டு வரும்.

ஏன் இறைவனை வழிபட வேண்டும்? ஏன் நாமே இறைவனாகக் கூடாது? என்பது அன்னையின் கேள்வி. நாமே இறைவனாக நாம் சிருஷ்டியிலுள்ள பரம்பொருளை நாடவேண்டும். இன்று நாம் சிருஷ்டியில் மனமாக இருக்கிறோம். உயர்ந்து கொண்டே போனால் பரம்பொருளையடையலாம். உயரும்பொழுது சிருஷ்டியை விட்டு வெளியே போகாமல், மனித வாழ்வினுள் உயர்ந்து கொண்டே போவதாகும். வாழ்வை ஏற்று, அதைவிட்டுப் போகாமல், பரம்பொருளை நாடினால், வாழ்வைத் தெய்வீக வாழ்வாக்கி பரம்பொருள் நிலைக்கு உயர்த்துவதாகும்.

*********

  1. சிருஷ்டியிலுள்ள பரம்பொருளும், அதற்கு முந்தைய நிலையிலுள்ள பரம்பொருளும் வேறு வேறல்ல. காலத்தால் அவை பிரிக்கப்பட்டவையல்ல. ஒன்றில் மற்றதுள்ளது. வெவ்வேறு பார்வைக்கு வெவ்வேறாகக் காட்சியளிக்கிறது. அதனால்தான் நம் பார்வை மாறினால் ஜடம் திருவுருமாறும் என்கிறார் பகவான்.

பார்வை மாறினால் ஜடம் திருவுருமாறும். மனம் மாறினால் வறுமை அதிர்ஷ்டமாகும்.

ஒருவரை மகன், தகப்பன் என்கிறார். அவரது தம்பி, அண்ணன் என்கிறார். தகப்பனாரும், அண்ணனும் ஒருவரே. அவர் தகப்பனாராக இருந்து அண்ணனாக மாறுவதில்லை. அவரிடம் மாற்றமில்லை.

கூப்பிடுபவர்களில் உறவு மாற்றமுள்ளது. அவருடைய நிலையோ, அவரோ மாறுவதில்லை. தம்பிக்கு அண்ணனாகவும், மகனுக்கு தகப்பனாகவும் அவர் காட்சியளிக்கிறார். Absolute, Relative பரம்பொருள், சிருஷ்டி என இரண்டை நாம் அறிவோம். எனவே பரம்பொருள் சிருஷ்டியாக மாறியுள்ளது என்று நினைக்கின்றோம். நம்முள் ஆன்மா, மனம் என இரு பகுதிகள் உண்டு. ஆன்மாவிலிருந்து பார்த்தால் பரம்பொருளாகவும், மனத்திலிருந்து பார்த்தால் சிருஷ்டியாகவும் காட்சியளிப்பது ஒன்றே. மாறிய பார்வைக்கு மாற்றம் தெரிவதால், பகவான் நம் பார்வையை நாமே முனைந்து மாற்றிக் கொண்டால், தேவையான திருவுருமாற்றம் ஏற்படும் என்கிறார்.

நாம் மனம் மாறியவுடன் சூழ்நிலை மாறுவதை அனைவரும் கண்டிருக்கிறோம். சூழ்நிலை மாறுவதைப்போல் பொருள்களின் குணமும் மாறும். கடைசிக்கட்டமான உடல் திருவுருமாற்றமும் நடக்கும் என்று பகவான் குறிக்கின்றார்.

மனநிலை சிருஷ்டிக்கும் தன்மையுடையது. புது மனநிலையை நாம் சிருஷ்டித்தால், புதுச் சூழ்நிலை, புதுக் குணம், புதுப் பொருள் உற்பத்தியாவதைக் காணலாம்.

ஜடம் திருவுருமாற்றமடைவது பூரண யோகத்தில் கடைசி கட்டம். அதையும் மனமாற்றத்தால் நடத்த முடியும் என்கிறார். நம் மனத்தில் ஜடமான பகுதியும் உண்டு. (சிந்திக்கும் பகுதியும், உணரும் பகுதியும், ஜடமான பகுதியும் மனத்திலும், உணர்விலும் உண்டு). சிந்திக்கும் பகுதிக்கு ஜடமான பகுதி கட்டுப்பட வேண்டும். நடைமுறையில் ஜடமான பகுதிக்குச் சிந்திக்கும் பகுதி கட்டுப்பட்டிருக்கும். தலைகீழான நிலை இது. இது மீண்டும் தலைகீழாக மாறினால், ஜடம் கட்டுப்படும். கட்டுப்பட்ட ஜடம் அடுத்த நிலையில் உணர்வு பெறும். அடுத்த நிலையில் திருவுருமாற்றம் பெறும். நாம் மாறாமல், தானே, எதுவும் செய்யாமல் நிலைமை மாறுமா என மீண்டும், மீண்டும் எதிர்பார்ப்பதே நம் வழக்கம். செயலை

மாற்றாமல், மனதை மாற்றிக் கொண்டு அல்லது மாறியதாக நினைத்துக் கொண்டு நிலைமை மாறவில்லை என்று குறைப்படுவதுண்டு. மனம் உண்மையாக மாறினால், அதற்குரிய மாற்றம் நிச்சயமாக இருக்கும்.

*********

  1. மனத்திலிருந்து சைத்தியப்புருஷனுக்குப் போவது என்பது, ஆசையால் பீடிக்கப்பட்டவன் அதை மீறிவந்து அதன் பலனைச் சிந்திப்பது போலாகும்.

ஆசையை விலக்கி பலனை நினைப்பது மனத்திலிருந்து சைத்தியப் புருஷனுக்குப் போவது போன்றது.

நாம் மனத்தைப் பற்றி எவ்வளவு பேசினாலும், புலன்களை அறிவதுபோல் மனத்தை அறிவதில்லை. புலன்களை நாம் தெளிவாக அறிவோம். உணர்ச்சி நமக்குப் புரியக்கூடியது. அறிவுக்குரிய மனத்தை நாம் உணர்ச்சியை அறிவதுபோல் அறியமுடிவதில்லை. சைத்தியப் புருஷன் ரிஷிகள் அறிவது. நம்மைப் பொறுத்தவரை அது ஒரு சொல்லேயாகும்.

நாம் செய்யும் முக்கியக் காரியங்களை நாம் உணர்வால் செய்கிறோமே தவிர மனத்தால், அறிவால் செய்வதில்லை என நாம் அறிவதில்லை. உணர்வால் செய்ய முடியாது. அறிவால்தான் செய்யவேண்டும் என்ற நிலை ஏற்பட்டவுடன் அறிவு ஸ்தம்பித்து நிற்பதைக் காணலாம்.MLAவீட்டில் பையன் துடுக்காக நம் மகனை அடித்துவிட்டான், ரோட்டரி கிளப் செக்ரட்டரி பதவிக்கு NGOவை நிற்கச் சொல்கிறார்கள், ஊரில் முக்கியப்புள்ளி வீட்டில் அண்ணன், தம்பி பாகப்பிரிவினையைப் பழைய நட்பு, உறவு கருதி சின்னபுள்ளியை மத்தியஸ்த்திற்கு அழைக்கிறார்கள் என்றால் இங்கெல்லாம் உணர்வால் செயல்பட முடியாது. MLA பையனை அடித்துவிட்டால் என்ன ஆகுமோ, ரோட்டரி கிளப் செக்ரட்டரியாக ஜெயித்தால்

நிலைமையைச் சமாளிக்க முடியுமோ, பெரிய புள்ளி வீட்டுத் தகராறில் ஒரு பக்கம் தீர்ப்புச் சொன்னால் அடுத்தவருக்கு மனம் கசக்கும் என்றால், சாதாரண மனிதன் தன் அறிவைக் கலந்தால், ஒன்றும் புரியவில்லை என்று பதில் வரும். இதுபோன்ற சமயங்களில் நாலுபேர் செய்வதைப்போல் செய்வார்கள். அது மனத்தின் செயலன்று. சமூக உணர்வு. நாம் ஆசைப்பட்டு அதைத் திறமையாகப் பூர்த்திசெய்வதை அறிவின் செயலாகக் கொள்கிறோம். ஆசையும், திறமையும் உணர்வுக்குரியவை, அறிவுக்கன்று.

மனத்திலிருந்து செயல்படுதல் என்றால், உணர்வையும், ஊரையும் ஒதுக்கி வைத்துவிட்டு அறிவுக்குப் புலப்படுதலை அறிதல் என்று பொருள். சாதாரண மனிதனுக்கு அந்தச் சந்தர்ப்பம் வந்ததில்லை. வந்தால், அவனுக்குக் கட்டுப்பட்டவரிடமே அது எழும். அங்கு அறிவு தெளிவுபடாது. அறிவால் தெளிவாகச் செயல்படுபவர் குறைவு. அவர்களே சைத்தியப்புருஷனை அடைய முயல்வது பலிக்கும். அவர்களுக்கு அது பெருமுயற்சி. ஆசை தன்னை ஆட்கொண்ட நிலையில் மனிதன் ஆசையை அறிவான். அதையே அறிவாகக் கொள்வான். 15 M.P.க்கள் ஜனாதிபதியைக் கண்டு பேசிவிட்டு வெளிவந்த பொழுது, அனைவரும் போய்க் கொண்டிருந்தபொழுது ஒருவர் பின்னால் தயங்கி நிற்பதைப் பார்த்து, என்ன யோசனை என்றொருவர் கேட்டார். 'இந்த மாளிகைக்கு என்று நான் அதிபதியாவேன்?' என்றார். இவருடைய நிலையே ஆசையால் பீடிக்கப்படுவது. 65 வயதான உலகப்புகழ் பெற்ற பெரிய மனிதன் விருந்திற்குப் போன இடத்தில் ஒரு பெண்ணை வைத்த கண் வாங்காமல் வெட்கமின்றி பார்த்துக் கொண்டேயிருப்பதை அவரால் அறிய முடியவில்லை, தவிர்க்க முடியவில்லை. இவர்கள் ஆசையை விட்டகன்று, நிதானமாய்ச் சிந்திப்பது இந்த ஜன்மத்தில் முடியாது. அதுபோல் அறிவில் தெளிவுள்ளவன், அதைக் கடந்து வந்து ஆன்மாவைச் சத்தியம் நாடுவது முடியாது. யோகத்தை மேற்கொள்பவருக்கும், அருளுக்கும் பாத்திரமானவர்க்குமே உரியது

அப்பாதை. இருமுயற்சிகளுக்கும் கடக்க வேண்டிய தூரம் ஒன்றேயாகும்.

*******



book | by Dr. Radut