Skip to Content

1. நாள் செய்வதை நல்லவர்கள் செய்ய மாட்டார்கள்

கவர்னர் நம்மூருக்கு வந்து மக்கள் குறைகளை நேரில் கேட்கும் நேரம், Lions club eye camp கண் வைத்திய முகாம் நம் கிராமத்திற்கு வரும் சமயம், அதனால் பரிகாரம் தேடுபவர்களுக்குப் பொன்னான நேரம். அந்த நேரத்தைத் தவற விட்டுவிட்டால், அவர்களுக்கு பெரிய நஷ்டம்.

முதலாளியிடம் கோள் சொல்லியே பிழைத்து வருபவன் உன் எதிரில் உட்கார்ந்து இருக்கும்வரை, முதலாளி சம்பந்தப் பட்ட விஷயத்தைப் பேசாதே என்றால் அது புத்திசாலித்தனம். அவன் எழுந்து போன பிறகு பேசினால் நல்லது. அவன் இருக்கும்போது பேசினால் ஆபத்து.

நல்ல நேரம் என்பது கவர்னர் வரும் சமயம் போன்றது. கெட்ட நேரம் என்பது முதலாளியின் ஆள் இருக்கும் நேரம் போன்றது. நல்ல நேரத்தில் ஒரு காரியத்தைச் செய்வதால் மட்டுமே அது பூர்த்தியாக முடியும் என்ற உண்மையையும், கெட்ட நேரத்தில் செய்வதால் மட்டுமே அது கெட்டுப்போகும் என்ற உண்மையையும் கண்டுகொண்ட முன்னோர்கள் ஒவ்வொரு நாளையும், நாழிகையையும், நட்சத்திரம், திதி, அமிர்தவேளை, விஷநேரம் என்று பாகுபாடு செய்திருக்கின்றார்கள். இவையெல்லாம் சக்திவாய்ந்தவை என்பது உண்மை. நான் நேரம், காலம் பார்க்காமல் வேலைசெய்து பெரிய செல்வம் சம்பாதித்திருக்கிறேன், என்னை நேரம் என்ன செய்யும் என்பவர் தன் நினைவுக்கு எட்டிய வரை தனக்கு முக்கியமான செயல்களை ஆரம்பித்த நாளையும் வேளையையும் குறித்து இன்று பழைய பஞ்சாங்கத்தில் பார்த்தால், அவை அவரை அறியாமல் நல்ல நேரமாக அமைந்திருக்கும்.

"நல்ல நேரம், கிரகபலன், எல்லாம் தானே கூடிவருகிறது'' என்பார்கள். அதேபோல் நான் தொட்டதெல்லாம் வீணாகப்போயிற்று, நானும் நேரம் காலம் பார்ப்பதில்லை என்பவரும் தன் பழைய செயல்களை ஆரம்பித்த நேரங்களை இப்பொழுது ஆராய்ந்து பார்த்தால் அவை கெட்ட நேரங்களாக இருக்கும்.

"நான் ஸ்ரீ அரவிந்தரை ஏற்றுக்கொண்டேன், அதற்கு முன்பும், அதன் பின்பும் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை'' என்றவரிடம் ஜோஸ்யத்தில் அதிக நம்பிக்கையுள்ளவர் ஒருவர், உங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நல்லதாகக் கருதுவது எது என்றார்? உங்களுக்கு ஞாயிறும், வியாழனும் வாரத்தில் நல்ல நாட்கள், சொல்லுங்கள் ஆராய்வோம் என்றார். ஸ்ரீ அரவிந்த ஆஸ்ரமம் வந்து அன்னையை முதல் பால்கனி தரிசனத்தில் பார்த்ததே என் வாழ்நாளில் உயர்ந்த நல்லது என்றார். அந்தத் தேதி நினைவிருந்தால் அது நிச்சயமாக ஞாயிறு அல்லது வியாழனாகத்தானிருக்கும் என்று ஜோசியர் அடித்துச் சொன்னார். அது Aug. 15, அன்று ஞாயிற்றுக்கிழமை என்பது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது என்றார் பக்தர். நல்லவை நல்ல நேரத்தில் நடக்கின்றன. கெட்டவை கெட்ட நேரத்தில் நடக்கின்றன என்பது உண்மை.

இந்த உண்மைக்கும் ஒரு வரையறையுண்டு. இது நம் நாட்டிற்கு மட்டும் உண்மை. நாம் அனைவரும் நம்புவதால் இதிலுள்ள வித்தான உண்மை, வளர்ந்து பலம் பெற்றுள்ளது. நம் நாட்டிலேயே வட நாட்டில் இதே நம்பிக்கையிருந்தாலும் இந்த நேரங்கள் இடத்திற்கு இடம் மாறும். நம் இராகு காலம், பீகார் வழக்கப்படி (சில சமயங்களில்) நல்ல நேரமாக இருக்கின்றது.

வெளி நாட்டாருக்கு இந்த நம்பிக்கையில்லை. அவர்கள் நம் நாட்டில் வந்து செயல்படும் பொழுது நம்மைப் பாதிக்கும் கெட்ட நேரம் அவர்களைப் பாதிப்பதில்லை. நமக்குதவும் நல்ல முகூர்த்தம் அவர்களுக்குத் துணை செய்வதில்லை. இரு உண்மைகளை நாம் மறுக்க முடியாது. 1) நேரங்களுக்கு குண விசேஷம் உண்டு 2) இது நம்புபவர்களை மட்டுமே பாதிக்கும்.

அன்னை பக்தர்களுடைய நிலை என்ன? இந்த நல்ல வேளைகளை நாடுவதா? கெட்ட வேளைகளை விலக்குவதா என்ற கேள்விக்குரிய பதிலாக இக்கட்டுரையை எழுதுகிறேன். அன்னையை நினைத்தவுடன் அந்த நேரம் நல்ல நேரமாக மாறி விடுவதால் அன்னை பக்தர்களுக்கு நல்ல வேளை, கெட்ட வேளை என்பதில்லை. அவர்களுக்கும் மனத்தில் நம்பிக்கை இருந்தால், நம்பிக்கை பலிக்கும். இது கெட்ட நேரம், என்ன செய்யுமோ என்ற பயமிருந்தால் பயத்திற்குண்டான பலன் கிடைக்கும்.

40 ஆண்டுகளுக்கு முன் மனை' என்ற சொல் பிரபலமாவதற்கு முன் தன் 1½ ஏக்கர் நிலத்தை 17 மனைகளாகப் பிரித்து விற்க ஒருவர் ஆசைப்பட்டார். அதற்கு ஓராண்டு முன் இந்த இடத்திற்கு அடுத்தாற்போலுள்ள 4 ஏக்கர் நிலத்தை வெளியூரிலிருந்து வந்த செல்வந்தர் பங்களா கட்டுவதற்கு ஏக்கர் ஐயாயிரம் வீதம் வாங்கியது அந்த ஊருக்கே பெரிய செய்தி. அதனால் அதே விலைக்கு இந்த 1½ ஏக்கரையும் விற்கும் நினைவு ஏற்பட்டது இவருக்கு. இவர் எல்லா நாள் நட்சத்திரமும் பார்ப்பவர். தேவையில்லாத நேரத்தில் அதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை என்று பேசுபவர். பெரிய செல்வந்தர் பங்களாவுக்கு அடுத்துள்ள மனை என்பதால் விற்கலாம் என்று ஆசை, பலிக்கும் என்ற நிலையில்லை. பலிக்குமோ என்ற ஆசையில் முயற்சியை ஆரம்பித்தார். அடுத்த ஊர் எம்.எல்.ஏ. வந்து இரண்டு மனைகள் வேண்டும், அட்வான்ஸுடன் வந்திருக்கிறேன் என்றவுடன் மனை விலை ரூ.2,500 என்றார். அட்வான்ஸ் கொடுத்தார் M.L.A. ஒரு ஏக்கர் விலை இரண்டு மனையில் வந்தவுடன் அவருக்கு நிலை தடுமாறியது. இந்தச் செய்தி பரவியவுடன், பல செல்வந்தர்கள் அவரை அணுகி, தலைக்கு இரண்டு மனை கேட்டார்கள். சொற்ப நாட்களில் அத்தனை மனைகளுக்கும் கிராக்கி படிந்துவிட்டது.அவர் தாயாருக்குக் கவலை. முதல் அட்வான்ஸ் வாங்கிய நேரம் இராகு காலம். பையனை, அந்த அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, மீண்டும் நல்ல வேளையில் அதைத் திரும்பப் பெற்றுக்கொள் என்றார். கையில் வந்த பணத்தை அவரைத் தேடிப் போய் திரும்பக் கொடுக்கப் பையனுக்கு இஷ்டமில்லை. இராகு காலத்தில் நம்பிக்கையுண்டு என்று சொல்ல வெட்கம். தாயார் பேச்சைத் தட்டினார். மற்ற மனைகளை விலை கேட்ட அனைவரும் மனை தேவையில்லை என்றனர். M.L.A. வந்து அட்வான்ஸைக் கேட்டு வாங்கிக்கொண்டு போய்விட்டார். மனதிலுள்ள நம்பிக்கை, மறுத்தும் பேசும் வாய்ச் சொல்லை மீறி செயல்படுகிறது.

நாளை சூரியன் உதயமாகும் என்பது eternal truth எக்காலத்திலும் உண்மை, எல்லா நாட்டிலும் உண்மை. ஆனால் பகல் 12 மணி நேரம், இரவு 12 மணி நேரம் என்பது எல்லா நாட்டிற்கும் உள்ள உண்மையல்ல. பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள நாடுகளுக்கே அது உண்மை. வடக்கே அதிக தூரம் சென்றால் பகல் 20 மணி இரவு 4 மணி எனவும், பகல் 6 மணி, இரவு 18 மணி எனவும் பருவத்திற்குத் தகுந்தாற்போல் மாறும், தெற்கே அதிக தூரம் சென்றாலும் அப்படியே.

வெளியூர் போன இடத்தில் ஹோட்டலில் சாப்பிடும் பொழுது. மோர்சாதம் சாப்பிடும் நேரத்தில் சாம்பாரில் உள்ள உருளைக்கிழங்கை ஒருவர் பறிமாறும்படிக் கேட்டார். சர்வர் மறுத்தான். கசக்கும் என்றான். அவருக்குப் புரியவில்லை வலியுறுத்திக் கேட்டார். உருளைக்கிழங்கு மோருடன் சாப்பிடும் பொழுது கசந்தது. அந்த ஊர் தண்ணீரின் குணம் அது. எல்லா ஊருக்கும் உள்ள சட்டமல்ல அது. ஊரைப் பொறுத்த நிலை, அது.

நிலத்தை மனையாக மாற்றினால், நஞ்சை நிலம் என்பதால் மனைக்கு அதிக விலையில்லை. மனையுள்ள இடத்தைப் பொருத்து மனைக்கு விலை அமையும். நஞ்சையா, புஞ்சையா என்பதால் வரும் விலை பழைய நிலவரத்தைப் பொருத்தது. பயிரிடுபவனுக்குரிய விலை அது. நிலவரம் மாறிய பிறகு நிலத்தின் தரத்தை நிர்ணயிப்பது இன்றைய சூழ்நிலை. பழைய சூழ்நிலை, இன்றைய தரத்தை நிர்ணயிக்காது.

சூதாடிகள் குடியிருந்த இடத்தில் புதிய காலனி வந்த பின், புதிய மனிதர்கள் குடியேறிய பின், ஏற்கனவே அங்கிருந்த திருடர்கள் சூதாடியதனால் இப்பொழுது குடியுள்ளவர்க்கு ஆபத்தில்லை. இது முற்றும் புதிய நிலை. இந்நிலைக்கேற்றவர்களே இப்பொழுது இங்கிருக்கிறார்கள். பழைய பயம் கிடையாது. புதிய காலனியில் வேலை செய்யும் பழைய திருடனை நீ அடையாளம் கண்டும், அவனுடன் தொடர்பும் கொண்டிருந்தால், அவனால் உனக்குக் கெடுதல் நேரும். இடம் மாறிவிட்டது. அதனால் பழைய நிலைமை மாறிவிட்டது. அதையே நினைத்துக் கொண்டு பயப்படவேண்டிய அவசியம் இன்று புதியதாக குடி வந்தவர்களுக்கில்லை.

கொலைகாரனுடைய குடும்பம் அடுத்த தலை முறையில் தொழிலதிபராகிய பின் அவன் வீட்டு மனிதர்களைக் கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை. அவர்களுடைய சமூகச் சூழ்நிலை இன்று வேறு. அதனால் பழைய பயம் மற்றவருக்கில்லை.

விதை விதைக்க தகுந்த நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எப்பொழுது வேண்டுமானாலும் விதைத்தால் பயிர் பலன் தராது. ஆடி மாதத்தில் விதைத்தால் அப்பொழுதிருந்து கார்த்திகை வரை தொடர்ந்து மழையிருக்கும். விதை, முளைக்கும், முளைத்த பயிரை மழை தொடுவதால் பலன் தரும் என்பதை பல நூறு ஆண்டுகள் சோதனை செய்து விவசாயி கண்டு கொண்டான். அதனால் ஆடிப்பட்டம் தேடி விதை' என்றான். அது பொன்னான வாக்கியம். அதில் உள்ள உண்மை பெரியது.

ஆனால் இன்று கிணற்றிலிருந்து 12 மாதமும் நீர் இறைக்க பம்ப்செட் இருப்பதால் விவசாயி பட்டத்தை எதிர்பார்க்காமல் அறுவடை முடிந்தவுடன் விதைக்கின்றான். காலம் மாறிவிட்டது. நிலைமை மாறிவிட்டது. பொன்னான சொல் ஆனாலும் இன்று அதற்கு அர்த்தமில்லை.

நந்தனாரும், திருப்பாணாழ்வாரும் பிறந்த இடம் தாழ்ந்த நிலை. அவர்கள் சித்தி பெற்ற புருஷர்கள் என்பதால், பிறந்த தாழ்ந்த நிலை இடைமறிக்காது.

1947க்கு முன் I.C.S. அதிகாரியை இந்தியாவின் எதிரி என்று மேடையில் பேசுவார்கள். சுதந்திரம் வந்த பின் காங்கிரஸ் மந்திரிகள் கீழே அவர்கள் வேலை செய்யும் பொழுது பழைய காங்கிரஸ்காரர்கள் அவர்களை குரோத மனப்பான்மையுடன் நினைப்பதுண்டு. அவர்கள் இன்று காங்கிரஸ் சர்க்காரின் ஊழியர்கள். காங்கிரஸ் மந்திரிகளின் உத்தரவை நிறைவேற்றும் சர்க்கார் அதிகாரிகள். 1947-க்கு முன் அவர்கள் நாட்டுக்கு எதிரிகள். இன்று அவர்கள் நாட்டுக்குச் சேவை செய்பவர்கள் அவர்களை நாம் வெறுக்கக் கூடாது என்று அன்று தலைவர்கள் கேட்டுக் கொண்டார்கள். நிலைமை மாறியதால் I.C.S. அதிகாரிகளின் நிலைமையும் மாறிவிட்டது. தலைகீழாக மாறி விட்டது. சில I.C.S. அதிகாரிகளை மந்திரிகளாகவும் நியமித்தார்கள். பலரை கவர்னர்களாகவும் நியமித்தார்கள்.

சில வியாதிகளுக்கு விஷத்தை மருந்தாகக் கொடுப்பார்கள். சாதாரண மனிதனுக்கு எது விஷமோ, இந்த வியாதியைப் பொருத்தவரை அது மருந்து.

ஒரு பெரிய அதிகாரி ரிடையரான பின் தன் அதிகாரத்தை இழந்து விடுகிறார். மாற்றலான பிறகு அந்த ஊரில் அதிகாரம் இருக்காது. இதுவரை நல்ல வேளை என்பதற்குரிய காலம் இருந்தது. ஒருவர் அன்னையை ஏற்றுக்கொண்டபின் நல்லவேளை என்பது ஓய்வு பெற்ற அதிகாரியைப் போல அல்லது கலைக்கப்பட்ட சட்டசபையைப் போல, அதன் அதிகாரம் இனி இல்லை.

பெட்ரோல் பங்க், புதியதாக வந்த எலக்ட்ரிக் மோட்டாருக்குப் பயன்படாது. பழைய டீசல் என்ஜினுக்கும் பயன்படாது. ரிஸர்வ் பேங்க் ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்த அன்று ஒருவர் தன்னிடமிருந்த ஆயிரம் ரூபாய் நோட்டை பாக்கு மடிக்கப் பயன்படுத்தினார். கரன்ஸிக்கு உள்ள மதிப்பு நாம் கொடுத்தது. அதை ரிஸர்வ் பேங்க் ரத்து செய்யமுடியும்.

குங்குமப் பொட்டு லக்ஷ்மிகரம் பொருந்தியதானாலும், ஷேக்ஸ்பியர் நாடகத்திற்குப் பயன்படாது, நூறாண்டுகளாக மார்ஸ்கோட் morse code உலக நாடுகளில் தந்தியை ஆண்டு வந்தாலும், டெலக்ஸ் மெஷினுக்குப் பயன்படாது.

டெலக்ஸ் மெஷினை மார்ஸ் தந்தி முறை ஆட்சி செலுத்த முடியாது. பார்க்கர் பேனா உலகப் பிரசித்தி பெற்றது. Quink குவிங்க் அதில் உபயோகப்படுத்துவது. என்றாலும் ball point பால் பாயிண்ட் பேனாவில் அதைப் பயன்படுத்த முடியாது. xerox ஜெராக்ஸ் மெஷினில் கார்பன் பேப்பரை பயன்படுத்த முடியாது. தங்கக் கிரீடம் உயர்ந்தது. உயர்ந்ததைக் கீரிடம் என்கிறோம். நேருவையோ, கென்னடியையோ கிரீடம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது, இனி கிரீடம் மியூசியத்தில் இடம் பெறும். நாட்டுத் தலைவர்கன் முடியில் அமையாது.

கோர்ட் வந்த பின் உள்ளூர் பஞ்சாயத்தின் தீர்ப்புக்கு அதிகாரமில்லை. நாமே அதை நாடி அதற்கு நம்மை உட்படுத்திக் கொண்டால் அது நம் குறை. உள்ளூர் நாட்டாண்மைக்காரர் எவ்வளவு பெரிய அதிகாரத்தை உள்ளூரில் செலுத்தினாலும், கோர்ட்டில் மற்ற சாட்சிகள் போலவே அவரை எடுத்துக் கொள்வார்கள். அவருடைய உள்ளூர் அந்தஸ்திற்கு கோர்ட்டில் இடம் இல்லை.

வீடு கட்டும் காலனியின் கணக்குப்படி நஞ்சையும், புஞ்சையும் ஒன்றே. மார்க்கட் விலையும் சமமாகிறது. சில இடங்களில் புஞ்சையில் மூன்று போகம் பயிரிட முடியும். பணப்பயிர் பயிரிட முடியும் என்பதால், புஞ்சைக்கு நஞ்சையை விட விலை அதிகம். பழைய நினைவு பழைய நிலை, புதிய சூழ்நிலையில் நிற்காது. புதிய சூழ்நிலையில் புதியனவற்றையே மக்கள் கருதுவார்கள்.

முடியாட்சி போய் மக்களாட்சி வந்த பின் ராஜாவுக்கு அதிகாரமில்லை. கட்டை வண்டி போய் கார் வந்த பின் காங்கேயம் மாட்டை கவனிப்பாரில்லை. நிலத்து வேலை போய், ஆபீஸ் வேலை வந்த பின், நிலத்தைப் போய் கவனிப்பாரில்லை. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டி வாழ்த்தியது போய் சிறு குடும்பம் வந்த பின் பத்து பிள்ளை பெற்றவளை மகராசி என்று வர்ணிப்பதில்லை. சம்பளத்திற்குரிய வேலை போய் சொந்தத் தொழில் ஏற்பட்ட பின் சர்க்கார் உத்தியோகத்திற்கு அவர்கடையே இருந்த செல்வாக்கில்லை.

பண்பு மாறினாலும், நாட்டு வழக்கம் மாறினாலும், புதிய டெக்னாலஜியை சமூகம் ஏற்றுக் கொண்டாலும், நமது இலட்சியம் மாறினாலும், நாம் முக்கியமாகப் போற்றும் பண்புகள் மாறினாலும், நடைமுறை மாறினாலும், சமூகத்தின் அமைப்பு மாறினாலும், பழைய பழக்க வழக்கங்களுக்கு அதிகாரமில்லை, அர்த்தமில்லை, அவசியமில்லை என்பது சமூகம் மாறும் கால கட்டங்களில் மனிதன் கண்கூடாகக் காண்பது.

சிறிய வயதில் போலீஸ்காரனிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று மிரட்டி வளர்ந்த பிள்ளை பட்டம் பெற்றபின் பெரிய ஆபீசராகி விட்டான். இன்றும் போலீஸ்காரனை கண்டால் பயம். பொங்கல் இனாம் வாங்கவந்த போலீஸ் காரர்களைக் கண்டு பயந்து உள்ளே போய் அவர்கள் கேட்பதைக் கொடுத்தனுப்பு, அங்கு நிற்கவேண்டாம் அவர்கள் என்றான்.

காலம் என்பதை சிருஷ்டியின் அமைப்பில் உற்பத்தி செய்தது மனம். எனவே மனத்தின் அபிப்பிராயங்கள் காலப் போக்கை நிர்ணயிக்கும், மனம் மாறினால் காலம் அதற்கு கட்டுப்படும். மனம், தான் உற்பத்தி செய்த காலத்தின் நிலைகளுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டால், காலம் மனத்தை ஆளும்.

அன்னை காலத்தைக் கடந்தவர். அன்னையை ஏற்றுக் கொண்டவரை காலம் கட்டுப்படுத்தாது. காலத்தின் பழைய நிலைகள் அவரைக் கட்டுப்படுத்த முடியாது. இராகுகாலம், எமகண்டம், நல்ல வேளை, கெட்ட நேரம் என்பவற்றுக்கு பக்தர்களிடம் வேலையில்லை. தமிழ்க் காலண்டருக்கு ஆபீஸில் வேலையில்லை. அதைப்பார்த்து அதன்படி நடப்பேன் என்று பிடிவாதம் செய்தால் செய்யும் வேலையில் கோளாறு வரும்.

மனிதன் வாழ்வுக்குட்பட்டவன். என்றுமே மனிதனால் சமூகத்தை எதிர்க்க முடியாது. அது சிரமம். சமூகத்தையே எதிர்க்க முடியாத மனிதனால் வாழ்வை நிச்சயமாக எதிர்க்க முடியாது. வாழ்வை ஒட்டியே அவன் போக வேண்டும், வாழ்வு காலனுக்குட்பட்டது. காலனை எதிர்ப்பது மனிதனுக்கில்லை. எனவே காலத்தின் குணத்திற்கு மனிதன் கட்டுப்படவேண்டும் என்பது உண்மை.

அன்னையை ஏற்றுக்கொண்டபின் மனிதன் வாழ்வுக்கும், வாழ்வைக் கட்டுப்படுத்தும் காலத்திற்கும் அடிமையில்லை. அதனால் காலத்தின் குணவிசேஷம் அவனை பாதிப்பதில்லை. அத்துடன் உலகத்தின் குணவிசேஷங்கள் அன்னையிடம் தலைகீழாகவும் செயல்படுவதுண்டு. கருமி என்று பெயர் வாங்கியவர்கள் அன்னையைப் பார்த்தபின் இதுவரை அவர்கள் வாழ்நாளிலில்லாதது போல் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொண்டதுண்டு. அதுபோல் கெட்ட வேளைகள் அன்னை பக்தர்கள் வாழ்வில் நல்ல காரியங்களைச் செய்வதும் உண்டு. 7,8 வருஷமாக ஒரு தொழிலை உற்பத்தி செய்து முதல் காரியம் ஒன்றை முடித்த வேளை, பொங்கல் போனபின் கரிநாளாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட project ஆக (திட்டம்) இருந்தாலும் பரவாயில்லை. 7 வருஷமாக தயார் செய்த தொழில், கரிநாள் அன்று ரிப்போர்ட்டைக் கொடுத்தால், தொழிலே வீணாகிவிடும். எந்த சாதாரண காரியமும் நாம் கரிநாளில் செய்வதில்லை. வருஷத்திற்கே மோசமான நாள். நாளின் குணத்தைப் புறக்கணித்து ரிப்போர்ட்டை அன்றே கொடுத்தார். பக்தர். தொழில் விருத்தியாயிற்று. உள்நாட்டை விட்டு அயல் நாட்டிற்கும் போயிற்று. பல திசைகளிலும் தொழில் வளர்ந்தது. எதிர்பார்த்ததைவிட அதிகமாகவும் வளர்ந்தது.

கெட்ட வேளையைக் கண்டு பயப்படுபவர்களை கெட்ட வேளை பாதிக்கும். அன்னை பக்தர்களைப் பாதிக்காது நம்பிக்கையில்லாவிட்டால் (வேளையின் குணத்தை நம்பாவிட்டால்) நிச்சயமாகப் பாதிக்காது. அத்துடன் அன்னை மீதுள்ள நம்பிக்கை சாஸ்திரத்தின் மீதுள்ள நம்பிக்கையைவிட அதிகமானால், கெட்டவேளையும் நல்லது செய்யும்.நாள் செய்வதை நல்லவர்களால் கூட செய்ய முடியாது என்று ஆரம்பித்தேன். நல்லவர்கள் உலகில் குறைவு. ஒரு நல்லவரால் உலகுக்கு மழை அருளாகப் பெய்கிறது. அவர்களை விட நல்ல நாள் பலன்தரும் என்பது உண்மை.

அன்னை நல்லதை மட்டும் செய்வார். அனைத்தையும் நமக்கு நல்லதை மட்டும் செய்யச் சொல்வார். எவராலும் செய்ய முடியாத நல்லதை, அன்னையை நினைத்துச் செய்யும் காரியங்கள் செய்யும். அன்னையை நினைப்பதால் நேரம் அமிர்த நேரமாகிறது. அன்னை நினைவு நேரத்தின் தன்மையை நிர்ணயிக்கிறது. அன்னையை ஏற்றுக்கொண்டபின், நல்வாழ்வை நிர்ணயிக்கும் திறன் நேரத்திற்கு உள்பட அனைத்துக்கும் போய்விடும்.

* * *



book | by Dr. Radut