Skip to Content

3. யோக ரகஸ்யம்

பூரண யோகம் அனைவருக்கும் உரியதல்ல. இறைவனின் அழைப்புள்ளவர்க்கே அது உரியது. இதை ஆரம்பிக்குமுன் அவ்வழைப்பு இருக்கிறதா என உறுதியாக தெரிந்து கொள்வது நல்லது. நான் யாரையும் இந்த யோகத்தை மேற்கொள்ளும்படி அழைப்பதில்லை என்றெல்லாம் எழுதிய பகவான் அதன் இரகஸ்யத்தையும், தான் அதைக் கண்டு கொண்ட முறையையும் Life Divine என்ற நூல் 28-ம் அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார்.

பூரண யோகம் இறைவனுக்குரியது. மனிதனுக்குரியதல்ல. மனிதன் இப்பாதையில் செய்யக்கூடியதெல்லாம் சரணாகதி. சரணாகதி முடிந்த கட்டத்தில் சரணாகதியை இறைவன் ஏற்று நம்முள் இறைவனே யோகத்தை மேற்கொள்வான் எனவும் எழுதுகிறார்.

பூரண யோகத்தின் முறை திருவுருமாற்றம். மனம் தன் அறிவை, ஞானமாக மாற்றி திருவுருமாற்றம் பெற முடியும். உணர்வு நம் ஆசையை அழித்து, பற்றைவிட்டு, ஆசையை அன்பாக மாற்றி, திருவுருமாற்றமடைய முடியும். உடல் திருவுருமாற்றம் அடைய அதன் பழக்கங்களை விடவேண்டும். மனிதன் பிறந்த நாளிலிருந்து, உயிர் பிறந்ததிலிருந்து ஏற்பட்ட பூவுலக அனுபவங்களை உடல் தன் ஆழத்தில் பதித்து வைத்திருப்பதால், அதனால் தன் பழக்கங்களைத் தானே மாற்றிக் கொள்ள முடியாது. உடல் புதைந்துள்ள ஆன்மிக ஒளி வெளிவந்து உடலின் பழக்கங்களை மாற்ற வேண்டும். அவ்வொளி வெளிப்பட உடலின் அகந்தை கரைய வேண்டும். மரணம் வாழ்வின் முடிவல்ல என அறியவேண்டும். நாம் அழியக்கூடிய உடலல்ல.

நாம் எனப்படுவது அழிய முடியாத ஆத்மா. ஆத்மாவின் புறத்தோற்றமே உடல் என அறிதல் வேண்டும். காலத்தால் வாழ்வு கட்டுப்பட்டுள்ளதே தவிர, காலத்தால் சிருஷ்டி கட்டுப்பட்டதல்ல. மனிதன் எனும் நாம் காலத்தைக் கடந்த ஜீவன் என்பதை அறிய வேண்டும். பிறப்பு, இறப்பு என்ற முரண்பாடு, அகந்தையால் ஆளப்பட்ட மனம் உணர்வதேயாகும். அகந்தையொழிந்த நிலையிலுள்ள ஆன்மாவாகிய நாம் பிறப்பதில்லை, இறப்பதில்லை, நித்தியத்துவம் வாய்ந்த ஜீவன் என்பதை உணருதல், யோகத்தை ஆரம்பிப்பதற்கு அவசியம் என்கிறார்.

உடல் தன் பழக்கங்களை விட்டு திருவுருமாற்றமடைய நாமுள்ள இன்றைய நிலையில் முடியாது. அது நோய் மூலமாகவே நடக்க வேண்டும் என்கிறார் அன்னை. இரும்பை, ஒரு கருவியாகச் செய்ய உருக்கி மாற்ற வேண்டும். உருக்காமல், அனல் இடாமல், கட்டி இரும்பு சுத்தியாகாது. நோய் ஏற்படாமல் உடல் தன் பழக்கங்களை விட்டு திருவுருமாற்ற மடையாது என்று கூறிய அன்னை, உடல் திருவுருமாற்றமடைய ஆரம்பிக்கும் பொழுது படும் வேதனை பெரிது, நாள் முழுவதும் வாய்விட்டு அலற வேண்டும் போலிருக்கிறது. இந்த திருவுருமாற்றத்தை மேற்கொள்ளும்படி நான் யாரையும் அழைக்க மாட்டேன் என்றார். அன்னைக்கு வியாதி என்பதே இல்லை. திருவுருமாற்றத்தை விரும்பி ஏற்றுக்கொண்டதால், நோய் அவர் உடலைத் தீண்டியது. "உன் உடல் ஒன்றுதான் உடலின் திருவுருமாற்றத்திற்குரியது'' என்றார் பகவான். பகவான் நிர்ணயித்தபின் அன்னை அவர் கட்டளையை பூர்த்திசெய்ய மேற்கொண்ட யோகம் அவருக்குப் பொறுக்க முடியாத வேதனையைக் கொடுத்தது.

ஸ்ரீ அரவிந்தர் யோகத்தில் எய்திய நிலையை அவருக்குப் பின் அன்னை எய்திய பொழுது, யோகம் உடலை வருத்தும் அளவைக் கண்டு, "இந்த நிலையில் அவரிருந்து கொண்டு, பொறுத்துக் கொண்டிருந்தார்'' என்பதை வாய்விட்டுக்கூறி, அதை நினைத்தால், அவருடல் பட்ட வேதனையை இப்பொழுது நினைத்தால், அதை அவர் வெளியிடாததால், எவரும் அவர் வேதனையை அறிந்து கொள்ளாமலிருந்ததை நினைத்தால், மனம் பதறுகிறது என்று அன்னை கூறிய பொழுது அவரது கண்கள் பனித்தன.

மனம் திருவுருமாற்றமடைய இதுவரை நாம் அறிந்த அனைத்தும் மடமை என உணரவேண்டும். மனம் அசைந்து, ஓர் எண்ணம் உதித்தால், திருவுருமாற்றம் தடைப்படும். உணர்வு திருவுருமாற்றம் அடைய நமக்கு இன்றுவரை நடந்த அனைத்தும் திருவுள்ளம் என்றறிய வேண்டும் என்று கூறிய பகவான் உன் கழுத்தை நெறிக்கும் கைகள் இறைவனின் ஸ்பர்சம் என அறிய வேண்டியது திருவுருமாற்றத்திற்கு தேவையானது என்றார். உடல் திருவுருமாற்றம் அடைய நாம் கற்றுக்கொண்ட பழக்கமனைத்தையும் மறந்து, புதியதாகக் கற்று செயல்படவேண்டும் என்கிறார். பேச்சை இழந்தவர்கள் மீண்டும் பேசும் பொழுது, புதியதாக கற்றுக்கொள்வது போலிருக்கிறது என்பார்கள். கால் ஒடிந்து நெடுநாள் படுக்கையிலிருந்து மீண்டும் எழுந்து நடக்கும் பொழுது புதியதாக நடக்கக் கற்றுக்கொள்வது போலிருக்கிறது என்பார்கள். அன்னை கடைசி காலத்தில் நான் மீண்டும் சாப்பிட, எழுத, பேச, கற்றுக்கொள்கிறேன் என்றார். சொற்களுக்கு spelling தெரியவில்லை என்றார். கற்ற பழக்கங்களை உடல் மறந்து, புதிய புனித உணர்வில் அதே செயல்களைச் செய்ய கற்றுக் கொள்ள உடல் நோய்வாய்ப் பட்டாலன்றி முடியாது என்கிறார் அன்னை.

ஸ்ரீ அரவிந்தர் யோகப்பாதையை மேற்கொண்ட பொழுது அவரது இலட்சியம் மோட்சமல்ல. முதல் நாட்டின் சுதந்திரத்தை இலட்சியமாகக் கொண்டவர், பின் அதைவிட்டு யோகத்தை மேற்கொண்டபொழுது, பல இலட்சியங்களைக் கடந்துவந்து, மனிதவுடல் தெய்வீக வாழ்வைத் தன் இலட்சியமாகக் கொண்டார். அதுவே ஆதிநாள் தொட்டு மனிதகுலத்தின் இலட்சியமும் என்றார். சிருஷ்டி சச்சிதானந்தத்தில் ஆரம்பித்து, பல நிலைகளைக் கடந்து, மனிதனைத் தொட்டு, தொடர்ந்து சென்று ஜடத்தில் முடிகிறது. ஜடத்தில் முடிந்தவரை இறைவன் சிருஷ்டி மூலமாக இறங்கி வந்ததாகும். மீண்டும் ஜடத்திலிருந்து இறைவன் வெளிவந்து, சச்சிதானந்தத்திற்குப் போகும் யாத்திரையை மேற்கொண்டு மனம் என்ற கட்டத்தை அடைந்துள்ளான், அடுத்த கட்டம் சத்திய ஜீவியம். எனவே மனத்திலிருந்து எழுந்து சத்திய ஜீவியத்தை அடைவது திருவுள்ளமாகும். திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்வது பூரண யோக இலட்சியமாகும்.

திருவுள்ளம் செயல்படுவதை மற்றொரு வகையாகவும் விவரிக்கின்றார். பிரபஞ்சம் தன் வாழ்வை ஆன்மிகப் பொலிவுற முனைந்து நிற்கிறது. இதை மனிதனில் பூர்த்தி செய்கிறது. அதன் விளைவாகப் பிறந்ததே மனோமய புருஷன் என்கிறார்.

சச்சிதானந்தம் சிருஷ்டியாக வந்து ஜடமான பின், மீண்டும் ஜடத்திலிருந்து எழுந்து சச்சிதானந்தத்தை அடைவது லீலை. அதில் முதற்கட்டம் ஜடத்திலிருந்து வாழ்வு உதயமாயிற்று. ஜடமும், வாழ்வும் தங்கள் ஆன்மிக சாரத்தைக் கண்டு வாழ்வு பிராணமய புருஷனைக் கண்டது. அடுத்த கட்டத்தில் வாழ்விலிருந்து மனம் ஜனித்தது. மனத்தின் ஆன்மிக சாரமே மனோமய புருஷன். சிருஷ்டியில் திருவுள்ளம் இதுவரை சாதித்தது மனோமய புருஷனை ஜனிக்கச் செய்ததாகும். திருவுள்ளம் பூர்த்தியாக அடுத்த கட்டத்தை அடைய மனிதன் செயல்பட வேண்டும். அதாவது, மனோமய புருஷன் உயர்ந்து விஞ்ஞானமய புருஷன் (சத்திய ஜீவன்) ஜனிக்க வேண்டும். இதுவே பகவான் யோகத்தை மேற்கொண்ட பொழுது அவர் முன் உள்ள இலக்கு.

லீலையின் முதற்பாகத்தில் சச்சிதானந்தம் கீழே வந்து ஜடமாகிறது. இரண்டாம் பாகத்தில் ஜடம் எழுந்து மேலே சென்று சச்சிதானந்தமாகிறது. அதை விவரிக்கும்போது இந்த லீலையின் மையம் மனிதன் என்றும், ஒரு முனை இறைவன் என்றும் அடுத்த முனை பிரகிருதி எனும் இயற்கை என்றும் விவரிக்கின்றார்.

இறைவன் - மனிதன் - இயற்கை

 

என்ற மூன்று மையங்கள் கொண்டது சிருஷ்டி. இறைவன் இயற்கையானது சிருஷ்டியின் முதற்பகுதி. இயற்கை இறைவனாவது இரண்டாம் பகுதி எனவும், அதை சாதிக்க இயற்கை தன்னை சுருக்கி, தன் ஆன்மிக சாரத்தைச் சேர்த்து மனிதனாகிறது எனவும் கூறுகிறார். இயற்கை பரந்து விரிந்தது. பிரபஞ்சம் முழுவதும் பரவியது. தான் இறைவனாக முதற்படியாக மனிதனாகிறது. மனிதனாகவும், மனிதனுள் ஆன்மாவாகவும் தன்னைச் சுருக்கி, தன் அனுபவத்தை சாரமாக்கி-அன்னமய புருஷன், பிராணமய புருஷன், மனோமய புருஷன்-உச்சகட்டத்தில் மனோமய புருஷனாகிய மனிதனாகியுள்ளது என்கிறார். அடுத்த கட்டம் அடைய இயற்கை முயல்கிறது. அடைவது திண்ணம். ஆனால் அதற்கு 30,000 ஆண்டுகளாகும்.

முப்பதாயிரம் ஆண்டுகளில் இறைவன் தானே சாதிப்பதை, மனிதன் சீக்கிரமாக சாதிக்க முடியும். அதுவே பூரண யோகம். அதை சீக்கிரமாகச் சாதிக்கும் உபாயத்தை சுமார் பத்து ஆண்டு தவ முயற்சியால் கண்டு கொண்டேன் என்றார். அந்த இரகஸ்யத்தை நமக்கு வெளிப்படையாகச் சொல்லிவிட்டார். பகவானையும், அவர் யோகத்தையும், அறிந்தவர் அனைவரும் அறிந்த இரகஸ்யம் அது.

சிருஷ்டி இறைவனுடையது. சிருஷ்டி அவன் லீலை. லீலா விநோதம், சிருஷ்டியின் சிகரம் மனிதன். மனிதனுடைய சிகரம் மனோமய புருஷன். நமக்கு மலை, கடல், மரம், மனிதன், இறைவன் வேறுபட்டவை, நம் நிலையில் அது உண்மை, பரம்பொருளின் பார்வைக்கு மலை இறைவன், கடல் தெய்வம், மரம் கடவுள், மனிதன் ஆன்மா, இறைவன் பரம்பொருள். பல்வேறு ரூபங்களில் இறைவன் காட்சி அளிப்பதை மனிதன் பல்வேறு பேரில் குறிப்பிடுகிறான். எனவே மனிதன் சிருஷ்டியின் சிகரம் என்பதுடன், மனிதன், லீலையிலும் சிருஷ்டியிலும் இறைவனின் சிறப்பான, சிகரமான, திருவுருவமாகும். இறைவனின் சிறப்பான நிலையைப் பெற்றிருப்பதால் மனிதன் லீலையை சிறப்பாக நடத்த முடியும். முப்பது ஆயிரம் ஆண்டில் இறைவன் சாதிக்கக் கூடியதை, அவனது சிறப்பான வடிவமான மனிதன் முப்பது ஆண்டுகளில் அல்லது முன்னூறு ஆண்டுகளில் சாதிக்க முடியும்.

இதை சாதிக்கும் உபாயத்தை யோக இரகஸ்யம் என்றார் பகவான்.

ஓர் ஊரில் நூறு வருஷமாக பல குடும்பங்களிருக்கின்றன. அவற்றிற்கு பல தலைவர்களுண்டு. அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டு கொஞ்ச நாளைக்கு ஒருவர் நாட்டாண்மையாக இருக்கிறார். அந்த ஊருக்கு வேறொருவர் வருகிறார். முதல் மாதத்தில் அனைவரும் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள். அனைவரும் அவரை நாடுகிறார்கள். அவருக்கு அடங்கியிருக்கிறார்கள். அது நடக்கிறது. இது எல்லோரையும் சிந்திக்க வைக்கிறது. இத்தனை நாள் நாம் அனைவரும் இங்கிருந்தோம். தலைமைக்குப் போட்டி போட்டோம். நேற்று வந்தவன் இன்று தலைவன் ஆனான். இதன் இரகஸ்யம் பணமாக இருக்கும். சில சமயம் பட்டமாக இருக்கும். பதவியாக இருக்கும் அரசியலாகவுமிருக்கும். நூறாண்டாக சாதித்ததை, (அல்லது சாதிக்க முடியாததை) ஓராண்டில், ஒரு மாதத்தில் ஒருவர் சாதிப்பது பெரியது. சிறியது பெரியதாகும் உபாயத்தை, இரகஸ்யம் என்கிறோம். உடனே அவன் பெற்றதை - பட்டம். பதவி - அனைவரும் நாடுகின்றனர்.

உடலால் உழைப்பவனுக்கு பலன் கிடைக்க நாளாகும். அறிவால் உழைப்பவனுக்கு பலன் சீக்கிரம் கிடைக்கிறது. உழைப்பின் நிலை உயர்ந்தால், பலன் சீக்கிரமாக வரும். உடல், உணர்வு, மனம், ஆன்மா ஆகியவற்றில் பலன் பெற உடலுக்கு அதிக நாளும், ஆன்மாவுக்கு குறைந்த நாளுமாகும்.

சிருஷ்டியின் இரண்டாம் பகுதியில் வாழ்வு எனும் பிரபஞ்சம் தன்னை சுருக்கி, சாரமாக்கி (essence) ஆன்மாவாக மாற்றி உயர முயல்கிறது.

இதை மனிதன் மேற்கொண்டால், அவனுக்கு இரகஸ்யம் பிடிபடும். யோகம் என்பது உள்மனத்திற்குரியது. மேல் மனத்திற்குரியது வாழ்வு. வாழ்வில் செயல்படுவது புலன்கள். புலன்களைக் கடப்பது எல்லா யோகத்திற்கும் இன்றி யமையாதது, புலன்களை அவித்து, மனத்தை எட்டுவது எந்தத் தியானத்திற்கும் முதற்படி.

மனம் மேல் மனம் (surface), உள் மனம் (depth) என இரு பிரிவாக உள்ளது. யோகம் உள் மனத்திற்குரியது. மேல் மனத்தை விட்டு உள் மனத்தை அடைவது அவசியம், முதற்படி. அதற்கே தியானம், மந்திரம், தந்திரம் பயன்படுகிறது.

மேல் மனத்திற்கு வாழ்வு மட்டும் உரியது. உள் மனத்தில் மூன்று முக்கிய பகுதிகள் அல்லது கதவுகள் உள்ளன. அவை,

1) மனோமய புருஷன்

2) நிர்வாண மார்க்கம்

3) சைத்திய புருஷன்

மேலிருந்து உள்ளே போனால், நாம் எந்த முறையைப் பின்பற்றுகிறோமோ, அதற்குரிய இடத்தை அடைவோம். ஞானயோகி மனோமய புருஷனை அடைகிறான். நிர்வாணத்தைத் தேடும் பௌத்தன், நிர்வாணத்திற்குரிய கதவை அடைகிறான். பூரணயோகி சைத்திய புருஷனை அடைகிறான்.

ஞான யோகம் மனத்திற்கும் எண்ணத்திற்கும் உரியது. தூய்மையான மனம் தியானத்தால் தூய்மையான ஆன்மாவை அடைவது மனோமய புருஷனைத் தொடுவதாகும். மனத்தை நிஷ்டையால் தூய்மைப்படுத்தினால், உள் மனம் திறந்து மனோமய புருஷன் தரிசனம் தருகிறான். இது ஞான யோகம்.

பௌத்தன் எதையும் நம்பமறுப்பவன். வாழ்வு, கர்மம், ஜீவன், ஆன்மா ஆகிய எதையும் ஏற்றுக்கொள்வதில்லை அவன். மனிதன் ஏற்றுக்கொண்டால்தான் எதற்கும் ஜீவனுண்டு. மனிதன் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அதன் ஜீவன் கலைந்து, கரைந்துவிடும் (loses its structure). மேல்மனத்தில் நம்பிக்கை கரைந்து விட்டால், அவன் தியானம் செறிந்து

உள்மனம் திறந்தவுடன் ஜீவனே கரையும் - நிர்வாணநிலை - கதவு அவனுக்குத் திறக்கிறது.

பூரணயோகம் இறைவன் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்து மனிதவாழ்வில் இறைவனை வெளிப்படுத்தி, உடலை திருவுருமாற்றி பூலோக வாழ்வை தெய்வீக வாழ்வாக மாற்ற முனைகிறது.

சிருஷ்டியின் இரண்டாம் பகுதியில் இறைவனுடைய எண்ணம் அதுவே. மனிதனுடைய ஆன்மா அவன் பிறப்பிலிருந்து பிரிந்து தன்னை வந்தடைவதோ, மனித ஜீவன் கரைந்து அவன் மறைவதோ இறைவனுடைய இலட்சியமல்ல. அதைப் பூர்த்தி செய்ய மனோமய புருஷனும், நிர்வாணமும் உதவா. இறைவன் வழி, நம் வழி எனக்கொண்டால், இறைவன் பிரபஞ்சத்தின் அனுபவத்தைச் சுருக்கி, அதன் சாரத்தைப் பிழிந்து, ஆன்மாவாகச் செய்கிறார். பிரகிருதியின் சாரம் புருஷன். அவ்வழியைப் பின்பற்றினால், மனோமய புருஷனை நாடும் தியானம் நமக்கு உதவாது. ஞானத்தைத் தேடும் விசாரம் நிர்வாணத்தைக் கொடுக்க முடியும், வாழ்வின் சாரத்தை அளிக்க முடியாது.

வாழ்வென்பது நம்மைப் பொருத்தவரை செயல்கள். செயல்களின் சுருக்கம் அனுபவம். அனுபவத்தின் சாரம் ஞானமாகிய ஆன்மிகப்பொறி. செயல்களால் நிறைந்த நம் வாழ்விலிருந்து, ஆன்மிகப்பொறியை அடைவதெப்படி?

செயல்களை, செயல்களாகச் செய்தால் அனுபவம் பெருகும். நம்முள் பிரபஞ்சத்தின் சாரமான ஆன்மாவுண்டு. அது நமக்குத் தெரிவதில்லை அதன் ஒளி நெஞ்சில் தெரியும். செயல் எழுந்தவுடன் அதை அனுமதிக்காமல், உள்ளொளிக்கு அதைச் சமர்ப்பித்தால், அனுபவம் பெறுவதற்குப் பதிலாக, நேரடியாக அனுபவத்தின் சாரமான ஞான ஆன்மிகப்பொறி வெளிவரும். இதற்குச் சமர்ப்பணம் எனப்பெயர். முடிவான நிலையில் ஒளிக்குப் பதிலாக ஆன்மாவைக் கண்டு, செயலை ஆன்மாவுக்குச் சமர்ப்பணம் செய்தால், அதற்கு ஆத்ம சமர்ப்பணம் எனப்பெயர்.

ஆத்ம சமர்ப்பணம் நம் மேல் மனத்தைத் திறந்து, உள் மனத்திற்கு நம்மைக் கொண்டு செல்லும். உள்மனம் திறந்து நம்மை வரவேற்கும் பொழுது, நாம் அடைந்த கதவு சைத்திய புருஷனாகும். ஏனெனில் வாழ்வின் சாரம் சைத்திய புருஷனாகும். சைத்திய புருஷன் மோட்சத்தை நாடாது, நிர்வாணத்தைத் தொடமுயலாது வாழ்வின் சாரத்தால் (essence) ஆனதால் வாழ்வை விட்டுப் பிரியாது. வாழ்விலே நின்று, செயலையும் அனுபவத்தையும் சுருக்கி, சாரமாகப் பிழிவதால் வாழ்வு நிலையுயரும். சாரத்தை மையமாகக் கொள்வதால், வாழ்வு ஆன்மிக வழியில் உயரும். மனித வாழ்விலிருந்து தெய்வீக வாழ்வை எட்ட பல நிலைகளுள்ளன. முனிவர், ரிஷி, யோகி, தெய்வம், சத்திய ஜீவன்-என்பதால் உள் மனத்தில் சைத்திய புருஷனை தரிசித்த பின் அங்கிருந்து இந்த நிலைகள் மூலம் சத்திய ஜீவியத்தை அடையலாம். சத்திய ஜீவியம் என்பது பூவுலகில் தெய்வீக வாழ்வாகும். பத்து வருஷ யோக முயற்சியால் பகவான் இந்த இரகஸ்யத்தைக் கண்டார். இந்த இரகஸ்யம் தெரியாமல் இக் குறிக்கோளை எட்ட முடியாது. தெரிந்தால் எட்டலாம். தான் அதை எட்டியதால், இரகஸ்யத்தை சொல்லியதுடன், தன் யோகசக்தியை நம் யோகம் பூர்த்தியாக நமக்களிக்கிறார்.

நாம் அதை நேரில் பெறமுடியாது என்பதால், அந்த சக்தியின் அவதாரமான அன்னை மூலம் நமக்கு தன் யோகசக்தியான யோகசித்தியை அளிக்கிறார். ஆத்ம சமர்ப்பணம் ஸ்ரீ அரவிந்தரின் யோக சக்தியை நம்முள் செயல்பட வைத்து, உள் மனக் கதவைத் திறக்கும் நிகழ்ச்சியைக் காணலாம். ஆரம்பத்தில் சொல்லியது போல் இது எல்லோருக்கும் உரியதல்ல, பக்தர்களுக்குரியது பிரார்த்தனை பலிப்பது. யோகம் 'அழைப்பு'ள்ளவர்க்கே உரியது. நமக்கு அழைப்பிருக்கிறதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது? அன்னை நினைவு நம்மை மீறி எழுந்து, ஜீவன் முழுவதும் பரவி, பரவசப் படுத்தினால், அது அடிக்கடி நிகழ்ந்தால், அழைப்பு பலிக்கும். இரவும், பகலும் எந்நேரமும் இடைவிடாது நெஞ்சமும், ஜீவனும், அன்னையைத் தானே நினைந்து விழைந்தால் அந்நிலை தொடர்ந்த நெகிழ்ச்சியில் முடிந்தால், வாழ்வின் ஒரே குறிக்கோள் யோகமானால், நாம் யோகத்தை நாடுவதற்குப் பதிலாக, யோகசக்தி நம்மை மீறி ஆட்கொண்டால், 'அழைப்பு' இறைவனின் அழைப்புள்ளது என்று பொருள். அவர்கள் யோகத்தை கைக்கொள்ளலாம். அல்லது அந்த நிலையை எய்தியபின் யோகத்தை நாடலாம். பக்தி சிறந்தவர் பல்லாயிரக்கணக்கானவர். அவர்கள் செய்யக்கூடியதொன்றுண்டு. ஆத்ம சமர்ப்பணத்தை மேற் கொண்டால் அவ்வழி திறக்கும். ஆத்ம சமர்ப்பணத்தை யோக நிலையை உணருவதற்காக மேற்கொண்டால், இச்சோதனை பலன் தரும்.

எண்ணம், உணர்வு, செயல் ஆகியவற்றை சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து - ஒன்றையும் தவறவிடாமல், without missing one movement - அன்னையை அழைத்து மேற்கொண்டால், ஒரு கணம் மனம் திறந்து ஜீவன் நிறைவது தெரியும். இடைவெளியின்றி செயல்களை சமர்ப்பணம் செய்தால் அவற்றினூடே எழும் எண்ணங்களையும் சமர்ப்பணம் செய்தால், அவற்றைப் பற்றிய உணர்வுகளையும் உள்ளொளிக்கு ஒன்றுவிடாமல் சமர்ப்பணம் செய்தால், சமர்ப்பணத்தை ஆரம்பிக்குமுன் அன்னையை தவறாது ஒவ்வொரு முறையும் அழைத்தால், அன்னையின் அருட்சக்தி ஸ்ரீ அரவிந்தரின் யோகசித்தியின் சக்தியை சமர்ப் பணத்தின் மூலம் மேல் மனத்தை நிறைத்து, உள் மனத்தைத் திறந்து, சைத்தியபுருஷனை பொறியாகக் காட்டி யோகசித்தியின் இலட்சணத்தை நமக்குணர்த்தும். அப்படி நிறைந்த க்ஷணம் இறைவன் நம்முள் வரும் தருணம். பக்தியில் திளைத்தவர், நம்பிக்கையில் மூழ்கியவர் செய்து பார்க்கக்கூடிய சோதனை இது. சோதனை ஆத்ம பலன் தரும். தொடர்ந்து செய்வது நம் ஆர்வத்தைப் பொருத்தது. பூர்வஜென்ம புண்ணியமில்லாவிட்டாலும், இதுவரை இறைவனின் அழைப்பில்லாவிட்டாலும், இன்று இந்த க்ஷணம், அதை நாம் முழுமையாக விழைந்தால், அன்னையை முழுமையாக நாடினால், ஆத்ம சமர்ப்பணத்தை ஒரே குறிக்கோளாகக் கொண்டால், இதுவரை நமக்கில்லாத ஆன்மிக வாழ்வையும் அன்னை இன்று நம் முழுமையின் பரிசாகப் பெற்றுத் தருவார். ஜீவன் முழுவதும் ஆர்வத்தால் நிறைந்த நேரம் அன்னை ஆன்மாவில் மலரும் நேரம்.

* * *



book | by Dr. Radut