Skip to Content

பகுதி 11

தாயார் : இதுவரை நாம் பேசியது எல்லாம் ஜீவாத்மா போன்றது. இதை அனைவரும் பின்பற்றுவது சைத்தியப்புருஷன் ஆகும்.

கணவர் : இந்த ஒரு மாதத்தில் நமக்கு நூறு சந்தர்ப்பங்கள் எழுந்தன. பணமில்லாமல் காரியம் நகராது என்று, ஓர் இடத்திலும் பணத்தைப் பற்றிப் பேச்சே எழவில்லை. இடம் பெரியது என்பதால் எவரும் கேட்கவில்லை.

பார்ட்னர் : இப்பொழுதெல்லாம் டெலிபோன் இன்ஜினீயர் வீட்டில் டெலிபோன் ரிப்பேர் செய்தாலும் மாமூல் நிற்காது. அது இல்லாவிட்டால் வேலை நடக்காது. கேட்கவில்லை என்பது நமக்குள்ள செல்வாக்கால் அன்று. நம்மைவிட அதிகச் செல்வாக்குள்ளவர் எல்லாம் பணம் தருகிறார்கள். அன்னையிருப்பதால் எவரும் கேட்கவில்லை.

பெண் : இது எப்படியம்மா புரியும்?

கணவர் : அதுதான் புத்தி என்பது.

தாயார் : இது புரிந்தால்தான் தொடர்ந்து மேலே போகலாம்.

சிறியவன் : எனக்குத் தோன்றவில்லையே.

கணவர் : எனக்கும் புரியவில்லை.

தாயார் : புரிவது அருள், செய்வது பேரருள்.

ஒரு நாள் கணவரும், பெரியவனும் வந்து தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் பக்கத்துத் தெருவிலிருந்து ஒரு டிபுடி கலெக்டர் வந்தார். அனைவரும் தாயாரைச் சந்திக்க வந்துள்ளனர். அந்த டிபுடி கலெக்டர் பெரியவனுடைய நண்பனின் மாமா.

கணவர் : ஒரு நல்ல காரியம் நம்மால் முடியும் என்றால் செய்வது நல்லதுதானே.

பெரியவன் : அதுவும் கேட்காமல் செய்வது உயர்ந்ததன்றோ?

டி.கலெக்டர் : எப்படி இதை நீங்கள் நம்புகிறீர்கள்?

கணவர் : உங்கள் நண்பருக்குக் குணமானால் நம்புவீர்களா?

டி.கலெக்டர் : குணமானால் உங்களாலாயிற்று என்று எப்படித் தெரியும்?

பெரியவன் : வேறு எப்படிக் குணமாகும்?

டி.கலெக்டர் : இத்தனை நாள் மருந்து சாப்பிட்டதால் இன்று குணமாயிற்று என்று கொள்ளலாமன்றோ?

கணவர் : அதுவும் சரிதான். என் மனைவி பதில் சொல்வாள்.

பெரியவன் : அம்மா, எல்லாக் கேள்விகட்கும் பதில் சொல்வார்கள்.

டி.கலெக்டர் : இது முற்றிய கான்சர். குணமாகும் என உங்கள் அம்மா கியாரண்டி கொடுப்பார்களா? பையன் அம்மாவை அழைக்கப் போனான். அம்மாவுக்கு வரும் சந்தர்ப்பமில்லை. கணவரே மனைவியைக் காண வந்ததால், மனைவி சிரமத்தைப் பாராட்டாது எழுந்துவந்து அனைவருடனும் கலந்துகொண்டார்.

டி.கலெக்டர் : பிரார்த்தனை கான்சரைக் குணப்படுத்தும் என்பது பொருத்தமாகாது.

கணவர் : என் மனைவியை உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பொதுவான தத்துவ விவாதத்தை எடுத்துக்கொள்ளலாம். இன்று உடம்பு முடியவில்லை.

டி.கலெக்டர் : எனக்கு உத்தரவாதமளிப்பீர்களா?

தாயார் : எதற்கு, ஏன்?

டி.கலெக்டர் : கான்சரைப் பிரார்த்தனை குணம் செய்யும் என்று. அதுவும் உங்கள் பிரார்த்தனையால் என் நண்பர் கான்சர் குணமாயிற்று என்பதை நிரூபிக்கவேண்டும்.

தாயார் : பிரச்சினை என்ன?

பெரியவன் : கான்சர்.

கணவர் : கான்சருக்குப் பிரச்சினையில்லையே.

டி.கலெக்டர் : உங்கள் கணவர் கூறுவது பிரச்சினை.

தாயார் : (கணவரை நோக்கி) என்ன கூறினீர்கள்?

கணவர் : நீ அவருடைய நண்பர் கான்சரைக் குணப்படுத்துவாய் என்றேன்.

தாயார் : (டிபுடி கலெக்டரை நோக்கி) நான் அன்னையைப் பற்றிப் படிப்பேன். நான் படிப்பதை என் கணவரிடம் சொல்வேன். கணவர் நான் பொதுவாகப் பேசியதை இப்படிப் புரிந்துகொண்டிருக்கிறார்.

டி.கலெக்டர் : அப்படியானால் என் நண்பருக்குக் குணமாகாதா?

கணவர் : என் மனைவி அடக்கமாகப் பேசுகிறாள். அவளால் முடியும்.

தாயார் : நோயாளிக்கு அன்னைமீது நம்பிக்கையிருந்தால் அவரே பிரார்த்தனை செய்யலாம்.

டி.கலெக்டர் : அவருக்கு நம்பிக்கையில்லை. உங்கள் பிரார்த்தனையால் பலிக்கவில்லை என நிரூபிப்பதே அவர் நோக்கம்.

தாயார் : என்ன பிரச்சினை, அது யாருடையது?

டி.கலெக்டர் : உங்கள் கணவர் சொல்வது, இல்லை' என நான் நிரூபிக்க விரும்புகிறேன்.

தாயார் : என் கணவர் என்னைப் புரிந்துகொள்ளாமல் பேசியிருக்கிறார்.

டி.கலெக்டர் : கணவரிருக்கட்டும். உங்களால் என் நண்பரைக் குணப்படுத்த முடியுமா?

தாயார் : இந்த கேள்வி ஏன் எழவேண்டும்? எனக்கு அதெல்லாம் முடியாது.

டி.கலெக்டர் : நான் ஜெயித்துவிட்டேன்.

தாயார் : நான் போகலாமா?

கணவர் : ஏன் இப்படிப் பேசுகிறாய்? கலந்து பேசக்கூடாதா?

தாயார் : அன்னை விஷயம் அவரவர் சொந்த நம்பிக்கை. மூன்றாவது பேர்வழியின் விவாதத்திற்குரியதன்று.

15 நாட்கள் கழித்து டிபுடி கலெக்டரும் அவர் நண்பரும் வந்தார்கள். சற்று அடக்கமாக இருந்தார்கள். இந்த 15 நாட்களில் 15 மாதத்திலில்லாத குணம் நோயாளிக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் வந்திருக்கிறார்கள். தாயாரைக் கூப்பிட்டதற்கு, "என்னிடம் கான்சர், அன்னை தவிர வேறு எது பேசவேண்டுமானாலும் வருகிறேன். அவற்றைப் பேச என்னைக் கூப்பிடாதீர்கள்'' எனக் கணவரிடம் கூறினார். எப்படி இக்குணம் தெரிகிறது எனக் கணவர் கேட்டார். எதிர்த்துப் பேசும்பொழுது அன்னையையே நினைத்ததால் அக்குணம் தெரிகிறது என்று மனைவி சொல்லியதையும் கணவர் கலெக்டரிடம் சொல்லி விட்டார். டிபுடி கலெக்டர், மனைவியைப் பார்க்கவேண்டும் என்றும், கான்சரைப் பற்றிப் பேசவில்லை என்றும், அன்னையைப்

பற்றி மட்டும் பேசுவேன் என்றார். மனைவி அதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

நோயாளி : எனக்கு அன்னைப் பற்றிச் சொல்வீர்களா? நான் AG's officeஇல் A.O.வாக வேலை செய்கிறேன். எனக்கு குணமானால் AG's officeஇல் உள்ளவர்கள் அன்னை பக்தர்கள் ஆகிவிடுவார்கள்.

மனைவி : அன்னையைப் பற்றி அறிய ஏராளமான நூல்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் உள்ளன.

டி.கலெக்டர் : ஏன் நீங்கள் அன்னையைப் பற்றி எங்களுக்குச் சொல்லக் கூடாது? உங்கள் கணவர் எல்லோரிடமும் பேசுகிறாரே?

மனைவி : நான் அன்னையின் பக்தை. அதைப் பிறரிடம் எப்படிப் பேசுவேன்?

டி.கலெக்டர் : என்ன தவறு?

மனைவி : ஓர் இளைஞனுக்கு ஒரு பெண் மீது தீராக் காதலிருந்தால் அதைப் பிறரிடம் பேசுவானா?

நோயாளி : அன்னை தெய்வமாயிற்றே.

மனைவி : பலருக்குத் தெய்வம். எனக்குச் சொந்தமானவர். நான் பேச முடியாது.

நோயாளி : எனக்கு 15 நாட்களில் நம்பிக்கையில்லாதபொழுது நல்ல குணம் தெரிகிறது.

மனைவி : நீங்கள் சாப்பிட்ட மருந்தாலிருக்கக் கூடாதா? எப்படி அன்னையால் என நினைக்கிறீர்கள்?

டி.கலெக்டர் : இந்த 15 நாட்களும் அன்னையைப் பற்றித்தான் பேச்சு. அதனால் நம்புகிறேன்.

மனைவி : இந்தப் 15 நாட்களில் இருவர் வீட்டிலும் ஏராளமான தவறுகள் நடந்திருக்குமே.

நோயாளி : ஆமாம், ஏன்?

மனைவி : நாம் வேறு விஷயங்கள் பேசுவோம்.

மனைவி எழுந்து போய்விட்டபின் மீதி நால்வரும் தொடர்ந்து விவாதிக்கிறார்கள். அதாவது,

பெரியவன் : அப்பா, அம்மா யாரிடமும் அன்னையைப் பற்றிப் பேசமாட்டார்கள் என உங்களுக்குத் தெரியுமே.

கணவர் : டிபுடி கலெக்டர் நண்பராயிற்றே, அவருக்கு உதவலாம் என நினைத்தேன்.

பெரியவன் : அவர் உதவி கேட்கவில்லையே.

டி.கலெக்டர் : எனக்கு உதவி வேண்டும், விபரம் தெரியவேண்டும்.

நோயாளி : அம்மாவுக்கு அதிக பக்தி. நாம் அன்னையைப் பற்றி எளிதாகப் பேசுவது அவர்கட்குப் பிடிக்கவில்லை.

கணவர் : எங்களுக்கெல்லாம் சொல்வதைப்போல் உங்களுக்கும் சொல்வாள் என எதிர்பார்த்தேன்.

பெரியவன் : நமக்கே அம்மா சுலபமாகச் சொல்வதில்லையே.

நோயாளி : தம்பி, எனக்குக் குணமாக என்ன செய்யலாம்.

பெரியவன் : அம்மா என்ன சொல்வார்கள் என எனக்குத் தெரியும். 3 நாட்கள் இடைவிடாமல் பிரார்த்திக்கச் சொல்வார்.

டி.கலெக்டர் : 3ஆம் நாள் குணமாகுமா?

பெரியவன் : கேள்வி கேட்டால் பதில் வரும், குணம் வாராது.

நோயாளி : கேலி அப்புறம். அதுபோல் குணமாயிருக்கிறதா?

பெரியவன் : குணம் உதாரணத்திற்கில்லை, நம்பிக்கைக்கு.

டி.கலெக்டர் : 3 நாட்களில் குணமாகுமா? 15 நாட்களில் ஏராளமான தவறுகள் ஏற்பட்டன அம்மாவுக்கு எப்படித் தெரியும்?

பெரியவன் : இப்படியெல்லாம் பேசினால் அப்படியெல்லாம் நடக்கும்.

நோயாளி : மதரை மறுத்துப் பேசினால் எப்படிக் குணமாகும்?

பெரியவன் : மதரையே நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் அல்லவா?

டி.கலெக்டர் : அந்த நினைவுக்கு இந்த பலன் உண்டா? அடுத்த 15, 20 நாட்களில் அவர் பூரணமாகக் குணமானார். தாயாரைப் பார்க்க அவரும், டிபுடி கலெக்டரும் பிரியப்படுகிறார்கள். தாயார் ஊரிலில்லை. வந்தபிறகும் அவர்களைச் சந்திக்க விரும்பவில்லை. இடைப்பட்ட நாட்களில் கான்சர் குணமானதைப் பற்றியே பேச்சு, வேறில்லை.

தாயார் : நீங்கள் எது செய்வதானாலும் அன்னையை அதில் சம்பந்தப்படுத்தவேண்டாம். அதைச் செய்தாலும், என்னைப் பிறருடன் சம்பந்தப்படுத்தாதீர்கள்.

கணவர் : நல்ல காரியமன்றோ!

தாயார் : இது கெட்ட காரியம் என்கிறார் அன்னை.

கணவர் : அவர் ஒரு டிபுடி கலெக்டர். நண்பர் AG's officeஇல் A.O பெரிய உத்தியோகஸ்தர்களாயிற்றே.

தாயார் : அதெல்லாம் நட்புக்குரியது. பக்தி பவித்திரமானது. நட்பையும் பக்தியையும் இணைக்கலாமா?

கணவர் : நீ சொல்வனவற்றையெல்லாம் நான் அவரிடம் சொல்வேன். அவர் உன்னிடம் பேசப் பிரியப்படுகிறார்.

தாயார் : நான் அதற்குத் தயாரில்லை.

கணவர் : எதிர்த்துப் பேசினால் கான்சர் குணமாகிறது என்றால் வழிபட்டால் எப்படியிருக்கும்!

தாயார் : அப்பலனிருக்காது.

பெரியவன் : ஏம்மா?

தாயார் : வழிபாட்டுக்கு எதிர்ப்புக்குள்ள தீவிரமில்லை.

கணவர் : குணம் சக்திக்கா, தீவிரத்திற்கா?

தாயார் : தீவிரத்திற்கு.

கணவர் : நிறைய தவறுகள் எப்படி நடந்தன?

தாயார் : எதிராகப் பேசுவதால்.

கணவர் : இரண்டும் கலந்திருக்குமா?

தாயார் : கலப்பை நாம் காணாத இடமுண்டோ?

பெரியவன் : அந்தக் கான்சர் பேஷண்டும், நீங்களும் பேசுவதைக் கேட்க எனக்கு ஆசையாக இருக்கிறதம்மா.

கணவர் : வழிபாட்டுக்கு எப்பொழுது தீவிரம் வரும்?

தாயார் : ஆசை போனபிறகு வரும். டிபுடி கலெக்டர் முதலில் வந்ததிலிருந்து எல்லாம் அப்படியே நின்று போய்விட்டதைக் கவனித்தீர்களா?

கணவர் : இனி நான் அவர்களிடம் தொடர்புகொள்ளவில்லை.

பார்ட்னர் வந்தார். முகமும், உடலும் கனிந்துபோய் பழுத்த பழமாக இருந்தார். ஏதோ பெரிய விஷயத்தோடு வந்திருக்கிறார். பேச முடியவில்லை. பேசப்பிரியப்படவில்லை. பெரியவனைப் போகச் சொல்லி விட்டார்கள்.

பார்ட்னர் : இதுவரை நடந்தது நினைக்க முடியாத பெரியது. நீங்கள் சொன்னபடியெல்லாம் இத்தனை நாட்களாக - கெட்டதை விலக்கி, நல்லதைச் சேர்த்து - மனத்தைப் பக்குவப்படுத்திப் பவித்திரமாக்க முயன்றேன். இந்த உலகத்திலேயே இல்லை நான். உள்ளும் புறமும் தித்தித்தது. இன்று காலை நம் பேங்க் சேர்மன் வந்திருப்பதாகக் கூப்பிட்டு அனுப்பினார்கள், போனேன். நடந்தது நம்பக்கூடியதாக இல்லை. இப்பவும், பேச நா எழவில்லை. இந்த அதிசயம் நடக்கும் என நான் நினைக்கவில்லை. நாணயம் முக்கியமானது எனக் கண்டேன்.

அவரால் பேசமுடியவில்லை எனக் கண்டு மேலும் அவரிடம் விபரம் கேட்கவில்லை. அவர் தழுதழுத்துப்போய் கொஞ்ச நேரமிருந்து போய்விட்டார். நெடுநாள் எவரும் அதைக் கிளறவில்லை. கணவருக்குத் தாங்கவில்லை என்ற நிலையில் கணவனும் மனைவியும் கலந்தனர்.

கணவர் : நான் போய்ப் பார்ட்னரைக் கேட்டுவிடுகிறேன். இனி எனக்குத் தாங்காது.

மனைவி : தாங்காது என்ற நேரம் கேட்டால், தாங்கமுடியாத பாரம் தலைக்கு வரும்.

கணவர் : என்னால் முடியவில்லை.

மனைவி : முடியவில்லை என்பதால், கூடிவந்தன எல்லாவற்றையும் நாசமாக்கலாமா? மனிதனுடைய பிரச்சினையே அதுதானே. நாமே அதற்குப் பலியாகலாமா?

அந்த நேரம் பார்ட்னரிடமிருந்து போன் வந்து, கணவரிடமிருந்து ஏதோ ஒரு சிறு செய்தி வேண்டுமெனத் தெரிந்தது. கணவர் நேரடியாகப் போய்வரப் பிரியப்பட்டார். மனைவிக்கு இஷ்டமில்லை. இஷ்டப்படாமலிருப்பது தமக்குச் சரியில்லை என்பதால் சமாளித்துக்கொண்டு சந்தோஷமானார். பார்ட்னரும் கணவரும் சந்தித்துப் பேசினர். பார்ட்னரைப் பார்த்தபின் கணவருக்குத் தாம் நினைத்த கேள்வியைக் கேட்கும் தைரியமில்லை. புறப்படும் நேரத்தில் பார்ட்னரே பேசினார்.

பார்ட்னர் : நேரம் வரட்டும்.

கணவர் : நான் குறுக்கே நிற்கமாட்டேன்.

பார்ட்னர் : நாம் மூவரும் பேசவேண்டியது.

கணவர் : நான் படும் அவசரம் என் மனைவிக்குச் சம்மதமில்லை.

பார்ட்னர் : எனக்கு உள்ளே அவசரம் உள்ளவரை பேசக் கூடாதில்லையா? நாணயம் நாட்டை ஆளும், அதற்கும் மதிப்புண்டு என்பது விசேஷம்.

இதன்மூலம் கணவர் விஷயம் எத்தனை பெரியது எனப் புரிந்துகொண்டார். ஓரளவு மனம் அடங்கியது. தாம் பக்குவப்படுவதே சரி என சும்மாயிருந்துவிட்டார். மனம் ஓரளவு அடங்கினாலும் உடல் பதட்டம் குறையவில்லை. வீடு முழுவதும் மாறிவிட்டது. தாயார் மேலும் அமைதியடைந்தார். தமக்கு எந்த ஆழத்தில் அமைதி தேவையோ அங்கில்லை என அவர் அறிவார். அவர் கனவில் அன்னை தோன்றினார். இந்தியா படத்தில் நடுநாயகமாக இருந்த அன்னை சிறு உருவம் பெற்று பாக்டரியிலும் வேறு பல இடங்களில் அன்னை தோன்றினார். க்ஷண நேரம்தான். விழிப்பு வந்தது. உடலெல்லாம்

பூரித்தது. சுமார் 20 அல்லது 30 இடங்களில் பாக்டரி பரவப்போவதை தாயார் தெளிவாகப் புரிந்துகொண்டார். அதற்குரிய ஆன்மீகத் தகுதி தாம் பெறவேண்டுமென நினைத்தார். கனவு சூட்சுமம், நம் உலகம் ஸ்தூலம். மகான்கள் சூட்சுமத்தில் கண்டது பலிக்க 100 ஆண்டுகளாகியிருக்கிறது. கனவை எப்படிப் புரிந்துகொள்வது? பார்ட்னருக்கு நண்பராக மேல்மட்டத் தொடர்புகள் உண்டு. அந்த அளவில் அவருடைய மதர் பக்தியை அறிந்த ஒருவர் அவரை அணுகி தம் பாக்டரியில் 2000 தொழிலாளிகள் அடாவடியாக வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்திருப்பதாகவும், அது நடந்தால் பல கோடி நஷ்டமாகும் எனவும், அதற்கு ஒரு வழி வேண்டும் எனவும் செய்தி வந்துள்ளது. தொழிலாளிகட்கு சர்க்கார் ஆதரவிருப்பதால் நியாயத்திற்குக் கட்டுப்படமாட்டேன் என்கின்றனர். பார்ட்னர்மூலம் பலன் பெற விரும்புகின்றனர். அதனால் பார்ட்னர் வர இருக்கிறார் என்று செய்தி வந்தது. பார்ட்னர் வந்தார். அந்த ஆலையில் தொழிலாளிகள் கேட்டதைக் கொடுத்தபின் வாங்க மறுத்து, ஸ்டிரைக் வர இருக்கிறது எனக் கூறினர். தாயார் அதுபோன்ற நிகழ்ச்சி முதலாளியிடமோ, மேனேஜ்மெண்ட்டிடமோ உண்டா எனக் கேட்டு அனுப்பினார். பல உண்டு என பதில் வந்தது. மானேஜ்மெண்ட் சட்டமாக இனி அப்படிச் செய்யக்கூடாது என முடிவு செய்தால் ஸ்டிரைக்கால் நஷ்டம் வாராது என்று தாயார் சொல்லியதை முதலாளி கேட்டு ஆச்சரியப்பட்டு நம்பமுடியாமல் நேரில் பார்க்க விரும்பினார்.

தாயார் : வேலை முடிவதுதான் முக்கியம். என்னைப் பார்ப்பதன்று.

பார்ட்னர் : முதலாளி உங்களைச் சந்திப்பது நல்லது என நினைக்கிறார்.

தாயார் : நான் பார்க்க மறுக்கவில்லை. விசேஷம் பார்ப்பதில் இல்லை. மேனேஜ்மெண்ட் மனம் மாறுவதிலிருக்கிறது. சரி, நான் அவரை 2 நாட்கள் கழித்துச் சந்திக்கின்றேன்.

அவர் வருவதன்முன் தொழிலாளிகள் ஸ்டிரைக் நோட்டீஸை வாபஸ் செய்தனர். அவரால் நம்பமுடியவில்லை. அதன்பின் பொறுக்க முடியாமல் பார்ட்னருடன் தாயாரைப் பார்க்க வந்தார்.

முதலாளி : வேலை முடிந்தபின்னும் என்னால் நம்ப முடியவில்லை.

பார்ட்னர் : முதலாளிக்கு ஸ்டிரைக்கைவிட இதைப் புரிந்துகொள்வது முக்கியம்.

முதலாளி : எனக்கு அன்னை முக்கியம். அம்மா முக்கியம். சற்று விவரம் சொல்லுங்கள்.

தாயார் : உலகம் மனத்திற்குக் கட்டுப்பட்டது. மனம் மாறினால் மக்கள் மாறுவார்கள்.

முதலாளி : நாங்கள் மாறியனவெல்லாம் ஆயிரம், பத்தாயிரம். ஸ்டிரைக் கோடிக்கணக்காகும்.

பார்ட்னர் : முதலாளி உங்களுக்கு ஏதாவது செய்யப் பிரியப்படுகிறார்.

தாயார் : ஆலையில் அன்னை முறைகளைக் கடைப்பிடித்தால் எனக்குச் சந்தோஷம்.

முதலாளி : இல்லை, தனிப்பட்ட முறையில் நான் என்ன செய்யலாம். என் ஆபீசர்களைச் சந்தித்துப் பேச முடியுமா?

தாயார் : எனக்கு மேடைப் பிரசங்கம் வாராது.

முதலாளி : நான் மீண்டும் வருகிறேன். மறுபடியும் உங்களைப் பார்க்க வேண்டும். நான் உங்கள் கம்பெனிக்கு ஏதாவது உதவ முடியுமா?

பார்ட்னர் : வேண்டுமானால் வந்து கேட்கிறோம். எந்தச் சட்டப்படி இது நடந்தது?

தாயார் : நம் செயல் பிறர் செயல் பிரதிபலிக்கிறது என்பது சட்டம். எந்தப் பிரச்சினைக்கும் இதேபோல் தீர்வு காணலாம்.

முதலாளி : எனக்குத் தொழிலாளிகளிடம் 15 அல்லது 20 வகைகளில் பிரச்சினைகளுண்டு.

தாயார் : 20 வகையான தொடர்புகள் பிரச்சினைகளைத் தீர்க்கும்.

முதலாளி : கண்ணால் பார்த்தபின்னும் நம்பமுடியவில்லை. தாயார் : நம்பிக்கை புறத்திலிருந்து எழுவதில்லை, அகத்திற்குரியது.

முதலாளி போனபின் குடும்பம் சந்தித்துப் பேசியது. பெண் தன் அனுபவத்தைக் கூறினாள்.

பெண் : கணவனும் மனைவியும் ஸ்கூட்டரில் போகும்பொழுது மனைவியின் கால் லாரி அடிபட்டு ஆஸ்பத்திரிக்குப் போனபொழுது, "இனி எலும்பு கூடாது. பல இலட்சம் செலவாகும். பல மாதங்களாகும். நடப்பது என்பது இனியில்லை'' என்றனர். அவள் உறவினர் அனைவரும் கூடிப் பிரார்த்தனை செய்தனர். 1 1/2 மணி நேரப் பிரார்த்தனை உலகை உலுக்கியது. பூவரசம் பூவை ஒவ்வொருவரும் கொண்டு வந்து சமர்ப்பித்தனர். ஹாஸ்பிடல் பாஷை மாறியது. கூடாதது என்றது கூடியது, பல மாதங்கள் ஒரு வாரமாயிற்று, பல இலட்சமில்லை சிறு செலவு, மீண்டும் இயல்பாக நடக்கிறார்கள்.

தாயார் : நம்பவேண்டும் என்பதற்கு வேறு உதாரணம் தேவையில்லை.

கணவர் : எனக்கு இந்த நம்பிக்கையில்லை.

பெரியவன் : எப்படிம்மா நம்பிக்கை வரும்?

சிறியவன் : நல்லவனாக இருந்தால், நம்பிக்கை வரும்.

பெண் : இந்த நிகழ்ச்சி என்னை ஓர் ஆட்டு ஆட்டிவிட்டது.

பார்ட்னர் மீண்டும் அடிக்கடி வர ஆரம்பித்தார். பேச்சில்லை, மௌனம் மந்தகாசமாக முகத்தில் மலர்ந்தது. எல்லா விஷயங்களையும் ஊன்றிக் கவனித்தார். ஆழ்ந்த சிந்தனை அவரை ஆட்கொள்வது தெரிகிறது. எதைச் சிந்திக்கின்றார் எனத் தெரியவில்லை. கம்பெனியில் சுத்தம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. எல்லாத் துறைகளிலும் அன்னையைப் பெரும்பாடுபட்டு வெளிப்படுத்துகிறார். கணவர் இம்மாற்றத்தால் நல்ல முறையில் பாதிக்கப்பட்டுள்ளார். பார்ட்னர் கம்பெனியிலும் பேசுவதில்லை. கணக்கு அன்றாடம் கச்சிதமாக முடிந்தது. காசு கொடுத்தது மறந்து போய்விட்டது. காரியங்கள் தாமாக தங்களை அமைத்துக் கொள்கின்றன. ஓரிடத்தில் நண்பராலும், அடுத்த இடத்தில் நல்லவராலும், மற்ற இடத்தில் சந்தர்ப்பத்தாலும், மீதியிடங்களில் காரணம் புரியாமலும், காசில்லாமல் காரியங்கள் நடைபெறுகின்றன. வீட்டில் பிள்ளைகள் நடைமுறை முழுவதும் மாறியிருக்கிறது. மேலெழுந்த மாற்றமானாலும், பார்வைக்குப் பூரண மாற்றமாகத் தெரிகிறது. அதற்குரிய பலன் தெரிகிறது. பக்குவம் வந்ததைப்போல் நடக்கின்றனர். கார் வந்துவிட்டது. ஆனால் அனைவரும் பழையபடியே இருக்கின்றனர். தேவைக்கு மட்டுமே கார் பயன்படுகிறது. எல்லார் மனங்களிலும் இருந்த கார், இப்பொழுது கார் வந்தபின் எவர் மனத்திலும் இல்லை. அஸ்திவாரத்தில் அமைதி சேர்கின்றது. ஒரு நாள் பார்ட்னர் கணவரிடம் சொல்லியனுப்பிவிட்டு வந்தார். பிள்ளைகள் வீட்டிலில்லாத நேரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பார்ட்னர் : அதிர்ஷ்டம் என்பது அன்னையின் ஓர் துளி என என்னால் அறிய முடிந்தது.

கணவர் : நான் அடியோடு மாறிவிட்டேன்.

தாயார் : மாறியவர் சொல்லமாட்டார்கள், மாற முயல்பவர்கள் சொல்வார்கள்.

கணவர் : இதைக் கடந்த மாறுதலுண்டா?

பார்ட்னர் : நான் மாற ஆரம்பித்துள்ளேன் என நினைக்கிறேன்.

கணவர் : உங்களை அடையாளமே தெரிந்துகொள்ள முடியவில்லையே.

பார்ட்னர் : பாங்க் சேர்மனைச் சந்தித்ததாகச் சொன்னேன். வெளிநாட்டுப் பணம் ஏராளமாக வருகிறது. ஏற்றுப் பயனடையும் கம்பனிகளில்லை என்பதால் வெளிநாட்டு மூலதனம் நம் நாட்டில் நாணயமான நல்லவர்களைத் தேடியிருக்கிறார்கள். நம் பாங்க், நம் கம்பெனியைக் குறிப்பிட்டபின் அவர்கள் ஆராய்ச்சியில் நாம் தேறினோம். நமக்கு நாணயத்துடன், திறமையும் இருப்பதாகக் கணித்துள்ளனர். அவர்கள் முடிவு,

  • நமது திறமைக்கேற்ப எது செய்தாலும், எந்த அளவில் செய்தாலும் பாங்க் சட்டங்களை ஒதுக்கிவிட்டு நமக்குப் போதுமான மூலதனத்தை முழுமையாகத் தர விரும்புகிறார்கள்.
  • நமது இன்றைய நாணயம் என்றும் திறமையாக இருக்க வேண்டும்.

அவர்கட்கு நம்மீதுள்ள திருப்தி, நமக்கு நம்மீது ஏற்பட வேண்டும்.

கணவர் : அப்படியானால் நம் கம்பெனி இந்தியா முழுவதும் பரவிவிடும்.

பார்ட்னர் : அதற்குரிய தகுதி நம் நாணயம், நம் ஜீவன் முழுவதும் பரவவேண்டும்.

தாயார் தம் கனவிற்குரிய அர்த்தத்தை உணர்ந்தார். இதுவரை ஏற்பட்ட மாறுதல்கள் நல்லவை. ஆனால் போதுமானவையில்லை. தம் சமர்ப்பணத்தை மேலும் தொடர முடியாமல் தவிப்பதை உணர்ந்தார்.

பார்ட்னர் : என் நண்பர் ஒருவர் அடிக்கடி என்னைச் சந்திப்பதுண்டு. அவர் பேராசிரியர். நான் அன்னையை ஏற்றதிலிருந்து அவர் அடிக்கடி வர ஆரம்பித்தார். அன்னையைப் பற்றிப் பேசினால் ஆர்வமாகக் கேட்பார். கேட்பதுடன் சரி. நேற்று வந்தார். தமக்கு V.C. பதவி வந்துள்ளதாகவும், தம் சர்வீஸுக்கும், வயதிற்கும் அது இல்லை எனவும், அத்தனையும் என்னால்தான் எனவும் கூறினார். ஏன் அது நடந்தது என எனக்குப் புரிகிறது. அவர் அன்னைச் சூழலின் தொடர்பைப் பெற்றதால் வருகிறது. சூழலுக்கு இந்த சக்தியிருந்தால் சக்திக்கு அதிகமாக இருக்குமல்லவா?

கணவர் : எனக்கு அவரைத் தெரியும். ஆச்சரியமான விஷயம்.

பார்ட்னர் : நமக்கு என்ன வந்துள்ளது எனப் புரிய நாளாகும்.

தாயார் : அது புரிவதும், அன்னையைப் புரிவதும் ஒன்றே.

வீட்டை முழுவதும் வெள்ளையடித்துச் சுத்தம் செய்தார்கள். தொலைந்துபோன சாமான்கள் எல்லாம் கிடைத்தன. வீட்டில் உள்ள எல்லாச் சிறிய பிரச்சினைகளும் தீர்ந்தன. பழைய சச்சரவுகளில்லை. எல்லோர் முகத்திலும் புன்சிரிப்பு ஓரளவு கூடியிருந்தது. ஏதோ பெரிய காரியத்தைச் சாதித்த உணர்வு பெற்றது குடும்பம். தாயார் தூரத்து உறவில் ஒருவருக்கிருந்த நல்ல பெரிய வேலை போய்விட்டதாகச் செய்தி வந்தது. குடும்பம் அதைப் பற்றிப் பேசியது.

கணவர் : இவரை எனக்கு நன்றாகத் தெரியுமே. நல்லவராயிற்றே. நாமெல்லாம் அவருக்காக ஒரு நாள் பிரார்த்தனை செய்வோம்.

சிறியவன் : நம் பிரார்த்தனை அவருக்குப் பலிக்குமா?

பெரியவன் : ஒரு வேளை நம் வேலை போகுமா?

பெண் : மதர் விஷயம் எப்படிப் போனாலும் பயமாயிருக்கிறது.

தாயார் : பயப்பட ஒன்றுமில்லை. நமக்குள்ள தொடர்புக்குட்பட்ட நல்லெண்ணம் பலிக்கும். அதற்குமேல் போனால் பாதிக்கும். நாம் சுயநலமாக, பராமுகமாக இருக்கலாம், எல்லாம் நம்மைப் பொருத்தது.

கணவர் : பிரார்த்தனை செய்யலாமா?

தாயார் : ஒரு வாரம் பொறுக்கலாம்.

கணவர் : ஏன்?

தாயார் : நம்மிடம் செய்தி வந்ததால், என்ன பலன் ஏற்பட்டது, ஏற்படவில்லையா எனத் தெரியும். அதன்பிறகு முடிவு செய்யலாம்.

பெரியவன் : மாமாவுக்குப் போன் செய்து விசாரிக்கட்டுமா?

தாயார் : நாமே செய்யக்கூடாது.

சிறியவன் : எதையும் செய்யக்கூடாது என்றால், எதைத்தான் செய்யலாம்?

மாமாவிடமிருந்து போன் வந்து கணவர் பேசினார். அவர் வேறு விஷயங்கள் பேசினார். வேலை போனதைக் குறிப்பிடவில்லை. கணவரே கேட்டார். "அது உடனே கான்சலாகி மீண்டும் வேலைக்குப் போகிறார்'' எனப் பதில் வந்தது. கணவர் இதைத் தெரிவித்தார்.

பெண் : மதர் விஷயம் எப்படிப் போனாலும் நல்லதாக முடியும் போருக்கிறதே.

சிறியவன் : Cleaning செய்வது இது.

கணவர் : மாமா அதைப் பற்றிப் பேசவில்லை.

தாயார் : அவர்கள் பொருட்படுத்தாததை நாம் பொருட்படுத்தினால் தவறு வரும்.

பெரியவன் : நமக்குத் தொந்தரவில்லாமலிருக்கும் வழியைக் கூறுமா?

தாயார் : நாமாக எதையும் செய்யாவிட்டால் தொந்தரவில்லை.

பெரியவன் : மனிதன் என்றால் ஏதாவது செய்யவேண்டுமே.

தாயார் : எதைச் செய்வது என முதல் தெரிந்துகொள்ள வேண்டும்.

கணவர் : இவருக்கு எப்படி மீண்டும் வேலை கிடைத்தது?

பெரியவன் : நமக்குச் செய்தி வந்ததால் கிடைத்தது.

கணவர் : அவருக்கு வேலை கிடைத்தபின் நமக்குச் செய்தி வந்தது.

சிறியவன் : நமக்கு வருமுன் அவர் விஷயம் சரியாகிவிட்டது.

தாயார் : அன்னை அன்று செய்தது, இன்று அன்னைச் சூழல் செய்கிறது.

பெண் : அப்படியெனில்....

தாயார் : இன்றைய சூழலில் அன்னை அன்றிருந்தது போலிருக்கிறார்.

கணவர் : அன்னை அன்பர்கட்குக் கிடைத்தது, இன்று அன்பர் உறவுக்கும், நட்புக்கும் கிடைக்கிறதா?

தாயார் : அதுவே சரி. ஒரு சமயம் கணவரும், மனைவியும் பிள்ளைகளைக் கண்டிப்பதைப் பற்றிப் பேசினர்.

கணவர் : கண்டிக்காமல் வளர்க்க முடியுமா? அன்னையா நாமெல்லாம்?

தாயார் : நாம் கண்டித்த விஷயத்தில் பிள்ளைகள் மறைப்பதையும், கண்டிக்காத விஷயத்தில் திருந்துவதையும் நீங்கள் பார்க்கவில்லையா?

கணவர் : ஏன் கண்டிக்கக் கூடாது?

தாயார் : "இந்தப் பையனைப்போல சண்டியை நான் பார்த்ததே இல்லை'' எனத் தம் பேரனை ஹாஸ்டலில் கொண்டுவந்து விட்ட தாத்தாவைத் தெரியுமில்லையா?

கணவர் : கொஞ்சம் தெரியும், சொல்லு.

தாயார் : பையன், தாத்தா, பெற்றோரிடம் நொந்து போனான். ஹாஸ்டல் முழுச் சுதந்திரம் உண்டு.

கணவர் : சுதந்திரம் கொடுத்தால் பிள்ளைகள் கெட்டுவிடும்.

தாயார் : சுதந்திரத்தால் இந்த 8 பிள்ளைகள் மாறியது உண்மை. ஒரு பையன் ஆசிரியர் சைக்கிளில் ஆணியால் குத்தினான். அவனைத் தலைமை ஆசிரியரிடம் அனுப்பினார்கள். "நீ என்ன செய்தாய்?'' எனக் கேட்டார். செய்ததைப் பையன் ஒப்புக் கொண்டான். தண்டிக்கவில்லை என்பதால் மனம் மாறியதாகத் தோன்றியது. ஓர் ஆரஞ்சு கொடுத்தார், அனுப்பிவிட்டார். அடுத்த முறை வேறொரு பையன் அதையே செய்ய முயன்றான். வகுப்பு முழுவதும் அவனைத் தடுத்தது. இவனே தலைமையாக நின்றான்.

கணவர் : கண்டிக்காவிட்டால் சைக்கிளே திருடு போகும்.

தாயார் : அதுபோல் 7, 8 குழந்தைகள் 2 ஆண்டுகளில் முழுவதும் திருந்தி சந்தோஷமாகிவிட்டார்கள். இப்பொழுது அந்தத் தாத்தா தன் பேரனைப்போல நல்ல பிள்ளையைப் பார்த்ததில்லை என்கிறார்.

கணவர் : என்ன விவரம்?

தாயார் : பெற்றோர் குழந்தைகளைக் கடுமைப்படுத்தினால் அவர்கள் இறுகிப்போய் கெட்டுவிடுகிறார்கள். கண்டிக்காவிட்டால், கடுமைப்படுத்தாவிட்டால் மலர்கிறார்கள்.

கணவர் : இந்த ஹாஸ்டலில் என்ன செய்தார்கள்?

தாயார் : கண்டிப்பதில்லை, புத்திமதி சொல்வார்கள். சொந்தமாகக் குழந்தைகளை முடிவெடுக்கச் சொல்வார்கள். தாத்தாவைப் போய்ப் பார்ப்பதும், பார்க்காததும் உன் இஷ்டம் என்றவுடன் அவன் போகவில்லை. தாத்தா வந்து பார்க்கிறார். சொந்தமாகப் புரிவது நெடுநாள் வரைக்கும் நிலைக்கும். நம் குழந்தைகள் அன்னையை சொந்தமாக அறிய நாம் உதவி செய்ய வேண்டும்.

கணவர் : நாம் பின்பற்றினால் அவர்களும் பின்பற்றுவார்கள்.

தாயார் : அவனுக்கு அன்னை யார், அன்னை என்பதென்ன என்று தனக்கே மனத்தில் படவேண்டும்.

கணவர் : நம் குடும்பத்தை அதுபோல் செய்ய முடியுமா?

தாயார் : செய்யலாம்.

கணவர் : அளவுகடந்த பொறுமை வேண்டும்.

தாயாருக்குக் கனவிலும், மனத்திலும், கண்ணில்படும் செய்திகளிலும், காதில் விழுவனவற்றிலும் கம்பெனிக்கு பெரும் பணம் வருவது தெரிகிறது. இதைத் தாமே கணவரிடமும், பார்ட்னரிடமும் கூற அபிப்பிராயம். கணவர் விவரம் தெரியாதவர். ஏதாவது இடக்காக ஒரு சொல் வந்தால் எல்லாம் தவறாகப் போகும். நேரம் வரக் காத்திருந்தார். கணவரும், பார்ட்னரும் ஒரு நாள் வந்தபொழுது பார்ட்னர் ஆடிட்டரைச் சந்தித்ததாகவும், அவர் நம் கம்பெனியைப் பற்றி நல்ல அபிப்பிராயம் நாளுக்கு நாள் அதிகமாவதால் டெபாசிட் பெற நல்ல நேரம் இது என்றாராம். தற்சமயம் நமக்குப் போதுமான பணமிருப்பதாலும், வெளிநாட்டு மூலதனம் வருவதாலும் பணத்தட்டுபாடு இல்லை. மேலும் டெப்பாசிட் வேண்டுமானால் கம்பெனியை அளவுகடந்து விரிவுபடுத்த வேண்டியிருக்கும் என்றார். தானே வருவதைத் தவிர்க்கக் கூடாது என்பது சட்டம். டெப்பாசிட் பெறும் வேலைகள் செய்ய நாளாகும். டெப்பாசிட்டை ஏற்கவேண்டும் என்ற முடிவை எடுத்துவிடவேண்டும் எனத் தாயார் நினைத்தார். மற்ற இருவரும் ஆமோதித்தனர். இரு மாதங்கள் சென்றன. பலரும் பார்ட்னரை அணுகி டெப்பாசிட் ஏற்குமாறு கேட்டனர். முன்பணமாகக் கொடுக்க விரும்பினர். ஆடிட்டரைக் கேட்காமல் செய்யக்கூடியவையல்ல. ஓரிரு மாதங்களில் கேட்காமல் டெப்பாசிட் நாம் வசூல் செய்ய நினைத்ததற்கு அதிகமாக வந்துவிட்டது. டெப்பாசிட் சேமிக்க சட்டமுண்டு, விளம்பரம் செய்ய

வேண்டும். அவை முக்கியமானவை. பார்ட்னரும், கணவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். மூவரும் கலந்து பேசும்பொழுது டெப்பாசிட் தானே வருவதும், மூலதனம் தேடி வருவதும் அருள், பேரருள். நாம் செய்யவேண்டியது அளவுகடந்துள்ளது. பார்ட்னர் முழுமூச்சுடன் செய்கிறார். அது ஆரம்பம். கணவர் முழுவதும் செய்யப் பிரியப்படுகிறார். ஆனால் அவர் சுபாவம் ஒத்துவரவில்லை. பிள்ளைகளுக்கு வாழ்க்கை நன்றாக இருந்தாலும், பெற்றோர் கட்டுப்படுத்தாவிட்டாலும், எவரும் கண்டிக்காவிட்டாலும், முன்னேறவேண்டும் என முழுவதும் முயலும்பொழுது பேச்சு பொருத்தமாக இல்லை, நினைவு சரியில்லை, அவையெல்லாம் சரியில்லை எனத் தெரிகிறது. அதுவே முன்னேற்றம், மாற்றம். சற்று வெட்கப்பட ஆரம்பிக்கின்றனர். குடும்பம் தாயாரிடமிருந்து அன்னையைப் பற்றிக் கேட்க விரும்பியது.

பெண் : நாங்கள் எவ்வளவு அன்னையை ஏற்றாலும், உங்களுக்குத் திருப்தியில்லை.

தாயார் : அன்னையை ஸ்பர்சிக்கவில்லையே இன்னும், அது அமுத ஸ்பர்சமாயிற்றே!

பெரியவன் : அது என்ன?

தாயார் : குடும்பத்துடன் ஆசிரமத்தில் சேர்ந்த பக்தர் M.A. இலக்கியம் படித்தவர். இடைவிடாது குறை கூறிக்கொண்டிருப்பார். தம்மை அன்னை கவனிக்கவில்லை என உள்ளூறக் குறை. "நல்லதாக ஆசிரமத்தைப் பற்றிப் பேச முடியாவிட்டால் பேசாதே'' என்று அன்னை கூறியதைப் புறக்கணித்தவர், அன்னையைப் பிறந்த நாளன்று தரிசித்துவிட்டு வரும்பொழுதும் கேலியாகப் பேசுவார். இவருக்குக் கண்பார்வை மங்கியது.

பெரியவன் : ஏன்?

தாயார் : மனம் குருடாக இருப்பதால், கண், பார்வையை இழக்கிறது. 1960, 1970இல் U.P.இல் சித்தாப்பூர் கண் ஆஸ்பத்திரி பிரபலமாக இருந்தது. அங்கு போய் ஆப்பரேஷன் செய்துகொண்டார். பாண்டி எல்லையை

விட்டுப் போய் மீண்டும் வரும்வரை (suffocation) அவர் ஆன்மா திணறியது அவருக்குத் தாங்கவில்லை. ஆத்மா ஸ்பர்சத்தை உணர்ந்தாலும் மனம் குதர்க்கமாக இருந்தது. நமக்கெல்லாம் அந்த ஸ்பர்சமில்லை.

கணவர் : நாம் எங்குப் போனாலும் எதுவும் தெரிவதில்லை.

தாயார் : திறமை சாதிப்பதை நோக்கம் நிர்ணயிக்கும்.

கணவர் : புரியவில்லை.

தாயார் : அபாரத் திறமைசாலி, கர்மவினையால் தன் உழைப்பின் பலன் பிறருக்குப் போகும் என்று தெரியாததைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். அவர் தமக்கு என ஒரு இலட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டார். அது, "என் மனைவி என்னைப் பணக்காரன் எனப் போற்ற வேண்டும்''. அப்படி எதிர்பார்த்தால், எதிரான பலன் வரும் என அவருக்குத் தெரியாது. அதுவும் அவர் மனைவி கூலிக்காரன் மகள். கூலிவேலை செய்து பெரும்பணம் சம்பாதித்தவர் மாமனார். முதல் தலைமுறை, படிக்காதவர்களுடைய பணம், வேகமாக இருக்கும். அதற்கும் பணத்திற்கும் தொடர்புண்டு. இலட்சியம் அதனுடன் சேராது. 50 ஆண்டுகட்குமுன் அவர் பையிலிருந்த பணம் 1 இலட்சம்; பெரும் தொகை. ஆனால் அவருடைய பிதிராஜ்யம் 5 இலட்சத்திற்கும் அதிகமானது. அறிவில்லாத, அந்தஸ்தில்லாத பெண் தம்மை மெச்ச விரும்பியதால், அறிவும், திறமையும் உள்ள அவர் அறிவில்லாத காரியத்தைச் செய்து அத்தனையையும் இழந்தார். அவருக்கு அது தெரியவில்லை. இழந்ததை 9

மடங்குகளாக அன்னை மீட்டுக் கொடுத்தார். மனம் பணத்திற்கு அடிமையானதால், பணக்காரனுக்கு அப்பலன் போயிற்று. அவருக்குப் பலனில்லை. முதல் கிடைத்தது. மீண்டும் அறிவற்ற செயலால் அதையும் இழக்க நேரிட்டது. அருள் காப்பாற்றிப் பெற்றது. பெற்றது பெருகி 18 மடங்குகளானவுடன் அவருக்கு விபரீதமான எண்ணம் தோன்றியது. மனைவியிடம் நல்ல பெயர் எடுக்க முயன்றவர், அன்னை இலட்சியத்திற்கு எதிரானவரிடம் நல்ல பெயர் எடுக்க முயன்றார். அனைத்தையும் இழந்தார்.

கணவர் : முடிவாக என்ன ஆனார்?

தாயார் : அவர் அன்னைக்குச் செய்தது முழுத் துரோகம். அதை மீறி அன்னை அவர் இழந்ததைப் பெற உதவினார். ஓரளவு பெற்றார். இப்பொழுது வருஷ வருமானம் 10 முதல் 15 இலட்சத்திலிருக்கிறர்.

பெரியவன் : ஒன்றும் புரியவில்லையே அம்மா.

கணவர் : திறமைக்கும், நேர்மைக்கும் வரும் பலனை நிர்ணயிப்பது நோக்கம். இவர் திறமை பெரியது, நோக்கம் சிறியது.

சிறியவன் : நமக்கெல்லாம் நோக்கமிருப்பதாகவே தெரியவில்லையே.

பெரியவன் : இனி ஒரு நோக்கத்தை ஏற்கவேண்டும்.

தாயார் : நல்ல நோக்கத்தின் பெயரால் தீயசக்தி வேலை செய்யும்.

கணவர் : அது நமக்கு எப்படித் தெரியும்?

தாயார் : நம் மனத்தின் உண்மை, ஆழத்தில் உண்மையாய் இருந்தால் - sincerity இருந்தால் - தீயசக்திக்கு இடமில்லை.



book | by Dr. Radut