Skip to Content

பகுதி 15

கணவர் : என்ன சொல்கிறீர்கள்?

பார்ட்னர் : சிறியதும், பெரியதும் ஒத்து வாரா. ஒன்று பெரியது சிறியதைக் கைவிடவேண்டும் அல்லது சிறியது பெரியதாக வேண்டும். வேறு வழியில்லை.

தாயார் : சர்க்கார் உத்தியோகம், கம்பெனி வேலையிலிருந்து மாறுபட்டது. ஆபீஸ் வேலை, கூலிவேலையுடன் சேர்ந்து வாரா. ஆசாரமான வாழ்வும், அனாசாரமும் சேரா. படிப்பும், அறியாமையும் ஒத்துப் போகா. பணமும், ஏழ்மையும் இணையா. உயர்ந்ததும், தாழ்ந்ததும் பிரிந்து நிற்கும்.

  • வாழ்வில் உயர்ந்தால் யோக வாழ்வு, அன்னை வாழ்வு.
  • உயரவேண்டும் என்பவர், தாழ்ந்ததைக் கைவிட முன்வர வேண்டும்.
  • அன்னை வாழ்வு, சத்தியமான, உயர்ந்த, தூய்மையான, ஒளிமயமானது.
  • அதனுடன் பொய், அவசரம், பொறாமை, எளிமை, கறுப்புக்கு இடமில்லை.
  • யோகம் செய்ய இவையெல்லாம் போதா.
  • வாழ்வை நல்லது, கெட்டது எனப் பிரித்தால் நல்லதின் அடி மட்டத்தில் அன்னை வாழ்வுள்ளது,
  • உச்சியில் யோகமுள்ளது.
  • யோகம் நமக்குரியதன்று. சமர்ப்பணமில்லாமல் யோகமில்லை. நமக்குச் சமர்ப்பணம் வாராது. உள் மனம் போகாமல் யோகமில்லை. மௌனமில்லாமல்

  • யோகமில்லை. யோகத்திற்கும் நமக்கும் தூரம். யோகம் எங்கே வந்தது?
  • நல்ல வாழ்வை அன்னை வாழ்வென்கிறோம். தவறு, மட்டம் கூடாது என்பது யோக வாழ்வு. உயர்ந்தது உச்சக்கட்டத்திலிருக்க வேண்டும் என்பது யோகம்.
  • தப்பு ருசிப்பது மனித வாழ்வு.
  • தப்பு ருசிக்கக் கூடாது என்பது நாம் கேட்பது.
  • இது யோகமில்லை.
  • தப்பு ருசிக்காவிட்டால் யோகம் ஆரம்பிக்கவும் முடியாது.
  • அதிர்ஷ்டம் வேண்டுமெனில் அசிங்கம் கூடாது.
  • அசிங்கம் ருசித்தால் அதிர்ஷ்டமில்லை.
  • குறையிருப்பது வேறு, குறையை வலியுறுத்துவது வேறு.

பார்ட்னர் : கோபம் வேறு, கோபம் சரி எனப் பேசுவது வேறு. அது தவறு. அவசரம் நல்லது எனப் பேசுபவருண்டு. அது ஏற்றுக்கொள்ள முடியாது. கடுமை உயர்ந்தது என நினைப்பவர் தவறு என்பது மட்டுமன்று, தீமையுமாகும்.

தாயார் : குறை எல்லார்க்கும் உண்டு. குறை உயர்ந்தது எனப் பேசுபவர் குறைவு, அவர் தவறு செய்பவர் ஆவர். இலஞ்சம் வாங்குவது சரி, அவசியம் எனப் பேசுவது போலிருக்கிறது.

பார்ட்னர் : அவர்கட்கெல்லாம் ஏதோ ஒருவகையில் ஏழ்மையிருக்கும்.

குறை, பற்றாக் குறையைத் தரும்.

பற்றாக்குறை, குணக்குறை

விலக்கில்லாத விதியிது.

கணவர் : யோசனை செய்தால் வறுமை என்பது குணக்குறையாக இருக்கிறது. சரி, ஆயிரம் குறைகளுள்ளவனுக்குப் பணம் பெருகுகிறதே.

பார்ட்னர் : அவனுக்குச் சம்பாதிக்கும் திறமையிருக்கிறது.

தாயார் : திறமையுமில்லாதவனுக்குக் குறையிருந்தால் வறுமை உண்டு. அன்னை திறமையுமில்லாதவனுக்குக் குறை இல்லாவிட்டால் வசதி தருகிறார்.

பார்ட்னர் : வாழ்வில் குறையில்லாதவனுக்குத் திறமை இல்லாவிட்டாலும் வறுமையுண்டு. வாழ்வில்லாததை அன்னை அன்பர்க்குத் தருகிறார்.

கணவர் : ஆசாரமானவர் அனைவரும் சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுகிறார்கள்.

தாயார் : அவர்கள் எந்தத் திறமையுமில்லாதவர்கள்; எல்லாக் குறைகளும் உடையவர்கள். அவர்களுடன் இருந்தவர் பலர் திறமையால் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், ஆசாரத்தைக் கைவிட்டனர். விடவில்லை எனப் பேசுவர். நடைமுறை வேறு.

பார்ட்னர் : ஏற்கனவே வியாதி வந்தாலும், நஷ்டம் வந்தாலும், கஷ்டம் வந்தாலும், எது வந்தாலும் கர்மம் என்கிறோம். இனி அதற்குப் பதிலாக குணக்குறை எனக் கூற வேண்டும்.

தாயார் : அதைவிடக் குணக்குறையை வலியுறுத்துவது எனக் கூறலாம். மதர் வேண்டுமா, யோகம் வேண்டுமா, அருள் வேண்டுமா என நான் கேட்கவில்லை. அதிர்ஷ்டம் வேண்டுமா, குணம் வேண்டுமா, நல்லது வேண்டுமா எனக் கேட்கிறேன்.

கணவர் : இப்படிச் சொல்வது வேறு.

பார்ட்னர் : சில்லரையாக இருப்பதை நம்மால் விடமுடியவில்லை.

தாயார் : அன்னையை ஏற்றால் சில்லரையாக இருக்க முடியாது, திருட்டுத்தனம் செய்ய முடியாது, பொய் சொல்லாமல் இருக்க முடியாது, கொடுமை செய்யாமலிருக்க முடியாது என விழித்துக்கொண்டு கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டாம். விஷயம் எளியது,

  • தவறு, மட்டம், குறைவுக்கு இங்கு இடமில்லை.
  • நல்லது அவசியம். Human good மனிதனுக்கு நல்லது அவசியம்.
  • Pure good தூய நல்லது யோகத்திற்கு அவசியம். அதை மனிதனைக் கேட்கவில்லை.

இதுவரை நடந்தவை பிரம்மாண்டமானவை. நமக்குமுன் உள்ளவை இரண்டு,

  • 1. பெரும்பாடுபட்டு வந்ததை நிறைவேற்றுவது.
  • 2. முழுப்பாடுபட்டு இதை நிறைவேற்றித் தொடர்வது.

கணவர் : இரண்டாவதைச் செய்வோம்.

பார்ட்னர் : மூன்றாவதாக ஒன்றைச் சொல்லலாமா? இரண்டாவது நிறைவேறும்படி முதல் கட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

தாயார் : கேட்க நன்றாக இருக்கிறது. ஒவ்வொன்றிற்கும் உள்ள நிபந்தனை தெரிவது நல்லது.

பார்ட்னர் : அதைச் சொல்லுங்கள்.

தாயார் : இதுவரை எவரும் முதற்கட்டத்தையே செய்யவில்லை. எவரும் செய்யாததை நாம் செய்யவேண்டும்.

கணவர் : மேலும் நிபந்தனைகள் என்ன?

தாயார் :

  1. எது நடந்தாலும் நாம் பொறுப்பு ஏற்கவேண்டும்.
  2. மனம் distort ஆகக் கூடாது.
  3. கஷ்டங்களை வாய்ப்பாக அறியவேண்டும்.

கணவர் : இவையெல்லாம் தெரியும்.

தாயார் : செய்வதற்கா? நாம் அடிப்படையில் மாறவேண்டும்.

கணவர் : நான் மாற விரும்புகிறேன்.

தாயார் : இந்தக் கண்ணோட்டத்தில் கடந்த சில மாதங்களாக நடந்தவற்றைக் கருத முடியுமா? அதைச் செய்தபின் மற்றவற்றைக் கண்போம். நம்மிடம் சமீபத்தில் ஒருவன் பணம் கேட்டான். நமக்குப் பணம் வாங்க அபிப்பிராயம் என அதை எடுத்துக்கொள்ள முடியுமா?

பார்ட்னர் : அது சரி, அப்படியில்லை. எனக்குப் பிறர் பணம் வாங்குவது தவறாகத் தெரியவில்லை. அதற்கு ஒருவன் நம்மிடம் பணம் கேட்பானா?

கணவர் : அதையும் ஏற்று மனத்தைச் சோதனை செய்துவிட்டுப் பேசுகிறேன்.

தாயார் : இது நல்ல சகுனம்.

பார்ட்னர் : மேலும் முக்கிய விஷயமிருப்பதாகத் தோன்றுகிறது.

தாயார் : ஆமாம்.

பார்ட்னர் : சொல்லக் கூடியதா?

தாயார் : சொல்லாமல் தெரியவேண்டியது.

கணவர் : அதையும் வரும் நாட்களில் தெரிந்துகொள்ள முயல்கிறேன்.

கணவரும், பார்ட்னரும் போய்விடுகிறார்கள். தாயார் தம்மைப் பற்றி யோசனை செய்கிறார். வந்துள்ள வாய்ப்புகட்குப் போதுமானதைத் தாம் செய்தோமா எனச் சிந்திக்கும்பொழுது தம் மனம் பணத்தை ஆதாயமாக நினைக்கிறது, அன்னையை நம்பினால் நிறைவேறும் என்பது தம் நிலை. இது ஆதாய மனப்பான்மை, கூடாது, என்று புரிகிறது. அன்னையை அன்னைக்காகத் தாம் வேண்டி நாடாதபொழுது அடுத்தவர்களைக் கேட்க நமக்கென்ன உரிமை உண்டு என நினைக்கிறார். அதே சமயம் ஏதாவது முடிந்தால் போதும் என மனம் கூறுகிறது. தாம் உள்ளே வேலை செய்யவேண்டிய இடம் அதுவே என பளிச்செனத் தோன்றுகிறது. கணவர் அண்ணார் மகளுக்கு வரன் தேடுகிறார்கள். ஓர் ஆபீசரைப் பார்க்கும் வசதியில்லை. கிளார்க்தான் தேடுகிறார்கள். அது பாங்கில் இருந்தால் தேவலை. இதுவரை அமையவில்லை. திடீரென ஒரு மாப்பிள்ளை வந்தது. அவனுக்குத் தற்சமயம் வேலையில்லை. I.A.S.. பரீட்சை பாஸ் செய்துவிட்டான். நேர்முகத் தேர்வுக்குப் போயிருக்கிறான். தெரிந்த இடம்தான். பையன் கெட்டிக்காரன். செலக்ஷன் ஆகலாம். நம் வீட்டில் பெண் பார்க்கமாட்டார்கள். எப்படி வந்தார்கள் எனத் தெரியவில்லை. பிடித்தமாகப் பேசினார்கள். முடிந்தால் நமக்கு power plantக்குச் சமம்.

கணவர் : நான் பையன் IAS பாஸ் செய்துவிட்டதாகக் கேள்விப் பட்டேன். ரிஸல்ட் வந்துவிட்டது எனக் கூறுகிறார்கள். பெண் பார்க்க வருமுன் பாஸ் செய்ததாகத் தெரிகிறது. அப்படியானால் ஏன் பாஸ் செய்தியைச் சொல்லவில்லை.

தாயார் : அது உண்மையானால் ரொம்ப பக்குவமான குடும்பமாகத் தெரிகிறது.

கணவர் : முடிவு குடும்பத்தில் பெரியவருடையது. அதற்காகக் காத்திருக்கிறார்களாம்? இவர்கட்குப் பிடிக்கிறதாம். இதற்கு என்ன அர்த்தம்?

தாயார் : அவர்கட்கு வரன் முடிந்தால் நமக்கு வந்தது, பலன் கைக்குக் கிட்டும்.

கணவர் : நான் அப்படிப் பிரார்த்திக்கட்டுமா? நமக்கு வருவது அவர்கட்குப் போய்விடுமா?

தாயார் : அதுவும் உண்மை.

கணவர் : பயமாயிருக்கு. விளக்கமாகச் சொல்.

தாயார் : நமக்குப் பலம் குறைவாயிருந்து வரன் பார்க்கப் பிரார்த்தனை செய்தால் அவர்கட்குப் பலிக்கும். நமக்குத் தவறும்.

கணவர் : அது வேண்டாம்.

தாயார் : அவர்கட்கு நம்மீதும், நமக்கு அவர்கள் மீதும் நல்ல எண்ணமிருந்தால் இரண்டு பேருக்கும் கூடிவரும்.

கணவர் : என்ன செய்யலாம்?

தாயார் : நல்லெண்ணம், சூழலின் கனம், இவற்றைப் பொருத்தது.

கணவர் : நல்லெண்ணமில்லை. சூழல் நீதான் சொல்ல வேண்டும்.

தாயார் : நமக்கும், அவர்கட்கும் நடப்பது தொடர்புண்டு.

கணவர் : பேசாமல் கவனிப்போமா?

தாயார் : என்ன செய்தால் இரண்டும் கூடிவரும்?

கணவர் : நமக்குக் கூடிவந்தால் போதும்.

தாயார் : அது சுயநலம். அப்படி நினைத்தால் நமக்கு வாராது.

கணவர் : அவர்கட்கு மட்டும் வருமா? என்ன சட்டம் இது? எரிச்சல் வருகிறது.

தாயார் : வரக் கூடாது.

கணவர் : வருகிறதே.

தாயார் : நம் எண்ணம், அவர்கள் அதிர்ஷ்டம், இரண்டையும் விலக்கிச் சமர்ப்பணம் செய்யலாம்.

கணவர் : அதுதான் முடியவில்லையே, அடுத்தாற்போல்.

தாயார் : பேசாமல் எரிச்சல்படாமலிருக்கலாம்.

கணவர் : நீ பேசுவது எரிச்சல் வருகிறது.

தாயார் : நான் பேசவில்லை.

கணவர் : நீ பேசவேண்டும்.

தாயார் : .................................

கணவர் போனபின் மனைவி சிந்தித்தார். சிந்தனை சமர்ப்பணத்திற்குத் தடை என்பதால் அதுவும் சரியில்லை. கணவர் ஆபீசில் ஒரு கிளார்க் வீட்டிலிருந்து வந்த செய்தி மனத்தை உறுத்தியது. அவனுக்கு உடம்பு முடியாது, வயிற்று வலி. கணவர் 5 மணிக்கு வந்து டிபன் சாப்பிட்டுவிட்டு ஆபீசுக்குத் திரும்பப் போய் 8 மணி, 9 மணிவரை வேலை செய்வார். சமயத்தில் 10 மணிவரை அரட்டை அடிப்பார். அவனுக்கு வீடு தூரம். சாப்பிடாவிட்டால் வலி அதிகமாகும். ஹோட்டலில் சாப்பிட முடியாது, வசதியில்லை. இவராக அவனை அனுப்பியபின் அவன் வீட்டிற்குப் போய்ச் சேர நேரமாகும், வதைவான். அவன் படும் வேதனை இவருக்குத் தெரியாது. கிளார்க்கு

தேவையில்லை, மரியாதைக்காக அவனை வைத்திருப்பார். அவன் பல வருஷமாக வதைகிறான். செய்தி மனைவிக்கு வந்தபின் கணவரைக் கலந்தாள். அப்படியொன்றுமில்லை என்கிறார். அவன் படும் வேதனை இவர் மனத்தில் படவில்லை. படவில்லையா, படட்டும் என வேடிக்கை பார்க்கிறாரா என மனைவிக்குத் தெரியவில்லை. மனைவியின் பிரார்த்தனையால் கிளார்க் மாற்றலாகிவிட்டான். நமக்கு இவ்வளவு பெரிய காரியம் நடக்கவேண்டுமானால், மனம் கடுமையாக இருந்தால் எப்படி நடக்கும் என்று அவருக்குக் கவலை. அவர் செய்யக் கூடியது எதுவுமில்லை. கணவருக்கு அப்படி ஒரு பிரச்சினையிருப்பதாகத் தெரியவில்லை. It is unconscious cruelty கண்மூடித்தனமான கடூரம். அதைக் கணவரிடம் கேட்க முடியாது. தெருவில் பிள்ளைகள் நாய் வால் பட்டாசு கட்டிக் கொளுத்தி வேடிக்கை பார்ப்பதும் கணவர் மனமும் ஒன்றாகத் தெரிகிறது. கணவர் மீதுள்ள பாசத்தை எடுத்துவிட்டால், நாய் படும்பாடு இவர் படுவார். அவர் குணத்திற்கு அவர் படவேண்டியது சரி என்பதா? தான் அச்சுமையை ஏற்பதா? ஏற்றால் தனக்குப் பிரியமான பலன் கெட்டுவிடும். அடுத்தாற்போல் என்ன செய்வது? சமர்ப்பணம் இக்கட்டத்தில் நகரவில்லை. எப்படிச் சமர்ப்பணம் செய்யலாம் என்பது சிந்தனை. அதுவே சமர்ப்பணத்தைத் தடுக்கும். விஷயம் மனத்தைத் தொட்டவுடன் ஓர் எண்ணம் எழுமுன் சமர்ப்பணம் செய்யாவிட்டால், சமர்ப்பணமாகாது. ஓர் எண்ணமில்லை, ஒன்பது வருகிறது. யாரிடமும் சொல்லும் நிலையில்லை. அன்னை விட்ட வழி என்றால், மனம் அலை பாய்கிறது. ஆழ்ந்து உள்ளே போகலாம் எனில் உள்ளே போக முடியவில்லை. T.V. பார்க்கத் தோன்றுகிறது. அப்படியே தியானம் வந்தது. தியானமா, தூக்கமா எனத் தெரியாமல் அயர்ந்துவிட்டார். எழுந்தால் கணவரும், அந்த கிளார்க்கும் நிற்கிறார்கள். அந்தக் கிளார்க்கிற்கு இப்பொழுது வீட்டிற்குப் பக்கத்தில் ஆபீஸ். வயிற்றுவலி சற்றுக் குறைந்துள்ளது. அவருக்குக் கணவர்மீது கோபமிருப்பதாகத் தெரியவில்லை. அது நம் பிரச்சினை தீரப் போதாதே. அந்தக் கிளார்க் படவேண்டியது அவர் பங்கு. அதற்கு நாம் என்ன செய்யலாம் என்று நினைக்கலாம் என்றாலும், கணவர் மாறாமல் நம் விஷயம் முடியாது.

நமக்கு விஷயம் குறைவில்லை. ஆனால் ஏராளமாக நடக்க வேண்டியவை உள்ளன. எப்படிப் போவது? தியானத்தின்பின் மனம் அடங்கியது. ஆனால் பிரச்சினை என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை. இவையெல்லாம் எவருடனும் பேசும் விஷயங்களில்லை. தம் மனத்துடனும் வாதாடுவது தவறு என்று தோன்றியது. ஆனால் வாதம் மெல்லிய குரல் மனத்தில் தூரத்தில் கேட்கிறது. அது அடியோடு நிற்கவேண்டும். அதற்குள் மனம் சில்லரையாக எதையாவது சொல்கிறது. எப்படியானாலும் நாளாக, நாளாக பதட்டம் மனத்தில் குறைகிறது. இப்படியேயிருந்தால் இன்னும் எத்தனை வருஷங்களாகுமோ தெரியவில்லை. நாளாகும் என நினைப்பது அவசரம், அதுவும் கூடாது. அப்புறம் என்ன செய்ய எனக் கேட்கமுடியுமா? ஒரு பத்து நாளானவுடன் கணவர் அண்ணார் வீட்டிலிருந்து வரன் IAS மாப்பிள்ளை முடிந்துவிட்டது என்று செய்தி வந்தது.

கணவர் : நீ ஏதாவது செய்தாயா?

மனைவி : நீங்கள் என்ன செய்தீர்கள்?

கணவர் : எனக்கு பயமாயிருந்தது. நான் ஒன்றும் செய்யவில்லை.

மனைவி : சமர்ப்பணம் செய்ய முடியவில்லை என்று நான் சும்மா இருந்துவிட்டேன்.

கணவர் : சும்மாயிருந்தபொழுது வரன் கூடி வந்துவிட்டதே.

மனைவி : சும்மாயிருந்தால், அருளுக்குத் தடையாக இல்லை எனப் பொருள்.

கணவர் : தடையாக இல்லாவிட்டால், இவ்வளவு பெரிய காரியம் நடந்துள்ளது. நாமே அருளைப் பெற்றால்....

மனைவி : அது பெரிய விஷயம்.

கணவர் : ஏன் நாம் அதை செய்யக்கூடாது?

மனைவி : ஏராளமாகச் செய்யலாம். சுத்தத்திலிருந்து ஆரம்பித்தால், ஜடத்திலிருந்து ஆரம்பிப்பதாகப் பொருள், நல்லெண்ணம்வரை (நல்லெண்ணம் ஆத்மாவுக்குரியது) செய்யக் கூடியவை ஏராளம். எதைச் செய்தாலும் நல்லது. மனம் அடங்குவது மனம் நெகிழ்வதில் தெரியும். மனம் நெகிழ்ந்தால் மற்றவர் மலர்வார்கள். Life Response நடந்தபடியிருக்கும். பிறரை - குழந்தைகள் உட்பட - செய்யச் சொல்லக்கூடாது என்பதே சட்டம். எது செய்வதானாலும், நாமே செய்யவேண்டும், உள்ளே செய்யவேண்டும், நடப்பது நாம் எந்த அளவில் உண்மை எனக் காட்டும்.

கணவர் : எனக்குச் சமர்ப்பணம் செய்யத் தோன்றுகிறது.

மனைவி : அது சிறப்பு, முடிந்தால் நல்லது, என்னால் முடியவில்லை. சமர்ப்பணம் செய்ய முனைந்து முயன்று முடியவில்லை என்றாலும் காரியம் பெரிய அளவில் நடக்கின்றது. முழு அளவில் நடப்பதில்லை. சமர்ப்பணமாகாவிட்டால் செய்வதில்லை எனத் தீர்மானமாக இருந்தால், முயற்சி அடங்கி ஜீவனற்று சப்' என்றாகிவிடுகிறது. அப்பொழுதும் காரியம் நடக்கிறது. இதுவரை நடந்தனவெல்லாம் சமர்ப்பணம் முடியவில்லை என நடந்தவையே. முடியவில்லை என்றபொழுது முடிந்ததைச் செய்வோம் என்றால் எதிராகப் போவதாகத் தெரியும். அந்தத் தோல்விக்கும் ஜீவனுண்டு. வெற்றிக்குரிய ஜீவன் முழுமையுடைய பெரியது, அது கிடைக்கவில்லை.

கணவர் : நாம் முழுமையான சமர்ப்பணத்தைச் செய்வது அவசியம்.

இச்சொல்லை அவர் முடிப்பதற்கும் பரணையில் சிறியவன் பெட்டிகளை அடுக்கிக்கொண்டிருந்ததிருந்து ஒரு பெரிய கனமான அட்டைப் பெட்டி விழுவதற்கும் சரியாக இருந்தது. கணவர் தோளில் சற்று பட்டதே தவிர அடி முழுவதும் அவர்மீது விழவில்லை. நம்முடைய சக்திக்கு மீறிச் செயல்பட விரும்பினால் சகலமும் ஆட்டம் கொடுக்கும். கணவர் சட்டென விலகிவிட்டார். பதட்டம் அடங்க நாழியாயிற்று. அடங்கியபின் கேட்ட முதற்கேள்வி, "ஏன் இப்படி நடக்கிறது?''

மனவி : தகுதியை மீறிச் செயல்பட முடியாது.

கணவர் : சமர்ப்பணம் நம்மை மீறியதா?

மனைவி : ஆம்.

கணவர் : சரி, சமர்ப்பணம் செய்ய எது தகுதி?

மனைவி : மனம் பதப்பட்டு, பக்குவப்பட்டு, பவித்திரமாகி, அடங்கி, அமைதியாக, அழகுறவேண்டும்.

கணவர் : துறவிக்கே இருக்காது போலிருக்கிறதே.

மனைவி : துறவி இல்லறம் நடத்துவது போன்றது. சமர்ப்பணம் செய்யும்பொழுது, மனத்தின் எண்ணம் இடம் கொடுக்காது. அது இடங்கொடுக்கும்பொழுதும் மனம் கூடவே தனக்கு வேண்டியதைக் கேட்டபடியிருக்கும். அது தடை. அதுவும் அடங்கியபின்னும் அதன்பின் உள்ள (physical vital urge) வேகம் மௌனமாக சமர்ப்பணத்தை மறுக்கும். அந்த வேகமே சமர்ப்பணத்தை விரும்புவது, சந்தோஷப்படுவது, சமர்ப்பணமாவதாகும்.

கணவர் : இத்துடன் முடிகிறதா?

மனைவி : இல்லை. இவ்வளவும் ஜீவியத்திற்குரியவை. இதைக் கடந்தது substance பொருள். அது மிகக் கடினம். தொடவே விடாது.

கணவர் : நாமெல்லாம் எப்படித்தான் இதை மேற்கொள்வது?

மனைவி : நாம்' என்று ஒன்று எல்லாக் கட்டத்திற்கும் உண்டு. அது சமர்ப்பணத்தை உளமாரப் பிரியப்படுவது sincerity உண்மை. அந்த உண்மை எங்கிருந்தாலும் அதே நேரம் Force அங்குச் செயல்படும். அப்படி அருள் நம் வாழ்வில் செயல்படுவதால் நடப்பதே நாம் அறிவது. நாமாக முனைந்து செய்தால் பொதுவாக எதிரான பலன் வரும்.

கணவர் : நாமாக முனைந்து எல்லா நிலைகளிலும் Forceஐ வரவழைக்கும்படி நடக்கக்கூடாதா?

மனைவி : அதற்கு எல்லா நிலைகளிலும், sincerity எல்லா நேரங்களிலும், எல்லா அளவுகளிலும் இருக்க வேண்டும். அவர்கட்கு பிரார்த்தனை தேவையில்லை, சமர்ப்பணமும் தேவையில்லை. அன்னை அழைக்காமல் வரும் நிலைகள் அவை.

கணவர் : நாமெல்லாம் உயர்ந்த மக்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, மட்டம், கழிசடை, புறம்போக்கு, உதவாக்கரை என உணர்ந்து, வெட்கப்பட்டு, மனம் மாறுதல் அவசியம் என்று தோன்றுகிறது.

மனைவி : அப்படி அன்னை சொல்வதில்லை. அதுதான் அவசியம். அப்படி உணரும்பொழுது நெஞ்சு நிறைவதைக் கண்டிருக்கிறேன்.

கணவர் : நாமுள்ள நிலையைப் பொருட்படுத்தாது அருள் ஓரிழையாகச் செயல்படுவதே நாம் இப்பொழுது பெறுவது.

மனைவி : ஆமாம்.

கணவர் : இப்படிச் செய்யலாமா? நமக்கே நாம் ரொம்ப மட்டமாக நடந்த நிகழ்ச்சி ஒன்றை எடுத்து இப்படி மாறிப் பார்க்கலாமா?

மனைவி : அது பெரும்பலன் தரும்.

கணவர் : அது ஆழ்ந்த தியானத்தில் கரைந்துவிடும் என்றாயே.

மனைவி : தியானமே நமக்கு வருவதில்லை, தூக்கம் வரும். தூக்கத்தைக் கடந்து மனம் உள்ளே விழிப்படைவது தியானத்தின் முதல் நிலை. அந்நிலையில் புலன் உதவியின்றி பார்க்க, கேட்க, நுகர, தொட, ருசிக்க முடியும்.

கணவர் : அந்நிலையில் அடுத்த அறையில் உள்ளவர் தெரியுமா?

மனைவி : தியானத்தின் நான்கு நிலைகளில் இது முதல் நிலை. நமக்கு எப்பொழுதாவது இதுபோல் தியானம் பலித்துள்ளதா? தியானம் என உட்கார்ந்தால் தூக்கம் வரும். அதைக் கடந்து எவரும் செல்வதில்லை. அதனால் அன்னை தியானம் வேண்டாம் என்கிறார்கள். சமர்ப்பணம் செய் என்று கூறுகிறார்கள்.

கணவர் : தியானம், சமர்ப்பணம் எதுவுமே நம் போன்றவர்க்கு இல்லையா?

மனைவி : சமர்ப்பணம் மிகவும் கடினம் என்பது உண்மை. இன்று ஆதரவற்றவரை நினைத்துப் பார்த்தால், அவர்கள் பிரச்சினை நமக்கு அர்த்தமற்றிருக்கும். நம்மை அவர்களிடத்தில் வைத்துப் பார்த்தால் வாழ்வு பயங்கரமாக, கொடுமையாகத் தெரியும். அத்தனை பேரும் அக்கொடுமைக்குப் பலியாகி அழிந்து போகின்றனர். அதாவது சீரழிந்து போகின்றனர்.

அவர்களில் ஒரு சிலர் நிலைமையைச் சமாளித்து எழுந்து வந்து வெற்றி பெறுகின்றனர். அது சமர்ப்பணத்திற்குச் சமம். அவர்கட்குச் சமர்ப்பணம் பலிக்கும்.

கணவன் : மீண்டும் ஒரு முறை சமர்ப்பணத்தைச் சொல்லேன்.

மனைவி : நமக்கு வேண்டியதைக் கேட்பது பிரார்த்தனை. அன்னை கொடுப்பதை ஏற்பது சமர்ப்பணம்.

கணவர் : சரி, மேலும்....

மனைவி : அன்னை கொடுப்பது நல்லதாக இருக்கும் என நினைப்பது அன்னைமீது நம்பிக்கை.

கணவன் : அதோடு முடிகிறதா?

மனைவி : நமக்கு நல்லது வேண்டும். நாம் அதை அன்னையைக் கேட்பதைவிட அன்னை எது கொடுத்தாலும் நல்லதாகவே இருக்கும் என நம்புவது அதிக நம்பிக்கை. அடுத்தாற்போல் எனக்கு நல்லது வேண்டும் என நினைத்து அதை அன்னை தருவார் என நினைப்பதைவிட அன்னை எது கொடுக்கிறாரோ, அதுவே எனக்கு நல்லது எனக் கருதுவது சமர்ப்பணம்.

கணவன் : எந்த ரூபத்திலும் நாம்' இருக்கக் கூடாது என்று கூறுகிறாய்.

மனைவி : பகவான் வலி, ஆனந்தத்தைப் பற்றிக் கூறுவதை இங்குக் கருதலாம். வலியும், சந்தோஷமும், உதாசீனமும் மேல் மனத்திற்குரியவை.

  • மேல் மனம் நாமில்லை.
  • நிலையான ஆனந்தம் அடி மனத்தில் உள்ளது.
  • பழக்கத்தால் நாம் வலியை அனுபவிக்கிறோம், இது
  • அவசியமில்லை.
  • அடிபட்டால் வலிப்பது பழக்கம். அது மேல் மனத்தின் பழக்கம்.
  • அடிபட்டால் ஆனந்தம் வெளிப்படும்படி நாம் மேல் மனத்தைப் பழக்கலாம்.
  • வலியிருந்து விலகி நின்றால் வலிதெரியாது.
  • விலகி நிற்கும் தபஸ்வியைவிட வலிக்குப் பதிலாக
  • ஆனந்தம் அனுபவிப்பது பெரிய ஆனந்தம்.

சமர்ப்பணத்திற்கும் இது பொருந்தும்.

அன்னை கொடுப்பது நல்லதாக இருக்கும் என்பதைவிட அன்னை எது கொடுத்தாலும் அதை நான் நல்லதாகக் கருதுவேன் என்பது பெரியது.

கணவன் : எனக்குப் பிறர்மேல் நினைவு. அவர்கட்கு உதவி செய்ய ஆசை. அதுவும் தவறா?

மனைவி : நம் கடமையைச் செய்யாமலிருக்க நாம் நமக்கே சொல்லிக்கொள்ளும் சாக்கு அது.

கணவன் : இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?

மனைவி : கம்பெனி மனையில் 4 குடிசைகளைப் போட்டுக் கொண்டு கிளம்ப மறுத்தார்கள், பணம் கேட்டார்கள் என ஒருவர் கூறியது நினைவிருக்கிறதா?

கணவன் : அவர் என்னுடன் படித்தவராயிற்றே, நல்லாத் தெரியும்.

மனைவி : அவர் அப்படிப் பேசியபொழுது நான் அவரைக் கவனித்தேன்.

கணவன் : என்ன கண்டுபிடித்தாய்?

மனைவி : எனக்கு நிச்சயமாகத் தெரியாது. யூகமாகச் சொன்னேன்.

கணவன் : நீ அவரிடம் குடிசைகளைப் பற்றிப் பேசியது நினைவு இருக்கிறது. என்ன பேசினாய் என நினைவில்லை. அந்தக் குடிசைகள் போய்விட்டன.

மனைவி : என்னால் நிச்சயமாகக் கூறமுடியாது. நான் நினைத்தது சரியாகிவிட்டது.

கணவன் : சொல்லு, கேட்போம்.

மனைவி : அகம், புறம் என்ற கோணத்தில் அவர் பிரச்சினையைக் கவனித்தேன். இவர் மற்றவர்கட்கெல்லாம் உதவி செய்ய வேண்டும் எனப் பேசுவார்.

கணவர் : அவர் அதை மட்டும்தானே செய்துகொண்டிருக்கிறார். பிறர் வேலை என்றால் உடனே செய்வார்.

மனைவி : தன் கடமையைச் செய்யாதவரே பிறருக்கு உதவ முனைவார் என்பது சட்டம்.

கணவன் : அடப்பாவமே, அவர் நல்ல மனுஷன். ஏன் அப்படிச் சொல்கிறாய்?

மனவி : நானாக அவையிரண்டிற்கும் தொடர்பு கொண்டேன்.

கணவன் : அவரிடம் சொன்னாயா?

மனைவி : எப்படிச் சொல்வது? அவர் அன்பரில்லையே.

கணவன் : நீ ஏதாவது செய்தாயா? குடிசைகள் கிளம்பி விட்டனவே.

மனைவி : இந்தத் தொடர்பு சரி என வைத்துக்கொண்டு பேசினேன். அவர் கேட்டுக்கொண்டார். என்ன செய்தார் எனத் தெரியாது. அவருக்கு நினைவு இருக்குமா எனவும் தெரியாது.

கணவர் : விவரமாகச் சொல்.

மனைவி : இறைவனை அணுகும் திறமையுள்ளவர்கள் தம் கடமையைச் செய்ய சோம்பேறித்தனத்திற்காகப் பிறருக்கு ஒத்தாசை செய்வார்கள்.

கணவர் : எது சோம்பேறித்தனம்?

மனைவி : இறைவனை நினைக்க இதைப்போல் ஏராளமான சக்தி தேவை.

கணவன் : புரியலை. ஆனால் குடிசைகள் கிளம்பியது ஆச்சரியமாக இருக்கிறது.

மனைவி : பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்பது (altruism) மனத்திற்கு இதமாக இருக்கிறது. அன்னையை நினைக்க, சமர்ப்பணம் செய்ய ஏராளமாகத் தியானம் செய்ய வேண்டும். அதற்குச் சோம்பேறித்தனம்.

கணவர் : சம்பந்தமில்லாமலிருக்கிறது.

மனைவி : பிறருக்குச் செய்வது எளிது, சொல்வது அதைவிட எளிது. அதைச் சொல்லாமலிருப்பது கஷ்டம். நாம் அன்னையை நினைப்பது கஷ்டம். பிறருக்குச் சொல்லாமல் - என்ன அவர்கள் செய்யவேண்டும் என்று சொல்லாமல் - நாம் அதை எதற்குப் பதிலாகச் செய்கிறோம் என அறிந்து அதைச் செய்வது கடினம்.

கணவன் : இதை என் நண்பரிடம் கூறினாயா?

மனைவி : நான் சொன்னேன். அன்றைக்கும் நீங்கள் இதையே கேட்டீர்கள்.

கணவர் : எனக்கு நினைவில்லை.

மனைவி : அவருக்குச் சொன்னதை நானே என் வாழ்வில் நினைத்துப் பார்த்தேன். செய்தேன்.

கணவர் : எப்பொழுது குடிசை போயிற்று?

மனைவி : தெரியாது. அடுத்த முறை அவர் வந்தபொழுது கேட்டேன். குடிசைகளில்லை என்றார்.

கணவர் : அவர் என்ன செய்தார்?

மனைவி : அவர் சொல்லவில்லை, நான் கேட்கவில்லை.

கணவர் : உன் அபிப்பிராயம் என்ன?

மனைவி : இந்தத் தொடர்பு - பிறருக்குப் புத்திமதி சொல்வது, அவர் விஷயத்தில் குறுக்கிடுவது, குடிசை நம் மனையில் குறுக்கிடுவது - புரிந்தவுடன் குடிசையில்லை.

கணவர் : இது எப்படிப் புரியும்?

மனைவி : மாறுவது சிரமமில்லை. எங்கே மாறவேண்டும் எனத் தெரிவது கஷ்டம், நாளாகும் என அன்னை கூறுகிறார்.

கணவர் : இந்தச் சொல்லைக்கொண்டு அந்தத் தொடர்பை எப்படிக் காண்பது?

மனைவி : காண்பது sincerity உண்மை என்கிறார் அன்னை.

கணவர் : அது புத்திசாலித்தனமாயிற்றே.

மனைவி : ஜீவனின் புத்திசாலித்தனத்திற்கு sincerity உண்மை என அன்னை பெயரிட்டுள்ளார்.

கணவர் : இதுபோல் நம் மனத்தைச் சோதனை செய்யவேண்டும்.

மனைவி : நமக்குள்ள பிரச்சினைகள், வாய்ப்புகட்கு உள்ளே என்ன காரணம் எனத் தெரிய முயன்றால் கிடைக்கும்.

கணவர் : அப்படிப் புரியாது. யாராவது சொன்னால் புரியும்.

மனைவி : யார் சொன்னாலும் கேட்டுக்கொள்ளமாட்டோம். சொந்தமாகப் புரியவேண்டும். அது unconsciousness கணவர் : பிறருக்குப் புத்திமதி சொல்பவர், உதவி செய்பவருக்கு அன்னை அம்சம் உண்டு. அது வீணாகிறது என்று பொருளா?

மனைவி : ஆமாம்.

கணவர் : இந்தச் சட்டத்தை வேறிடங்களில் சோதனை செய்தாயா?

மனைவி : சட்டம் அன்னை எழுதியது. நமக்கு எது, எதைக் குறிக்கிறது என்று தெரியவேண்டும்.

கணவர் : சம்பந்தா, சம்பந்தமில்லாமலிருக்கிறதே.

மனைவி : ஒரு பிரச்சினையிருந்தால் சம்பந்தம் தெரியும்.

கணவர் : நம்ம விஷயத்தில் சொல்லேன்.

மனைவி : இரண்டு வருஷத்திற்கு முன் ஒரு பெரிய சந்தர்ப்பம் வந்ததே நினைவிருக்கிறதா?

கணவர் : இல்லை, சொல்லேன்.

மனைவி : நினைவே வாராததைச் சொன்னால் புரியாது. நினைவு வருவது அதிர்ஷ்டம்.

இரண்டு ஆண்டுகட்குமுன் கணவரை MLCயாக நிற்கச் சொன்னார்கள். இவருக்கு உத்தியோகத்தை ராஜிநாமா செய்ய அபிப்பிராயமில்லை. இவருடனிருந்தவருக்கு அந்த வாய்ப்பு பலித்து அவர் சிக்கிம் கவர்னராகிவிட்டார். அதைக் கணவர் இப்பொழுது கூறினாலும் நம்பமாட்டார்.

கணவர் : ஏன் சொல்லக்கூடாது?

மனைவி : நினைவு எப்பொழுதாவது வந்தால், அப்பொழுது சொன்னால் பலிக்கும். இப்பொழுது சொன்னால் நம்பிக்கை ஏற்படாது. நினைவு வரும் சந்தர்ப்பமும் போய்விடும்.

கணவர் : அப்படி ஒரு சட்டமிருக்கிறதா?

மனைவி : அவற்றை எல்லாம் அன்னை எழுதி வைத்து இருக்கிறார்கள். நான் அதை எல்லோரிடமும் சொல்வேன். எவரும் கேட்டுக்கொள்ள மாட்டார்கள், நிறுத்திவிட்டேன்.

கணவர் : நாம் சொன்னால் நமக்குப் பலிக்காதா?

மனைவி : பலிக்காது. அதைவிட நமக்குப் பலிப்பதைத் தடுக்க நாம் பிறருக்குச் சொல்கிறோம்.

கணவர் : இது பெரிய சட்டம்.

மனைவி : இந்தச் சட்டம் சக்தி வாய்ந்தது.

கணவர் : அவர் குடிசைகள் கிளப்பிவிட்டது....

மனைவி : அதை நான் புரிந்துகொண்டேன்.

கணவர் : எனக்குப் புரியவேண்டும்.

மனைவி : புரிவது அதிர்ஷ்டம், செய்வது அருள். வாழ்க்கையை நமக்கு வந்ததின் கண்ணோட்டத்தில் கவனித்தால்......

கணவர் : எல்லா நிகழ்ச்சிகளும் ஆளுக்கு ஒரு கதை சொல்கின்றன.

மனைவி : அது என்ன?

கணவர் : வந்தது பெரியது, காப்பாற்றுவது அவ்வளவு சுலபமன்று.

மனைவி : சொல்லுங்க.

கணவர் : வாக்குரிமை வந்தால், ஜனாதிபதி ஆகலாம் எனப் பொருள் எனப் படித்தேன். இரண்டிற்கும் உள்ள தூரம், வந்த வாய்ப்புக்கும் பலனுக்கும் உள்ளது எனப் புரிந்தது.

மனைவி : எதுவும் முடியும். முயலவேண்டும் என்ற சொல் காதில் விழுந்தது.

கணவர் : தாழ்த்தப்பட்டவர்க்கு வந்த வாய்ப்பு' என்ற கட்டுரையை ஒருவர் கொடுத்தார். நான் அதைப் படிக்கவேயில்லை. நமக்குச் சொல்லும் செய்தியையே நினைத்தேன். வராண்டாவில் நடந்துகொண்டு இருந்தபொழுது ஒரு வாயிற்படியில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார், தெரிந்தவர். இதுவரை பேசியதில்லை. "நீங்கள் எது செய்தாலும் ஜெயிக்கும்'' என்றார். இதுபோல் கண்ணில் படுவனவெல்லாம் நம்மை நமக்குணர்த்தும் சொற்களாகவே அமைகின்றன.

மனைவி : முடியும், ஏன் கவலைப்படுகிறாய்' என்று மனம் தேடுகிறது.

கணவர் : அப்படித்தான் நான் நினைத்தேன். "நீ எதிர்பார்ப்பது வீண்'' என்றது.

மனைவி : நான் நினைத்த அதே சொல்லை நாத்தனார் வந்து சொல்லி விட்டுப் போனார். நாமே நினைத்து, சொல் எழுந்தால் என்ன பயன். தானேயன்றோ வரவேண்டும்?

கணவர் : உனக்கு அதாவது கிடைத்ததே, எனக்கு நேர்மாறாகக் கேட்கிறது. இதைப் பூர்த்தி செய்தால் வாழ்க்கைக்குப் போதும்.

மனைவி : அது உண்மை. இதுதானே ஆரம்பம். ஆரம்பத்திலேயே முடிப்பது சரியா?

கணவர் : உள்ளே போகமுடியவில்லை. அதுதானே முக்கியம். அது முடியவேயில்லை.

மனைவி : நாமே வலிய உதவி செய்யப்போனால் இதுவரை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கென்ன பொருள்?

கணவர் : அது சரியில்லை.

மனைவி : என்ன செய்யவேண்டும்?

கணவர் : தெரியவில்லையே?

மனைவி : நாம் செய்வது அதிகப்பிரசங்கித்தனம்.

கணவர் : சரி, என்ன செய்வது?

மனைவி : எதுவும் நாமே நினைந்து செய்யக் கூடாது எனப் புரிந்துகொள்ள வேண்டும்.

கணவர் : உள்ளிருந்து அது வருகிறது.

மனைவி : அதை முதல் தடை செய்யவேண்டும்.

கணவர் : அது பெரிய discipline..

மனைவி : புரிந்தால் கஷ்டமாக இருக்காது.

கணவர் : என்ன புரியவேண்டும்?

மனைவி : உதவி பிறர்த்தியாருக்குத் தேவையில்லை, புத்திமதி நமக்குத் தேவை என்று புரியவேண்டும்.

கணவர் : நீ சொல்வதைக் கேட்டுக்கொள்கிறேன். மனதில் படவில்லை.

மனைவி : மனத்தில்பட்டு, உணர்வு ஏற்று, செயல் அமுல்படுத்திய பின்னும் அது உள்ளிருந்து எழும்.

கணவர் : ஆமாம். நான் பார்க்கிறேனே.

கணவர் எந்த முடிவுக்கு வந்தாலும், தாம் ஆதாயத்தைக் கைவிட்டு அன்னையை மட்டும் ஏற்று, கணவர், பார்ட்னர், குழந்தைகட்குள்ள குணங்களுக்குப் பிரதிபலிப்பாகத் தம்முள் உள்ளதைக் கவனிக்கத் தாயார் முடிவு செய்தார். முடிவு செய்தபின் மனம் கட்டை போலிருக்கிறது. வழி அடைபடாவிட்டால், வழி திறந்து சுலபமாக இல்லை. இதுவும் அடுத்த நிலையில் unconscious இப்பொழுது அழைப்பு பயன்படும் எனத் தாயார் அறிவார். அழைப்புக்கு மனதில் ஆர்வமில்லை. ஆர்வமே அடிப்படை. அது இல்லாவிட்டால் வேலை இல்லை. ஆர்வம் எழ The Life Divine அதிகமாகப் புரியவேண்டும். எனவே அதைப் படிக்க முடிவு செய்தார். படிப்பது சுலபமாக இல்லை. கல்லில் நார் உறிப்பதாக அமைகிறது. விடாமுயற்சியுடன் படிக்கிறார்.

சிறியவன் : அம்மா, பெரியவன் பழையபடி கேலி செய்கிறான்.

பெரியவன் : நான் ஒன்றும் சொல்லவில்லை, அம்மா.

தாயார் : இது நாள்வரை நாம் இப்படிப் பேசியது தவறு. இனி குற்றம், ஆபத்து.

பெரியவன் : என்ன சொல்லி விட்டேன். நீங்கள் ஆபத்து, குற்றம் என்றெல்லாம் பேசுகிறீர்களே.

பார்ட்னரும், கணவரும் பீதியடைந்த முகத்துடன் வந்தனர். ஆனால் அவர்கள் வருகை வயிற்றைக் கலக்கவில்லை.

கணவர் : ஏண்டா, நீ இப்படியெல்லாம் பேசுகிறாய்.

பெரியவன் : அப்பாகிட்டேயும் கம்ப்ளெயிண்ட் போயிட்டுதா?

சிறியவன் : நான் அப்பாவை பார்க்கவேயில்லையே.

பார்ட்னர் : தம்பி, இனி நீ பெரிய வேலைக்கு வந்துவிட்டாய், ஜாக்கிரதையாகப் பேசவேண்டும்.

பெரியவன் : நான் எதுவுமே, யாரிடமும் பேசலீங்களே.

கணவர் : எவ்வளவு பெரிய ஆபத்து. அன்னையில்லையென்றால் இந்த நேரம் நாம் உயிரோடு இருக்க முடியாது.

பெரியவன் : எனக்கு எதுவும் புரியவில்லை.

பார்ட்னர் : உன் டாக்டர் நண்பனுடன் போன வாரம் டென்னீஸ் கோர்ட்டில் வம்பு பேசியது தலைக்கு ஆபத்தாய்விட்டது.

தாயார் : என்னடா நீ அப்படிப் பேசினாய், யாரைப் பற்றி?

பெரியவன் : எனக்குப் புரிகிறது. பேசியது உண்மை. நான் பேசவில்லை. அந்த வக்கீல் அங்கிருப்பதால் யாரும் மனம் விட்டுப் பேசவில்லை.

பார்ட்னர் : அந்த வக்கீல் யார் தெரியுமா?

கணவர் : மில் முதலாளி அடியாள் தலைவருடைய மைத்துனன்.



book | by Dr. Radut