Skip to Content

பகுதி 20

 

  • அதை தர்ம நியாயம் எனவும் கூறலாம்.
  • பண்பிற்கு உட்பட்டு வாழ்பவன் சில சமயங்களில் மனச்சாட்சிக்கும் எதிராக நடக்கவேண்டியிருக்கும்.
  • இறைவனின் கருணை உலகில் செயல்பட அவன் கருவியாவான்.
  • வாழ்வை விலங்காக அறிவது, மனிதனாக (social being) அறிவது, மனச்சாட்சியாலறிவது ஆகியவற்றைக் கடந்து இறைவனின் கருணையால் நிறைந்த உள்ளத்தாலறிவது உயர்ந்த வாழ்வு. அவ்வாழ்வைப் பண்புள்ள வாழ்வு என்கிறோம்.
  • வாழ்வின் சிறுமைகள் அவனைப் பாதிக்கா.
  • வாழ்வின் சிறப்புகள் அவனுக்குத் தலைவணங்கும்.
  • அப்படிப்பட்டவர் நடமாடும் உலகில் வாழும் இதர மனிதர் பாக்கியசாலிகள்.
  • சிறுமைகள் பாதிக்காவிட்டாலும், சிறப்புகள் கட்டுப்பட்டாலும், வாழ்வின் கொடுமை, கடுமை சீறி எழும் நேரம் அவர்கள் விலகி நிற்கலாம், அவற்றினின்று தப்பிக்கலாம். அவருக்கு அவை கட்டுப்படா.
  • அன்னை வாழ்வு அதையும் கடந்தது.
  • அக்கொடுமைகள், கடுமைகள் அவர் கருணை முன் கரையும்.
  • அவ்வாழ்வைப் பெற ஒருவர் அன்னையின் அவதாரச் சிறப்பை அறிந்து பின்பற்றவேண்டும்.
  • சமர்ப்பணம் வாழ்வுக்கு அச்செயல் அத்திறனைத் தரவல்லது.
  • சரணாகதி ஒரு செயல் நிரந்தரமாக அத்திறனைத் தரும்.
  • It is a life of higher consciousness. அது உயர்ந்த ஜீவிய வாழ்வு.
  • எவருக்கும் கட்டுப்படாத பிரச்சினைகள், அவருக்குக் கட்டுப்படும்.
  • அன்னையை மனிதப் பண்புடன் ஏற்பவர் பெறும் தெய்வீகப் பண்பு அது. 

அன்னை என்பது என்ன? அவர் நமக்குக் கொடுப்பது என்ன? 

  • நாம் அன்னையைத் தெய்வமாக அறிவது, கடலைப் பார்த்து பீச் எனக் கருதுவது போலாகும்.
  • தெய்வத்தின்பின் இறைவனும், அதன்பின் பிரம்மமுமிருந்தாலும், நாம் தெய்வத்தைக் கடந்து சிந்திப்பதில்லை.
  • தெய்வ லோகத்தின் பிறப்பிடம் சத்தியஜீவியம்.
  • சத்தியஜீவியம் பிறப்பது சித் என்பதிலிருந்து.
  • சித், சித்-சக்தியாக மாறுமிடத்தில் பிறந்தவர் அன்னை.
  • பிரம்மம், சச்சிதானந்தம், சித்-சக்தி தத்துவமாகப் புரிந்தால் அன்னை விளங்கும்.
  • சுருக்கமாகக் கூறினால்,

- பிரம்மம் எந்தக் குணமுமில்லாமல் எல்லாவற்றையும் உற்பத்தி செய்யும்.

- அதன் முதல் சிருஷ்டி சச்சிதானந்தம்.

- சத் என்பது புருஷன், சித் என்பது ஜீவியம், மூன்றாவது ஆனந்தம்.

- சித் உலகை சிருஷ்டிக்க சித்-சக்தி எனப் பிரிந்தது.

- பிரிந்த இடத்திற்குரிய தெய்வம் அன்னை

 சத்தியஜீவியம் சித்-சக்தியின்று எழுந்தது.

 சத்தியஜீவியம் தெய்வங்களின் பிறப்பிடம்.

  • உலகை சிருஷ்டித்த சத்தியஜீவியம் உற்பத்தியான இடத்துத் தெய்வம் அன்னை.
  • அன்னை ஸ்தூல உலகைக் கடந்த சூட்சும உலகைக் கடந்த காரண லோகத்தைக் கடந்தவர்.
  • நாமறியும் சர்க்கார் ஆபீஸ், மார்க்கட், கல்லூரி ஆகியவை சர்க்காருக்கு அடக்கம். சர்க்கார் பார்லிமெண்டிற்கு அடக்கம். 

பார்லிமெண்ட் பிறந்தது சமூகத்தின் இச்சையினால். ஏதோ ஓரளவு பொருத்தமாகச் சொல்லவேண்டுமானால்,

சர்க்கார் அதிகாரிகளைத் தெய்வத்திற்கு ஒப்பிடலாம்.

சமூகத்தின் இச்சையை அன்னைக்கு ஒப்பிடலாம். 

  • சமூகத்தின் இச்சை,

- சர்க்காரை உற்பத்தி செய்கிறது.

- மதங்களை அதுவே ஏற்படுத்தியது.

- புரட்சி சமூகத்தின் இச்சைக்குரியது.

- ஏகாதிபத்தியம், மன்னராட்சி, கொடுங்கோலாட்சி, மக்களாட்சி, அராஜகம், சுபீட்சம், சந்திரனுக்குப் போவது, சுதந்திரப் புரட்சி ஆகிய அனைத்தையும் உற்பத்தி செய்தது சமூகம், அதன் இச்சை.

  • அன்னையை நாம் அப்படிப் புரிந்துகொண்டால், நமக்கு அதன் அர்த்தமென்ன?

நாம் இன்று சிறிய மனிதனாயிருப்பதும்,

நாம் பெரிய மனிதனாவதும்,

நாம் நாட்டில் பெரியவனாவதும், அவதாரப் புருஷனாவதும், மேதையாவதும், அன்னை இச்சை.

- நம் இச்சைப்படி அன்னை நடப்பதால் நாம் பெட்டிக்கடைக்காரனாக இருக்கிறோம்.

- நாம் உலகில் பெரிய மனிதனாகவேண்டும் என நினைத்தால் அதை அன்னை பூர்த்திசெய்வார்.

- நாம் சிறிய மனிதனாகவோ, பெரிய மனிதனாகவோ இருக்கப் பிரியப்படுவதை நிறைவேற்றவல்ல சக்தியுடையவர் அன்னை.

 

 

- நாம் பள்ளிக்குப் போனால் பாடம் கற்கலாம். பள்ளி கொடுப்பதை முழுவதும் நாம் பெறுவதில்லை. நம்முடைய லிமிட்

- வரையறையால் நாம் பள்ளி கொடுப்பதில் ஓரளவு பெறுகிறோம்.

- நாம் பெறத் தயாரானாலும், நமக்கு வேண்டியதைப் பள்ளியோ, சர்க்காரோ, மார்க்கட்டோ தர முடியாது.

- நமக்கு லிமிட் இருப்பதைப்போல் பள்ளிக்கும் லிமிட் உண்டு.

- நமக்குத் தெரிந்ததில் உயர்ந்தது தெய்வம்.

- தெய்வம் தருவதை முழுவதும் நாம் பெறுவதில்லை.

- நாம் பெறத் தயாரானாலும், தர தெய்வத்திற்கு லிமிட் உண்டு.

- நம் கர்மத்தை அழிக்கும் திறன் தெய்வத்திற்கில்லை.

- நம் பிறப்பிலுள்ள அறிவை உயர்த்தும் திறனுமில்லை.

- நாம் பெரிய மனிதனாக விரும்பினால் கடவுள் அதை ஏற்கவேண்டும் என்றில்லை.

- ரிஷி மூஷிகத்தைப் பெண்ணாக்கினாலும், பெண்ணின் சுபாவம் மூஷிகத்தின் சுபாவமாகவே இருக்கும். மூஷிகத்தின் சுபாவத்தைப்பெண்ணின் சுபாவமாக்கும் திறன் ரிஷிக்கோ, தெய்வத்திற்கோ இல்லை. 

- மனிதன் மாறப் பிரியப்பட்டால், எதுவாக மாறப் பிரியப்பட்டாலும், அதுவாக மாற்றும் திறன் அன்னைக்குண்டு.

- அன்னையாகவோ, இறைவனாகவோ மாற மனிதன் விரும்பினாலும் அதையும் சாதிப்பது அன்னையின் சக்தி, அருள், பேரருள்.

  • நாம் அன்னையை மேற்சொன்னதுபோல் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டால் அன்னை நமக்கு அளிப்பது,

- நாம் பிரார்த்தனை செய்ததற்கன்று, அப்பலன் என்ற ரூபத்தில் அனந்தத்தைத் தருகிறார்கள்.

- நாம் கேட்காதபோதும் அன்னை தம்மை நமக்கு அளிக்கிறார்கள்.

- நாம் பிரார்த்தனையின் பலனைப் பெற்றுக்கொள்கிறோம், அதன்பின்னுள்ள அனந்தத்தைக் காண்பதில்லை, அதன்பின்னுள்ள அன்னையைக் காண்பதில்லை.

- உலகில் நடக்கும் செயல்களெல்லாம் அதுபோன்றதே.

- நாம் நடப்பது தரை மீது என்றால், அது பூமாதேவி.

- பூமாதேவி ஜடப்பிரம்மம்.

- நடப்பது ஜடப்பிரம்மத்துடன், உடலெனும் பிரம்மம் உறவாடுவதாகும்.

- நம் செயல்களெல்லாம் பிரம்மம். பிரம்மத்துடன்' உறவு கொள்வதாகும்.

- நாம் எந்த அளவு விழித்துக்கொண்டாலும், விழிப்பால் எதை நாடினாலும், அதைப் பூர்த்திசெய்வது அன்னை என நாம் புரிந்துகொண்டால் அது அன்னையைப் பூர்த்தி செய்து கொள்வதாகும்.

- உலகில் செயலின் பின்னாலுள்ள சூட்சுமங்களை அறிவது ஆன்மீக விவேகம்.

தாயார் எதையும் சொல்லமுடியாமல் தவிக்கும்பொழுது ஒரு அன்பர் அவரிடம் 150/- ரூபாய் காணிக்கையைக் கொடுத்து செலுத்தச் சொன்னார். இவருடைய பிஸினஸ் 11 இலட்சமிருந்த பொழுது அன்பரானார். அப்பொழுது 150/- ரூபாய் காணிக்கை செலுத்தினார். இப்பொழுது பிஸினஸ் பல கோடி. இவருடைய ஈடுபாட்டிற்குக் குறைவில்லை. மையத்தை மறப்பதில்லை. எந்த சேவையையும் மறுப்பதில்லை. எடுத்துக்கொண்டால் 5 மடங்கு, 10 மடங்கு சிறப்பாகச் செய்வார். சொற்ப நாளில் பிஸினஸ் சில கோடிகளைத் தாண்டிவிட்டது. இவரைப்போன்ற அன்பரில்லையே என்று கூறலாமே தவிர, இவரைப் பற்றிக் குறை என எவரும் சொல்ல முடியாது. 

  • எந்தச் சேவையையும் சொன்னால் உடனே செய்வார்.
  • இவருக்கு வேண்டியது பணம்.
  • அதனால் காணிக்கையைத் தம் உயர்ந்த நிலைக்குத் தகுந்தாற்போல் உயர்த்தவேண்டும் என எவரும் இவரிடம் கூறப் போவதில்லை.
  • இவர் நண்பர் ஆபீசில் வேலை செய்பவர், 12,000/- ரூபாய் காணிக்கை ஒரு முறை இவர்மூலம் செலுத்தியதும் இவர் அறிவார்.
  • இவருக்கே சொந்தமாகக் காணிக்கையைப் பற்றி யோசனை தோன்றவில்லை. 

"இந்தக் காணிக்கை என் மூலம் பெருகுவதன் காரணம் என்ன? நான் என் காணிக்கையை வருமானத்திற்கேற்ப அவ்வப்பொழுது உயர்த்திவிட்டேனே'' எனத் தாயார் செய்த தீவிர யோசனைகட்கு  மனத்தில் பதில் எழவில்லை. ஏன் இந்த ஐயத்தைச் சமர்ப்பணம் செய்யக்கூடாது என்று நினைத்தார், சமர்ப்பணம் செய்தார். தியானம் வந்தது. தியானம் கலைந்தபின்,

உன் ஆரம்ப நாள் நம்பிக்கை அதிகப்படவில்லை

என மனம் கூறியது. காணிக்கையே மனிதர்களால் உயர்த்த முடியவில்லை. அங்கு நான் குறை வைக்கவில்லை. நம்பிக்கையை உயர்த்துவது அவசியம்தான். அது என் கையிலில்லையே எனத் தோன்றியது.

உன் இயலாமையைச் சமர்ப்பணம் செய்

என்றது உள்ளிருந்து ஒரு குரல். என் திறமையைச் சமர்ப்பணம் செய்ய முடியவில்லை - அது அருளைப் பேரருளாக்கும் - அப்படியிருக்கும்பொழுது இயலாமையை எப்படிச் சமர்ப்பணம் செய்வது என்று யோசித்தார். யோசனை கூடாது என்று நினைத்தால் 

இத்தனையும் மறந்துவிடுகிறது. ஒருவேளை அது எனக்குப் பிரச்சினையாகவில்லை போலிருக்கிறது என்று மனம் கூறியது. அதுவும் சிந்தனையன்றோ!

  • நம்பிக்கையைச் சமர்ப்பணம் செய்தால் தன்னம்பிக்கை தெய்வ நம்பிக்கையாகும் என இவருக்குத் தெரியும்.
  • இந்தத் தெளிவு ஆழ்ந்த தியானத்தைக் கொடுத்தது. ஆனால் சமர்ப்பணம் செய்ய முடியவில்லை. என்றும்போல் சமர்ப்பணம் செய்ய முடியவில்லை என்ற உணர்வு மேலிட்டது.
  • இதுபோல் அவர் ஆழ்ந்த சிந்தனையற்ற யோசனையிலிருக்கும் பொழுது 150/- ரூபாய் காணிக்கை கொடுத்த அன்பர் மீண்டும் வந்து "நான் கொண்டுவந்ததைத் தர மறந்துவிட்டேன்'' என்று கூறி 25,000/- ரூபாய்க்கு ஒரு செக் கொடுத்தார். காணிக்கையை எடுத்துவந்தாலும் தர மனம் வரவில்லை என்று தன் மனநிலையைத் தனக்கே விளக்கிக்கொண்டார்.

தாயார் மனம் தத்தளிக்கவேண்டிய நேரம். அப்படி அது அவதிப்படவில்லை. சமர்ப்பணமானபின் சரணாகதியில் காலை எடுத்து வைத்தபின் உள்ள ஆத்ம நிதானம் வரவில்லை. இனி எதைப் பெறுவது என்பது பிரச்சினையில்லை. வந்தது போதும் என நினைக்கக் கூடாது, அது வருவதைத் தடுக்கும், வந்ததைப் பெற்று நிரந்தரமாக அனுபவிக்கத் தேவையான தகுதியைப் பெறவேண்டும். அதை வீட்டார் அனைவரும் பெறவேண்டும். அவர்கள் அதைப் பெறும் அளவுக்குத் தமக்கு நிதானம் வேண்டும். அது பாஸிட்டிவான நிதானமாக இருக்கவேண்டும். சமர்ப்பணம் அந்த அளவில் நிச்சயம் பலிக்கவேண்டும்.

வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளைத் தம் மனத்தின் பிரதிபலிப்பாக எடுத்துக்கொண்டு உள்ளே வேலை செய்யவேண்டும். தம் மனம், பொதுவாக மனத்தின் பாங்கு மற்றவரிடம் வெளிப்படுவதை தம் மனநிலையென ஏற்று செயல்படவேண்டும். நடப்பவை அவர் மன எழுச்சிக்கு உரமாயிற்று. 

மனத்தின் சுபாவம்,

  • நாம் சாதிக்க முடியாததைப் பிறருக்குச் சொல்ல விரும்பும்பொழுது முழு நம்பிக்கை எழும்.
  • ஏற்கனவே சரி வாராததை இப்பொழுது உற்சாகமாகப் பின்பற்றுவது.
  • பலிக்கிறதோ, பலிக்கவில்லையோ அதையே நினைத்து, நினைத்து உருகுவது. நினைப்பதால் அது சரி என நம்புவது.
  • தன் குறையைப் பிறரிடம் கண்டால் பாதகத்தைக் கண்டதுபோல் பதறுவது.
  • எதுவும் நடக்கவில்லை என்றாலும், எல்லாம் நடக்கும் என எதிர்பார்ப்பது.
  • போட்டி போடுவது அசிங்கம் என்று தெரிந்தாலும், தீவிரமான போட்டியை முழுமூச்சுடன் போடுவது.
  • இளம் பெண் 200 முறைகள் கண்ணாடியைப் பார்ப்பதுபோல் 200 முறைகள், 2000 முறைகள் தம் பெருமையை தாமே வியந்துகொள்வது.
  • தான் தொடர்புகொள்பவர் வாழ்வில் பெரிய நஷ்டம் உடனே தன் பொறாமையால் வருகிறது என்பது எத்தனை தரம் நிகழ்ந்தாலும் கண்ணில் படாதது.
  • அதிர்ந்து பேசினால் அதிர்ஷ்டம் விலகும் எனச் சொற்பொழிவு ஆற்றினால் ஆங்காரமாகப் பேச ஆர்வமிருந்து செயல்படுவது.
  • தம் தாழ்ந்த அந்தஸ்தை மறைக்கப் பரிசு கொடுத்தால் தம்மைக் குறைவாக நினைப்பார் என அறியாதது. அப்பரிசு அவர்களை நம்மை மேலும் குறைவாக நினைக்கத் தூண்டும்.
  • தம்மைத் தாம் கேள்விப்படும் எல்லா உயர்வுகட்கும் உறைவிடம் எனக் கருதி தம்மைத் தாமே வியந்துகொள்வது.
  • அசிங்கப்படவேண்டியவற்றிற்குப் பெருமைப்படுவது.
  • அந்தஸ்து, பணம் ஆகியவற்றுள் மட்டும் நம்பிக்கையிருப்பது. இல்லாத அந்தஸ்து, இல்லாத பணம் என்பதை மறந்துவிடுவது.
  • தாம் சொத்தை - கணவர் - என்ற உணர்ச்சியேயில்லாமல் இருப்பது.
  • எவரைக் கண்டாலும், அவர் குறைகளை மட்டும் குறித்துக்கொண்டு, தாம் அதனால் உயர்வு என நினைப்பது. அதே குறை தம்மிடம் பன்மடங்குள்ளதை அறியாதது.
  • கண்மூடியாக இருப்பது கண்ணில் படாதது.
  • பிறரைக் கேலி செய்யாவிட்டாலும், மனம் கேலியால் நிறைந்துள்ளது.
  • ஆதாயமே அனைத்தும் என்பது கொள்கை.

மனத்தை ஆளுதல் உலகை ஆளுதலாகும். பண்பு என நாம் அறிவது மனம் அடங்கி உடல் வணங்கி, ஆத்மா அவைமூலம் உலகை எட்டிப்பார்ப்பதாகும். ஆங்கிலத்தில் gentle-man என்ற சொல்லை சான்றோர் என மொழிபெயர்க்க முடியாது. சான்றோர் ஆன்மீக மனிதனைக் குறிக்கும். Gentle-man என்பது உயர்ந்த மனிதனாகும். அவனுக்குரிய குணங்களை 15, 20 வகைகளாக விவரிப்பார்கள்.

சில,

  • பிறர் மனம் புண்படச் செயல்படாத தன்மை.
  • பிறருக்குக் கொடுக்கும்பொழுது, பெறுபவருக்குள்ள பணிவு இருப்பது.
  • சந்தர்ப்பத்தை, எவ்வளவு நியாயமாக இருந்தாலும், தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தாதது.
  • பொய்க்கு மனத்திலும் இடம் தாராதது.

Paul என்பவன் அமெரிக்காவில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய ஒத்துக்கொண்டு பின்னர் அவள் தன் கணவனை சுட்டுக் கொன்றாள் என அறிந்து கைவிட்டுவிட்டு இங்கிலாந்து வந்து Helta என்பவளைக் காதலிக்கிறான். Paulக்குப் பணமில்லை. Heltaவுக்கு முறை மாப்பிள்ளை சொத்துடையவன். அவளுக்காக 10 வருஷங்களாகக் காத்திருக்கிறான். அமெரிக்கப் பெண் இலண்டன் வந்து Paulஐச் சந்திக்கிறாள். Paul திருமணம் செய்ய மறுக்கிறான். Paulஇன் உறவினர்களிடமிருந்து எல்லா விபரங்களும் அறிந்து முறை மாப்பிள்ளையைச் சந்தித்து, தான் யார் என விவரித்து, "நீங்கள் Heltaவை விரும்புவதாக அறிந்தேன். அவளுக்கு Paul மீது அபிப்பிராயம். Paulக்கு என்னுடன் உள்ள தொடர்பை Heltaவிடம் கூறினால், அவள் Paulஐ மறந்து உங்களை மணப்பாள்' எனக் கூறுகிறார். "அதை என்னால் செய்ய முடியாது. விஷயம் எனக்குச் சாதகமாக இருப்பதால் அதை நான் பயன்படுத்த முடியாது'' என்கிறான் முறை மாப்பிள்ளை. அமெரிக்கப் பெண்ணுக்குப் புரியவில்லை. "உங்கள் இஷ்டம் நிறைவேறும்'' என்கிறாள். முறை மாப்பிள்ளை, "என்னால் பிறரைப் பற்றி ஒருவரிடம் புகார் கூற முடியாது. அதுவும் அதனால் எனக்குச் சாதகமான பலன் வரும் என்றால் செய்யவே முடியாது'' என்று கூறுகின்றான். அது பண்பு. இந்த நிகழ்ச்சியைப் படித்த தாயார் என் குடும்பத்திற்கு இதுபோன்ற பண்பு வருமா?

எப்பொழுது வரும்? எப்படி வரும்? என யோசிக்கிறார்.

மற்றொரு கதையில் ஏழைப் பாதிரியார் மகள் கிரேஸ். கிரீக், இலத்தின் மொழி பயின்றவள். நல்ல உடையும் இல்லாதவள். சாப்பாட்டுக்குக் கஷ்டம். வளர்ப்பு உயர்ந்தது. அவள் நடையுடை பாவனை அழகுற விளங்கும். முகம் மனத்தின் பண்பைப் பிரதிபலிக்கும் களையுடையது. ஆர்ட்டீகன் கிராண்ட்என்பவர் பிஷப் மகன். நிலபுலங்களுடைய செல்வர். அடுத்த பிஷப்பாக வரும்

வாய்ப்புடையவர். அவர் மகன் ஹென்றி இராணுவத்தினின்று மேஜராக ஓய்வு பெற்றவன். மனைவியை இழந்து 5 வயது பெண் குழந்தையுடன் தகப்பனுக்கு வாரிசாக வசதியாக வாழ்பவன். கிரேஸைச் சந்தித்து அவளை மணக்க விரும்புகிறான். தகப்பனாருக்கு அளவுகடந்த கோபம். அவளை மணந்தால் தம் சொத்தை அடுத்த பிள்ளைக்குத் தருவேன் என ஆவேசமாகப் பேசுகிறார். இந்த ஏழைப்

பெண்ணை எப்படி என் மகன் மணப்பது எனக் கொந்தளிக்கிறார். அப்பெண் ஒரு நண்பர் வீட்டிற்கு வந்திருப்பதை அறிந்து அவளை நேரில் பார்த்து திருமண நினைவை அழிக்கவேண்டி அங்குப் போகிறார். அவள் பழைய உடையுடன் அவரைச் சந்திக்கிறாள். எப்படி என் மகன் இதுபோன்ற பெண்மீது ஆசைப்படலாம் என வியக்கிறார். அவளிடம் தம் ஆத்திரத்தைக் கொட்ட முனைந்தால், ஆத்திரம் எழவில்லை, அமைதி ஆகிறார். பெண்ணை நாற்காலியில் அமரச் சொல்கிறார். அவள் நெருங்கி வந்தவுடன் முகம் தெளிவாகத் தெரிகிறது. அவள் அழகி எனக் காண்கிறார். இவ்வளவு அழகுள்ள பெண்ணை என் மகன் விரும்புவது நியாயம் எனத் தோன்றுகிறது. அவளிடம் பேசுகிறார். தன் வயதிற்கு மீறிய பக்குவத்துடன் பேசுகிறாள். தம் மனைவிக்கு இப்பக்குவமில்லை எனப் புரிகிறது. தமக்கே இந்தப் பக்குவம் உண்டா என்ற சந்தேகம் எழுகிறது. தம் மகனையும், அவன் மகளையும், திருமணத்தையும் பற்றிப் பேசும்பொழுது அவளருகில் வருகிறார். முகத்தை அருகிருந்து பார்க்கும்பொழுது அழகுடன், பொலிவு இருப்பதைக் கண்டு வியக்கிறார். நல்ல சாப்பாடு, வசதியால் வரும் களை இது அன்று. வளர்ப்பாலும், பராம்பரியப் பண்பாலும் வருவது எனத் தெரிகிறது. ஏனோ, அச்சிறு பெண் இப்பெரியவர் மனத்தில் சற்று பயத்தை ஏற்படுத்துகிறாள். தாம் வந்த காரியத்தை மறந்து நெகிழ்ந்து போகிறார். தாரை, தாரையாகக் கண்களில் நீர் பெருகுகிறது. அவள் அமைதியுடன் பேசுவதும், அவள் பேச்சின் தரமும் அவர் நெஞ்சைக் கவர்கின்றன. அவள் தகப்பனார் மீது ஒரு பொய் வழக்கு நடக்கிறது. ஆர்ட்டீகன் உற்சாகப்படுகிறார். கிரேஸ் அவர் மனத்தை அறிந்து, "உங்கள் குடும்பத்திற்குக் கெட்ட பெயர் வரும்வகையில் நான் நடக்கமாட்டேன். என் தகப்பனார் மீதுள்ள குற்றச்சாட்டு நீங்கும்வரை நான் உங்கள் மகனை மணக்கச் சம்மதிக்க மாட்டேன்'' என அவளே பெருந்தன்மையுடன் பேசியது அவரை வியக்கச் செய்கிறது. அவர் பெருமிதமடைகிறார். "இக்குழப்பம் விலகினால் என் ஆட்சேபணை விலகும்'' என்கிறார். குனிந்து அவள் நெற்றியில் முத்தமிடுகிறார்.

ஏழ்மையின் ஆன்மீகப் பலமான பண்பு செல்வத்தின் கர்வத்தை

வெற்றிகொள்கிறது.

தாயார் தான் படித்த இக்கதையில் இந்நிகழ்ச்சியை நினைவுபடுத்தி என் கணவரும், என் பிள்ளைகளும் இதுபோன்ற பண்பைப் பெற்றால், வந்த பெரிய வாய்ப்புகள் பலித்து நிற்கும் எனக் கருதுகிறார். பெருங்கல்வி, உயர்ந்த வளர்ப்பு, பரம்பரையான பழக்கம் எல்லாம் திடீரென எப்படி வரும்?

  • ஆன்ம விழிப்பு அனைத்தையும் உடனே செய்யும்.
  • அன்னையை ஏற்றால் அத்தனைத் தலைமுறை அனுபவமும் அத்தனை நிகழ்ச்சிகள்மூலம் பெறலாம்.
  • பெறுவதற்குரிய முறையும், சட்டமும் உண்டு.
  • பெற குடும்பம் முன்வருமா? என்ற கேள்வி எழுகிறது.
  • ஆங்கிலேயருக்குண்டான நேர்மை, சுயநலமற்ற கௌரவம், பயன் தேடாத பண்பு 1000 ஆண்டுகளாக வளர்ந்தவை.
  • நம் நாட்டில் அது நேருவுக்கு இருந்தது என்றால் அவர் சந்ததிக்கில்லை.
  • அன்னையின் பேத்திக்குப் பேத்தியின் முகத்தில் ஆன்மீகக் களை சொட்டுகிறது. அது ஆன்மீகம் 4வது தலைமுறைக்கு அளிக்கும் வரப்பிரசாதம். அது அன்னை விஷயம். நமக்குப் பொருந்துமா?
  • தாம் என்ன செய்யலாம்? எதுவும் செய்வதைவிட சமர்ப்பணமே மேல் என்பது மீண்டும் உண்மையா?
  • இதுவரை நடந்தது சமர்ப்பணத்தால் மட்டும் நடந்தது. சமர்ப்பணத்தால் நடக்காதது இதுவரை தமக்குப் பலிக்காததால், மீண்டும் மீண்டும் சமர்ப்பணத்தையே நாடுவது முறை என்று கூறலாமா?
  • குடும்பம் ஒரு பக்கமிருக்கட்டும், தாம் எந்த அளவு இந்தத் தராசில் தேறுவோம் எனத் தாயார் சிந்தனையை ஓட்டினார்.

  • எல்லைக்கோடு எது? அதைத் தாண்ட முடியுமா? எப்படி? என்பதே கேள்வி.

தாண்டமுடியுமா என்பது கேள்வியில்லை, தாண்ட வேண்டுமா என்பதே கேள்வி. வேண்டும் என்றபின் சமர்ப்பணம் Let Thy will be done,Not my will  - வழிவிடுவதைக் காணலாம். சமர்ப்பணம் செய்யும்பொழுது மனத்தின் ஒரு பகுதி சமர்ப்பணம் செய்வதையும், அடுத்த பகுதி சமர்ப்பணத்திற்கு எதிரான நம் பிரியத்தை வலியுறுத்துவதையும் காணலாம். மனம் இரு பகுதிகளாகப் பிரிந்துள்ளவரை சமர்ப்பணம் பலிக்காது.

இரு பகுதிகளும் - முழு மனமும் - செய்யும் சமர்ப்பணம் பலிக்கும்.

ஒரு பகுதி மட்டும் சமர்ப்பணம் செய்தால் அல்லது Let Thy will be done,Not My will  என்று திரும்பத் திரும்ப இடைவிடாது கூறினால், அடுத்த பகுதி அடங்குவது தெரியும். இடைவிடாது தொடர்ந்து சொல்ல நமக்கு முயற்சியிருப்பதில்லை. அப்படி ஒரு செயலைச் சமர்ப்பணம் செய்தால், கொஞ்சம் கொஞ்சமாகச் சமர்ப்பணம் கனத்து, மௌனம் சேர்ந்து, பலிப்பதைக் காணலாம்.

பலித்ததைக் காப்பாற்றும் முயற்சி பெரு முயற்சி.

ஒரு செயல் பலித்தவுடன் சமர்ப்பணம் நகரும். அது அடுத்த செயலுக்கு நகராது. ஒரு செயல் சமர்ப்பணமானால், அத்தனைச் செயல்களும் சமர்ப்பணமாகும். இனி அம்முயற்சி தேவையில்லை. நாம் என்பது நம் பர்சனாலிட்டி. அது ஆழத்திலிருந்து மேல்வரை பல அடுக்குகளாக அமைந்துள்ளது. செயலொன்றால் சமர்ப்பணம் பலித்தால், சமர்ப்பணம் நகர்ந்து நம் பர்சனாலிட்டியின் முதல் வரிசையைத் தொடும். அது தொடர்ந்த யாத்திரை. யாத்திரை சைத்தியப்புருஷனில் முடியும்.

  • இவையெல்லாம் தொடருமா என்பது எப்பொழுதும் கேள்வியில்லை.
  • இவையெல்லாம் வேண்டுமா என்பதே என்றும் உள்ள கேள்வி.

சாவித்திரியை அவளுடைய ஆத்மாவின் பகுதிகள் தங்களையே முழு ஆத்மா எனக் கூறி உபதேசம் செய்ததை அவள் ஏற்கவில்லை. எமன் அதையே தீவிரமாக வலியுறுத்தியபொழுதும் அவள் ஏற்கவில்லை. எமன் கரைந்தபின், இறைவனும், சாவித்திரிக்கு அதே உபதேசம் செய்வதை அவள் மறுத்தபின்னரே அவளுக்கு பிரம்ம ஜனனம் பலிக்கிறது. இவை ஏன் நடைபெறுகின்றன? இறைவன் மனித சுபாவத்தை அறிந்து அதையொட்டிப் பரிணாமத்தை நடத்துவதால், சாவித்திரியின் ஆழ்ந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்ய இறைவன் முனைகிறார். ஆத்மாவின் ஆழத்திலும் பரிசு - வானுலகப் பரிசானாலும் - பெறும் மனநிலையில்லை எனில் யோகம் பலிக்கும். எளிய மனிதன் தன் ஆத்மாவையோ, ஆத்மாவின் பகுதியையோ சந்திப்பதில்லை. ஆத்மாவின் பகுதி எழுந்தால் மனிதன் பெற விழைவது மோட்சம். அது லௌகீகப் பரிசைத் தர முன்வந்தால் மனிதன் அதைப் பிறவிப் பயனாகக் கருதி ஏற்பான். நிரந்தர அதிர்ஷ்டம் என்பான். அதை மறுக்க மனிதனால் முடியாது. விவேகானந்தரும், புத்தரும் அத்தகைய பேற்றை மறுத்தனர்.

  • ஒரு சமர்ப்பணம் பலித்தால் அச்செயல் தொடர்ந்து பெருகும்.
  • தொடர்ந்து பெருகும் செயல் தொட்டதெல்லாம் பொன்னாகும் கை.
  • தொட்டதெல்லாம் பொன்னாகும் கையை மறுக்கும் மனிதனுண்டா? நாம் அத்தகுதி பெற்றுள்ளோமா?
  • தொடர்ந்து பரிசுகளை மறுத்தவனுக்கு யோகம் சாவித்திரிக்குப் பலித்ததுபோல் பலிக்கும்.

இது தாயார் மனநிலை. அவர் முன்உள்ளது முயற்சி. முயற்சிக்குரியது சமர்ப்பணம். சமர்ப்பணத்திற்குரியது அதே நிலையில் நாம் அசையாது நின்று, அணுவணுவாய் முன்னேறுவது. தகப்பனார் 

இந்த உரையாடல்கள் மட்டும் தனியே ஒரு வெளியீடாக வர இருக்கின்றது.

கஸபிளான்க்கா என்ற சிறுவனை கப்பல்

ஓரிடத்தில் காவலுக்கு

வைத்துவிட்டுப் போனபொழுது கப்பல் தீப்பற்றியது. மீண்டும்

தகப்பனார் வந்து, "வா'' என உத்திரவிடாமல் பையன் அதைவிட்டு

அகலவில்லை. தகப்பனாரோ தீக்கிரையானார். அவன் கடைசிவரை

அவ்விடத்தை விட்டகலாமல் தகப்பனாரைக் கூவி அழைத்து இறந்தது

போன்ற ஆத்மாவுக்குரியது சமர்ப்பணம்.

 

முடிவு முழுமையானால் சமர்ப்பணம் முழுமை பெற்று சரணாகதியாகும்.

  • வேலை என்பது சமர்ப்பணம்.
  • சமர்ப்பணம் தவிர வேலையில்லை.
  • வேலை சமர்ப்பணத்திற்காகவே வருகிறது.
  • வேலை என வந்தவுடன் அதைச் செய்வதற்குப் பதிலாக அதைச் சமர்ப்பணம் செய்யவேண்டும்.

அன்னை பக்தர் என்பதற்கு அடையாளம் அனைவரும் நம்மை

அன்புடன் நடத்துவது. அனைவரும் நம்மை அன்புடன் நடத்தினால்,

நாம் அவர்களிடம் அன்பு செலுத்துவதாக அர்த்தம். ஏசு அன்பு

செலுத்தினார். அவரைச் சிலுவையில் அறைந்தனர். அன்பைப் பெற

முடியாதவர், அன்பு செலுத்துபவரை ஏமாந்தவர், திராணியற்றவர்,

துப்பில்லாதவர், தம்மைக் காப்பாற்றும் திறனற்றவர், எனப் புரிந்து

கொண்டு, இவரைக் கேலி செய்யலாம்,

வெறி ஏற்றலாம், இவருக்குத்

தீங்கு செய்யலாம், எது செய்தாலும் இவரால் எதிர்க்க முடியாது'

எனப் புரிந்துகொண்டு, அத்தனையும் செய்வார்கள். அது ஆபத்து.

உரிமைக்கு, உயிருக்கு, உடமைக்கு, மானத்திற்கு, மரியாதைக்கு

ஆபத்து.

  • அன்பை ஏற்க முடியாதவருக்கு அன்பைச் செலுத்தக் கூடாது.
  • அந்தப் பாகுபாடு நமக்கில்லை.
  • நாம் வளர வளர, வேறு வேறு மனிதர்கள் (different levels of people will be kind to us) நம்மிடம் அன்பாக இருப்பார்கள்.

  • புதிய மனிதர்கள் வந்தவுடன் பழைய மனிதர்கள் அளவுகடந்த தொந்தரவு கொடுப்பார்கள்.
  • எல்லா உறவினர்களும், நண்பர்களும், அவ்விதிக்குக் கட்டுப்பட்டவர்களே.
  • அந்தத் தொந்தரவு நாமே வரவழைப்பது. நாம் உதவப் போனால் தொந்தரவு நிச்சயம் வரும்.
  • சுயநலமான சுபாவம் உள்ளவர்க்கு இத்தொந்தரவு வாராது.
  • பெரும்பாலோர் உதவி மனப்பான்மையுடையவர் என்பதால் இத்தொந்தரவிலிருந்து தப்ப முடியாது.
  • முடிவான கட்டத்தில் அன்னை பக்தர் என்பதற்கு அடையாளம் எவரும் நமக்குத் தொந்தரவு தாராமலிருப்பது.
  • அகந்தை என்ற அளவிலிருந்தாலும் தொந்தரவு நிச்சயமாக வரும்.
  • அகந்தையைக் களைந்தவர் இருவரே என்பதால், அந்நிலை நமக்கு அதிக தூரம்.
  • நாம் அன்பாகப் பழகி, நம்மிடம் அனைவரும் அன்பாகப் பழகுவதே அன்னை பக்திக்கு அடையாளம். நமக்கு எதிரிகள் உள்ளவரை நாம் அன்னை பக்தரில்லை. முழு பக்தி வரவில்லை எனப் பொருள்.

இந்த ஞானம் - இதுபோன்று அன்னையிடமிருந்து பெறும்

ஞானம் - எப்படிக் குடும்பத்திற்குப் பயன்படும் எனத் தாயார் யோசனை

செய்தபொழுது, பார்ட்னர் கூறிய ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

  • தொழிலுக்கு மூலதனம் வேண்டும். மூலதனமே முதல். அது இல்லாமல் எதுவும் நடக்காது. அது இருந்தால் எல்லாம் நடக்கும் என்ற நிலை. 50, 60 வருடங்களுக்குமுன் சற்று மாறியது.
  • டெக்னாலஜி இருந்தால் மூலதனம் கிடைக்கும். பணம் டெக்னாலஜியைத் தேடிவரும் என்ற நிலை அதற்கடுத்தபடி பெரிய அளவுக்கு நிலவுகிறது.

  • பார்ட்னர் பேசும்பொழுது அடுத்த கட்டத்தைக் குறிப்பிட்டார். இந்திய சர்க்கார் 30 ஆண்டுகட்கு மின்சாரம் வாங்க ஒரு கம்பெனிக்கு உத்தரவாதம் அளித்தால், பாங்க் அந்த கம்பெனிக்கு முதல் தர முன்வருகிறது.
  • பணம் மாறி டெக்னாலஜியாகி, டெக்னாலஜி மாறி மார்க்கட்டாகிறது என்று தாயார் யோசனை செய்தபொழுது பணம் ஜடம் அல்லது உயிர். டெக்னாலஜி அறிவு ஜடத்தில் வெளிப்படுவது, மார்க்கட் என்பது purchasing power of the market, மக்கள் தொடர்ந்து வாங்குவார்கள் என்ற நம்பிக்கை. இந்தக் கருத்தை இப்படியே வளர்த்துக்கொண்டு போனால், பணம் ஆன்மாவைத் தேடி வரும் என முடியும் - ஜடம் ஆன்மாவுக்குட்படும் - எனத் தாயார் புரிந்துகொண்டார்.
  • தான் புரிந்துகொண்டதைக் கணவருக்கோ, பெரியவனுக்கோ எடுத்துச் சொல்லும் நிலையில் அவரில்லை.
  • அதை உலகம் புரிந்துகொண்டால், உலகில் ஏழ்மையிருக்காது.
  • அதேபோல் power அதிகாரம், பிரச்சினை, வாய்ப்பு, செயல், எதிர்காலம், கடந்த காலம், காலம், இடம் ஆகியவை ஆன்மாவுக்குக் கட்டுப்படும் எனத் தாயார் புரிந்துகொண்டார்.
  • இதை ஒரு கருவியாகப் spiritual technique or technology-பயன்படுத்த நாம் சேர்க்க வேண்டியது ஆத்மா, விலக்கவேண்டியது அகந்தை.
  • அகந்தையை விலக்கி, வளரும் ஆன்மாவைச் சேர்த்தால் உலகில் இன்று மனிதனுக்குள்ள பிரச்சினைகளான போர், வன்முறை, திருடு, கொலை, கொள்ளை, பயங்கரவாதம், நோய், ஜனத்தொகையின் பெருக்கம், பற்றாக்குறை, வறட்சி, சூழ்நிலை பாதிக்கப்படுதல், அவ்வளவுமிருக்காது. இக்கருத்தைச் சொல்லால் எடுத்துச் சொல்ல முடியாது. ஒரு community மக்கள்தொகை அல்லது ஒரு நகரம் இதை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தால், உலகம் அதைப் பின்பற்றும் வாய்ப்புண்டு.

  • தனிப்பட்டவர் ஒருவர் இதைத் தம் வாழ்வில் சாதிப்பது முதற்படி.

- தாம் சாதித்ததின் உண்மையை (impersonal truth) அவர் மனம் அல்லது வளரும் ஆன்மா உணர்ந்து பின்பற்றினால், உலகம் ஒரு நகரத்தைப் பின்பற்றுவதுபோல் அக்கருத்தை ஏற்றுப் பின்பற்றும்.

- ஏராளமான வாய்ப்புகளைத் தம் குடும்பத்திற்கு ஈர்த்தது தாயாரின் பங்கு. அவை மலைபோன்ற வாய்ப்புகள். இதை அவர் முடிவான கட்டத்திற்குப் போய் தம் ஆன்மாவில் சாதிக்க ஆரம்பத்தில் கருதவில்லை. இப்பொழுது அதைக் கருத முடியுமா? அது சாத்தியமா?

- வந்த வாய்ப்புகளைக் குடும்பம் ஏற்றுப் பயன்பெறுவது தாயார் பிரியப்படுவது. அது அவருடைய வேலையை எளிதாக்கும். அவர் முன்னுள்ளது இவ்விரு பாதைகள்.

- தாம் எப்பாதையில் போகலாம். எது தனக்கு லிமிட்? லிமிட் உண்டா? என அவர் மனம் சிந்தனையிலாழ்ந்தது.

- இந்தச் சிந்தனையைவிட அதைச் சமர்ப்பணம் செய்வது சிறப்பு எனத் தோன்றியது.

- தம் வாழ்வுக்கு லிமிட் என்பது தம் சமர்ப்பணத்தின் லிமிட் எனப் புரிந்துகொண்டார்.

- தாம் முன்னேற தம் சமர்ப்பணம் வளரவேண்டும் என்பது நாடு முன்னேறும் சூத்திரம்.

Bill gatesருந்து சாக்ரடீஸ்வரை இதுவரை ஆயிரம் பேர்கள் உலகில் முதன்மையான இடத்திற்கு வந்துள்ளனர். அது டெக்னாலஜி,பணம், தைரியம், தலைமை, சங்கீதம், அரசியல் என்ற துறைகள் அவர்களை முன்னுக்குக் கொண்டுவந்துள்ளது.

  • இவை அனைத்தும் பகுதியான முன்னேற்றம்.
  • சமர்ப்பணத்தால் வருவது முழுமையான முன்னேற்றம்.

  • மேற்சொன்ன டெக்னாலஜி போன்றவை அந்த அந்தத் துறையிலுள்ளவர்க்கே உரியது. சமர்ப்பணம் அனைவருக்கும் உரியது.
  • சமர்ப்பணம் முழுமையானதால், அனைவராலும் அதை ஏற்க முடிவதில்லை.
  • ஆதி நாளில் மனிதன் விலங்குபோல் உடலை மட்டும் பேணினான்.
  • ஊராக மாறியபின் வேட்டையாடுபவன் உணர்ச்சியைப் போற்றினான்.
  • குடும்பமானபின் உணர்ச்சியை உச்சகட்டத்திற்கு உயர்வாகக் கருதினான்.
  • அதன்பின் அறிவு வளர்ந்தது.
  • சமூகத்தின் அனுபவ அறிவு செயலாகித் திறமை வளர்ந்தது.
  • படிப்பால் வந்த அறிவு ஜடத்தில் வெளிப்பட்டு டெக்னாலஜியாக உலகை ஆள்கிறது.
  • யோகம் வழிபாடாக ஆரம்பித்தது.
  • அளவுகடந்து வளர்ந்து ஆன்மாவுக்கு மோட்சம் கொடுத்தது.
  • அது ஆன்மா மட்டும் பெறும் பலன்.
  • உலகை ஆளும் டெக்னாலஜியும், யோக இலட்சியமான மோட்சமும் பகுதியானவை.
  • ஆன்மா வளரும் ஆன்மாவானல், அது முழுமை பெறும்.
  • உடல், உணர்வு, அறிவு, ஆன்மா, அறிவின் ஆன்மா, உணர்வின் ஆன்மா, உடலின் ஆன்மா என்பவை அடுத்த அடுத்த கட்டங்கள். உடலின் ஆன்மாவில் உடலின் பகுதியாக ஆரம்பித்தது முழுமை பெறுகிறது.
  • முழுமை பெற்றதை முழுவதும் பெற முதல் செய்ய வேண்டியது சமர்ப்பணம்.
  • வேட்டையாடிய மனிதன், விவசாயம், வியாபாரம், தொழில், நகர வாழ்வு, நவீன வாழ்வுமூலம் இன்றைய நிலையை எய்தியுள்ளான்.

  • இந்தப் பயணம் உடலிலிருந்து அறிவுக்குப் போன பயணம்.
  • அறிவிலிருந்து ஆத்மாவுக்குப் போய், வளரும் ஆன்மாவை அடைந்து, அதை உடலில் எட்டுவது பயணம் முடிவடைவதாகும்.
  • முடிவான பயணத்தின் முதற்கட்டம் மனத்தின் வளரும் ஆன்மா.
  • அதை அடையும் கருவி சமர்ப்பணம்.
  • அவ்வகையில் சமர்ப்பணம் முழுமையின் முதற்கருவி.
  • சரணாகதி முடிவான கருவி.
  • உலகம் சமர்ப்பணம், சரணாகதியை அவதாரப் புருஷனுடைய சொல்லால் ஏற்கப்போவதில்லை.
  • அவனுடைய சாதனையைப் பார்த்து தாங்களும் பின்பற்றுவோம் எனப் பின்பற்றப் போவதில்லை.
  • சமர்ப்பணம் எண்ணமாக உதித்து, உணர்வாகி, உடல் உணர்வாகி, முடிவாக அனந்த குணமானால் (universal,impersonal truth) அனந்த குணம் ஒருவர் குணமானால், உலகம் அதை உடனே ஏற்கும்.

இந்தியாவில் நகரப்புறங்கள் வளமாகி வருகின்றன. நகரங்களில் பெரும்பணக்காரர்கள் பலர் உற்பத்தியாகின்றனர். ஏற்கனவே இருந்த பசி, பட்டினி, பஞ்சம் குறைந்து வருகிறது. நாள் கூலி 25பைசா இருந்த இடத்தில் 100 ரூபாய் ஆகியிருக்கிறது என்றால் கடைநிலை மனித வாழ்வு 400 மடங்கு உயர்ந்துள்ளது. டாட்டாவும், பிர்லாவும் 150, 200 ஆண்டுகளில் செய்ததை அம்பானியும், நாராயணமூர்த்தியும் 15, 20 ஆண்டுகளில் செய்துள்ளனர். தாயார் தம் குடும்பத்திற்கு வந்த வாய்ப்புகள் அதே போன்றவை, பல மடங்கு அதிகமானவை எனக் காண்கிறார்.

  • நாட்டில் படிப்பின்மை சற்றுக் குறைந்துள்ளது.
  • வாய்ப்புகள் அபரிமிதமாக வளர்ந்துள்ளது.

  • பாங்கு தொழிலுக்கு முதல் தருவதும், முதலுக்குரிய உத்திரவாதம், சொத்து என்பது மாறி, திறமை, நாணயம், மார்க்கட் உத்திரவாதம் என்பது அவற்றை விளக்குகின்றன.
  • பொருளும், பணமும் அபரிமிதமாகத் தேவை. ஆனால் அனந்தமாகத் தேவையில்லை (infinity)
  • அது பொருளுக்கு மட்டும் உரியதன்று, ஆரோக்கியத்திற்கும், படிப்புக்கும், பண்பிற்கும் உரியதாகும்.
  • படிப்பு லேசாகப் பரவியபோது, வளமை அதிகமாக எழுகிறது.
  • புள்ளிவிவரம் statistics தயாரிப்பதை மனிதன் எவ்வளவு சம்பாதிக்கின்றான் என்பதை மாற்றி எவ்வளவு உரிமை, வசதி பெறுகிறான் எனக் கணக்கிட்டால் 400 மடங்கு இந்தியா முன்னேறியுள்ளது எனத் தெரியும்.
  • உரிமை அனைவர்க்கும் உயர்ந்துள்ளது.
  • பணத்திற்கே உரிமை என்ற நிலை மாறி, அனைவரும் உரிமைக்குரியவர் என்ற நிலை உருவாகிறது.
  • உரிமை வளர்ந்தால் பணம் வளரும் என்பது உண்மை.
  • உரிமையைத் தருவது படிப்பு.
  • அரசியல் சூழல் உரிமையைக் கேட்காமல் கொடுத்தபடி இருக்கிறது.
  • அன்னைச் சூழல் வாய்ப்பையே நேரடியாகத் தருகிறது.
  • அரசியல் உரிமையைக் கொடுத்து வாய்ப்பை அதன்மூலம் வழங்குகிறது. படிப்பின்மூலமும் வழங்குகிறது.
  • அன்னைச் சூழல் வாய்ப்பையே நேரடியாகத் தருவதுடன், முடிவான பலனையே நேரடியாகத் தரவல்லது.
  • அன்னை எழுதியவற்றைப் படிப்பது அன்னை வாய்ப்பை அதிகமாகத் தரும்.

  • உரிமை அன்னையிடம் எது?
  • அரசியல் தரும் உரிமை மனிதன் தடையின்றி செயல்பட உதவுகிறது.
  • அன்னை நம்முள் தடையின்றி செயல்பட அனுமதிப்பது அன்னையிடம் உரிமை பெறுவது.
  • பணம், பதவி, அந்தஸ்து, சுதந்திரம், அன்னை வாழ்வில் அபரிமிதமாக இருக்கும், இருக்கவேண்டும். இவை எதுவும் நம் குறிக்கோளில்லை. நாம் எதையும் குறிக்கோளாக்கி அத்துடன் நிற்கலாம்.
  • உயர்ந்த ஜீவியம் அன்னை வாழ்வில் குறிக்கோளாகும் (higher consciousness).
  • தாயாருக்கு இவை எல்லாம் புரிந்தாலும் செல்வமும், அந்தஸ்தும் மனத்தில் இருப்பதால், குடும்பம் அன்னையை ஏற்கத் தயங்குகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
  • நாம் எந்த அளவில் செயல்பட முடியும் என்பதற்கு அளவுண்டு என்பதுபோல், நாம் எந்த அளவுக்கு அந்தஸ்தை நாடலாம் என்பதற்கும் அளவுண்டு.
  • தவணை விற்பனை வாழ்க்கையை சௌகரியமாக்கியதுபோல் நாணயமும், மார்க்கட் உத்திரவாதமும் முதலீட்டை எளியதாக்கியுள்ளது.
  • தாயார், தம் மனம் எப்படி மாறவேண்டும் என்பதை மேலும் சற்றுத் தெளிவாக உணர்ந்தார்.

தாயார் தம் குடும்பத்தின் முன்னுள்ள பிரச்சினையை எப்படி தமக்கே விளக்குவது? ஊரார் கண்ணோட்டத்தில் (social point of view) பார்த்தால் புரிவது பயன்படுமா? இதே ஊரில் பல குடும்பங்கள் ஏராளமானவையில்லாவிட்டாலும் கோடிக்கணக்காக, நூறு கோடியைக் கடந்து சம்பாதித்திருக்கிறார்கள். ஊரைப் பொருத்தவரை

அவை உள்ளவை என்றாலும் நமக்குப் பயனுள்ள படிப்பினை தருமா என்பது கேள்வி. அரிசி கடைக்காரர் இப்பொழுது 50 பஸ் ஓட்டுகிறார், அரசியல் பதவியிலிருக்கிறார்,  ஊரில் பெரிய மனிதர். வாடகை வீட்டில் குடியிருந்த செட்டியார் இப்பொழுது வீடுகள், தியேட்டர், மனை, நர்சிங் ஹோம், கடைகள் என ஜில்லாவில் பெரிய புள்ளியாகிவிட்டார். கிராமத்துச் சிறு மிராசுதாரர் டவுனுக்கு வந்து கான்ட்ராக்ட் எடுத்து முனிசிபல் சேர்மனாகி, 30 பஸ்கள் ஓட்டி, தகப்பனாருக்குப்பின் பிள்ளை தலையெடுத்து, தகப்பனார் சம்பாதித்த வேகத்தில் சொத்தை அழித்துள்ளார். ஜெயிலுக்குப் போன சப்-இன்ஸ்பெக்டர் மகன் அலைந்து திரிந்து, காண்ட்ராக்ட் செய்து 1 கோடி சம்பாதித்துவிட்டான். ஒன்றுமில்லாதவன் அரசியலில் சேர்ந்து பதவி பெற்று பல நூறு கோடி சம்பாதித்துவிட்டான். பெரிய குடும்பத்தில் பிறந்த சிறிய மனதுடையவர் குறுக்கு வழிகளில் மட்டும்போய் செய்த 17 வேலைகளும் தோல்வியடைந்து தற்கொலை செய்துகொண்டபின் அவர் பிள்ளைகள் சிரமப்பட்டுத் தலையெடுத்துப் பெரியதாக வளர்ந்து இருவர் திவாலாகி, ஒருவர் ஓஹோ' என வளர்ந்து பெரிய கம்பெனியை விலை பேசுகிறார், தென்னிந்தியா முழுவதும் சரக்கை விற்கிறார். இவையெல்லாம் நாம் சமூகத்தில் காணும் முன்னேற்றமே. அவற்றுள் எதுவும் தாயார் கருத்துக்கு இசையாது. சிந்தனைக்குப் பயன் தாராது. ஏனெனில்,

  • தாழ்ந்த ஜாதிக்காரன் சிறு வியாபாரம் பெரு வியாபாரமானபின் தமக்கு ஊரில் மரியாதையில்லை எனக் காண்கிறான். அது complex தாழ்வு மனப்பான்மை. அதன் வேகம் அதிகம். அரிசிக்கடைக்காரன் சம்பாத்தியம் அத்தகையது. அது திறமை என்றாலும், மரியாதை பெறவேண்டும் என்ற வேகத்தின் சாதனை. அது தெளிவான திறமையாகாது.
  • செட்டியார் சம்பந்திக்கு 300 வீடுகளுள்ளன. தமக்கு குடியிருக்கவும் சொந்த வீடில்லை என்று எழுந்த வேகத்தால் போட்டி மனப்பான்மையால் சம்பாதித்தது. அது உண்மையான வேகமாகாது.

  • சிறு மிராசுதாரரின் சாதனை, சாதனை. அவருக்குப் படிப்பில்லை என்பதாலும், அவர் பிள்ளைக்குப் படிப்பு வரவில்லை என்பதாலும், நல்ல சாதனை. சட்டங்களுக்குப் புறம்பாகக் கணக்கெழுதியதாலும், திறமைக்கு மீறிய அந்தஸ்தை தேடிப் பெற்றதாலும், சமூகத்திற்குப் புறம்பான பழக்கங்களால் மகனால் சொத்து அழிந்தது.
  • தகப்பனார் ஜெயிலுக்குப் போனால் மகனுக்குள்ள வேகம் ஒரு தலைமுறையைக் கடந்தும் நீடிக்கும். அது சாதிக்கும். அது அடிபட்டவனுடைய சாதனை.
  • பெரிய குடும்பம் பெரிய மனதைத் தரும். அங்கு பிறந்து சிறிய மனமுடையவராக இருந்தால் சிறிய மனம் மீண்டும் பரந்த மனமாகும் வழி குறுக்கு வழி, தற்கொலை, பாடாவதி, திவால், வெற்றி. அவர்கள் இழந்ததைக் குடும்பத்தில் ஒருவர் பெற்றார். இனி அவர் முன்னோடி. யோசனை செய்து பார்த்தால், அவர்கள் அனைவரும் பெறும்வரை அது சாதனையாகாது. அது நடந்தால் அவர்கள் பெற்றது ஏதுமில்லை. இழந்ததைப் பெற்றனர்.
  • இவையெல்லாம் கோணல், குறுக்கு வழிகள். இங்கு சாதனைக்குச் சமமான பிரச்சினைகளிருக்கும். திறமை சாதிப்பதே சாதனை. திறமை இலட்சியமாகச் சாதிப்பது சாதனையில் உயர்ந்தது. அது அன்னை வாழ்வை எட்ட சாதனையை ஒரு கருவியாக ஏற்றால் அவர்கள் சாதனைக்கு அறிவு புகட்ட மேற்சொன்னவை பயன்படா.
  • மனிதன் விலக்க வேண்டியதை நாடிப் பெறும் வெற்றியும், தோல்வியும் வெற்றியோ, தோல்வியோ ஆகாது. இரண்டும் விலக்கப்பட வேண்டியவை. அவர்கள் செயல், போக்கு strtegy ஆகியவற்றிலிருந்து அன்னை பக்தர் அறியக்கூடியதே

அறிந்து பலன் பெறக் கூடியதோ ஒன்றில்லை. மேற்கூறியவர் சமூகத்தால் ஏற்கப்படாதவர்கள். அவர்கள் சமூகத்தில் சேர முயலும் வழிகள் இவை. பக்தர்கள் சமூகத்தைக் கடந்து செல்ல வேண்டியவர்கள்.

விவரமில்லாத பக்தர்கள் இவர்களைப் போற்றுவார்கள். தாமும் இவர்போல இருக்கப் பிரியப்படுவார்கள். பொதுவாக இவை படிக்காதவர் மனப்போக்கு. படித்தவரும், பண்பில்லாத காரணத்தால் அதையே நாடுவார்கள். படித்து பண்பு பெற்றவருக்கும் இவர்போன்ற செல்வம் மனதைக் கவரும். படிப்பு, பண்புடன், பக்குவமிருந்தால் அவர்கள் இச்செல்வத்தைப் பாராட்டமாட்டார்கள். அன்னை வாழ்வு அவற்றுடன் பவித்திரமும் சேர்ந்தது.

  • மனம் இரண்டையும் சேர்த்துப் பெறலாம் என மனப்பால் குடிக்கும்.
  • இரண்டும் சேரும் தன்மையுடையவையில்லை, எதிரானவை.
  • சேர்ந்தால் ஒன்று மற்றதை அழிக்கும்.
  • அன்னைக்குரிய சட்டங்கள் அகிலத்தை ஆள்பவை.
  • சமூகத்தின் உச்சக்கட்ட சாதனையும் vital உயிருக்குரிய சாதனை.
  • அன்னைக்குரியது உயிரையும், மனத்தையும் கடந்த ஆத்ம சாதனை.
  • அது ஆத்மாவையும் கடந்து வளரும் ஆத்மாவின் சாதனை.
  • அது இவ்வுலகின் பகுதியன்று.
  • உலகத்தைக் கடந்தது.
  • உலகம் தாழ்ந்திருப்பதால், அதை விலக்கி உயர்ந்து பெறும் சாதனை.
  • பக்தர்கட்கில்லாதது இல்லை. இருப்பது potential வித்தாக இருக்கின்றது.
  • எப்படி உள்ளே வித்தாயுள்ள சாதனையை வெளியே செயலாக, பலனாக மாற்றுவது என்ற திறமையும், பொறுமையுமற்றவர் பக்தர்கள்.
  • பக்தர் நிலை பவித்திரமான நிலை. அதைச் சமூகத்துடன் ஒப்பிடுவது பாதகம்.
  • உலகம் தம் மேதாவிலாசத்தை ஏற்றபின் சீனுவாச இராமானுஜம் தாம் முன்பு பெயிலான இன்டர்மீடியட் பரீட்சையை எழுதி, பட்டம் பெற ஆசைப்படுவது போன்றது பக்தர்கள் சமூகத்திலுள்ள பெரிய மனிதரைக் கண்டு வியப்பது. ஐன்ஸ்டீன், ஷா, வெல்ஸ், டாகுர், உலகப் பிரசித்தி பெற்று நோபல் பரிசும் பெற்றபின் பட்டத்திற்கு ஏங்குவது போன்ற மனப்பான்மை அது.

அன்பர்கள் இக்கதையைப் படித்தால் புரிந்துகொள்வார்கள். அதுகதையின் முதல் நிலை. உதாரணமாக பார்ட்னர் கணவரைக் கூட்டாளியாக எடுத்துக்கொண்டபின் கணவர் சந்தோஷப்பட்டார் என்பதில் விசேஷமில்லை.

  • அதன்பின் உள்ள விசேஷம் மனைவியின் பக்தி.
  • ஏன் மனைவியின் பக்தி கணவருக்கு அதிர்ஷ்டமாக வருகிறது என்பது அடுத்த நிலைக்குரிய அர்த்தம். மனைவி அகங்காரமானவரானால் அவளுக்குச் சொத்து, நகை, அவள் தாயார் வீட்டுமூலம் உயர்ந்து, வீட்டில் அவள் அதிகாரம் வளரும்.
  • தன்னைக் கணவனுக்குட்படுத்திக்கொள்வதால், அதிர்ஷ்டம் கணவர்மூலம் வருகிறது.
  • மனைவியின் ஆர்ப்பாட்டத்திற்கு முடிவுண்டு. அடக்கத்திற்கு முடிவில்லாத வளர்ச்சியுண்டு.
  • அதனால் மனைவி போன்ற தெளிவுள்ள பார்ட்னர் அமைகிறார்.
  • பார்ட்னர் கணவரின் அம்சத்தை ஏற்பதால் அவர் நிலை தொடர்ந்து உயருகிறது.
  • கணவரை பார்ட்னர் தம் சௌகரியத்திற்குப் பயன்படுத்திக் கொண்டால் முதற்கட்டத்துடன் வளர்ச்சி முடிந்துபோகும்.
  • தாயாருக்குள்ள அடக்கத்தைப் போன்று பார்ட்னருக்கு நாணயமும், நிதானமுமிருப்பது கவனிக்கத்தக்கது.
  • நாட்டில் நாணயம் அழிந்துவரும் நேரம் என்பதால், நாணயமானவர் அரிது.
  • அரிது எனினும் எதிர்காலம் அவருக்கேயுரியது.
  • இந்தியரின் நாணயத்தைத் தேடி மேல் நாட்டார் செல்வம், டெக்னாலஜி வருவது ஆன்மீகத்தை லௌகீகம் நாடி வருவதாகும்.
  • அதுவே உலகிற்கும், நமக்கும் உரிய எதிர்காலம்.
  • அதனால் அதன் வாய்ப்பு முடிவில்லாதது.
  • ஒரு கட்டத்தில் பெரியவன் தாயாரிடம், "சொல்லுங்க, நான் செய்கிறேன்'' என்கிறான். அது ஆதாயத்திற்காக ஏற்பது. அதற்கு அந்நிலைக்குரிய பலனுண்டு. அதையே அன்னைக்காக ஏற்றால் பலனைக் கடந்து செல்லும் கட்டமாகும்.
  • உலகில் எவருக்கும் உரியது யோக வாழ்வு. அதை வாய்ப்பாக அன்னை அருள்கிறார்.
  • யோகத்தை வாழ்வாக்கி, வாழ்வை இலட்சியத்திலிருந்து ஆதாயமாக்கி, ஆதாயத்தைப் பரநலத்திலிருந்து சுயநலமாக்கி,சுயநலத்தை அகந்தையாக்குவது மனிதன் போக்கு, எதிரானது,நமக்குத் தேவையானது.
  • பவர் புராஜக்ட் என்பது சேவைத் திட்டம். ஏதோ புதியதாகப் பரவும் பாஷனில்லை. பாஷன் மாறக்கூடியது, அர்த்தமற்றது. அதுவும் செல்வம் சேரும் வாய்ப்பு. இந்தியாவில் இன்று பயன்படும் பவர் 80,000 மெகாவாட்ஸ். அது நியூயார்க் சிட்டியில் மட்டும் செலவாவது. பவர் தேவை. நாடு முன்னேறத் தேவை. தேவையைப் பூர்த்திசெய்யும் வாய்ப்பு தெய்வீக வாய்ப்பு. தெய்வீக வாழ்வுக்கு அழைத்துச் செல்லும்.
  • தாயார், மனைவி, தாயார் என்ற மனநிலைகளிலிருந்து செயல்படுகிறார். அது குறுகியது.
  • அன்பர், சாதகர், மனநிலையிலிருந்து செயல்படுவது சிறந்தது.
  • மனநிலைக்கு மேல் மௌன நிலையும், அதன்பின் திருஷ்டிக்குரிய நிலையும் உள்ளன. அதன்பின் ஞானத்தின் நிலையும், தெய்வத்தின் நிலையும் உண்டு. சத்தியஜீவிய நிலை வாழ்வுக்கும், யோகத்திற்கும் முடிவானது.
  • சொல்லால் சாதிப்பதைச் சொல்லாமல் சாதிப்பது மௌன நிலை.
  • அது சொல்லுக்குப் பின்னாலுள்ள மௌனம்.
  • அடுத்தது திருஷ்டி. அது மௌனத்தைக் கடந்த ஜோதி.
  • மௌனத்தை எட்டியபின், அதைக் கடந்து ஜோதியின் பகுதியாக மௌனத்தை அறிந்தால் மௌனம் முதிர்ந்து ஜோதியாகிக் காட்சி தரும்.
  • சொல்லுக்குப் பின்னுள்ள மௌனத்தைவிடச் செயலுக்குப் பின்னுள்ள மௌனம் (silence behind silence)என்பதில்முதற்படி பெரியது. அதைக் கருதினாலும் ரிஷியின் திருஷ்டியைப் பெறலாம்.
  • மௌனமும், திருஷ்டியும் கருவிகள்.
  • நடப்பவை நிதர்சனம்.
  • நடக்கும் நிகழ்ச்சிக்குக் கருவிகள் தேவையில்லை.
  • கருவிகளைக் கடந்த நிலையில் ஞானம் (intution) உள்ளது.
  • அது நேரடி ஞானம்.
  • அது அடுத்த கட்டம்.
  • அடுத்த கட்டமான தெய்வீக மனத்தில் இந்த நேரடி ஞானம் அறியாமையால் பாதிக்கப்படாமல் செயல்படவல்லது.
  • அறியாமையின் பாதிப்புள்ளவரை தெய்வீக மனம் (over mind) வரவில்லை.
  • தெய்வீக மனத்திற்கு அகங்காரமுண்டு.
  • அகங்காரமுள்ளவரை சத்திய ஜீவியமில்லை.
  • வாழ்விலுள்ள நாம் vital உயிரிலுள்ளோம்.
  • வாழ்வு, மனம், மௌனம், ஜோதி, ஞானம், தெய்வீகம், சத்தியஜீவியம் ஆகியவை ஒன்றின்பின் ஒன்றாயுள்ள நிலைகள்.
  • ஒவ்வொரு நிலைக்கும் பிரகிருதிக்கு ஜீவியம், பொருள் (consciouness,substance) என்ற இரு நிலைகளும், புருஷனுக்கு ஆத்மா, வளரும் ஆன்மா (soul,psychic) என்ற இரு நிலைகளும் உள்ளன. இந்த நான்கு நிலைகளைக் கடந்தால் ஒரு plane நிலையைக் கடக்கலாம்.

- அவசரப்படுவது ஜீவியத்தின் மேல் நிலை.

- அவசரப்படாத நிதானம் ஜீவியத்தின் ஆழம்.

- அசைக்கமுடியாத பொறுமையான நிதானம் (substance) பொருளுக்குரியது.

- அது பெற்றது ஒளியானால் அது புருஷனுக்குரிய நிலை.

- ஒருவர் சமத்துவம் (equality) பெற்றால் அது வளரும் ஆன்ம நிலை.

- இவ்வளவும் சொல்லானால் இவ்வைந்து நிலைகளும் மனத்திற்குரியன.

- இவ்வைந்தும் மௌனமானால் அவை முனிவர்க்குரிய நிலைகள்.

  • உயர்ந்த இலட்சியத்தை நாடி அதன் பலனாகப் பெறும் ஆதாயம் அதனால் அடங்கியது என்பதால் அது நீடிக்கும்.
  • தாழ்ந்த ஆதாயத்தை நாடினால் அது கிடைக்காது. கிடைத்தால் நீடிக்காது.
  • சமர்ப்பணம் மேற்சொன்ன 4 நிலைகட்கும் அவற்றின் 5 பகுதிகட்கும் தகுந்தவாறு மாறும்.
  • தாயாருக்கு முதல் நிலை சமர்ப்பணம் பலிக்கவில்லை.
  • அவர் முன்னுள்ளது நீண்ட யாத்திரை.
  • கல்லூரியில் படிக்கும் பையன் கடைக்குப் போய் தனக்கு வேண்டிய புத்தகத்தை வாங்கிக்கொள்வது முறை. வெளியூரில் இருந்து தகப்பனார் லீவு எடுத்துக்கொண்டு வந்து கடையில் அப்புத்தகத்தை வாங்கி மகனிடம் தருவது சரியில்லை. கொடுத்தால் படிக்கமாட்டான்.
  • தாயார் செய்வது அது போன்ற வேலை. அதைச் செய்ய முடியாது, செய்யக்கூடாது. பொதுவாக மனிதர்கள் நண்பர்களையும், குடும்பத் தலைவர்களையும், மகான்களையும், குருவையும், அப்படி நடக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். நமக்குத் தேவையானதை நம்மால் முடியாதபொழுது - முடிந்தபொழுதும் - செய்து தருபவர் கடவுள் என்பது பரவலான அபிப்பிராயம். அது அர்த்தமற்றது.
  • அர்த்தமற்றவற்றை நாடாமல் அர்த்தமுள்ளதை மட்டும் ஒருவர் நாடினால் அவர் செய்யக்கூடியது என்ன?
  • முதலாவது ஒரு சோதனையை மேற்கொள்ளவேண்டும். தனக்கு பிடிபடும் விஷயம்  silent will, சமர்ப்பணம், பிரார்த்தனை, காரியம் கூடிவருவது, பிரச்சினை தீர்ப்பது போன்றவற்றுள் ஒன்று - ஒன்றை சோதனைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும். அது silent will எனக் கொள்வோம்.

- இதுவரை silent will அரைகுறையாகப் பிடிபட்டிருந்தால், இப்பொழுது அது பூரணமாகும்வரை செய்தல் அவசியம்.

- உதாரணமாக நாம் ஒரு புத்தகத்தை எடுத்துவர ஒருவரை அழைக்க முயன்றால் சற்று நேரம் கழித்து அவர் வந்தால் silent will வேலை செய்கிறது. அவர் உடனே வந்தால் அதிகமாகப் பலிக்கிறது.

 

 

அப்புத்தகத்துடன் வந்து "உங்களுக்குக் கொடுக்க எடுத்து வந்தேன்" எனக் கூறினால் silent will(saturated) முழுவதும் மலர்ந்துவிட்டது எனப்பொருள். இதுபோன்ற சோதனைகள் ஒரு நாளிலும் பலிக்கும், பல ஆண்டுகளிலும் பலிக்கும். நாம் உள்ளே தயாரானதைப் பொருத்தது அது.

  • பூர்த்தியான silent willதொடந்தால், நாள் முழுவதும் தொடர்ந்தால், saturation has come to stay,பூரணம் பூர்த்தியாகி நிலைத்துவிட்டது எனப் பொருள்.
  • Silent will, சமர்ப்பணம், வாய்ப்பை ஏற்பது, பிரார்த்தனை பலிப்பது, பிரச்சினை தீர்ப்பது, காரியம் கூடிவருவது, தவற்றை (ஆபத்தை) உஷாராக விலக்குவது என்ற ஒவ்வொரு தலைப்பிலும் இதுபோன்ற சோதனையைச் செய்து அது பூரணம் பெறும்வரைப் பொறுத்திருக்கவேண்டும்.
  • நம் பர்சனாலிட்டிக்கு முக்கியமான இடங்கள் நாம், நம் வீடு, ஆபீஸ், நண்பர்கள், கடை வியாபாரம், வெளியூர்ப் பயணம், சர்க்கார் ஆபீஸ் தொடர்பு, பாங்க் வேலை, பண விஷயம், குடும்ப விஷயம், அந்தரங்கமான விஷயம், அரசியல் விவாதங்கள், நமக்கேயுரிய குறைகள் - கோபம், அவசரம், சிக்கனம் போன்றவை, - நமக்கேயுரிய நிறைவுகள் - உயர் குடிப்பிறப்பு, செல்வம், உத்தியோகம், அந்தஸ்து, அறிவு, நல்ல குணம், பொறுமை போன்றவை - போன்ற இடங்கள் ஒருவர் வாழ்வில் 15 அல்லது 20 இருக்கும். ஒவ்வொன்றிலும் ஒரு சோதனையை மேற்சொன்னபடி முழுமையாகச் செய்யவேண்டும்.
  • இச்சோதனைகள் (practical) நடைமுறைக்குரியவை. இவற்றையே தத்துவரீதியாக மீண்டும் செய்யவேண்டும். 
  • புத்தகம் வேண்டும் என silent willஐப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, silent will, willஐவிட சக்திவாய்ந்தது என்பதைச் சோதிக்க மனத்தில் எழும் willகள் அத்தனையையும் மௌனமாக்கும்பொழுது மனம் மௌனத்தால் கனக்கும். அப்பொழுது, "இந்தப் புத்தகத்தை உங்களுக்குக் கொடுக்க எடுத்து வந்தேன்'' என ஒருவர் கூறினால் இச்சோதனைக்கு முன் மனத்திலிருந்த எண்ணம் அதுவேயானால் தத்துவம் புரிகிறது, 

நடைமுறை தத்துவத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது எனப் பொருள்.

நடைமுறைச் சோதனைகள் அனைத்தையும் மீண்டும் தத்துவம்

புரிவதற்காக தத்துவரீதியாகச் செய்யவேண்டும்.

அவற்றையும் அப்பதினைந்து, இருபது தலைப்புகளில்

பூரணமாகச் செய்து பூர்த்தி செய்யவேண்டும்.

  • தத்துவம், நடைமுறை இரண்டும் பலித்த பின் இவையிரண்டும் எந்த அளவு (80%, 90%) பூர்த்தியாகும்பொழுது பொருந்துகின்றன எனக் காணவேண்டும்.
  • தத்துவத்தை நாடினால் காரியம் பூர்த்தியாகிறது. காரியத்தை நாடினால் தத்துவம் புரிகிறது. இதில் பொருந்துவதற்கு (reconcile) என்ன இருக்கிறது எனக் கேட்கலாம்.
  • தத்துவமும், காரியமும் பகுதிகள். நாம் முழுமை. அகந்தையற்ற நாம் முழுமை. அகந்தையான நாம் பகுதி. தத்துவம், காரியம், இரண்டையும் விட்டகன்று, அகந்தையற்ற நம்மில் நாம் இலயிப்பது - முழுமையை நாடுவது - பெரிய காரியம். அது அன்னை ஜீவியத்தை நாடுவதாகும். அப்படிச் செய்தால்,

- ஒரு பொருளை எடுக்கப் போய் தேடினால், அப்பொருளை ஒருவர் நமக்குக் கொடுத்தால், தத்துவமும், காரியமும் ஒருங்கே புரியும், முடியும்.

- அப்படி நடப்பது ஒரு செகண்ட் முன்னே நடந்துவிட்டால் அது பூரணம் பூர்த்தியாவது. அந்த நேரம் புரியும் தத்துவம் முழுமையாகப் புரியும். அப்படிக் கூடிவரும் காரியம் முழுமையுடையது. தொடரும்,வளரும்,

 

       அந்த நிலை நீடிக்க முயல்வது அன்னை ஜீவியத்தை நாடி             அடைவதாகும்.

  • அந்நிலை நீடித்தால், இதுவரை நாம் தேடிப்போனவை, இனி நம்மை நாடி வரும்.
  • நாடி வரும் காரியங்கள் பூர்த்தியாகும்.
  • பூர்த்தியாகும் காரியங்கள் குறையின்றிப் பூர்த்தியாகும்.
  • பூர்த்தியாகும் காரியம் நினைத்ததைவிட சற்று அதிகமாகப் பூர்த்தியாவது குறைந்தபட்சம்.M.A பட்டம் எடுக்கப்போன பள்ளி ஆசிரியருக்கு கல்லூரி ஆசிரியர் வேலை கிடைப்பது குறைந்தபட்சப் பூர்த்தி. அனைவரும் 100 ரூபாய் சம்பாதிக்கும் முதலுக்கு - 400 ரூபாய்க்கு - 1000 ரூபாய் சம்பாதிக்க முனைந்தால் கூடிவருவது பெரிய காரியம். அதை 7ஆம் ஆண்டு எதிர்பார்த்தவருக்கு 200 ரூபாய் முதலுக்கு இரண்டாம் ஆண்டில் 1000 ரூபாய் கிடைக்கக்கூடிய வாய்ப்பைப் பெரியது, அதிகபட்சம் எனலாம். அதுவும் மாறி 5000மாவது கற்பனைக்கெட்டாதது. அது 50,000மாகவும் மாறியது அன்பர் அனுபவம். இவற்றைப் பூர்த்தி செய்து, நீடிப்பது வாழ்வுக்குரிய தவம்.
  • உடலுழைப்புக்கு இத்தகைய வாய்ப்பு அமெரிக்காவில் கடந்த 200, 300 ஆண்டுகளாக ஏராளமாகக் கிடைக்கிறது. நாணயமான திறமைக்கு இந்தியாவில் இன்று அதுபோன்ற வாய்ப்புகள் கணக்கிலடங்கா.
  • இது யோகமன்று. யோக சக்தியை வாழ்வில் செயல்படச் செய்வது. 
  • தொழிலதிபர்கள் ESI கட்டுவதில்லை. 100 பேர்கள் வேலை செய்தால் கணக்கில் 25 பேர்கள் இருப்பார்கள். 19 பேர்களும் இருப்பதுண்டு. மீதிப் பேர் ரிஜிஸ்டரிலிருக்கமாட்டார்கள். அவர்கள் பாக்டரி சட்டம், ESI, PFக்கு உட்படமாட்டார்கள். ஆபீசர்கள் ஊழலுக்கு ஒத்துழைப்பார்கள். இது பெரும்பாலான நடைமுறை. 100 பேரையும் ரிஜிஸ்டரில் எழுதி, இச்சட்டங்களைப் பின்பற்றி, sales tax, income tax சரிவர ஒருவர் கட்டினால், அவர் energy முழுவதும் நிம்மதியாகத் தொழிலைக் கவனிக்கும். ஆபீசர், லேபர், கேள்விகட்குப் பயப்படுவதில் energy விரயமாகாது. தொழில் 1 1/2 கோடியிருந்தால் முறைகளைப் பின்பற்றியதால் 5 கோடியாகும். எந்தப் பாங்க்கும் பணம் தர முன்வருவார்கள். தொழிலும், சர்க்காரிலும் இந்தக் கம்பெனி மாடலாகத் தேர்ந்தெடுக்கப்படும். அதனால் நாணயம் பெருகும். தொழில் முன்னேறுவதற்கு அளவில்லை.
  • சர்க்கார் சட்டங்களைத் தொழில் குறைவரப் பின்பற்றுவதால் தொழில் முன்னேறுவதுபோல் அன்னை சட்டங்களைப் பின்பற்றுவதால், வாழ்க்கை முன்னேறுகிறது. சர்க்கார் சட்டங்களைப் பின்பற்றும் பாக்டரி சர்க்காரன்று. அன்னை சட்டங்களைப் பின்பற்றும் வாழ்வு அன்னை வாழ்வு, யோகமன்று.

- வாழ்வு ஆரம்பம், யோகம் முடிவு.

- யோக சக்தியால் நடக்கும் வாழ்வு யோக வாழ்வு, அன்னை வாழ்வு. அது நேரடியான யோகமன்று.

- யோகம் பிரபஞ்சத்திற்குரியது. வாழ்வு உலகத்தின் பகுதியான சமூகத்திற்குரியது.

- கல்லூரிப் படிப்பு (academic learning) வாழ்வுக்கு நேரடியாகப் பயன்படாது. Fundamental rsearch அடிப்படை ஆராய்ச்சி வியாபாரத்திற்கு நேரடியாகப் பயன்படாது. commercialising fundamental research -, அடிப்படை ஆராய்ச்சியை வியாபாரத்திற்குப் பயன்படும்படிச் செய்யும் ஆராய்ச்சி வியாபாரத்திற்குப் பயன்படும். இது pure research தூய்மையான ஆராய்ச்சியாகாது.

- வாழ்வு கடை வியாபாரம் போன்றது. யோகம் Commercialising fundamental research  போன்றது. தத்துவம் pure researchபோன்றது. Academic learning எதிலும் சேராமல் எதையாவது படித்துப் பெறும் பட்டம் வேலை தரும், விஷயம் தெரியாது.

 

  • இதை ஒருவர் சாதித்தால் அவர் அன்னை அன்பராகிறார். அவருக்கு வாழ்வில் எட்டாத கிரீடமில்லை. எதைச் சாதிக்க அவர் முனைந்தாலும்,(strength,effort) வலிமைக்கும், திறமையின் முயற்சிக்கும் தக்கவாறு பலிக்கும்.
  • எதையும் தனிப்பட்ட முறையிலும், பொதுவாகவும் சாதிக்கலாம்.
  • ஒருவர் முதலாளியிடம் போய் தன் திறமைக்குரிய ஊதிய உயர்வு பெறுவது முதலாளி தனிப்பட்டவருக்குச் செய்யும் தனிச் சலுகை.
  • அவரே தம்போன்ற திறமையுள்ளவர்க்கெல்லாம் அதே ஊதிய உயர்வைச் சட்டமாகப் பெற்றால் அது பொதுவாகப் பெறுவது.
  • தமது ஸ்தாபனம், மாநிலம், அகில இந்தியா ஆகிய இடங்கட்கு அது பரவுவது பொதுச் சட்டம் பரவுவதாகும்.
  • தனிப்பட்டவர் பெறுவதால், நாளடைவில் அது பொதுச் சட்டமாகும்.
  • தனிப்பட்டவர் முயன்று, அவர் பலன் பெற பொதுச் சட்டமாகும்வரைக் காத்திருப்பதுண்டு. 
  • அன்னை அன்பர்கள் தனிப்பட்ட மனிதர்களில்லை. அன்னையை ஏற்பதால் அவர்கட்குப் பொதுத்தன்மையுண்டு. அன்னை அன்பர் பெறுவதால் நாளடைவில் அனைவரும் பெறுவர்.
  • சுயநலம் அன்பருக்குரியதன்று. பரநலம் அன்னைக்குரியது. அர்ப்பணம் self-giving அன்னையின் பாங்கு. அன்பர் ஒருவர் யோக சக்தியை வாழ்வில் பயன்படுத்தி வெற்றி பெற்றால், உலகம் அன்னையை வாழ்வில் ஏற்கும்.
  • இன்று உலகம் விஞ்ஞானத்தையும், மக்களாட்சியையும் வாழ்வு முறைகளாக ஏற்றுக்கொண்டனர் எனலாம்.
  • அதனால் எதையும் விஞ்ஞானக் கண்ணோடு பார்க்கின்றனர்.
  • எந்த முடிவையும் மெஜாரிட்டிபடி எடுக்கின்றனர்.
  • அதனால் எல்லோரும் விஞ்ஞானிகளாய் விட்டனர் எனக் கூற முடியாது.
  • மெஜாரிட்டி முடிவை ஏற்பதால் நாம் அரசியல் தலைவர்களாகிவிட்டோம் என்றோ, நம் ஸ்தாபனம் அரசியல் ஸ்தாபனம் என்றோ கூற முடியாது.
  • நாம் ஏற்றுக்கொண்டது விஞ்ஞானப் பண்பு (scientific culture).
  • நாம் மக்களாட்சியைப் பண்பாக ஏற்றுக்கொண்டுள்ளோம் (democrative culture).
  • நாம் ஏற்றுக்கொண்டது யோகமில்லை, அன்னையின் பண்புகள் (yogic values in life ).
  • இது யோகமன்று என்பதுபோல்,பழைய வாழ்வும் (Life of low consciousness)இல்லை.
  • பழைய வாழ்வை (மனித வாழ்வை) அடியோடு விட்டொழித்து யோகப் பண்புகளை வாழ்வில் கடைப்பிடிக்கும் வாழ்வு யோக வாழ்வு, அன்னை வாழ்வு எனப்படும். இது யோகமன்று.
  • இந்த ஞானமும், இக்குடும்ப நிலையும் தாயார் மனத்தில் உள்ள மேற்பகுதியும், கீழ்ப்பகுதியுமாகும். 
  • அவை சந்திப்பது அவர் மனத்தில்.
  • அவர் மனத்திலிருந்து விலகி, வளரும் ஆன்மாவையடைந்தால், அவையிரண்டும் அவருள் வளரும் ஆன்மாவில் சந்திக்கும்.
  • அது நடந்தால், அதைக் காப்பாற்றுவது அவர் பங்கு, அவர் வேலை.
  • அந்த வேலைக்குச் சிந்தனையோ, உணர்ச்சியோ, சலனமோ பயன்படா.
  • சிந்தனை, உணர்ச்சி, சலனமற்ற வெளியில் சமர்ப்பணம் பயன்படும்.
  • அந்நிலைக்கு வந்தவருக்குச் சமர்ப்பணம் மட்டுமே வேலை' எனப்படும்.
  • அவர் சமர்ப்பணத்திற்குக் குந்தகம் விளைவிப்பது அவருக்குரிய தொடர்புகள். 
  1. வேலையுடன் உள்ள தொடர்பு
  2. வீட்டாருடன் உள்ள தொடர்பு 
  • இத்தொடர்புகள் சமர்ப்பணத்தைப் பாதிப்பதும், சமர்ப்பணத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதும் தாயாருடைய வேலை.
  • வாழ்வைப் பற்றி கர்மம், கஷ்டம், பிரச்சினை, நோய், துன்பம், மரணம், பயம், எதிர்காலம், போன்ற பிரச்சினைகள் இதுவரை எழுதியவற்றுள் அடங்கும்.
  • இவற்றுள் அடங்காதவை, முன் வந்த வெளியீடுகளில் காணப்படும்.
  • இதுவே இத்துடன் முடிவா?
  • முடிவு என்பதில்லை. ஆரம்பம் இருந்தால்தானே முடிவுண்டு?
  • முடிவு இல்லை என்றால் அடுத்தது என்ன?
  • இந்த 513 பக்கங்கள் வாழ்வை சுருக்கி எழுதியது எனலாம்.
  • வாழ்வை சுருக்கி எழுதியதுபோல் யோகத்தைச் சுருக்குவது முடியும்.
  • 513 பக்கங்களில் சுருக்கினால் The Life Divineபரிச்சயம் அற்றவர்க்குப் புரியாது.

  • பகவானும் பக்தனும்' என்ற நூலில் உள்ள 70 முதல் 80 கருத்துகள் The Life Divineஐ ஏற்கனவே அதிகப் பரிச்சயம் உள்ளவர்க்கு ஓரளவு விளக்கும்.
  • உதாரணமாக முரண்பாடு உடன்பாடு' என்ற கருத்திற்கு தத்துவ விளக்கம், யோக விளக்கம், வாழ்க்கை விளக்கம் எவருக்கும் எளிதில் புரியுமாறு எழுதினால் சுமார் 50 பக்கங்களாகும்.
  • 80 கருத்துகட்கு 50 பக்க வீதம் 4000த்திற்கு மேலும் எழுதலாம்.
  • அதை இக்குடும்ப நிகழ்ச்சிகளில் பொருத்தி எழுதினால் பொருத்தமாக இருக்கும்.



book | by Dr. Radut