Skip to Content

பகுதி 8

வந்தவர் : ஏம்பா, அம்மா சொல்வது சரிதானே.

பெரியவன் : எல்லோரும் எனக்கு discipline கொடுக்கிறார்கள். நான் என்ன செய்வேன். பெட்டியில் வைத்தேன். காணோம், மாயமாயிருக்கு. எனக்குப் பிரார்த்தனை வாராது. சரி, சாயந்திரம் செய்கிறேன், தலைவிதி.

பெண்ணும், சிறியவனும் வந்தனர். "ஏன் அனைவரும் பேயறைந்தது போலிருக்கிறீர்கள்?'' எனக் கேட்டுவிட்டு சிரித்தான்.

பெண் : தம்பி, அப்படியெல்லாம் சிரிக்கக்கூடாது.

சிறியவன் : என்னை அழச் சொல்கிறாயா? விஷயம் என்ன என்று சொல்லக்கூடாதா? இரகஸ்யமா?

கணவர் : இது பெரிய விஷயம்டா, தமாஷ் பண்ணாதே. டிகிரி முக்கியமாயிற்றே. பாங்க்கில் கேட்கிறார்கள்.

பெண் : டேய் தம்பி, நீ பேசாமலிரு. அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசாதே.

சிறியவன் : நான் பேசினால் பிரச்சினை தீரும்.

பெரியவன் : எனக்கு இப்போ டிகிரி பிரச்சினையில்லை. அம்மா என்னை பிரார்த்திக்கச் சொல்றாங்க. அதுதான் பிரச்சினை.

சிறியவன் : உன் பிரச்சினையை நான் தீர்க்கிறேன். என்னை இனி கேலி செய்யமாட்டேன் என்று சொல்.

பெரியவன் : டிகிரியை நீ எடுத்துப் போயிட்டாயா?

சிறியவன் : உன் பிரச்சினை எதுவானாலும் நான் தீர்க்கிறேன். நான்தான் உனக்கு மதர். எனக்கு சலாம் போடு. பெண் : டிகிரிதான் விஷயமா? இதோ இருக்கிறது. தம்பி எடுத்துப் போனான்.

பெரியவன் : மதர்ஸ் கிரேஸ்.

பிரின்சிபால் : நீ பிரார்த்திப்பதாகச் சொன்னதால் வந்தது.

பார்ட்னர் : ஏதோ விளையாட்டாகத் தோன்றுகிறது. கவனமாகப் பார்த்தால் நிறைய விஷயமிருக்கிறது.

கணவர் : அம்மா, நீ இரண்டு அண்ணன்களையும் அழைத்துக் கொண்டு உள்ளே போ.

பார்ட்னர் : (பிரின்சிபாலைப் பார்த்து) உங்களுக்குப் புரிகிறதா? இந்த டிகிரியில்லாவிட்டால் பாங்க் விஷயம் நகராது. பணம் கொடுக்க எனக்குப் பிரியமில்லை.

கணவர் : எனக்குப் பணம் தருவதில் ஆட்சேபணையில்லை. இந்தக் காலத்தில் பணமில்லாமல் எதுவும் நடக்காது.

பிரின்சிபால் : பணம் பிரச்சினையில்லை. தொடர்ந்து தருவதே பிரச்சினை.

பார்ட்னர் : அப்புறம் நம் கம்பெனி மற்ற கம்பெனிகள் போலாகும்.

தாயார் : வருவது பெரியது. காப்பாற்றுவது கஷ்டம்.

கணவர் : பையன் பிடிவாதமாக பிரார்த்திக்க மறுக்கிறான். என்ன செய்வது?

பிரின்சிபால் : அவன் நம்மைப் பிரதிபலிக்கிறான்.

கணவர் : எனக்கு பணம் தருவது ஆட்சேபணையில்லை என்பதால் அவன் பிரார்த்திக்க மறுக்கிறானோ?

பிரின்சிபால் : ஆம், என் மகன் அப்படியே சொல்கிறான். என் நம்பிக்கைக் குறைவை அவன் பிரதிபலிப்பதாக நான் எடுத்துக்கொண்டேன்.

கணவர் : இப்படிப்பட்ட கண்டிஷன் போட்டால் நம்மால் அன்னையை வணங்க முடியுமா?

பார்ட்னர் : எனக்கு இப்பொழுது பாக்டரியைவிட அன்னைதான் முக்கியம்.

கணவர் : எனக்கு பாக்டரிதான் முக்கியமாக இருக்கிறது. அன்னை நினைவு வருவதில்லை. (தம் மனைவியை நோக்கி) நீயே எங்களுக்காகப் பிரார்த்திக்கக் கூடாதா?

பிரின்சிபால் : என் மகனும் அதையே கூறுகிறான்.

தாயார் : அதற்கு அளவுண்டு.

(இருவரும் தனித்திருந்தனர்).

பிரின்சிபால் : என் மகனுக்குப் பெரிய ஆர்டர் வர இருக்கிறது. என்னைப் பிரார்த்திக்கச் சொல்கிறான். இதுவே அவனைக் கட்டிப்போட சரியான சமயம் என நினைத்தேன். எதற்கும் உங்கள் அபிப்பிராயம் கேட்க விரும்புகிறேன்.

தாயார் : அது சரி, தவறன்று. இருந்தாலும் அது சுயநலம். என் பிள்ளை அன்னையை ஏற்பது நான் அவனுக்குச் செய்யும் நல்லது என்றாலும், நான் அவனை என் வழிக்குக் கொணர முயல்வது சுயநலம். செய்யலாம், தவறாகாது.

பிரின்சிபால் : எப்படிச் செய்யலாம்?

தாயார் : நீங்கள் பிரார்த்தனை செய்தால், எப்படி ஆர்டர் வருகிறது என்பது அவனுக்கு விளங்கும்படிச் சொன்னால், அதே காரியத்தை தான் நன்றாகச் செய்ய முடியும் என்று காண்பான். கண்டவன் செய்தால் நல்லது.

பிரின்சிபால் : உதாரணம்மூலம் சொல்லுங்கள்.

தாயார் : ஆர்டர் சம்பந்தமான தபால்களில் அன்னையின் உருவத்தை நீங்கள் கற்பனை செய்வது, அந்த ஆர்டர் வருவதை அவனுக்குக் காட்டும். சுமார் 10 பகுதிகள் ஆர்டரில் இருந்தால், எந்த ஆர்டரில் படம் தெரிந்ததோ அது வரும். அவனுக்குப் புரியும். உங்கள் கற்பனை கற்பனையான ஆர்டரில். அவன் நிஜமான ஆர்டரில் கற்பனை செய்யலாம். அத்துடன் அவனுக்குள்ள தீவிரம் உங்களுக்கிருக்காது.

பிரின்சிபால் : பிடித்துக்கொண்டால் பெரிய விஷயம். நீங்கள் silent willஐப் பயன்படுத்தச் சொல்கிறீர்கள். சரி, செய்கிறேன்.

தாயார் : ஒருநாள் கம்பெனிக்குப் போய் டேபிள், பைல், ஆகியவற்றைத் துடைத்து அடுக்கி வையுங்கள். பைலில் உள்ள பேப்பரெல்லாம் கோணல்மாணலாக இருக்கும். அவற்றை எடுத்து அழகுற அடுக்கி வையுங்கள். வரும் ஆர்டர்களுக்கும் நீங்கள் அடுக்கிய தபால்கட்கும் உள்ள தொடர்பை அவன் அறிவான். மேற்கொண்டு மனதாலும் எதிர்பார்க்கவேண்டாம்.

பிரின்சிபால் : இப்போ discipline எனக்கு, அவனுக்கில்லை. இது உண்மையிலேயே சிரமம். எல்லாவற்றையும்கூடச் செய்யலாம். பலனை எதிர்பார்க்கக்கூடாது என்பது தலையைப் பிய்த்து எடுப்பது போலாகும்.

தாயார் : நாமும் பையனைப்போல இருப்பதால் அப்படி இருக்கிறது. அன்னையால் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்க முடியாது. இரயில் 4, 5 மைல் வேகத்தில்

போகாது. நாம் 5 பேர் போக இரயில் வேண்டுமென்றால் 200 பேர் போகும் இரயில் வரும். முக்கியமாக சந்தோஷப்படுவது சிரமம். பிறர் விஷயத்தில் சந்தோஷம் வரவேண்டும்.

பிரின்சிபால் : சொந்த விஷயமே எனக்கு disciplineஆக இருக்கிறது. சந்தோஷம் வரவில்லையே.

தாயார் : சந்தோஷம் வந்தால் போதாது. பொங்கி எழவேண்டும். மனித சுபாவத்திற்கு சந்தோஷத்தைவிட எரிச்சல் இயல்பு.

பிரின்சிபால் : மற்றவர்கள் கெட்டுப்போனபொழுது கைதட்டிச் சிரிக்க சந்தோஷம் உடனே எழும்.

தாயார் : அப்படிச் சிரித்தால், அந்த நிலை நமக்கு வரும்.

பிரின்சிபால் : பயமாக இருக்கிறது.

பெண் தாயாரிடம் வந்து காலேஜில் நடந்த ஒரு செய்தியைக் கூறி விவரம் கேட்டாள். ஒரு மாணவி பெற்றோருடன் கோபித்துக்கொண்டு ஓடிவிட்டதாகவும், அவள் தற்கொலை செய்துகொண்டதாகவும் பலவிதமான செய்திகள் வருகின்றன. எதை நம்புவது எனத் தெரியவில்லை என்றாள். எதிரில் மேஜை மீதிருந்த பத்திரிகையில், "பணம் கிடைத்துவிட்டது'' என்ற தலைப்பு தாயார் கண்ணில் பட்டது. அவர் மனக்கண்முன் ஒரு பெண் ஓடிப்போய் பாதிவழியில் திரும்பி வருவது தெரிந்தது. மகளிடம், "பயப்படும்படி ஒன்றுமிருப்பதாகத் தெரியவில்லை'' என்றார்.

பெண் : எப்படிச் சொல்கிறீர்கள்? உங்களுக்கு எதுவுமே தெரியாதே.

தாயார் : நீ சொல்லும் பெண்ணைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் வணங்கும் அன்னைக்கு அவளைத் தெரியும், எனக்கு அன்னையைத் தெரியுமன்றோ?

பெண் : அதனால் எப்படிச் சொல்லமுடியும்?

தாயார் : ஓரிரு நாட்கள் பொறுத்துப் பார்த்தால், நான் நினைத்தது சரியா எனத் தெரியும்.

அப்பொழுது சிறியவன் அக்காவை யாரோ தேடிக்கொண்டு வந்திருப்பதாகச் சொன்னான். போய்ப் பார்த்தாள். அது ஓடிவிட்ட பெண். "உங்கள் வீட்டில் தங்கலாமா? என்னைப் பெற்றோரிடமிருந்து காப்பாற்றுவாயா?'' என அவள் பரிதாபமாகக் கேட்டாள். அவளைத் தாயாரிடம் அழைத்து வந்தாள். இது தர்மசங்கடமான நிலை. பெற்றோருக்குச் சொல்லாமலிருப்பது தவறு. சொன்னால் பெண் கசங்குகிறாள். தாயாரும், பெண்ணும், வந்த பெண்ணை பூஜை அறைக்கு அழைத்துப்போய் ஆறுதல் சொல், சாப்பிட வைத்து, பூஜை அறையில் உட்கார்ந்து அன்னையைப் பற்றிப் பேசினர். கறுத்திருந்த பெண்ணின் முகம் அரை மணி நேரத்தில் பளிச்சென்றாகிவிட்டது. பயம் குறைந்துவிட்டது. அவளுக்கு அன்னைமீது நம்பிக்கை வந்துவிட்டது. "இப்பொழுது நினைத்தால், நான் செய்தது சிறுபிள்ளைத்தனம் எனத் தெரிகிறது'' என்று கூறி வெட்கப்பட்டாள். ஓடிப்போய் ஒரு குபார் கிளப்பிவிட்டோமே, இனி என்றும் தன் வாழ்வில் இது ஒரு கறையாகிவிட்டதே என வருத்தப்பட்டாள். அன்னையை மனதால் ஏற்றால், மாசு மனத்தை விட்டகன்றால், மக்கள் மனத்தையும்விட்டு அகலும் என்று தாயார் சொன்னது அவளால் நம்பமுடியவில்லை.

தாயார் : பொதுமக்கள் அபிப்பிராயம் என்பது கொஞ்ச நாளைக்குத்தானில்லையா?

வந்த பெண் : இதெல்லாம் எவரும் மறக்கும் விஷயமில்லையே. ஐயோ, நான் என்ன செய்வேன்?

தாயார் : பகவான் ஸ்ரீ அரவிந்தர் உலகைவிட்டுப் போக முடிவு செய்ததை அன்னையிடம் கூறினார். அது மறக்கக்கூடிய விஷயமா? அதையும் அன்னையை பகவான் மறக்கச் செய்தார்.

மகள் : அதெல்லாம் பகவானுக்கு.

தாயார் : பகவான் சக்தி முழுவதும் நம் வாழ்வில் செயல்படும். (வந்த பெண்ணை நோக்கி) நீ பகவானை மனத்தில் ஏற்றால், உன்னிடம் யாரும் அதைப் பற்றிப் பேசமாட்டார்கள்.

வந்த பெண் : என்னால் நம்பமுடியவில்லை.

தாயார் : அதை இன்றே காணலாம். பகவானை மனம் ஏற்றால், எவருக்கும் உன்னிடம் பேசும்பொழுது அந்தச் செய்தி நினைவு வாராது. ஏற்றது ஆழமாக இருந்தால் அனைவருக்கும் இப்படி ஒரு விஷயம் நடந்ததே மறந்துபோகும்.

வந்த பெண் : இப்படியும் ஒரு தெய்வமுண்டா? நான் வீட்டிற்கு போனில் பேசி மன்னிப்புக் கேட்கிறேன்.

மீண்டும் சிறியவன் வந்து அப்பெண்ணின் தகப்பனார் அவள் இங்கிருப்பதை அறிந்து வந்திருக்கிறார் என்றான். தாயாரிடம் அவர் வந்து, "பெண் கிடைத்தது சந்தோஷம். நான் அவளைக் கடிந்துகொள்ளமாட்டேன்'' என்றார். வந்தவள் தகப்பனாருடன் வீடு திரும்பினாள்.

கணவர் ஒருநாள், பார்ட்னர் அன்று வருவார் எனக் கூறினார். பார்ட்னரும், கணவரும் அவருடன் பேசினர்.

கணவர் : ஒரு முக்கியமான விஷயம் பேச பார்ட்னர் வந்திருக்கிறார்.

பார்ட்னர் : நீங்கள் சொல்லவில்லையா?

கணவர் : நீங்களே சொல்லவேண்டும் எனப் பிரியப்பட்டேன்.

பார்ட்னர் : சரி, இப்பொழுது நீங்களே சொல்லுங்கள்.

கணவர் : நாம் இன்னும் கம்பெனி ஆரம்பிக்கவேயில்லை. அதற்குள் பம்பாயிலிருந்து ஒரு பெரிய கம்பெனி நம்மிடமிருந்து நம் சரக்குக்குக் கான்ட்ராக்ட் கேட்கிறான். அதாவது நாம் உற்பத்தி செய்வது அத்தனையும் அவனே வாங்கிக்கொள்ளப் பிரியப்படுகிறான். பார்ட்னர் இதை உன்னிடம் கூறப் பிரியப்பட்டார்.

பார்ட்னர் : கூறுவதில்லை, உங்கள் அபிப்பிராயம் தேவை. அன்னை ஆசீர்வாதம் தேவை. முக்கியமான விஷயத்தை விட்டுவிட்டீர்களே. நம் பாக்டரியை 12 மடங்கு பெரிதாக்கச் சொல்கிறார்கள்.

மனைவி : நம் நம்பிக்கையை 12 மடங்கு அதிகப்படுத்தவேண்டும். எப்படி மார்க்கட் நம்மை நோக்கி வருகிறதோ, அப்படி நாம் அன்னையை நோக்கிச் செல்லவேண்டும். பார்ட்னர் : எனக்கு அன்னையைத் தெரியாது. உங்கள் கணவரைத்தான் தெரியும். நான் இவரை முதல் சந்தித்ததும் நினைத்தது, இப்பொழுது அப்படியே நடக்கிறது.

கணவர் : எனக்கு எதுவும் தெரியாது. என்னமோ நடக்கிறது.

பார்ட்னர் : அதற்கு விளக்கம் கூறுங்கள்.

மனைவி : நாம் unconscious கண்மூடி வாழ்கிறோம்.

பார்ட்னர் கணவர்: உடனே செய்யவேண்டியது என்ன?

மனைவி : மனம் அகன்று விரிந்து நன்றியால் உடல் புல்லரிக்க வேண்டும்.

பார்ட்னர் : பம்பாய் கம்பெனி பேசியபொழுது புல்லரிக்கவில்லை. நீங்கள் கூறும்பொழுது புல்லரிக்கிறது.

மனைவி : நன்றியுள்ளது எனப் பொருள்.

கணவர் : எனக்கு இப்பொழுதும் புல்லரிக்கவில்லை. என்ன செய்ய?

மனைவி : புல்லரிக்கவேண்டும் எனப் பிரார்த்திக்கவேண்டும். இனி பிள்ளைகள் முரட்டுத்தனமாக, கேலியாகப் பேசமுடியாது.

கணவர் : நான் கண்டிக்கிறேன்.

மனைவி : கண்டிப்புப் பயன்படாது.

கணவர் : எது பயன்படும்?

மனைவி : அந்தக் குணம் நம்மிடமிருந்தால் விட்டுவிடவேண்டும்.

கணவர் : எனக்குக் கேலி செய்யும் பழக்கம் உண்டு. அதை விட்டுவிடுகிறேன். முரட்டுத்தனம் என்னிடமில்லையே.

பார்ட்னர் : பிடிவாதம், முரட்டுத்தனமாகுமே.

மனைவி : முரட்டுத்தனம் எத்தனையோ வகைகளில் வெளியில் வரும். பிடிவாதம் அதில் ஒன்று.

பார்ட்னர் : எனக்குப் பிடிவாதம் உண்டு. நான் விட முயல்கிறேன்.

வேலைக்காரி பரபரப்புடன் வந்து இவர்கள் தெருவிலிருந்த பால்காரன் மகன் அமெரிக்கா போகப் போவதாகக் கூறினாள். பார்ட்னர் இவர் முகத்தை ஊன்றிக் கவனித்துவிட்டு,

பார்ட்னர் : இதைப்பற்றி நீங்கள் ஏதேனும் நினைக்கிறீர்களா?

மனைவி : நமக்கு பம்பாய் கம்பனி கொடுப்பதும், இதுவும் ஒன்று.

கணவர் : அவர்களுக்கெல்லாம் அன்னை தெரியாதே.

மனைவி : அன்னைச் சூழல் நம்மைக் கடந்து செயல்படும்.

கணவர் : நாம் இப்பொழுது அவர்களிடம் பால் வாங்குவதும் இல்லை.

மனைவி : பொதுவாக அன்னைத் தொடர்பு இல்லாமலிருக்காது. வேலைக்காரியை விசாரித்தால் தெரியும்.

(வேலைக்காரியை அழைத்து), இப்போ அவர்கள் யாருக்குப் பால் சப்ளை செய்கிறார்கள்?

வேலைக்காரி: நம்ம மையம் நடத்துபவருக்கும், மையத்திற்கு வருபவர்கட்கும் சப்ளை செய்கிறார்.

பார்ட்னர் : ஆச்சரியமாக இருக்கிறது. அது இல்லாமலிருந்தால்...

மனைவி : தொடர்பு இல்லாமலிருக்காது.

வேலைக்காரி: அவர்கள் வீட்டில் அன்னை படமிருக்கிறது.

மனைவி : எந்தத் தொடர்பும் இல்லாமல் வந்தால் அவர் நல்ல குணத்திற்குச் சூழல் தந்ததாக அர்த்தம். வேலைக்காரி: எனக்கு ஏதாவது உண்டா?

மனவி : உனக்கு எது வேண்டுமானாலும் உண்டு. (பார்ட்னரைப் பார்த்து) சூழல் மட்டும் பால்காரனுக்கு இதைக் கொடுத்திருந்தால், அது போன்றது நமக்குண்டு என அர்த்தம்.

வேலைக்காரி: அம்மா, உங்க கையால் எனக்கு ஒரு படம் கொடுங்கள்.

(பெற்றுக்கொண்டு போகிறாள்).

கணவர் : நாம் நம் சூழலில் நடப்பதை மிகவும் கவனமாகக் கவனிக்கவேண்டுமா?

பார்ட்னர் : நாம் கம்பெனி ஆரம்பித்ததிலிருந்து இதுபோன்று சுமார் 8 அல்லது 10 செய்திகளுண்டு. நான் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை.

மனைவி : அன்னை இடையறாது செயல்பட்டுக்கொண்டே இருப்பார்.

பார்ட்னர் : நல்லவராக இருக்கலாம். அன்னையைப் பின்பற்ற முடியாது. அது எளிதன்று.

கணவர் : வாயை அடக்கலாம். அன்னை மனத்தை அடக்கச் சொல்கிறாரே.

மனைவி : மனத்தில் உள்ள அசுரன் எட்டிப் பார்க்கும்பொழுது நாம் உஷாராக இருக்கவேண்டும். உடனடியாக பக்தி செலுத்த முயலவேண்டும்.

கணவர் : இது என்ன புதியதாக இருக்கிறதே?

மனைவி : அதுவே அடிப்படை.

பார்ட்னர் : அது உண்மை என நான் அறிவேன்.

மனைவி : சமர்ப்பணம் பலிக்காததற்கு அதுவே காரணம்.

கணவர் : யாருக்கோ, என்னமோ வந்தால் அதெல்லாம் அன்னையால் என்றால், உலகமே நம்மால் நடத்தப்படுகிறது என முடியுமே?

பார்ட்னர் : உங்கள் மனைவி கூறும் தொடர்பு இருக்கிறதே.

கணவர் : அத்தொடர்பு இல்லாவிட்டாலும், சூழல் செய்யும் என்றால்....

மனைவி : நம்மைச் சார்ந்தவர்கள் செய்யும் தவறு, அவர்கட்கு வரும் கெடுதல்கள் அனைத்திற்கும் நம்மிடம் தொடர்பான காரணம் இருக்கும் என்பது தத்துவம்.

கணவர் : இதை எப்படி ஒத்துக்கொள்வது?

மனைவி : அவர்கள் சூழலில் நாமிருப்பதால், நம் சூழலில் அவர்களிருப்பதால் ஒன்றின் பிரதிபலிப்பு மற்றதில் இருப்பது இயற்கை.

கணவர் : நாமே அவர்கள் கஷ்டத்திற்குக் காரணம் எனவும் சொல்லுவாய் போலிருக்கிறது.

பார்ட்னர் : இந்த விளக்கம் முழுவதும் நான் கேட்கப் பிரியப்படுகிறேன்.

மனைவி :

  1. நமது சூழல் நமது பிரதிபலிப்பு.
  2. அது நம் பொறுப்பு.
  3. 3) பிரதிபலிப்பு மூன்று நிலைகளிலிருக்கும்.
  • நம்மால் நடந்தது அக்காரியம்.
  • அக்காரியம் நம்மில் பிரதிபலிக்கிறது.
  • தொடர்பில்லை என்றாலும் தெரியும்.
  1. நாம் எந்த அளவில் அதிர்ஷ்டத்திற்கு அல்லதுகஷ்டத்திற்குக் காரணம் என்பது நம் மனம் கூறும்.
  2. நம் உலகில் நடக்கும் எல்லாத் தவறுகளுக்கும் நாமே பொறுப்பு எனக்கொண்டால் அது நம் வாழ்வைசோதனை செய்தால் சரி எனத் தெரியவரும்.
  3. நம்மைச் சார்ந்தவர் செய்வன அனைத்திற்கும் நாமேபொறுப்பு ஏற்பதை consciousness responsibility எனக் கூறலாம்.

பார்ட்னர் : இது யோசிக்கவேண்டிய விஷயம்.

கணவர் : யோசனையே தேவையில்லை. எனக்கு இந்த philosophyயெல்லாம் தேவையில்லை.

மனைவி : பாக்டரி தேவையில்லையா?

கணவர் : அது எங்கே வந்தது?

மனைவி : பாக்டரி நமக்கு எப்படி வந்தது என யோசித்தால் அன்னை தத்துவம் புரியும்.

பார்ட்னர் : பாம்பே விஷயம்தான் என்னை இதைப் பற்றிச் சிந்திக்க வைத்தது. எல்லோரும் போனபின்,

கணவர் : நீ சொல்வனவெல்லாம் பயமாயிருக்கின்றன.

மனைவி : பயப்பட ஒன்றுமில்லை. பொறுப்பு அதிகமானால் பலன் அதிகமில்லையா?

கணவர் : அது புரிகிறது. அப்படிச் சொன்னால், ஏற்க முடியும்.

வேலைக்காரியின் கணவர் ஒரு தோப்பில் காவல்காரனாக இருக்கிறான். அவன் முதலாளி சிங்கப்பூர் போவதால் அவனிடம் 3 வருஷத்திற்குத் தோப்பைக் குத்தகைக்குத் தருகிறேன் என்றார்.

வேலைக்காரி: அம்மா படம் வந்த நேரம் எனக்கு நல்ல காலம் வந்திருக்கிறது. நானும், என் குடும்பமும் இனி நிமிர்ந்து வருவோம். இது சக்திவாய்ந்த தெய்வம்தான்.

மனைவி : உன் கணவர் நேர்மையானவனா?

வேலைக்காரி: திருடமாட்டார். வேலை செய்வது குறைவு. 3 வருஷக் குத்தகைப் பணத்தை வியாபாரியிடம் முன் பணமாகப் பெற்று முதலாளியிடம் கொடுக்கிறேன் என்றார். அதற்கு முதலாளி சம்மதிக்கவில்லை. அப்படி வாங்கினால் என் வீட்டுக்காரருக்கு நஷ்டம் வரும் என்றார். "வருஷா, வருஷம் குத்தகை கொடுத்தால் போதும். உன்மீது நம்பிக்கையிருக்கிறது'' என்று கூறிவிட்டார்.

மனைவி : எப்படி முடிவாயிற்று?

வேலைக்காரி: என் வீட்டுக்காரர் வியாபாரியிடம் மாதா, மாதம் சிங்கப்பூருக்குச் சேரவேண்டிய பணத்தை நேரே அனுப்பச் சொல்லி விட்டார்.

மனைவி : இது உனக்கு நல்ல நேரமாக இருக்கிறது. இதைக்கொண்டு நீ முன்னுக்கு வரலாமே.

வேலைக்காரி: முதற்காரியமாக என் பையனை நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும். என் கணவருக்குக் கெட்ட பழக்கமில்லை. தோப்பு வருமானம் பெரியது. நான் பையனை பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டு வீடு கட்டிவிடுகிறேன். அது போதும்.

மனைவி : எனக்கு வேலைக்கு ஒரு ஆள் வேண்டும்.

வேலைக்காரி: இந்த வேலையை விட மனம் வரவில்லை. இதனால்தான் எனக்கு தோப்பு வந்தது. இனி வேலை அதிகம். என் தங்கையை உங்க வீட்டில் வேலை செய்யச் சொல்கிறேன்.

கணவர் : நீ சொல்வதும் சரிதான் போலிருக்கிறது. எல்லோருக்கும் அதிர்ஷ்டம் வருகிறது.

மனைவி : வருவது எளிது. பெறுவது நம்மைப் பொருத்தது.

கணவர் : பிள்ளைகளைக் கண்டிக்கக் கூடாது என்றால் என்ன செய்வது?

மனைவி : நாம் நம்மைத் திருத்திக்கொள்ள வேண்டும்.

கணவர் : எனக்கு ஒத்துவாராத விஷயத்தைச் சொல்கிறாய்.

மனைவி : எது?

கணவர் : மாறுவது.

மனைவி : பாக்டரி வந்தவுடன் மாறுவதுபோல், இதுவும் மாறவேண்டும்.

கணவர் : ஏன், நீ இந்தப் பொறுப்பை எல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது என்கிறாய்?

மனைவி : அது பெரிய தத்துவம்.

கணவர் : நாங்கள் எல்லாம் வெளியில் போய் வேலை செய்கிறோம். நீ உள்ளே சென்று வேலை செய்யக்கூடாதா?

மனைவி : எனக்குக் குடும்பத்தில் உள்ள ஸ்தானத்திற்குரிய வேலையை நான் உள்ளே, வெளியே செய்ய வேண்டும். செய்கிறேன்.

பார்ட்னர் : இன்னொரு முறை சொல்லுங்கள்.

மனைவி : கணவருடைய வாழ்வில் மனைவியாய், பையனுடைய வாழ்வில் தாயாராக இருக்கிறேன். அதற்குரிய வேலையை உள்ளே செய்யலாம். வக்கீலிடம் கட்டைக் கொடுத்த கட்சிக்காரன், வக்கீல் கேஸை நடத்தும்படி எதிர்பார்க்கலாம். வக்கீல், கட்சிக்காரன் வாங்கவேண்டிய சர்டிபிகேட்டை வாங்கிவரும்படி எதிர்பார்க்கக் கூடாதன்றோ? சாட்சிகளைக் கொண்டு வருவது வக்கீல் வேலையில்லை. செய்யவும் முடியாது. முடியும் நேரத்திலும் அவற்றையெல்லாம் வக்கீல் செய்வது தவறு.

கணவர் : பாக்டரி வந்திருக்கிறது. எனக்காகப் பிரார்த்தனை செய் என்றால், வக்கீல், சாட்சியெல்லாம் ஏன் அழைக்கிறாய்?

பார்ட்னர் : நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. முழுவதும் புரியும்படிச் சொன்னால், நானே உங்கள் கணவருக்கு எடுத்துச் சொல்வேன்.

மனைவி : கணவர் பாக்டரியில், ஆபீசில் செய்யவேண்டிய வேலைக்கு உள்ளே மனத்தில் ஆதரவு தேவை. அதை அவரே செய்யவேண்டும்.

பார்ட்னர் : அது வேலைக்குரிய பொறுப்பு எனப்படும்.

மனைவி : கணவர் செய்யும் வேலையில் அவர் வெற்றிபெற, அவர் மனம் தரும் ஆதரவுக்கு, நான் மனைவியாக என் மனத்தால் ஆதரவு தரவேண்டும். அது என் பங்கு.

கணவர் பார்ட்னர் : சரியாகப் புரியவில்லை

மனைவி : பையனைக் கல்லூரிக்கு அனுப்பினால் பணம் செலவு செய்வது பெற்றோர் கடமை. படிப்பது அவன் பங்கு. அவனுக்காகப் பெற்றோர் படிக்க முடியாது, படிக்கக் கூடாது.

பார்ட்னர் : அது சரி.

கணவர் : என்னைப் பொறுப்பற்றவன் என்கிறாயா?

பார்ட்னர் : இன்று வந்துள்ள வாய்ப்புக்குரிய பொறுப்பை மனதால் ஏற்பது உங்கள் பொறுப்பு என்கிறார்.

மனைவி : சரி. B.A.யில் படிப்பதுபோல இன்ஜினீயரிங் காலேஜில் படித்தால் போதாதன்றோ?

கணவர் : என்மீது குறை உனக்கு.

மனைவி : நம்முடைய நிலைமைக்கு 70 மடங்கு பெரிய வாய்ப்பு வந்திருக்கிறது. நீங்கள் 50 மடங்கு பெரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டீர்கள். அது போதாது என்கிறேன்.

பார்ட்னர் : நான் இன்று பம்பாயிலிருந்து வந்த என் நண்பரைச் சந்தித்தேன். அவருக்கு நம் கம்பெனி விஷயம் தெரியாது. அவர் நமக்கு உதவிக்கு வந்த கம்பெனி வேறொரு கம்பெனியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகச் சொன்னார்.

கணவர் : அது ஆபத்தாயிற்றே. எனக்குப் பொறுப்பில்லையா? சரி, சரி, எதுவானாலும் நான் பொறுப்பை முழுவதும் எடுத்துக்கொள்ள முடிவு செய்து 3 நாட்கள் பிரார்த்தனையை மேற்கொள்கிறேன்.

பார்ட்னருக்கு போன் வந்தது. பம்பாய் கம்பெனி அவர் வீட்டிற்குப் போன் செய்துவிட்டு, அங்கில்லை என்பதால், இங்கு கூப்பிட்டார்கள். அவர்கள் இப்பொழுது நம்மூரிலிருக்கிறார்கள். எப்பொழுது கான்ட்ராக்ட் கையெழுத்திடலாம் எனக் கேட்டார்கள்.

கணவர் : அப்போ, 3 நாட்கள் பிரார்த்தனை தேவையில்லை.

மனைவி : அதைக் குறைவறச் செய்து முடிக்கவேண்டும். அதில் குறைவு வைக்கக்கூடாது.

பார்ட்னர் : நான் 3 நாட்கள் பிரார்த்தனையில் பாதியில் வேலை முடிந்தால் மீதிப் பிரார்த்தனை செய்யத் தேவையில்லை' எனப் படித்திருக்கிறேன்.

கணவர் : என்னை கட்டாயப்படுத்த இப்படிப் பேசுகிறாயா?

மனைவி : உங்களை நான் கட்டாயப்படுத்த நினைத்தால், எல்லாம் கெட்டுப்போகும். நமக்கு அருள், பேரருளாக இருப்பதால் முடிவு எடுத்தவுடன் காரியம் முடிகிறது. மனம் சோம்பேறியாக இருந்தால் 3 நாட்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். முடிவு பலமானதானால் செய்யவேண்டாம்.

கணவர் : எனக்கு விட்டால் போதும் என்றிருப்பதால் நான் அந்தப் பிரார்த்தனையைச் செய்வது சரிதான்.

பார்ட்னர் : இந்த விஷயங்களில் தெளிவுபெற வேண்டியது ஏராளமாக இருப்பதாகத் தெரிகிறது. எதையும் அப்படியே எடுத்துக்கொள்ள முடியவில்லை.

கணவர் : நீ சொல்லும் சமர்ப்பணத்தைச் செய்து பார்த்தேன். அது ஒன்றும் பிடிபடவில்லை. பேங்கிற்குப் போகும்பொழுது சமர்ப்பணம் செய்து ஏஜெண்டிடம் பேச நினைத்தேன். சமர்ப்பணம் வெளியே வரும்பொழுதுதான் நினைவு வந்தது. நினைவே வரவில்லை.

பார்ட்னர் : அன்று பாங்க்கில் நானும் சமர்ப்பணம் செய்ய முயன்றேன். உங்களுக்கு நினைவிருக்கும், மானேஜர், "பணம் தர முடிவு செய்துவிட்டோம்'' என்றார். எவ்வளவு எனச் சொல்லவில்லையே. சரி, கேட்கக்கூடாது என முடிவு செய்தேன். உடனே மெஷினரி விலையில் 80% தருவதாக முடிவு செய்திருந்ததாகவும், இந்த பம்பாய் கான்ட்ராக்ட் வருவதால் 100% தர முடிவு செய்ததாகவும் கூறினார்.

கணவர் : இதுதான் silent will. எனக்குப் புதியது. அனுபவம் இல்லை. தொகை பெரியது. ஒன்றும் புரியவில்லை. சமர்ப்பணம் மறந்துவிட்டது.

பார்ட்னர் : நீங்கள் உங்கள் மனைவியிடம் பொறுப்பு எடுத்துக்கொள் என்கிறீர்களே. இதுதான் அது. உங்களுக்கு சமர்ப்பணம் வாராதபொழுது பாங்க் 80%ஐ உயர்த்தி 100% கொடுத்தது உங்கள் மனைவியின் சமர்ப்பணத்தால். சமர்ப்பணம் செய்ய முடியாவிட்டாலும், செய்வது என முடிவு செய்துவிட்டதால், உங்கள் முயற்சி முழுமையானதால், மனைவியின் சமர்ப்பணம் செயல்பட்டது.

கணவர் : நானே சமர்ப்பணம் செய்தால்?

பார்ட்னர் : பாம்பே கம்பெனி கொடுக்கும் கான்ட்ராக்ட் போலிருக்கும்.

கணவர் : காரியம் கூடிவருவது ருசியாக இருக்கிறது. மூச்சுவிட முடியவில்லை.

பார்ட்னர் : வேண்டா வெறுப்பாக ஏற்பதை விருப்பாக ஏற்றால் மூச்சுத் திணறாது.

கணவர் : என்னால் படிக்க முடியாது. நான் தமிழ் மீடியத்தில் படித்தவன். எல்லாப் புத்தகங்களும் ஆங்கிலத்தில் இருக்கின்றன.

பார்ட்னர், மனைவி : 50 புத்தகங்கள் தமிழிலிருக்கின்றன.

கணவர் : அதை மறந்துவிட்டேன். படிக்கிறேன். படிக்கணும். நம் போன் சற்று முன்பு வேலை செய்யவில்லை. கம்ப்ளெயிண்ட் கொடுக்கச் சொன்னேன்.

பார்ட்னர் : சமர்ப்பணம் செய்து பார்க்கலாமா?

கணவர் : சமர்ப்பணத்தை பாக்டரியுடன் நிறுத்திக்கொள்வோம். இதெல்லாம் அதிகம். வேலைக்காரி: ஐயா பக்கத்து வீட்டிலிருந்து போனுக்காக கம்ப்ளெயிண்ட் தரச் சொன்னார். என் மாமன் ஒருவர், போன் கம்பெனியில் வேலை செய்பவரை, ரோடில் பார்த்தேன். அவரை அழைத்து வரவா?

அனைவரும்: ஆச்சரியமாக இருக்கிறதே.

பார்ட்னர் : சமர்ப்பணம் செய்வதற்கு முன்பே வேலை செய்கிறதே. ஓர் உதாரணம்மூலம் விளக்கமாக இன்னொரு முறை சொல்லுங்களேன்.

கணவர் : நீங்கள் என் மனைவியை சமர்ப்பணத்தைப் பற்றிக் கேட்டுவிட்டால் இன்று சாப்பாடில்லை. நாளைக்கு வைத்துக்கொள்ளலாம். வாங்க சாப்பிடப் போகலாம்.

மனைவி : நமக்கு பம்பாய் கம்பெனி கான்ட்ராக்ட் பெரிய விஷயம். போன் ரிப்பேர் செய்வது சிறிய விஷயம். சமர்ப்பணத்திற்கு இரண்டும் சமம்.

கணவர் : சிறியது, பெரியது, இல்லையா?

பார்ட்னர் : நான் இப்படிப் படித்திருக்கிறேன். அதாவது எது சமம்?

மனைவி : போன் ரிப்பேர் செய்ய சமர்ப்பணம் செய்து பார்க்கலாமா? என்று நீங்கள் கேட்டபொழுது, உங்கள் மனம் கம்ப்ளெயிண்ட் செய்வதை நம்புவதைவிட, சமர்ப்பணம் செய்வதை நம்புகிறது. அது பலிக்கிறது.

கணவர் : பாம்பே கம்பெனி கான்ட்ராக்ட் விஷயத்தில் மனம் சமர்ப்பணத்தை அதுபோல் நம்பவில்லை. நம்பினால், நடக்கும் என்கிறாயா? அது நடந்தது எப்படி?

மனைவி : 3 நாள் பிரார்த்தனையை தலைவிதியே என ஏற்றுக்கொண்டதால் நடந்தது.

பார்ட்னர் : அது உங்கள் மனைவியின் சமர்ப்பணத்திற்கு நீங்கள் தடையாக இருக்கக்கூடாது என்று முடிவு செய்ததால் என நினைக்கிறேன்.

மனைவி : உங்களுக்கு (பார்ட்னருக்கு) சமர்ப்பணத்தில் நம்பிக்கை இருக்கிறது. தெளிவு வேண்டும் எனக் கேட்கிறீர்கள்.

பார்ட்னர் : தெளிவு இருந்தால் அதிகமாகப் பலிக்குமா?

மனைவி : ஆமாம்.

கணவர் : அடுத்த கட்டமும் உண்டா?

மனைவி : தெளிவும், நம்பிக்கையுமிருந்து சமர்ப்பணம் சந்தோஷம் தருவது. அதற்கடுத்தது, சமர்ப்பணம் பலிக்கவேண்டும் என எதிர்பாராதது.

பார்ட்னர் : பலனை எதிர்பார்க்கவில்லை எனில்....

மனைவி : சமர்ப்பணமே பலன், அதைச் செய்வதே சந்தோஷம் என்ற மனநிலை.

பார்ட்னர் : உதாரணம்.

மனைவி : சினிமா எதற்காகப் பார்க்கிறோம்? பார்ப்பதே சந்தோஷமன்றோ. அதுபோல் சமர்ப்பணம் is an end in itself. சமர்ப்பணம் செய்ய மனம் விழையவேண்டும். அதற்குரிய சந்தர்ப்பங்களை மனம் நாடவேண்டும்.

கணவர் : கேலி செய்வதும் அப்படித்தானே?

மனைவி : ஆம்.

பார்ட்னர் : கேலி பிறரைப் புண்படுத்தும். மனைவி : அப்படியும் உண்டு. எவரையும் புண்படுத்தாமல் அனைவரும் சிரிக்கும் கேலியும் உண்டன்றோ?

பார்ட்னர் : விஷயம் சந்தோஷத்திலிருக்கிறதா?

மனைவி : ஆமாம். சந்தோஷத்திற்கடுத்தது ஆனந்தம்.

கணவர் : தத்துவப்படி ஆனந்தமே முடிவு.

மனைவி : ஆனந்தம் (Bliss,Delight) இரண்டு நிலைகளில் உள்ளது. Bliss என்பது ரிஷிகள் பெறும் ஆனந்தம், சச்சிதானந்தத்தின் பகுதி. Delight என்பது இறைவன் பரிணாமத்தில் அனுபவிக்கும் ஆனந்தம். நன்றியறிதல் உடல் புல்லரிக்கும் ஆனந்தம்.

பார்ட்னர் : அதற்கு உதாரணம் தரமுடியுமா?

மனைவி : நாம் இப்பொழுது சாப்பிடப் போகிறோம். சாப்பாட்டை ருசிப்பது சந்தோஷம். சாப்பாடு பிரம்மம் என அறிவது, தருவது, Bliss, ஆனந்தம். ருசியின் பின்னால் உள்ள (ரஸா) ஆனந்தத்தை ரிஷி அறிவது. அது க்ஷணம் தெரியும், நிலையாக இருக்காது. இந்தச் சாப்பாட்டை நாம் சாப்பிடுவது இறைவன் செயல் என நம் உடல் அறிந்தால் அந்த Delight ஆனந்தம் நம் உடல் நிரந்தரமாகும். உடல் புல்லரிக்கும். அப்பொழுது நாம் சாப்பாட்டை அனுபவிக்கவில்லை. சாப்பாட்டில் வெளிப்படும் இறைவனை, நம்முள் உள்ள இறைவன் அனுபவிக்கிறான். அது பூரண யோகத்திற்குரிய Delight ஆனந்தம்.

பார்ட்னர் : அதைத்தான் intolerable ecstasy, unflinching rapture, பொறுக்கமுடியாத பூரண ஆனந்தம், தாங்கமுடியாத பூரிப்பு என்கிறோமா?

மனைவி : ஆம்.

கணவர், பார்ட்னர்: நமக்கெல்லாம் அதில்லையா?

மனைவி : அன்னை நமக்கு அவற்றை அளிப்பதை நாம் பாக்டரி, கான்ட்ராக்ட், போன் ரிப்பேர், தோப்புக் குத்தகை, என்ற பலன்களாகப் பெறுகிறோம். நமக்குச் சாப்பாடு அன்னைக்குச் சமர்ப்பணம்.

பார்ட்னர் : விஷயம் ஒன்றுதான். நாம் அனுபவிக்கும் மனநிலைதான் மாறுபட்டதா?

மனைவி : ஆமாம்.

கணவர் : அன்போடு ஒருவர் தரும் பரிசை நாம் பரிசாகப் பெறுகிறோம். அன்பைக் கவனிப்பதில்லை. பரிசில் அன்பைக் காணவேண்டும்.

மனைவி : முதல் நிலை பரிசு, இரண்டாம் நிலை அன்பு, மூன்றாம் நிலை அன்பைத் தாங்கிவரும் பரிசு.

கணவர் : உனக்குப் பக்குவம் வந்துவிட்டது. எங்களுக்குச் சாப்பாடு போடு. நாங்கள் சாப்பிடுகிறோம், நீ ரஸாவை அனுபவி.

மனைவி : எனக்கு விளக்கம் தெரியும். ரஸா தெரியாது. ரஸாவை அனுபவிப்பது பக்குவம். ரஸாவை நிரந்தரமான பூரிப்பாக அனுபவிப்பது பவித்திரமான பக்குவம். அதைத் தரும் சமர்ப்பணம் சரணாகதியாகிறது. அந்தச் சரணாகதிக்கு consciousness responsibility உண்டு. எவருடைய செயலுக்கும் நாம் ஏற்கும் அன்னை பொறுப்பு அது.

பார்ட்னர் : இன்று சமர்ப்பணத்தைத் தெளிவாகக் கேட்டுக் கொண்டேன். அடுத்த முறை இதை எப்படிச் செய்வது என்று கூறுங்கள்.

மனைவி : சரி. மனம் பிறருக்கு அதிர்ஷ்டம் வரவேண்டும் என்று பிரியப்படுவதுபோல் அனைவருக்கும் தாங்கமுடியாத பூரிப்பு வரவேண்டும் என நினைக்கவேண்டும்.

கணவர் : அங்கு ஒரு சிக்கலிருக்குமா?

மனைவி : அடுத்தவர் செய்யும் அட்டகாசம், அட்டூழியம், அநியாயம், ஆண்டவன் செய்யும் நியாயம், ஆர்ப்பாட்டம், சிருஷ்டி என மனம் பூரிப்பது.

பார்ட்னர் : அவை நமக்கு இழைக்கப்பட்டாலும் அப்படி நினைக்கவேண்டும்.

மனைவி : நமக்கு வரும்பொழுதுதான் விசேஷம். நினைத்தால் போதாது, உணரவேண்டும்.

கணவர் : "தீதும் நன்றும் பிறர் தர வாரா'' என்பதும் இதுவா?

மனைவி : இதற்குரிய மனநிலை அது. அது புல்லரிப்புத் தாராது. இத்தனையும் தன்னுள்ளடக்கியது சத்தியம், மெய், மெய் மட்டும் பேசுவது, மெய்க்குப் புறம்பானவற்றைப் பேசாமலிருப்பது.

பார்ட்னர் : சத்தியஜீவியம் என்பதை சத்தியத்தின் பரநலமான நல்லெண்ணம் எனக் கூறலாமா?

மனைவி : சரியான விளக்கம். சத்தியம் பரநலத்தின்மூலம் ஆன்மீக நல்லெண்ணமாக மாறி ஆன்மா அடுத்த ஆன்மாவுடன் தொடர்புகொள்வது ஆன்மீக நன்றியறிதல். தத்துவப்படி மனம் தன் ஆதியான சத்தியஜீவியத்தை வாழ்வின் செயல்களில் அறிவது.

பார்ட்னர் : சுமுகமே சூட்சுமம்.

மனைவி : சுமுகம் ஆன்மீகச் சுகம்.

கணவர் : அதுவும் நம்மைத் தேடி வரவேண்டும் என்பாய்.

பார்ட்னர் : நாமே தேடிப்போகும் சுமுகம் ஆன்மீகச் சுகம். தானே நம்மை நாடி வரும் சுமுகம் ஆன்மீகம் அன்றாட வாழ்வில் மலரும் மணம்.

மனைவி : தாழ்ந்தது, உயர்ந்தது (low consciousness,higher consciousness) என்பதில் விஷயம் முடிகிறது. பிறர் நமக்கிழைத்த கொடுமை ஆண்டவனின் அன்புப் பரிசு என ஆன்மா, உடல் பரிணாமத்தால் எழுந்து புல்லரிப்பது உயர்ந்த ஜீவியம்.

பார்ட்னர் : இது மூன்றாவது திருவுருமாற்றமா?

மனைவி : முதல் திருவுருமாற்றம், சைத்தியத் திருவுருமாற்றம்.

கணவர் : வித்தியாசம் என்ன?

மனைவி : முதல் திருவுருமாற்றம் mental psychic மனத்தின் சைத்தியப்புருஷன் வெளிப்படுவது. அது முனிவர், ரிஷி, யோகி, தெய்வ நிலைகளைக் கடந்து சத்தியா- ரோகணத்தால் சத்தியஜீவிய திருவுருமாற்றமாவது மூன்றாவது திருவுருமாற்றம்.

கணவர் : புரியவில்லை.

மனைவி : நாம் எப்படியிருந்தாலும், நாம் சம்பாதித்தது எந்த வகையாக இருந்தாலும், குடும்பம் செய்தாலும், பழக்கம் மட்டமானதாக இருந்தாலும், சுயநலத்தையே பரநலம் எனக் கருதினாலும், காரியத்தையே மனம் நாடினாலும், எல்லாவற்றையும் மீறி உள்ளேயுள்ள ஒரு சொட்டுப் பக்குவத்தால் நன்றி புல்லரிப்பது முதல் திருவுருமாற்றம். மூன்றாம் திருவுருமாற்றம் நாம் உள்ளே உயர்வாக இருந்து, பணத்தை அன்னைமூலமாக மட்டும் சம்பாதித்து, உடல் பிரம்மச்சரியத்தை ஏற்று, பழக்கம் பண்புடையதாக இருந்து, பரநலத்தைக் கடந்த பரநலமே நம் நலம் என பயின்று, ஆதாயத்திலும் அன்பையே கண்டு, பக்குவம் பவித்திரமாகி நன்றி நிலையானால் அது சத்தியஜீவியத் திருவுருமாற்றம்.

பார்ட்னர் : கேட்க நன்றாக இருக்கிறது.

கணவர் : எனக்காக நீ செய்தால் தேவலை.

மனைவி : அனைவருக்காகவும் நாம் இதைச் செய்யவேண்டும். அனைவரும் கலைந்து சாப்பிடப் போகின்றனர். சாப்பாடு தேவாமிர்தமாக இருப்பதாகக் கூறிக்கொண்டு சாப்பிட்டனர். ஒருநாள் வேலைக்காரி வந்து தாயார் காலில் விழுந்து நமஸ்காரம் செய்து தம் கணவரும் வந்து நமஸ்காரம் செய்யவேண்டும் எனக் கேட்டு நமஸ்காரம் செய்தனர்.

வேலைக்காரி: அம்மா, இந்த மதர் சக்திவாய்ந்த தெய்வம் என்று பார்க்கிறேன்.

அவள் கணவர் : அம்மாவிடம் விஷயத்தைச் சொல்லு.

வேலைக்காரி: இந்தப் படம் வந்ததிலிருந்து ஆச்சரியமான காரியங்கள் நடக்கின்றன. நம்பவே முடியவில்லை.

அவள் கணவர் : தோப்பு விஷயத்தைச் சொல்லேன்.



book | by Dr. Radut