Skip to Content

MJ_July-2016_04.யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/31. சமர்ப்பணம் அழைப்பில் முடியும்

  • அழைப்பையும், சமர்ப்பணத்தையும் ஒன்றாகக் கருதுவது தவறல்ல. அவற்றின் வித்தியாசத்தை உணர்வது, அரசியலில் பிரதம மந்திரிக்கும், ஜனாதிபதிக்கும் உள்ள வேறுபாட்டை அறிவது போலாகும்.
  • சாப்பாடு சாப்பிடுகிறோம். காபி சாப்பிடுகிறோம், பழம் சாப்பிடுகிறோம் என்றால் தெலுங்கு பேசுபவர்கட்கு வேடிக்கையாக இருக்கும். உண்பன, திண்பன, பருகுவன என்ற வேறுபாடுண்டு.
  • பெரிய விஷயங்களில் தத்துவம், நடைமுறை என்ற வேறுபாடுண்டு.
  • பாமர மக்களுக்கு, காந்திஜி, நேரு இருவரும் தலைவர்கள். ஒரு கட்சி ஆட்சி செலுத்தினால் அரசியல் கட்சியும், பார்லிமெண்ட்டில் அதே கட்சியும் வேறுபடும். பிரதமரைத் தேர்ந்தெடுக்க அரசியல் கட்சிக்கு அதிகாரமில்லை. M.P. யான அக்கட்சி அங்கத்தினர்கட்கு மட்டும் அவ்வுரிமையுண்டு. விஷயம் முக்கியமானால், சிறிய வேறுபாட்டுக்கும் பெரும் மாறுதல் எழும்.
  • சாப்பாடு எனில் Carbohydrate, Protein மாவுச் சத்து, புரதச் சத்து எல்லாம் நல்லது. இரண்டும் ஒன்றே. டயாபெடிக்ஸ் வந்தால் ஒன்று உதவும். அடுத்தது தொந்தரவு செய்யும். Carbohydrates அரிசியிலும், கோதுமையிலும் உண்டு. வியாதியஸ்தனுக்கு அந்த வித்தியாசம் முக்கியம்.
  • பொதுவான பக்தனுக்குச் சமர்ப்பணம், அழைப்பு இரண்டும் ஒன்றே.
  • பக்தி தீவிரமாகி, யோகத்தில் உயர்ந்த கட்டங்களை எட்டினால் இரண்டும் வேறாகும்.
  • அன்பர், பக்தர், சாதகர் என்ற பாகுபாடுள்ள இடத்தில் பக்தர் எளியவர். எல்லாக் கடவுள்களையும் வணங்குவது போல் அன்னையை வணங்கி வாழ்க்கை விளக்கம் பெறுபவர். அன்பர் அன்னையை அவர் கோட்பாடுகள் மூலம் ஏற்று வாழ்வு மூலம் அன்னையை அதிகமாக அறிய முயல்பவர். சாதகருக்கு யோகம் முக்கியம். வாழ்வு யோகத்தின் பகுதி.
  • பக்தர் சமர்ப்பணத்தால் வாழ்க்கை பிரச்சனைகளைத் தீர்க்க முயல்பவர். அழைப்பு அவர் தியானத்திற்குரியது.
  • அன்பர் சமர்ப்பணத்தால் வாழ்வில் இதுவரை தீராத பிரச்சனைகளைச் (கர்ம பலனால் வந்தது என்ற பிரச்சனைகளை) சமர்ப்பணத்தால் தீர்க்க முயல்பவர்.
  • சாதகர் ஜீவனைச் சமர்ப்பணம் செய்து, அன்னையுடன் இரண்டறக் கலப்பதால், அதன் பலனாக வாழ்வு கர்மத்தின் பிடியினின்றும், வறுமையின் கொடுமையினின்றும் விலக வழி செய்பவர்.
  • மனிதன் வாழ்வதைத் தத்துவம் ஜட லோகம் என்று கூறும். பகவான் அதை மேல்மனம் எனக் கூறுகிறார்.
  • இதுவரை செய்த யோகங்களெல்லாம் மேல்மனத்தைச் சேர்ந்தவையே. அங்கு அகந்தை ஆட்சி செய்கிறது.
  • மேல்மனத்தின் அடியில் சூட்சுமமான உள்மனம் உண்டு.
  • அதையும் கடந்து சென்றால் அடிமனம் உண்டு. சைத்திய புருஷன் அங்குண்டு.
  • அடிமனம் பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளது. பாதாளமும், பரமாத்மாவும் இணையும் இடம் அது.
  • வாழ்வில் உத்தியோகஸ்தன், தொழில் செய்பவன் (employee, employer) என்றுண்டு. வேலை செய்பவனுடைய சாதனை, சம்பளம், வருமானம் அனைத்தும் அவன் வேலைக்குட்பட்டது. அது சம்பளம் மூலமாக மட்டும் வரும். முதலாளிக்கு இலாபம் உண்டு. அது கம்பெனியிலிருந்தும், மார்க்கெட்டிலிருந்தும் வரும். மரபு உத்தியோகம் போன்றது. ஸ்ரீ அரவிந்தம் சொந்தத் தொழில் செய்யும் முதலாளியைப் போன்றது.
  • மரபுக்கு மோட்சம் இலட்சியம். மோட்சம் என்பது தவசியின் ஆத்மா அவன் ஜீவனை விட்டுப் பிரிந்து பிரம்மத்தை அடைவது. அது மலைபோன்ற சாதனை.
  • பூரண யோகம் மேல்மனத்தினின்று, உள்மனம் வழி அடிமன சைத்திய புருஷனையடைந்து அங்கிருந்து உயர்ந்து பிரபஞ்சம் முழுவதும் பரவி, பிரபஞ்ச வாழ்வைத் திருவுருமாற்றுவது. இது இறைவனின் யோகம். சாதகன் பங்கு சரணாகதி மட்டுமே.
  • சமர்ப்பணம் வாழ்க்கையில் கடினம். வாழ்வைக் கடந்தால் சமர்ப்பணம் மறைந்து கரைந்து போகும். மேல்மனம் கருங்கல் போன்றது. சமர்ப்பணம் முழுமையாகி, தடை உடைந்து உள்மனம் போவது யோகத்தில் முதற்கட்டம். அது யோகப் பிரச்சனை. அந்நிலையில் சமர்ப்பணம் திறனிழந்து நிற்கும். திறனிழந்த சமர்ப்பணத்திற்கு உயிர் கொடுத்து தெம்பு கொடுத்து மீண்டும் வாழ வைப்பது அழைப்பு. அரசியல் தொண்டர்கட்கு பதவி வருவதில்லை. வந்தால் கட்சியில் தொண்டர் படையில் பதவி வரும். தொண்டன் கட்சியினின்று பதவிக்கு வருவது போன்றது அன்பன் சாதகனாவது, சமர்ப்பணம் அழைப்பாவது. அழைப்பை ஆரம்பிக்க முடியாது. ஆரம்பித்தால் நிறுத்தக் கூடாது, நிறுத்த முடியாது.
  • பிரார்த்தனை, சமர்ப்பணம், அழைப்பு, சரணாகதி, ஆர்வம், பக்தி என்பவை எல்லாம் ஒன்றே.
  • குப்பம், குறிச்சி, ஊர், புறம், பட்டி, தொட்டி, மங்கலம், வரம், ஆகியவை கிராமங்களைக் குறிக்கும் சொல்.
  • சமர்ப்பணம் எளிதில் பலிக்கும். அதனால் நாம் அதை ஆராய்வதில்லை.
  • நம் சுபாவம் இடம் கொடுக்காத இடத்தில் சமர்ப்பணம் பலிக்காது.
  • எலக்ஷனில் ஜெயிக்க சமர்ப்பணம் பேரளவு உதவும்.
    ‘நான்’ எலக்ஷனில் ஜெயிக்க வேண்டும் எனில் ‘நான்’ தோற்று விடும்.
    ‘நான்’ விலகாதவரை பலிக்காது, சமர்ப்பணம் நகராது.
  • ‘நான் செய்யும் சமர்ப்பணம் பலிக்கும்’ எனில் முடிவில் பெரு வெற்றி எழும்.
    முடிவில் நான் சமர்ப்பணத்துள் இருக்கும்வரை எதுவும் பலிக்காது. எதிரான பலன் வரும்.
  • ‘நான்’ என்பதற்குப் பல நிலைகள் உண்டு.
    முதல் நிலை என் வெற்றி.
    அதற்கும் முன்நிலை வெற்றி.
    அடுத்தாற்போல் வெற்றியை ‘நான்’ தேடுவது.
    என் சமர்ப்பணம் அடுத்தது.
    நான் சமர்ப்பணம் செய்து வெல்வேன் எனச் சவால் விடுவது.
    இதுபோல் பல கட்டங்கள் தாண்டிய நிலையில் எமன் ‘நானே இறைவன்’ என்று கூறி ஒளியில் கரைந்தான்.
  • நிலை மாறினால் பலனில் நிலை மாறும்.
  • மனையை நல்ல விலைக்கு விற்பதைவிட நான் விற்றுக் காட்டுகிறேன் என்பது ஒரு மனநிலை.
  • என் மருமகளை ‘நான்’ மகளாக நடத்துவேன் என்பதும் பாஸிட்டிவான ‘நான்’ முதலில் பெரு வெற்றியும் பிறகு முழுத்தோல்வியும் எழும்.
  • ‘நான்’ என்பதற்கு வாழ்விலுள்ள 10 அல்லது 100 கட்டம் தெரிந்ததே.
  • ‘நான்’ என்பதற்கு ego, self, Self, Purusha, Ishwara, Supreme, Psychic என்ற கோணத்தில் பல நூறு நிலைகள் உண்டு.
    விஷயத்தைப் பொறுத்து ‘நான்’ பலன் பெறும்.
  • எல்லா நிலைகளிலும் முதலில் பெரு வெற்றியும் முடிவில் முழுத் தோல்வியும் உண்டு.
  • பெண் வாழ்வில் பொதுவாகத் தாயாரும், ஏதோ ஒரு சமயம் தகப்பனாரும் தங்களை நிலைநிறுத்த முயன்று மகன், மகள் வாழ்வை நாசமாக்குவது இயல்பு.
  • மகள், மகன் சந்தோஷமாக இருப்பதைக் காணப் பொறுக்காத பெற்றோர் உண்டு.
  • மருமகன் மாமியாரை அதிகாரம் செய்வதில்லை. அரிபொருளாகச் செய்வதும் உண்டு.
    மருமகன் தன் பேச்சைக் கேட்க வேண்டும் என்ற மாமியார் அரிது என்றாலும் உண்டு.
    “என் மகள் சந்தோஷத்திற்காகத் தானே செய்கிறேன்’’ என்ற மாமியாருக்குத் தான் தன் மகள் வாழ்வில் தலையிடுவதே தவறு எனத் தோன்றுவதில்லை.
    தாயாருக்கு அந்த இடம் தரும் மகள் அறிவிலி.
  • சமர்ப்பணம் நகராத இடங்கள் பல. மேற்சொன்னவை சில.
  • ஒவ்வொரு கட்டத்திலும் செய்யக்கூடியவை ‘சமாதிக்குப் போ’ என்பது போல் ஒன்றுண்டு.
    கேட்பது, கேட்டறிந்ததை ஏற்பது, ஏற்றுச் செய்வது, பெறுவது, பெற மறுப்பது, கிராக்கி என ஒவ்வொன்றிற்கும் ஒரு பதிலுண்டு. இது அனைவரும் அறிந்ததே. செய்ய மறுப்பவர் சந்திக்கும் இடையூறுகளே சமர்ப்பணம் செயல்படத் தடை.
  • சமர்ப்பணம் தடையானால் அழைப்பு உதவும் என்பது ஒரு கட்டம்.
  • அன்பர் இதுபோல் தன் அனுபவத்தைச் சிந்தனை செய்து, பலித்த காரணம், தவறிய காரணமறிந்தால் சமர்ப்பணம் அதிகமாகப் புரியும்.
  • சமர்ப்பணம் பலிக்காத நேரமில்லை.
    சமர்ப்பணத்தையே தடையாக மாற்றாதவர் குறைவு.
    அழைப்பால் சமர்ப்பணத்தையும் சமர்ப்பணத்தால் அழைப்பையும் நகர்த்தலாம்.
  • அன்னை இவற்றைக் கடந்தவர்.

***********



book | by Dr. Radut