Skip to Content

MJ_July-2016_10.நெஞ்சுக்குரிய நினைவுகள்

நெஞ்சுக்குரிய நினைவுகள்

கர்மயோகி

II. மரபுக்கும், பூரண யோகத்திற்கும் உள்ள மாறுபாடுகள்

  1. மரபு தேடுவது மோட்சம்.
    பகவான் நாடுவது திருவுருமாற்றம்.
  2. மரபு உலகையும், வாழ்வையும், பெண்ணையும், செல்வத்தையும் துறந்து மோட்சத்தை நாட வேண்டுகிறது. பூரண யோகத்தில் வாழ்வு தெய்வீகமானது. உலகம் பவித்திரமானது. பெண் புனிதமானவள். செல்வம் யோகத்திற்கு அவசியமான அடிப்படை.
  3. உடல் மரபில் புறக்கணிக்கப்பட வேண்டும். இங்கு உடல் வெண்கலமாக தெய்வீக உடலாகத் திருவுருமாற்றப் பட வேண்டும். யோகத்தைப் பூர்த்தி செய்வது உடல்.
  4. மரபு மேலெழுந்து சென்று வானுலகை அடைகிறது. பாதாளத்தை விலக்குகிறது. இருள் இருளாகவே உலகில் நிலைக்கும். பூரணயோகம் பாதாளத்தை திருவுருமாற்றுகிறது.
  5. இறைவன் உலகைப் படைத்தார் என்பது மரபு. இறைவனே உலகமாக மாறினார் என்பது பூரண யோகம்.
  6. பிரம்மா (மனம்) உலகைப் படைத்தார் என்பது மரபு. சத்திய ஜீவியம் உலகைப் படைத்தது என்பது ஸ்ரீ அரவிந்தம்.
  7. ஜீவாத்மா பரமாத்மாவுள் கரையும் என்பது மரபு. ஜீவாத்மாவே பரமாத்மாவாகும் என்பது ஸ்ரீ அரவிந்தம்.
  8. மரபு வலியை விலக்க சந்தோஷத்தையும் மறுக்கிறது. பூரண யோகம் வலியை ஏற்று சந்தோஷமாகத் திருவுருமாற்றுகிறது.
  9. மரபு பாதாளத்தை விலக்குகிறது. ஸ்ரீ அரவிந்தம் பாதாளத்தையும், பரமாத்மாவையும் தன்னில் இணைத்து பாதாளத்தை ஒளிமயமாகத் திருவுருமாற்றுகிறது.
  10. காலம், காலத்தைக் கடந்தது என்ற இருநிலைகளை மரபு கூறுகிறது. அத்துடன் மூன்றாம் நிலைக் காலம் என்பதையும் ஸ்ரீ அரவிந்தம் சொல்கிறது.
  11. உலகில் நல்லது, கெட்டது என இருவகை என்பது மரபு. உலகில் நல்லது மட்டுமேயுண்டு. நம் பார்வையின் குறையால் பல கெட்டதாகக் காணப்படுகிறது என்பது ஸ்ரீ அரவிந்தம்.
  12. வாழ்வை மாயை என மரபு கூறுகிறது. வாழ்வு பூலோக சுவர்க்கம், அற்புதம் என்கிறது ஸ்ரீ அரவிந்தம்.
  13. மரபு அகந்தையை அனுமதிக்கிறது. அகந்தையையே சத் புருஷன் எனவும் நினைக்கிறது. ஸ்ரீ அரவிந்தம் அகந்தைக்கு இடமே வைக்கவில்லை. அகந்தை முழுமையாகக் கரைய வேண்டும் எனக் கூறுகிறது.
  14. மரபு சக்தியை ஜடம் எனும். ஸ்ரீ அரவிந்தம் சக்தி ஜீவனுடையது எனும்.
  15. உலகில் விரயம் உண்டு என்பது மரபு. உலகில் விரயமில்லை என்பது ஸ்ரீ அரவிந்தம்.
  16. உலகம் லீலை என்பது மரபு. ஆடுபவனும் அவனே. ஆட்டமும் அவனே. அரங்கமும் அவனே என்பது ஸ்ரீ அரவிந்தம்.
  17. மாயை என்பது இல்லாதது என்று மரபு கூறுகிறது. மாயை பிரம்மத்தின் சக்தி உலகை சிருஷ்டித்தது என்பது ஸ்ரீ அரவிந்தம்.
  18. மரபு - கடவுளும், உலகமும் பிரிந்து நிற்பவை. ஸ்ரீ அரவிந்தம் - கடவுளே உலகம், உலகமே கடவுள், ஒன்றானவை.
  19. மரபு - சிருஷ்டியில் 7 தத்துவங்கள் உள்ளன. சத், சித், ஆனந்தம், சத்திய ஜீவியம், மனம், வாழ்வு, உடல். ஸ்ரீ அரவிந்தம் - நாம் 8 தத்துவங்களை ஏற்கலாம். சைத்திய புருஷனையும் ஏற்போம்.
  20. மனத்திலிருந்து எழுந்து மேலே போய் பிரம்மத்தை அடைவது மோட்சம் - மரபு. ஸ்ரீ அரவிந்தம் - மனத்திலிருந்து கீழே போய் அடி மனத்தில் பாதாளத்தை அடைந்து எழுந்து மேலே போய் திருவுருமாறுவது சத்திய ஜீவியம்.
  21. ஆத்மா, புருஷா, ஈஸ்வரா என்பவை மூன்று - மரபு. அவை மூன்றும் ஒன்றே - ஸ்ரீ அரவிந்தம்.
  22. ஜீவாத்மா பரமாத்மாவை அடைந்து முடிகிறது - மரபு. ஜீவாத்மா பரமாத்மாவாகி இரண்டையும் பிரம்மம் முடிவாகத் தன்னுள் அடக்குகிறது - ஸ்ரீ அரவிந்தம்.
  23. ஞானம், அஞ்ஞானம் இருநிலைகள் - மரபு. ஞானம் அஞ்ஞானமாகத் தன்னை மாற்றியமைக்கிறது - ஸ்ரீ அரவிந்தம்.
  24. மரபு - அஞ்ஞானத்தைவிட ஞானம் உயர்ந்தது. ஸ்ரீ அரவிந்தம் - ஞானத்தைவிட அஞ்ஞானம் உயர்ந்தது.
  25. மரபு - அஞ்ஞானம் விலக்கப்பட வேண்டும். ஸ்ரீ அரவிந்தம் - அஞ்ஞானம் ஞானமாகத் திருவுருமாற வேண்டும்.
  26. மரபு - ஆண்டவன் உலகையும் நம்மையும் சிருஷ்டித்தான். நாம் மீண்டும் அவனை அடைய வேண்டும். அது மோட்சம். ஸ்ரீ அரவிந்தம் - ஆண்டவன் உலகமாக மாறினான். பரிணாமத்தால் மீண்டும் உலகம் இறைவனாக வேண்டும்.
  27. மரபு - வாழ்வு மையம் மனம். ஸ்ரீ அரவிந்தம் - சத்திய ஜீவியம் வாழ்வு மையம்.
  28. மரபு - பாவம் செய்து ஜீவன் வானுலகினின்று பூவுலகம் வந்து பாவத்தை நிவர்த்தி செய்து மீண்டும் வானுலகம் திரும்ப வேண்டும். ஸ்ரீ அரவிந்தம் - இறைவன் சிருஷ்டியில் ஜடமாகி, பரிணாமத்தால் வாழ்வு, மனமாகி, சத்திய ஜீவியமாகி, சச்சிதானந்தத்தின் ஆனந்தத்தைக் கடந்த பேரானந்தத்தை பெற வேண்டும்.
  29. மரபு - இது மனிதனுக்குரிய தவம். ஸ்ரீ அரவிந்தம் - பூரண யோகம் மனிதனால் செய்ய முடியாது. அவனுக்குரியது சரணாகதி. இது இறைவனுடைய யோகம்.

(தொடரும்)

**********

ஸ்ரீ அரவிந்த சுடர்

பயம் உள்ளவரை ஒருவன் விலங்காவான். பயம் நீங்கிய பிறகே ஒருவன் மனிதன் என்ற தகுதியைப் பெறுகிறான் என்கிறார் அன்னை. பூரண யோகம் செய்ய ஒருவன் மனிதன் என்ற தகுதியைப் பெற அவனுடல் காயகல்ப சித்தி பெற வேண்டும் என்பது பகவான் சித்தாந்தம். நாம் செயல்படும்பொழுது வெளிப்படுவது மனம். செயலின் ரூபம் ஆத்மாவை வெளிப்படுத்துவதே பரிணாமம். டார்வின் கூறிய பரிணாமம் உடலின் ரூபத்தின் பரிணாமம். பகவான் கூறும் பரிணாமம் ஆத்மா பரிணாம வளர்ச்சி பெற்று அதற்குரிய ரூபத்தை உடல் பெறுவது. மனித வாழ்வு இயற்கையின் நியதிக்குட்பட்டு வளர்ந்து, இயற்கையைக் கடந்து தெய்வீக வளர்ச்சி பெற வேண்டும். மேலும் பரிணாம வளர்ச்சிக்குரிய முக்கியஇரு அம்சங்களையும் பகவான் குறிப்பிடுகிறார்.

  1. சூட்சுமம் அதிகபட்சம் வளர வேண்டும்.
  2. சிக்கலான முடிச்சவிழ்ந்து அது சிறப்பான திறனாக வேண்டும்.

********



book | by Dr. Radut