Skip to Content

பகுதி 4

ஷேக்ஸ்பியர் ரிச்சர்ட் II இல் விவரிக்கிறார். அரசனைச் சிறைப்படுத்திவிட்டு, உரிமையில்லாதவன் பட்டம் ஏற்ற பின், சிறையிலுள்ள அரசன் தனக்குப் பயம் விளைவிப்பதாகவும், அவனை அழிக்க முடியாதா? என்று கேட்கிறான். புதிய அரசனின் ஆதரவு வேண்டுமென்று, ஒரு பெரிய மனிதன் அரசனைச் சிறையில் கொலை செய்து, செய்தியைப் புதிய அரசனிடம் கூறுகிறான். புதிய அரசன், துரோகம் செய்த உன்னைக் காண வெறுப்பாக இருக்கிறது, இறந்த அரசன் புண்ணியாத்மா என்கிறான். துரோகத்தால் பிறருக்குச் சேவை செய்தாலும் சேவையைப் பெறுபவரும் அவர் மீது வெறுப்படைவர்.

பதவியிலுள்ளவனுடைய ஆதரவை நன்றித் துரோகம் செய்து பெற விரும்பும் மனம், மனித மனத்தின் கடை நிலை. உயர்ந்த மனிதன் என்று பெயர் வாங்கியவரிடமும், உயர்ந்த இடத்திலுள்ளவரிடத்தும், தாழ்ந்தவரிடத்தும் காணப்படும் மனநிலை இது.

மனநிலையை மாற்ற வேண்டும் என்பது இங்குப் பயன் படாது. இந்த மனத்தையே அழித்து விட வேண்டும். மாற்றம் என்ற வேள்விக்கு இந்த மனம் தீயில் எரிய வேண்டிய நெய்.

11. இல்லாத உயர்வை நாடும் மனத்திற்குத் துரோகமும் கருவி.

படிப்பில்லை அதனால் கடைநிலை வேலை. அந்தஸ்தில்லை அதனால் செய்வது பால் வியாபாரம். ஒற்றுமை இல்லை அதனால் மரியாதையில்லை என்ற குடும்பம் எந்த உயர்வையும் எதிர்பார்ப்பதில்லை. போன தலைமுறையில் பெற்ற பெரிய வீடிருப்பதால், வீட்டிற்கேற்ப மரியாதையை மனம் நாடுகிறது. ஒருவர் பெரிய பட்டம் பெற்றதால், தாழ்ந்த ஜாதிப்பட்டதாரிக்கு மிக உயர்ந்த சம்பந்தம் வந்ததால், குடும்பம் வீட்டின் அளவுக்கும், முதல் சம்பந்தத்தின் நிலைக்கும் உரிய மரியாதையைக் கடைநிலை வேலையையும் பால்

வியாபாரத்தையும் மீறி எதிர்பார்க்கிறது. நடைமுறையில் இது கிடைக்கப்போவதில்லை, கிடைக்கவில்லை. நடைமுறையை மீறி, கற்பனை எதிர்பார்க்கிறது. இந்த மனநிலை எந்தத் தவற்றுக்கும் வித்து.

எதிர்பார்க்கும் அந்தஸ்திற்குரிய உயர்ந்த பழக்கம் இந்தச் சூழ்நிலையில் எழப் போவதில்லை. கடைநிலை ஊழியனுக்கும், பால் வியாபாரத்திற்கும் இழப்பதற்கொன்றுமில்லை. எனவே எதையும் நஷ்டமாகக் கருதும் மனநிலையில்லை. அந்த மனநிலையில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற நல்லதைச் செய்ய முன்வர மாட்டார்கள். ஒருவர் உயர்ந்த உறவின் நட்பின் சிறப்புக்கு ஆழ்ந்த துரோகத்தை மனதார விரும்பிச் செய்தார். கிடைத்தது அவர் எதிர்ப்பார்த்த அந்தஸ்தில்லை. எப்படிப்பட்ட நட்புக்குத் துரோகம் செய்தாரோ, அப்படிப்பட்ட மனைவி காலமானாள்.

எதைச் செய்தும், எதையும் பெறலாம் என்ற மனநிலை எதையும் இழக்கும் நிலைக்குக் கொண்டு வருமே தவிர, எதையும் பெற்றுத் தாராது. இவருக்கு உதவி செய்யும் மனப்பான்மையுண்டு. இவரிடம் உதவி பெறாதவர்களே இருக்க மாட்டார்கள். அல்ப மனத்தின் ஆழ்ந்த துரோகம் தெய்வக் குற்றமாகி, இவர் செய்த ஆயிரமாயிரம் உதவிகளையும் மீறி, எந்த நேரமும் உதவி தேவை என்ற வியாதியைக் கொடுத்து படுக்க வைத்தது.

  • மனமே மனிதன்.
  • மனத்தின் நிலை மாற்றத்தை நிர்ணயிக்கும்.
  • வாழ்வு என்பது பெரிய அரங்கம்.
  • தனி மனிதன் எதிரிட்டுப் போராடக் கூடியதன்று.
  • அதன் நியதிகளை மீறி, குறுக்கு வழியில் தேடினால், வழி கிடைக்காது.
  • நேரான வழி நெடுநாளைக்குதவும்.

கண்ணுக்குத் தெரியும் குறுக்கு வழியை விட்டு, வாழ்வு அளிக்கும் நேர் வழியை நாடுவது மாற்றம்.

12. வதந்தியை மட்டும் ரசிக்கும் ருசி, மனிதத் தன்மை இருந்தாலும் அழிக்கும்.

வதந்தியை மட்டும் ரசிக்கும் மனம், தொடர்ந்து வதந்தி வர வேண்டுமென்பதால், தான் பெற்றதை இரகஸ்யமாக வைத்துக் கொண்டது. இதனால் தொடர்ந்தும் வதந்தி வந்தது. வாழ்வு ரசித்தது. வதந்தி மனிதத் தன்மையான நம்பிக்கை, தைரியம், அனுதாபம் போன்ற உயர்ந்த குணங்களை அழிக்கும். எதிர்பாராத வகையில் வாழ்வு நிலை அளவு கடந்து உயர்ந்தபொழுது, அதை அனுபவிக்கும் திறனை வதந்தியை ரசிக்கும் மனப்பான்மை அழித்துவிட்டதால், பெரியது வந்த பொழுது பயம்தான் மிஞ்சியது. பொது மக்களிடையே perfect gentleman சிறப்பான நல்ல மனிதன் என்ற பெயர் வாங்கினாலும், மட்டமான மனநிலை உயர்வை அனுபவிக்கும் திறனை அழித்தது.

நாம் உயரக் கூடிய அளவுக்கு உயர்ந்த மனநிலை பெற்றால், உயர்வு உற்சாகம் தரும். உயர்வு வந்த பிறகாவது, தாழ்ந்த ருசியைக் கைவிட்டால், உயர்வு உயிர் பெறும்.

தாழ்ந்ததை ரசிக்கும் மனநிலை மாறி உயர்ந்ததை மட்டும் போற்றும் மனநிலையாவது முறை.

13. தனக்குப் பயன்படாதது, எவர்க்கும் தேவையில்லை.

விம்பிளிடன் டென்னீஸ் காட்சியை வீட்டில் அனைவரும் விரும்பிப் பார்க்கும்பொழுது, டென்னீஸ் புரியாத வேலைக்காரி, அது முடிந்தபிறகு, T.V.யில் சினிமா போடலாம் என, இது எப்பொழுது முடியும்? என்று கேட்கிறாள். தனக்கு டென்னீஸ் புரியாததால், அதை ரசிக்க முடியாது. அனைவரும்

ரசித்தாலும், சீக்கிரம் முடிந்தால் தேவலை என மனம் கூறுகிறது. எல்லோரும் ரசிப்பதால், அவர்கள் விரும்புவதை அவர்கள் மேலும் ரசிக்க வேண்டும் என்று மனம் கருதவில்லை.

இது சாதாரணச் சுயநலம். வேலைக்காரியின் சுயநலம் எவரையும் பாதிக்கப் போவதில்லை. ஆனால், அவள் சுயநலம் அவளைப் பாதிக்கும். வேலைக்காரியின் மனநிலை - சுயநலம் - நமக்கில்லையா? ஆயிரம் இடங்களில் இது நம்மிடம் காணப்படுகிறது. பெரிய விஷயங்களிலும், சிறிய விஷயங்களிலும் எழும் மனப்பான்மை இது. இது இல்லாதவர் சுயநலமில்லாதவர். உள்ளவர் சுயநலமி.

சுயநலமான மனநிலையை மாற்றிய பரநலமான மனப் போக்காவது மாற்றமாகும்.

14. இதைச் செய், அதைச் செய் என்று எவர் சொல்வதும் பிடிக்காது.

சமூகத்தில் இதுபோன்ற நிலை எழாமலிருக்க முடியாது. ஒருவர் வேலையிட்டு, பலர் செய்யும் நிலையே குடும்பத்தின் அமைப்பு, சமூகத்தின் அமைப்பு. எனக்குப் பிறர் வேலை இடுவது பிடிக்காது என்பது அறிவில்லாத மனநிலை. யார் யாரை வேலையிட வேண்டும் என்ற நியதியுண்டு. அங்கு பிடிக்காது என்று நினைப்பது தவறு. நம்மை வேலையிட உரிமை உள்ளவர் வேலையிட்டால் பிரியமாகச் செய்யவேண்டும். உரிமையில்லாதவர் வேலையிட்டால் செய்யக் கூடாது. இதுபோன்ற எண்ணமுடையவர் ஒருவர் நடை முறையில் எவர் வேலையிட்டாலும் செய்வார். எவரிடமும் முடியாது என்று சொல்ல இயலாதவர் என்பதால், எவர் வேலையிட்டாலும் பிடிக்காது என்பார். தனக்குக் குறை இருந்தால், அதை விலக்குதல் முறை. குறையை விலக்காமல், எனக்குப் பிடிக்காது என்பது இயலாத மனிதனின் மனநிலை. இயலாமையைப் போக்குவது முறை. பிடிக்காது என்பது முறையன்று.

மனம் இதுபோல் இருப்பதால், அர்த்தமற்றவை, இலட்சியமாகப் படும். மெஷினால் செய்த பொருளைவிட, கையால் செய்த பொருள் உயர்ந்தது என்றோர் அபிப்பிராயம். எப்படி என்று விளக்கமாக அறியும் நிலையில் இல்லை. ஏன் என்றும் தெரியவில்லை. தெரியாமல், புரியாமல், ஒரு விஷயத்தைப் போற்றும் மனநிலை மூட நம்பிக்கையை ஒத்ததாகும்.

அறிவுக்குப் பொருத்தமில்லாமல், அபிப்பிராயம் எழுந்தால், அர்த்தமற்ற இலட்சிய வாழ்வை ஆட்கொள்ளும் என்பதற்கு இலக்கணமாக ஒருவர் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டினார்.

வெறுப்பின் நிலையறிந்து, அதை விருப்பாக மாற்றுவது நல்லது.

15. எவருக்கும் பணியாத மனநிலை, எவரையும் உதவி கேட்கத் தயங்கவில்லை.

தாயார், தகப்பனார், கணவன், தம்பி, மகள், மகன் எவருடைய நல்ல சொல்லையும் ஏற்காத மனத்தில், என்னிஷ்டத்திற்கு இசையாதவர் எனக்குதவாது என்றவர், அகங்காரத்தை வாழ்வுக்கு அதிபதியாக்குகிறார். இவ்வளவு தலை நிமிர்ந்து நிற்பவர் தம் பெருமையைக் காப்பாற்றுவார் என எதிர்பார்ப்போம். வீட்டுக்கு வந்த விருந்தாளியை, உங்கள் நாட்டிற்கு என்னை அழைத்துப் போ என்பார். குடும்பத்துடன் தொடர்புள்ள எவரையும், வேறு எவரும் குடும்பத்தில் உதவி கேட்காதபொழுது, தாம் மட்டும் தயங்காமல் உதவி கேட்டபடியிருப்பார். பணியாத மனநிலை உயர்ந்ததன்று. கட்டுப்பாடு வேண்டிய இடத்தில் கட்டுப்படாத மனநிலை, இவரிடம் பணியாத மனநிலையாக இருந்தது. கட்டுப்படாததைக் கட்டுப்படுத்துவது பணிவின் ஓர் அம்சம்.

16. பிறரிடம் எதையும் கேட்க முடியாதவர், கொடுத்ததையும் கேட்கவில்லை.

எந்தப் பொருளையும், எந்த உதவியும் பிறரைக் கேட்காதவர் உயர்ந்தவர். மனையைக் கொடுத்தார் கேட்கவில்லை. சொத்தைக் கொடுத்தார், கேட்க முடியவில்லை, கேட்கவில்லை. உரிமையைக் கொடுத்தார், முழுச் செல்வத்தையும் கொடுத்தார். பெற்றவர் முதலாளி, கொடுத்தவர் மானேஜர். திருப்பிக் கொடுக்க வேண்டும் என அவரால் கேட்க முடியவில்லை. இதைவிட உயர்ந்த குணம் இல்லை. இம்மனநிலை, உயர்ந்த குணங்களால் மட்டும் உற்பத்தியாகி இருந்தால், அதற்கு மனத்திண்மையிருக்கும். மனம் வலிமையற்றதால், பெரிய நல்ல குணம் அதற்குப் போர்வையாக அமைந்தது. மனைவி நண்பரைப் பற்றிப் பெரிய அவதூற்றைப் பலரிடமும் இவர் முன்னிலையில் பேசுவது தவறு என இவருக்குப் படவில்லை. நண்பர் ஏமாற்றிவிட்டார் என்று அபாண்டமாகப் பேசுவது தவறு எனவும் தெரியவில்லை, தடுக்கவும் முடியவில்லை. வாங்கிய பொருளைக் கொடுக்காதவர் செய்யும் தவற்றைத் தடுக்க முடியாத இயலாமை, மனைவியின் அபாண்டப் பொய்யைத் தடுக்க முடியவில்லை. இது என்ன மனநிலை?

கொடுத்த பொருளைக் கேட்காவிட்டால், நண்பர் நம்மை நல்லவர் என நினைப்பார் என்பது இம்மனநிலை. மனைவியைத் தடுக்காவிட்டால், மனைவி தன்னை உயர்வாக நினைப்பாள் என்று மனம் எதிர்பார்க்கிறது. நடந்தது என்ன?

பொருளைப் பெற்றவர்கள், இவருக்குத் திருப்பிக் கேட்கும் திறனில்லை என்பதை அறிந்து இவரை மட்டமாக நினைத்தனர், பேசினர். ஒருவர் தாம் பெற்ற மனைக்குப் பதிலாக ஒரு டேப் ரெக்கார்ட் கொடுத்து, அதுவும் இதுவும் சரியாகிவிட்டது என்றார். 4 இலட்சத்திற்குக் கேட்டு 3க்கு முடித்தார். இயலாமையின் இயற்பெயர் ஏமாளி. மனைவியை அவள்

இஷ்டப்படிப் பேச அனுமதித்து, அவள் தன்னைப் புகழ்வாள் என எதிர்பார்த்தப் பொழுது, இவரிடம் பணம் இல்லை, வர வழியில்லை என்று கண்டவள், 6 பிள்ளைகள் பெற்று விட்டோம் என்பதையும் மறந்து, உன்னைப் பணக்காரன் என்று தானே நான் கட்டிக் கொண்டேன், இப்பொழுது உன்னிடம் பணமில்லையே, நான் ஏன் உனக்கு மனைவியாக இருக்க வேண்டும் என்றாள்.

  • நல்ல குணம் நல்லது.
  • நல்ல குணம் வலிமையாலும், வலிமையின்மையாலும எழலாம்.
  • வலுவற்ற நல்ல குணம், நல்லதாகாது.
  • உரிமையை விட்டுக் கொடுப்பது வலிமையாகாது, இயலாமையாகும்.
  • உரிமையைப் பாராட்டுவது வலிமை மட்டுமன்று, முறையாகும்.
  • எல்லை கடந்து பழகுவது சரியில்லை.
  • பிறர் எல்லை கடந்து பழகுவதை அனுமதிப்பது குற்றம்.
  • வலிமையற்றவன், குற்றத்தை அனுமதித்தால் நல்ல பெயர் வாராது.
  • குற்றத்தை அனுமதிப்பவன் குறையுடையவன்.
  • வலிமை நிறைவுடையது.
  • இயலாமையையும், குறையையும், வலிமையாகவும், நிறைவாகவும் மாற்றுவது மனித முன்னேற்றம்.

17. பெரிய மனிதனின் சின்ன புத்தி :

பெரிய மனதுள்ளவன் பெரிய மனிதன். பெரிய இடத்தில் உள்ளவனைப் பெரிய மனிதனாகக் கருதுகிறோம். ஒரு பெரிய மனிதர் மிகச் சிறிய மனிதர்களையும் தேடிப் போய்ப் பார்ப்பார். தாம் எளிமையாக இருப்பதாக நினைப்பார். எளிமையின் உயர்வுக்குப் போகும்படியான நடைமுறையைக்

கடைப்பிடிப்பார். தாம் பிறந்த ஊருக்கு அடிக்கடி வரும் சந்தர்ப்பங்கள் வந்தன. பால்ய நண்பர்கள் இருவர் எளிமையான நிலையிலிருந்தனர். பெரிய மனிதனை விரும்பினர். தங்களை வந்து பார்க்க வேண்டும் என விரும்பினர். அதுபோல் அவர்களைப் போய்ப் பார்க்கும் சந்தர்ப்பமும் வந்தது. போன இடங்களில், பெரிய மனிதராக நடந்து கொண்டார். திரும்பி வந்த பின், இவர்கள் என்னை வந்து சந்திக்க வேண்டும், நான் போய்ப் பார்ப்பது முறையில்லை என்றார். நண்பர்கட்கு இவர் மனம் தெரிந்தது. அவ்வளவுதான், சின்ன புத்தி என்றிருந்துவிட்டனர்.

இவருடன் படித்தவர் ஜனாதிபதியானார். உடன் வேலை செய்தவர் இம்மாநிலக் கவர்னரானார். கவர்னரான பின்னும் இவரைப் பற்றி விசாரித்தார். சந்திக்கப் பிரியப்பட்டார். இவருக்குச் செய்தி போயிற்று. இவர் மனம் இவருடன் பேசியது. கவர்னர், ஏதோ விசாரித்தார் எனில், நாம் அவரைப் பார்க்கப் போனால் நல்ல வரவேற்பிருக்குமா? விசாரித்தவரை சந்தோஷம். போய் அவமானப்படக் கூடாது என்று மனம் இவருக்கு அறிவுரை வழங்கியது. இவர் போகவில்லை.

அன்று பால்ய நண்பர்களைப் பெரிய மனதுடன் போய்ப் பார்த்திருந்தால், இன்று கவர்னர் உபசாரம் தவறியிருக்காது. அன்றைய செயல், இன்றைய பலனாக வாழ்க்கையில் மாறியது.

பெரிய இடத்தில் சின்ன புத்தி போய் பெருந்தன்மை வரவேண்டும்.

18. மோதிரக் கையால் குட்டுப் பெறுவது :

உன்னை அழிக்க உன் உதவி பெற்றுயர்ந்தவன் முயன்று வெற்றி பெற்று விழாக் கொண்டாடும்பொழுது, அழைப்பு இல்லாமல், அங்குப் போன மனம் துடிக்கிறது. உடல் தானே

எழுந்து போகிறது. உன் பெரும்பொருளை ஊர் உடமையாக்கிக் கொள்ளும்பொழுதும் எதிரியின் மட்டமான மனநிலை உனக்கு அழைப்பும் தரவில்லை. அங்கே மனம் துடித்தது. போயாகி விட்டது. மேடையில் உனக்கு வசைமாரி. அத்தனையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, எப்படியாவது எதிரியை நண்பனாக்கிக் கொள்ள மனம் திட்டமிடுகிறது.

இதற்கு என்ன பெயர்? மோதிரக் கையால் குட்டு பெறுவது என்று பெயரா? உடமை போன பின், உரிமை போன பின், வலிய மரியாதையை இழக்க, மானத்தைப் பறி கொடுக்க விழையும் மனநிலை என்ன? எப்படியும் என் காரியத்தைச் சாதிப்பேன், எப்படிச் சாதிப்பேன் என்பது முக்கியமில்லை. சாதிக்க முயல்வேன், முயன்று கொண்டேயிருப்பேன் என்பது மனநிலை. இது விடாமுயற்சி எனப்படுமா?

விடாமுயற்சி என்பதில் ஐயமில்லை. முயற்சியின் மூலமும், வழியும், உருவமும், பலனைக் கருதுபவை. பெறும் வழியைப் புறக்கணிப்பவை. (ends not means) வழியைப் புறக்கணித்து பலனை நாடுபவர்கள் சாதிப்பதில்லை. சாதித்தால், நிலைமை மாறிய நேரம், அனைத்தும் ஒரே நிமிஷத்தில் போய்விடும்.

பலனைக் கருதும் மனம் முறையைக் கருதவேண்டும்.

அதுவே மாற்றம்.

பிரம்மம் என்பதே இறைவன். சச்சிதானந்தம் மகுடமாயினும், பிரம்மத்தின் ஜோதிமயமான ஒரு பகுதியே. அதன் எதிரான அசத் என்பது பிரம்மத்தின் மறுபகுதி. சத் என்பதும், அசத் என்பதும் சேர்ந்த முழுமையே பிரம்மம் என்று உபநிஷதம் கூறுவதை ஸ்ரீ அரவிந்தர் அடிப்படையாகக் கொண்டார். இக்கருத்துக்கு விளக்கம் அதிகமாகக் கொடுக்கப்படுவதில்லை. பகவான் நீண்ட முழுமையான

விளக்கம் அளிக்கிறார். சுமார் 10, 12 கருத்துகளில் ஒன்றை மட்டும் எழுதுகிறேன். இறைவன் (பிரம்மம்) நல்லதை மட்டும் செய்வான். உயர்வுக்கு மட்டும் உரியவன் என்பவை பொதுவான எண்ணம். எல்லாக் குணங்களையும் உடையவன் இறைவன் என்று நாம் கூறுகிறோம். பகவான் நம் எண்ணத்தின் குறையைச் சுட்டிக் காட்டி, தத்துவ விளக்கம் கொடுக்கிறார். பிரம்மம் என்பது முழுமை. எல்லாக் குணங்களையும் உடைய இறைவன் குணங்களின் முழுமையைப் பெற்றிருக்கிறான்; ஆனால் இறைவன் முழுமையைப் பெற இது போதாது. எனவே உபநிஷதங்கள் கூறும் எந்தக் குணமும் இல்லாதவன் இறைவன் என்பதைக் கவனி. குணங்களாலான இறைவனை, குணங்களற்ற இறைவன் பூர்த்தி செய்கிறான். சகுணம், நிர்க்குணம் இரண்டும் சேர்ந்ததே பிரம்மம் என்று விளக்குகிறார். நல்லதும், கெட்டதும் சேர்ந்ததே பிரம்மம் என்று விளக்குகிறார். நல்லதும், கெட்டதும் சேர்ந்ததே முழுமை, என பத்துப் பன்னிரண்டு தலைப்புகளில் உபநிஷதக் கருத்தை எழுதுகிறார். நல்லதால் இறைவனை விளக்க முடியாத அம்சங்களை, கெட்டது விளக்கி பூர்த்தி செய்கிறது என்கிறார்.

தத்துவத்திலிருந்து நடைமுறைக்கு வருவோம். ஏற்கனவே ஓரளவு கட்டுரையின் முற்பகுதியில் சொல்லியதை மீண்டும் சொல்கிறேன்.

இறைவன் இலாபமாக நம்முன் எழுகிறான். அதை நாம் ஏற்று, அனுபவித்த பின், இறைவன் நாம் அவன் முழுமையை அறிய வேண்டும் என்பதற்காக, இலாபம் என்று உருவத்தைக் கரைத்து, நஷ்டம் என்ற உருவில் நம்முன் மீண்டும் எழுகிறான். இந்த ரூபத்திலும் இறைவனை ஏற்றுக்கொண்டால், இலாபம், நஷ்டம் என்ற இரு பகுதிகள் கொண்ட (work) தொழில் என்பதை நாம் அடைகிறோம். இலாபத்தை ஏற்ற

மனிதன், நஷ்டத்தை ஏற்க மறுக்கிறான். நஷ்டத்தையும் ஏற்காமல் இறைவனின் முழுமையை நாம் அடைய முடியாது. நஷ்டத்திருந்து நாம் விலகினால், நாம் நஷ்டத்தை ஏற்கும்வரை இறைவன் நஷ்டம் என்ற ரூபத்தில் நம்மைத் தொடர்கிறான். நஷ்டத்தையும் மனதால் ஏற்றுத் தொழிலை முழுமையாகப் பெறுவதே முறை.

வேறு வழியில்லை என்றோ, விட்டுக் கொடுப்பதற்கு ஆகவோ, அல்லது அறிவுடைமையாலோ எதிரான அம்சத்தை (நஷ்டத்தை) மனம் ஏற்றுக் கொண்டவுடன் சிரமம் மறைகிறது. நாம் உயருகிறோம். தொழில் சிறக்கிறது.

  • ஆசாரத்தை விட முடியாது என்பது ஆசாரம் புரியவில்லை என்றாகும்.
  • ஆசாரத்தின் சாரம் புரிந்தால், அதைவிட முடியும்.
  • ஆசாரத்தைப் புரியாமல் பின்பற்றினால் அதைவிட மனம் வாராது.
  • ஆசாரத்தை விட முடியும் என்பவனே ஆசாரத்தின் வாழ்வுக்குரியவன்.

தன் வாழ்நாளில் எதிர்பார்க்க முடியாத அந்தஸ்தை, தன் குடும்பம் இன்று பெறாத அந்தஸ்தை, தனக்கு முதலாளி அளிக்கப் பிரியப்படுவதை கேட்டும் அவனால் நம்ப முடியவில்லை. தினசரி 10 ரூபாய்க்கு வேலை செய்பவன். இரண்டு இலட்சத்தில் அவனுக்கு நல்லது நடக்கும் என நம்ப முடியவில்லை. அவன் நம்பாமல் ஏற்றுக் கொண்டான். அதை ஏற்பாடு செய்ய மானேஜருக்கு முதலாளி சீட்டனுப்பினார். சீட்டுப் போய்ச் சேர்ந்த நேரம் கரண்ட் போய்விட்டது. மனம் திகில் அடைந்தது. கரண்ட் போனது இந்த விஷயத்தில் நல்ல சகுனம் என்றார் முதலாளி. தகுதியை மீறிய வசதி வரும் பொழுது, மனம் ஏற்க முடியாமல் விரிசலடைகிறது. அதன் பிரதிபலிப்பாக சூழல் விரிசல் விடுகிறது. அதனால் கரண்ட் போகிறது என்றார். வந்தது போகக் கூடாது என்று கரண்ட்

வர வேண்டும் என அவன் செய்த பிரார்த்தனைக்கு, கரண்ட் 3 நிமிஷத்தில் வந்தது. மனத்தின் குறையகன்றுவிட்டது எனப் பொருள்.

கரண்ட் போவது அபசகுனம் என்ற உண்மையை ஏற்கும் மனம், இதற்கெதிரான உண்மையொன்றிருக்க வேண்டும் என்று தேடினால், கரண்ட் போவது இவ்விஷயத்தில் நல்ல சகுனம் என்று கண்டறியும்.

பகவான் எழுதிய எந்தக் கருத்திற்கும், எதிரான கருத்தையும் சொல்லியிருக்கிறார். அகந்தையை அழிக்க வேண்டும் என்றவர், இறைவனே (Supreme egoist) எதையும் தன்னிஷ்டப்படி நடக்க விரும்புபவன் என்றும் கூறியிருக்கிறார். பகவான் கருத்தைப் பூரணமாக அறிய, எந்தக் கருத்தையும் அதன் எதிரான கருத்துடன் இணைத்துப் பார்த்து இரண்டின் முழுமையை அறிய வேண்டும்.

நம்முள் உள்ள ஒவ்வொரு நல்ல குணத்திற்கும் எதிரான குணத்தை நம்முள் காண வேண்டும். அதேபோல், நம்முள் உள்ள ஒவ்வொரு கெட்ட குணத்திற்கும் எதிரான நல்ல குணத்தை நம்முள் காண வேண்டும். இரண்டும் சேர்ந்த முழுமையை அறிந்தால்தான், நாம் நம்மை முழுமையாக அறிகிறோம்.

நம்மை நல்லவர் என அறிந்து சந்தோஷப்படுவதோ, கெட்டவர் என அறிந்து கவலைப்படுவதோ மனித அறிவு, மனம் பெற்ற அறிவு, பகுதியானது. நல்லவர் தெரிந்தால், கெட்டவரைக் காண வேண்டும்; கெட்டவர் தெரிந்தால் நல்லவராகக் காண வேண்டும். இரண்டும் தெரியும்பொழுது முழு மனிதனைக் காண்கிறோம்.

ஒரு பகுதியை அறிவதை விட்டு முழு மனிதனை அறிய வேண்டும்.

வறுமையின் பிறப்பிடத்தில் திறமையைக் கண்டு, அதன் மூலம் வறுமையைப் பூர்த்தி செய்ததில் ஏழ்மைக்குரிய இடம், அதிகச் செல்வமுள்ள இடமாயிற்று. 15 வயதுவரை பொம்மை வைத்து விளையாடிய பையனை, குடும்பம், வளர்ச்சியற்றவன் என்று கைவிட்டபொழுது, அவன் தனக்குப் புரிந்தவற்றை அதிபுத்திசாலித்தனமாக எடுத்துரைக்கும் திறமையுள்ளவன் என்று கண்டதால், சர்வதேச அரங்கத்தில் பிரகாசமானான். ஆங்கிலத்தில் கையெழுத்து மட்டும் போடத் தெரிந்தவனுக்குத் தமிழில் உண்டான பாண்டியத்தியத்தால் ஆங்கிலப்பட்டம் பெற்றுத் தர முடிந்தது. ஊரில் எவரும் பழக விரும்பாமல் ஒதுக்கப்பட்டவரிடம் பணிவு சிறந்திருந்ததால், அதன் மூலம் நாட்டில் அனைவரும் அவரைப் போற்றும் நிலைக்கு உயர்த்த முடிந்தது.

சர்வதேச அரங்கில் தலைமை வகித்த பின், கேவலமான தவறு செய்யும் மனம் உடையவருக்கு, பிறர் நோக்கை அறியும் திறன் இருப்பதைக் கண்டு, அருள் அதன் மூலம் செயல்பட்டு உலகப் பரிசைப் பெற்றுத் தந்தது.

மனிதச் சுபாவத்தின் பெருமைகளைப் பேசும் சந்தர்ப்பங்களை நமக்களித்ததை விட, சிறுமைகளைப் பேசும் சந்தர்ப்பங்களையே அதிகமாக வாழ்வு அளித்துள்ளது. நான் இவற்றைப் பற்றி, எழுத முன் வருவதில்லை. மாற்றம் என்ற முயற்சியில் இது இடம் பெறுவதால் நான் முக்கியமானவற்றை எழுதுகிறேன். மற்றவர் சிறுமையை அறிதல் நமக்குப் பயன்படாது. நம் சிறுமையை அறிவது மாற்றத்திற்குப் பயன்படும். பிறரைக் கொண்டு நம்மை அறியலாம் என்பதனால் இதை எழுதுகிறேன்.

வயிற்றெரிச்சல் :

பிறர் நமக்குச் செய்த கொடுமை நினைத்து வயிறு எரிவதுண்டு. தப்புச் செய்தவனுக்குத் தண்டனை வந்தால், அவனுக்கு வயிற்றெரிச்சல் வருகிறது என்பது வழக்கு. தன் மாடு அடுத்தவர் கொல்லையில் மேய்ந்ததால், அதைப் பட்டியில் அடைத்தார்கள். 3 ரூபாய் அபராதம் கட்டி மாட்டுக்குச் சொந்தகாரன் மாட்டைப் பிடித்து வந்தான். எனக்கு 3 ரூபாய் செலவு வைத்துவிட்டான் பாவி, அவன் கொல்லையில் 10 மாடுகள் போய் அழித்தால்தான் என் வயிற்றெரிச்சல் அடங்கும் என்று அன்றிரவு 10 மாடுகளைக் கொல்லையில் விட்டு மேய்த்தான். தனக்கு 3 ரூபாய் நஷ்டம் வந்தது எதனால், தான் செய்த தவற்றால், அதுவும் வேண்டுமென்றே செய்த குற்றத்தால். இவனுக்கு 3 ரூபாய் நஷ்டம். 30 ரூபாய் பயிர் அவர்கட்கு நஷ்டம். வெளியூர் மனிதரானதாலும், சாந்தமானவர்களானதாலும் 3 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதே ஊர்க்காரன் கொல்லைக்கு மாடு போனால், மாட்டின் கால் நரம்பை வெட்டுவது அந்த ஊர் வழக்கம். அத்துடன் மாடே வீணாகும். தன்னால் முடியுமானால், எதிரிக்கு எந்த நஷ்டத்தையும் கொடுப்பேன். தண்டனை கொடுத்தால் வயிறு எரியும் என்பது அவன் வாதம்.

அந்த ஆண்டு அவனுக்குப் பயிரில் 3000 ரூபாய் நஷ்டம். அதைச் சரி செய்த முயற்சியால் 30,000 ரூபாய் செலவு. நாம் தவறு செய்து, அதற்குப் பிறர் தண்டனை கொடுத்தால் வயிற்றெரிச்சல் வாராதவர் மனிதரில் தெய்வம். வந்தால், அது நம் கவனத்திற்குரியது. மாற்றத்திற்குரிய இடம் அது.

நன்றியறிதல் :

வாழ வழியின்றிருந்தவருக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து, வழியை இரு மடங்காகவும், நான்கு மடங்காகவுமாக்கி,

அதையும் பின்னால் இரட்டித்தபொழுது செய்தவரை, இளிச்சவாயன்போல் எனக்கு உதவுகிறீர்கள் என்பது ஒருவருடைய நன்றியறிதல். நான் முன்னுக்கு வர வேண்டும் என முனைந்து நிற்பவர் நீங்கள் என்று கூறுவதை நன்றி தெரிவிப்பதாக நினைப்பவர், தம் முன்னேற்றத்திற்காகப் பிறர் உழைப்பது கடமை என்று நினைக்கிறார் என்றவர் அறியவில்லை. என்னை உயர்த்தி விட்டீர்கள் என்று மற்றொருவர் அதே நினைவில் கூறுவது அவர் கணக்கில் நன்றி செலுத்தியதாகும். நன்றியுணர்வாக இவை இருந்திருந்தால், பின்னர் உறவும், வாழ்வும் அதற்கேற்ப அமைந்திருக்கும். உலகம் தனக்குச் சேவை செய்ய இருக்கிறது. சேவையைப் பெறுவது நம் கடமை என்ற கருத்தில் வாழ்பவர்களுடைய சொற்கள் இவை.

மனைவியிடம் தறுதலையான கணவன் பேசும்பொழுது, நீ பொறாமை பிடித்தவள், உனக்கு மட்டுமே நான் உரிமை என்ற சிறிய புத்தி என்பதைக் கணவன் பெருமையாக நினைத்தால், கணவனின் பிறப்பு வளர்ப்பைப் பற்றி நாம் என்ன நினைப்பது? அதையே கணவனிடம் சொல்லும் மனைவி எங்கு பிறந்து எப்படி வளர்ந்திருப்பாள்? இதுபோன்ற மனநிலைகளை நாம் கனவிலும் கருத முடியுமா? இவையிருப்பது உண்மை.

எதுவும் ஜடத்தில் பலித்த பின்னரே பூர்த்தியாகிறது என்கிறார் பகவான். புத்தகத்தைப் பிழையில்லாமல் அச்சிடுவது நம் நாட்டில் இதுவரை நடக்காத காரியம். இதைச் செய்வது அச்சகத்தின் கடமை. அவர்கள் தங்கள் கடமையைக் குறையோடு நிறைவேற்றுவதைக் குறை என நினைக்கவில்லை. நாம் அதை ஏற்றுக் கொண்டால், குறையுள்ள சூழலைச் சேர்ந்தவர்களாவோம். ஏற்றுக் கொள்ளாவிட்டால், அச்சகம் செய்யும் வேலையை நாமே பொறுப்பேற்றுச் செய்ய வேண்டியிருக்கும். இதை மேற்கொள்ள நான் முடிவு செய்த

பொழுது, இரண்டு முக்கிய விஷயங்கள் நடந்தன. தமிழ்நாட்டு அன்பர்கள் தங்க இடம் வேண்டும் என்பதற்காக மனை வாங்கும் முயற்சி 2 ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்தது. இந்த முடிவு நான் எடுத்த அடுத்த ஒரு மணி நேரத்தில் மனை விலை படிந்து விட்டதாகச் செய்தி வந்தது. 10 வருடங்களுக்கு மேலாக சொஸைட்டி மத்திய சர்க்காரால் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனமாக இருக்கிறது. அதனால் சொஸைட்டியில் ஆராய்ச்சி செய்பவர் ஒரு பல்கலைக்கழகம் மூலம் ஆராய்ச்சி பட்டங்கள் பெறும் அமைப்புண்டு. இதுவரை அதற்குரிய மாணவர்களோ, ஏற்பாடோ இல்லை. சென்ற ஆண்டில் இரு மாணவர்கள் வந்தனர். அவர்களை ஒரு பல்கலைக்கழகம் ஏற்கச் செய்த ஏற்பாடுகள் ஓராண்டாகக் குறைவாக இருந்தன. நான் புத்தகத்தைப் பற்றிய முடிவு எடுத்த அன்றே சொஸைட்டியின் தல் மாணவனை ஒரு பல்கலைக்கழகம் ஏற்றதாக தகவல் வந்தது. இது சொஸைட்டியின் நடைமுறையில் ஒரு முக்கியக் கட்டம்.

பிழையின்றி அச்சிடுவது, செயல் உடலில் பூர்த்தியாவது. உடலால் பூர்த்தி செய்யப்பட்ட எந்தக் காரியமும் உடனே பலிக்கும். நான் கூறும் மாற்றம் மனமாற்றம். அதற்குரிய முயற்சியை அன்பர் எடுத்தால் போதும் என்பதே இக்கட்டுரை. இம்மாற்றம் உடல் பூர்த்தி பெற்றால், பலன் 24 மணி தாமதமாகாது. அதே க்ஷணம் பலன் ஏற்படும்.

அன்னையே எல்லாம், எனக்குப் புத்துயிர் அளித்தவர் அன்னை, சாகப் பிழைக்க என நெடுநாளிருந்த எனக்கு ஆரோக்கியமும், வாழ்வும் அளித்ததும் அன்னை. நான் சிறு வயதிலிருந்து எதையோ தேடுவதை அறிவேன். எது என்று அறியேன். அதனால் பரம்பரையாக வந்து நம்மை ஆட்கொண்ட விரதம், நோன்பு, பூஜை ஆகியவற்றை ஆழ்ந்து பற்றியிருந்தேன். அவற்றை அப்படிப் பற்றியதால்தான் அவை

இன்று அன்னையிடம் என்னை அழைத்து வந்தனவா, அவையே என் தேடலுக்குத் தடையாக இருந்தனவா எனவும் தெரியவில்லை. இதுநாள்வரை நான் தேடியது அன்னையிடம் கிடைத்துவிட்டது என்று தெரிகிறது. இனி எனக்கு வேலையில்லை. குடும்பமில்லை. எதுவுமில்லை. நான் போகிறேன். எந்த நிமிஷமும் போய்விடுவேன். அன்னையின்றி எனக்கு இனி எதுவும் இல்லை. நான் தேடியது கிடைத்துவிட்டது என்று நினைப்பவர் உயர்ந்த பக்தர். அவரது நம்பிக்கை டாக்டரால் முடியாத வியாதியைக் குணப்படுத்தியது, இந்தியருக்கு அமெரிக்க வருமானம் பெற்றுத் தரும் சக்தி வாய்ந்தது, நாட்டில் முதன்மையானவனை நம்மை நாடி வரச் செய்தது, பொருளுக்கு உடையவரே அறிவீனத்தாலும், அகங்காரத்தாலும் பொருளை அழிப்பதில் ஈடுபட்ட பொழுது, அதை மீறிப் பொருளைக் காத்தது, சின்ன புத்தி பொறாமையால் பொங்கி தன்னையும், தன் குடும்பத்தையும் அழிக்கும் நிலைக்கு வந்தபொழுது, அதனால் உயிர் பிரியும் தருணத்தில் பிரியும் உயிரை நல்ல எண்ணத்தால் காப்பாற்றியது, அன்னையின் அருள் உலகில் உச்சகட்ட பூர்த்தி பெற ஏற்படுத்திய கருவியைப் பொறாமை அழித்து, தன்னம்பிக்கையை இழக்க வைத்தபொழுது, அதைத் தடுத்து கருவிக்கு உயிர் அளித்து, அன்னை அவரில் பூர்த்தியாகும்படி அவர் வாழ்வைத் திருப்பியது.

இவ்வளவும் செய்தவர் ஆத்ம சோதனையை ஆரம்பித்த பொழுது, முதல் அவருக்குத் தோன்றியது, என்னால் அன்னையை முக்கிய விஷயங்களில் நம்ப முடியவில்லை. எனக்கு அந்த நம்பிக்கையில்லை என்று புரிந்தது. அதை ஒத்துக் கொண்டார். ஒத்துக் கொள்ளும் அளவுக்கு உண்மையும், புரியும் அளவுக்குத் தெளிவும் இருந்தது. அந்த நேரம் புனிதமான நேரம்.

அந்த மனமாற்றம் நான் சொல்லும் மாற்றம். நம்பிக்கை என்பது பொதுவாகக் குறைவு. தன்னம்பிக்கையுள்ளவர் குறைவு. அன்னை தன்னம்பிக்கை மூலம் அதிகமாகச் செயல்பட முடியும். தெய்வபக்தி என்பது தன்னம்பிக்கையை விட உயர்ந்தது. தெய்வ நம்பிக்கை தெய்வ பக்தியிலிருந்து எழுவது. இந்த நம்பிக்கையின் பல உருவங்களை நாம் காணலாம். இதன் உயர்ந்த நிலை குழந்தை தாயை நம்புவது போல் நாம் அன்னையை நம்புவதாகும். ஆபத்து, பெரிய விஷயம் போன்ற இடங்களில் வெளிப்படுவது தெய்வ நம்பிக்கை. நாம் பொதுவாக நம்பிக்கையால் நடந்தது என்பவை மிகக் குறைவு. எல்லா முயற்சிகளும் பயனற்று, கைவிட்டுவிட்ட பின் தானே நடப்பதை தெய்வச் செயல் என்பது நம்பிக்கையில்லை என்பதை மனம் அறிந்த பிறகு (tha faith tises negatively), அதை ஏற்றுக் கொள்ளும் உண்மைக்குத் (sincerity) திரைமறைவில் உள்ள நம்பிக்கையால் நடப்பது. எதுவும் நடக்காது என்று வாய்விட்டுச் சொன்னபின், எல்லாம் போய்விடும் என மனம் நினைப்பதில்லை. அப்படி நினைத்தால் நம்பிக்கையில்லை எனப் பொருள். எதுவும் நடக்காததுதான், அதனால் எல்லாம் போய்விடப் போகிறதா என ஒரு குரல் உள்ளிருந்து எழுகிறது. அதனுள் ஒரு நம்பிக்கைத் துளி மறைந்துள்ளதை இல்லை என்பதன் நம்பிக்கை (negative faith) என்றேன்.

மனிதன் தன்னை நம்புவான். அதையே தெய்வ நம்பிக்கை என நினைப்பான். தான் தெய்வத்தை நம்புவதால் அது தெய்வ நம்பிக்கை என நினைப்பான். தான் நம்புவதால் எழும் நம்பிக்கை தன் நம்பிக்கை என அறிவதில்லை. தன்னை நம்புவதுபோல் தன்னை விலக்கி அங்குத் தெய்வத்தை நம்புவது தெய்வ நம்பிக்கை. ஒரு திருமணம் முடிந்தபொழுது, வெளிநாடு போய் திரும்பி வந்தபொழுது, பெரிய மெஜாரிட்டியில் எலக்ஷனில் வென்றபொழுது, இது நான் செய்ததில்லை, என் திறமையால் நடந்ததில்லை, என்

அந்தஸ்தால் நடந்ததில்லை, அன்னையால் நடந்தது என்று வாய்விட்டுச் சொல்லும்பொழுது சொல் உணர்விலிருந்து எழுந்தால், திருமணத்தில் கரண்ட் நிற்காமலிருந்தது என்னாலா? அன்னையாலல்லவா? விமானம் பழுதின்றி பறந்தது தெய்வத்தாலல்லவா? என்பது எண்ணத்தில் தோன்றினால், உடல் புல்லரித்தால், ஜீவனின் பகுதிகள் தெய்வத்தை நம்புகின்றன எனலாம். அதுபோன்ற பூரணத் தெய்வ நம்பிக்கை எனக்கில்லை என அறிந்தவர் அதை நாடுவதே நம்பிக்கையின் ஆரம்பச் சின்னம். அது தண்ணீரை வாட்டத்திற்கு எதிராகப் போகச் சொல்லும்.

தன்னம்பிக்கை தவறுவதுண்டு. தெய்வ நம்பிக்கை தவறாது. சந்தேகம் மனதில் எழுந்தால் நம்பிக்கை தெய்வத்தின் மீதில்லை, நம் மீதுள்ளது எனப் பெயர். ஞானத்தைத் தேடும் ஞானியைப் பற்றியதும் இதுவே கருத்து. ஞானம் வேண்டும் என பிரார்த்திப்பது உயர்ந்தது. ஞானியாகும் முறை அது. ஞானத்தைத் தேடினால், ஞானம் சித்திக்கும். ஆனால், இதன் மூலம் ஞானியாகலாம், நம்பிக்கை தெய்வத்தின் மீதுள்ளது என்றாகாது. தெய்வ நம்பிக்கையுள்ளவன் ஞானத்தைக் கேட்க மாட்டான். கேட்டால் நம்பிக்கையில்லை எனப் பொருள். சிந்தனை மணிகளில் பகவான், நான் ஞானியில்லை என்கிறார். ஞானத்தையும் கேட்காத அளவுக்கு மனநிலை இருந்தால் அதற்குக் கேட்கும் மனநிலையேயில்லாதவர் எனப் பொருள். அது தெய்வ நம்பிக்கைக்கு அடையாளம். அவருக்கு, பகவான் சித்திப்பார்.

  • தவறுவது தன்னம்பிக்கை.
  • தெய்வ நம்பிக்கை தவறுவதில்லை.
  • ஞானிக்கு நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

  • ஞானத்தைத் தேடுபவன் ஞானி.
  • ஞானத்தைக் கேட்டால் ஞானி சித்திக்கும்.
  • ஞானத்தையும் கேட்க முடியாவிட்டால் அது தெய்வ
  • நம்பிக்கை எனப் பொருள்.
  • ஞானத்தைக் கேட்காவிட்டால், பகவான் சித்ததிப்பார்.
  • கேட்டது பலிப்பது பிரார்த்தனை.
  • கேட்காதது பலிப்பது நம்பிக்கை.
  • கேட்க முடியாவிட்டால் செயல்படுவது அருள்.

எதையும் அனுபவித்தால், எல்லாம் கூடிவரும் : கூடி வரும் காரியங்களின் பலனை அனுபவிக்கிறோம். அனுபவிப்பதற்காக, காரியங்களைச் செய்து பலனை எதிர்பார்க்கிறோம்.

கூடிவந்தால் அனுபவிக்கலாம்

என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். இதில் விளக்கம் தேவைப்பட்டதில்லை.

அனுபவித்தால் கூடி வரும்,

என்பதை அதே அளவு ஏற்றுக் கொள்வது சிரமம். அனுபவித்தால் காரியம் கெட்டு விடும் என்பது அனுபவம். இறைவன் புதிய ஆனந்தத்தை அனுபவிக்கவே உலகைச் சிருஷ்டித்தான். அவன் ஆனந்தத்திலேயே உலகம் சிருஷ்டிக்கப்பட்டது. அனுபவம் எல்லா நிலைகளிலும் உள்ளது. சௌகரியத்தை அனுபவிப்பது, சந்தோஷத்தை அனுபவிப்பது, புரிந்து கொண்டு அனுபவிப்பது, சும்மா இருந்து சுகம் பெறுவது எனப் பல்வேறு அனுபவங்கள் உண்டு. மற்ற எல்லா விஷயங்களைப் போலவே, அனுபவிப்பதையும்

கோட்டுக்கு மேலிருந்து அனுபவிப்பது, கீழிருந்து அனுபவிப்பது என இரண்டாகப் பிரிக்கலாம். ஒரே காரியத்தைச் சிறிய முறையிலும், பெரிய முறைகளிலும் செய்யலாம். சிறிய முறையில் செய்வதை, கோட்டுக்குக் கீழிருந்து எனவும், பெரிய முறையை மேலிருந்து எனவும் கூறுகிறேன். நாம் இங்கு அனுபவிப்பது என்பது பெரிய முறையில் அனுபவிப்பதாகும்.

சாப்பாடு, வாழும் வசதி, மனித உறவு, விளையாட்டு என உள்ள இடங்களில் எல்லாம் காரியம் கூடி வருவதும், அனுபவிப்பதும் நம் வாழ்க்கையாகும். எத்தனை ஆண்டு பழகினாலும், நல்ல முறையில் பழகினாலும், நட்பில், உறவில் இடைவெளி எப்பொழுதும் உண்டு. அது  1%லிருந்து 20% வரை உயர்ந்த உறவுகளில் உண்டு. இடைவெளியில்லாமல் இரண்டறக் கலந்து விட்டதாக நினைத்துப் பெருமைப்படும் உறவுகளிலும், மனம் அடுத்தவர் எண்ணத்தை அவருக்காக ஏற்கும், புரிந்து, விரும்பி மலர்ந்து ஏற்காத நேரமுண்டு. எனக்கு அவரே உயிர் என்ற இடத்திலும் அவர் படுக்கையாகப் படுத்து வேதனைப்படும்பொழுது, மனம் குமுறும் நேரம் உண்டு. இல்லாத நேரமுண்டு. உடலும், ஜீவனற்று சப் என்றிருப்பதுண்டு. அவற்றைக் கருதினால் இடைவெளி 10% வரும். அதுபோன்ற ஓர் உறவில் இருவரும் மனத்தால் நெருங்கி, சேவையில் ஈடுபட முனைந்தார்கள். உயிர் போனாலும், உங்கள் உயிர்தானே என்னுயிரில்லையே என்று நினைத்த மனமே பாம்பு கடித்த நேரத்தில் அவரை நம்பக் கூடியதாகும். மனத்தால் சேவைக்காக நெருங்கி வர நினைத்த நேரம், எழுந்த உணர்வு, மனத்தைக் கடந்து, உணர்வை நெகிழ வைத்து, உடலையும் தொட்டு புல்லரிக்கச் செய்தது. புல்லரித்தது உண்மையானாலும், புல்லரித்த உடல் மயிரிழையே எழுந்தது. முழுமையாக அன்று. அனுபவம் அளவுகடந்து பலித்தது. அன்றைய தினம் பல ஆண்டு

உழைப்பின் பலன் பூர்த்தியாயிற்று. அது அச்சுக்கு அன்றே போயிற்று. எதிர்பார்த்திருந்த சர்க்கார் ஆர்டர் வந்தது. பாங்கில் பலன் கிடைத்தது. நல்லெண்ணம் மிகுந்த மனதை நிரப்பி, உடலை எட்டியபொழுது, உயிர் எழுந்து உபரியாகிறது. அச்சுக்குப் போனதில் கற்பனைக்கெட்டாத முடிவுகளை, அதற்கு எதிரான கருத்துள்ளவர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். ஒரு கிராமத்திற்குக் கடன் கொடுப்பதை எதிர்த்தவர், இந்தியாவில் எல்லாக் கிராமங்களுக்கும் கடன் கொடுக்க வேண்டும் என்பதை எதிர்ப்புத் தெரிவிக்காமல் ஏற்றார். இது அத்துறையில் ஓர் அற்புதம்.

மனம் ஒத்தவர் சேவையில் இணைந்தால், அதனால் மனம் மேலும் மலர்ந்து சேர்ந்தால், அதை உணர்வும், உடலும் ஆமோதித்து ஆனந்தப்படும் நேரம் பொதுச் சேவை உயர்ந்து கற்பனையைத் தாண்டிப் பலிக்கிறது.

இறைவன் உலகில் ஒவ்வொரு செயலையும் அனுபவிக்கிறான். மனிதன் இறைவனாகும் வழி அது. உலகில் ஒவ்வொரு செயலையும் அனுபவிக்கும் மனநிலையை மனிதன் அடைந்த நேரம் அவன் இறைவனாகிறான்.

காரியம் கூடி வர, உயர்ந்த முறையில் வாழ்வை அனுபவிக்க வேண்டும்.

வாழ்வை மலர்ந்து அனுபவித்து ஆனந்தப்பட்டால் வெற்றி மட்டுமே எட்டும்.

நாம் செய்யும் வேலைகளை ஆனந்தம், அனுபவம் என்று பார்த்தால் ஒரு நாளில் 60, 70 செயல்களில், 4, 5 செயல்களிலேயே ஆனந்தமும், அனுபவமும் இருக்கும். மற்றவை அவசியமானவை, தவிர்க்க முடியாதவை, கடமை, நாலு பேருக்காகச் செய்வது, ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகச் செய்வது, பிடிக்காவிட்டாலும் செய்ய

வேண்டியிருப்பது, தலைவிதியே எனச் செய்வது, கழுத்தை வெட்டிக் கொள்வதைப் போன்ற உணர்வோடு நிர்ப்பந்தத்தால் செய்வது என இருக்கும். இவற்றிற்கெல்லாம் விளக்கம் தேவையில்லை. இத்தனையையும் ஆனந்த அனுபவமாக மாற்றுவது மாற்றம். ஆரம்பத்திலேயே அது முடியாவிட்டால், அவற்றை ஒரு படி உயர்த்த வேண்டும். அதற்குரிய பலன் இருக்கும். அத்தனையும் ஆனந்த அனுபவமாக வேண்டும் என்ற நோக்கத்துடன், எல்லாக் காரியங்களையும் ஒரு படி உயர்த்தினால், நாம் மாற்றத்தின் பாதைக்கு வருவோம். சில உதாரணங்களால் ஓரிரு நிலைகளை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்.

தலைவிதியே என்று செய்வதை அவசியமானது எனப் புரிந்து செய்தால், நிர்ப்பந்தத்தால் செய்வதைக் கடமையாகச் செய்தால், அவசியமானதை ஆர்வமாகச் செய்தால், ஆர்வமாகச் செய்வதில் ஆனந்தம் கண்டால், நாம் நம் புதிய பாதைக்கு வருகிறோம். எப்படி இதைச் சாதிப்பது என்று கேள்வி வரும்.

காலையில் எழுந்து பாத்திரம் தேய்த்து, சமையல் செய்வதை நாம் அவசியமானது என அறிவதால், வேலை நடக்கும்பொழுது எரிச்சல் வருவதில்லை. சமையல் செய்யாத பெண்ணுக்குப் புதியதாக இதைச் செய்வது தலைவிதி என்றிருப்பதால், எரிச்சல் கோபம் எழுந்தபடியிருக்கும். அதனால் வேலையில் குளறுபடி ஏற்படும். மேலும் எரிச்சல் அதிகமாகும். வாழ்வே semi-hell ஓரளவு நரகமானதாக அமையும். அப்பெண் சொந்தச் சிந்தனையாலோ, மற்றவர் யோசனையாலோ, இது அவசியமானது என மற்றவர்களைப் போல் புரிந்து கொண்டால், எரிச்சல், கோபம் போய், சாதாரணமாக அன்றாடம் வேலை செய்யமுடிகிறது. எரிச்சலும், கோபமும், வேலையிலும், சூழ்நிலையிலும்

இல்லை. நாம் வேலையைப் புரிந்து கொள்ளும் பாணி எரிச்சலை உண்டு பண்ணுகிறது.

எரிச்சலுக்கு உற்பத்தி ஸ்தானம் மனம்.

மனமாற்றம் எரிச்சலை அமைதியாக்கும்.

திங்கள்கிழமை வீட்டுப்பாடம் எழுதி ஆசிரியரிடம் கொடுக்க ஞாயிறு இரவு அல்லது திங்கள் காலை உட்கார்ந்து எதையோ ஒன்றை எப்படியோ எழுதி கடமையை முடிப்பவர் பலர். இது அவசியம் அதனால் செய்கிறோம். இது ஒரு கடமை. அதை முடித்தாயிற்று. இதை மாற்றிச் செய்யலாம். வியாழனன்று வீட்டுப்பாடம் கொடுத்தவுடன் அது என்ன, அதை எப்படி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வீட்டிற்கு வந்தால், எழுத வேண்டியது ஓரளவு புரிய ஆரம்பிக்கும். புத்தகத்தை வைத்துவிட்டு தினமும் விளையாடப் போகும் பையன், இன்று புத்தகத்தை திறந்து தனக்குத் தோன்றியதைப் பார்த்து சரியா, என்று நிச்சயம் செய்த பின் விளையாடப் போவான். அன்றிரவு தூங்கப் போகுமுன் அது நினைவு வரும். பாடத்தை எடுத்துப் பார்த்தால் மேலும் ஒன்று புரியும். ஏன் இப்பொழுதே எழுதக் கூடாது என்று தோன்றும். மனம் பாடத்தை நினைத்தால், அதிகமாகப் புரியும். அதனால் ஆர்வம் எழும். வீட்டுப் பாடத்தைச் சீக்கிரமாக, ஆர்வமாக எழுதி முடிப்பான். பள்ளி ஆசிரியர் தம் மகன் வழக்கத்திற்கு மாறாக எப்பொழுதும் கணக்குப் போட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, அவன் ஆசிரியரைச் சந்தித்து, என்ன செய்தீர்கள் என் மகனை? எப்பொழுதும் கணக்குப் போடுகிறானே! என்று கேட்டார்.

செய்வது புரிந்தால், செயல் ஆர்வம் வரும்.

தான் செய்யும் காரியங்களை ஆலோசனை செய்து புரிந்து கொள்வது, நாலு பேருக்காகச் செய்வதைவிட நமக்காகச் செய்வது ஆத்ம திருப்தி அளிக்கும் என்பதை அறிவது,

எதையாவது செய்ய வேண்டும் என்பதை எதையாவது பயன்படுவதாகச் செய்யலாம் என நினைப்பது, பிடிக்கவில்லை என்பது நோக்கத்திலுள்ளது என்று புரிவது, தவறான உணர்வே வாழ்வை நரகமாக்குகிறது என்றறிவது மனமாற்றத்திற்குரிய கருவிகளாகும். பொதுவாக இம்முறை வாழ்வில் அதிக சந்தோஷத்தைக் கொடுக்கும்.

  • படிப்படியாக மனமாற்றம் கழுத்தறுப்பான வேலையையும் முடிவில் ஆனந்த அனுபவமாக்கும்.

ஆனந்த அனுபவம் என்றால், அதுவும் மனிதர்களைப் பொருத்து மாறி வரும்.

  • நாம் கொடுக்க விரும்பினால், பிறர் கேட்டுக் கொடுத்தால் அழகாக இல்லை, கேட்காமல் கொடுப்பது,
  • கேட்கும் முன் கொடுப்பதே அழகு.
  • அவருடைய தவற்றை எடுத்துச் சொல்லலாம் என்றால் பிடி என் கையிலிருப்பதால் சொல்லக் கூச்சமாக இருக்கிறது. அப்படியில்லாவிட்டால் சொல்ல முடியும்.
  • கூப்பிடுவார்கள் என எப்படிக் காத்திருப்பது? நாமே போவதுதான் முறை. கூப்பிட வேண்டும் என்ற முறைக்கு அவசியமில்லை.
  • கூப்பிட்டு விட்டார், எப்படிப் போகாமலிருப்பது என்பது ஒரு வகை மனநிலை.

மற்றொரு வகை,

  • கெஞ்சணும், ஜாக்கிரதை,
  • நீயாகக் கேட்டால்தான் தருவேன், நானாகக் கொடுப்பேன் என்று நினைக்காதே,
  • வசமாக என் பிடியில் மாட்டுவான் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
  • யாராவது உன்னை அவமானம் செய்யனும்,
  • வர முடியாது என்று போய்ச் சொல்.



book | by Dr. Radut