Skip to Content

பகுதி 5

இரண்டாம் வகையிலுள்ள 100, 200 மனநிலைகள் மரியாதைக்கோ, நாகரீகத்திற்கோ, பண்புக்கோ, அழகுக்கோ உரியதல்ல. இரண்டாம் வகையை முதல் வகையாக மாற்ற வேண்டியதுதான் அவசியம்.

சிறிய புத்தியைப் பெருந்தன்மையாக மாற்றுவது மாற்றத்தின் பகுதி.

வம்பு செய்வதில் திளைப்பவர் : இப்படி ஒருவர் நம்மிடம் வலிய வந்து உறவாடினால் என்ன ஆகும்? இவருக்கு இருவர் பிரியமாக இருந்தால் பிடிக்காது. அவர்களைப் பிரிக்க முயல்வார். கணவன், மனைவி அந்நியோன்யமாக இருந்தால் இவருக்கு மண்டை வெடித்து விடும். தானே வருவார், பிரியமாகப் பேசுவார். கோள் சொல்வார். இவரை என்ன செய்வது?

இவர் ஒரு பக்தரிடம் வந்தார். பக்தருக்குத் தலைவயானார். பல நாட்கள் சிரமப்பட்டு, அவர் சுபாவப் படி அவர் நடக்கிறார், அவர் செய்வது என்னைக் கலக்கக் கூடாது என்று மனதை திடப்படுத்திக் கொண்ட பின், அவர் பக்தரை சந்திப்பதை நிறுத்திவிட்டார். பக்தருக்கு நிம்மதி.

இந்த பக்தர் மாற்றத்தை விரும்பியபொழுது, உறவுகள் சுமுகமாக இருக்கவேண்டும் என்ற தலைப்பில் இப்பக்தரை அவர் விவரித்தார். பக்தர் செய்தது சரி. அன்னை பக்தரை அவரிடமிருந்து காப்பாற்றிவிட்டார். ஆனால் மாற்றத்தைத் தேடினால், இது போதாது. மேலும் சில மனமாற்றங்களும் தேவை. அவற்றை படிப்படியாகக் கூறலாம்.

1. ஏன் இவர் வம்பு வளர்க்கின்றார் என்று செய்த ஆராய்ச்சியில் இவர் சுபாவம் எனப் புரிந்தது முதல்

நிலை. எனவே இவரால் பிரியமானவர்களைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்படிப்பட்டவர் ஏன் பக்தரைத் தேடி வரவேண்டும்? அதற்கு மூன்று காரணங்களில் ஒன்றிருக்கலாம்.

  • இதே குறை பக்தருக்கிருந்தால் அதன் பிரதிபலிப்பாக வம்பர் வருவார்.
  • ஏற்கனவே இந்தக் குறை பக்தருக்கு இருந்து இப்பொழுதில்லை எனில் பழைய சுவடு நினைவாக இது ஏற்படும்.
  • பக்தர் இக்குறைக்கு எதிரான நிறைவுடையவராக இருந்தால் வம்பர் தம் குறையை அழித்துக் கொள்ள பக்தரை நாடுவார். ஏனெனில் இவர் மூலமாகத்தான் குறையை அழிக்க முடியும்.

2. தம் குறையை, பக்தர் மூலமாக அழித்துக் கொள்ள வம்பு மனிதர் முயல்கிறார் எனில் அதற்குப் பின் விளைவுகள் பல விதங்களாக இருக்கும்.

  • வம்பு மனிதர் வம்பை விட்டுவிடுவார். வேறு விளைவுகள் இருக்கா.
  • பக்தர் அறிவில்லாமல் வம்பு மனிதர் வளர்க்கும் வம்புகளில் சிக்கிக் கொள்ளலாம்.
  • வம்பர் மாறி விடுவார். பக்தருக்கு அதே குணம் எழும்.
  • வம்பர் மாறுவதுடன், இனி பக்தரிடம் அதுபோன்ற குணமுடையவர் வரமாட்டார்.

பக்தர் வலிவு குறைந்தவரானால் அவருக்குப் பிரச்சினை வரும். வலிமை மிகுந்தவரானால் நான்காம் நாள் மாறுதல் ஏற்படும். இந்த நல்ல மாறுதல் ஏற்படும்படி நடப்பது எங்ஙனம்? பக்தர் சாதாரண மனிதராக இருந்தால் முதற்

பலன் வரும். அறிவில்லாத நல்ல மனிதரானால், இரண்டாம் பலனும், வலிமையற்றவரானால் மூன்றாம் பலனும், வலிமையுள்ளவரானால் கடைசி பலனும் வரும். நான் வம்பரை மாற்றினேன் என்று நினைத்தால் மூன்றாம் பலன் வரும். அன்னை என் மூலம் அவரை மாற்றினார் என்று புரிந்து கொண்டு நான் என்பதை விலக்கினால் கடைசிப் பலன் ஏற்படும்.

குடும்பத்தில் பழகும்பொழுதும், அண்டை அயலாரிடம் பழகும்பொழுதும், கவனித்துப் பார்த்தால் ஒவ்வொருவரும் தங்கள் பாணியில் பிறரைப் புரிந்து கொள்வார்கள். நாம் ஒருவரைப் புரிந்து கொள்ளவேண்டும் எனில், அவர் மனநிலை, சூழ்நிலை, அவர் பிறப்பு, வளர்ப்பு மூலம் புரிந்து கொள்ளுதல் சரியாக இருக்கும். நாம் புரிந்து கொண்டதை ஏற்பது நம்மைப் பொருத்தது. நம் மனநிலை, சூழ்நிலை, வளர்ப்பின் மூலம் பிறரைப் புரிந்து கொள்ள முயன்றால், புரியாது, அல்லது தவறாகப் புரியும். சில அன்றாட உதாரணங்கள் இதை விளக்கும்.

திருட்டுப் பழக்கமுள்ள பையனுடன் ஒருவர் நம் வீட்டிற்கு வந்தால், நாம் அவனை நம்மைப்போல் நினைத்து, பழக அனுமதித்தால், பையனை அழைத்து வந்தவர் கவலைப்படுவார். இவர்களுக்கு எதுவும் தெரியவில்லையே என நினைப்பார்.

எவரும் எதையும் திருடுவார் என்று வாழும் வீட்டிற்கு நாம் போனால், அவர்கள் பொருள்களை எடுத்துப் பூட்டுவதையும், நம்மைக் கண்காணிப்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியாது. புரிந்தால் அந்த வீட்டிற்கு அடுத்த முறை போக மாட்டோம். நம்மைத் திருடன் என்று நினைத்து விட்டார்களே என மனம் கசங்கும்.

வருமானம் குறைவானவர்கள் கைமாற்றுக் கேட்பார்கள். குறைந்த வருமானமிருந்தாலும் கைமாற்றுக் கேட்காதவர்களும்,

கேட்க முடியாதவர்களும் உண்டு. இவர்கள் வருமானத்தைக் கருதி, பிறர் இவர்கள் கைமாற்றுக் கேட்க வந்து விட்டார்கள் என நினைத்தால், இவர்கள் மனம் புழுங்குவார்கள். குறைந்த வருமானமும், உயர்ந்த மனநிலையும் உள்ளவர்க்குச் சமூகத்தில் என்றும் உள்ள நிலை இது. யாரோ ஒருவர் இவருடைய உயர்ந்த மனநிலையைப் புரிந்துகொள்வார்கள். அந்த உறவு சிறக்கும். தெளிவு இருப்பதால், இந்த உறவு இருவருக்கும் பலன் தரும். ஒருவரை ஒருவர் அறியாமல் நல்ல காரியங்கள் நடந்தபடி இருக்கும். ஒருவர் மகனுக்குத் தொழில் செய்யும் நல்ல வாய்ப்பு இதுபோன்ற உறவின் மூலம் வந்ததை அவர் புரிந்து கொண்டு ஆச்சரியமடைந்தார். மாற்றத்தை நாடும் அன்னை பக்தர்கள் இங்கு அறியக் கூடியதுண்டா?

சிறிய உத்தியோகத்தில் பெரிய மனதுடையவருக்குப் பெரிய அந்தஸ்து உறவினர்களும், நண்பர்களும் இருந்தால், இவர் பக்தரானால் என்ன செய்யலாம்? உயர்ந்த நண்பர் நம்மைச் சரியாகப் புரிந்துகொண்டால், அவர் மூலம் நல்லது நடக்கிறது என்பது உண்மை. அப்படி அவர் மனம் மாற நாம் என்ன செய்ய முடியும்? நாம் அவரை அவர் மனம் உள்ளபடி கசப்பின்றிப் புரிந்து கொண்டால், அவர் நம்மைச் சரியாகப் புரிந்து கொள்வார். உறவு நன்மையை விளைவிக்கும். நண்பர் நம்மைப் புரிந்து கொள்ளவில்லையே என நாம் குறைபடுவது, நாம் அவரைப் புரிந்து கொள்ளவில்லை எனப் பொருள். அவர் தம் குறைகளைப் புறக்கணித்து, தம் நிறைவுகளை அறிவதால், நாமும் அவர் குறைகளைப் பாராட்டாமல், அவரிடம் உள்ள நிறைவுகளை ஏற்றுக்கொண்டால், நீங்கள்தான் என்னை புரிந்து கொண்ட ஒரே மனிதர் என்பார். அதன்பின் நம் மூலம் அவருக்கும், அவர் மூலம் நமக்கும் நல்லது மட்டும், அவர்கள் சுபாவத்தை மீறி நடக்கும். ஒரு சிலருக்குப் பலரும் உதவி செய்வதைக் காண்கிறோம். அதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் இதுவும் ஒன்று.

பிறரை அவர் தன்னையறியும் வகையில், அவர் விரும்பிப் போற்றும் வகையில், நம்மால் புரிந்து கொள்ள முடியுமானால், அவர் குறைகளை அவர் புறக்கணிப்பது போல் நாமும் புறக்கணித்தால், அவர் நிறைவுகளை அவர் போற்றுவதுபோல் நாமும் போற்றினால், அவர் நம்மை உணர்ச்சியுடன் சேர்த்துக் கொள்வார். உணர்ச்சி ஒன்றினால் நல்லது நடக்கும்.

  • நல்லது நடக்க, பிறரை அவர் அறிவதுபோல் அறிய வேண்டும்.
  • அனைவரையும் அவரவர் கண்ணோட்டத்தில் புரிந்துகொண்டால், அனைவராலும் நமக்கு நல்லதுண்டு.
  • நம்மால் அனைவருக்கும் நல்லது செய்ய முடியும்.
  • அவரவர் விரும்பி ஏற்பதே அனைவருக்கும் நல்லது.
  • பிறர் விருப்பத்தை ஏற்பது பிறரை ஏற்பதாகும்.
  • எவரை ஏற்றாலும் நல்லது நடக்கும்.
  • நடப்பனவெல்லாம் நல்லனவாக நடக்க, பழகுபவர் எல்லோரையும் ஏற்கும் மனம் வேண்டும்.
  • பெரிய மனம் அதிகமான பேரை ஏற்கும், அதனால் அதிகமான பேருக்கு நல்லது செய்ய முடியும், அதிகமான பேர் நல்லது செய்வார்கள்.

உலகம் உய்ய அனைவரையும் நல்லவர் என அறிந்து மனம் ஏற்பது அவசியம்.

நாம் ஒரு தொழில் நடத்துவதாகக் கொள்கிறோம். தொழில் அன்னை முறையில் சிறக்க நாம் இக்கொள்கைப்படி என்ன செய்யவேண்டும்? தொழில், சிப்பந்தி, வாடிக்கைக் காரர்கள், சர்க்கார் அதிகாரி, எனப் பலர் தொடர்புள்ளவராக இருக்கிறார்கள். நமக்கு உணர்வால் தொடர்புடைய உறவினர்,

நண்பர்கள் உண்டு. இத்தொழிலுக்கு உதவி வந்தது எதனால் எனக் கவனித்தால், அது நாம் யாரைப் புரிந்து கொண்டிருக்கிறோமோ அவர்கள் மூலம் வந்திருக்கும். எனவே நம் உணர்வால் தொடர்பு கொண்டவர்களை ஒவ்வொருவராக நாம் புரிந்து கொள்ள முயன்றால், நம் மனம் மாறுவதும், அவர்கள் நோக்கம் நம்மைப் பொருத்து மாறுவதும், அதனால் புதிய சூழ்நிலை ஏற்படுவதும் தெரியும். படிப்படியாக ஒருவர் தொழில் சம்பந்தப்பட்ட அனைவரையும் இதுபோல் புரிந்துகொண்டால், அவர் தொழில்,

அத்துறையில் முதன்மையான பாக்டரியாகும் என்பது உறுதி.

நல்லெண்ணம் உலகில் அரிபொருள். இருப்பவர் எளிதில் பிறரை அதன் உரிமைக்குள்ளாக்க மாட்டார். வீட்டிற்குள் நல்லெண்ணம் இருப்பது அரிது. இருந்தால் அதைப் பெற நிபந்தனைகள் உண்டு. அத்தனை நிபந்தனைகளுக்கும் உட்பட்டு நல்லெண்ணத்தைப் பெற்றதின் சாரத்தை அறிய முற்பட்டால்,

  • அவர்களுடைய சௌகரியப்படி நல்லெண்ணம் எழும்.
  • அதாவது அவர்களுடைய மரியாதை (அகந்தை) உயரும்படி நல்லெண்ணத்தை வழங்குவார்கள்.
  • அகந்தையின் சாயல் பட்டபின் அது நல்லெண்ணமாக இருக்க முடியாது.
  • நிபந்தனைக்குட்பட்டுச் செயல்படுவது நல்லெண்ணம் இல்லை.
  • தானே எழுந்து தடையின்றி வெளிப்படுவது நல்லெண்ணம்.

நல்லெண்ணம் மனதைக் கனிய வைக்கும். சொல்ல் சூடு இருப்பதை விலக்கும். உணர்வில் கடுமையை அழிக்கும். உடல் துர்நாற்றத்தை எடுக்கும் வியர்வையும் தெளிவாக இருக்கும். நல்லெண்ணம் உபரியாகி ஜீவன் நிறைந்து உடலாலும் (ஜடம்) வெளிப்படுமானால் அவரால் எதுவும் பூர்த்தியாகும். நாட்டையும் காக்க முடியும். ஆன்மிக நல்லெண்ணம் அதிக சக்தி வாய்ந்தது. அது மனதில் (descent) கீழிறங்கி வெளிப்படுதல், உணர்வில் வெளிப்படுதல் கடைசிக் கட்டம். சைத்தியப் புருஷன் நல்லெண்ணத்திற்கு உரியவன் என்பதால் இது ஆன்மிக சக்தி சைத்திய சக்தியாகிக் கீழிறங்குவதால் வலிமையுயர்ந்து இருப்பதாகும். நம் மனநிலைக்குரிய பாஷையில் சொன்னால், நாமுள்ள ஸ்தாபனத்தின் தலைவரின் அந்தஸ்தைப் பெற்றுத் தரக் கூடியது. இதன் வீச்சு முழுமையானால், நம் ஸ்தாபனத்தின் வருமானம் நமது வருமானமாக முடியும்.

பிரம்மம் என்பது அனந்தம். ஜடம் மிகவும் சிறியது. அதிகபட்சமான அளவில் சிறியது ஜடம், அதாவது நம் அன்றாட வாழ்வின் செயல்களும், அமைப்பும் சிறியதின் அமைப்பு. எத்தனை நூற்றாண்டாக இருந்தாலும், பெரியது விரும்பினால், அதை மாற்றலாம் என்பது சமூக அமைப்பு. தீண்டாமை ஆயிரம் ஆண்டுகளாக இருந்தது. ஒரு சட்டம் அதை ஒழித்துவிட்டது. யுகாந்திர காலமாக உரிமை என்பதே அறியாத பெண், சமூகம் தன் மனதை மாற்றியவுடன், ஓட்டுரிமை பெற்றாள், சொத்துரிமை பெற்றாள். ரூபாய், அணா, பைசா, ஒரு ரூபாய்க்கு 16 அணா, ஒரு அணாவுக்கு 12 பைசா, சட்டம் மாறியவுடன் மறைந்து நயாபைசாவாகியது. சட்டம் சமூகத்தை நிர்ணயிப்பதுபோல், மனநிலை (mind set) நம் வாழ்வை நிர்ணயிக்கும். Life style வாழ்வின் அமைப்பு முறை, கல்வித் திட்டம், உடை, உணவு, ஆகியவை நம் மனநிலையை மாற்றினால் அவை மாறும்.

மரணம், துன்பம், நோய், கவலை, கர்மம், தோல்வி

போன்றவை அதேபோல் மனநிலையை (mindset)

மாற்றினால், அமர வாழ்வு, இன்பம், ஆரோக்கியம்,

மகிழ்ச்சி, வெற்றியாக மாறும் என்கிறார் பகவான்.

பணக்காரனைத் தெய்வமாக்கி, அவன் பின்னால் ஆயிரம் பேர் போகும்பொழுது, அனைவருடைய மனமும், பணத்தின் உயர்வை விருப்பமாக ஏற்று மகிழ்கிறது. இதன் ஒரே பலன் இப்படிப்பட்டவருக்குப் பணம் தூர விலகும், சம்பாதிப்பது சிரமமாகும். பணக்காரனை மற்றவர்போல் மனிதனாகக் கருதும் மனநிலை ஏற்பட்டால், அவனால் அளவுகடந்து சம்பாதிக்க முடியும். மனம் நிலை மாறி உயருவதால், பணத்தின் சக்தி மனத்தின் சக்திக்கு உட்படும். உலகம் ஊனமுற்றவர், தாழ்த்தப்பட்டவர், ஏழை, விதவை, பெண்கள், கிராமத்து மக்கள் மீது கொண்டிருந்த அபிப்பிராயத்தை ஓரளவு அடிப்படையில் மாற்றிக் கொண்டுள்ளது.

மனம் ஜடத்தைவிட உயர்ந்ததாதலால், ஜடத்தின் நிலையை மாற்றிய மனம் அளவு கடந்து மாற்றவல்லது. நெற்பயிர் எனில் ஆடி - தை என்பதும், சம்பா குறுவை என்பதும், தொழுஉரம், என்பதும் மாறி 90நாள் பயிர், IR.8, IR.22 என்றும் இரசாயன உரம் என்பதாகவும் மனம் மாற்றிக் கொண்டதால் 51 மில்லியன் டன் உணவுத் தானிய உற்பத்தி 187 மில்லியன் டன்னாக மாறியது. பெண்கள் படிப்பு, உத்தியோகத்தைப் பற்றி உலகம் தன் மனப்பாங்கை மாற்றிக் கொண்டதால், இன்று பாரதியின் புதுமைப் பெண் நிமிர்ந்த நன்னடையுடன் வெளி வருகிறாள். உயர்ந்த நிலை பிரம்மம், தாழ்ந்த நிலை ஜடத்தை அளவு கடந்து, உருத் தெரியாமல் மாற்ற முடியும் என்பது பூரணயோகம். சாதாரண மனநிலைகளை - 18 - ஏற்கனவே விவரித்தேன். மாற்றத்திற்குத் தேவையான மனநிலைகளை 165 உதாரணங்களால் பேரொளியாகும் உள்ளொளியில் எழுதினேன்.

மரணத்தை வெல்வது யோகமானால் வறுமையை யோக வாழ்வு வெல்லும். துன்பத்தை யோகம் இன்பமாக திருவுருமாற்றம் செய்யுமெனில் யோக வாழ்வில் துன்பத்தைப் பெரிதும் விலக்க முடியும். நோயே யோக சக்தியால் அழியும். யோக வாழ்வு நோயைத் தடுக்கும், அல்லது குணப்படுத்தும். கவலை யோகத்தில் மாறி சந்தோஷமாகும். யோக வாழ்வின் அடிப்படை மலர்ந்த முகம், கவலை பின்னணிக்குப் போய் சந்தோஷத்தை முன்னணியில் கொணரும். கர்மம் யோக வாழ்வில் இருக்க முடியாது. யோகத்தில் பேரருள் செயல்பட்டால், யோக வாழ்வில் அருள் கர்மத்தை அழித்து அடிக்கடி செயல்படும். தோல்விக்கு யோக வாழ்வு தோல்வியளிக்க வல்லது.

பிரம்மத்தின் அனந்தம் ஜடத்தின் சிறுமையை மாற்றி, அவலத்தை ஆனந்தமாக்கவல்லது.

மாஜிக் செய்பவர்கள் நம் கண் முன் இல்லாததை உற்பத்தி செய்கிறார்கள். ஆயிரம் பேர்கள் கூடியிருந்தாலும், அனைவர் கண்ணுக்கும் கொஞ்ச நாழிகை தெரிகிறது. சாமியார் மந்திரம் சொல்லி கையை நீட்டுகிறார்.லிங்கம், மஞ்சள் வருகிறது. மந்திரம்போல் இவைகள் மறைவதில்லை. மாஜிக் செய்பவன் நம் மனத்தை இல்லாததைப் பார்க்கச் செய்கிறான். நம் பார்வையில் கொஞ்ச நேரம் மரஞ்செடியை அவனால் ஏற்படுத்த முடிகிறது. சாமியார் நிரந்தரமாக இல்லாத லிங்கத்தை உற்பத்தி செய்கிறார். நம் மனத்தால் நாம் எதையும் உற்பத்தி செய்ய முடியும். நாம் இன்று நம்மைச் சுற்றி காண்பனவெல்லாம் நம் மனத்தால் உற்பத்தி செய்யப்பட்டவையே ஆகும். சாமியார் மந்திரம் உற்பத்தி செய்த லிங்கம்போல் நம் மனநிலையை மாற்றினால் போதும். வறுமை என்ற சூழலில் வாழ்பவர் தம் மனத்தின் சக்தியால் வறுமையை உற்பத்தி செய்ததை அறிவதில்லை. தம் மனதை மாற்றி,

வறுமையைச் செல்வமாக மாற்ற முடியும் என்று அவர் அறிவதில்லை.

நாம் வாழும் இவ்வுலகம் நம் மனத்தால் உற்பத்தி செய்யப்பட்டது என்பது பூரண யோகம். அதை மாற்ற முடியும். மனம் மாறினால் உலகம் மாறும் என்பதே மாற்றம் என்ற கொள்கைக்கு அடிப்படை. மாற்றம் உண்மையானால் உலகம் மாறும் என்பது உண்மை. மனமாற்றத்தின் திறனை விளக்கிய பகவான், மனம் மாறினால் ஜடம் சத்திய ஜீவியமாகும் என்கிறார்.

இன்று வறுமையில் உள்ள ஒருவர் செல்வம் பெற முடியும், எளிமையானவர் உயர முடியும், பலஹீனமானவர் பதவிக்கு வர முடியும் என்பவைகள் உண்மையானால் அது நடப்பதெப்படி?

மாஜிக் செய்பவன் ஒரு மந்திரத்தை பயன்படுத்துகிறான். சாமியார் பூஜை செய்கிறார். இவர்கள் மந்திரத்தையும், பூஜையையும் நம்பும் அளவுக்கு வறுமையுள்ளவரின் மனம், பகவானின் இக்கருத்தைப் புரிந்து கொண்டு உணர்ச்சி பூர்வமாக நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையிலிருந்தே சக்தி எழுகிறது. அந்தச் சக்திக்கு இம்மாற்றத்தைக் கொண்டு வரும் திறன் உண்டு. நம்பிக்கை முழுமையான பின், செல்வருடைய மனநிலையை இன்று வறுமையிலிருப்பவர் ஏற்றுக் கொண்டால், அது பூர்த்தியான தருணம் வறுமை செல்வமாகும். உழைப்பால் செல்வம் பெற்றவர், செல்வம் பெற்றதால் பெற்ற மனநிலையை, இன்று வறுமையிலிருப்பவர் அறிவால் ஏற்க வேண்டும். உழைப்புப் பெற்ற செல்வத்தை, அறிவு மனமாற்றத்தால் கொடுக்கக் கூடியது. மந்திரம் மனத்தின் ஒரு திறனை முழுமையாகப் பயன்படுத்துகிறது. மனமாற்றம் மனத்தை முழுமையாகப் பயன்படுத்துகிறது. அதனால் இதன் சக்தி அதிகமானது, நிலையானது. மந்திரத்தை

உச்சரிக்கும்பொழுது, அதன் சக்தி சப்தத்திலிருந்து எழுகிறது. மனத்தைக் கருவியாக்கினால், முழு மனத்தின் திறனும் இங்குப் பயன்படுகிறது. ஞானயோகத்திற்கும், ராஜயோகத்திற்கும் உள்ள வேறுபாடு இது. ஞானயோகம் எண்ணத்தைக் கருவியாகக் கொண்டது. ராஜயோகம் மனத்தைக் கருவியாகக் கொண்டது.

மனம் எண்ணத்தைவிடப் பெரியது.

மந்திரம் மனத்தின் பகுதி.

மனமாற்றம் முழு மனத்தைக் கருவியாக்குகிறது.

மனமாற்றம், வாழ்வை மாற்றும்.

என்னால் இதைவிட முடியாது என்பவர் மனநிலை அவரால் விட முடியாததால் நிர்ணயிக்கப்படும். வெற்றிலை போடுவதை விட முடியாது; சினிமா பார்ப்தை விட முடியாது; பேப்பர் படிப்பதை விட முடியாது என்பவர்கள் மனநிலை குறுகலானது என்பதுடன் ஒரு சந்தர்ப்பத்தால் - வெற்றிலை - கட்டுப்பட்டது. பேப்பர் படிக்கலாமா, கூடாதா என்பது பிரச்சினையில்லை, பேப்பர் படிக்கும் பழக்கத்திற்கு நாம் அடிமையாக இருக்கக் கூடாதல்லவா?

எந்தப் பழக்கத்திற்கும் அடிமையாவது சரியில்லை.

எதற்கும் மனிதன் அடிமையாக இருப்பது விரும்பத் தக்கதன்று.

மனிதனுக்கு அவை கட்டுப்பட்டிருக்க வேண்டும்.

மனிதனுக்குப் பழக்கங்கள் கட்டுப்பட்டிருந்தால் அவன் சாதனை தொடர்ந்து உயரும். மனிதன் பழக்ககங்களுக்குக் கட்டுப்பட்டிருந்தால் அவன் அன்றுள்ள நிலைக்கு மேல் உயர முடியாது.

எதுவாக இருந்தாலும், நல்லதானால், நான் அதைச் செய்ய முன் வருவேன் என்பது விரும்பத்தக்க மனநிலை.

அவரால் எதையும் சாதிக்க முடியும். மாற்றத்தின் அடிப்படையில் இது ஒன்று.

பெரியது சிறியதற்காகத் தன்னை அழித்துக் கொள்வதே குடும்பத்தின் அடிப்படை. இருப்பது, இல்லாததற்காக தன்னை அழித்துக் கொள்ள முன் வந்தால் குடும்பம் ஏற்படும். இதுவே நாகரீகத்தின் அடிப்படை, பண்பின் அடிப்படை.

சம்பாதிக்காத அண்ணனுக்காக, சம்பாதிக்கும் தம்பி தன் எதிர்காலத்தை அழித்துக் கொள்வதால், குடும்பம் ஏற்படுகிறது. நீ சம்பாதித்து உன் குடும்பத்தைப் பார்த்துக் கொள் என்றால் அங்குக் குடும்பம் இல்லை. திறமையிருப்பவர், திறமையில்லாதவருக்காக உழைப்பது ஒற்றுமையை ஏற்படுத்தும். சம்பாதிக்க முடியாத பெண்ணுக்காக, சம்பாதிக்க முடியும் ஆண் வாழ்வதே தாம்பத்யம். நிலைமை மாறிய இந்த நாளில் சம்பாதிக்கும் திறமையற்ற கணவனை வீட்டில் உட்கார வைத்துத் தன் வருமானத்தால் குடும்பத்தை நடத்தும் மனைவி குடும்பத்திற்காகத் தன்னை அழித்துக் கொள்பவளாகும். இருக்கும் உத்தியோகம், படிப்பு போன்ற வாய்ப்புகளை நாடும் திறமையற்றவர்க்குக் கொடுத்துவிட்டு, திறமையுள்ளவரை விட்டுவிடுகிறது. இதுவே நாகரீகம் வளரும் பாதை. திறமையுள்ளவர்கள் தாங்களே முன்வந்து அதைச் செய்தால் நாகரீகம் உயர்ந்து பண்பாகிறது. சுயநலம் மாறி தன்னலமற்ற நோக்கமாகிறது. உடல் வலிமை மிகுந்தவர் இராணுவத்தில் சேர்ந்து போராடி, உடல் வலிமையில்லாத பொதுமக்களைக் காப்பாற்றுவது தேசபக்தி. ஆன்மிகச் சித்தி பெற்ற குரு ஆன்மிகத் தகுதியில்லாத சீடனுக்குத் தம் சித்தியை அளிக்க வாழ்நாள் முழுவதும் செலவிடுவது ஆன்மிகத் தியாகம். முன்னேறாத பகுதிகளுக்கு முன்னேறிய பகுதிகள் தங்கள் வருமானத்தைச் செலவிட்டு முன்னேற்றுவது நாடு நாகரீகம் பெறும் பாதை. அன்னையைப் பற்றி எழுதும் பொழுது பகவான் இதை holocaust அன்னை தம்மை

தீயிட்டுக் கொளுத்தி மனித குலத்தை உயர்த்துகிறார் என்றார். இருள் நிறைந்த மனித குலம் ஒளிமயமான அன்னை தம்மை அழித்துக் கொள்வதால் ஒளி பெறுகிறது. மாற்றம் என்பது உயர்ந்த அம்சம் நம்முள் தம்மை அழித்துக் கொண்டு தாழ்ந்த அம்சத்தை உயர்த்துவதாகும்.

இந்தத் தியாகத்தின் ஆதி அன்னையின் அவதாரம்.

எனவே மாற்றம் என்பது அன்னையின் அம்சத்தை நாம் பெறும் மார்க்கமாகும்.

தூர இருந்து பழகினால் பழக்கம் நெடுநாள் நீடிக்கும். உறவு இனிமையாக இருக்கும். நெருங்கி வந்தால் புளித்துப் போகிறது என்பது உலக வழக்கம். தூர இருந்து பழகினால் நல்லது மட்டும் தெரிகிறது. அதை விரும்பலாம். நெருங்கி வந்தால் கெட்டது தெரிகிறது. உடனே விலக வேண்டி வருகிறது. கெட்டதைக் கண்டும் விலக முடியாத மனம் இருந்தால், நண்பனிடமிருந்து கெட்டது விலகும். நல்ல பழக்கம் இனிக்கிறது. கெட்ட பழக்கம் புளிக்கிறது. கெட்ட குணத்தை நெருங்கியவரிடம் கண்ட பின், நாம் விலகா விட்டால், அவர் யோசனை செய்வார். எப்படி இனியும் என்னுடன் அவரால் பழக முடிகிறது என்று நினைப்பார். உங்களிடம் நான் சரியாக நடக்கவில்லை. ஏன் மீண்டும் என்னிடம் வருகிறீர்கள்? எப்படி வர முடிகிறது? என்று சிஷ்யனைக் கேட்ட குரு ஒருவர். Foul mouth என்பதற்கு எடுத்துக்காட்டாக காரமாக மட்டும் பேசும் இவர், தம் கெட்ட குணத்தைக் கண்டும் சிஷ்யன் விலகவில்லை என்பதால், தம் கெட்ட குணத்தைப் பெரிதும் கைவிட முன் வந்தார். அதனால் பொறுத்துக் கொள்பவருக்கு ஆழ்ந்த நிலையில் உயர்ந்த நல்லது உற்பத்தியாகிறது. இது முதல் நிலை. முடிவான நிலையில் நெருக்கம் அதிகமானால், இனிமை அதிகமாக வேண்டும். நடைமுறையில் சாத்தியமா எனலாம்?

நெருங்கி வந்த பிறகு, நம் குறைகள் தெரிவதால், குறைகள் தெரிந்த பின்னும், நண்பர் விலகாததால், நாம் குறைகளை விலக்க முயல்கிறோம். குறையைக் கண்டும் விலகவில்லை என்று தெரிந்த பின், அவரிடம் நெருங்கி வருகிறோம். அதனால் நெருக்கம் அதிகமாகும் வாய்ப்புண்டு.

குறையை விலக்கி இனிமையை வளர்ப்பது ஆன்மா.

குறையை வளர்ப்பது அகந்தை.

'அகந்தையை விட்டகன்று ஆன்மாவை அடையும் மாற்றம் என்பதால் இது நல்ல முறை.

ஆன்மிகமும், சத்திய ஜீவியமும் :*

விஞ்ஞானி புதிய ஆராய்ச்சியில் உலகுக்குப் பயன்படுவதைக் கண்டுபிடிப்பதுபோல் ஆன்மிகத்தையும், அதைக் கண்டு மார்க்கெட்டில் பொருளாக வரவழைப்பதை, சத்திய ஜீவியத்திற்கும் ஒப்பிடலாம். ரேடியோ, பென்சிலீன், கம்ப்யூட்டர், பிளாஸ்டிக் ஆகியவற்றை ஆராய்ச்சியால் காண்பவன் விஞ்ஞானி. நாம் பொருளாகக் காண்பதை விஞ்ஞானி தத்துவமாகக் கண்டுபிடிக்கிறார். தத்துவத்தைப் பரிசோதனை மூலம் பொருளாக மாற்றுகிறார். தத்துவம் பெரியது. பொருளாக மாற்றுவது அதனினும் முக்கியமானது. ஆனால் தாம் கண்டுபிடித்ததை மக்களுக்குப் பயன்படும் பொருளாகச் செய்து மார்க்கெட்டில் வழங்கும் திறன் அவருக்கில்லை. ஒரு கம்பனி அதைச் செய்ய வேண்டும். இந்த அளவுக்கு வேலை செய்யும் விஞ்ஞானியை ஆன்மிகத்திற்கு ஒப்பிட்டேன்.


* இது உதாரணம் அல்ல, analogy. புரிவதற்கு உதவும் என்று எழுதுகிறேன். உதாரணம்போல் முழுமையாகக் கடைசிவரை இதில் ஒத்து வாராது.

பெரிய கம்பனிகள் ஆராய்ச்சி செய்து, இதேபோல் புதிய தத்துவம், பொருளைக் கண்டு பிடித்தால், அதை மார்க்கட்டுக்குக் கொண்டு வர முடிகிறது. இதை, சத்திய ஜீவியத்திற்கு ஒப்பிட்டேன். சன்னியாசி, ரிஷி கண்டது பெரியது. தான் கண்டதின் பலன் தனக்குண்டு. அதை ஓர் அரசனோ, செல்வனோ ஏற்றால் அவன் மூலம் உலகம் பலன் பெறும். இது நடப்பது குறைவு. அசோகச் சக்கரவர்த்திபோல் இருப்பவர் அநேகம் பேர் இல்லை. சத்திய ஜீவியம் ஆன்மிகத்தைத் தன்னுட் கொண்டது. தான் கண்ட ஆன்மிகப் பலனை உலகுக்கு வழங்கும் திறன் உடையது. பூரணயோகி சித்தி பெற்றால் அவர் பெற்ற சித்தியின் பலன் தானே உலகெங்கும் பரவவல்லது.

தவம் பெற்ற பலன் தபஸ்விக்குண்டு,

பூரண யோக சித்தி உலகுக்கு நேரடியாகப் பலன் தரும்.

தொழில் அதிபர்கள் செல்வம் பெற்றால் செல்வம் அவருக்குரியதானாலும், அவர் செய்யும் தொழிலால் வேலை வாய்ப்பு ஏற்படுகிறது. பாக்டரி உள்ள இடம் சுபீட்சமடைகிறது. கம்பனியை ஒட்டியும், பாக்டரியைச் சுற்றியும் வளம் பெருகுகிறது. ஒருவர் தொழில் செய்தால் மறைமுகமாகப் பலருக்குச் சௌகரியம் உண்டு. சர்க்கார் ஒரு தொழில் ஆரம்பித்தால், தொழில் அதிபர் செய்வதன் பலன் அனைத்தும் ஏற்படும். மேலும் சர்க்கார் தொழில் வரும் இலாபம் நாட்டிற்குச் சொத்து, சொந்த இலாபமில்லை. 9 ஐந்தாண்டுத் திட்டங்களில் இட்ட மூலதனம் சர்க்கார் தொழில்களிலிருந்து வந்தவை. இத்தொழில்களில்லாவிட்டால் ஐந்து ஆண்டுத் திட்டங்களைச் செயல்படுத்தியிருக்க முடியாது. ஆன்மிகம் தொழிலதிபரை ஒத்தது, சொந்த இலாபத்திற்காக நடத்தப்படுவது, தான் மோட்சமடைப் பயன்படுவது; பூரண யோகம் சர்க்கார் தொழிலை ஒத்ததாகும்.

  • மோட்சத்தை நாடுவது ஆன்மாவின் கடைசிச் சுயநலச் செயல்.
  • உலகை விட்டு ஓர் ஆத்மா சுவர்க்கம் அடைவது மோட்சம்.
  • உலகை விட்டு இருள் நீங்கி, உலகம் சுவர்க்கமாக பூரண யோகம் முயல்கிறது.
  • பூரணயோகம் பூமியின் யோகம்.
  • மோட்சத்தில் சுயநலம் ஒட்டிக் கொண்டுள்ளது.
  • சுயநலம் அற்ற பின்னரே, பூரண யோகம் ஆரம்பிக்கிறது.
  • சுயநலத்தின் கர்த்தாவான அகந்தை அழிவதே பூரண யோகம்.

பூரண யோகம் முடிவான இலட்சியமானால், பக்தன் அன்னையை நாடி வருவது ஆரம்பம். மாற்றம் அடுத்த கட்டம். பூரண யோகம் மோட்சம் பெற்ற பின்பே - மோட்சத் தகுதி பெற்ற பின்பே - ஆரம்பிக்க முடியும். மாற்றத்தை நாட சுயநலத்தை அழித்த பின்பே ஆரம்பிக்க முடியும். மாற்றத்தை நாட சுயநலத்தை அழித்த பின்பே தகுதி ஏற்படும். மோட்சத்தை நாடுபவர் பெறும் பலன் அவருக்கு மட்டும் உரியது. பிறருக்கு அவர் எடுத்துக்காட்டு, வழிகாட்டி. பூரண யோகம் பெறும் பலன் அனைவருக்கும் உரியது. அனைவரும விரும்பினால் நேரடியாகப் பெறலாம். அதேபோல் மாற்றத்தை நாடுபவர் விவசாயியானால், மின்சாரத்தை கவனமாகச் செலவிட்டு, அவர் பயன் பெற்றால், அவருக்குப் பலன் வரும்பொழுது - இலவச மின்சாரம் - அனைத்து விவசாயிக்கும் சேர்ந்து வரும். தனியாகப் பலன் வருவது குறைவு.

மாற்றம் பூரண யோகத்தின் mniature சிறு உருவம்.

தன் நிலத்திற்கு நீர்ப் பாய்ச்ச முனைந்தால், அது தன் பயிருக்கு மட்டுமே போய்ச் சேர முடியும். தனக்கு மழை

வேண்டும் எனில், மழை பெய்யம்பொழுது அனைவருக்கும் சேர்த்துப் பெய்யும்.

  • மாற்றத்தை நாடுபவரின் சுயநலத்துள் பிறர் பரநலம் உள்ளது,
  • பரநலத்தை நாடும் மனம் மாற்றத்திற்குரிய மனம்,
  • மழை ஒருவருக்காக மட்டும் பெய்யும் அமைப்பில்லை.

குழந்தையைக் கண்டிப்பது :

குறையை அழித்த பின்னரே நிறைவுண்டு. மனம் இதை ஏற்கிறது. இது செயல்படும் விதம் நம் சுபாவத்தைப் பொருத்தது. விழிப்பானவன், சுயநலம் குறைந்தவன், அவசரப்பட்டுப் பேசாமலிருக்கும் நிதானமுடையவன், பிறர் நோக்கில் தன்னையறிய முயல்பவன், ஆன்மிக முன்னேற்றத்தை நாடும் ஆத்மா ஒரு காரியம் நடந்தால் அதில் குறையிருந்தால், குறையின் மூலத்தையறிய முயல்வான். யோசனை முடியும் பொழுது மூலம் தான் என அறிவான்.

இந்தச் சட்டத்திற்குட்படாதவர் அதிகம். குறையைக் கண்டவுடன், அதற்கு யார் பொறுப்பு என அவன் அபிப்பிராயம் தெரிவித்து, பிறர் மீது குறையைக் காண்பான். குழந்தையிடம் தன் குறையைக் காண்பவன் குழந்தையைக் கண்டிப்பான். தன்னைக் கண்டிக்க முடியாமல், தன் குறைக்காக குழந்தையைக் கண்டிப்பான். குறையைக் கண்டிக்கும் மனம் உண்டு. சுயநலம் குறையை வேறிடத்தில் காண்கிறது.

5 மணிக்குப் போஸ்ட்டாபீஸில் கட்டு எடுத்தால், தபாலை 5 மணிக்கு ஒருவர் கொடுத்தனுப்புகிறார். கட்டு எடுத்து விட்டார் என்று சொல்லும் பொழுது, திட்டினால், மனம் லேட்டாகப் போனது தவறு என்றறிகிறது, ஆனால்

அத்தவற்றிற்கு எடுத்துப் போனவன் பொறுப்பு என்று அறிகிறது, தன் பொறுப்பை அறியவில்லை எனப் பொருள். இம்மனநிலை மாறி, இனி தபாலை நேரத்தில் அனுப்ப வேண்டும், தாமதமாக அனுப்பியது தவறு என்றுணர்வது அறிவுடைமை, நல்ல குணம் எனப்படும். 4.30 மணிக்குத் தபால் அனுப்பியபொழுது வேறு வேலையாக இருந்து, 5.10க்குப் போஸ்ட்டாபீஸ் போன ஆள் திரும்பி வந்தால், தவறு போன ஆள் மீதுள்ளது. அதிகாரி அவனைக் கண்டிக்க வேண்டும். இது ஆபீஸ் முறைக்குச் சரி. பக்தர் மனம் இதுபோல் செயல்படுவது பக்தருக்குச் சரியில்லை. இந்த ஆள் என்னிடம் வேலை செய்பவன். 4.30 மணிக்குப் போஸ்டாபீஸுக்கு அனுப்பினால் 5 அடித்த பிறகு போகிறான். என்னுடைய ஆள் பொறுப்பற்றிருந்தால், அதற்குப் பொறுப்பு நான். நான் கொடுக்கும் வேலையை அவன் சரியாகச் செய்யாவிட்டால் எனக்கு நிர்வாகத் திறமையில்லை என்று பொருள், என பக்தர் குறையைத் தம் மீது காண்பது பக்தருக்குச் சரி. தபால் 4.30 மணிக்குத் தபால் பெட்டியில் போட்ட பின், அது போக வேண்டிய இடத்தில் அவர்கள் பார்த்து மறுநாள் சீல் போட்டிருப்பதைக் கண்டால், பக்தர் அதை எப்படி அறிவது? நான் நேரத்தில் பெட்டியில் தபாலைச் சேர்த்துவிட்டேன். தபாலாபீஸ் சரியாக வேலை செய்யவில்லை, அது அவர்கள் தவறு என்று நினைத்தால், நினைவில் தவறில்லை. பக்தர் வேறு மாதிரியாக நினைக்க வேண்டும். நான் இந்தத் தபாலைக் காலையில் 11 மணிக்கே எழுதிவிட்டேன். அதிலிருந்து போஸ்ட்டாபீஸுக்கு 3 முறைகள் ஆள் போயிருக்கிறார்கள். முதல் முறையிலேயே தபாலை அனுப்பாமல், 4.30 மணிவரை நான் தாமதம் செய்ததால், போஸ்ட்டாபீஸில் தாமதம் செய்திருக்கின்றார்கள். எனவே நான் இனி தபாலை எழுதியவுடன் போஸ்ட்டாபீஸுக்கு அனுப்ப வேண்டும்.

என் தாமதம் அவர்களைத் தாமதம் செய்ய வைத்திருக்கிறது,

என்ற தெளிவு பக்தருக்குரியது. பக்தருடைய செயல் உள்ள தாமதம் போஸ்டாபீஸ் தாமதமாக மாறுகிறது. இதையும் மாற்றிய பின், தபால் எழுதி உடனே அனுப்பிய சமயம் இரண்டு நாட்கள் தாமதமாகப் போய்ச் சேர்ந்தால், பக்தர் செயல் தாமதமில்லை. இது போன்ற சமயங்களில் பக்தர் மாற்றத்தைத் தேடுபவரானால், அவர் தாமதத்தைப் பிறர் மீது காண்பதற்குப் பதிலாக தன்னில் காண முயன்றால், எனக்கு எப்பொழுதுமே தாமதம் உண்டு. அதனால் செயல் தாமதமில்லாவிட்டாலும், தபால் தாமதமாகிறது என்று அறிவார். தாமதம் செயல் இல்லை, மனதில் இருக்கிறது, பழக்கத்திலிருக்கிறது. அதாவது ஜீவியம் consciousness தாமதமாக இருக்கிறது. இதை உணர்ந்து மாறினால் அதன் பின் அவரனுப்பும் எந்தத் தபாலும் தாமதமாகாது.

ஜீவியத்தின் தாமதம் செயலில் வெளிப்படுகிறது.

மாற்றத்தை நாடுபவர், இதுபோல் தன் அன்றாடக் காரியங்களைக் கவனித்து மாறினால், எல்லாச் செயல்களிலும், அதற்குரிய மாற்றத்தை ஏற்படுத்தினால் மாற்றம் முடிந்துவிடும்.

நம்மைச் சுற்றியுள்ளவர், நம்மைச் சார்ந்தவர், நம் வேலைகளைச் செய்பவர், நம் வேலையின் பலனைப் பெறுபவர் எவரானாலும் அவரிடம் நம் வேலை சம்பந்தமான குறையைக் கண்டால், அதற்கு நாம் பொறுப்பேற்பது ஜீவியத்தின் குறையை அகற்றுவதாகும், consciousness responsibility எனப்படும்.

குறை எவருடையதாயினும் பொறுப்பு நம்முடையது.

நான் கூறும் மாற்றம் கட்டுப்பாடான, முறையான, தெளிவான நபர்களுக்கு விபரம் புரிந்தவுடன் கூடி வரும். ஏற்கனவே தெளிவு, கட்டுப்பாடு, முறை, வாழ்வில் இருப்பதால், மாற்றம் என்பது என்ன என்று புரிந்து கொண்ட

பிறகு, மனம் மாறுவது மட்டுமே அவசியம். பேரொளியாகும் உள்ளொளி சொல்லும் 165 வகைகளான மாற்றத்தை அவர்கள் புரிந்து கொண்டால், ஏற்பதா, வேண்டாமா என முடிவு செய்ய வேண்டும். ஏற்பது என்ற முடிவிருந்தால், அவர்களுக்கு மாற வேண்டியது மனம். இனி இராகு காலத்தைப் பொருட்படுத்தக் கூடாது, தபால் எழுதினால் உடனே அனுப்ப வேண்டும், அவசியமான செலவானால், அன்னையை நினைத்துக் கையில் உள்ள பணத்தைப் பொருட் படுத்தாமல் செலவு செய்ய வேண்டும் என்ற தெளிவு வந்த பிறகு, அவர்கள் மாறி விடுவார்கள். அவர்கள் மாற வேண்டுமானால், தெளிவும், முடிவும் போதும்.

அனைவரும் கட்டுப்பாடுள்ளவர்கள் அல்லர்; முறையானவர்களல்லர்; தெளிவானவர்களல்லர். இருக்கும் நிலையிலேயே இவை குறையாக இருப்பதால், இனி உயர்ந்த நிலைக்குப் போனால் சிரமம் அதிகமாக இருக்கும். சிறிய நிலையில் கட்டுப்பாடில்லாதவர் உயர்ந்த நிலையில் என்ன செய்வார்? இப்படிப்பட்டவர்கள் தங்களால் மாற்றத்தை ஏற்க முடியாது எனலாம். மாற்றத்தை ஏற்க முன் வந்தால், முதல் முறை, தெளிவு, கட்டுப்பாட்டைப் பெற்று, பிறகு மாற்றத்தைத் தேடுவது சரி. முதல் மாற்றத்தை நாடினால் சிரமம் அதிகமாகத் தெரியும். அது மாற்றத்தால் வரும் சிரமம் அன்று. தெளிவு குறைவாக இருப்பதானால் வரும் அதிகச் சிரமம்.

கிராமத்தில் கட்டுப்பாடில்லாதவர் ஊரில் அனைவரும் நடவு முடித்து ஓரிரு வாரம் ஆன பின் நடுவார். கட்டுப்பாடுள்ளவர்க்கு கிராம வாழ்வு (sophistication) நாகரீகமாகப் பழக அனுமதிக்காது. ஒருவரைக் கூப்பிட வேண்டுமானால், பெரிய குரல் சத்தமாகக் கூப்பிடுவார். (clumsy) குழப்பமானவர் பலர் உண்டு. எங்கும் உண்டு. அலமாரியிலிருந்து புத்தகம் எடுத்துப் படித்தவர் நாற்காலியில்

அதை வைத்துவிட்டுப் போவது, திறந்த எண்ணெய் பாட்டிலை மூடாதது, போனை படியாமல் வைப்பது, இரவில் தெருக் கதவு மூட மறந்து விடுவது போன்ற ஆயிரம் காரியங்கள் அரைகுறையாக நடக்கும் வீடு கட்டுப்பாடும் இல்லை, தெளிவும் இல்லை என்று சொல்லும்படி இருக்கும். பேசும்பொழுது குறுக்கே பேசுவது, குறித்த நேரத்தில் வர முடியாதது, வாங்கிய பொருளைத் திருப்பித் தர முடியாதது, பிறர் மீது நம்பிக்கையில்லை என்று அவரிடமே சொல்வது போன்றவர்களை mannerless பழக்கம் போதாது என்கிறோம். இக்குறைகளில்லாவிட்டாலும், கிராம வாழ்வு நாகரீகத்திற்குத் தடை. கிராமத்தில் பிறந்து, கட்டுப்பாடில்லாவிட்டாலும், முறையுமில்லாமல், தெளிவும் இல்லாதவர், நகரத்திற்கு வந்து, முறையோடு, தெளிவோடு, கட்டுப்பாட்டோடு செயல்பட முனைந்தால் அவர் முயற்சி இமாலய முயற்சி. மாற்றத்தை நாடுவோர் அது போன்ற பெரிய முயற்சியை மனத்தாலும், உணர்வாலும், பழக்கத்தாலும், செயலாலும் மேற்கொள்ள வேண்டும்.

நகரத்திலிருந்து கிராமத்திற்கு நெல் வாங்க ஆள் வண்டி கட்டிக் கொண்டு வந்தான். நகரத்தில் அவன் எவருக்கும் கட்டுப்படுவதில்லை. அவன் முதலாளியிடம் சற்றுச் சலுகையுடன் நடந்து கொள்வான். கிராமத்தை அடையும் முன் வழியில் வந்தவர் வண்டியை நிறுத்தச் சொன்னார். வண்டியில் உட்கார்ந்தபடி, ஏன்? என்றான் முதல் நீ கீழேயிறங்கு என்றார். அவர் குரலின் கடுமையைப் பார்த்தவன் இறங்கிவிட்டான். இறங்கி நின்றவன் தானே வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டான். வேறொருவரும் அங்கு வந்தார். அவர்களைப் பார்த்ததும், தன் மரியாதைக் குறைவான பழக்கம் இங்கு செல்லாது எனத் தெரிந்து கொண்டான். எங்கே போகிறாய் என்றவர் பாணி அவனை மாற்றியது. கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு என்று சொல்ல

வாயெடுத்தவன், வாய் குழறுவதைக் கண்டான். ரெட்டியார் வீட்டிற்கு என்றான். எதிரே வந்த மற்றொரு ஆள், வண்டியை ஓரமாக்கு என்றான். பிறகு ரெட்டியார் வீட்டிற்குப் போய் நெல்லுடன் டவுனுக்கு வந்துவிட்டான். டவுன் முதலாளி கிராமத்து மிராசுதாரிடம் என்னுடைய ஆள் அங்கு சரியாகப் பழகினானா? என்றார். அங்கு வரும் முன்னரே எந்த ஆளும் சரியாகி விடுவார்கள். அதெல்லாம் பிரச்சினையாகாது என்றார். அது கட்டுப்பாடான குடும்பம். அங்கு போகும் எவரும் அந்தக் கட்டுப்பாட்டிற்குட்படுவர். கட்டுப்பாடான குடும்பத்தை நாடும் முன் அதன் சூழல் எவரையும் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தும்.

Spoilt child கட்டுப்பாடின்றி வளர்ந்த குழந்தை கட்டுப்பாடான வீட்டிற்குப் போனால், காலையில் அவன் எழுந்து போனவுடன் அவன் படுக்கையை ஒருவர் சுருட்டுவார். வெளியில் போய் உள்ளே வந்தால் தம் பையை மேஜை மேலே வைத்துவிட்டுப் போவான். வீட்டில் உள்ளவர் அதை எடுத்து மாட்ட வேண்டிய இடத்தில் மாட்டுவார். ஒருவர் பையன் பின்னால் போய் அவன் குறைகளை நிறைவு செய்வார். இந்தப் பையன் வளர்ந்த வீடு clumsy களேபரமான வீட்டிற்கு உதாரணமாக இருக்கும். இவன் மாறி கட்டுப்பாட்டை அறிதல் அவனைப் பொருத்தவரை சிம்ம சொப்பனம்.

நாம் மாற்றத்தை நாடினால் பெர்னாட்ஷா கதாநாயகி பூக்காரி பெருந்தனக்காரர் வீட்டுப் பெண்ணாக மாற எடுத்த முயற்சியை எடுக்கத் தயாராக வேண்டும். அதற்குக் குறைந்த முயற்சியால் இப்பலனைப் பெற முடியாது.

மாற்றத்தின் நிலைகள் :

மனிதனை சத்திய ஜீவனாக்கும் சக்தி அன்னை சக்தி. நான் மனிதனை உயர்ந்த உன்னதமான மனிதனாகச்

சொல்கிறேன். சத்திய ஜீவன் இதுவரை எவரும் எட்டாதது. மனிதனுடைய நிலைகளையும் சத்திய ஜீவன்வரை உள்ள நாமறிந்த நிலைகளும் கீழ்வருமாறு :

  1. சத்திய ஜீவன் (Supramental being)'
  2. தெய்வம்
  3. யோகி
  4. ரிஷி
  5. முனிவர்
  6. மனிதன்

இவை மனிதனுக்கு மேற்பட்ட உயர்ந்த ஆன்மிக நிலைகள். நாமறிந்த வாழ்வில் மனிதனை 10 நிலைகளில் பிரித்துப் பார்க்கலாம்.

  1. உயர்ந்த உன்னத மனிதன்
  2. உன்னதமான மனிதன்
  3. உயர்ந்த மனிதன்
  4. நல்ல மனிதன்
  5. சாமானிய மனிதன்
  6. சராசரி மனிதன்
  7. தாழ்ந்தவன்
  8. மட்டமான மனிதன்
  9. தவறான மனிதன்
  10. கெட்ட மனிதன்

நாம் செயலால் ஒரு நிலைக்குரியவரானால், மனதால் வேறொரு நிலைக்குரியவராவோம். பிறருக்கு உதவி தேவைப்படும்பொழுதோ, பிறரைப் பாராட்ட வேண்டிய நேரத்திலோ, நாம் உதவி செய்ய நினைத்து உதவி செய்ய முடியாவிட்டால், பாராட்ட வேண்டி பிரியப்பட்டு,

கூச்சத்தால் பாராட்டாவிட்டால், செயலால் நாம் சாமானிய மனிதனாகிறோம்; மனதால் நல்ல மனிதனாகிறோம். அதே போல் நல்ல செயலைச் செய்யும்பொழுது, மனம் நல்ல செயலை ஆமோதிக்காவிட்டால், செயலால் சராசரி மனிதனாகவும், மனதால் தாழ்ந்தவனாகவும் ஆகி விடுகிறோம். இனி இந்த எண்ணங்கள் கூடா என முடிவு செய்தால் அந்த முடிவு மனதில் பலிக்க, தேவையான முயற்சியை நாம் அறிவோம்.

எதிர்த்த வீட்டுப் பழக்கடைக்காரர் மகன், தான் MBBS பட்டம் பெற்றதாக வந்து சொன்னால், நாடு இந்த அளவு முன்னேறியுள்ளது என்று தேசபக்தருக்குத் தோன்றும். அவனுடைய செய்தி கேட்பவர் மனம் நிறைவடையச் செய்தால், அவர் நல்லவர் அல்லது உயர்ந்த உள்ளம் படைத்தவர். என் பையனுக்கு MBBS இல் இடம் கிடைக்கவில்லை. குப்பையில் கிடப்பவனெல்லாம் டிகிரி வாங்குகிறான் என்று தோன்றினால் அது மட்டமான மனம். இவர் தம் மட்டமான எண்ணத்தை உயர்ந்த நல்ல எண்ணமாக மாற்ற என்ன முயற்சி வேண்டும் என நாம் அறிவோம்.

எந்த நிலையில் உள்ளவருக்கும் முயற்சியிருந்தால் மாற்றம் உண்டு. எந்த நிலையிலிருந்தாலும் மாற்றத்தை நாடுபவர், உயர்ந்த உன்னத மனிதராகும் முடிவையும், முயற்சியையும் மேற்கொள்ளுதல் அவசியம்.

இது உச்சகட்டமானாலும் மனித நிலை. இதற்கு மேலுள்ள தெய்வநிலைகள் மாற்றத்திற்கு அவசியமில்லை. மாற்றத்தை ஏற்கும் முன் மனத்தைக் கலந்து ஆலோசித்து முடிவுக்கு வருதல் நல்லது.

வாழ்வின் நிர்ப்பந்தம் :

வாழ்வில் நெருக்கடி என்பதுண்டு. சாதாரணமாக மனிதன் சிந்திக்க முடியாதவாறு சிந்திக்கும் நேரம் அது.

தன் சுபாவத்திற்கு எதிராகத் தன்னை வற்புறுத்தி நடக்கச் சொல்லும் நேரம் அது.

ஊதாரி சேவை செய்ய வந்த இடத்தில் பணத்தை வேட்டை விட்டான். மேலும் செலவுக்குப் பணம் கேட்கப் போன இடத்தில் முதலாளி, இதுவரை நீ வீண் செலவு செய்த பணம் நான் சொத்தை விற்று ஸ்தாபனத்திற்கு அளித்தது. இனி உன் வீட்டை விற்று செலவு செய் என்றார். ஊதாரிக்கு இருக்கும் இடத்தை விட்டுப் போக முடியவில்லை. போக இடம் இல்லை. வீட்டை விற்பது என்பது எப்படி? முடிவுக்கு வர வேண்டிய நேரம். வீட்டை விற்றான். நெருக்கடி செய்யாததைச் செய்யச் சொல்கிறது.

எவனோ திருடினான். முதலாளி இவனைச் சந்தேகப்பட்டு போலீசில் புகார் கொடுத்தார். நல்ல உதை. உதையையும் வாங்கிக் கொண்டு, தவறு செய்யவில்லை என்று தெரிந்தும், முதலாளி காலில் விழுந்தான். நீங்களே எனக்குக் கதி. தகப்பன்போல். எதுவானாலும் என்னைக் கைவிடாதீர்கள் என்றான்.

தாலி கட்டிய பின் கணவனுக்கு வேலையில்லை, பொய் சொல்லிவிட்டனர் என்று தெரிந்து கணவனை ஏற்கும் பெண்ணின் மனநிலை அது. நிர்ப்பந்தமில்லாவிட்டால் செய்யாததை, நிர்ப்பந்தத்தால் மனிதன் செய்கிறான். நிர்ப்பந்தமில்லாத இடத்தில் மாற்றத்திற்காக இதுபோல் செயல்பட வேண்டும்.

பிராணமயப் புருஷன் :

ஆசை அழிந்தால் பிராணமயப் புருஷன் வெளிப்படுவான். இதுவே நமக்கு முதல் சித்தி என்கிறார் பகவான். இது யோகச் சித்தியாகும். யோக சித்தியின் சிறிய வடிவங்கள் வாழ்வில் உண்டு. ஏதோ ஒரு விஷயத்தில் ஆசையை அழிப்பதும் இதைப்



book | by Dr. Radut