Skip to Content

முகவுரை

  ‘பன்னிரண்டாண்டு    வற்கடம்'    என்ற    தொடர்    நம் இலக்கியத்திற்கும், வழக்கத்திற்கும் சொந்தம். 1943 இல் வங்காளத்தில் பஞ்சம்  வந்தது.  1947 இல் சுதந்திரம் வந்தது.  1947 முதல் இன்று வரை அளவுகடந்த உணவுப் பற்றாக்குறை பலமுறை எழுந்தும், பஞ்சம் தலை தூக்கவில்லை. நாடு சுதந்திரம் பெற்றதால், பஞ்சத்தைத் தடுக்க சர்க்கார்  பெருமுயற்சி  செய்தது.  சமீப  கால  ஆராய்ச்சியின்  பலனாக, "ஜனநாயக   ஆட்சியும்,   சுதந்திரமான   பத்திரிகை   உலகமும்   உள்ள நாட்டில்  பஞ்சம்  எழுந்ததில்லை''  எனக்  கண்டுள்ளனர்.  பத்திரிகை உலகம்   செய்யும்   சேவையை   உலகம்   அறியும்.   பஞ்சத்தையும் தடுக்கவல்லது    பத்திரிகை    உலகம்    என்று    இன்று    நாம் கேள்விப்படுகிறோம்.

நாகரிக உலகத்தின் உன்னத அங்கங்களில் பத்திரிகை உலகம் ஒன்று.   இயற்கை   வளத்தை,   வாழ்க்கை   வளமாக   மாற்றுவது தொழிலும், தொழில் நுணுக்கமுமாகும். அறிவின் சிறப்பை வாழ்க்கை வெற்றியாக மாற்றுவது கல்வித் திட்டம். நாட்டிலுள்ள உயர்ந்த அறிவுப் பொக்கிஷங்களை அனைவருக்கும் அளிப்பது பத்திரிகை. புதுவையின் ஆன்மிக   ஜோதியைத்   தமிழ்நாட்டுப்   பக்தர்   உள்ளங்களைத் தொடும்படிச்   செய்தது   "அமுதசுரபி''.   அதில்   அன்னையைப்   பற்றி வெளியான கட்டுரைத் தொகுப்பு "புண்ணிய பூமி''. புண்ணியம் என்ற சம்ஸ்கிருதச்  சொல்லுக்கு  மூலம்  -  to purify -  தூய்மைப்படுத்துதல் என்பதாகும்.  நம்மைத்  தூய்மைப்படுத்தும்  செயல்  புண்ணியமானது. அது  நம்  ஆன்மாவை  இறைவனிடம்  சேர்க்கும்.

பகவான்   ஸ்ரீ   அரவிந்தர்   செய்த   யோகம்   மனிதனை இறைவனிடம்    சேர்க்கும்    மோட்சத்தைக்    குறிக்கோளாகக் கொண்டதன்று. மனித வாழ்விலிருந்து மரணம், துன்பத்தை அழிக்கும் குறிக்கோளைக்  கொண்டது.  மனிதன்  இறைவனாகும்  பாதை  இந்த யோகத்தின்  பாதை.

ஒருமுறை  புதுவை  வழியாகப்  போனவரும்  தமக்கு  அன்னை அழைப்பிருக்கிறது  என்பதை  உணர்ந்தார்  என்று  நான்  அறிந்தபின், புதுவையுடன்  எந்த  வகையில்  தொடர்பிருந்தாலும்  அது  அவருக்கு அன்னையின் அழைப்பாகும் என்று கவனித்துப் புரிந்து கொண்டேன். அன்னையை அறிந்து அவர்மீது பக்தி கொண்டவர்களை நாம் அன்பர் என்று அறிகிறோம். எவருடைய ஆன்மா தன்னையறிந்து தன்னருகில் வாழ்கிறதோ, அவர்களை அன்னை தம்மைச் சேர்ந்தவராக அறிகிறார். அதுவே  அவர்  அறிக்கை.  ஆரோவில்  நகரம்  தொடங்கும்  பொழுது அங்குள்ள   கிராமத்தைச்   சேர்ந்தவர்களை   அன்னை,   "அவர்களே நகரத்தின்  முதற்  குடிமக்கள்''  என  அறிவித்தார்.  மண்ணில்  புதுவை புண்ணிய  பூமி.  மனதில்  அன்னையைப்  பிரதிஷ்டை  செய்தால்  அது புண்ணியம்  சுரக்கும்  ஊற்றாகும்.

கர்மயோகி



book | by Dr. Radut