Skip to Content

7. தெய்வ தரிசனம் 2

ஒரு புது ஊருக்குத் திருட வந்தவன், பாகவதப் பிரசங்கம் நடக்குமிடத்தில் உட்கார்ந்தான். பிரசங்கி கிருஷ்ணன் போட்டிருந்த நகைகளை வர்ணித்தார். அன்றிரவு அவர் வீட்டில் புகுந்தான். அவரை எழுப்பினான். அந்த நகைகளைக் கேட்டான். அதைப் போட்டிருப்பவர் எங்கிருக்கிறார் என்றான். பாகவதர் கிருஷ்ணபரமாத்மாவின் விலாசத்தைக் கொடுக்க நினைத்து பிருந்தாவனத்தைச் சொன்னார். கொஞ்ச நாள் கழித்து, திருடன் பாகவதரைப் பார்க்க வந்து, நிறைய நகைகளைக் கொடுத்து, "இது உன் பங்கு, பாதி'' என்றான். பாகவதருக்குப் புரியவில்லை. ''நீ சொன்ன இடத்திற்குப் போனேன். நகை போட்டுக்கொண்டு அங்கு அவரிருந்தார். அதை எடுத்து வந்தேன்" என்றான். பாகவதர் கண் கலங்கினார். "உனக்கு இருக்கும் பக்தி எனக்கில்லை. நம்பிக்கையோடு போய், கிருஷ்ண தரிசனம் செய்து விட்டாய்; எனக்கும் காட்டு'' என்றார். இருவரும் போனார்கள். தரிசனம் கிடைத்தது. பரமாத்மா திருடனைப் பார்த்து "உனக்கு என்ன வேண்டும்?'' என்றார். "நான் தினமும் உன்னை ஒரு முறை தரிசிக்க வேண்டும்'' என்றான் திருடன். தெய்வம் தரிசனம் தந்தபின் திருடனுக்கு மனம் வேறெதையும் நாடாது.

கனவு, சூட்சுமப் பார்வை, ஞானதிருஷ்டி,hallucination, ஆலயதரிசனம், கவிஞர் இயற்கையை அகக்

காட்சியாகப் பார்ப்பது ஆகியவை நாம் அறிந்தது. ஆவி வேறு, ஆன்மா வேறு, இறந்தவர் ஆவி கொஞ்ச நாள் அதே இடத்தைச் சூழ்ந்திருக்கும். அதைப் பார்ப்பவர்களுண்டு. நாளைக்கு வர இருப்பவர் இன்று கண்முன் நிதர்சனமாகத் தெரிவது சூட்சுமப் பார்வை. கவிஞனின் மனம் விரிந்து இயற்கையில் தெய்வத்தைக் கண்டு அதனால் அவனுக்குக் கவி எழுகிறது. (Wordsworth) வேர்ட்ஸ்வொர்த் என்ற ஆங்கிலக் கவிஞர் மலை உயிர்பெற்றெழுந்து நகருவதைக் கண்டேன் என்றார். இந்தப் பார்வை பல்வேறு காரணங்களால் பலவகைப்பட்டவர்க்குண்டு. ஞான திருஷ்டி உயர்ந்தது. ஞானத்தால் ஏற்படும் திருஷ்டி, தெய்வ தரிசனத்தைப் பெற்றுத் தரவல்லது.

Life Divine என்ற நூலில் சச்சிதானந்தத்தில் சத்து எனக் குறிப்பிடுவதைப் பற்றி ஓர் அத்தியாயம் உள்ளது. அதில் அறிவு, புலன்களிலிருந்து விடுபட்டால் ஞானம் ஏற்படுகிறது என்று குறிப்பிடுகிறார். அதுபோன்ற பக்குவம் உடையவர்கள் உண்டு. ஏதோ வேலையாக இருக்கும்பொழுது மனக்கண்முன் உள்ள திரை விலகி உலகம் ஒரு க்ஷணம் பளிச்சென்று திருவுள்ளப்படி காட்சியக்கும் என்கிறார். பலரும் இதை ஏதோ ஒரு சமயம் கண்டிருப்பார்கள். யோகத்தை மேற்கொண்ட வர்க்கு அடிக்கடி இந்தக் காட்சி தரிசனமாகக் கிடைக்கும். பக்குவமான ஆத்மாவுக்குப் பவித்திரமான நேரத்தில் வாழ்வில் ஒருமுறை இந்தத் தரிசனம் கிடைக்கிறது. இது தெய்வ தரிசனம். உலகம் மாயையில்லை. இறைவனின் திருவுருவம் என்பது நிதர்சனமாகிறது.

பக்குவமானவர்களுக்கு, பவித்திரமான நேரத்தில் வாழ்வில் ஒரு முறை கிடைக்கும் தெய்வ தரிசனத்தை அன்னை அவர் பக்தர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நெகிழ்ந்த போதெல்லாம் அருளுகிறார். அனுதினமும் இதை அனுபவிப்பவர்களும் உண்டு. அழைப்பை மேற்கொள்பவர்கள் கண்ணை மூடினால் தரிசனம் கிடைக்கிறது என்பார்கள்.

வானில் தெய்வம் கோபுரம் போல் உயர்ந்து அடிக்கடி காட்சிக் கொடுப்பதுண்டு. காட்சி வேறு உருவத்திலும் சாந்தியாகவும் மௌனமாகவும் வருவதும் உண்டு.

புரந்தரதாசர் மனைவிக்கு வந்த இழுக்கினை அகற்ற இறைவன் விஷத்தில் வைர மூக்குத்தியைத் தந்தார். அதனால் புரந்தரதாசர் மனம் மாறினார். கணவனை அறியாமல் ஏழைக்கு வைர மூக்குத்தியைத் தானம் செய்தவர், அவர் தம் கணவன் கடையில் அதை விற்கப் போவான் என நினைக்கவில்லை. கணவன் விழித்துக் கொண்டு, மூக்குத்தி எங்கே என்றார். மனைவி ஆபத்திலிருந்து தப்ப விஷத்தை நாடினாள். இறைவன் விஷத்தினுள் வைரமூக்குத்தியாக வந்தார். ஆபத்து விலகியது. கருமியான புரந்தரதாசர் பக்தரானார். காரைக்கால் அம்மையாருக்குத் தெய்வம் மாம்பழமாகக் காட்சி அளித்தது. தெய்வம் எந்த ரூபத்திலும் காட்சியக்கும்.

ஆகஸ்ட் 15, தரிசனத்திற்கு வருவதற்கு முன் டாக்டர் ஓர் ஆபரேஷன் செய்தார். தரிசனத்திற்குக் கிளம்பினார். வியாதியஸ்தர் மனம் உடைந்தார். மறுநாள் அவருக்குச்

சிறு நீர் பிரியவில்லை. டாக்டரை மன்னிக்க மனமில்லை. நொந்து கொண்டார். அது சமயம் யாரோ ஒருவர் வந்து படுக்கை அருகில் நின்றார். இவர் கால் கட்டை விரலைப் பிடித்து உலுக்கினார். உபாதை மறைந்தது. நீர் பிரிந்தது, தரிசனம் முடிந்து டாக்டர் வந்தார். நடந்தது கேள்விப்பட்டு யார் இதைச் செய்தது என்று எல்லாரையும் விசாரித்தார். தெரியவில்லை. வியாதியஸ்தரை விளக்கமாக, வந்தவர் அடையாளம் கேட்டு ஸ்ரீ அரவிந்தர் படம் ஒன்றைக் காட்டியும் கேட்டார்கள். இவர்தான் வந்தார் என்றார் வியாதியஸ்தர். பக்தன் விட்டுவிட்டு வந்த வியாதியஸ்தரைக் கவனிக்க தெய்வம் வந்து தரிசனம் கொடுத்தது.

அன்னையைத் தரிசனம் செய்தபின் அடுத்தாற் போல் பகவான் தரிசனம் என முதலில் ஏற்பாடு செய்தபொழுது, அன்னையை ஏற்றுக் கொள்ள முடியாத பக்தர் தலைவிதியே என கியூவில் வரும்பொழுது அன்னையின் பாதங்கள் பொற்பாதங்களாக அவருக்குக் காட்சியளித்தன. தெய்வம் திருவடியாகத் தந்த காட்சிதான் அது.

வாழ்வில் பெரும்பாலோர் நமக்கு அப்படியொன்றும் தெரியவில்லையே என்பார்கள். அன்னை பக்தர்களில் பலர் அன்னை தரிசனத்தைப் பல ரூபங்களில் கண்டுள்ளார்கள்.

தரிசனம் என்றால் என்ன?

ஜீவன் என்றும் ஜோதியாக இருக்கிறான். ஆனால் அவன் உள்ளே மறைந்து புதைந்திருக்கிறான்.

மேலெழுந்தவாரியாகத் திரை படிந்துள்ளது. திரை விலகுவதில்லை. ஜீவன் எழுச்சியடையும் நேரம், திரை விலகும் நேரம் மின்னலாக, தரிசனம் கிடைக்கிறது. இது உள்ளுறை ஜீவனின் தரிசனமாகவே அமையும். பகவான் அன்னை பிறந்த நாளில் புறச் சூழ்நிலை கனிந்து முதிர்ந்திருப்பதால், சூழ்நிலை நம்முள் நுழைந்து தரிசனம் தருவதுண்டு. கப்பல் ஓம் என உறுமியதை அன்னை கேட்டார். தரிசனம் பெறும் பக்குவமுள்ள வர்க்கும் ஒரு நேரம் வாழ்க்கை பிரச்னையாக இருந்தால் தரிசனம் பிரச்னை தீருவதாக அமையும். "இப்பொழுது, இதுதான் வேண்டும்'' என மனம் நினைத்தால் தெய்வ தரிசனம் வாழ்க்கைப் பலனாக அமையும்.

நாம் கனிந்து பெறும் தரிசனம் பக்தியால் கிடைப்பது. அன்னை நம்மை நினைத்துச் செயல் படுவதால் கிடைக்கும் தரிசனம் அருளால் நாம் பெறுவதாகும்.

*******



book | by Dr. Radut