Skip to Content

7. இனிமை

நாக்கு அறிவது சுவை. ஜீவன் அறியும் சுவைக்கு இனிமை எனப் பெயர். பிறர் தம் திறமையால் பெற்றதைக் கண்டு மனம் பதறுவது பொறாமை. பிறர் தம் திறமையால் பெற முடியாததை அவருக்கு அளிக்க முயல்வது தாராள குணம், பெருந்தன்மை, உதாரண குணம் எனப்படும். அப்படி அளிப்பதை மற்றவர் பெற்றுப் பலனடைவதைக் கண்டு மகிழ்ந்து ஜீவன் மலர்வதை இனிமை என்கிறோம். உதார குணம் செயல்படுவதால் ஜீவனை இனிக்கச் செய்வது தெய்வம், இறைவன்.

ஒரு தரிசனத்தின்போது அனந்தத்திலிருந்து ஒரு ஜீவன் வெளிவந்து அன்னையை உற்றுநோக்கியது என்கிறார். அந்த ஜீவனின் தன்மையை உதார குணம், இனிமை கலந்தது என விவரிக்கின்றார் அன்னை.

இன்பம், துன்பம் என்பதை நாம் அன்றாடம் அறிவோம். சுதந்திரத்தை இழந்த நிலையில் உணர்வு பெறுவது துன்பம் எனவும், சுதந்திரம் பெற்ற நிலையில் உணர்வடைவது இன்பம் எனவும் அன்னை கூறுகிறார்.

தாராள குணம் மலர்ச்சியால் ஏற்படுகிறது. நம் அனுபவத்தின் சாரத்தைக் கிரகித்து தன்னகத்தே பெற்றிருப்பது சைத்திய புருஷன். அனுபவம் மலர்ச்சி யளிக்கிறது. அனுபவத்தின் சாரம் இனிமையை

ளிக்கிறது. சாரம் சுருக்கத்தால் ஏற்படுகிறது. மலர்ச்சி விரிவான செயல். இறைவன் என நாம் அறிவது மலர்ச்சியும், சுருக்கமும் சேர்ந்ததாகும். இவை எதிரான தன்மைகள். எதிரான தன்மைகள் எப்படி ஒரே இடத்தில் சேர்ந்திருக்கும்?

பிறந்தவன் இறப்பான் என்பது மனித சட்டம். இறப்பில்லாதவன் இறைவன். மனிதன் கண்ட மானவன். இறைவன் அகண்டம். எடுத்தால் குறைவது இயல்பு. எடுக்க எடுக்கக் குறையாதது அக்ஷய பாத்திரம், இறைவன் அளிப்பது. எதிரெதிரான குணங்கள் சேர்ந்துள்ளதே இறைவன் இயல்பு. எனவே உதார குணமும் இனிமையும் அவனில் சேர்ந்து உறைகின்றன.

இனிமை தெய்விகமானது. மனிதர்களில் பலரை நாம் அதுபோல் காண்கிறோம். கல்லூரி மாணவன் ஒருவன். சக மாணவர்கள் அவனுடன் பழக, பேச, இருக்க விரும்புவார்கள். அதற்காக எதையும் விட்டுக் கொடுப்பார்கள். கல்லூரி முடிந்தபின் அவனுடன் நடந்துபோக மாணவர்கள் அவன் வண்டியைச் சுற்றிக்கொண்டு இருப்பார்கள். சில சமயங்களில் அவன் பஸ் ஏறி அவர்களை அறியாமல் வீட்டிற்குப் போய் விடுவான். மாணவர்கள் மணிக்கணக்காக அவனுக்காகக் காத்திருப்பார்கள். ஏதோ காரணத் திற்காக அவன் நண்பர்களுடன் பேசுவதை நிறுத்தி விட்டால், அவர்கள் மற்றவர்கள் மூலமும், அவன் பெற்றோர் மூலமும் சிபாரிசு செய்து அவனைப் பேசச் சொல்லிக் கேட்பார்கள். கோயிலுக்குப் போய் அவன்

தன்னிடம் பேசவேண்டுமெனப் பிரார்த்தனை செய்வார்கள்.

ஆபீஸில் வேலை செய்யும் பெண்மணிக்கு இக்குணம் உண்டு. போகுமிடத்தில் யார் குழந்தையையாவது வாங்கி இடுப்பில் ஐந்து நிமிஷம் வைத்துக் கொண்டால் மீண்டும் குழந்தை தாயாரிடம் போக மறுக்கும். ஆபீஸில் இவரை, பத்துப் பேர் சூழ்ந்து கொள்வார்கள். ஓரிரு நாள் பழகியவர்களும் நெடு நாளைய நண்பர்போலவும், உறவினர்போலும் பழகுவார்கள். கொஞ்ச நாள் பழகியவர் வீட்டிலும் சொந்தமாகப் போய் சமையல் அறையில் உட்கார்ந்து, சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். வயதான பெண்கள், சமவயதினர் போல் பழகுவார்கள். வயதில் குறைந்த பெண்கள் கெட்டியாகப் பிடித்துக் கொள்வார்கள். பஸ்ஸில் சில நிமிஷம் பழகினாலும் மற்ற பெண்கள் ஆர்வமாகப் பேசுவார்கள்.

இனிமையுடையவர்களுடைய குணம் இது. முகத்தில் தெரியும் இனிமையைக் களை எனவும், செயலில் வெளிப்படும் இனிமையை இராசி எனவும், ஜீவனின் இனிமையை அம்சம் எனவும் வழக்கில் சொல்கிறோம். இனிமை தெய்விகக் குணம் என்றாலும், அது ஒரு குணம். பொதுவாக உயர்ந்தவற்றைத் தவறான காரியத்திற்குப் பயன்படுத்துவது கடினம். இருந்தாலும் இது ஒரு குணம் என்ற அளவில் ஒரு கருவியாகும். எப்படிப் பயன்படுத்து கிறோம் என்பது மனிதனைப் பொருத்தது. கடத்தல் உள்ளவர்கள் அது போன்ற தவறான காரியங்களில் ஈடுபட்டவர்களுள் சிலருக்கும் இனிமை இருப்பதுண்டு.

லிப்பூர் ஜெயில் ஸ்ரீ அரவிந்தர் "கொலையாளிகள் மனதில் கருணையைக் கண்டேன்'' என்றார்.

இனிமை உயர்ந்தவர்களிடம்தான் காணப்படும் என்பது பொது. யாரிடமும் காணப்படும் என்பது விதிவிலக்கு. பிறப்பு, வளர்ப்பால் தாழ்ந்த குணம் உடையவனிடம் இனிமை இருந்தால், அவன் இனிமை அவனது தாழ்ந்த செயல்களைச் சாதிக்கப் பயன்படும். இது அபூர்வம் என்றாலும் இதுவும் உண்டு.

அழகு, அறிவு, செல்வம், பதவி பொதுவாக உயர்ந்தவர்களிடமும், விலக்காகத் தாழ்ந்தவர்களிடமும் காணப்படும். யாரிடம் காணப்படுகிறதோ, அவர் களுடைய குறிக்கோளே பலிக்கும். இனிமையின் உயர்வு, அவர்களுடைய குணாதிசயங்களை மீறித் தன்னை வலி யுறுத்தாது. பிரம்மம் ஜடத்தில் வெளிப்பட்டால், அது பிரம்மத்தின் உயர்வைக் காட்டாது. ஜடத்தின் தன்மை யையே முக்கியமாகக் காட்டும். அதனால் அதற்கு ஜடப்பிரம்மம் என்று பெயர்.

அன்னையை வழிபட ஆரம்பித்ததிலிருந்து நம் வாழ்வில் இனிமை அதிகப்படுவதைக் காணலாம். ஜுரம் வந்தால், போன பிறகு வாய் கசக்கும். வாய்க்கசப்பு நோயைக் குறிக்கிறது. ஆழ்ந்த தியானம் பலித்தபின், சமாதி தரிசனம் செய்தபின், அமைதியை மேற்கொண்ட பின், அன்னை நினைவு தன்னை மீறி எழும்பொழுது, வாயும், வாயிலுள்ள எச்சிலும் சுவையாக இருப்பதைக் காணலாம். இது சைத்திய புருஷன் ஆழத்திலிருந்து வெளிவர முயல்வதைக் காட்டும். இது அன்னையின் இனிமை. இது போன்ற சமயத்தில் யார் மீதாவது நம் கைபட்டால், தொட்ட

இடம் இனிப்பதாக அவர்கள் கூறுவார்கள். இனிமை மேலிட்ட பின் அவர் பேச்சு கேட்பவருக்கு இனிக்கும். அன்னையின் அறையைத் தரிசனம் செய்ய உள்ளே நுழைந்தால் உடலெல்லாம் இனிப்பதை உணரலாம். அன்னையின் சூட்சும உடல் அறை முழுவதும் இருப்பதால் அதன் ஸ்பரிசம் நம் உடலை இனிக்கச் செய்கிறது.

சோகமானவர்கள் அன்னையிடம் தங்கள் சோகத்தைப் பற்றிப் பேசினால், யோகத்தை மேற் கொண்டவர்களுக்குச் சோகத்தைவிட சந்தோஷம் உதவும் என்று அன்னை பதில் சொல்வது வழக்கம்.

ஒரு காரியம் தவறினால் அல்லது பிரச்னை உருவானால் நாம் மனம் உடைந்து கலங்கி விடுகிறோம். காரியத்தை நினைத்தால் மனம் பயத்தால் நிரம்பி, சோகம் வருகிறது. காரியத்தை நினைப்பதற்குப் பதிலாக அன்னையை நினைத்தால் பயம் குறையும். காரியத்தை ஒதுக்கி, அன்னையை மட்டும் நினைத்தால் பயம் திடீரென மறைந்து போகும். இனிமை உற்பத்தியாகும். புன்னகை மலரும். அத்துடன் கெட்டுப் போன காரியம் எளிதில் கூடிவரும். இடுக்கண் வருங்கால் நகுக' என்பதன் பொருள் இதுவே. அன்னையின் இனிமையை உணர்வது அன்னை ஞானம்.

நல்ல விசேஷங்களில் நாம் இனிப்பு வழங்கு கிறோம். குழந்தைகளைப் பார்க்கப் போனாலும், மகான்களைப் பார்க்கப் போனாலும் இனிப்பு எடுத்துப் போகிறோம். ஆன்மாவின் இனிமையை நாம் இனிப்புப் பண்டங்கள் மூலம் வெளிப்படுத்துகிறோம். மாம்

பழத்திற்குப் பழங்களில் சிறந்தது (King of fruits) எனப் பெயர். இனிமை நிறைந்த பழம் அது. மாம்பழத்திற்கு அன்னையிட்ட பெயர் (Divine wisdom) தெய்விக ஞானமாகும். இனிமை தெய்வம். இனிமையைத் தாங்கி வருதல் தெய்விக ஞானம்.

*******



book | by Dr. Radut