Skip to Content

1. புண்ணிய பூமி

பெரிய கோயில்கள் உள்ள இடங்கள், மகான்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களை நாம் போய்த் தரிசனம் செய்தால் அது புண்ணியம் என்பது நம் நாட்டுப் பழக்கம். முகம்மதியர்கள் மெக்காவை நோக்கி மண்டியிட்டுத் தொழுவார்கள். அந்த இடங்களை நாம் புண்ணிய பூமி என அழைக்கின்றோம். அதனால் ஏராளமான பக்தர்கள் காசிக்குப் போய் கங்கா ஸ்நானம் செய்கிறார்கள். 108 கும்பாபிஷேகங்கள் பார்த்தால் நல்லது என்பது கருத்து.

ஒரிசாவிலிருந்து ஓர் இளைஞர் ஆசிரமம் வந்தார். மூன்று நாள்கள் தங்கியிருந்தார். பெரிய பட்டம் பெற்று ஒரு கம்பெனியில் உயர்ந்த உத்தியோகத்தில் இருப்பவர் இவர். ஒரிசா மாநிலத்திலிருந்து ஏராளமான பேர் ஆசிரமம் வருகிறார்கள். இருபது ஆண்டுகட்கு முன் ஒரிசாவில் 1000 அன்னை மையங்கள் இருந்தன. இப்பொழுது அதிகமாக இருக்க வேண்டும். அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும் ஒரிசா நன்கு அறியும். ஒரிசா சர்க்கார் முழுவதும் ஒரு சமயம் அன்னை பக்தர்களாக இருந்தவர்கள். ஒரிசா முன்னேறத் தயாராக உள்ளது என்று அன்னை அப்பொழுது சொன்னார்.

வந்த இளைஞர் மனநிறைவு பெற்றார். அதுவே அவருக்கு முதல் முறை ஆசிரமத் தரிசனம். தாம் பெற்றதை மனநிறைவு என்று சொன்னால் தாம்

அனுபவித்தது முழுவதையும் சொன்னதாகாது என்றும் நினைத்தார். வீடு திரும்பியபின் தாம் அனுபவித்த உயர்ந்த உணர்வுகளை அனைவருக்கும் சொல்ல ஆர்வமாக வீடு திரும்பினார். வீட்டில் நுழைந்து பெட்டியை வைத்தவர் முகம் அலம்பி விட்டு, தம் அனுபவத்தை வீட்டினருக்குச் சொன்ன பிறகே குளிக்கப் போவதாக முடிவு செய்தார். முகத்தில் தண்ணீரைத் தெளித்தபொழுது, வீட்டில் ஒரே ஆரவாரம். "என்ன நடந்தது?'' "முகத்தைப் பார்த்தாயா?'' "ஆளே முழுவதும் மாறிவிட்டார் போலிருக்கிறதே'', "இது நம்ம அப்பா மாதிரியில்லையே'', "ஏதோ நடந்திருக்கிறது, என்னவென்று தெரியவில்லை'', "இப்படியும் நடக்குமா?'' என்றெல்லாம் கூக்குரல் கேட்டுக்கொண்டு இருக்கும் பொழுது, தம் கையைப் பிடித்து அண்ணன் இழுப்பதைக் கண்டு "முகத்தை அலம்பிவிட்டு வருகிறேன்'' என்றார். அவரை முகம் அலம்ப விடவில்லை. இழுத்துப்போய் உட்கார வைத்து, அனைவரும் சூழ்ந்து கொண்டு, அடுக்கடுக்காக ஆயிரம் கேள்விகளை ஆச்சரியமாகக் கேட்டு, கேட்டதையே மீண்டும் மீண்டும் கேட்டு, அவர் முகத்தை, தங்கள் பார்வையால் சூழ்ந்து, ஆச்சரியத்தை வெளிப்படுத்தி னார்கள். 5 மணி நேரமாயிற்று அவர் விடுபட்டு முகம் அலம்ப. தம்மை ஆசிரமம் அழைத்துப் போன சென்னை நண்பருக்குத் தம் அனுபவத்தை விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

பெருஞ் செல்வரின் பெண்கள் இருவர். பெற்றோர் செல்வத்தை அளித்த பின் அவர்களை, சகோதரர்கள்

ஆதரவில் விட்டுவிட்டு இறைவனடி எய்தினர். சகோதரர்களுடைய பாசம் அவர்களின் மனைவிகட்கு அடக்கமாக இருந்தது. மனத்தில் தங்கைகள் மீதுள்ள பாசத்தைப் பொறுப்பாக வெளியிடும் அளவுக்கு அவர்கள் திருமணம் சுதந்திரம் தரவில்லை. பெரிய பெண்ணின் வாழ்வு துக்கமே உருவாயிற்று, சிறிய பெண் ஹைகோர்ட் வக்கீல். வாழ்க்கையில் எதற்கும் குறைவில்லை என்ற சூழ்நிலை மாறி ஏதுமே இல்லை, நாங்கள் ஆதரவற்றவர்கள் என்ற மனநிலை உருவாகிப் பெண்களுக்கே உரிய பயம் அதிகமாகி, விரக்தி ஏற்பட்டு, எதை நினைத்தாலும் மனம் பேதளிக்கும் நிலை வந்துவிட்டது. அழுகை சொந்தமாகிவிட்டது. தற்செயலாய் அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டார்கள். சமாதி தரிசனம் செய்தார்கள். பலமுறை அன்னையை நாடி வந்தார்கள். ஓரளவு அன்னையைப் பற்றிப் படித்தும் கேட்டும் தெரிந்து கொண்டார்கள். வாழ்வு நிலை எதுவும் மாறவில்லை. ஆனால் மனம் மாறிவிட்டது. பயம் மறைந்துவிட்டது. தைரியம் வந்தது. சிரிக்க முடிகிறது. முகம் தெளிவாகிவிட்டது. பிரகாசமாகவும் உள்ளது. இனி வாழ்வில் நமக்கு அன்னையிருக்கிறார் என்ற நம்பிக்கை பிறந்து விட்டது. இந்நிலையில் காணும் உறவினர்கள் எல்லாம், "என்னவோ உங்கள் வாழ்வில் நடந்திருக்கிறது. சொல்லமாட்டேன் என்கிறீர்கள். ஏதோ பெரிய காரியம் நடந்துவிட்டது. மறைக்கின்றீர்கள். மாற்றம் என்றால், முழுவதும் இருவரும் மாறிவிட்டீர்கள். என்ன நடந்தது!'' என்று கேட்கிறார்கள். நடந்தது உண்மைதான். ஆனால்

அவர்கள் நினைப்பதைப் போல்லிலை. மனத்துள் அன்னை வந்து மனநிலையை மாற்றி விட்டார்கள். மனம் ஒளியால் நிரம்பியதை மற்றவர்கள் முகத்தில் பிரகாசமாகப் பார்க்கிறார்கள்.

பாங்க் ஆபீசர் மனைவி தம் பையன் பட்டப் படிப்பை முடித்து எதிலும் பிடித்தமில்லாமல், கோணலாகப் பேசுவதைக் கண்டு மனம் பதறி, எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற நிலையில் மகனை நல்லதனமாகச் சமாதி தரிசனம் செய்ய வைத்தார். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் அதைச் செய்து முடித்தார். அடுத்த நாள், என்ன இது, என் பையனா, நேற்றைய பேச்சைக் காணோம், என்ன நடந்தது, ஆளே முழுவதும் மாறிவிட்டானே, இப்படி நடப்பதும் சாத்தியமா என ஆச்சரியப்பட்டு, தம் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி அன்னையைப் பற்றி எழுத ஆரம்பித்து விட்டார்கள்.

புண்ணியபூமி புதுவை, சமாதி தரிசனம் பாபவிமோசனம் என்பதை அநேக அன்பர்கள் சொந்த அனுபவத்தில் கண்டு கொண்டதை நம்ப முடியாம லிருப்பதும் உண்டு.

******



book | by Dr. Radut