Skip to Content

2. ஆரோவில் நகரம்

வாழ்வின் தேவைகளுக்காக மனிதன் நாள் முழுவதும் உழைக்காமல், அத்தேவைகள் அவனுக்கு வழங்கப்படுமானால், மனிதனால் இறைவனை முழுமையாக நாடமுடியும். அதுபோன்ற இடம் ஒன்றை உலகில் நிறுவவேண்டும் என்ற கனவு அன்னைக்கு இளம் வயதிலிருந்தே உண்டு. ஆரோவில் நகரம் அக்கனவைப் பூர்த்தி செய்தது. உலகப் போர் முடிந்தவுடன், அடுத்த போர் எப்பொழுது கிளம்பும் என்ற கேள்வி சுமார் 25 வருஷங்களாக உலகில் வலுவாக உலவியபொழுது, ஆன்மிக முறையில் அப்போர் மூளாது தடுக்க வேண்டும் என்ற எண்ணம் அன்னைக்கு இருந்தது.

இறைவனை நாடும் நகரம் ஒன்று அமைக்கப் பட்டால், அந்நகரில் உள்ள மக்கள் இறை ஆர்வத்தின் சின்னமானால், அந்தச் சின்னத்தால் உலகப் போரைத் தடுக்க முடியும் என்பது ஆன்மிகத் தத்துவம். மனித மனத்தின் பிணக்குகளின் மோதல் உலகப்போரின் அடிப்படை என்பதால், அப்பிணக்கொழிந்த மனிதர் குழாம் அமைதியின் சோலையாக ஆன்மிக ரீதியில் அமைவதால், சூட்சும உலகில் அமைதி நிலைத்துவிடும். நிலைபெற்ற அமைதி ஸ்தூல உலகில் போர் மூண்டு வருவதைத் தடுக்கவல்லது.

எல்லா நாட்டு மண்ணையும் கொணர்ந்து நகரத்திற்கு அஸ்திவாரமாக இட்டனர். நகரத்தின் ஜீவனாக மாத்ருமந்திர் அன்னையின் கோயில்

எழுப்பப்பட்டது. கோளவடிவில் தன்னுள்ளே ஒரு தியானக் கூடத்தைப் பெற்றது மாத்ருமந்திர். ஒரு பங்குக் கோளத்தின் மூலம் பகல் முழுவதும் சூரியஒளி தானே தியானக் கூடத்தில் நுழையும் ஏற்பாடு அதில் முக்கிய இடம் பெறும்.

50,000 பேர் வாழத் திட்டமிட்ட இந்நகரில் 1968 இல் அது நிர்மாணிக்கப்பட்டதிருந்து இன்றுவரை சுமார் 500 பேர் வந்து தங்கியுள்ளார்கள். அன்னை அந்நகரத்தைப் பற்றிச் சொல்லிய பல விஷயங்களைச் சேகரம் செய்து கொடுக்கின்றேன்.

ஆரோவில் என்ற சொல்லில் வில் என்பது பிரெஞ்சுச் சொல், ஊர் என்ற பொருள் பெறும். ஸ்ரீ அரவிந்தர் (Sri Aurobindo) என்றதிலிருந்து Auro என்பது எடுக்கப்பட்டது. ஆரோவில் என்றால் ஸ்ரீ அரவிந்த நகரம் என்றாகும்.

"ஆரோவில்லின் பக்திக்குச் சின்னமாக மாத்ருமந்திர் அமையும்'' என்றார் அன்னை.

ஆரோவில் தரிசனம்

  1. ஆரோவில் மனித குலத்தினுடையது. எவருக்கும் சொந்தமானதன்று.
  2. அழியா இளமையும், தணியாத ஞான ஆர்வமும், இடையறாத முன்னேற்றமும் ஆரோவில்லுக்குண்டு. தன்னை வென்று, ஆன்மிக முன்னேற்றத்தை மட்டும் நாட ஓர் இடம் இவ்வளவு நாள் கழித்து ஏற்பட்டது.

போட்டியின்றி வாழ ஓர் இடம் கிடைத்தது.

எந்த ஒரு கருத்தையும் மற்றவர் மீது திணிக்க முடியாத ஓர் இடம் முடிவாக நிறுவப்பட்டது.

முன்னோடியாக ஆசிரமம் என்றும் போல் திகழும். ஆரோவில் நகரத்தில் அனைவரும் கூடிச் சாதிக்க முயல்வார்கள்.

ஆசைகளைப் பூர்த்தி செய்யும் இடம் ஆரோவில் இல்லை. ஆன்மிகம் முன்னேறும் கோயில் ஆரோவில்.

மனிதகுலத்தை ஒன்றுபடுத்தும் எந்த முயற்சியையும் ஆரோவில் ஏற்கும்.

கட்டுப்பாடின்றி எதையும் சாதிக்க முடியாது.

தனி மனிதனுக்குக் கட்டுப்பாடு தேவை.

ஸ்தாபனத்திற்குக் கட்டுப்பாடு தேவை.

இறைவனை நோக்கிச் செல்லும் தவமுயற்சி கட்டுப்பாடாகும்.

பூமாதேவிக்கு இன்றியமையாத நகரம் ஆரோவில்.

உண்மையான ஆரோவில்லியனாக இருப்பதெப்படி?

  1. முதற்காரியமாக உள்ளுறை இறைவனைக் காண வேண்டும்.
  2. சமூகத்திலிருந்து, மற்ற கட்டுப்பாடுகளினின்றும் விலகி சுதந்திரம் பெற ஒருவர் ஆரோவிலுக்கு வருகிறார். புதிய ஆசைகளுக்கு அதனால் அடிமைப்படுவது சரியாகாது.
  3. சொந்த சொத்து என்ற உணர்வை ஆரோவில்லி யன் இழத்தல் அவசியம்.
  4. உள்ளுறை இறைவனைக் காண உடலுழைப்பு அவசியம்.
  5. புதிய மனிதன் பிறக்க வேண்டி பூமி தன்னைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
  6. புதிய மனிதனைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிய வேண்டும். அதுவரை ஆத்ம சமர்ப்பணத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஆரோவில் நிர்மாணிக்கப்பட்ட பொழுது அங்கு இதுவரை குடியிருந்தவர்களைப் பற்றி அன்னையைக் கேட்டபொழுது அவர்களே ஆரோவில்லின் முதற் பிரஜைகள் என்றார்.

ஆரோவில் நிர்மாணத்தைப் பரம்பொருள் தொடங்கினார். அதற்குரிய பணத்தைப் பரம்பொருள் தருவார். பரம்பொருளின் சிறப்பைப் பெற முயல்வதே அங்கு வாழும் நோக்கம். இங்கு வாழ்வே யோகமாக அமையும். ஆரோவில்லுக்கும் ஆசிரமத்திற்கும் உள்ள சம்பந்தத்தைப் பரம்பொருள் நிர்ணயிப்பார். இனியும் குடும்பம் தேவைப்பட்டவர்கள் குடும்பமாக வாழலாம். மதக்கோட்பாட்டைத் தாண்டி வாராதவர் மதத்தைப் பின்பற்றுவர். நாத்திகத்தைக் கடக்காதவர் அதைப் பின்பற்றுவர். எதுவும் ஆரோவில்லில் வற்புறுத்தப் படாது. பணம் நகரத்தினுள் செலாவணியாகாது, வெளித்தொடர்புக்கே பணம் தேவை. இங்குள்ள கட்டடங்களையும், நிலங்களையும் பரம்பொருளே

உரிமையுடன் அனுபவிப்பார். எல்லாப் பாஷைகளையும் பேசலாம் என்று கூறிய அன்னை போக்குவரத்து எப்படி அமையும் என்றதற்கு, தமக்குத் தெரியாது என்றார்.

********



book | by Dr. Radut