Skip to Content

3. ஏரிக்கரை

மகாராட்டிர மாநிலத்தில் ஒரு சமயம் வானம் பார்த்த பூமி, அதற்கேயுரிய வறுமை. வறுமையின் மற்ற சின்னங்களான திருடு, படிப்பின்மை, சாராயம் காய்ச்சுதல் ஆகியவை மலிந்திருந்தன. ஆரம்பப்பள்ளி மட்டும் இருந்தது.

இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுத் தம் சொந்தக் கிராமத்திற்குத் திரும்பியவர், தம் கிராமத்தின் நிலையைக் கண்டு, மனம் நொந்து, தாம் ஏதாவது செய்ய முடியுமா என்று கருதி, யோசனை செய்த பொழுது, யார் மூலமாகவோ அவருக்கு ஒரு கருத்து கிடைத்தது. அதை அவர் நம்பினார். கிராமம் வறட்சியால் இப்படியிருக்கிறது. நீர்வளத்திற்கு வழி ஏற்பட்டுவிட்டால் வறட்சி போய் விடும். ஆறு, ஏரி, நீர்ப்பாசன வசதியில்லாத ஊருக்கு எப்படி நீர்வளம் கிடைக்கும்? பம்ப் செட் போட்டு நீர் பாய்ச்சலாம். நீர்மட்டம் வெகு ஆழத்திலிருப்பதால் பம்ப் தண்ணீரை எடுக்காது. அவருக்குக் கிடைத்த யோசனை மிக உயர்ந்தது. ஓர் உபாயத்தால் நீர்மட்டத்தை உயர்த்தலாம். அந்த உபாயம் அவருக்குக் கிடைத்தது. ஊரில் நீரோட்டம் ஓடும் பிரிவின் நடுவில் ஒரு கரையைக் கட்டினால் மழைநீர் வழிந்து ஓடுவதைக் கரை தடுக்கும். இது ஏரிக்கரை போலிருக்கும். மழை அதிகமாக இல்லாததால் கரையால் தடுக்கப்பட்ட நீர் பூமியில் ஊறி மறைந்து போகும். பூமிக்கு மேல் ஏரியாகத் தங்கி

நீர்ப்பாசனத்திற்கு உதவாது, உதவாது என்றாலும், கடலை நோக்கி ஓடுகின்ற நீர், கரையால் தடுக்கப்பட்டு பூமியில் ஊறுவதால், நீர்மட்டம் உயரும் என்பது தத்துவம். சுமார் 50 அல்லது 100 ஆண்டுகளாக இன்ஜினீயரிங் கல்லூரிகளில் போதிக்கப்படும் பாடம் இது. ஆசிரியர், மாணவர்கள் இதை நம்புவதில்லை. இதெல்லாம் நடக்காது. வீண் முயற்சி என்று பாடத் தோடு சொல்வார்கள். இதெல்லாம் பாடத்திற்குச் சரி, நடைமுறைக்கு ஒத்து வாராது என்பார்கள். எல்லா இன்ஜினியர்களுக்கும் தெரிந்த உபாயம் இது.

ஆசிரமத்தில் இதுபோன்ற வறண்ட எஸ்டேட் ஒன்றில் கரை கட்டலாம் எனக் கருதி அன்னையைக் கேட்ட பொழுது, அன்னை சம்மதம் தெரிவித்தார். ஏராளமான செலவில் கரை கட்டினார்கள். கரையால் தண்ணீர் தேங்கவில்லை. கரைக்குக் கீழே ஒன்றும் செய்ய முடியாது என்று பரம்பரையாக விட்டுவிட்ட நிலத்தில் 300 ஏக்கர் தென்னை எழுப்பினார்கள். செழிப்பாக வருகிறது.

இராணுவ வீரர் இந்த உபாயத்தை ஏற்றுக் கொண்டார். அவரிடம் பணமில்லை. கிராமத்து மக்களைத் திரட்டினார். சேவை செய்யும்படிச் சொன்னார். இணைந்து ஏற்றுக் கொண்டார்கள். கரை எழுந்தது. அடுத்த மழைக் காலத்தில் தண்ணீர் ஊரைத்தாண்டி ஓடவில்லை. கரை தடுத்தது. ஊரிலுள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்தது. பம்ப் போடும் அளவுக்கு உயர்ந்தது. ஓரிருவர் பம்ப் போட்டார்கள். ஓரிரு வருடங்களில் ஏராளமான பம்ப்

செட் வந்தன. இறைவைப் பயிர் ஊரை வளமாக்கியது. ஒரு வேளை சாப்பாடு மூன்று வேளை சாப்பாடாயிற்று. ஆரம்பப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாயிற்று. திருடு நின்றது. சாராயம் காய்ச்சுவதில்லை. வளமைக்குரிய மற்ற எல்லாச் சின்னங்களும் ஏற்பட்டன. கிராமம் செழித்து விட்டது. இதிலிருந்து நாமறிவது என்ன?

  • 1. சேவா உணர்ச்சி இருந்தால், ஒருவர் முயன்றாலும், ஊர் ஒத்துழைக்கும்.
  • 2. அடிப்படைக் கருத்து சரியானதாக இருந்தால், எளிய முயற்சிக்கும் பெரும் பலனுண்டு.
  • 3. அறிஞர்கள் விலக்கும் கருத்திலும் அறிவும், பயனும் இருப்பதுண்டு.
  • 4. சோதனை செய்யாமல், படித்தவர்களும், ஒரு நல்ல கருத்தை மறுப்பார்கள்.
  • 5. வறுமையின் கடுமைக்கும், வளத்தின் சிறப்புக்கும் உள்ள இடைவெளி சிறியதே.
  • 6. மனிதன் தன்னால் முடிந்ததைச் செய்து விட்டால், தெய்வம் உதவும்.
  • 7. வழியேயில்லை எனப் பலரும் நினைத்தாலும், பலநாள் அப்படியிருந்தாலும், முயற்சிக்கும், சிந்தனைக்கும் வழி ஏற்படுவதுண்டு.

ஓர் எளிய இராணுவ வீரர் செய்த முயற்சியின் பலன் பெரிது, மனிதன் தன் வழக்கமான வாழ்க்கைப் பரீட்சையை விட்டு, தெளிந்து சிறப்படையும் வழிகள் பல. அவற்றுள் சிலவற்றைக் குறிக்கின்றேன்.

தன்னிடம் உள்ள முக்கிய குறை ஒன்றைக் கண்டு அதை விலக்குவது.

தனக்குத் தற்சமயம் இல்லாத ஒரு நிறைவைப் பெறுதல்.

தன் வாழ்வில் தொடர்பின்றித் தனித்தனியே இயங்கும் இரு அம்சங்களை ஒன்று சேர்த்தால் புது வாழ்வு மலரும்.

இரு அம்சங்கள் சேர்ந்ததால் ஏற்படும் தொந்தரவை, அவற்றைப் பிரித்து விலக்குவது.

புது வாய்ப்பு வாழ்வில் உற்பத்தியாவது.

தவறான பண்பொன்றை நல்ல பண்பாக மாற்றுதல்.

இதுவரை எவர் கண்ணிலும் படாத ஒரு பெரிய நல்ல காரியத்தைக் கண்டு பயனடைதல்.

நம் திறமைகளைச் சேர்த்து, திரட்டி அதிகப் பலன் தருமாறு செய்வது.

பலன் தரும் திறன் எது என்று நம் திறனை ஆராய்ந்து தெளிதல்.

நமக்கு ஏற்கெனவேயுள்ள சிறப்பான திறனை வலுப்படுத்துதல்.

அன்னையை வழிபட ஆரம்பித்தபின் மேற்சொன்ன மாறுதல்கள் தாமே தம் வாழ்வில் ஏற்படுவதை அன்பர்கள் கண்டிருக்கிறார்கள். "இப்பொழுதெல்லாம், முன்போல் நீங்கள் மறுத்துப் பேசுவதில்லை'' என நண்பர்கள் ஓர் அன்பரிடம் சொல்லிய பொழுதுதான், தம் வாழ்வில் ஏற்பட்ட மாறுதலை அவர் அறிவார். மறுத்துப் பேசுவதை ஒருவர் நிறுத்தினால் அவர் வாழ்வு

வளம் பெறும். தாம் சிறந்த உழைப்பாளி என்பதை அறியாமல், தம் தகுதிக்கு மூன்று நிலை குறைந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டவருக்கு, அவர் உழைப்பின் திறனை எடுத்துச் சொல்லி, அதற்குரிய உயர்ந்த நிலையை நாட வேண்டும் என்று சொன்னதால், அதை அவர் ஏற்றுக்கொண்டதால், அவர் வாழ்வில் பெரு மாற்றம் ஏற்பட்டது. இந்தியாவில் வேலையில்லாதவர் எண்ணிக்கை அதிகமாவதைத் தடுக்க வழியில்லை என்று நினைத்தபொழுது, இதுவரை எவரும் கருதாத தென்னை நடும் விவசாயத்தில் 10 கோடி வேலையை உற்பத்தி செய்யலாம் என்பதை ஒருவர் கண்டுபிடித்தார். அதன் பலன் நினைப்பும், நிலையும் மாறுவதாக இருக்கிறது. இரகசியம் வலிமை என்று கருதியவரை அது பலவீனம் என்று கருதச் சொன்னவுடன், அந்த மாற்றத்தால் அவர் தொழில் பெருகியது. எஸ்.எஸ்.எல்.ஸி. முடித்து அண்ணனைப் போல் தம்பியும் குமாஸ்தாவாகப் போக முயன்ற நேரம், தற்செயலாய் மற்றொருவர் பாடெக்னிக்கைப் பற்றி எடுத்துச் சொல்லியதால், இன்று அவர் என்ஜினியராகி விட்டார். மனிதன் பொதுவாக முயற்சியுடையவனல்லன். சிலர் முயற்சியிருந்தால் முன்னுக்கு வருகிறார்கள். அதன் முறைகளில் சிலவற்றைக் குறிப்பிட்டேன்.

அன்னையை மனத்தில் ஏற்றுக்கொண்டு, முயற்சியைத் தொடர்ந்தால் அடுத்த உயர்ந்த நிலையில் பெரும்பலன் கிடைக்கும். முயற்சியுடையவர், முயற்சியை முழு முயற்சியாக்கி முழுப் பலன் பெறுபவரும் ஓரிருவர் உண்டு.

முயற்சிக்கு அடுத்த கட்டம் நம்பிக்கை. முழு முயற்சியின் பலனை, நம்பிக்கையால் பொறுமை யாகவும், சாந்தமாகவும் பெறலாம். 10 வருஷமாக சர்க்கார் ஆபீஸுக்கும், மார்க்கெட்டுக்கும், பாக்டரிக்கும் அலைந்து ஒருவர் பெற்ற செல்வத்தை (அரிபொருளாக) மற்றவர் பொறுமையாக இருந்த இடத்திலிருந்தே பெறுவதையும் நாம் ஏதோ ஒரு சமயம் பார்த் திருக்கிறோம். பொறுமையாக இருந்த இடத்திலேயே இருந்து சாதிக்க உழைப்பின் சாரத்தை ஒருவர் பெற்றிருக்க வேண்டும். இது மிக அரிது, என்றாலும் நம் அனுபவத்தில் உண்டு. இராஜேந்திர பிரசாத் உழைப்பாலும், தியாகத்தாலும், இறைச் செல்வத்தாலும், அரசியல் சேவையாலும் பெற்ற பதவியை, இராதாகிருஷ்ணன் மேற்சொன்ன எதுவுமின்றிப் பெற்றார் எனில் அவர் பெற்ற ஞானம் பெரிது.

அன்னையை ஏற்றுக்கொள்வது ஞானம். ஏற்றுக் கொண்டால் அந்த ஞானத்திற்குரிய பலன் உண்டு. நம்பிக்கையோடும், முயற்சியோடும், பொறுமையோடும் ஏற்றுக் கொண்டால், ஆன்மிகத்திலும், வாழ்விலும் பெறும் பலன்கள் பெரியவை.

முயற்சியின் ஆயிரம் உருவங்களில் ஒன்றின் பலனை விளக்கும் ஏரிக்கரையைச் சொல்லி இக்கட்டுரையை ஆரம்பித்தேன். முயற்சியின் முடிவு நம்பிக்கை. நம்பிக்கையின் உயர்வு பக்தி. பக்தியுள்ள நம்பிக்கை சமர்ப்பணத்தில் முடியும்.

நம் ஜீவனை அன்னைக்கு, சமர்ப்பணம் செய்யும் நோக்கம் உயர்ந்தது.

உயர்ந்த அந்த நோக்கம் உடையவருக்குப் பிரார்த்தனை தேவையில்லை.

நமக்குத் தேவையான எதிர்காலத்தை அன்னை தெரிந்தெடுத்து, தாமே நமக்கு வழங்கும் நிலையை அது நம்முள் ஏற்படுத்தும்.

******



book | by Dr. Radut