Skip to Content

1. அன்னை ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கை நிகழ்ச்சிகள் - 1

ஆயிரம் நிகழ்ச்சிகளால் அமைந்த வாழ்வு, ஒரு சமயம் முக்கியத்துவம் பெற்றுவிடும். ஒருவன் தன் சொத்தை இழந்தால் அது அவனுக்கு முக்கியம். மற்றொருவர் பெருஞ் செல்வம் பெற்றால் அது பலருக்கு முக்கியம். அவன் அந்தச் சொத்தைப் பெற்ற விதம் அனைவரையும் கவர்வது போலிருந்தால், அந்தச் செய்தி தானே பரவ ஆரம்பித்தால் வாழ்வு இலக்கியமாக மாறுகிறது. வாழ்வை மறக்கும் உலகம், இலக்கியத்தை மறப்பதில்லை. பொருள் முக்கியமானதென்றாலும், அப்பொருளைப் பெற மனிதன் முயலும் வகையில் அவனது உணர்ச்சிகள், நிகழ்ச்சிகளுடன் கலந்து உணர்ச்சியால் நிகழ்ச்சி நிர்ணயிக்கப்படும் பொழுதும், நிகழ்ச்சியால் உணர்ச்சி பாதிக்கப்பட்டு உயரும் பொழுதும் இலக்கியம் பிறக்கிறது. அந்த இலக்கியத்தின் பேர் உருவங்கள் பல. சிறு உருவங்கள் ஏராளம். உயர்ந்த கருத்தை எளிய மனிதனுக்கு உணர்த்த இலக்கியத்தின் சிறு உருவங்கள் பயன்படுகின்றன. சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற கதையின் உண்மையை நாம் அன்றாடம் வாழ்க்கையில் காண்கிறோம். அழியா உண்மையை அறிவிப்பது அழியா இலக்கியம். தத்துவம் உயர்ந்தது. மனிதனுக்கு எளிதில் புரியாதது. ஆன்மிகம் உன்னதமானது. மனிதனுக்கு எட்டாதது. எட்டாததை அறிவால் தொட முயல்வது மனித இயல்பு. கண்டார் விண்டாரில்லை என்பது ஆன்மிக உண்மையைப் பொறுத்தவரையுள்ள நிலை. கண்டவர் விண்டுரைக்க முடியாததைச் சூட்சும அறிவுள்ளவனுக்கு மனத்தில் படும்படிச் சொல்லும் முறைகளைக் கண்டுகொண்டவர்கள் நம் முன்னோர். அந்தக் கடைசிக் கட்டத்தைத் தவிர மற்ற அனைத்தையும் விளக்குவதில் அதிகத் திறன் பெற்றவர்கள் இந்தியர் என நாம் பெயர் பெற்றிருக்கிறோம். அதற்காக அவர்கள் கையாண்ட முறை analogy, உதாரணத்தால் ஒப்பிட்டு விளக்கும் முறையாகும். அது இந்தியர்களுக்கே தனியாக ஏற்பட்ட சிறந்த முறை. அத்வைதிகளிடம் பிரபலமான analogy பாம்பும், பழுதுமாகும். இன்றுவரை அவர்களிடம் உள்ள முறை அது.

சாதாரண மனிதனுக்குத் தத்துவமோ, ஆன்மிகமோ கொம்புத் தேனாகும். புராணங்களும், காலக்ஷேபங்களும் அவனுக்காக ஏற்பட்டவை. உயர்ந்த தத்துவத்தை அதன் உயர்வு குறையாமல் சொல்பவை காலக்ஷேபங்கள். அவதாரப் புருஷர்கள் வாழ்க்கை வரலாறு பக்தர்களுக்கு முக்கியமானது. இராமகிருஷ்ண உபநிஷதத்தை அனைவரும் விரும்பிப் படிப்பார்கள். பரமஹம்ஸரின் வாழ்வு நிகழ்ச்சிகள் அவர் உபதேசத்தைப் பக்தர்கள் மனத்தில் பதிய வைக்கும் திறனுடையவை. ஆங்கிலத்தில் anecdotes என்று வழங்குவதை நாம் வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் என்கிறோம். அவதாரப் புருஷர்களின் வாழ்வில் நடந்த சிறு நிகழ்ச்சிகள் அவர்களுடைய உயர்ந்த இலட்சியங்களை விளக்கும் வகையில் அமையும். அவற்றைப் படித்தவர்கள் அதன் பிறகே தத்துவத்தின்

உயர்வை அறிவதும் உண்டு. எல்லோர் மனத்திலும் உயர்ந்த தத்துவ இலட்சியங்களைப் பதிய வைக்கும் திறன் அவற்றுக்குண்டு.

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் ஜில்லா ஜட்ஜாக இருக்கும் பொழுது ஆகஸ்ட் 15 தரிசனத்திற்கு வந்திருந்தார். அவரை எனக்கு அறிமுகப்படுத்திய பொழுது அவர் ஸ்ரீ அரவிந்தரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். தத்துவத்தின் சாரத்தைச் சொல்லட்டுமா, அல்லது அவர்கள் வாழ்வு நிகழ்ச்சிகளைச் சொல்லட்டுமா என்றேன். தத்துவம் வேண்டாம் anecdotes சொல்லுங்கள் என்று பதில் வந்தது. சமீபத்தில் அதுபோன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. நெடுநாள் ஆசிரமத்திலேயே வாழ்ந்தவர்கள் மட்டும் அறியக்கூடிய அந்நிகழ்ச்சிகளில் சிலவற்றை மட்டும் இங்கு எழுதுகிறேன். எல்லா ஆசிரமச் சாதகர்களும் நீண்ட நாளாக வரும் பக்தர்களும் இதுபோல் அறியும் நிகழ்ச்சிகள் ஆயிரத்திற்கு மேற்பட்டவை. சில நூறு நிகழ்ச்சிகள் மட்டுமே வெளியாகியிருக்கின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சியும் பல கோணங்களில் நடமாடுகின்றன. நானறிந்த சிலவற்றைக் குறிக்கின்றேன். சேலத்தில் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். அவர் ஸ்ரீ அரவிந்தருடைய பக்தரல்லர். ஓரிரவு ஸ்ரீ அரவிந்தர் அவர் கனவில் தோன்றினார். காட்சி தத்ரூபமாக இருந்ததால் அவர் பிரமித்துப்போய் எழுந்து என்ன செய்வது என்று தெரியாமலிருக்கும் பொழுது, நாளை நாம் அவசியம் பாண்டிச்சேரிக்குப் போக வேண்டும்'

என்று நினைத்தார். காலையில் ரேடியோ ஸ்ரீ அரவிந்தர் சமாதியடைந்ததை அறிவித்தது தியாகிக்குத் தம் கனவை விளக்கியது. இன்றும் பகவான் சூட்சும உலகிலிருக்கின்றார். அங்குப் போக முடிந்தால் பகவானைக் காணலாம் என்று அன்னை அடிக்கடி சொல்வதை மனத்தில் கொண்ட பக்தர் ஒருநாள் தம் தியானத்தில் சூட்சும உலகை நோக்கிப் போவதைக் கண்டார். அங்கு, பகவான் பொன்னொளியுடன் காட்சியளிப்பதையும் கண்டார். பொன்னொயின் பிரகாசத்தில் மேலும் பகவானைக் காண முடியாமல் திகைத்தார்.

சித்தி பெற்றவர்கள் வாழும் இடம் புண்ணிய ஸ்தலம். யாத்திரைக்குரிய இடம் என்பதை மனத்தில் ஏற்றுக்கொண்டவர் குள்ளச்சாமி. பாரதி புதுவையில் வாழ்ந்த நாளில் வாழ்ந்தவர். குள்ளச்சாமி என்ற தலைப்பில் பாரதி ஒரு கவிதையும் எழுதியுள்ளார். குப்பையில் கிடந்த அழுக்குத் துணிகளை மூட்டையாக முதுகில் தாங்கி வந்தவரைப் பாரதி, "ஏன் இந்த அழுக்கு மூட்டையைச் சுமக்கின்றீர்கள்?'' என்று கேட்ட பொழுது, "நீ உன் மனத்தில் அழுக்கைச் சுமக்கின்றாய், நான் முதுகில் வைத்திருக்கிறேன்'' என்றார். ரமணமகரிஷி வாழ்ந்த இடத்தையும், பகவான் ஸ்ரீ அரவிந்தர் வாழ்ந்த வீட்டையும் தீர்த்த யாத்திரைக்குரிய இடமாகக் கருதி அவற்றை நோக்கி நடந்து சென்று புண்ணியம் பெற்று அங்கிருந்து திரும்பி மீண்டும் அதே யாத்திரையைத் தொடர்ந்த மகான் அவர். ஒரு நாள் ஸ்ரீ அரவிந்தர் வீட்டினுள் வந்து பகவான் எதிரில் நின்று அங்கிருந்த பாத்திரத்தை எடுத்துத் தலைகீழாகக் கவிழ்த்து, மீண்டும் நிமிர்த்தி வைத்துவிட்டுப் போனார். அதன் கருத்தை விளக்க வேண்டும் என்று பகவானைக் கேட்டபொழுது, பாத்திரம் காலியானால்தான் புதியதை அதனுள் வைக்க முடியும் என்பதுபோல் பழைய சித்தியை விட்டு அகன்றால்தான் புதிய சித்தி பெறமுடியும்' என்று குள்ளச்சாமி சொல்கிறார் என்று பகவான் விளக்கம் அளித்தார். சிறு வயதில் தியானத்தில் பல மகான்களைக் கண்ட அன்னை ஸ்ரீ அரவிந்தரையும் கண்டு அவரைக் கிருஷ்ணா என்று அழைத்தார். இவர் பூவுலகில் உயிரோடு இருக்கின்றார். அவரைச் சந்திக்க வேண்டும் என்ற முயற்சியில் தியோன் என்பவரைச் சந்தித்து குருவாக ஏற்றுக் கொண்டார் அன்னை. அவரை விட்டு வந்து பாண்டியில் ஸ்ரீ அரவிந்தர் இருப்பதைக் கணவர் மூலம் கேள்விப்பட்டு, பகவானைப் பார்க்க வந்தவர், ரோட்டில் ஒருவரைப் பார்த்து வீட்டின் அடையாளம் கேட்டார். வீட்டைக் காட்டியவருடைய விலாசத்தையும் குறித்துக் கொண்டார். உள்ளே சென்று பகவானைப் பார்த்த மாத்திரத்தில் இவரேதான் தியானத்தில் கண்ட கிருஷ்ணா என அறிந்தார். அன்றிலிருந்து மாதம் தவறாமல் வீட்டைக் காட்டியவருக்குக் கடிதம் எழுதி ஒரு தொகையையும் கடைசிவரை அன்னை அனுப்பி வந்தார்.

டாக்டர் பக்தர் ஒருவர் ஆபரேஷன் செய்த மறுநாள் அவரை அடுத்த டாக்டரிடம் ஒப்படைத்துவிட்டுத் தரிசனத்திற்கு வந்துவிட்டதை ஆபரேஷன் செய்து கொண்டவர் மன்னிக்கவில்லை. செய்த ஆபரேஷனில் ஏதோ ஒரு சிறு குறை இருப்பதாக உணர்ந்தார். சிறுநீர் கழியவில்லை. சிரமம் அதிகமான சமயம் டாக்டரை மனதில் குறை கூறிக்கொண்டு வலியுடனிருக்கும் பொழுது யாரோ ஒரு மனிதர் திடீரென அங்கு வந்து அவரை விசாரித்தார். தம் குறையை வியாதியஸ்தர் அவரிடம் கூறினார். வந்தவர் வியாதியஸ்தருடைய காலைப் பிடித்து உலுக்கினார். சிறுநீர் பிரிந்தது. தரிசனம் முடிந்து வந்த டாக்டர் இதைக் கேள்விப்பட்டார். வந்தவர் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. முடிவான நிலையில் டாக்டருக்குச் சந்தேகம் வந்து வியாதியஸ்தரிடம் வந்தவருடைய அடையாளம் விசாரித்து, பகவானுடைய இளம் வயது போட்டோவைக் காட்டியபொழுது, வந்தவர் அவரே என உணர்ந்தார்கள்.

********



book | by Dr. Radut