Skip to Content

பகுதி 4

நண்பர் - அவர்கள் கண்டது அக்ஷரப் பிரம்மம் என்கிறார் பகவான். கிருஷ்ணபரமாத்மா கூறுவது புருஷோத்தமன் Transcendent Self. இவை இரண்டும் பிரம்மமாகா. அன்பர் - நாம் ஜடத்தையே பிரம்மம் என்கிறோம், ஆனந்த பிரம்மம் என்பதுபோல் எல்லாமே நமக்குப் பிரம்மமாகும்.

நண்பர் - முழுமையான பிரம்மத்திற்கு Self இல்லை, எதுவுமில்லை. அது புருஷோத்தமனையும் கடந்தது. Self என்பது சத் புருஷனுடைய 3 அம்சங்களில் ஒன்று. அன்பர் - மோட்சம் கிடைத்தாலும் பொய் எங்கோ நம்மை ஒட்டிக் கொண்டிருக்குமா?

நண்பர் - சத்தியத்தை அடைந்து, அதைக் கடந்து ஆன்மாவை அடைந்தால் பொய்யிருக்காது. பூரண யோகம் முழுமையானது என்பதால் முழுமையான சத்தியமானது, பொய் கலக்க வழியில்லை.

அன்பர் - ரிஷிகள் பூரணத்தை நாடவில்லை, நாடும் கருவி - சத்தியஜீவியம் - அவர்களிடமில்லை. மனிதனின் பகுதியான ஆன்மா மனித ஜீவனிலிருந்து பிரிந்து அதன் ஆதியான பரமாத்மாவை அடைவதே நோக்கம். பரமாத்மா முழுமையுடையதில்லையா?

நண்பர் - ஜீவாத்மா பகுதியானால் பரமாத்மா முழுமை. பிரம்மத்தின் நோக்கில் சத் என்று ஏற்பட்டவுடன் முழுமை போய்விடும். இருந்தாலும் சத் என்பதை முழுமையாகக் கருதுகிறோம்.

அன்பர் - ரிஷிகள் அந்த முழுமையையும் அடையவில்லையா?

நண்பர் - நமக்கு முக்கியமானது ஸ்ரீ அரவிந்தர் நமக்களிப்பது என்ன என்று தெரிந்துகொள்வது. அதை எனக்குத் திருப்திப்படக் கூறமுடியவில்லை என்பதே குறை. ரிஷிகள் பெற்றது என்ன என்பது அன்று.

அன்பர் - ரிஷிகள் சித்தி புரிந்தால்தான் வித்தியாசம் புரியும்.

நண்பர் - பொதுவாக அது உண்மை. புதியதாக வரும் விஷயத்தை எவரும் புரிந்து கொள்ளவில்லை என்றால் அதன் சிறப்பான அம்சங்களை எடுத்துக் கூறவேண்டும். அளவு கடந்து கவர்ச்சியானவை வரும்பொழுது அந்தக் கேள்வியே எழாது.

அன்பர் - சற்று யோசனை செய்து பார்த்தால் அது தெரிகிறது.

நண்பர் - மனித குரு இங்கு இல்லை என்றார். அதன் பொருள் என்ன?

அன்பர் - நான் இதுவரை அப்படி நினைத்துப் பார்க்கவேயில்லையே.

நண்பர் - நாமே நமக்கு குரு.

அன்பர் - அன்னையை ஏற்றால் நாம் அவரைக் குருவாக நினைக்கிறோம்.

நண்பர் - அது வழிபாடு. அன்னை மனித குரு இல்லை. அன்னையை அறிந்தால் ஏற்றால் நாம் நேரடியாக ரிஷியாகும் தகுதி பெறுகிறோம்.

அன்பர் - எனக்குத் தோன்றவில்லை.

நண்பர் - நாமெல்லாம் பிரச்சினையைக் கருதுவதால் அன்னையைக் குருவாக நினைக்கிறோம். நம்மை அறிமுகப்படுத்தியவரைக் குருவாக நினைக்கிறோம்.

அன்பர் - அப்படி ஒருவர் நடுவில் இல்லையென்றால் ஒன்றுமே இருக்காது.

நண்பர் - யோகத்தை மேற்கொண்டவனுக்கு ஸ்ரீ அரவிந்தர், அன்னை புத்தகங்கள் தேவையில்லை.

அன்பர் - எதுவுமே தேவையில்லை என்றால் படமும் தேவை இல்லையா?

நண்பர் - ஆம். யோகத்திற்காக அவர்களை ஏற்றால் அவர்கள் நேரடியாக நெஞ்சில் உதயமாகிப் பேசுவார்கள். குருவாக நடப்பார்கள்.

அன்பர் - அப்படித் தோன்றவில்லையே.

நண்பர் - அவர்கட்கு யோகமில்லை.

அன்பர் - எதுவும் வேண்டாம் என்றால் எதுவுமேயிருக்காது.

நண்பர் - அப்பொழுது சக்தி நேரடியாகச் செயல்படும்.

அன்பர் - அது நம்மவருக்கு ஒத்துவாராது.

நண்பர் - அது மட்டுமே ஸ்ரீ அரவிந்தருக்கும் அன்னைக்கும் ஒத்துவரும்.

அன்பர் - அப்படி இருந்து பார்க்கட்டுமா?

நண்பர் - மனம் அன்னை என்ற கருத்தை ஏற்றால், ஆத்மாவுக்குக் குரல் கேட்கும்.

அன்பர் - அது கேட்காதவர் வழிபடலாம். தவறில்லை. பெரிய ஆக்ஸ்போர்ட டிக்ஷனரியை spelling பார்க்கப் பயன்படுத்துவது போலிருக்கும்.

நண்பர் - ஆம். வீட்டு மனை வாங்கி அங்கு காய்கறி பயிரிடுவது போன்றது.

அன்பர் - சாதாரண புத்திசாலித்தனமும் இல்லாத மனம் (inspiration) இலக்கிய எழுச்சி பெற்று ஸ்ரீ அரவிந்தம் எழுத்தின் சிகரத்தைத் தொட்டதும் சாதகர்கள் அனுபவம். இந்த சக்திக்கு அந்தத் திறன் உண்டு. அது கேட்பவர் மனத்தைத் தொடும்படி சொல்லவேண்டும். நான் பலமுறை Reader's Digest ஹாஸ்யத்தை எழுதியுள்ளேன்.

அமெரிக்கன் ஒருவரை மோட்சத்திற்குக் கடவுள் அனுப்பினார். வாசலில் housefull இடமில்லை என்று போர்ட் இருக்கிறது. காவல் இருப்பவரை அவன் பேப்பர் பென்சில் கேட்கிறான். ஏதோ எழுதினான். இதை உள்ளே போடு என்றான். கொஞ்ச நேரத்தில் மோட்சத்தில் ஒருவரும் இல்லை. எல்லோரும் வெளியே போய்விட்டனர். காவல்காரன் அவனிடம் வந்து பேப்பரில் என்ன எழுதினாய் என்று கேட்கிறான் நரகத்தில் பெட்ரோல் கண்டுபிடித்துவிட்டனர் என்று எழுதினேன் என்றான்.

அன்பர் - பெட்ரோல் என்றால் பெரிய பணம். மோட்சமே இலட்சியமில்லை, நரகமாக இருந்தாலும் பரவாயில்லை. பெட்ரோல் கிடைத்தால் போதும் என்று மக்கள் சற்றும் யோசனை செய்யாமல் ஓடுகிறார்கள்.

நண்பர் - ஸ்ரீ அரவிந்தரை உலகம் அப்படி ஏற்கும் நேரம் வந்துவிட்டது. அனைவரும் ஏற்காவிட்டாலும் அர்த்தமுள்ளவராவது ஏற்க வேண்டும். எடுத்துச் சொல்ல ஒருவர் வரவில்லை. இந்த 18 அம்சங்களையும் மேலும் மேலும் விளக்கலாம். 56 அத்தியாயம் மூலமாகவும் கூறலாம். கூறுவது பெரிதன்று. சொல் ஆத்மாவைத் தொட்டு சுண்டியிழுக்கும்படிச் சொல்ல வேண்டும்.

அன்பர் - ஸ்ரீ அரவிந்தரே அப்படி எழுதியிருக்கலாமன்றோ!

நண்பர் - எழுதுவதே அவர் நோக்கமில்லை. அன்னை எழுதும்படிக் கேட்டதால் எழுதினார்.

அன்பர் - என்ன நடந்தால், உலகம் ஸ்ரீ அரவிந்தர் அருமையை அறிந்து ஏற்கும்.

நண்பர் - தூய்மையான உள்ளம் சத்தியத்தைச் செயல் படுத்தினால் உலகம் கண்விழிக்கும். ஆரோவில் நகரம் அமைந்தால் உலகப் போர் மூளாது என்றார் அன்னை. அது தனிநபர் செய்யக் கூடியதில்லை. பலர், நூறு பேர்கள் சேர்ந்து செய்வது அவசியம். 10 பேர்கள் சேர்ந்தால் ஆரம்பித்துப் பார்க்கலாம்.

அன்பர் - என்னை எதிர்பார்க்க வேண்டாம்.

நண்பர் - எவரையும் எதிர்பார்க்க முடியாது; கூடாது; எதிர்பார்ப்பு தடை; செய்ய விரும்புபவர் அகத்தில் தயாராகி அதனால் பிறர் அவர்பால் ஈர்க்கப்பட்டால் அது நடக்கும்.

அன்பர் - ஸ்ரீ அரவிந்தர் தயாராகவில்லை என்பதைவிட உலகம் தயாராக இல்லை என்று சொல்லலாமன்றோ!

நண்பர் - பல காரியங்கள் நேரம் வாராமல் செய்யமுடியாது. பல காரியங்கள் நேரம் வந்த பின்னும் எடுத்துச் செய்தால்தான் முடியும், தானே நடக்காது. இடைப்பட்ட நிலையில் human choice நாம் செய்யக் கூடியதுண்டு.

அந்த choice சரியாக இருந்தால் 10 வருஷங்கள் மிச்சம். சில சமயம் 1000 வருஷங்கள் மிச்சம். 30,000 வருஷங்களுக்கு முன் நடக்கக் கூடியது மனிதனுடைய choice இல்லாததால் நடக்கவில்லை. பகவான் பிறந்ததிலிருந்து அப்படிப்பட்ட நேரம். அவர் அதை "இறைவன் வரும் தருணம்'' என்றார்.

அன்பர் - இன்று அதிகப்பட்சம் என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்.

நண்பர் - குறைந்தபட்சம் கோடீஸ்வரனாகலாம் என்பதற்கு உங்களை எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறினீர்கள்.

அன்பர் - நான் எதற்கும் தயாரில்லை.

நண்பர் - அப்படிப்பட்டவர் எதையும் செய்ய முன்வருவதும் உண்டு. நாம் செய்தாலும் செய்யாவிட்டாலும் விஷயம் தானே நடக்கிறது என்று காண்கிறோம்.

அன்பர் - தானே நடப்பதானால் நாம் சும்மாயிருக்கலாமே.

நண்பர் - சும்மாயிருக்கச் சுதந்திரம் உண்டு. நமக்குப் பிரியமானதை நாம் செய்கிறோம். அதுபோல் ஆண்டவனுக்குக் கருவியாக ஒருவர் பிரியப்பட்டால் அது அவருக்குச் சந்தோஷம் கொடுத்தால் அவர் அதைச் செய்யலாமன்றோ?

அன்பர் - அதில் நம் பங்கென்ன?

நண்பர் - அப்படிச் செய்பவர்களிருந்தால் அவர்கள் மனத்தில் படும்படிச் சொல்ல முயல்வது ஓர் ஆன்மீக முயற்சி.

அன்பர் - எனக்கு அப்படித் தோன்றவில்லை.

நண்பர் - தோன்றாதவருக்கு அது பிரச்சினையில்லை. பழம் பெருச்சாளிகள் எனப் பெயர் வாங்கியவர்கள் பல ஆபீசுகளிலிருப்பார்கள். எந்தக் கிராமத்திலும் ஒருவர், இருவர் இருப்பதுண்டு. அவர்களைப் பற்றி ஊரில்,

- யாருக்கு என்ன தொந்தரவு கொடுக்கலாம் என்பதே குறியான மனிதன்,

- தொட்ட இடம் எல்லாம் விஷம்,

என்பார்கள். இன்றைய தலைமுறையில் சிறு மாறுதலைக் காணலாம். சிறு மாறுதல் என்றாலும், முக்கியமான மாறுதல். எல்லா ஊர்களிலும்

இல்லாவிட்டாலும், நகரங்களில் பல ஆபீசுகளில் அப்படிப்பட்டவர் ஒருவர் இருப்பார். அவரைப் பற்றி

- ஏதாவது நல்ல காரியம் செய்யாவிட்டால் அவருக்குப் பொழுது போகாது என்பர்.

இந்த மாறுதல் உலக அரங்கிலும் காணப்படுகிறது. சிகரமானது 1988இல் கோர்பஷேவ் தாமே முனைந்து தம் கட்சியைச் சட்டவிரோதமாக்கினார். உலகச் சரித்திரம் அறியாதது இது. இதுபோன்ற மாறுதல்கள் எல்லாத் துறைகளிலும் தானே எழுகின்றன. அது சத்தியஜீவிய சக்தி புவியில் செயல்படுவதால் நடப்பதாகும்.

அன்பர் - நீங்கள் சொல்வது போலிருக்க ஒருவர்,

  • அகந்தையை அழிக்கவேண்டும்.
  • காலத்தைக் கடக்க வேண்டும்.
  • மனத்தைத் தாண்டவேண்டும்.
  • சர்வ ஆரம்பப் பரித்தியாகியாக வேண்டும்.
  • எந்தச் செயலின் பின்னும் அன்னையைக் காணவேண்டும்.
  • மேல்மனத்திலிருந்து அடிமனம் போகவேண்டும்.

என்னால் எதையும் செய்ய முடியவில்லை. ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். React செய்யக் கூடாது, அன்னையைக் காரியங்கள் பின் பார்க்கவேண்டும் என்பதை நினைத்தும் பார்க்க

முடியவில்லை. அதனால்தான் என்னை எதிர்பார்க்க வேண்டாம் என்றேன். அதற்கு ஒரு வழி சொல்லமுடியுமா?

அன்பர் - புது காலனிகளைப் பார்த்தால் 10 ஆண்டுக்கு முன் பயிரிடும் நிலமாக இருந்த இடம் இப்பொழுது 500 வீடு; ரோடு, பள்ளிக்கூடம், கடை, கடைத்தெரு என்று மாறியதைக் கண்டால் நம்ப முடியவில்லை. 1950இல் கலிபோர்னியா ஜனத்தொகை 4 லட்சம், இப்பொழுது 40 லட்சம். காடாக இருந்த இடங்கள் நகரமாக மாறியுள்ளது. இவை உழைப்பால் நேர்ந்தது. உழைப்பு செல்வம் தரும். உடலுழைப்பு செல்வம் தரும் என்பதுபோல் மனத்தால் உழைத்தால் யோகம் பலிக்கும்.

உழைக்காமல் செல்வம் வாராது.

மனம் உழைப்பது யோகம்.

அதை மனமாற்றம் என்றும், (values) பண்பு என்றும் கூறுகிறோம். இந்த யோகம் பரிணாமமாயிற்றே, மனத்திலிருந்து ஆன்மாவுக்குப் போவது, சத்தியஜீவியத்திற்குப் போவது என்றால் மனம் உழைக்க வேண்டும்.

அன்பர் - அதனால்தான் ஆசனம், பிராணாயாமம் வேண்டாம் என்றார் பகவான். எல்லா வேலைகளையும் மனத்திற்கே கொடுத்துவிட்டார்.

யோகத்தை ஏற்க எனக்கு மனம் வரவில்லை. எதிரியின் பின்னால் அன்னை தெரியவேண்டும் என்றால், எனக்குத் தெரியவில்லையே.

நண்பர் - இருப்பதாக வைத்துக் கொள்ளலாமல்லவா?

அன்பர் - முடியவில்லை, எரிச்சல் வருகிறது. அன்னையின் பின்னால் எதிரியிருப்பதாகத் தெரிகிறது. எனக்கு அன்னை வேண்டும். நீங்கள் சொல்வதுபோல் எதிரியின் பின்னால் வரும் அன்னை வேண்டாம்.

நண்பர் - ஆபீசில் முதலாளியைப் பற்றி அனைவரும் பேசுகின்றனர். ஒருவன் அவரிடம் போய்க் கோள் சொல்கிறான். பிறகு எவரும் பேசுவதில்லை. அவனே வாயைக் கிளப்புகிறான். எல்லோரும் உஷாராகின்றனர். வம்பு பின்னாலிருக்கிறது எனத் தெரிகிறது.

அன்பர் - அதுபோல் அன்னை பின்னாலிருக்கிறது என்று தெரிய வேண்டுமா?

நண்பர் - நமக்குப் பக்குவம் வந்தால் அன்னை வருகிறார். பக்குவம் வந்ததற்கு அடையாளம் பின்னாலுள்ள அன்னை தெரிவது.

அன்பர் - முடியவில்லை.

நண்பர் - முடியவில்லை என்று கூறாமல் வேண்டாம் என்று சொல்லுங்கள். வேண்டும் என்பவருக்கு வழியுண்டு.

அன்பர் - சரி, எனக்கு அன்னை வேண்டும்; அருள் வேண்டும்; அதிர்ஷ்டமாவது வேண்டும். என்னால் முடிந்த வழியைச் சொல்லுங்கள்.

நண்பர் - எங்கிருக்கிறோம், எங்குப் போக வேண்டும், எப்படிப் போகலாம் என்பது கேள்வி.

வழிகள் பல - 12 ஆன்மீக அம்சங்கள் வழிகள்.

அன்பர் - சந்தோஷத்தின் மூலமாகக் கூறுங்கள்.

நண்பர் - உணர்வு, மனம், முனிவர், ரிஷி, யோகி, தெய்வம், சத்தியஜீவியம், ஆனந்தம் என்பவை மேலே போவன. அதே வழி கீழே வருவது 8உம்+8உம் 16 நிலைகள்.

அன்பர் - நாம் மனத்தில் ஆரம்பிப்போம்.

நண்பர் - உணர்வில் சந்தோஷம் என்பது success, happiness வெற்றி, சந்தோஷம். நாம் வெற்றி பெற்று சந்தோஷமடைந்த பின் கொஞ்ச நாழி கழித்து ஒரு கவலை வரும்.

அன்பர் - ஆமாம் நான் அதைப் பார்த்திருக்கிறேன். யோசனை செய்வதுண்டு. ஏன்?

நண்பர் - உணர்வு சக்தி. அதன் வெற்றி முதல் நிலை வெற்றி. பூரணமானதன்று. வெற்றியின் சந்தோஷம் முடிந்தவுடன், மீதி கவலைப்படுகிறது.

அன்பர் - கல்யாணம் வீட்டில் திருப்தியாய் முடிந்து 3ஆம் நாள், 4ஆம் நாள் அனைவரும் ஆளுக்கொரு குறை சொல்வார்கள்.

நண்பர் - அதற்குச் சம்பந்தியைக் காரணம் கூறுவர். காரணம் இது உணர்வின் தன்மை.

அன்பர் - மனம் என்ன செய்யும்?

நண்பர் - அதற்கு relief நிம்மதி வந்துவிடும். பேசாமலிருக்கும்.

அன்பர் - சந்தோஷம் வாராதா?releifக்குண்டான சந்தோஷம் இருக்குமா? ஆமாம். மனம் புரிந்து கொள்கிறது. தனக்குப் புரிந்தபடி நடக்கிறது. கூடிவந்தால் தனக்குப் புரிந்தது சரி என்று சந்தோஷப்படும்.

நண்பர் - அதெல்லாம் சந்தோஷமில்லையா? எனக் கேட்கலாம். எதிர்வீட்டு மாமா நம் பையனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தபின் எவ்வளவு நாள் அதைப் பற்றி சந்தோஷமாகப் பேசினார்.

அன்பர் - தான் செய்தோம் என்பதா? பையன் சந்தோஷப்பட்டான் என்பதா?

நண்பர் - தான் செய்தோம் என்றால் குறை எழும், சந்தோஷம் வருகிறது என்றால் unselfish help பையன் சந்தோஷத்தால் வரும் சந்தோஷம் அது.

அன்பர் - ஆனந்தத்தை எட்டும்வரை சந்தோஷம் வாராதா?

நண்பர் - கவலை குறையும், நிம்மதி வரும், பாரம் நீங்கும், முடிவாக சந்தோஷம்வரை. ஆனந்தமே சந்தோஷம். மீண்டும் இறங்கி வந்தால் 16ஆம் நிலையில் சந்தோஷம் பொங்கி எழும்.

அன்பர் - அதுவும் சுயநலமாக இருக்குமா?

நண்பர் - எதுவும் இரண்டு வகைகளாக இருக்கும். அது நம்மைப் பொருத்தது.

அன்பர் - எப்பொழுதும் தன் பெருமையைப் பேசுபவர், நினைப்பவர் எரிச்சல் மூட்டுகிறார்.

நண்பர் - சோதனை செய்ய நல்ல இடம். நமக்கு எது எரிச்சல் கொடுக்கிறது?

அன்பர் - அவரது நினைப்பு. Superior attitude.

நண்பர் - அது சரி. அது மட்டுமிருந்தால் எரிச்சல் வாராது.

அன்பர் - பின் எது?

நண்பர் - கடையில் சேல்ஸ்மென் சில சமயங்களில் ரொம்ப தெரிந்தவன்போல் பேசுவான்.

அன்பர் - அது எரிச்சல் வாராது. மனதில்படாது. சிரிப்பு வரும்.

நண்பர் - ஏன் இங்கு மட்டும் எரிச்சல் வருகிறது.

அன்பர் - கடைப்பையன் யாரோ. இது நட்பு, உறவல்லவா?

நண்பர் - எரிச்சல் அவன் நினைப்பால் வரவில்லை, உறவால் வருகிறது.

அன்பர் - ஆம்

நண்பர் - எரிச்சல் எங்கேயிருக்கிறது?

அன்பர் - உள்ளே.

நண்பர் - நம் உள்ளே ஏதோ ஒன்று எரிச்சல்படுகிறது. ஏன்?

அன்பர் - எதிரியின் நினைப்பு, நம்மைக் கிளப்புகிறது.

நண்பர் - எது கிளம்புகிறது?

அன்பர் - நாம். நம் குறையா?

நண்பர் - நமக்குக் குறையில்லாவிட்டால் உள்ளே எரிச்சல்பட ஒன்றிருக்காது.

அன்பர் - அவன் நினைப்பு குறையில்லையா? எரிச்சல்தான் குறையா?

நண்பர் - நாம் அவனோடு ஒப்பிட்டுப் பார்த்து நம்மைக் குறைவாக நினைப்பதால், எரிச்சல் வருகிறது.

அன்பர் - எரிச்சல் வந்தால் நம் குறை. வாராவிட்டால் குறையில்லை. ஒருவர் எரிச்சலைக் கிளப்பினால் அன்னை அவர் மூலம் நாம் புரிந்து கொள்ளாத குறையைச் சுட்டிக்காட்டுகிறார் என்று எடுத்துக் கொள்ளச் சொல்கிறீர்களா?

நண்பர் - அப்படி எடுத்துக் கொள்வது sincerity, பிறர் தொடர்பால் பயன்பெறுவது. அன்னை அவர் மூலம் வருவதை அறிவது.

அன்பர் - அறையலாம்போல் தோன்றுகிறது. இதோடு முடியுமா?

நண்பர் - இதுவே ஆரம்பம்.

அன்பர் - படிப்படியாக உயர்ந்து பிறர் கர்வமாகப் பேசும்பொழுது, நமக்குச் சந்தோஷம் பொங்கி வரும்வரை நாம் மாற வேண்டும். மேற்சொன்ன 8 கட்டங்களையும் தாண்டி ஆனந்தம் பெற்று 8 கட்டங்கள் வழியாகத் திரும்பி

வந்து Being of the Becoming, சைத்தியப் புருஷனை (vital psychic ) அடைகிறோம்.

அன்பர் - அன்னை cheerfulness is a better foundation of  yoga சந்தோஷம் யோகத்திற்கு அஸ்திவாரம் என்கிறார். தியானம் செய்யலாம். ஜபம் செய்யலாம், புஷ்பாஞ்சலி செய்யலாம். ஆசனம் செய்யலாம், இது எல்லாவற்றையும் விடக் கடினமானது.

நண்பர் - மனத்தால் மட்டும் செய்யக்கூடியது. இதுவே யோகம், ஆனந்தம் மூலம் சொல்வதுபோல் ஆன்மாவின் 12 அம்சங்கள் மூலமாகவும் சொல்லலாம்.

அன்பர் - 12 அம்சம், 8 நிலைகள் ஏறி, 8 நிலைகள் இறங்க வேண்டுமானால் 192 கட்டங்கள் உள்ளனவா?

நண்பர் - ஒன்று உயர்ந்தால் மற்றவை தானே உயரும்.

அன்பர் - எரிச்சல் கிளப்புவரைப் பற்றிச் சொல்லுங்கள்.

நண்பர் - அது 100 வகைகள். சட்டம் ஒன்றே.

அன்பர் - யார் எரிச்சல் கிளப்பினாலும் குறை நம்முடையது, மேலும் உண்டா?

நண்பர் - முடிவு என்பது பிரம்மத்திற்கில்லை.

அன்பர் - இனி செய்ய வேண்டுமா? இதுவரை நடந்தது?

நண்பர் - ஒன்றைச் செய்தால் அடுத்ததும் மாறும். எல்லா எரிச்சலும் போக வேண்டும்.

அன்பர் - எரிச்சல் எல்லாம் போய்விட்டது என்றால்,

நண்பர் - அப்படிப் போகாது.

அன்பர் - ஏன்?

நண்பர் - நமக்குள்ள மற்ற குறைகள் எரிச்சல் போவதைத் தடுக்கும்.

அன்பர் - அறியாமை, அவசரம் போன்றவையா?

நண்பர் - 192 கட்டங்களிலும் இப்பொழுது நம் சுபாவம் 192 வகைகளாக இருக்கின்றனவல்லவா?

அன்பர் - அனைத்தும் மாற வேண்டும். எது சிறியது, எது பெரிய குறை?

நண்பர் - அறியாமையால் வருபவை சிறிய குறை. தெரியாமல் செய்துவிட்டேன் என்பது. தெரிந்து செய்வது பெரிய குறை. பொறாமை மன்னிக்க முடியாது.

அன்பர் - அதற்கப்புறம் ஏதோ இருக்கிறது போலிருக்கிறதே.

நண்பர் - முடிவானது சத் - அதன் substance, உயர்ந்த நல்லவை Truth,Goodness  சத்தியம், நன்மை, எதிரானவை பெரிய கெடுதல் Falsehood,Evil.

அன்பர் - சத்தியம் எப்படி வெளிவரும் என்று தெரிகிறது. Evil தீமை எப்படி வரும்?

நண்பர் - தீமையை விடக் கடுமையானது உண்டு. அன்னை "நான் எவரையும் ஏற்பேன். கொடுமையை இரசிப்பவரை ஏற்க முடியவில்லை'' என்கிறார்.

அன்பர் - தீமை எப்படி வெளிப்படும்?

நண்பர் - Violence,harshness, கடுமை, கொடுமை மூலம் வெளிவரும். அவை திருவுருமாறினால் strength, இனிமை, அமிர்தமாகும்.

அன்பர் - வலிமை என்றால் எதற்கு வலிமை?

நண்பர் - ஆளும் வலிமை, நாட்டை ஆளும் வலிமை, உலகை ஆளும் வலிமை எழும். இனிமையுயர்ந்து அமிர்தம் ஊற்றாக எழும்.

அன்பர் - பொய்யும், தீமையும் பெரிய வாய்ப்புகளா?

நண்பர் - உள்ளவர்க்கு வாய்ப்பு. இல்லாதவர் பொய் சொல் மாற வேண்டும் என்பதில்லை. நேரடியாக மெய் சொல்லலாம்.

அன்பர் - தீமையை அனுபவிக்காமல் நன்மையை முழுவதும் அனுபவிக்க முடியாது என்று கூறுகிறாரே?

நண்பர் - எந்தக் குறையும் இருப்பது தவறில்லை. அதை ஏற்கும் உண்மை வேண்டும். மாறும் உண்மை வேண்டும்.

அன்பர் - இது தெரிந்தபின் மனப்பாரம் குறைகிறது. இதற்கு மேலும் தடையுண்டா?

நண்பர் - விவரம் வளர்ந்து கொண்டேயிருக்கும். நமக்குள்ள நல்லதை முழுவதும் பயன்படுத்த முடிவு செய்து, நமக்குள்ள குறையை உண்மையாக ஏற்று, மாற முடிவு செய்வது திருவுருமாற்றம். அதன்பின் தியானம், concentration எதையும் தரும்.

அன்பர் - நான் இதைச் செய்யப் பிரியப்படுகிறேன். வீட்டிற்குப் போனால் மற்றவர்களுடன் பேசும்பொழுது நீங்கள் சொல்லியனவெல்லாம் மறந்து போய் அவர்களுடன் கலந்து விடுகிறேன். ஏன் அப்படி?

அன்பர் - Aspiration பக்தியில்லை, போதாது. அன்னையை விட மனிதர்கள், வீடு, உலகம் முக்கியம்.

அன்பர் - அதற்குப் பெயரில்லையா?

நண்பர் - சில்லறை மனப்பான்மை.

அன்பர் - அற்பம் என்றே சொல்வீர்கள் போருக்கிறதே.

நண்பர் - அது பொருத்தமான சொல்.

அன்பர் - என்னை ரொம்ப மட்டமாக நீங்கள் நினைக்கிறீர்கள்.

நண்பர் - எல்லோரும் இப்படித்தானிருக்கிறோம். இப்பொழுது தெரிகிறது. இதுவரை தெரியவில்லை.

அன்பர் - தெரியாததே தேவலை.

நண்பர் - மட்டம், உயர்வு என்பவை egoக்குரியவை. அன்பர் - மட்டமாக இருந்தால் தேவலை என்று பொருளா?

நண்பர் - மட்டம் உயர்வாகத் திருவுருமாறும்.

அன்பர் - அதிக மட்டமானால், அதிக உயர்வாகும் என்றும் வரும்.

நண்பர் - ஆம்.

அன்பர் - மனம் துடிக்கிறது.

நண்பர் - மனம் துடிப்பது vital,vital ego ஆகும். அன்பர் - என்னைப் பற்றி என்னதான் நினைக்கிறீர்கள்?

நண்பர் - ரொம்ப உயர்ந்த நிலைக்கு வரலாம் என நினைக்கிறேன்.

அன்பர் - ரொம்ப மட்டமாக இருப்பதால் அப்படிச் சொல்கிறீர்களா?

நண்பர் - இருப்பதை நினைப்பது கீழே தள்ளும். வருவதை நினைத்தால் மேலே போகலாம்.

அன்பர் - சரி, நான் கொஞ்ச நாள் calling அழைப்பில் உட்காருகிறேன்.

நண்பர் - மனம் மாறி உட்காருதல் நல்லது.

அன்பர் - மனம் மாறாவிட்டால் சும்மாதான் உட்கார வேண்டும்.

நண்பர் - உடனே உட்காருவதைவிட மனத்தைத் தயார் செய்து கொள்ளுதல் நல்லது.

அன்பர் - தயாரானதற்கு அடையாளம் உண்டா?

நண்பர் - இதுவரை நடக்காதது ஏதாவது ஓரளவில் நடக்கும்.

அன்பர் - கேட்காதவர் வந்து யோசனை கேட்கிறார், பார்க்காதவர் வந்து கூடவேயிருக்கிறார்.

நண்பர் - அது நல்லது.

அன்பர் - உட்காரவே வேண்டாம், மனம் மாறினால் எல்லாம் நடக்கும் என்று கூறுவீர்களா?

நண்பர் - உட்கார அவசியமில்லை. நம் திருப்திக்கு உட்கார வேண்டும். உட்கார்ந்திருந்தால் மனம் லயிப்பதுபோல் உட்காராவிட்டால் லயிக்காது.

அன்பர் - உட்காரப் பெருமைப்படக் கூடாது, ஆசைப்படக் கூடாது என்பீர்கள்.

நண்பர் - விஷயம் உட்காருவதில்லை. ஆசை, பொறாமை கூடாது என்பதே விஷயம்.

அன்பர் - நீங்கள் சொல்வனவெல்லாம் சரி. ஓரளவுக்கு ஏற்பதாகவும் உள்ளது. ஆனால் தத்துவம் பேச திருப்தியில்லை.

நண்பர் - விஷயத்தைவிட்டு அனுமதிப்பீர்களா?

அன்பர் - தத்துவமாக ஆரம்பித்தாலும் முடிவில் நடைமுறைக்கு வருமா?

நண்பர் - யார் நடைமுறைப்படுத்தவேண்டும்?

அன்பர் - நானே செய்யவேண்டுமா?

நண்பர் - பூரணயோகத்தில் எதுவும் பிறரை நம்பியது இல்லை.

அன்பர் - என்னையே செய்யச் சொல்வீர்கள்.

நண்பர் - அது முதலிலேயே புரியவேண்டும்.

அன்பர் - என்ன தத்துவம்?

நண்பர் - புரட்சி மாறி மலர்ச்சியாகுமா? Revolution becomes evoluion .

அன்பர் - புரியவில்லை.

நண்பர் - புரட்சியில் இருகட்சி. அதனால் எதிர்ப்பு, போர், சேதம் ஏற்படுகிறது.

அன்பர் - மெஜாரிட்டி ஏற்றால் மைனாரிட்டி அடங்கும், மைனாரிட்டி புரட்சியை நாடினால் சேதம் அதிகமாகும். அதுவே புரட்சி.

நண்பர் - புதியது வரும்பொழுது பழையது எதிர்க்கிறது.

அன்பர் - எதிர்ப்பில்லாமல் எல்லோரும் ஏற்றால் புரட்சி தேவையில்லை. மாற்றம் மலர்ச்சியாகும். அதை எப்படிச் செய்வது?

நண்பர் - தத்துவத்தைக் கடந்து யோகத்திற்குப் போனால் மனம் எதிர்ப்பைக் கிளப்பும்; சத்தியஜீவியம் எதிர்ப்பைக் கிளப்பாது.

அன்பர் - ஏன் கிளப்பாது?

நண்பர் - எதிர்ப்பு இருள். இருளின் உள் ஒளி உண்டு. தெய்வீக மனம் செயல்படும்பொழுது எதிர்ப்பு தொந்தரவு செய்ய முடியாதபடி செயல்படும் .சத்தியஜீவியம் இருளின் உள்ளே உள்ள ஒளியை ஊடுருவி சென்றடைந்து ,அதன் மூலம் இருளை ஒளியாக மாற்றுவதால் எதிர்ப்பு இருக்காது .

அன்பர் - நாம் எப்படி அதைப் பின்பற்றுவது?

நண்பர் - நாம் ஒருவரோடு வேலை செய்தால் விஷயம் ஒருவருக்கு சாதகமாக இருப்பதால் பிணக்கு வரும். நாமே எதிரிக்கு சாதகமாகப் பேசினால் எதிர்ப்பு இருக்காது.

அன்பர் - நாம் அழிவோம்.

நண்பர் - காரியங்கள் அடுக்கடுக்காக அமைந்துள்ளன, மேலேயுள்ளவை ஒரு தரத்திற்குச் சாதகமாகவும், கீழே போகப் போக இருதரத்திற்கும் சாதகமாகவும் இருக்கின்றன. அப்படி ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்க மனம் விசாலமாக இருக்கவேண்டும். செயல்படுத்த உணர்வு விசாலமாக இருக்கவேண்டும். அப்படி இல்லாத பிரச்சினை, விஷயமில்லை.

அன்பர் - எனக்கு உதாரணம்தான் புரியும்.

நண்பர் - நான் ஆயிரம் முறை சொல்வது இரண்டு உதாரணங்கள். மற்ற உதாரணங்கள் மனிதர்கள் சம்பந்தப்படுவதால் சொல்ல முடியவில்லை. உதாரணமில்லாமல்லை. கிராமத்தில் விவசாயிக்குத் தேவையானதைக் கூறியதால் எதிர்ப்பில்லாமல் ஏற்றுக் கொண்டனர்.

அன்பர் - நம் வீட்டு மனிதர்கள், நட்பில் எப்படி அதைக் கடைப்பிடிப்பது?

நண்பர் - நடந்ததைச் சொல்ல முடியாது. நடக்கப் போவதைப் பற்றிப் பேசினால் விவாதம் வளரும். ஒரு வேலை என்று செய்தால் பேச்சு வளராது. மனிதர்கள்

பிரச்சினையில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் வழி சொல்லலாம்.

அன்பர் - தத்துவம் புரிகிறது. நாம் எதிரி என்று நினைப்பவருக்குப் பயன்படும் எண்ணம், நமக்கும் பயன்படுவதாக இருக்கும். அதைக் கண்டுபிடித்து பின்பற்ற வேண்டும். உதாரணம் வேண்டும், கம்பனியில் வேலை செய்யாமலிருப்பவர்க்கு ரூ.1000, ரூ.2000 வருகிறது. Peice rate கொடுத்தால் நமக்கு அவன் தலைவலியில்லை. ரூ.1000 சம்பாதிப்பவன் 3000 சம்பாதிப்பான்.

நண்பர் - நம் பிரச்சினை தீர யோசனை செய்தால் வழி பிறக்கும். அவன் பயன்பட நினைக்கப் பரந்த மனம் தேவை. அதற்குப் பத்து வழிகள் உண்டு. ரூ.15 சம்பளம் உள்ள காவல்காரன் திருடாமலிருக்கச் செய்த ஏற்பாடுகள் அவனுக்கு வருமானத்தை ரூ.50, 70 என உயர்த்தியது. அவனால் பிரச்சினையேயில்லை.

அன்பர் - 15 ரூபாய் எப்படி 70 ரூபாயாகும்?

நண்பர் - காவல்காரனுக்கு அதிக வருமானம் வந்தால் கட்டுப்பட மாட்டான் என்பது நம் கொள்கை. காவல்காரன் வேலை செய்து அதிகப்பணம் சம்பாதித்தால் வேலை மூலம் அவன் பெறும் பணமும், நமது நல்லெண்ணமும் தொந்தரவு தாராது என்பது அன்னை. நிலத்தில் பிறர் வேலை செய்வதற்கு பதிலாகக் காவல்காரனே வேலை செய்தால் 30 நாளும் வேலை கொடுக்கும்பொழுது 30 நாள் கூலி வருகிறது.

அன்பர் - புரிகிறது. நாம் அவனைத் திட்டமாக வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கையை அவன் வசதியடைய வேண்டும் என்று மாற்றும் பரந்த மனப்பான்மை வேண்டும்.

நண்பர் - அந்த மனப்பான்மைக்கு எங்கும் ஏராளமான வழிகள் உள்ளன.

அன்பர் - பணம், பொருளில்லாமல் உறவேது?

நண்பர் - பணமும், பொருளும்தான் முக்கியம். ஆனால் அதைவிட மனம் முக்கியம். இரகஸ்யம் என்னவெனில் பணத்தைக் கொடுக்க முடியாது. பலரால் முடியும். பொருள் கொடுப்பது பெண்களுக்கு கடினம். அதையும் செய்பவர் உண்டு.

அன்பர் - அவற்றை விட உயர்ந்தது உண்டா?

நண்பர் - மனம் இதமாக மலர்வது அவற்றை விடக் கடினம். மனம் தடைபடாத இடத்தில், மலரும் இடத்தில் எந்தக் குறையும் வாராது.

அன்பர் - இது 100க்கு 100 பலிக்கும் என்று கூறலாமா?

நண்பர் - 100% பலன் இருக்கும், ஆனால் 90, 95% மனிதர்களே தேறுவர்.

அன்பர் - 95% மனிதர் தேறினால் பலன் எப்படி 100% வரும்?

நண்பர் - உங்கள் அனுபவத்தில் சுயநலமான சிலரைக் கூறுங்கள்.

அன்பர் -

  1. எந்த வேலையில் பிறருக்கு ஒரு சிறிது பலன் நியாயமாகப் போனாலும் அது மனம் பொறுக்காமல் அதற்காக வேலையைத் தவிர்ப்பவர்.
  2. பலனான பொருளை 100% பெற்றுக் கொண்டாலும் வேலை செய்தவன் திறமையைப் பிறர் பாராட்டுவதைப் பொறுக்காதவர்.
  3. அடுத்தாற்போல் மனிதர் இருப்பதே தெரியாதவர்.

நண்பர் - இதுவரை போதும். இதுபோல் சுயநலமிகள் 50 வகையினர். அந்த ஆராய்ச்சி தேவையில்லை. நீங்கள் கூறியவர்கள் உலகமே மாறினாலும் மாறாதவர்கள். நம் திட்டம் சிறியது. கூட்டாளி, கணவன், மனைவி, அண்ணன், நண்பன் போன்றவருடன் வரும் பிரச்சினைக்கு தீர்வு எளியது. அவரைவிடச் சற்றுப் பரந்த மனமிருப்பதே இரகஸ்யம். அதற்குரிய திட்டம் எளிதாகத் தோன்றும். இரண்டாம் இரகஸ்யம் கொடுப்பதை மனதாரக் கொடுக்க வேண்டும். அங்கு மனம் பெருமையை நாடக் கூடாது.

அன்பர் - எதைக் கொடுத்தாலும் சப்பென வாங்கிக் கொண்டு அசையாமலிருப்பதில்லையா?

நண்பர் - நான் விட்டுப் போன 5%, 10%இல் அவர் வருவார்.

அன்பர் - பலன் 100% எப்படி வரும்?

நண்பர் - அவர் அசையாதவராக இருக்கலாம். நம் மனம் சற்று உயர்வாக இருப்பதால் ஒரு முறை அசைவார். பலன் வந்துவிடும் அடுத்த முறை விழித்துக் கொள்வார்.

அன்பர் - இது உலகத்திற்குப் பலிக்குமா?

நண்பர் - ஒருவர், இருவர், பலரிடம் பலித்தால் உலகில் பலிக்கும்.

அன்பர் - ஆமாம். முதலிடம் பலித்தவுடன் வரும் பலன் அனைவருக்கும் ஆட்டம் தருமன்றோ! எல்லாம் சொல்லிவிட்டீர்களா? மேலும் ஏதாவது இருக்கிறதா?

நண்பர் - இது தர்மயுத்தம். யுகதர்மம் நிலைநாட்டும் புரட்சி. எளிதாக smoothஆக இருக்காது. ஒரு போருக்குள்ள சக்திகள் இங்கு வந்து மோதும்.

அன்பர் - பயமாக இருக்கிறதே.

நண்பர் - செய்பவருக்கு வாராது, முன்னிற்பவருக்கு வரும்.

அன்பர் - என்ன வரும் அப்படி, அவர் விரும்புவதைக் கொடுத்த பிறகு?

நண்பர் - கொடுப்பதை ஏற்பார்கள், மறுக்கமாட்டார்கள், திட்டம் பலிக்கும், 100% பலன் வந்துவிடும். பிறகு விழித்துக் கொள்வார்கள். நல்ல பெயர் செய்தவர்கட்கு வந்து விடப் போகிறது என்று துடிப்பார்கள். சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது. தோற்கும் பொய் அவர்கட்கு சாதகமாக Life Response தரும். ஒரு விஷயம் transactionஎன்றால் 15, 20 சிறு விஷயங்கள் - ரசீது, ஸ்டாம்பு, சாட்சி கையெழுத்து என வரும். ஏதாவது ஒன்று விட்டுப் போனால் உயிரை எடுத்து விடுவார்கள். 50 லட்சம் கொடுத்து அடங்கிய

விஷயம் பத்திரம் காப்பி யார் கையெழுத்துப் போட்டு வாங்குவது என்பதில் தடையாகும். சட்டம் தலைகீழேயிருக்கும்.

அன்பர் - அப்படியானால் முடியாதா?

நண்பர் - பெரிய காரியம் பெரிய அளவில் முடியும். அது நிச்சயம். அதன் பிறகு சிறு விஷயங்கள் 10, 20 அல்ல 100 எழும். நம் பக்கம் உள்ளவர் அனைவரும் நமக்குக் கட்டுப்பட்டால் அல்லது நல்லெண்ணத்துடன் உஷாராக இருந்தால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காப்பாற்றலாம்.

அன்பர் - அப்படி என்ன என்று வேலை வந்தபிறகுதான் சொல்ல முடியுமா?

நண்பர் - நம் பக்கம் இருப்பது 50 பேர் அல்லது 7 பேர் என்றால், அந்த 7 பேரும் cultured persons of broad mind ஆக இருந்தால் எதுவும் வாராது.

அன்பர் - அப்படியென்றால் culture முக்கியமா?

நண்பர் - culture இருந்தால் அசம்பாவிதமாகப் பேசமாட்டார்கள். அடக்கமிருந்தால் அதிகப்பிரசங்கித்தனமாகப் பேச மாட்டார்கள். ஒரு தவறான செயல், ஒரு சொல் வேலையைக் கெடுக்கும்.

அன்பர் - Cultured persons இல்லையா?

நண்பர் - நண்பரில் ஒருவர் அப்படியில்லை எனில் அவர் டிரைவரிடம் போய் கார் ஏர்போர்ட்டுக்குப் போகுதா, கெஸ்ட் அவுஸுக்குப் போகுதா எனக் கேட்டுவிடுவார்.

அன்பர் - டிரைவரைக் கேட்பவரை என்ன செய்ய முடியும்? அவருக்கு இப்படியெல்லாம் கேட்கக் கூடாது என்று தெரியவில்லை.

நண்பர் - பொறாமையில்லாவிட்டாலும் பக்குவமாகப் பேசுவது குறைவு.

அன்பர் - மனம் இதமானால் மற்ற தொந்தரவு இருக்காது. ரிஷிகள் கண்ட பிரம்மம் சச்சிதானந்தம். அன்பர்கள் காணும் பிரம்மம் உலகில் சச்சிதானந்தம் ஆனந்தமாக மனித வாழ்வில் வெளிப்படுவது எனக் கொள்ளலாமா? இதன் இதர அம்சங்கள் உண்டா?

நண்பர் - அர்ஜுனன் பெற்றது விஸ்வரூபத் தரிசனம். அலிப்பூர் ஜெயிலில் ஸ்ரீ அரவிந்தர் பெற்ற தரிசனம் மரமும், கம்பியும், திருடனும் நாராயணனான தரிசனம். அன்பர்கள் மனம் மாறினால் ஒரு க்ஷணம் இந்தத் தரிசனம் கிடைக்கும். அதற்கு முந்தைய நிலை ஆன்மீகக் கருணை மனதில் ஊற்றெழும். உலகில் பிரச்சினையில்லை என்ற உணர்வு எழும். அதற்கு முன் நமக்கு எவர் மீதெல்லாம் காரமிருந்ததோ அது போய் விடும். நம்மீது வெறுப்பிருந்தவர் மாறுவர். அதற்கு முந்தைய நிலையான நிம்மதி. கடைசி நிலை என்பது அபரிமிதமான செல்வம் தரும் அதிர்ஷ்டம்.

அன்பர் - அப்பொழுது அதிர்ஷ்டமே முதல் நிலையாகுமா?

நண்பர் - இம்முறையில் குறைந்தபட்சம் கோடீஸ்வரனாகலாம்.

அன்பர் - தடை எது? ஏன் என் போன்றவர் உடனே ஏற்றுச் செயல்படுவதில்லை? அதைத்தான் Taste of Ignorance என்கிறாரா பகவான்? நண்பர் - அன்னையிடம் வந்தபின் அதிகப்பட்சம் அருள் பெறலாம், குறைந்தபட்சம் அதிர்ஷ்டம் பெறலாம்.

அன்பர் - தடையிருந்தால், நாமே கண்டுபிடித்து விலக்க வேண்டும்.

நண்பர் - அது அடுத்தவர் எடுத்துச் சொல்வதில்லை. சொன்னால் பலிக்காது.

அன்பர் - சிருஷ்டியே Self-conception தானே?

********

அன்பர் - ஒரு கேள்வி எழுகிறது. குறைந்தபட்சம் கோடீஸ்வரனாகலாம் என்றால், கோடி ரூபாய் சம்பாதிக்கும் திறன் வரவேண்டுமல்லவா? உடலால் உழைக்காவிட்டால், மனம் என்ன செய்து அந்த சக்தியைப் பெறுகிறது? ஆத்மா அதைக் கொடுக்கிறதா? எங்கிருந்து வருகிறது? எப்படி வருகிறது?

நண்பர் - உழைப்பில்லாமல் பலனில்லை. ஓராயிரம் ஆண்டு உடல் உழைத்துப் பெற்றதை மனம் 100 ஆண்டுகளில் பெறும். சத்தியஜீவியம் க்ஷணத்திலும் பெறும். 3 நாள் அல்லது 30 நாள் தியானத்திருந்தால், Mother என்று இடைவிடாமல் சொன்னால் அது வரும் என்று நினைப்பது சரியில்லை. மந்திரத்திற்கு சக்தியுண்டு. ஆனால் மாங்காய் விழாது. உடல், உணர்வு, மனம், ஆன்மா, சத்தியஜீவியம் என்பவற்றிற்கு உயர்ந்த சக்தியுண்டு, அதைப் பெற நாம் ஏதாவது உயர்ந்ததைச் செய்ய வேண்டும் அல்லவா என்பது உங்கள் கேள்வி. அன்பர் - ஆம், ஒன்றும் செய்யாமல் எப்படி வரும்?

நண்பர் - ஒன்றும் செய்யாமல் வாராது, நிச்சயமாக வாராது. ஒன்றும் செய்யாமல் வரும். இரண்டும் உண்மை. இதற்குள் ஒரு இரகஸ்யம், பெரிய இரகஸ்யம், சிருஷ்டியிலேயே மிகப் பெரிய இரகஸ்யம் உண்டு. அது எளியது. அதை நீங்கள் கேட்கின்றீர்கள்.

அன்பர் - அப்படியொன்று இல்லாமலிருக்காது என நினைத்தேன்.

நண்பர் - இதைத் தத்துவமாகவும், உதாரணமாகவும் கூறலாம்.

அன்பர் - உதாரணத்தை முதல் சொல்லுங்கள்.

நண்பர் - அன்று - பழையநாளில் - மலையைப் புரட்டிச் செய்தவற்றை இன்று எளிமையாகச் செய்கிறோம்.

அன்பர் - அது ஆயிரம் தெரியும், சொல்லவேண்டாம்.

நண்பர் - அது எப்படி?

அன்பர் - மனிதனை மாடாக நடத்தியபொழுது மாடாக உழைத்தான். இன்று மனிதனாக நடத்துவதால் மனிதனை உயர்த்திவிட்டார்கள். மனிதன் உயர்ந்து விட்டான். ராஜாவாக நடத்துகிறார்கள். எவரும் ராஜாவாகலாமே.

நண்பர் - மனிதனை உயர்த்திவிட்டோம். மனிதன் உயர்ந்துவிட்டான். உயர்ந்த மனிதன் இன்று உயர்வாகச் செயல்படுகிறான். வெளிநாட்டிற்கு விமானத்தில் போகிறான், போனில் பேசுகிறான். அவன் செய்வது செலவு.

அன்பர் - அவனுக்கு வந்த உயர்வு, அந்தப் பணத்திற்கும் வந்துவிட்டது. அன்று இதே பணம் செய்ய முடியாததை, இன்று செய்கிறது. அது டெக்னாலஜி. டெக்னாலஜி மட்டுமன்று. அனைவரும் டெக்னாலஜியை அனுபவிக்கும் உரிமையைக் கொடுக்கிறார்கள். நாமே நமக்கு அவ்வுயர்வை அளிக்கிறோம்.

நண்பர் - டெக்னாலஜிக்குப் பொய் சொல்லத் தெரியாது. பொய் சொன்னால் டெக்னாலஜி வேலை செய்யாது. டெபோன் நம்பரை மாற்றிச் சொன்னால், போன் கிடைக்காது. டெக்னாலஜி என்பது சத்தியத்தை, சத்தியமான எண்ணத்தை ஜடத்தில் வெளிப்படுத்துவது.

அன்பர் - புரியவில்லை.

நண்பர் - இரண்டு கத்தி சந்தித்தால் பொருள்களை வெட்டலாம் என்று கத்தரிக்கோல் எழுந்தது. லென்ஸ் அமைப்பைக் கொண்டு கோடி மைல் தூரத்திலுள்ள நட்சத்திரத்தைப் பார்க்கலாம் என்பது டெலஸ்கோப். கம்ப்யூட்டர் கடிதம் எழுதும் என்று டெக்னாலஜி மனதில் எழுகிறது. மனம் டெக்னாலஜியைப் புரிந்து கொண்டால் போதாது. ஜடமான கருவி மனத்தின் எண்ணப்படிச் செயல்பட வேண்டும், ஜடம் எண்ணத்தை வெளிப்படுத்துவதால் டெக்னாலஜி வந்தது.

அன்பர் - மனம் ஜடத்திற்கு இறங்கி வந்து செயல்படுவதால் மனிதனுக்கு ஜடம் சேவை செய்கிறது. நன்றாக இருக்கிறது. அது உண்மையானால் சத்தியம் இறங்கிவர வேண்டும். சத் இறங்கி வந்து உடலில் செயல்பட்டால் கோடிக்கணக்காக சம்பாதிக்கலாமா?

நண்பர் - சத் வரவேண்டும் என்பதே திருவுருமாற்றம். சத்தியம் இறங்கி மனத்திற்கு வந்தாலும், மேலும் உடலுக்கு வந்தாலும் ஒன்று கோடியாகும். சக்தி சத்தியத்தில் இருக்கிறது. சத்தியம் நம் உடலில் வந்து பெருந்தன்மை ஆகவும், கருணையாகவும் செயல்படுவதில் கோடிகள் உற்பத்தியாகின்றன.

அன்பர் - அதுதான் அந்த இரகஸ்யமோ?

நண்பர் - ஸ்ரீ அரவிந்தர் உலகப் போர்களைத் தவிர்க்க முயன்றார். முடியவில்லை. வென்றார். இரண்டு போர்களையும் வென்றது பகவான். இரண்டாம் யுத்தத்தை Mother's war, அன்னையின் போர் எனக் கூறுவார்.

அன்பர் - பகவானுடைய யோக சக்தி இரண்டு போர்களை வென்றதுடன் ஆசியாவில் 45 நாடுகட்கு விடுதலை அளித்தது.

நண்பர் - இந்தியச் சுதந்திரம் பிளவுபட்டது. ஒரு கோடி மக்கள் நாடு கடந்து வந்தனர். 50 லட்சம் பேர் உயிரிழந்தனர். சத்தியம் பூரணச் சத்தியமாக இருந்திருந்தால் இந்தத் தேசம் இருந்திருக்காது.

அன்பர் - மகாத்மா சத்தியயுத்தம் தானே நடத்தினார்.

நண்பர் - திருவுருமாற்றம் என்பது ஜடம், சத்தாக மாறுவது. ஜடம் சத்தியத்தை ஏற்று, ஆன்மாவாகி, சத்தாக மாறுவது திருவுருமாற்றம். சொல்லால் வாயளவில் செய்யக் கூடியதில்லை. வாய் என்பது மனம். மனம் உண்மை பேசினால், அதன் கீழுள்ள உணர்வும், உடலும் பொய் சொல்லும். அப்பொய் வெளிவர சேதம் ஏற்படும்.

அன்பர் - இந்தியச் சுதந்திரம் முழுமையாக இருக்க மகாத்மா என்ன செய்திருக்கவேண்டும்?

நண்பர் - ஆயுதம் தாங்கிய புரட்சியை எழுப்பியிருந்தால் ஹிந்து-முஸ்லீம் என்ற பிணக்கு எழுந்திருக்காது.

சுதந்திரப் போர் ஒற்றுமையை உற்பத்தி செய்திருக்கும். இன்று மதக் கலவரத்தில் உயிரிழந்தவர், அன்று சுதந்திரப் போராட்டத்தில் வீரமரணம் எய்தியிருப்பார்கள். நாடு பிளவுபட்டிருக்காது.

அன்பர் - அப்பொழுது சத் - ஜடம் என்ன ஆகிறது?

நண்பர் - ஜடம் என்பது உடல். வீரமரணம் என்பது சத்தியமான சுதந்திரம். ஜடம் சத்தியம் வழியாகச் சத்தை அடைந்து திருவுருமாறும்.

நண்பர் - அற்பம் பெருந்தன்மையாக நடக்க முயன்றால் உயிர்போவது போல இருக்கும். கடுமைக்குக் கருணை அப்படியே. உயிர் போவதும், மானம் போவதும் ஒன்றே. நம் குட்டு வெளிப்பட்டு அனைவரும் நம் மானத்தை வாங்குவதும் நாமே நம் குணத்தை ஜடமான உடன் ஆழத்தில் ஏற்று மனம் மாறச் சம்மதிப்பதும் ஒன்றே, ஆழத்தின் சத்தியம் அதிர்ஷ்டம்.

அன்பர் - வெளியிலிருந்து அவசியம் வந்து மாறும்பொழுது வேதனை, அவமானம், மரியாதை போவது உண்டு. மனம் உண்மையை ஏற்று, ஏற்பதை உணர்வு ஏற்று வெட்கப்பட்டு மனம் குன்றி, குறுகி, சுருங்கி, மாறச் சம்மதப்பட்டு, மாற்றமான பழக்கத்தை மனதார, உண்மையாக வெளிப்படுத்தினால் மலை நம்மை நோக்கி நகர்ந்துவரும். அதிர்ஷ்டம் வரும், அருள்வரும், அன்னை வருவார்.

நண்பர் - இவை பிறர் சொல்லி வருவதில்லை. சத்தியம் சத்தியமாகப் பலிக்கும். சத்தியம் இறங்கி வந்து மனத்திலும், உடலிலும் செயல்படுவதில் அந்த அபார சக்தியுள்ளது. இரகஸ்யம் சத்தியத்தின் சக்தியிருக்கிறது.

அன்பர் - எல்லாம் புரிகிறது. ஏற்றுக் கொள்கிறேன். 56 அத்தியாயங்களின் 56 கருத்துகள் மூலமாகவும் இதைக் கூற முடியும் என்பதையும் கேட்க ஆவலாக இருக்கிறேன்.

நண்பர் - விஷயம் புரிவதும், செய்வதும் முக்கியம். விளக்கமன்று. ஏற்கனவே சத், சித், ஆனந்தம் பூரணத்தின் 6 அம்சங்களாகின்றன. அவை ஐக்கியம், சத்தியம், நல்லெண்ணம், ஞானம், சக்தி, அன்பு என்றார். அதன் மூலம் இக்கருத்தைக் கருதுவது விளங்கும். Divine,Undivine என்ற அத்தியாயத்திற்குரிய கருத்து இது. அன்பர் - ஏற்கனவே சொன்னீர்கள்.

நண்பர் - பெருஞ் செல்வம் எப்படி வரும்? அதற்குரிய சக்தி எங்கிருந்து எழுகிறது? மந்திரம் போலிருக்கிறதே என்பது கேள்வி. பாம்பு கடித்தபின் மந்திரம் எப்படி விஷத்தை எடுக்கிறது? விஷம் கடுமையானது. உயிரை எடுப்பது, அதற்கு ஈடான சக்தி மந்திரத்திலிருக்கிறது. உயிரை எடுப்பதைத் தடுக்கும் சக்தி மந்திரத்தில் இருப்பதுபோல் உலகுக்கு உயிரான செல்வத்தைத் தரும் சக்தியும் சத்தியத்திலிருக்கிறது.

அன்பர் - மந்திரத்தைவிட சத்தியத்திற்கு சக்தியுண்டா?

நண்பர் - மந்திரம் சத்தியத்தின் ஓர் உருவம். சத்தியம் உலகில் உள்ள அத்தனை உருவங்களையும் பெறவல்லது. செல்வம் சிறு உருவம். அதிர்ஷ்டம் பெரியது. அதிர்ஷ்டத்தின் ஓர் அம்சம் செல்வம். அதிர்ஷ்டம் அருளின் ஓர் அம்சம். அருள் சத்தியத்தின் ஓர் அம்சம். சத்தியம் ஆன்மாவின் வெளிப்பாடு. மூலம் சத், பிரம்மம் முடிவு. நாமே அந்தப் பிரம்மம் என்பதே சோஹம் என்ற மந்திரம்.

அன்பர் - நாம் சோஹம் என்று வாயில் சொல்கிறோம். அதற்குப் பலனிருக்காது.

நண்பர் - பலன் உண்டு. வாய் மட்டும் சொல்வது பொய். பொய்க்கு உண்டான பலனிருக்கும். மந்திரத்தைத் தீவிரமாகச் சொல்லிவிட்டுப் போனால் தவறான செய்தி வருவதைச் சிலர்தான் கண்டிருப்பார்கள். பலரும், "இவ்வளவு மந்திரம் சொல்லியும் அதை மீறிக் கர்மம் செயல்படுகிறது'' என்று எடுத்துக் கொள்வார்கள்.

அன்பர் - நம்மவர்கள் வந்த முடிவுகள்: அதிகமாகச் சாமி கும்பிடாதே, பொய்யே சொல்லாவிட்டால் உலகம் கட்டுப்படாது.

அன்பர் - ஆறு அம்சங்கள்

அன்பு - பிரியமாக வெளிப்படும்

சக்தி - நிறைவாக வெளிப்படும்.

ஞானம் - பிரகாசமாக வெளிப்படும்

நல்லெண்ணம் - மனநிறைவாகும்

சத்தியம் - அவற்றைப் பூர்த்தி செய்யும்.

ஐக்கியம் - நம்மைப் பிறருடன், உலகுடன்,

செயலுடன் இணைக்கும்.

அன்பர் - ரிஷிகள் கண்ட பிரம்மம் ஆத்மா சமாதியில் கண்டது. அது அதிஉன்னதமானது என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். இந்த 6 அம்சங்களில் செயல் வெளிப்படும்படிச் செயல்பட்டால், பிரம்மம் வாழ்வில் வெளிப்படும் என்றால் அது ரிஷிகள் கண்ட பிரம்மத்தைவிட உயர்ந்தது எனலாமா?

நண்பர் - நாம் காணும் பிரம்மம் எல்லோரும் இந்நாட்டு மன்னராவோம்.

அன்பர் - பொய்யை அழிப்பது ஜகப்புரட்சியாகுமா? சத்யயுகம் அப்படியிருந்ததா?

நண்பர் - சத்யயுகத்தில் மனம் சத்தியத்தை ஏற்றது.

அன்பர் - சத்தியத்தை உடல் ஏற்பது ரிஷிகளைவிட ஒருவரைப் பெரியவராக்குமோ?

நண்பர் - உடல் சத்தியத்தை ஏற்றால் பொன்மயமாகும்.

அன்பர் - ஸ்ரீ அரவிந்தருடைய உடல் அதிகமாக கனக்கும் எனப் படித்திருக்கிறேன். கனம் எதிலிருந்து வந்தது?

நண்பர் - உடல் சத்தியத்தை ஏற்றால் வலி ஆனந்தமாகும். அதற்கு வலிமை வேண்டும்.

அன்பர் - வலிமைக்கு சூட்சுமம் உண்டு என்றீர்களே?

நண்பர் - வலிமை security பாதுகாப்புத் தரும், சூட்சுமத்தைக் கடந்து காரண உலகையடையும்.

அன்பர் - பிரியமாக, நிறைவாக, பளிச்சென்று, மனமும் உணர்வும் நிறைந்து, பூர்த்தியாகி, பிறருடனும், உலகுடனும் நாம் இணைந்து செயல்படுவது ரிஷிகளையும் கடப்பது என்பது பெரிய இரகஸ்யம்.

நண்பர் - அதன் குறைந்தபட்சம் கோடீஸ்வரனாக்கும்.

அன்பர் - அதிகப்பட்சம் ஸ்ரீ அரவிந்தராவோம்.

நண்பர் - 56 வகைகளாகப் பயின்றால் ஆத்மா நிறையும்.

**********

 



book | by Dr. Radut