Skip to Content

பகுதி 17

  1. இன்று நாம் பிரகிருதியால் சூழப்பட்ட அகந்தை. அகந்தை கரைந்தபின் நாம் பரிணாமவளர்ச்சிக்குரிய சைத்தியப்புருஷனாவோம். பிரபஞ்சத்தில் ஆன்மாவின் பரிணாமவளர்ச்சிக்குரிய மையம் சைத்தியப்புருஷன். அதனால் பிரகிருதியிலுள்ள அன்னை, நம் சைத்தியப் புருஷனை நோக்கி வருவார்கள். மனமும், ஜீவனும் தன்னிறைவால் நிரம்புவது அன்னை நம்மை நோக்கி வருவதன் அறிகுறி.

அன்னையின் வருகை.

அறியாமை, இருள், மேல்மனம், கண்டம் (finite), அகந்தை, காலம், இடம், துன்பம், மரணம், பிரகிருதி (இயற்கை), கொடுமை, அழிவு, நான்' போன்றவை மனித வாழ்வின் அம்சங்கள். அன்னை இவற்றை விட்டு விலகிப் போவார்.

அறிவு, ஜோதி, உள்மனம், அகண்டம் (infinity), ஆத்மா, காலம் கடந்தநிலை, இன்பம், அமரவாழ்வு, புருஷன், கருணை, படைப்பு, தன்னலமற்றநிலை ஆகியவை தெய்வத்திற்குரியவை. அன்னை இவற்றை நோக்கி வருவார்.

இவற்றுள் அகந்தை மாறி சைத்தியப்புருஷனாவதைப் பற்றியது மேற்சொன்ன கருத்து.

பிரம்மம் ஆதி.

சச்சிதானந்தம் உச்சகட்ட உயர்வு.

சிருஷ்டி (cosmos) மேலுலகம்.

சத்தியஜீவியம், சிருஷ்டி மையம்.

தெய்வலோகம், பிரபஞ்சம் பூவுலகத்தைத் தன்னுட்கொண்டது பூலோகம்.

பூலோகம் மனிதன் வாழ்வது. பிரபஞ்சத்தில் ஆத்மாக்கள் ஏற்பட்டு பூவுலகத்திற்கு வந்து வாசம் செய்கின்றன. தெய்வலோகம் பிரபஞ்சத்திற்குட்பட்டது. சத்தியஜீவியமும், சிருஷ்டியும் சச்சிதானந்தத்திற்கு அடுத்து கீழுள்ள உலகங்கள். ஈஸ்வர-சக்தி செயல்படும் உலகம் அது. சச்சிதானந்தம் பரப்பிரம்மமாகும். அத்தனை நிலைகளையும் கடந்தது ஆதி.

பிரபஞ்சம் தான் பரந்து விரிந்திருப்பதால் தன் இலட்சியம் இப்பரந்த பரப்பில் பூர்த்தியாகாது என்பதால், செறிந்த புள்ளிகளை தன்னுள் உற்பத்தி செய்தது. அவை ஜீவாத்மாக்கள். ஜீவாத்மா, பிரகிருதியில் செயல்படுவது உலகம். இதற்குப் பரிணாம வளர்ச்சியில்லை. நாம்என்று நாமறிவது அகந்தை. அகந்தை பிரகிருதியில் உற்பத்தியானது. அது ஜீவாத்மாவைச் சூழ்ந்துள்ளது. அதனால் ஜீவாத்மா பிரகிருதியின் இலட்சியத்தைப் பூர்த்தி செய்ய முடிவதில்லை. அகந்தை கரைந்தால் ஜீவாத்மாவுக்கு விடுதலையுண்டு. விடுதலையடைந்த ஜீவாத்மா சைத்தியப்புருஷனாவான். அவன் பிரபஞ்சம் முழுவதும் பரவுவான். சைத்தியப்புருஷன் பிரபஞ்சத்தின் இலக்கை எட்டக் கூடியது. இயல்பாக இறைவனையும், அன்னையையும் நாடக் கூடியது சைத்தியப்புருஷன். அன்னை சைத்தியப்புருஷனை அனுதினமும் நாடுவார். அகந்தை அழிந்து சைத்தியப்புருஷன் வெளிப்பட்டால், மனமும் ஜீவனும் நிறையும். அது அன்னையை நம்மை நோக்கி அழைக்கும்.

*******

  1. சாட்சிப்புருஷனான மனோமயப்புருஷன் சாட்சி நிலையைவிட்டு ஈஸ்வரனாக மாற ஆரம்பித்து, பிரபஞ்சமெங்கும்பரவி, தன்னை பிரபஞ்சத்தின் ஆத்மாவாக்குவதுமுடிவான கட்டம்.

ஈஸ்வரனாக மாறும் சாட்சி.

புருஷனும், பிரகிருதியும் லோகம். நாம் பிரகிருதியாக இருக்கிறோம். அதை மட்டும் அறிவோம். பிரகிருதி எதைச் செய்தாலும், புருஷன் பார்த்துக் கொண்டிருப்பான். அதனால் புருஷனை சாட்சி என்கிறோம். சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தாலும், பிரகிருதி செயல்படத் தேவையான சக்தியை அளிப்பது புருஷனேயாகும். சாட்சிப்புருஷனுக்கு மனோமயப்புருஷன் எனப் பெயர். இதற்கு அடுத்த கட்டம் விஞ்ஞானமயப்புருஷன்என உபநிஷதம் கூறுகிறது. அவனை பகவான் சத்தியஜீவன் என்கிறார். வேதம் சத்தியஜீவனையும், (அவன் வாழும் லோகத்தையும் - சத்தியஜீவியம், Sopermind) Truth-conscious soul சத்தியத்தை அறியும் ஜீவன் என்கிறது. சத்தியம், ரிதம், பிருகட் என்பது வேதத்தின் விளக்கம். சத்தியஜீவனில் அகந்தையில்லை, அறியாமையில்லை. அறியாமைக்குரிய மேல்மனத்தில் சத்தியஜீவனில்லை. அது அனந்தனுடையது (infinity). எனவே சத்தியஜீவன் சத்தியத்தை அறிவான். புருஷன்என நாம் கூறுவது மனோமயப்புருஷன். இவன் மனத்திற்குரியவன், ஜீவாத்மாவின் பகுதி. இவனும் அறியாமைக்குரிய மேல்மனத்தில்லை. அடிமனம் (subliminal), உள்மனம் (inner mind), ஆழ்ந்த ஜீவன் (inner being) எனப்படுவது நாம் அறியாதது. நாம் வசிப்பது மேல்மனம். இதைக் கடந்து உள்ளே போனால் அடிமனம். அது ஆழ்ந்த ஜீவனின் பகுதியாக, உள்மனத்துள் உறைகிறது. ஆணவமலம்எனும் அகந்தை மனோமயப்புருஷனைச் சூழ்ந்துள்ளது. இவனுக்குச் சத்தியம் தெரியாது. அறியாமையாலும், அகந்தையாலும் சூழப்பட்டதால் மனோமயப்புருஷனுக்குச் சத்தியம் தெரிவதில்லை. எனவே இவன் ஆத்மா (soul) என்றாலும் தன்னையறியாத (unconscious) ஆத்மாவாகும். அகந்தை கரைந்தால், அறியாமையின் பிடி தளரும். பிடி தளர்ந்து, அகந்தையிலிருந்து விடுபட்டால்,

மனோமயப்புருஷனுக்கு விடுதலை கிடைக்கிறது. விடுதலை பெற்றபின் சலனமற்ற மனோமயப்புருஷனுக்கு சலனம் ஏற்படுகிறது. அதனால் பரிணாமவளர்ச்சி ஆரம்பிக்கிறது. அதன்மூலம் மனோமயப்புருஷன், சைத்தியப்புருஷனாகிறான். மனோமயப்புருஷன் சாட்சிநிலையை விட்டு அதிகாரம் பெற்று பிரகிருதியை ஆளும் பொழுது ஈஸ்வரனாகிறான். புருஷப்-பிரகிருதி மாறி ஈஸ்வர-சக்தியாகிறது. அதாவது பிரகிருதி சக்தியாகிறது. அந்நிலை முடிவான நிலையானால் அதன் ஆரம்பம் சைத்தியப்புருஷன் வெளிவருதலாகும்.

வெளிவந்த சைத்தியப்புருஷன் தான் பிரபஞ்சத்தின் ஆத்மாவுக்குரியவன், பரமாத்மாவின் பகுதி என்றறிவதால், வளர்ச்சியை நாடுகிறான். ஆன்மாவுக்கு அழிவில்லை, சலனமில்லை, அசைவில்லை, பிறப்பில்லை, இறப்பில்லை என்பது நம் மரபு. பகவான் ஆன்மாவுக்கு வளர்ச்சியுண்டு. அது வெறும்வளர்ச்சியில்லை, பரிணாமவளர்ச்சி என்கிறார். இது பகவான் யோகத்தில் செய்த புரட்சி.

வளரும் சைத்தியப்புருஷன் முதல்நிலையில் பிரபஞ்சத்தின் ஆத்மாவாகிறான். முடிவானநிலையில் பரமாத்மாவுடன் ஐக்கியமாகிறான். இதை spiritual evolution ஆன்மீகப்பரிணாமம் என்கிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர்.

மனம் மனிதனின் தலையாயகருவி. அங்குள்ள புருஷன் மனோமயப்புருஷன். இவன் சாட்சியாக இருக்கிறான். ஞான யோகத்தில் மோட்சம் பெற்றுத் தருபவன் சாட்சிப்புருஷன். மனம் எப்படிச் செயல்படுகிறதுஎன ஸ்ரீ அரவிந்தர் விளக்குகிறார். சாட்சிப்புருஷனின்நிலை என்ன என்பதையும் விளக்குகிறார்.

ஒரு நிகழ்ச்சியை மனதில் விளக்கும்பொழுது, அகந்தைக்கும் சாட்சிக்கும் உள்ள இடம் தெளிவுபடுகிறது. கோபம், பசி, எண்ணம், ஆசை என்பன மனத்தில் உதிப்பது முதற்காரியம். பகவான் கோபத்தை உதாரணமாக எடுத்துக் கொள்கிறார். கோபம் எழுகிறது. நாமே கோபமாகிறோம். கோபம்என்ற உணர்வோடு ஒன்றிவிடுகிறோம்.

மனித வளர்ச்சியில் முதல்நிலை இது. கோபம் தணியும்வரை நாம் கோபமாக இருக்கிறோம். மனம் வளரும்பொழுது மனிதன், கோபத்தினின்று அகன்று சிந்திக்கிறான். சிந்தனை மனத்தின் செயல். சிந்தனை மனிதனைக் கோபத்திலிருந்து பிரிக்கிறது. பிரிந்துநின்று சிந்திப்பது வளர்ச்சியின் முதல்நிலை. கோபத்திலிருந்து அதிகமாக விலகினால் தான் யாரென்று உணரும் அறிவு எழும். முழுவதும் விலகி நின்று பார்த்தால், "எனக்குக் கோபம் வந்தது'' என்று தெரியும். நான்' வேறு, கோபம் வேறுஎனப் பிரிந்த நிலையில் நான்' என்பது அகந்தைஎன விளங்கும். கோபத்தினின்று விலகியதுபோல், அகந்தையிலிருந்து விலகினால் நான்என்ற அகந்தை, நான்எனும் சாட்சிப்புருஷனாகக் காட்சியளிக்கும்.

இதுவே மனோமயப்புருஷன்எனும் சாட்சி. மேற்சொன்னதைச் சாதிப்பது தியானம். தியானம் அமைதியைக் கொடுத்து சிந்திக்கச் செய்து, அகந்தையை அறிவுறுத்தி, சாட்சியில் முடிகிறது. நிஷ்டையைத் தொடர்ந்தால் சாட்சிப்புருஷன் க்ஷரப்பிரம்மத்தை அறிவான். மோட்சம் பெறுவான்.

பூரணயோகம் கையாள்வது தியானமில்லை, சமர்ப்பணம். சமர்ப்பணம் கோபம் எழுந்தவுடன் அதைச் சரணம் செய்ய முயல்வதால், அகந்தை தானே விலகுகிறது. சமர்ப்பணம் எழுந்தபின் அகந்தைக்கு வேலையில்லை. கோபம் சமர்ப்பணமானால் கோபப்பட்ட அகந்தை கரைகிறது. அகந்தை கரைந்தபின் வெளிப்படும் ஆத்மா சாட்சிப்புருஷனில்லை, சைத்தியப்புருஷனாகும்.

இதுவே பூரணயோகத்தில் முதற்படி.

  • மனிதனில் உள்ளது ஆத்மா.
  • அது ஜீவாத்மாவாகவும், அதன் பகுதிகளான 3 புருஷன்களாகவும் உள்ளன.
  • ஜீவாத்மாவின் பிரதிநிதியான சைத்தியப்புருஷன் என்பதும் ஆத்மா.

உடருந்து, வாழ்வு, மனம், சத்தியஜீவியம் ஆகிய எல்லா இடங்களிலும் ஆத்மாவுண்டு. அவற்றைப் புருஷன் என்கிறோம். அதன் பிரகிருதியை சைத்தியப்புருஷன் என்கிறோம். கரணம் ஆத்மா சைத்தியப்புருஷன்

உடல் - அன்னமயப்புருஷன் - உடலுக்குரிய சைத்தியப்புருஷன்

உயிர் - பிராணமயப்புருஷன் - பிராணனுக்குரிய சைத்தியப்புருஷன்

மனம் - மனோமயப்புருஷன் - மனத்திற்குரிய சைத்தியப்புருஷன்

மனத்திற்கும் சத்தியஜீவியத்திற்கும் இடைப்பட்ட நிலைகள் 4. சைத்தியப்புருஷன் வளரும்பொழுது இந்நிலைகட்கு உயர்கிறான். சத்தியஜீவியத்தை சைத்தியப்புருஷன் அடையும்பொழுது ஈஸ்வரனாகிறான். இது பூரணயோகப் பாதையாகும்.

******

  1. மனம் அனந்தனை நினைக்கின்றது. உணர்வு அனந்தனை சக்தியாக உணர்ந்தாலும், உடல் அனந்தனை உலகெங்கும் வியாபிக்கும் பொருளாக (substance) அறிந்தாலும், பரம்பொருளைச் சிருஷ்டியாகவும், சிருஷ்டியைப் பரம்பொருளாகவும் அறிய உதவும்.

பரம்பொருளே சிருஷ்டி.

பரம்பொருள் தன்னையே உலகமாக சிருஷ்டித்தான், உலகைத் தன்னிலிருந்து சிருஷ்டித்தான் என்ற ஆன்மீக உண்மையை சர்வம் பிரம்மம் என்றது உபநிஷதம். இதன் முடிவு,

மனம் என்பது பரம்பொருள்.

உணர்வு என்பது பரம்பொருள்.

உடலும் பரம்பொருளே,

என நாம் ஆன்மீகஅனுபவமாகப் பெறுவது பூரணயோகப் பாதையில் உள்ள மைல் கற்கள். மனம் அகந்தையை இழந்தால் பிரபஞ்சத்தின் மனமாகும். அனைவருடைய மனத்துடனும் கலக்கும். உணர்வின் அகந்தை கரைந்தால், நம் உணர்வு, உலகத்து மனிதர்களுடைய உணர்வோடு ஒன்றும். உடலும் அதேபோல் ஐக்கியமாகும். அன்னை தம் சூட்சுமஉடல் பிரபஞ்சமெங்கும் பரவியதைக் கண்டார்கள்.

******

  1. அக்ஷயப்பாத்திரத்தில் அனந்தன் ஜடமாக வெளிப்படுகிறான். எதிரியின் பலத்தில் பாதி தனக்கு வேண்டும்என்று கேட்டவனுக்குக் கொடுக்கும் வரம், உணர்வில் அனந்தமாகும்.

எல்லையற்ற பலம்.

வாலி வரம் பெற்றவன். எதிரியின் பலத்தில் தனக்குப் பாதி வேண்டும்என்ற வரம் பெற்றவன். அவனை யார் தோற்கடிக்க முடியும்? அக்ஷயப்பாத்திரம் எடுக்க எடுக்கக் குறையாது. காமதேனு கேட்டனவெல்லாம் தரும். அன்னை வாழ்வை அக்ஷயப் பாத்திரமாகவும், காமதேனுவாகவும் மாற்றி அமைக்கிறார். நாம் எதைச் செய்தாலும் இன்று அக்காரியம் முடிவது நம் திறமை, அந்தஸ்தைப் பொருத்தது. நாம் அகந்தையிலிருந்து விலகி அன்னை மையத்திற்குப் போனால், வாழ்வு வாக்குத் தந்த வரத்தைத் தரும். எதிரியின் பலத்தில் பாதி வாக்கு வந்தது. வாழ்வின் முழுப் பலமும் நமக்கு வருகிறது. எப்படி? நாம் என்ன செய்யவேண்டும்?

  • இன்று நாம் நம் பெற்றோர் பெற்ற பிள்ளைகளாக இருக்கிறோம்.
  • நம் வலிமை நம் அந்தஸ்தைப் பொருத்தது.

  • அன்னை மையத்திற்குப் போனால் நாம் அன்னையின் குழந்தைகளாவோம்.
  • அன்னைக்குழந்தையின் வலிமை, அன்னையின் வலிமை.
  • எந்தக் காரியத்திற்குப் போனாலும், காரியம் நம்மை ஏற்று, நம் காரியத்தைத் தன் காரியமாக முடிக்க முயல்கிறது.

*******

  1. The Life Divine நூல் மேலே போகப் போக கருத்தின் கம்பீரத்தை பகவான் உயர்த்துகிறார். ஆரம்பத்தில் பகுத்தறிவுக்கு விளக்கம் அளிக்கிறார். அடுத்தாற்போல அறிவு ஞானமாவதைக் காட்டுகிறார். பின்பகுதியில் பரம்பொருளை விளக்குகிறார். அறிவு பரம்பொருளை எட்டமுடியாது. போகப் போக நூல், கருத்தின் நிலையை உயர்த்துவதால், வாசகரும் தம் அறிவு நிலையை உயர்த்த வேண்டும். இல்லை எனில் நூல் விளங்காது.

கருவியை உயர்த்தும் கருத்து.

The Life Divine கடினமான தத்துவ நூல். படிப்பவர் நிலையை உயர்த்தும் வகையில் நூல் அமைந்துள்ளது. முதல் அத்தியாயத்தைப் படிப்பது சுலபம். அதிலும் முக்கியக்கருத்துண்டு. மற்ற அத்தியாயங்களைவிட எளிது. இதன் கருத்தை மனதில் ஏற்றுக்கொண்டால் பின்வரும் அத்தியாயங்களில் வரும் கடினமான கருத்துகள் விளங்க உதவும். நூல் கடினமானது என்றாலும், படிப்பவர் திறமையைப் படிப்படியாக உயர்த்துமாறு அத்தியாயங்களும், அங்குள்ள கருத்துகளும் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கும் கருவியான மனிதனின் திறமையை உயர்த்துமாறு எழுதப்பட்ட நூல் The Life Divine.******

  1. கடைசி அத்தியாயங்களைப் புரிந்துகொள்ளும் திறனையும் நூலின் பல பகுதிகளில் பகவான் கொஞ்சம் கொஞ்சமாக அளிக்கின்றார்.

முதலிலேயே வரும் முடிவு.

TheLife Divine எழுதிய முறையில் பல சிறப்புகளுண்டு. அவற்றுள் ஒன்று முடிவில் உள்ள கருத்துகளை முதலேயே அறிமுகப்படுத்துவது. உதாரணமாக ஓர் அத்தியாயம் முழுவதும் விவரித்த கருத்தை அடுத்த அத்தியாயத்தில் முதல் ஒரு பாராவாக எழுதுகிறார். பின்வரும் அத்தியாயங்களில் அதையே ஒரு வாக்கியத்திலும் குறிப்பிடுகிறார். சற்று பின்னே சென்றால் அதை ஒரு சொல்லாலும், சொற்றொடராலும் எழுதுவது ஸ்ரீ அரவிந்தரின் பாணி. அதனினும் சிறப்பு அக்கருத்தை முன்வரும் அத்தியாயங்களில் கருத்தின் வித்தாக அறிமுகப்படுத்துவதாகும்.

********

  1. பகுத்தறிவிலிருந்து பரம்பொருளுக்கும், அதிலிருந்து ஆன்மீகமனம் பரம்பொருளை அறியும் நிலைக்கும் நம்மை பகவான் அழைத்துச் செல்கிறார்.

பகுத்தறிவு கண்ட பரம்பொருள்.

பகுத்தறிவு பரம்பொருளை அறிய முடியாது என்பது உலகத்தின் கருத்து. முடியும் என்பதை The Life Divine நிரூபிக்கிறது. The Life Divine தரும் விளக்கங்கள் பகுத்தறிவுக்குரியன. அவற்றின்மூலம் பகவான் பிரம்மஞானத்தை விளக்குகிறார். மனம் சிந்திப்பது. சிந்தனையிலிருந்து மனம் எப்படி ஆத்மாவைத் தொடுகிறது என்று 762இல் பார்த்தோம். அங்கிருந்து பகவான் அறிவுப்பாதை வழியாக பிரம்மத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.

*****

  1. இதைச் சாதிக்க அவர் கையாளும் முறைகள் மூன்று:

1) வாசகருக்குத் தேவையான புது அறிவுத்திறனை அளிக்கிறார். 2) மொழிக்குப் புதுத்திறனை அளிக்கும் வகையில், முரணான சொற்றொடர்கள். பரந்தகருத்தைத் தழுவும் சொற்கள் ஆகியவற்றை ஏற்படுத்துகிறார். மனம், ஜீவியத்தை மாற்றிப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார். 3) யோகமரபுக்குப் புதிய (சமஸ்கிருதத்திலும் சொல்ல முடியாத) உயர்ந்த ஆன்மீகஉண்மைகளை அறிமுகப் படுத்துகிறார்.

புதியஅறிவு, புதியமொழி, புதியயோகம்.

வாசகருக்கு இல்லாத அறிவைத் தந்து, தம் எழுத்தைப் படிக்க வைப்பது ஸ்ரீ அரவிந்தர் வழி. அவருடைய கருத்துகள் உலகத்திற்குப் புதியதானதால், பழைய மொழியால் அவற்றை விளக்க முடியாது. தெய்வம்என்று கூறினால் விக்ரஹம் நினைவுக்கு வருகிறது. அல்லது உருவம் தோன்றுகிறது. ஞானிகளும் தெய்வம்என்ற சொல்லைக் கேட்டு பிரம்மத்தை நினைக்கின்றனர். அவர்கள் பிரம்மம்என்று அறிவது சத்புருஷனின் மூன்று அம்சங்களில் ஒன்று. அதனால் God என்ற சொல்லை முடிந்தவரை ஸ்ரீ அரவிந்தர் தவிர்த்து That என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். இன்று இல்லாத கருத்தைத் தெரிவிக்க முரணான சொற்றொடர்களை உருவாக்குகிறார். Miserly spendthrift சிக்கனமான ஊதாரி, comprehensive preciseness பரந்து விரியும் குறிப்பான இலக்கு என்பன போன்ற சொற்றொடர்கள் நூல் ஏராளமாக வருகின்றன. யோக மரபில்லாத புதிய ஆன்மீகஉண்மைகளைக் கூறுகிறார். Eg. ஆன்மா

வளர்கிறது; மோட்சம் முடிவானதன்று, ஆரம்பம்; பிரம்மம்என நாம் அறிவது பிரம்மத்தின்பகுதி; காலத்தையும், காலத்தைக் கடந்த நிலையையும் இணைப்பது வாழ்வுக்குரிய ஆன்மீகம்; கர்மம் தூய வாழ்வில் கரையும்.

*******

  1. ஆன்மீகத்தை, பகவான் அறிவுக்கு விளக்கும் வகையில் எழுதினார்.

மொழியின், உரைநடையின் தரத்தையே இதற்காக உயர்த்தினார். எழுத்தின் பாணியின் தரத்தை உயர்த்தினார்.

ஆன்மீகத்திற்குரிய அறிவுப்பாணி.

*******

  1. கணிதத்தில் (infinity) அனந்தத்தை அறிவது (intellect) அறிவில்லை. பரம்பொருள் சிந்தனைக்குரிய மனத்தைத் (thinking mind) தொடுவதால் ஏற்படுவது அது. அறிவின் பிரகாசம் The Life Divineபுரிந்துகொள்ளாது. சிந்திக்கும்மனம் அளவுகடந்து infinite expansion) விசாலமடைந்தால் The Life Divineபுரியும்.

உலகநாகரீகம் முழுவதும் மேல்மனத்துடன் நிற்கும்.

புதிய கருத்துகள், கண்டுபிடிப்புகள் அத்துடன் நிற்பதும் உண்டு. எல்லா மனிதர்கட்கும் பயன்படும் அளவில் வருவதும் உண்டு. பூமி சூரியனைச் சுற்றிவருவது, ஆகர்ஷணசக்தி, சூரியமண்டலம் போன்றவை வெறும்விஞ்ஞானக்கண்டுபிடிப்புடன் நிற்கவில்லை.

இன்று நாம் பயன்படுத்தும் T.V., ரேடியோ, டெலிபோன் ஆகியவற்றை நாம் பயன்படுத்த இக்கருத்துகள் பயன்படுகின்றன. Infinity அனந்தம் என்பதை உலகம் வெகுநாள் முன்னதாக அறியும். அதன் applications தொடர்ந்தபயன் நமக்கு எத்தனையோ products பொருள்கள் மூலமாக வருகின்றன. எந்தப் பொருள்மூலம் எந்தத் தத்துவம் பயன்படுகிறது என்பதையும் நாம் முழுவதும் அறியோம்.

பல ஆயிரம் ஆண்டுகட்குமுன் infinity அனந்தம் தத்துவத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கருத்து கணிதத்தில் ஏராளமாகப் பயன்படுகிறது. இது மேல்மனத்திற்குரிய வாழ்வு. மனிதன் வாழ்விலும், ஜடத்திலும் infinityயை அறிதல் அவசியம். காமதேனு, கற்பகவிருட்சம், அக்ஷயப்பாத்திரம் என்பவை ஜடத்திலும் அனந்தமுண்டு என்று அறிவிக்கின்றன. இதை practical concept of infinity  எனலாம். எந்த ஒரு பேனாக் கம்பனியும் உலகத்தின் பேனாத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். இது infinite production முடிவில்லாத உற்பத்தி. இதுபோன்று வாழ்வின் பல அம்சங்களில் அனந்தத்தைக் காண்கிறோம். ஜடவாழ்விலும், சமூகவாழ்விலும் முடிவற்ற பெருக்கத்தைக் கண்டால் உலகம் வளம் பெறும், அப்பொழுது,

  • நம் தேவைகட்குப் பற்றாக்குறை என்பதிருக்காது
  • அளவோடு கிடைக்கும் பணம், அளவற்று நாட்டில் புழங்கும்.

இதுவரை வந்த மாற்றங்கள் டெக்னாலஜியால் வந்தவை. மனம் விசாலமடைந்து புதிய நோக்கம் எழுந்து, மனிதனுடைய ஆத்மா வாழ்வில் செயல்பட்டால் மேற்சொன்ன மாற்றங்கள் வரும். அது நம் வாழ்வை ஆழ்ந்து தொடும். மேல் மனத்தோடு நிற்காது. மேலை நாடுகளில் உபரிப் பணம் அதிகமாகி என்ன செய்வது என்று தெரியாத நிலையிலிருக்கிறார்கள். கம்ப்யூட்டர் மூலம் 1 நாளைக்கு உலகில் உலவும் பணம் $ 1 டிரில்யன், 40 லட்சம் கோடி ரூபாய்எனக் கூறுகிறார்கள். இந்திய பட்ஜெட் 1 1/2 லட்சம் கோடி ரூபாய் என்றால் பணப் பெருக்கத்தை நாம் யூகிக்க முடியும். நாடு பயன்படுத்தும் பணத்தைப் பல மடங்காகப் பெருக்க முடியும் என்ற கருத்தை

உலகத்தில் முக்கியப் பொருளாதாரநிபுணர்கள் ஆழ்ந்து யோசனை செய்கிறார்கள்.

*******

  1. சோம்பேறி, சுறுசுறுப்பானவன், பூரணயோகி ஆகியவர்கள் பல நிலைகளில் உடல் திருவுரு மாற்றத்தைப் பெறும் தெய்வங்கள். சிருஷ்டியின் முடிவான நிலைக்குரியது ஒன்று. பரிணாமவளர்ச்சிக்குரிய உணர்வு அடுத்தது. பரிணாமத்தில் வளரும்தெய்வம், யோகி.

திருவுருமாறும் மனிதன் அந்தநிலைக்குரிய தெய்வமாகிறான்.

நாம் மாற்றத்தை அறிவோம். திருவுருமாற்றம் என்பது புதிய கருத்து. நோயிருந்தால் அது போக மருந்து சாப்பிடுகிறோம். வறுமையிருந்தால் அது அழியப் பாடுபடுகிறோம். இதுவே நாமறிந்தது. திருவுருமாற்றத்தால் நோய் அழிந்து ஆரோக்கியம் அதிகமாகும், வறுமை மறைந்து வளம் பெருகும். திருவுருமாற்றத்தில் இது தவிர்க்க முடியாதது. ஒரு முனையிருந்து எதிர் முனைக்கும் போகும் முறை திருவுருமாற்றம். சோம்பேறி திருவுருமாறினால் அதிகச் சுறுசுறுப்பாகிவிடுவான்; சாதாரணமனிதன் திருவுருமாறினால் அவனுடைய நிலையில் உள்ள தெய்வமாக மாறுவான்; உழைப்பாளி திருவுருமாறினால் ஊர்த்தேவதையாவான்; உணர்ச்சிமிக்கவன் திருவுருமாறினால் ஆவேசமானதெய்வமாக - காளி போன்ற தெய்வம் - மாறுவான்; மனத்தால் வாழ்பவன் திருவுருமாறினால் மனத்திற்குரிய தெய்வமாகிய சரஸ்வதி, லட்சுமி, இந்திரன்போல் மாறுவான்; திருவுருமாறினால் மனிதநிலையை மனிதன் கடந்துவிடுவான்.

*******

  1. வேதனையால் துரோகத்தின் மூலம் விஸ்வாசம் எழுகிறது (பத்ரகிரியின் மனைவி). இந்திரனை விரும்பிய அகல்யா கற்புக்கரசியாக, கல்லாக மாறினாள். ஆயிரமாண்டு அனுபவித்தபின் 5 கணவரைப் பெற்று திரௌபதி பத்தினியானாள். தாரை சந்திரனுக்குக் குழந்தை பெற்றாள்.

வேதனையால் துரோகத்தின் மூலம் விஸ்வாசம் எழுகிறது. ஒரு பாதையின் இரு முனைகள் எதிரானவை. ஒரு முனை ஒளியானால் அடுத்தது இருள். நாம் விஸ்வாசத்தைப் போற்றுகிறோம். துரோகத்தை வெறுக்கிறோம். விஸ்வாசத்தில் முடியும்பாதை துரோகத்தில் எழுகிறதுஎன நம்மால் நம்பமுடிவதில்லை. விதையிலிருந்து ஆரம்பித்து, முளை, செடிஎன வளர்ந்து மரமாக முடிகிறது என்பதுபோல் வாழ்வின் தன்மைகள் எதிரானவற்றிலிருந்து ஆரம்பிக்கின்றன என்பது தத்துவம்.

துரோகம், எதிர்ப்பு, தீவிர விஸ்வாசம், என்பதும் சூட்சும உண்மை. ரிஷிகளால் சபிக்கப்பட்ட துவாரபாலகர்கள் பூமியில் பிறவி எடுக்கவேண்டும் என்றானபின் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். சாபத்தை அழிக்க முடியாது, கடுமையைக் குறைக்கலாம் என்றார். பூமியில் வாழும் நாட்களைக் குறைக்க வேண்டுமானால் என்னை எதிர்ப்பது உதவும்என்று கூறினார். துவாரபாலகர்கள் ராட்சஸர்களாகவும், நாராயணனுக்கு எதிரிகளாகவும் பிறந்து, மீண்டும் விஷ்ணுவை அடைந்தனர்.

பிரியம் எழுந்தால் அதை வெளிப்படுத்தும்திறன் இல்லாவிட்டால், பிரியம் துரோகமாக வெளிப்படும்.

பத்ரகிரிஎன்ற அரசன் பிச்சைக்காரியின் அழகை மெச்சி அவளை இராணியாக்கினான். அவள் அரசனுக்குத் துரோகம்செய்து குதிரைக்காரனுடனிருப்பதைக் கண்ட அரசன் அவளை ரோட்டில் நிறுத்தி கல்லால் அடித்து சாகடித்தான். அவள் நாயாய் பிறந்து அவனைத் தொடர்ந்தாள். சட்டியால் நாயின் மண்டையிலடித்துக்

கொன்றான். காசி ராஜன் மகளாய்ப் பிறந்து பத்ரகிரியிடம் வந்து மோட்சம் பெற்றாள். பிச்சைக்காரி அரசன் மீதுள்ள பிரியத்தை முதல் துரோகமாகவும், பிறகு நாயின் நன்றியாகவும், முடிவாக சிஷ்யையின் பணிவாகவும் காட்டினாள்.

*******

  1. நோயாலும் வேதனையாலும் உடல் திருவுருமாற்றம் அடைகிறது.

*******

  1. தாங்க முடியாத, தணியாத பூரிப்பு (intolerable ecstacy) மனிதனுக்கு வேதனையாக எழுகிறது.

ஆனந்தம் உயர்ந்தது. மனித ஜீவியத்தால் அதைத் தாங்க முடியாது. ஆனந்தம் மனிதனுக்கு வந்தால், அவன் அதை வலியாக உணர்கிறான். முடிவானஆனந்தம் வந்தால் தாங்கமுடியாத வேதனையாகிறது. சர்க்கார் அதிகாரி ஒருவருக்கு நல்ல வாய்ப்பெழுந்தது. அவருடைய ஆலோசனைக்குப் பரிசாக ரூ.10 லட்சம் கொடுத்தார் ஒரு செல்வர். மாதம் 12,000 ரூபாய் சம்பாதிப்பவர் ரூ.10 லட்சம் பெற்றார். அந்தச் செக்கை பாங்கில் போடாமல் சில நாள் வைத்திருந்தார். ஒரு நாள் பாங்கில் போட முடிவு செய்தார். அன்று காலை எழுந்தவுடன் பயம் மேக மண்டலமாக அவரைச் சூழ்ந்தது. காரணம் தெரியவில்லை. பிரார்த்தனை செய்தார். பயம் விலகியது. பெருந்தொகை கைக்கு வந்தால் நாம் சந்தோஷம் வரும் என நினைப்போம். அனுபவம் பயமாக வருகிறது.

******

  1. கொள்ளை, சூறை, போர்மூலம் நாகரீகம் எழுகிறது.

நாகரீகம் வேகமாக முன்னேற்றம் பெறும் நேரம் எதிர்ப்பு இருந்தால் இயற்கை அவற்றை துவம்சம் செய்து முன்னே போகிறது. அதனால் இவை எழுகின்றன.

********

  1. மனம் தெளிவு பெறுமுன் பைத்தியம் போன்ற மனநிலை எழும்.

ஆற்றில் வெள்ளம் வந்து தெளியுமுன் தண்ணீர் கலங்கலாக, குழம்பாக வருவதுபோல் மனம் தெளிவு பெறுவதன்முன் கலங்கி நிற்கும்.

*****

  1. பைத்தியம், குழப்பம், துரோகம், வேதனை, கொடுமை ஆகியவை மனம், உணர்வு, உடல் திருவுருமாற்றமடைய தவிர்க்க முடியாத பாதைகள்.

மாறும் வழிகள் மனம் ஏற்கக் கூடியதில்லை.

மனிதன் திருவுருமாறும் வழிகள் கடுமையானவை. பைத்தியம், குழப்பம், துரோகம், வேதனை, கொடுமை ஆகியவை அம்மார்க்கங்கள். மாட்டுக்கு நோய் வந்தால் அதற்குச் சூடு போடுவதுபோல், முந்தைய நாளில் மனிதனுக்குச் சூடு போட்டு வியாதியைக் குணப்படுத்துவார்கள். கை, கால் ஒடிந்துவிட்டால், வாளால் அறுத்து எடுப்பார்கள். இவற்றை மனிதன் ஏற்க முடியுமா? இதுவேதான் திருவுருமாற்ற வழியா? அன்னையை ஏற்றுக்கொண்டால், மயக்க மருந்து வலியை ஏற்பதுபோல், அன்னைஜீவியம் நம் வலியை ஏற்கும். நமக்குத் திருவுருமாற்றம் கிடைக்கும்.

********

  1. தனக்குத் துரோகமிழைக்கும் சக்திகளை அழைத்து, வேதனை தரும் வாழ்வை ஏற்படுத்தி, அதையே எதிர்கால உலகின் கருவாக அன்னை நியமித்தார்.

யோகத்தை ஆதாயத்திற்காக ஏற்றால், யோகம் துரோகத்தால் நிறைவேறும்.

பள்ளிக்கூடத்தில் பாடம் படிக்க ஆர்வமிருக்கும். பாடம் புரியாவிட்டால் கசப்பாக இருக்கும். பாடம் புரிந்தாலும், கசப்பாக இருந்தாலும் படிப்பு பலன் தரும். யோகத்தை பக்திக்காக இலட்சியமாக ஏற்றால், பலன் அமிர்தமாகும். ஆதாயத்திற்காக ஏற்றால் யோகப் பலன் வரும். வரும்வழிகள் நாம் யோகத்தை ஏற்றதுபோல் அமையும்.

*******

  1. ஆஸ்ரமத்தை வேறு காரணத்திற்காக ஏற்படுத்தினேன் என்று பகவான் கூறும் வேறு காரணம் இதுவே.

பகவான் கூறும் வேறு காரணம்.

ஏன் இலட்சியப்புருஷர்களைச் சேர்த்து ஆசிரமம் ஏற்படுத்தவில்லைஎன்ற கேள்விக்கு பகவான் கூறிய பதில் இது. ஒரு வீட்டில் படித்த பிள்ளைகள் வேலை கிடைத்தால் வேலைக்குப் போவார்கள். படிக்காதவர்கள் கடைவியாபாரம் செய்வார்கள். கடைசிக் காலத்தில் பார்த்தால் வேலைக்குப் போனவர்களைவிட வியாபாரம் செய்தவர்கள் செல்வர்களாக இருப்பார்கள். படித்த பிள்ளைகட்கு சர்க்கார் வேலைகிடைத்தபின் வியாபாரம் செய் என்றால் செய்யப் போவதில்லை. அவர்களைக் கூப்பிட்டுப் பயனில்லை. பின்னால் பெரும் பலன் பெறத் தகுதியானவர்கள் இப்பொழுது தகுதியற்றவர்களாக இருப்பதுண்டு. அவர்களுடைய எதிர்காலம் இருவகைகளாகவும் அமையும்.

  • பெருஞ்செல்வர்களாக வாழ்க்கையை முடிப்பவர்கள்.
  • சம்பளமாக மற்றவர் சம்பாதித்ததும் சம்பாதிக்க முடியாமல் வியாபாரம் நஷ்டமாகி நடுத்தெருவில் நிற்பவர்கள்.

*********

  1. பெருங்குழப்பம், செய்வதறியாது திகைத்த மனநிலை, நம்பிக்கைத்துரோகம், தாள முடியாத மனவேதனை, நோய், மிருகத்தனமான கொடுமை ஆகியவை தவிர்க்க முடியாத திருவுருமாற்றத்தின் தேவைகளாகும்.

தாள முடியாத வேதனை தவிர்க்க முடியாத நிபந்தனை.

அன்னையை ஏற்று பக்தர்களாகவே இருப்பவர்கட்குத் தோல்வியே இல்லை. நிலையானசந்தோஷம் உண்டு. பக்தர் நிலையைக் கடந்து சாதகர்நிலையை ஏற்றால், வெற்றியேயில்லை என்ற நிலை உருவாகும். வேதனை வரும். இது பக்தருடைய தோல்வியில்லை, வேதனையில்லை, உலகத்துத்தோல்வியை உலகத்தின் சார்பாக ஏற்கும் பக்தர், சாதகராகிறார். அவர் பெறும் தொடர்ந்த தோல்வியால் உலகில் தோல்வியே அழியும். அதை ஏற்பவருக்கு அதற்குரிய வேதனையுண்டு.

********

  1. The Life Divineப் படிக்கும்பொழுது "விசாரத்தைப்" பல்வேறு கோணங்களில் மேற்கொள்ளலாம்.

(உ.ம்.) "ஆதி மனிதனின் ஆர்வமே இன்றும் நம் அபிலாஷையாக இருக்கிறது".

விசாரத்திற்குரிய நூல் The Life Divine.

நூன் 56 அத்தியாயங்களும் ஒரு தத்துவத்தை விளக்குகின்றன. உதாரணமாக முதல் அத்தியாயம் முரண்பாடே உடன்பாடு' என்பதைத் தெரிவிக்கிறது. இதுபோக அடிப்படையான பெரிய கருத்துகள் சுமார் 50 முதல் 100 வரை நூல் நமக்குத் தருகிறது. நமது அடிப்படை குடும்பவாழ்வு. சமூகம் அதன் அஸ்திவாரம். சமூகத்தின் பின்னணியில் உள்ளது வாழ்வு. இவ்வாழ்வு பிரபஞ்சத்தைவிடப் பெரியது என்கிறார். பிரபஞ்சமே அழிந்தாலும், வாழ்வு நிலைக்கும் என்கிறார். இவ்வாழ்வுக்குரிய உண்மைகள் அவை. உதாரணமாகப் பிரபஞ்சத்தில் அறிவால் காணக்கூடிய உண்மையொன்று உண்டானால், அதை அறியும் திறன் மனிதனில் இருக்கும் என்கிறார். சிந்தனை, ஆராய்ச்சி, விசாரம் தேவைப்பட்டால் அவர்கட்குச் சிறந்த அரங்கம் The Life Divine.

*******

  1. பல தத்துவங்களாலான ஸ்தாபனம், ஒரு தத்துவத்தால் செயல்பட்டால், மற்றவை, பின் பரிணாமவளர்ச்சியாக எழக்கூடும்.

பல திறமைசாகலிளிருந்தாலும், தலைவர் ஒருவரே.

சிருஷ்டிக்குரிய தத்துவங்கள் 7, 8 மறைந்திருக்கும். ஒன்றே வெளிப்படும் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். பரிணாமம் ஒரு சமயத்தில் ஒரு தத்துவத்தை மட்டும் வெளிப்படுத்துவதால், மறைந்துள்ள மற்ற தத்துவங்கள் பிறகு வெளிவரும் என்கிறார். எல்லாத் தத்துவங்களும் முக்கியமானவை என்றாலும் ஒரு சமயத்தில் ஒரு தத்துவம்தான் வெளிப்பட முடியும்.

*******

  1. எண்ணத்திருந்து ஜீவியத்திற்குப் போனால், அவிழாத சிக்கல்கள் அவிழும்.

எண்ணத்தின்சிக்கல்களை ஜீவியம் அவிழ்க்கும்.

ஜீவியம் எண்ணத்திற்கு அடிப்படை. மேலெழுந்துள்ள எண்ணத்தில் சிக்கல்கள் ஏற்பட்டால், அடிப்படையான ஜீவியத்தை எட்டினால் சிக்கல்கள் தாமே அவிழும். நூறு பிரச்சினைகள் உள்ள வறுமையான வீட்டில் வருமானம் உபரியானால் பிரச்சினைகள் மறைவது போன்றது இக்கருத்து.

********

  1. அரைகுறையாக விட்டவற்றை மீண்டும் அதிதீவிரத்தோடு பின்பற்ற முன்வருவது மனதின் சுபாவம்.

விட்டகுறை வீரியத்துடன் தொடரும்.

மனம் எதையும் அரைகுறையாக விடாது. எடுத்ததை முடிக்கும்வரை ஓயாது. நாம் பாதியில் விட்டுவிட முயன்றால், மனம் மீண்டும் அதை நாடும். நாடும்பொழுது அதிக தீவிரத்துடன் நாடும்.

*******

  1. உள்மனத்தின் ஆழத்தைத் தொடுவதே பகவான் தேடிய சூட்சுமஇரகஸ்யம்.

அப்பூர் ஜெயிலில் பகவான்முன் தோன்றிய விவேகானந்தர் பகவான் கையில் கீதையைக் கொடுத்து, அவர் நாடுவதைச் சுட்டிக்காட்டி, "இதில்லை, அது'' என சத்தியஜீவியத்தைக் காண்பித்தார். பகவானுக்குப் புரியவில்லை. புரிய 15 நாள் ஆயிற்று. புரியும்வரை விவேகானந்தர் தினமும் பகவான்முன் தோன்றினார். எதை நாடவேண்டும்என விவேகானந்தர் காட்டிவிட்டார். எப்படி நாடுவது? நிஷ்டை, தியானம் என்றால் மனம் மேலேபோகும். மேலே போனால் மோட்சம் வரும். அதில்லை என்றபின் என்ன செய்வது

என பகவானுக்குத் தெரியவில்லை. 10 வருஷ யோகமுயற்சி, சோதனைகளால் மேலேபோவதற்குப் பதிலாக, உள்ளேசென்று மனத்தின் ஆழத்திலுள்ள சைத்தியப்புருஷனைக் காணவேண்டும் என்று கண்டார். இதுவே நான் கண்ட இரகஸ்யம்' என்றார்.

*******

  1. புலன்களிருந்து விடுபட்ட அறிவு ஞானமாகிறது.

வேதாந்தம் கண்ட உண்மையிது. விஞ்ஞானம் இன்றுவரை இதைக் காணவில்லை. ஐன்ஸ்டீன் இந்த உண்மையை அறியாதவன் விஞ்ஞானியில்லை என்றார்.

*********

  1. ஜடத்தையும், சச்சிதானந்தத்தையும் இணைப்பது மனிதன் கடமை.

ஜடத்தை விலக்கி, சச்சிதானந்தத்தைக் காண்பது மரபுவழி. இரண்டையும் இணைப்பது பூரணயோகம்.

*******

  1. சிருஷ்டிக்கு முன்னுள்ள ஆனந்தத்தை சிருஷ்டியின் ஜடப்பொருளில் வெளியிட சச்சிதானந்தம் முயல்கிறது.

ஆனந்தம் என்பது விஞ்ஞானக் கண்டுபிடிப்பு (scientific discovery ) போன்றது. ரேடியோ அலைகளைக் கண்டுபிடிப்பது பெரிது. அது ரேடியோவாக வரும்வரை நமக்குப் பயன்படாது. ரேடியோ அலைகளை ரேடியோவாகச் செய்து மார்க்கட்டுக்கு அனுப்புவதுபோல் ஆனந்தத்தை ஜடப்பொருளில் வெளியிடுவது.

*******

  1. முழுமையிலிருந்து முழுமையை எடுத்தால் முழுமை மிஞ்சும் என்பது ஜடத்திற்கும் பொருந்தும்.

கொள்ளத்தான் குறையாதுஎனக் கல்வியைக் கூறியவர்கள் கல்வியைப் பெற்றவர் பிறருக்குக் கொடுத்தால் கல்வி வளரும், அறிவும் வளரும் என்றனர். நாம் இதைப் பணத்திற்கும் சொல்லலாம். பணம் கொடுக்கக் கொடுக்கக் குறையாது, வளரும் என்பதே அன்னையின் உண்மை. மேலும் சொல்லப்போனால் ஒரு டம்ளர் பாலை ஊற்றிக் கொடுத்தபின், டம்ளரில் பால் குறையாது என்பது ஆன்மீகஉண்மை, அக்ஷயப் பாத்திரம் கூறுவது. அன்னையை நாம் மனதால் ஏற்றுக்கொண்டோம்.

  • உணர்வால் அன்னையை ஏற்றால், பணம் கொடுத்தால் வளரும்.
  • உடலால் அன்னையை ஏற்றால் டம்ளரில் பால் எடுக்க எடுக்கக் குறையாது.

இவை பெரிய ஆன்மீகச்சித்திகள். ஏதோ ஒரு சமயம் நாம் இதன் சாயலைக் காண்கிறோம். நிலையாக நடக்க பக்தியும் நம்பிக்கையும் முழுமையாக வேண்டும்.

******

  1. அறியாமை அறிவைவிடப் பெரியது.

சிருஷ்டியில் அறிவு ஆரம்பம். பல கட்டங்களைத் தாண்டி வந்து அறியாமையில் சிருஷ்டி முடிகிறது. முடிவானபடிப்பு பெரியபடிப்பு என்பதுபோல், முடிவானபொருள் பெரியபொருள்.

*******

  1. காலத்தைக் கடந்த அனந்தன் கருதுவதை எல்லாம் காலம் - முடிவற்றகாலம் - சிருஷ்டிக்கிறது.

 

காலம் சிறியது, முடிவடையக் கூடியது. காலத்தைக் கடந்த நிலை பெரியது, முடிவில்லாதது. மரணம் காலத்திற்குரியது. அமரத்துவம் காலத்தைக் கடந்த நிலைக்குரியது. காலம் அமரத்துவத்தைத் தரமுடியாது. என்றாலும் மரணத்தின்மூலம் மீண்டும் மீண்டும் பிறப்பு ஏற்படுவதால் வாழ்வு முடிவற்றதாகிறது. முடிவுள்ள வாழ்வை முடிவற்றதாக காலம் மரணம், பிறப்பு மூலம் சாதிக்கிறது.

*******

  1. ஜடத்திலிருந்து ஜீவியம் எழுகிறது.

இவ்வுண்மையை வேதாந்தமும், விஞ்ஞானமும் ஏற்கிறது.

******

  1. சத்தியம் அசத்தில் உள்ளது.

அசத், சத்திற்கு நேர் எதிரானது. சத், அசத்திலிருந்து உற்பத்தியாகிறது எனவும் உபநிஷதம் கூறுகிறது. பிரம்மத்தின் இரு பகுதிகள் சத், அசத் என்பன. அசத்தை சத்திற்கு எதிரானதுஎனக் கொள்கிறோம். பிரம்மத்திலிருந்து சத் வெளிவந்தபின் மீதி அசத் எனவும் கொள்ளலாம். இப்படிப் பார்த்தால் அசத், சத்தைவிடப் பெரியது எனக் கொள்ளலாம் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

********

  1. ஜீவாத்மா பிரபஞ்சஆத்மாவின் பகுதி. அது பரமாத்மாவின் பகுதி.

பிரபஞ்சம் தன்னை நேரடியாகப் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதால் ஏராளமான ஜீவாத்மாக்களை உற்பத்தி செய்ததால், இது அதன்பகுதி. அனைத்தும் பரமாத்மாவின் பகுதிகளேயாகும்.

*******

  1. சச்சிதானந்தத்தின் பிரகிருதி சத்தியஜீவியம்.

ஒன்றிலிருந்து மற்றது வெளிப்பட்டால், வெளிப்படுவது அதன் பிரகிருதி.

********

  1. பரம்பொருளும் சிருஷ்டியும் ஒன்றில் மற்றதாக உறைகின்றன.

*****

  1. ஜீவியம் வளர்வதானால் உள் மனத்திலேயே வளரவேண்டும்.

*******

  1. ஆத்மா, ஜடத்தை ஆட்சி செய்கிறது.

*******

  1. மேற்சொன்ன கண்ணோட்டத்தில் சொந்த வாழ்வைப் பரிசீலனை செய்தல் நன்று.

சொஸ்தலிகிதம்.

ஒரு பத்திரம் எழுதினால் நாம் அதில் கையெழுத்திடுகிறோம். அத்துடன் யார் எழுதினாரோ அவரும் கையெழுத்திட்டு தாம் எழுதியதை உறுதிப்படுத்துவார். ஒருவர் தம் பத்திரத்தைத் தாமே எழுதுவதை சொஸ்தலிகிதம் என்பார்கள். மேற்சொன்ன கண்ணோட்டத்தில் ஒருவர் தம் வாழ்வைப் பரிசீலனை செய்யவேண்டும்.

*******

முற்றும்.



book | by Dr. Radut