Skip to Content

பகுதி 7

  1. அறிவுடை விளக்கத்தை வகுக்க பகுத்தறிவு பயன்படும். அறிவு ஒரு பிரகாசம். அதன் ஒளி தெளிவைக் கொடுக்கக் கூடியது. தெளிவை மட்டுமே கொடுக்கக் கூடியது. அடுத்தவரை ஏற்றுக் கொள்ள வைக்கும் சக்தி அதற்கில்லை. அதிகபட்சம், அதன் உண்மையை மற்றவர்க்குத் தெளிவுபடுத்த முடியும். அடுத்தவர் மனம் ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவர் தமக்குப் புரியவில்லை என்பார்.

அறிவு தெளிவு தரும். உணர்வு ஏற்காததை மனம் புரியவில்லை என்று கூறும்.

அறிவுக்குப் பெருமையுண்டு, உயர்வுண்டு, தெளிவுண்டு, ஆனால் திறன் கிடையாது, ஒரு காரியத்தைச் சாதிக்கும் திறன் அறிவுக்கில்லை. அறிவால் செயல் பூர்த்தியாகாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அறிவால், அறிவுடை காரியங்களையும் பூர்த்தி செய்ய முடியாது என்பதை ஏற்றுக் கொள்வது சிரமம்.

உதாரணமாக ஒரு விஷயத்தை அடுத்தவர் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் நாம் தெளிவாக அவருக்குப் புரியும் வகையில் எடுத்துரைத்தால், அவர் ஏற்றுக்கொள்வார்என நாம் நினைக்கின்றோம். அது உண்மையன்று. இந்த உதாரணத்தில் அறிவுக்குள்ள (limitation) வரையறையை நாம் காணலாம். கேட்பவர் உணர்ச்சி வசப்பட்டவரானால், அறிவின் விளக்கம் அவருக்குப் பயன்படாது. அவருடைய அறிவு தெளிவாக நாம் சொல்வதைப் புரிந்து கொண்டாலும், அவர் உணர்வு ஏற்றுக் கொள்ளவில்லைஎனில் அறிவு அவரை ஏற்கவிடாது. தனக்கு விளங்கவில்லை என்பார். தம் உணர்ச்சிக்குப் பிடிக்காததை, அறிவுக்குப் புரியவில்லை என்பார். உணர்வை ஏற்க வைக்கும் திறன் அறிவுக்குக் கிடையாது.

பையன் B.A. முடித்து B.T. படித்துக் கொண்டிருக்கிறான்என்று குடும்பத்திற்கு வேண்டிய தலைமை ஆசிரியர் பையன் வீட்டுக்கு வந்து, அவன் தகப்பனாரைப் பார்த்தார். தலைமை ஆசிரியர் மதகுரு. பையனுடைய தகப்பனாருக்கு மதகுரு ஸ்தானம் இல்லாவிட்டாலும், அவர்கள் மதத்தில் நல்ல மரியாதை. மதகுருவான தலைமை ஆசிரியர் தகப்பனார்முன் உட்காரமாட்டார், தயங்குவார், வற்புறுத்தினால் உட்காருவார். அவர் பள்ளியில் அவர் மதத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் ஒருவரே இருந்தார். சுமார் 20 பட்டதாரி ஆசிரியர்களில், அவர்களைச் சேர்ந்தவர் ஒருவரேயாவர். பையன் படித்த பாடத்திற்கு அன்றைய நிலையில் வேலை எளிதில் கிடைக்காது. தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். தன் மதத்தைச் சார்ந்தவன் என்பதாலும், குடும்ப நண்பர் என்பதாலும், பையனுடைய தகப்பனார் மீது மரியாதையுள்ளவர் என்பதாலும், தலைமை ஆசிரியர் பையன் பட்டம் முடிக்கும் முன் வீடு தேடி வந்து பையனைத் தம் பள்ளிக்கு வேலைக்கு வரும்படிக் கேட்டார். பையன் வேலையில் சேர்ந்தான். சிறந்த ஆசிரியரெனப் பெயரெடுத்தான். ஹாஸ்டல் வார்டனாக இருந்தான். இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்தபின் பையனுக்குத் திகில்

எடுத்துவிட்டது. தன் உத்தியோகம் நிலைக்காது என்ற பயம் அவனைப் பிடித்துக் கொண்டது. அதை அவன் வெளியிட்டால் பிறர் நம்ப முடிவதில்லை. வந்த சந்தர்ப்பங்களும், இன்றுள்ள நிலையும் பையனுக்குப் பூரணச் சாதகமாக இருந்தும், அறிவின் விளக்கத்தை அவன் உணர்வு ஏற்கவில்லை. அவனுடைய அறிவு மற்றவர்கள் சொல்வதைப் புரியவில்லை என்று சொல்கிறது.

பணத்தை வட்டிக்காக ஒரு கம்பெனியில் போட விரும்புபவரை பாங்க் ஏஜெண்ட் சந்தித்து, கம்பனி, பாங்கியைவிட அதிக வட்டித் தருவது உண்மை. ஆனால் நீங்கள் மாதாமாதம் வட்டியை எதிர்பார்க்காததால், இந்தக் குறிப்பிட்ட திட்டத்தில் முதலீடு செய்தால் கம்பனி கொடுக்கும் வட்டிக்குச் சமமான வட்டி 3 ஆண்டு முடிவில் வருகிறது என்றும், அதற்குரிய சர்ட்டிபிகேட்டை இன்றே முடிவான தொகையைக் குறிப்பிட்டுக் கொடுக்கிறேன் என்றும் சொன்ன பிறகு, தான் பணம் போடும் கம்பனி பெரிய கம்பனி என்று பிரியப்பட்டுவிட்டவர் நீங்கள் சொல்வது புரியவில்லை என்றார். ஏஜெண்ட் புரியும்படிச் சொல்லலாம், ஏற்கும்படிச் சொல்லமுடியாது. அறிவுக்குப் பிறரை ஏற்க வைக்கும் திறன் இல்லை.

*******

  1. அகங்காரம் ஆழ்ந்த மனித மையம். இறைவனை நோக்கி மனிதன் வரும்பொழுது மையம் வலுப்பெற்று சிக்கல் பலமாகிறது. சூழ்நிலை அதனால் பாதிக்கப்படாமல் இருக்காது. பாதிக்கப்படுவது சட்டம். அதன் மூலம் பயன்பெற ஒரே வழி முடிச்சை அவிழ்ப்பதாகும்.

நெருங்கினால் முடிச்சு வலுப்படும். முடிச்சை அவிழ்ப்பதைத் தவிர வழியில்லை.

சாங்கியம் சிருஷ்டியை விளக்க முற்பட்டபொழுது இரண்டு தத்துவங்கள் உள்ளன என்றனர். ஒன்று மகத், இரண்டாவது

அகங்காரம். மகத் என்பது சிருஷ்டிக்கும் சக்தி; பகவான் அதை ஜீவியத்திலிருந்து எழும் force சக்தி என்கிறார்.

மாயா என்பது சிருஷ்டிக்கு அடிப்படையான சக்தி என்பதை இந்து பரம்பரையினர் ஏற்றுக் கொண்டனர். எந்தக் கட்டத்தில் மாயை செயல்படுகிறது என்பதில் வேறு வேறு அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஸ்ரீ அரவிந்தர் மாயையை விளக்குகிறார். அனந்தமான சக்தி சிருஷ்டித்தால் அனந்தமான பொருள்களை சிருஷ்டிக்கும். அதனால் குழப்பம் விளையும். எனவே சிருஷ்டி ஒரு வரையறைக்குள் அறுதியிடப்பட வேண்டும். அப்படி வரையறையை ஏற்படுத்துவது மாயா என்கிறார். ONE ஒன்று Many பலவானது சிருஷ்டி. ஒன்றைப் பலவாகச் செய்தால் சிருஷ்டி ஏற்படும். இது சிருஷ்டியில் முக்கியமான கட்டம். ஒன்றான இறைவன் பலவான ஆன்மாக்களாக மாறினான். பலவாக மாறிய பின்னும் ஒன்றோடு ஒன்று கலந்திருப்பதால் செயலைத் திட்டவட்டமாகச் செய்து தெளிவான பலன்பெற முடியவில்லை என்பதால், ஒன்றிலிருந்தும், பலவான மற்ற ஆன்மாக்களிலிருந்தும் பிரிந்து நின்றால், ஓர் ஆன்மா தனித்து, வரையறைக்குள் செயல்பட்டு பலனைப் பார்க்கலாம்என அகங்காரம் ஏற்பட்டது. அகங்காரம் ஒரு மனிதனின் ஆன்மாவை, பிற ஆன்மாக்களில் இருந்தும், இறைவனிடமிருந்தும் பிரித்து, தனித்துச் செயல்பட உதவுகிறது. இதையே ஆன்மா ஆணவ மலத்தால் கவ்வப்பட்டுள்ளது என்கிறோம்.

அகங்காரம் என்பதை coordinating intelligence செயல்களை மையப்படுத்தும் ஞானமென்கிறார். ஒரு ஸ்தாபனத்தில் 50 அல்லது 100 காரியம் நடந்தால் அதற்குரிய பலன்கள் வந்தால் அத்தனையும் ஸ்தாபனத்தைச் சார்ந்தது. தனித்து ஒருவர் செய்ததென்ன, அதன் பலன் என்ன என்று நிர்ணயிக்க முடியாது. நிர்ணயிக்க நாம் அவரவர்கட்குத் தனிப் பொறுப்பை அளிக்கிறோம். அதன்பலன் அவரைச் சார்ந்தது. அதற்கு எந்தச் செயலை எவரோடு சேர்ப்பது (coordinate) என்று ஒருவர் - அதிகாரி நிர்ணயம் செய்ய வேண்டும். அகங்காரம், அந்த அதிகாரிபோல் செயல்படுகிறது.

அகங்காரம், மனிதனின் ஆழத்தில் அமைந்துள்ளது. இறைவனை நோக்கி ஆன்மா நகர்ந்தால், ஆணவம் தன் பிடியிலிருந்து அதை விடாது. இறைவனை ஆன்மா நெருங்கினால், ஆணவத்தின் பிடியை வலுப்படுத்தும். வலுப்படுத்தினால் அகங்காரத்தின் சிக்கல் வலுப்படும்.

நாமும் நம் சூழ்நிலையும் மிகவும் நெருங்கியிருக்கிறோம். கண்ணாடி முன்னால் நின்று அசைந்தால், ஒவ்வொரு அசைவும் கண்ணாடியில் தெரியும். கண்ணாடியில் தெரியாமலிருக்க முடியாது. சூழ்நிலை என்பது என்ன? நாம் என்பது சூழ்நிலையின் மையம். சூழ்நிலை என்பது நம்முடைய விளக்கம். சூழ்நிலையும் நாமும் ஒரே முழுமையின் இரு பகுதிகள். ஒன்று மற்றை நம்பியுள்ளது. அதனால் ஒன்றில் ஏற்படும் மாற்றங்கள், மற்றதில் தெரியும், தவறாமலும் தெரியும். சூழ்நிலைக்கும் நமக்கும் உள்ள தொடர்புக்கு ஓர் அளவு, நிதானம் (balance) உண்டு. அகங்காரம் வலுப்பட்டால் தொடர்பின் அளவு மாறும். மாறினால் சூழ்நிலை பாதிக்கப்படும். பாதிக்கப்பட்ட சூழ்நிலை நம்மைப் பழைய நிலைக்கு வரும்வரை பாதிக்க முடியும். தொட்டியில் ஒரு செம்பால் தண்ணீர் முகந்தால், அந்த இடத்தின் நீர் குறைந்து, சுற்றியுள்ள நீர் உடனே குறைவை நிறைவுபடுத்த விரைந்து வருகின்றது. நீர் மட்டம் மீண்டும் மட்டமாகும்வரை நீர் அசைகிறது. இது தவிர்க்க முடியாத சட்டம். (water finds its level is a law of physic). அதேபோல் சூழ்நிலைக்கும் நமக்கும் (நம் அகங்காரத்திற்கும்) உள்ள அளவு நிதானம் ( balance) குறைவின்றிருக்க வேண்டும் என்பது சட்டம். அகங்காரம் வலுவானால் சூழ்நிலையில் நிதானம் பாதிக்கப்படுகிறது. எனவே சூழ்நிலை நம்மைப் பாதிக்கிறது. மீண்டும் பழைய அளவை எட்டும் வரை பாதிப்பிருக்கும்.

*******

  1. தாழ்ந்த மனிதரிடையே உயர்ந்த (மனநிலை) முறை பலன் தருவதில்லை. நம்மவரை உயர்ந்தவராகக் கொள்வதாலேயே, நம் பிரச்சினைகள் உருவாகின்றன.

தாழ்ந்ததை உயர்ந்ததாக்குவதே பிரச்சினை.

திருட்டுப் பழக்கம் உள்ள வீட்டில் நாம் போய் தங்கினால், பெட்டியைப் பூட்டாவிட்டால், அத்தனையும் திருடு போகும். அதனால் அவர்கள் நம்மை உயர்ந்தவராகக் கருதுவதில்லை. ஏமாந்தவராகக் கருதுவர். ஒரு ஸ்தாபனத்தில் பிரமோஷன் முறைப்படி கொடுப்பதில்லை, சாமர்த்தியசாலி தந்திர யுக்திகளால் பெறுகிறான் எனில், கேட்டுப் பழக்கமில்லாதவனுக்கு அங்குப் பிரமோஷன் வாராது. ஓய்வு பெறும்வரையும் வாராது. இங்கெல்லாம் இந்த இடத்திற்குத் தக்கபடி நடக்காவிட்டால், வாழ்வில் முன்னேற முடியாது. இருப்பதையும் காப்பாற்ற முடியாது. ஒரு ஸ்தாபனத்தில் பிரமோஷன் வந்த நேரம் தலைவர் பிரமோஷனுக்குரியவரைக் கூப்பிட்டு, அவருக்குப்பின் வந்தவருக்குக் கொடுக்கட்டுமா எனக் கேட்டார். இது முறையன்று. கேட்டால், இல்லைஎன்று சொல்லிப் பழக்கம் இல்லாதவர் என்பதால் அவர் ஒத்துக் கொண்டார். அடுத்த இரு ஆண்டுக்குப்பின் பிரமோஷன் வந்தது. இந்த முறை ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர் (அவர்கள் மதத்தைச் சேர்ந்தவர்) இவருக்குப் பின்னாலிருந்தார். இவரைவிட அவர்கள் மதத்தைச் சேர்ந்தவர் 4 வருஷம் சர்வீஸ் குறைந்தவர். இந்த முறையும் பிரமோஷன் இவருக்குக் கொடுக்கவில்லை. ஸ்தாபனம், அதன் நிர்வாகம், அந்த ஊர், அங்கு வேலை செய்பவர்கள், அங்குள்ள சூழ்நிலை பண்பற்ற முறையில் உள்ளது. அங்கு, பண்போடு நடப்பவரை உலகம் கண்டு கொள்ளாது. இவர் ஒதுக்கப்படுவார்.

வீடு, நட்பு ஆகிய இடங்களில் நாம் கண்ணால் காண்பதைக் கவனிக்காமல், அறிவு புலப்படுத்துவதை ஒதுக்கி, உறவையும், நட்பையும் பாராட்டுவதுண்டு. அது பலன் தாராது. நம் மனநிலைக்குரிய பலன் வாராது. நம் செயலுக்குரிய பலன் வரும். நாம் தவறு செய்கிறோம்என அறிவதும் இல்லை. இதைச் சிலர்

உயர்ந்த பண்பாகவும் கருதுவதுண்டு. இதனால் ஏற்படும் பிரச்சினைகள், இந்தத் தவற்றை நீக்காதவரை தீராது.

உதாரணமாக, கல்லூரிக்குப் போனபின், பள்ளி ஆசிரியர் மீதுள்ள மரியாதை, பாசம் காரணமாக மாணவர்கள் அவர்களிடம் பாடம் படிப்பதுண்டு. அது பலன் தருவதில்லை. எத்தனை தரம் பெயிலானாலும், எத்தனை பேர் சொன்னாலும், ஆசிரியரை மாற்ற மாணவன் முன் வருவதில்லை. நெல் பயிரிடும் நிலத்தில் தென்னை பயிரிட்டால் 10 மடங்கு அதிக இலாபம் வரும் எனத் தெரிந்தாலும் விவசாயி பயிரை மாற்ற முன்வர மாட்டான். MLA ஆக நிற்க நம் வீட்டிற்குச் சந்தர்ப்பம் வந்தால், தம்பி ஜெயிப்பான், அண்ணன் நின்றால் தோற்பான்எனில், நிற்காமலிருந்தாலும் இருப்பார்களே தவிர, தம்பியை நிறுத்தமாட்டார்கள். புதிய கம்பனி ஆரம்பிக்க செல்வர் முதல் கொடுக்கிறார். பார்ட்னராகிறார்என மாமனிடமும், நண்பனிடமும் சொன்னால், அவர்களில் ஒருவர் செல்வரிடம் சென்று தடை செய்தபின், அடுத்த சந்தர்ப்பம் வரும்பொழுதும் அவர்களிடம் சொல்வார்கள். மீண்டும் தடை செய்வார்கள். பலமுறை நடந்த பின்னும், மாமனும், நண்பனும் பொறாமையால் நாம் முன்னுக்கு வருவதைத் தடுக்கிறார்கள்என ஏற்க மனம் வருவதில்லை. அவர்கள் செய்த விஷமத்தை அறிந்தாலும் சிலர் நம்புவார்கள், சிலர் நம்ப மாட்டார்கள். வாயால் இனிமையாகப் பேசி, மனதால் பொறாமைப்பட்டால், நாம் செய்யும் காரியம் கெடும். அந்நிலையில், என் மாமன் நல்லவன், என் நண்பன் பொறாமைப்பட மாட்டான் என நாம் வைத்துக் கொள்கிறோம். இதனால் வரும் பிரச்சினைகள், பிரார்த்தனையால் தீராது. தீரவேண்டுமானால், நாம் மனதையும், செயலையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இதன் உண்மை புரிய வேண்டுமானால் நம் மனத்தைச் சோதனை செய்தால் தெரியும். ஒரு செய்தி வரும்பொழுது, நாம் என்ன நினைக்கிறோம்எனக் கவனித்து, அது எப்படி முடிகிறது என்று கவனித்தால், உணர்வுக்கும், செயலுக்கும் உள்ள தொடர்பு தெரியும்.

என்னிடம் ஒரு நண்பனுக்கு, சாகித்திய அகாடமி பரிசு முடிவாகிவிட்டது என்ற செய்தி வந்தது. மற்றொருவருக்குப் பெரிய ஆர்டர் கிடைத்தது பற்றிச் சொன்னார். வேறொருவர் என் நல்லெண்ணத்தை நம்பி ஆபத்தில் உதவ அழைத்தார், பரிசு ரத்தாயிற்று. ஆர்டர் கிடைக்கவில்லை. ஆபத்து பேராபத்தாயிற்று என்று ஒருவர் கண்டால், அவர் தம் மனம் பொறாமையானதுஎன ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுபோன்ற சோதனையை நாம் நம் வாழ்வில் மட்டும் செய்வது முறை.

*******

  1. தன் திறமையால் ஒருவன் பெறுவது பொறுக்கவில்லை என்பது பொறாமை. ஒருவருடைய அதிகபட்சத் திறமையால் அவர் பெற முடியாததை அவருக்களிக்க முன்வருவது உதாரகுணம். பொறாமை திருவுருமாற்றமடைந்து உதாரகுணமாகிறது.
  • முடியாதவனுக்கு முடியாததை அளிப்பது நல்லெண்ணம்.
  • பொறாமை திருவுருமாறிப் பெருந்தன்மையாகிறது.

ஒருவன் எதைப் பெற வேண்டுமானாலும், தானே முயன்று பெறுகிறான். ஆதரவான சூழ்நிலையில் ஒருவன் பெற முயலும் பொழுது, உடனிருப்பவர் அனைவரும் உதவிக்கு வருவார்கள். அது நல்லவர் உள்ள சூழ்நிலை. அதுபோன்ற உதவியைச் செய்ய மனம் வாராத இடங்களுண்டு. அங்கு ஒருவர் தாமே, பிறர் உதவியின்றி, தம் முயற்சியால் பெறுகிறார். பிறர் உதவ வாராததால் ஒருவர் பெற்றதை மற்றவர் கவனிக்க மாட்டார்கள். அதில் அக்கறை காட்டமாட்டார்கள். உதவ வாராதவர்கள், அவன் முயற்சியைக் கவனித்துக் கொண்டிருப்பதும் உண்டு. அவன் எவர் உதவியுமின்றி தானே முயன்று வெற்றி பெற்றதைப் பொறுக்க முடியாமல் பதைப்பவர் உண்டு. அவர்கள் பொறாமைக்காரர்கள். இதற்கடுத்த தாழ்ந்த

நிலைகள் உண்டு. அவர் பொறாமைப்படுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், தொந்தரவு செய்ய முன்வருவார். வாழ்வின் பல நிலைகளில் இவை சில.

Generosity உதாரகுணம் என்பதும் பல வகையின. அத்துடன் பெருந்தன்மை கலப்பதும் உண்டு. உதவிகளைப் பல்வேறு நிலைகளில், பல்வேறு வழிகளில், பொருளாலும், அந்தஸ்த்தாலும், ஆதரவாலும், அறிவாலும் செய்ய முடியும். தாழ்ந்த பொறாமை திருவுருமாற்றமடைந்தால் உயர்ந்த பெருந்தன்மையான உதார குணமாக மாறும். ஒருவர் தம் அதிகபட்ச முயற்சியால் பெற முடியாததை, அவருக்கு அளிக்க முன்வருவது அக்குணம். அன்னையின் அருள் விஷயத்திலும் சில சமயங்களில் அதுபோல் செயல்படும். பொதுவாக இதற்குத் தடையாக இருப்பது பக்தருடைய குறுகிய மனப்பான்மையேயாகும்.

  • சர்க்காரில் NGO பதவியை அவசரமாக ராஜினாமா செய்து பெரிய பட்டம் பெற்று 5 வருஷமானபின், அதே பதவி கிடைக்க வழியில்லை என்று கண்டு திகைத்தவருக்கு அன்னை அதே இலாக்காவில் கெஸட் பதவியைப் பெற்றுத் தந்தார்.
  • ஒரு பத்திரிகையில் ஆரம்பத்திலிருந்து நெடுநாள் வேலை செய்தும் அதில் ஒரு கட்டுரை எழுத அனுமதி பெறாதவருக்கு, பத்திரிகை ஆசிரியர் பதவி கிடைத்தது.
  • ஆசிரம வாயில் நுழைய ஆயிரம் தடைகள் உள்ளவரை Dec. 5ஆம் தேதி தியானத்திற்கு அவரையறியாமல் அன்னையிடம் அனுமதி பெற்று அழைத்துப் போய் பகவான் கட்டில்முன் அவர் காலத்தில் அவருக்கு உடனிருந்து பணிவிடை செய்த சிலரோடு உட்கார வைத்தார்.
  • துணைவேந்தர் பட்டியல் கவர்னருக்குப் போகும்பொழுது எனக்குப் பதவி வேண்டாம், பட்டியலில் பெயர் சேர்ந்தது என்று இருந்தால் போதும்என்று கேட்டுக் கிடைக்காதவர் அன்னையால் துணைவேந்தர் பதவியை இருமுறை ஏற்றார்.

  • M.P.சீட் கிடைக்கவில்லை என்றபின் அருள் மந்திரி பதவியைப் பெற்றுக் கொடுத்தது.

அருள் இதுபோல் செயல்பட்டால், அருளை நாம் பெற வேண்டுமானால், நாம் இதுபோல் செயல்படும்பொழுது அருள் நம்மை நாடிவரும். அருளைப் பெறும் வழிகள் அநேகம். அதில் இது ஒன்று. சிறந்த முறையுமாகும். இதுபோன்ற மனித முயற்சிக்கும் உதாரணங்கள் உண்டு.

  • ஏக்கருக்கு 175ரூபாய் பயிர் லோன் என்ற காலத்தில் அது கிடைக்குமா என்றிருந்தவர்க்கு ஏக்கர் 175ரூபாய் பயிர் லோனுடன் ஏக்கர் 6000ரூபாய் கிணறு லோன் பெற்றுத் தர முடிந்தது.
  • தினசரி ரூ.200 பீஸ் பெற்றவர்க்குத் தினசரி ரூ.2000 பீஸ் பெறமுடியும்என்று அவருக்கு அந்த வாய்ப்பைப் பெற்றது.
  • வேலை கிடைக்காதவனுக்கு வெளிநாட்டுப் பயிற்சியும் சொந்தத் தொழிலும் தன் முழு முயற்சியால் பெற்றுத் தந்தது.
  • தியானம் வாராதவர்க்கு மௌனம் பெற உதவியது.

ஒரு கம்பெனியில் எல்லா வேலைகளையும் கொடுத்து எதற்கும் சரியில்லை என்றவருக்குச் சொந்தத் தொழில் வைத்துக் கொடுத்து அதை இருமடங்காகப் பெருக்கியதும் மனித முயற்சியால் அருளின் சூழல் நடந்தது. இதுபோன்ற முயற்சியை எடுத்தால், அருள் நம்மைத் தேடிவரும். வந்தால் அகலாது. நம் செயலின் மூலம் வெளிப்பட அருள் விழையும். அருளின் செயலுக்குப் பாத்திரமாவோம்.

******

  1. நெருங்கிய நண்பனுக்கும், விரோதிக்கும் ஒரே குணம் இருப்பதுண்டு. நம்மைப் பொறுத்தவரை அவர்கள் போக்கு எதிரானது.

விருப்பு நட்பையும், வெறுப்பு விரோதத்தையும் ஒரே க்ஷணத்தில் உற்பத்தி செய்யும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு சில குணங்களுண்டு. அவர்களுடைய நண்பர்கள் அவருடைய குணத்திற்கேற்ப அமைவார்கள். தமக்குள்ள அதே குணம் உள்ளவரையும், அதற்கு எதிரான குணமுள்ளவரையும் ஒருவர் நண்பராகத் தேடுவார்என்று மனோதத்துவம் சொல்கிறது. பொறுமைசாலி பொறுமையுடைய நண்பரைப் பெறுவார். அது பொருத்தம். பொறுமைசாலி பொறுமை அற்றவரை நண்பராக நாடுவார். ஆசிரியர், டாக்டர், விவசாயி, வக்கீல், அரசியல்வாதி நண்பர்களாக ஆசிரியர், டாக்டர், விவசாயி, வக்கீல் அரசியல்வாதியைத் தேடுவதை நாம் புரிந்துகொள்கிறோம். மேலும் மாணவன், பேஷண்ட், கூலிக்காரன், கட்சிக்காரன், வோட்டர் இவர்களோடு மேற்சொன்னவர்கட்குத் தொடர்பு இருப்பதால் அங்கும் நட்பு எழுவதுண்டு. அது இயல்பு. வக்கீலுக்கும், கட்சிக்காரனுக்கும் உள்ள தொடர்பு டாக்டருக்கும் வியாதியஸ்தனுக்கும் உண்டு. வியாதியால் வாடும் பேஷண்ட் வியாதியைக் குணப்படுத்தும் டாக்டரை நாடுவது இயல்பு என்பதுபோல் பொறுமையற்றவன், பொறுமைசாலியை நாடுவது மனோத்தத்துவப்படி இயல்பு. ஒருவன் நட்பு, வேலை எனும்பொழுது ஆண்களையும், திருமணத்திற்குப் பெண்ணையும் நாடுவது முறை என ஏற்றுக் கொள்கிறோம். ஒரே குணமுள்ளவர் சேர்வதும், எதிரான தன்மையுள்ளவர் ஒருவரையொருவர் நாடுவதும் இயற்கையிலிருப்பதைப்போல் நட்பிலும், உறவிலும் உண்டு.

எனவே நெருங்கிய நண்பர்களாக ஒரே குணம் உடையவர் சேர்ந்திருந்தால் மனக்கசப்பு ஏற்பட்டால் விரோதியாகிறார்கள். இன்றைய விரோதி நேற்றைய நண்பன் என்பதால் நண்பனும், விரோதியும் ஒரே இயல்புடையவர் என்பது தெளிவு. ஒரே குணமுடையவர் நம்மை விரும்பினால் நண்பர், வெறுத்தால் விரோதி.

ஷேக்ஸ்பியர் திருமணம் சொர்க்கத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என்றார். ஒருவன் மனைவியைத் தேடும்பொழுது தன் தாயின் குணமுள்ளவளையே விரும்பித் தேர்ந்தெடுக்கிறான் என்று ஒரு சட்டம். தாயை வெறுப்பவரில்லை. தாயின் குணம், உடல் அமைப்பு, மகனுக்கு அமைகிறது. அதனால் மனைவியாக அமைபவள் தாயைப் போலிருக்க

வேண்டும்என மனிதன் விரும்புகிறான். இவையெல்லாம் அவன் அறிந்து செய்வதில்லை. தானே உள்ளுணர்வு நிர்ணயிக்கிறது. நம் நாட்டில் மனைவியை மணமகன் தேர்ந்தெடுப்பதைவிட, பெற்றோரும் மற்றவரும் நிர்ணயிப்பதே அதிகம் என்பதால் நாம் எப்படி இந்த ஆராய்ச்சியை நம் நாட்டில் ஏற்றுக் கொள்ள முடியும் எனலாம்.

ஒருவனுடைய விருப்பத்திற்கு மாறாக பிறரோ, சட்டமோ, சூழ்நிலையோ ஓரளவுதான் செயல்பட முடியும். அடிப்படையான விஷயங்களில் யார் எவ்வளவு முயன்றாலும் (விதிப்படி நடக்கிறது என்று சொல்வதைப்போல்) அவனுடைய ஆழ்ந்த அபிலாஷையே விஷயங்களை நிர்ணயிக்கும். சமயத்தில் அவனே தன் ஆழ்ந்த அபிலாஷையை அறியாமல் அதற்கு எதிராகச் செயல்படுவதுண்டு. பட்டம் பெற்று உத்தியோகத்திற்கு வந்தவருக்கு, அந்த ஸ்தாபனத்தில் நல்ல வரவேற்பு. அங்குப் பல பெண்களிருந்தார்கள். அனைவரும் அவரைப் போற்றினார்கள். அவரும் அதை விரும்பினார். ஸ்தாபனத்திலுள்ள வரவேற்பையும் அங்குள்ளவர், குறிப்பாக பெண்களை, தாம் விரும்புவதையும் அவர் பெரிதாக நினைக்கவில்லை. இவையெல்லாம் சாதாரணமானவைஎன அவர் பொருட்படுத்தவில்லை. அதேபோன்ற ஸ்தாபன தலைமைப் பதவிக்கு விளம்பரம் வந்தபொழுது தமக்குத் தகுதியிருப்பதால் விண்ணப்பித்தார். மூன்றாம் நாள் அவர் விண்ணப்பம் திரும்பி வந்துவிட்டது. விண்ணப்பத்தில் அவர் கையெழுத்திடவில்லை. கையெழுத்து ஒரு சாஸ்திரமாகப் பயன்படுகிறது. அதன்படி ஒருவர் தான் எழுதியதில் கையெழுத்திடவில்லை என்றால் தாம் எழுதியது தம் ஆழ்ந்த மனத்திற்குச் சம்மதமில்லைஎன்று பொருள். விண்ணப்பிக்க அபிப்பிராயமிருந்தாலும், அந்த ஸ்தாபனத்தைவிட்டு அகல மனமில்லை. ஆழ்மனத்திலுள்ளது விஷயத்தின் தேவையை நிர்ணயிக்கும்.

ஒருவன் தன் ஆழ்மனத்தில் தன்னைப் போன்றவர்களையும், தனக்கு எதிரானவர்களையும் - எதிரானவர், மனோதத்துவப்படி, நம் போன்றவரே - நண்பர்களாக, மனைவியாக, கணவனாக

விரும்புவதால், நம் நண்பர்களும், விரோதிகளும் ஒரே குணமுடையவராக இருக்கின்றனர்.

*******

  1. சில்லறை ஆசைக்குரிய எந்தச் செயலும், ஆனந்தத்தின் பிறப்பிடமாக இருக்க முடியும்; ஜீவியத்தை உயர்த்தி, போக்கை மாற்றினால் போதும்.

ஜீவியம் உயர்ந்தால், சில்லறை ஆசையிலும் ஆனந்தம் வரும்.

செயலால் உயர்ந்தவை, தாழ்ந்தவை என்றுண்டு. வேதம் பயில்வது, பிறர் உயிரைக் காப்பாற்றுவது, உணவுப்பொருள் உற்பத்தி செய்வது ஆகியவை செயலால் உயர்ந்தவை. கோள் சொல்வது, பிறர் வாழ்வை பாழ்செய்வது, கொலைசெய்வது ஆகியவை செயலால் தாழ்ந்தவை. அரிபொருளாக, விதிவிலக்காக, நல்ல செயலும் தவறாக இருக்க முடியும். அது, செய்யும் நோக்கத்தைப் பொருத்தது.Devil quoting scriptures சாத்தான் வேதம் சொல்வதுபோல் என்ற மொழி வழங்குவது அதனால்தான்.

1942இல் ஒரு தலைசிறந்த மாணவன் S.S.L.C பரீட்சை எழுத வேண்டும். எல்லாப் பாடங்களிலும் முதல் மார்க் வாங்கும் மாணவன் என்பதால், கணிதத்தில் 0 வாங்கினாலும் வருஷா வருஷம் பாஸ் போட்டு S.S.L.Cக்கு வந்துவிட்டான். மன்னராட்சி நடக்குமிடம். சிறிய ஊர். பையனையும், அவன் குடும்பத்தையும் பள்ளியில் அனைவரும் அறிவர். S.S.L.C பாஸ் செய்துவிட்டால் கணிதபாடம் இனி தேவையில்லை. பாஸ் என்பது நடக்காத காரியம். தலைமை ஆசிரியர் பச்சை மிளகாய்' எனக் கட்டுப்பாட்டில் பெயர் வாங்கியவர். அவரே கணித ஆசிரியர். கணிதப் பரீட்சையன்று அவர், "இந்த மாணவன் பெயிலாகக் கூடாது. நான் எந்த நரகத்திற்குப் போனாலும் சரி, அந்தப் பாவத்தை நானே என் கையால் செய்கிறேன்'' என்று அவனிடம் ஓடி வந்தார். 3 கணக்கு அவனுக்குச் சொல்க்கொடுத்து எழுதச்

சொன்னார். பையன் பாஸ் செய்துவிட்டான். தலைமை ஆசிரியரே இந்தத் தவற்றைச் செய்வது மன்னிக்க முடியாததொன்று. அவர் நோக்கம் கருதி, அது பாவமான செயலிலிருந்து மாறி, புண்ணியமான செயலாகிறது.

ஆசை யோகத்திற்கும், தவத்திற்கும் எதிரி. ஆனந்தமும், ஆசையும் ஒரே (Vibrations) மாதிரியானவை. ஆனந்தம் உயர்ந்தது, ஆசை தாழ்ந்தது. ஆசையின் சுவடு அழியும்வரை ஆனந்தத்தை உணர முடியாது என்று அன்னை கூறுகிறார். (Desire,,petty desire) ஆசையும், சில்லறை ஆசையும் சிறிய மனிதனுக்குரியவை. ஆசையே தடையென்றால், சில்லறை ஆசையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். விதிக்கு விலக்குண்டு.

செய்யும் நோக்கம் கருதி எந்தச் செயலும் ஆனந்தத்தை உணர முடியும். அடிப்படைத் தத்துவமாகப் பூரணயோகத்திற்கு அமைந்தது "எந்தச் செயலையும் ஆன்மீக முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தலாம்'' என்பது. காம, குரோத, லோப, மோகம் தபஸ்விக்கு எதிரி. மனதைக் கடக்கும்வரை இந்தச் சட்டம். மனதைக் கடந்தால் தெய்வ நிலையைத் தாண்டுகிறோம். தெய்வ நிலையைத் தாண்டி, அகந்தை அழிந்து, மனத்திலிருந்து விடுபட்டால், காமமும் ஆன்மீக முன்னேற்றத்திற்குரிய கருவியாக முடியும் என்பதை விளக்கும்படிக் கேட்ட சாதகருக்கு பகவான், "அது சரி, அந்நிலைக்கு வந்தவருக்கு அதைக் கற்பிக்க இயலும்'' என்றார்.

பொதுவாக, வாழ்வில் சிறியவர் பெரிய காரியம் செய்யும் சந்தர்ப்பங்களையும், பெரியவர் சிறிய காரியங்களைச் செய்யும் சந்தர்ப்பங்களையும் நாம் பார்ப்பதுண்டு. அது வாழ்வில் விதிவிலக்கான செயல்கள். அத்தலைப்பில் வருவதே மேற்சொன்ன சட்டம். ஆனால் இது அன்னை வாழ்வுக்குரியது. அதாவது, வாழ்வு மையத்திலிருந்து மாறி, நிரந்தரமாகவும் மாறி, அன்னை வாழ்வின் மையத்திற்கு வந்தபின், இது உண்மையாக முடியும்.

இது உண்மையானால், ஆசையாக இருந்தாலும் பரவாயில்லை, தவறில்லை என்ற நிலையிருக்காது. சிறிய ஆசை, சில்லறை ஆசையாக இருப்பதால், அச்செயல் திருவுருமாற்றமடைந்தால், அது பேரின்பமாகவும், பெரிய ஆனந்தமாகவும் மாறுகிறது.

திருவுருமாற்றத்தில் வேறோர் அம்சமும் உண்டு. திருவுருமாற்றம் வரும் நிலையில், சில்லறை ஆசைகள் மாறி, ஆசை நிலையைக் கடந்து ஆனந்தநிலையை அடைந்திருக்கும். விதிவிலக்காக, அதுபோல் மாறாதவையும் உண்டு. மாறாவிட்டாலும், சிறிய ஆசையானாலும், நோக்கம் கருதி ஆனந்தத்தை உற்பத்தி செய்யும். உலகுக்கே இவை புதியவை என்பதால் பலருக்கும் புரியும் உதாரணம் தருவது எளிதன்று. ஓரிரு சாதகர்களை அன்னை கேலி செய்வதுண்டு. ஆசாரப் பிராமணக் குடும்பத்தவர் சென்ற தலைமுறையில் கிறிஸ்துவராகி, வெள்ளைக்காரியை மணந்தவர், வேட்டியே கட்டியதில்லை. அவரை, அன்னை சிறுபிள்ளைமாதிரி (silly baby) சில சமயங்களில் நடத்துவதுண்டு. பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு அவர் வந்தபொழுது, யார் இந்தப் பொம்பளை எனக் கேட்டார். அவரை ஒரு முறை தலையில் குட்டினார். அந்தக் குட்டு ஆனந்த அலைகளை அவருள் எழுப்பியது. சில்லறையாகச் செய்தாலும், ஆனந்தம் பிறக்கும்.

*******

  1. சிறிய விஷயங்களில் இம்மாற்றத்தைச் செய்வது கடினம். பெரும்பாலான செயல்களை மாற்றிவிட முடியும். சில, மாறுதல்களுக்கு இடம் கொடுக்காமல் நிற்கும். அவை அழிக்கப்பட வேண்டியவை.

அழிய வேண்டியது மாறாது. மாற முடியாதது அழிவை அழிக்கும்.

அடிப்படையில் சிறியது, பெரியது என்பதில்லை. ஆனந்தம்பெற மேல்உலகுக்குச் செல்ல வேண்டும். இந்த உலகில் ஆனந்தமில்லை என்பது நாம் அறிந்த உலகம். ஆனந்தத்தை இந்த உலகில் அனுபவிக்க

முடியும் என்பது மட்டுமன்று, இவ்வுலகில் ஆனந்தம் பெற்றால், அது ஆனந்தத்திலிருந்து (bliss) சிருஷ்டியின் ஆனந்தமாக (delight) மாறும். அது பெரியது என்ற தத்துவம் பகவான் ஸ்ரீ அரவிந்தருடையது. அந்த ஆனந்தத்தைத் தேடியே இறைவன் சிருஷ்டித்தான். அவன் லீலையை மேற்கொண்டதே அதற்காகத்தான். நாம் அதைப் பெற வேண்டும். அதற்கு நாம் இறைவனாக வேண்டும். இறைவனுக்குமுன் சத்தியஜீவனாக வேண்டும்.

மாற்றம் எல்லா நிலைகளுக்கும் உண்டு என்பது தத்துவம். நடைமுறையில் பெரியதை மாற்றலாம், சிறியதை மாற்றுவது எளிதன்று. விரயம் என்பது நமக்குக் கஷ்டமாக இருக்கிறது. அதேபோல் மரணம், அழிவு என்பவை மனிதனுக்குக் கஷ்டம், வருத்தம் தரக்கூடியவை. சிருஷ்டியில் எழுபவையெல்லாம் வாழ்வதற்குத் தகுதியுள்ளவையல்ல. தகுதியற்றதை வாழ்வு அழிக்கிறது. இந்தத் தத்துவத்தை விளக்கும் நிகழ்ச்சியை அன்னை தாம் வளர்த்த பூனை குட்டிபோட்டபொழுது நடந்ததைச் சொல் விளக்குகிறார். அவர் இதை விளக்கச் சொல்லவில்லை. வேறு சந்தர்ப்பத்தில் சொல்லிய கதை இது. பூனை தான் போட்ட குட்டிகளில் இரண்டு முடமாக இருந்ததைப் பார்த்து, இவை பிழைக்கக்கூடியவையல்ல என்று கண்டு, அதன்மீது உட்கார்ந்து அந்த இரண்டு குட்டிகளையும் கொன்றுவிட்டது. "அழிக்கப்பட வேண்டியவை அழிக்கப்பட வேண்டும்'' என்ற சட்டம் இங்குச் செயல்படுகிறது. நமக்கு அது மனதிற்கு இதமாக இருக்காது. ஆனால் வாழ்க்கை நியதி அது.

சமூகம் மாறும்பொழுது, பல பயனற்றுப் போகும். கார் வந்தபின், வந்து பிரபலமானபின், குதிரை, குதிரை வண்டி ஐரோப்பாவிலிருந்து மறைந்துவிட்டன. இனி அவற்றை மியூசியத்தில்தான் வைக்க வேண்டும். அவை அழிந்துவிட்டன என நாம் வருத்தப்படுவதில்லை. அதேபோல் சமூகத்தில் இன்றுள்ள பழக்கங்கள் அனைத்தும் திருவுரு மாற்றமடைந்தாலும், சில திருவுருமாற்றமடைய மறுக்கும். அவை அழிக்கப்பட வேண்டியவையாகும். போட்டி, ஒத்துழைப்பாக மாறும்; பொறாமை, உதாரகுணமாகும்; சோம்பல், சுறுசுறுப்பாக மாறும்; தன்

கடைசி வருஷத்தில் அன்னை, "என்னால் எந்தக் குற்றத்தையும் மன்னிக்க முடியும். கொடுமை செய்பவர்களையும் மன்னிக்கும் மனம் எனக்குண்டு. ஆனால் கொடுமை செய்து, அதில் சந்தோஷம் அடைபவரை என்னால் பொறுக்க முடியாது'' என்றார். பிறரைக் குறைவாகப் பேசுவது, தன் குழந்தையை அழவிட்டு வேடிக்கைப் பார்ப்பது போன்ற சில குணங்கள் மாற மறுத்தால், அவற்றை அழிக்க நாம் தயங்குதல் கூடாது. அந்தக் குணங்கள் அழியும் நேரம் உலகத்தில் வந்துவிட்டால், அவை அன்னை சக்தியைத் தேடி வந்து, "எங்களை அழித்துவிடுங்கள்'' என்று மன்றாடும்.

*******

  1. எவ்வளவுக்கெவ்வளவு மட்டமானதாகவும், சிறியதாகவும் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அச்செயல் திருவுருமாற்றத்தால் அதிக ஆனந்தத்தை உற்பத்தி செய்யும்.
  • மட்டம் உயர்வின் திட்டம்.
  • வெறுத்து விலகியதை விரும்பி நாடும் மனிதன்.

செயல் திருவுருமாற்றத்தால் எதிரான பலனைக் கொடுக்கும். திருவுருமாற்றம் பகவான் உலகுக்கு அளித்த புதிய வரப்பிரசாதம். புத்தர் நோய்வாய்ப்பட்டவனால் மனம் மாறி, ஞானம் பெற்றபின், நோயை அழிக்க முயன்றார். அவருடைய ஞானத்தை ஏற்றுக்கொண்டது உலகம். ஏன் நோயை ஆரோக்கியமாக மாற்றக்கூடாது என நினைவு எழவில்லை. துன்பம் வந்தால் மனிதன் அதைப் போக்க முயலுவான். அதை இன்பமாக மாற்ற வேண்டும் என்று நினைப்பதில்லை. பல இலட்சம் கடன் உள்ளவன், உழைத்துக் கடனை அடைக்க முயலும்பொழுது, எப்படி இத்தனை இலட்சம் கைமீதியாகும்என நினைப்பதில்லை. அதுவும் இக்கடன், கைமீதியாக மாறும் என்ற எண்ணம் இன்று உலகில் இல்லை. இவை வாழ்வின் அம்சங்கள்.

பகவான் திருவுருமாற்றம் ( reversal of consciousness,transformation) என்பது மரணம், இறவாமையாக மாறுவது போலுள்ள அம்சங்களாகும். அது போன்றவை,

உலகம் ................. பிரபஞ்சமாவது

மரணம் . ................ இறவாமை

நோய் ................. ஆரோக்கியம்

ஜடம் ................. சச்சிதானந்தம்

சோகம் ................. ஆனந்தம்

மனம் ................. சத்திய ஜீவியம்

எண்ணம் ................. மௌனம்

உணர்வு ................. அன்பு

இயலாமை ................. அளவிறந்த திறமை

வரம்புக்கு உட்பட்டது ................. வரம்பில்லாமல் அளவுகடந்தது      

 மனிதன்                           .................                           சத்தியஜீவன்    

இது யோகத் தத்துவமானால் நம் அன்றாட வாழ்வில் சிறியது, பெரியதாகவும்; வேண்டாதது, வேண்டியதாகவும்; உபத்திரவம் உதவியாகவும்; வெறுப்பு, நட்பாகவும் மாறுவது திருவுருமாற்றமாகும். அன்பர்கள் அன்றாட வாழ்வில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி பார்க்கிறார்கள். எந்த முதலாளி, தொழிலாளியை நீக்கினாரோ, அவர் பிறகு தொழிலாளியின் நிலை மாறியதால், அவனிடமே உதவி கேட்கிறார். நம்மைக் குறைவாகப் பேசியவர்களே, உயர்வாகப் பேசுகிறார்கள். இவையெல்லாம் பக்தர் அறிவது. இங்குக் குறிப்பாகச் சொல்லப்படுவது சற்று மாறானது.

 

நம்மிடம் பகைமை பாராட்டும்பொழுதும், அதற்கும் ஒரு முறையுண்டு. பகையை உயர்ந்த முறையிலும் வெளிப்படுத்தலாம், மட்டமாகவும் வெளிப்படுத்தலாம். மட்டமான முறையில் பகையை வெளிப்படுத்தும்பொழுது மனம் புண்படுகிறது. பகை, கோபத்தை மூட்டும். மட்டம் மனத்தைப் புண்படுத்தும். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் திருவுருமாற்றம் செயல்படும் விதத்தை மேலே குறிக்கின்றேன்.

குடிதண்ணீரில்லாத ஊரில் எப்படி விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை திருவுருமாற்றமடைந்ததால், தண்ணீர் அபரிமிதமான ஊராக அது மாறியது. பெரிய ஸ்தாபனத்தில் இரண்டாம் நிலையில், தன்மையாக இருப்பவரை அனைவரும் நேரடியாக, உளமார வெறுத்தனர். அவரிடம் ஏற்பட்ட திருவுருமாற்றம், அவருக்கு முதல் நிலையில், முதன்மையானவர்க்குக் கிடைக்காத புகழைப் பெற்றுத்தந்தது. புகழில்லாதவர், புகழடைவது வளர்ச்சி. கெட்ட பெயர், நல்ல பெயராக மாறுவது திருவுருமாற்றம். பயிரிட நீர் வசதியில்லை என்பது ஒரு நிலை. குடிக்கத் தண்ணீர் இல்லை என்றால் மோசமான நிலை. அது திருவுருமாற்றமடையும்பொழுது, நீர் கிடைத்தால் பெரியது. ஆனால் அபரிமிதமான நீர் கிடைத்தது. எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையிருக்கிறதோ, அது திருவுருமாற்றமடையும்பொழுது, அவ்வளவுக்கவ்வளவு உயர்ந்துவிடுகிறது என்பது தத்துவம்.

*******

  1. தாழ்ந்த பண்புகளை விட்டொழித்தபின்னரே உயர்ந்த பண்புகள் பலிக்கும். உயர்ந்தவற்றை ஏற்றுக்கொண்ட பின்னரும், தாழ்ந்தவற்றின்மீது ஆசையும், பெருமையும் மனிதனை விடாது. ஜனநாயகம் வந்தபின்னும், போருக்கு மரியாதையிருக்கிறது. சன்னியாசத்தை மேற்கொண்ட பின்னும் பணத்திற்குண்டான மரியாதை போவதில்லை.

விட்ட குறை, தொட்ட குறை.

இங்கிலாந்தில் முடியாட்சியை ஒழித்து, குடியாட்சியை நிறுவ மன்னரைக் கொலை செய்தனர்; ஜனநாயகம் பிறந்தது. கொஞ்ச நாள் கழித்து, இறந்த மன்னர் மகனைத் தேடிக் கண்டுபிடித்து சிம்மாசனத்தில் அமர்த்தினார்கள். இன்றும் இங்கிலாந்தில் மன்னரே நாட்டின் தலைவர். அழித்த அரசனை மீண்டும் தேடிக் கண்டு, இரு நூற்றாண்டாகப் போற்றுகின்றனர். உலகம் ஒரு பழக்கத்தை லேசில் கற்றுக்கொள்வதில்லை. கற்றுக்கொண்டதை லேசில் விடுவதில்லை. மனம் மீண்டும், மீண்டும் நாம் கைவிட்டதை நாடும் தன்மையுடையது. 1930க்கு முன் கெஜட் பதவி ஆபீசர்களில் பலர் ஆங்கிலேயராக இருந்தனர். அதனால் அவர்களை துரை' என்பார்கள். 1950க்குள் இந்நிலை மாறியது. இலாக்கா தலைமை தவிர, மற்ற பதவிகளை இந்தியர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்தனர். 1970வரை கெஜட் பதவி ஆபீசரை துரை' என்று குறிப்பிடும் பழக்கம் இருந்தது. துரை' போனபின்னும், அவரிடத்தில் நம்மவர் வந்தபின்னும், பழைய பெயர் ழுவதும் மாறுவதில்லை.

அதேபோல் தாழ்ந்ததைவிட்டு, உயர்ந்ததை மேற்கொண்ட பின்னும், மனம் பழைய நிலையை விரும்பும், போற்றும். மனத்தைப் பொறுத்தவரை தாழ்ந்தது, உயர்ந்தது என்பதைவிட, பழகியதைவிட முடியாது என்பதே அதன் நிலை.

முடியாட்சி இருந்த நாளில் வீரன்' என்பவன் சிறந்தவன். வீரம் ஏற்பட்டு பிரபலமாகி, வீரன்' ஏற்பட்டு, வீரன் தலைவனாகி, அரசன் ஏற்பட்டது சரித்திரம். மனிதகுலம் நாகரீகம் பெறும்முன் மக்கள் கூட்டமாக வாழ்ந்த நாளில் கூட்டத்தைக் காப்பாற்றுவது முக்கியம். கூட்டத்தைக் காப்பாற்றினால்தான் உயிர் பிழைக்கலாம். எதிரிகளின் கூட்டத்திலிருந்தும், காட்டு விலங்குகளிலிருந்தும் எல்லோராலும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது. காடு என்று எங்கோ, மலையடிவாரத்தில் பல நூறு மைலுக்கு அப்பாலுள்ளது இக்காலம். உலகமே காடாக இருந்தது அந்த நாள். காட்டில் மனிதன் வாழ்ந்தான். காட்டை அழித்து, நாட்டை உற்பத்தி செய்தான். நாலு

மைல் அகலத்தில் ஊர் இருந்தால், ஊரின் எல்லையில் காடு. இரு ஊர்களுக்கிடையே காடு. எனவே, எந்த நேரமும் காட்டு விலங்கால் உயிருக்கு ஆபத்து. புலியைக் கொன்று, புலிப் பல்லை எடுத்தவன் வீரன். வீரனை மணக்க நங்கை விழைவாள். தான் வீரன் என்று நிரூபிக்கும் புலிப் பல்லை அவள் கழுத்தில் அணிந்து, அவளை மணப்பது ஒரு வகை. அப்படி ஏற்பட்டதே இன்றைய தாலி என்று ஒரு செய்தி. வீரன் எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதால் வீரனே தலைவன், அவன் கூறுவதே நியாயம். இரு வீரர்கள் மாறுபட்டால் மல்யுத்தம் நடக்கும். ஜெயிப்பவன் நியாயஸ்தன். இது ஆதிகாலத்து நியாயம். நியாயம் ஜெயிக்கும் என்பது ஜெயித்தவன் நியாயம் என்றாயிற்று. இது ஆயிரம் ஆண்டு பழக்கம். இன்றும் இருவர் மாறுபட்டால், "வா, சண்டை போடலாம். யார் ஜெயிக்கிறார்கள், பார்க்கலாம்'' என்ற உணர்வுக்குப் பெருமையுண்டு. நியாயத்திற்கும், அபிப்பிராயத்திற்கும்; அறிவின் தெளிவுக்கும், உடல் வலிமைக்கும் எப்படித் தொடர்புண்டு? இன்றுவரை மனித நியாயம் இப்படியே வழங்குகிறது.

சன்னியாசி அனைத்தையும் துறந்தவன். வேந்தன் அவனுக்குத் துரும்பு. ஒரு புதிய ஊருக்குப் போனால், தங்க, சன்னியாசி இந்த ஊரில் யார் செல்வர்' என்று விசாரித்து, அங்கு போய்த் தங்குகிறான். தன்னைப் பார்க்க வருபவர்களில் பணம் உடையவர்க்கு அதிக கவனம் செலுத்தும் சன்னியாசிகள் உண்டு.

தான் கைவிட்ட கருத்துகளை, இலட்சியங்களை இன்னும் பெருமையுடன் கருதுவது மனித மனம். மனம் மாறினாலும், உணர்வு மாறுவதில்லை. உணர்வு மாறினாலும், பழக்கம் மாறுவதில்லை. அனைத்தும் மாறிய பின்னரே, அன்னை வருவார். பகவானுடன் நெடுநாள் இருந்தவர், தாம் போட்டிருந்த பூணூலைக்கூட விட டியவில்லை. இதுவே மனித சுபாவத்தின் உண்மை.

********

  1. Systems முறைகள் முதல் அதிகப் பலன் தரும். பிறகு ஜீவனிழந்து பலனற்றதாகும். முறைகள் நம்மால் ஏற்படுத்தப்பட்டவை என்பதால், அவை செயல்படும் வகையைச் சற்று விரிவுபடுத்தி மீண்டும் அவற்றிற்கு ஜீவன் அளிக்க முடியும். கொடுமையும், அதிகாரமும் செல்வாக்கை இழந்துவிட்டபோதிலும், அவற்றிலுள்ள தீவிரப் பணிவை வளர்த்து, மீண்டும் அவற்றைப் பயனுள்ளதாகச் செய்ய முடியும்.

பயனற்ற முறைகளையும் ஜீவனுள்ளதாகச் செய்யலாம்.

முறைகள்என நான் இங்கு குறிப்பிடுவது திருமணம், சொத்துரிமை, மதம், பேரம், கடன், குடும்பம் போன்ற சமூக அமைப்புகள். உரிமை ஏற்பட்டு, சொத்துரிமை வந்தது. அதனால் வாரிசு ஏற்பட்டது. இவை ஏற்பட்ட ஆரம்பத்தில் ஜீவனுள்ள சிறப்புடன் விளங்கின. கூட்டம் குடும்பமாகிய காலத்து, நாம், நம் குடும்பம் என்ற பாசம் எழுந்து பண்பாயிற்று. எந்த நிலத்தில் யார் பயிரிடுவது; யார் எந்த மரத்தடியில் குடியிருப்பது; வீடு, குகை என்று இருந்தால், அதை யார் பயன்படுத்துவது என்ற முறையில்லாத காலத்தில் வலிமையுள்ளவன், வலிமையற்றவனை அவனிடத்திலிருந்து விரட்டிவிட்டு அவன் நிலத்தை, வீட்டை ஆக்கிரமித்துக்கொண்டான். சொத்துரிமை என்று ஏற்பட்டபொழுது, வலிமையற்ற அனைவருக்கும் பாதுகாப்பு ஏற்பட்டது, நிம்மதி ஏற்பட்டது. அதுவே நாகரீகமாக நாம் இன்று வாழ்ந்து வருகிறோம். ஜீவனோடு எழுந்த இம்முறைகள் நாளாவட்டத்தில் ஜீவனற்றுப் போகின்றன.

பாசத்தை வளர்க்க ஏற்பட்ட குடும்பம் இன்று, மாற்றாந்தாய்க்கு பையனைக் கொடுமைப்படுத்தும் வாய்ப்பை அளிக்கிறது. நியாயத்தை பாதுகாக்க ஏற்பட்ட சொத்துரிமை, நிலத்தைப் பயிரிட முடியாத சோம்பேறிக்கு இன்று, வாரிசு என்பதால் நிலத்தைக் கொடுக்கிறது. அதனால் குடும்பம் நஷ்டமடைகிறது. திருமணம் என ஒன்று ஏற்படாத நாளில் கணவன், மனைவி என்பதேயில்லை. அதனால் வியாதிகள்

பரவி அகால மரணம் ஏற்பட்டது. குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பைப் பெற்றவன் ஏற்பதில்லை. அது விலங்கின் வாழ்வு. திருமணம் எனும் அமைப்பு குடும்பம், கணவன், மனைவி, பெற்றோர், குழந்தைகள் என்பதை ஏற்படுத்தியதால், கட்டுப்பாடு, பொறுப்பு, பாசம் உண்டாகி மனிதன் உயர்ந்துவிட்டான். திருமணம் ஏற்படாதபொழுது, குழந்தைகளைக் காப்பாற்ற தகப்பனார் இல்லை. ஆனால் தாயார் யார் உதவியாலும் குழந்தைகளைக் காப்பாற்ற முடிந்தது. திருமணம் ஏற்பட்டபின், கணவன் இறந்துவிட்டால் அவள் நிர்கதியாகி நிற்கிறாள். குழந்தைகளை வேறொருவர்மூலம் காப்பாற்ற திருமணம்' என்ற அமைப்பு தடையாகிறது. எந்தத் திருமணம் குழந்தைகளைக் காப்பாற்ற ஏற்பட்டதோ, அதே திருமணம் மனைவி, கணவனை இழந்த நிலையில், குழந்தைகளைக் காப்பாற்ற தடையாயிருக்கிறது.

படிப்பு என்ற முறை பட்டம் பெற்றுத் தந்தது. 80 வருஷத்திற்கு முன் B.A. படித்தவனை தேவனாகக் கருதினார்கள். பட்டத்திற்கு மரியாதை அதிகமாக இருந்ததால் பட்டத்தையே பெயராகவும் ஏற்படுத்தினார்கள். லால்பகதூர் என்பவர் சாஸ்திரி' பட்டம் பெற்றபின் அவரை சாஸ்திரி' என்று அழைத்து, லால்பகதூர் சாஸ்திரி' என்றாக்கினார்கள். இன்று பட்டம் உண்டு. அதற்குரிய படிப்பில்லை. பட்டம் என்ற முறை ஜீவனிழந்து, களையிழந்துவிட்டது.

களையிழந்த முறைகளைக் கைவிட்டு, உலகம் புது முறைகளை நாடுகிறது. புது முறைகளை ஏற்க முடியாமல், பழையமுறை திறன் இழந்த காலத்தில், பழையமுறையின் அடிப்படையைச் சற்று விரிவுபடுத்தினால், அது மீண்டும் உயிர்பெற்றுக் களையோடு அமையும். உதாரணமாக, B.E. பட்டம் பெறும்முன் முதல் மாணவரையும், முன்னணி மாணவர்களையும் கம்பனிகள் ஏற்றுக்கொள்கின்றன. இன்ஜீனியரிங் கல்லூரி மாணவர்களை முதல் ஆண்டிலிருந்து கம்பனிகள் ஏற்கும் அமைப்பை உற்பத்தி செய்தால், மாணவர்கள் திறமையைத் தேடுவார்கள். இன்று போன களை அன்று திரும்பி வரும்.

கொடுமை பயங்கரமானது. அதுவும் ஒரு முறையாக இருந்த காலம் உண்டு. கொடுமைக்கு மனிதன் பணிந்தான். பணிவு உயர்ந்தது. பணிவைப் போற்றினால் கொடுமையும் மாறிப் பலன் தரும். இராணுவத்தில் பணிவு முக்கியம். அதனால் இராணுவ வீரர்கள் சிறந்த திறமையுடன் விளங்குகின்றனர்.

ஜீவனற்ற முறைகளை அவற்றுள் உள்ள வித்தான நல்ல அம்சங்களைப் பாராட்டுவதால் மீண்டும் ஜீவனுள்ளதாகச் செய்ய முடியும்.

*******

  1. தலைவன், தொண்டன் இருவர் செய்யும் வேலையின் கரு ஒன்றே என்பதை அவர்களுடனிருப்பவர்கள் அறிவார்கள். ஆனால் தொண்டன் தலைவனானால் அதற்குரிய வலிமையில்லாத காலத்து அவன் தோல்வியடைவான்.

தொண்டனே தலைவன், தலைவனே தொண்டன்.

தொண்டன் தலைவனாவது மூன்று வகையின. 1) நெடுநாள் தொண்டனாக இருந்து, செய்யும் வேலையின் நுணுக்கத்தை அறிந்து அறிவும் அனுபவமும் முதிர்ச்சியடைந்து, உடனிருப்பவர்கள் இவனுடைய தகுதியை அறிந்து பாராட்டி, சந்தர்ப்பம் வரும்பொழுது தலைவனாவது. 2) ஒரு தலைமுறையில் பெற்ற அனுபவம் அடுத்த தலைமுறையில் முதிர்ந்து பலிப்பது. 3) ஒரு பிறவியில் பெற்ற அனுபவம் அப்பொழுது முதிர்ந்து பலன் தாராமல் அடுத்த பிறவியில் பலன் தருவது.

தொண்டன் செய்யும் வேலைகளும், தலைவன் செய்யும் வேலைகளும் முக்கியமான விஷயத்தில் ஒன்றாக இருப்பதுபோல் தோன்றும், சில சமயங்களில் ஒன்றாக இருக்கும். நூலாசிரியர்

எழுதியதும், டைப்பிஸ்ட் டைப் செய்ததும் ஒன்றேயானாலும் செயல்களின் கரு வேறு. வீட்டில் திருமண வேலைகளைத் தகப்பனார் செய்வதும், மகன் செய்வதும் ஒன்றேயாகத் தெரியும். இங்கு ஒற்றுமை அதிகம். பொறுப்பைத் தகப்பனார் வகிப்பதுபோல் மகனும் வகிக்கலாம். இங்கு வித்தியாசம் குறைவு. லால்பகதூர் சாஸ்திரி மந்திரிசபையில் 4ஆம் இடம் வகித்தபொழுது நேருவின் வேலைகள் அனைத்தையும் செய்தார். அதனால் அவருக்குப் பிரதம மந்திரி பதவி வந்தது. 1 1 /2 வருஷம் அந்த பாரம் தாங்க முடியவில்லை. அதனால் இறந்தார் என அன்னை கூறுகிறார். வேலை ஒன்றே. பாரத்தை நேரு தாங்கலாம், நேருவின் மகள் இந்திரா அனுபவமின்றியும் தாங்கலாம், நெடு நாள் அனுபவமான மொரார்ஜியும் தாங்கலாம், அனுபவமிருந்தும் பாரத்தைத் தாங்கும் சக்தியில்லாத சாஸ்திரியால் தாங்க முடியாது.

தொண்டர்கள் பல விதத்தினர். தலைவருடனே இருந்து வேலை செய்யும் தொண்டர்கள் ஒரு வகையினர். தலைவரையே பார்த்து அறியாமல், கொடி மட்டும் பிடிக்கும் தொண்டர்கள் மறு வகையினர். கட்சியில் தீவிரமாக இணைந்து தலைவருடன் வேலை செய்யும் தொண்டரையே நான் குறிப்பிடுகிறேன். அனுபவமிருந்து, வலிமை இல்லாத தொண்டர்களுக்கு வாழ்வு பதவியை அளிப்பதில்லை. அளித்தால் அவன் அதை இழப்பான். அவனுக்கு வலிமை வரும்வரை வாழ்வு காத்திருக்கும்.

அன்னை செயல்படுவது வேறு வகை. அனுபவமுள்ள தொண்டன், வலிமையில்லாத நேரத்தில் அன்னையை ஏற்றுக் கொண்டால் அவனுக்கு வலிமை வரும். வலிமையிருந்து அனுபவம் இல்லாவிட்டால் அனுபவம் வரும். எது இல்லாவிட்டாலும், ஒன்றிலிருந்து ஆரம்பித்தால் மற்றது அன்னை மூலம் வரும். எதுவும் இல்லா விட்டாலும், பக்தியும் நம்பிக்கையும் உயர்வாக இருந்தால், எல்லாம் வரும்.

சுதந்திரம் வருமுன் இந்தியர்கட்கு உரிமை கிடையாது. வந்த பின் எந்த இந்தியனும் எதைப் பெற விழைந்தாலும் - படிப்பு, செல்வம், பதவி, உயர்வு ஆகிய எதுவானாலும் - அவனுக்கு உரிமையுண்டு. இல்லாத உரிமையை, சுதந்திரம் பெற்றுத் தந்தது. மனிதனுக்கு இல்லாத உரிமையை மரணத்தை அழிக்கும் உரிமையை அன்னை பெற்றுத் தந்திருக்கிறார். அது யோகத்தை நாடுபவர்க்குரியது. அன்றாட வாழ்வில் சாதாரண மனிதனுக்கு இல்லை என்பவை பல. அவற்றுள் இதுவும் ஒன்று. வலிமையில்லாத தொண்டனுக்கு உள்ள அனுபவம் அவனுக்குத் தலைமையைப் பெற்றுத் தாராது. அன்னை வாழ்வு அதைப் பெறும் உரிமை, திறமை, வாய்ப்பு, தகுதியைப் பெற்றுத் தரும்.

இன்றுவரை மனிதனுக்கு வாழ்வில் இல்லை என்ற

எதையும் மனிதன் பெறவிழைந்தால், அன்னை

அவனுக்கு அதை அவன் தூய்மையான பக்திக்கும்,

ஆழ்ந்த நம்பிக்கைக்கும் பரிசாக அளிக்கின்றார்.

இல்லாத உரிமையை உற்பத்தி செய்து அளிப்பது அன்னை எனும் அவதாரம்.

*******

 



book | by Dr. Radut