Skip to Content

10. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

வழிபாடும் சரணாகதியும்:

எந்த உதவியும் பிறரைக் கேட்காமலிருப்பதே சிறந்த கோட்பாடு; நம் மரபில் வந்த உயர்ந்த இலட்சியம். மனிதனையே உதவி கேட்கவில்லை என்றால், தெய்வ சந்நிதியில் நிற்கும்பொழுது எப்படி இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்பது? மனிதனைக் கேட்பவரும் இறைவனைக் கேட்க கூச்சப்படுவார்கள். சிறப்பானவர்கள் இறைவனை நினைத்தபின் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள். மறந்த நிலையே சிறந்த நிலையாகும். எதை வேண்டுமானாலும் தெய்வத்தைக் கேட்கலாம் என்ற அன்னை, அத்துடன் நிற்காமல் எதையும் கேட்காமலிருப்பது சிறந்தது என்றார். இவற்றையெல்லாம் எப்படி விளங்கிக்கொள்வது?

முயற்சி என்பது சிறந்தது. முயற்சி செய்து ஒரு காரியத்தைச் சாதிக்க முடியும் என்ற நிலை இருக்கும்வரை முயற்சிக்கு இடம் உண்டு. அந்த முயற்சி தெய்வத்திற்கு விருப்பமானது. தெய்வச் சேவைக்கு நிகரானது. உடலின் முயற்சியை உழைப்பு என்கிறோம். உழைப்புக்கு உலகத்தில் எங்கும் சிறப்புண்டு. அறிவின் முயற்சியை ஆராய்ச்சி என அறிவோம். ஒருவனுடைய ஆராய்ச்சி உலகை உயர்த்தக்கூடியது. கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு. பிரார்த்தனை ஆன்மிக முயற்சி. எனவே முயற்சிகளில் முதன்மை ஆனது.

தன் முயற்சியைப் பூர்த்தி செய்த மனிதன் மீதியை இறைவனுக்குச் சரணம் செய்கிறான். தன் முயற்சியில் குறை வைத்தவனுக்குச் சரணாகதியில் இடம் இல்லை. தன் முயற்சியைப் பூர்த்தி செய்தவனே சரணாகதிக்கு உரியவனாகிறான் என்பதால், சரணாகதியை ஏற்றுக்கொண்டவனுக்கு முயற்சி இனி இல்லை. எனவே ஆன்மிக முயற்சியான பிரார்த்தனையும் இல்லை.

மழை வேண்டும் என்று நினைக்கும் விவசாயி, மழையைத் தேடும்முன் விதையைத் தேடியிருக்க வேண்டும்; உழுவதற்குரிய ஏர், கலப்பையைத் தேட வேண்டும். மழை அவனுடைய முயற்சியிலில்லை. விதை, உழவு, ஏர், கலப்பை, உழைப்பு அவனுடையன. தன் பங்கை எல்லாம் குறைவறச் செய்தபின் அவன் மழைக்காகப் பிரார்த்தனை செய்தால், உடல் உழைப்பையும், அறிவின் பொறுப்பையும் பூர்த்தி செய்தபின் ஆன்மிக முயற்சியான பிரார்த்தனையை அவன் நாடுவதாக அர்த்தம். ஒரு முறை பிரார்த்தனை செய்தால் பெருமழை பெய்யும். தன் கடமையை நிறைவேற்றியதால், விவசாயி பிரார்த்திக்க ஆரம்பிக்கும்முன் மழை தானாகப் பெய்யும்; பிரார்த்தனை தேவை இல்லை. உழைப்பும், பொறுப்பும் உயர்ந்த பிரார்த்தனைகளாகும்.

ஒரு கட்டத்தில் முயற்சி நமக்குரியது. அதில் உயர்ந்த முயற்சி, ஆன்மிக முயற்சியான பிரார்த்தனை. நமக்கு முயற்சிக்குரியது என்ற வரைக்கும் பிரார்த்தனைக்கு இடம் உண்டு. அடுத்த கட்டத்தில் நம் முயற்சி முடிந்துவிட்டால், சரணாகதியை மேற்கொள்கிறோம். அங்கு முயற்சியில்லை. எனவே ஆன்மிக முயற்சியான பிரார்த்தனைக்கும் இடமில்லை. அன்னை இதே கருத்தை யோக மொழியில் சொல்லும் பொழுது “(ego) தான் எனும் உணர்வு உள்ளவரை முயற்சி அவசியம். தான் எனும் உணர்வு அழிந்தபின் முயற்சியும், அதன் வடிவமான பிரார்த்தனையும் தேவையில்லை’’ என்கிறார். தான் அழிந்தபின், மனித முயற்சியை அவனுள் உறையும் தெய்வமே நேரடியாக மேற்கொள்கிறது என்கிறார். முதற்கட்டத்தில் முயற்சியைக் குறைப்பதும், இரண்டாம் கட்டத்தில் முயற்சி எடுப்பதும் சரியில்லை. தவறாகவும் கருதப்படும். நாம் முதற்கட்டத்தை மட்டும் கருதுவதால், அதில் சிறந்த முயற்சியான பிரார்த்தனையை எப்படி மேற்கொள்வது என்பதை மட்டும் இக்கட்டுரையில் கருதுவோம்.

அன்னையிடம் நாம் காணும் முறையின் சிறப்பு ஒன்றை மட்டும் பிரார்த்தனையுடன் தொடர்புள்ளதால் கூறிவிட்டு மேலே போகிறேன். வாழ்க்கையில் ஒரு முயற்சியை மேற்கொண்டால் பிரார்த்தனை என மனிதன் அறிந்தது என்னவென்றால் அந்த முயற்சி உரிய காலத்தில் வெற்றியடைவதே. கல்லூரியில் சேரும் மாணவன் பிரார்த்தனை செய்து அது பலித்தால், அவனது படிப்பு இடையூறின்றி முடிந்து, எதிர்பார்த்த பலனைக் கொடுக்கும். அன்னை முடிவில் கிடைக்க வேண்டிய பலனை முதலிலேயே கொடுத்துவிடுவார்.

பிரார்த்தனை உயர்ந்தது, அற்புதங்களை நிகழ்த்தவல்லது என்பதனால், அதைச் சிறந்த முறையில் பயன்படுத்தும்முன் எதற்கு அதைப் பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம். ஆன்மிகப் பலன்களை அடைவதற்காகப் பயன்படுத்துவதே தலையாயது. தியானம் பலிக்க, சாந்தம் நிலவ, மௌனம் சித்திக்க, பக்குவம் பெற பிரார்த்தனையைப் பயன்படுத்துவதே அதற்குச் சிறப்பாகும். அதற்கு அடுத்தபடியாக, அறிவு வளர, நேர்மையைக் கடைப்பிடிக்க, கற்பனை சிறக்க, புது எண்ணங்கள் மனதில் உதிக்க பிரார்த்தனையைக் கையாளலாம். அடுத்த நிலையில் கலைவளம் பெருக, தைரியம் அதிகமாக, உற்சாகம் வளர பிரார்த்தனை செய்யலாம். கடைசியாக ஆயுள் வளர, ஆரோக்கியம் பெருக பிரார்த்திக்கலாம். ஆன்ம நலம், மன விசாலம், உயிர், உயிர் சிறப்பு ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்ட பிரார்த்தனைகள் இவை. இக்கட்டுரையில் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளையே முக்கியமாகக் கருதி, அதற்குப் பிரார்த்தனையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் எனக் கருதுவதால் மேற்சொன்னவற்றை விளக்காமல் அன்றாட வாழ்க்கையில் அவை இடம் பெறும் அளவுக்கே அவற்றை எடுத்துக்கொள்வோம்.

மனிதனுடைய பிரச்சனைகள் நமக்குப் பரிச்சயமானவை. அவற்றைப் பாகுபாடு செய்து சில உதாரணங்கள் மூலம் விளக்கும்முன் பிரார்த்தனைக்குரிய முறையைக் கருதுவோம்.

பிரார்த்தனைக்கு ஜீவன் உண்டு:

பிரார்த்தனை சிறப்புற வேண்டுமானால் அதற்குரிய ஜீவன் சிறப்புறும் வகையிலும், நம்முடைய ஜீவனோடு பிரார்த்தனையின் ஜீவன் சக்தி வாய்ந்த தொடர்புகொள்ளும் வகையிலும் பிரார்த்தனையை நாட வேண்டும். பிரார்த்தனையின் சிறப்பை நாம் உணர்ந்து, அதன் ஜீவனின் உயர்வை நம் ஜீவன் உணர்ந்தால் முதல் கட்டம் வெற்றி பெறுகிறது. எளிய மொழியில் சொன்னால், “அவருக்குப் பிரார்த்தனை என்றால் உயிர். அது சம்பந்தமான விஷயங்களை லேசாகப் பேசாதே’’ என்று பிறர் சொல்லும்பொழுது நம் ஜீவனில் பிரார்த்தனையை இஷ்ட தெய்வமாக பிரதிஷ்டை செய்துவிட்டோம் என்று பொருள். நம் வாழ்க்கைக்குப் பிரார்த்தனை மையமாகவும், உயிருள்ள மையமாகவும் இருக்க வேண்டும்.

குறிப்பாகத் திருமணம் ஆக வேண்டும், பரீட்சை பாஸாக வேண்டும் என்பன போன்ற பிரார்த்தனைகளை மேற்கொள்வ-தெ ப்படி என்பதைக் கருதுவதன் முன்பு பிரார்த்தனை என்ற முறையை எப்படி அனுஷ்டிப்பது என்பது அவசியம். இதற்குக் காலம், இடம், பிரச்சனை என்று பல அம்சங்களிருந்தாலும், பிரார்த்தனையை மிகவும் உயர்ந்த முறையில் கையாள அதன் ஜீவனுடன் நம் ஜீவன் தொடர்புகொண்ட பின் முதலாவதாகச் செய்ய வேண்டியது பிரார்த்தனைக்கு நம்முள் இடம் அளிப்பதாகும். பிரார்த்தனையின் பலன் இரு விஷயங்களைப் பொறுத்தது. ஒன்று, இறை அருள். மற்றது, நம்முடைய தீவிரம். இறையருள் என்றும் ஒரே நிலையிலுள்ளது. நம் தீவிரத்தின் அளவு நம்மிடம் இருப்பதால், நம் தீவிரத்தை அதிகபட்ச-மு ள்ளதாகச் செய்துகொள்ளுதல் முக்கியம்.

பிரார்த்தனைக்குரிய இலட்சணம்:

பிரார்த்தனையின் தீவிரம் நம்முடைய சக்தி (energy), மனத்தின் நிலை (level of concentration), பிரச்சனையைத் தீர்ப்பதில் உள்ள அக்கறை, பிரச்சனையின் உருவத்தைப் புரிந்து கொள்ளும் அளவு, பிரச்சனையில் நம் பங்கை விலக்க நாம் முன் வருதல் போன்ற பல அம்சங்கள் உள்ளன.

காலையில் நாம் தெம்புடன் இருக்கிறோம். அக்காரணத்தால் அந்த நேரம் பிரார்த்தனைக்குச் சிறந்தது. நமக்குச் சக்தி அதிகமாக இருந்தால் பிரச்சனை எளிதில் தீரும். மனம் எந்த அளவுக்கு ஒரு நிலைப்படுகிறதோ, அந்த அளவுக்குப் பிரச்சனை எளிதில் வழிவிடும். பிரச்சனை தீர்வதில் நமக்கு ஆர்வம் அதிகமாக இருந்தால், அது தீர்வுக்கு உதவும். பிரச்சனை உண்டான வழிவகை நமக்குப் புரியாவிட்டால், அது தீர அது ஒரு தடையாகும். ஏற்பட்ட வகை தெளிவாகத் தெரிந்தால், சுலபமாகத் தீரும். நாமே ஒரு வகையில் பிரச்சனை உருவாகக் காரணமாக இருந்திருந்தால், அதை விலக்கும்வரை பிரச்சனை தீராது. எனவே, பிரச்சனை தீர ஒரு பிரார்த்தனையை மேற்கொள்ளும்முன் அதற்குரிய நேரம் நாம் தெளிவு அதிகமாகப் பெற்ற நேரமாக குறிப்பிட வேண்டும். குறிப்பிட்டபின் கூடியவரை தினமும் அதே நேரத்தில் பிரார்த்தனையைத் தொடங்க வேண்டும். மனம் ஒரு நிலைப்படுதல் அவசியம் என்பதால், பிரார்த்தனையை மேற்கொள்ள சில மணி முன்னர் மனத்தை நிலைப்படுத்தி, பிரச்சனையின் பக்கம் கொண்டுவந்து ஒரு நிலையாக இருக்க நம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டும். பிரச்சனையைத் தீர்க்க நம்முடைய ஆர்வம் எப்படிப்பட்டது என்று சோதனை செய்து, பிரார்த்தனையை ஆரம்பிக்கும்முன் ஆர்வத்தை அதிகபட்சமாக்கிக் கொள்ளுதல் நலம். நமக்குரிய பங்கு என்று ஒன்று அதிலிருந்தால், பிரார்த்தனையை ஆரம்பிக்காமல், நம் பங்கை விலக்க முயன்று, விலக்கிய பின்னரே பிரார்த்தனையைத் தொடங்க வேண்டும்.

இவ்வளவையும் நமக்குத் திருப்தியாகத் தயார் செய்தபின், மனத்தைச் சோதனை செய்தால், பிரார்த்தனை ஆரம்பித்த கொஞ்ச நாழிகைக்கெல்லாம் தானும் பேச ஆரம்பிக்கும். நாம் ஒரு பக்கம் பிரார்த்தனையைச் சொல்லிக்கொண்டிருந்தால், மனம் ஒரு பக்கம் வேறு ஒன்றைச் சொல்ல ஆரம்பிக்கும். மனம் 3 நிமிஷம் கழித்துப் பேச ஆரம்பித்தால், பிரார்த்தனையை 3-ஆம் நிமிஷமே நிறுத்திவிடுதல் நல்லது. அடுத்த முறை பிரார்த்தனை சலனமின்றி 5 அல்லது 6 நிமிஷம் வரை பலிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக, நிமிஷம் நிமிஷமாக அதிகரித்து, பிரார்த்தனை 30 நிமிஷமானால் 30 நிமிஷமும் மனம் நிலையாக இருக்கும்படிக் கொணர்தல் அவசியம். மனத்தில் சலனம் பின்னணிக்குப் போனால் மௌனம் ஏற்பட்டு பிரார்த்தனையைச் சூழ்ந்துகொள்வது தெரியும். மௌனம் வளர நாம் துணையாக இருக்க வேண்டும்.

இவ்வளவு முஸ்தீபுகளையும் நமக்குத் திருப்தியாகச் செய்து, பின்னர் நேரம், இடம் குறிப்பிட்டு பிரார்த்தனையை ஆரம்பித்து, தினமும் தவறாது தொடர்ந்தால், பிரார்த்தனை அதற்குரிய இலட்சணத்துடனிருக்கிறது என்று பொருள்.

அப்படிப்பட்ட பிரார்த்தனை அதற்குரிய பலனைக் கொடுக்கும். அது தீவிரமானதொன்றானால், அதிக பலனை அளிக்கும். பிரார்த்தனையால் மனம் நெகிழ்ந்தால், பலன் உடனே கிடைக்கும். எடுத்த பிரார்த்தனையை ஒரு நாளும் தவறாமல் கைக்கொண்டால் பலன் நிச்சயமாகக் கிடைக்கும். குடும்பத்துப் பிரச்சனையாயிருந்து அனைவரும் பிரார்த்தனை செய்தால், பலன் அபரிமிதமாக இருக்கும். அண்ணனுக்கு வேலை வேண்டும் என்று நாம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும்பொழுது, அண்ணன் தானே பிரார்த்தனை செய்ய முன்வந்தால் பலன் அதிகமாகச் சீக்கிரம் கிடைக்கும்.

பிரார்த்தனையை மேற்கொள்ளும்முன் நாம் செய்யக்கூடியது என்று ஒன்றிருந்தால், அதைப் பூர்த்தி செய்து பின் பிரார்த்தனை செய்தல் நல்லது. இல்லையெனில் பிரார்த்தனைத் திறனில் ஒரு பகுதி அந்தக் குறையை நிறை செய்யச் செலவாகும்.

ஒரு வேலையில் உள்ள எல்லாப் பொறுப்புகளையும் பூரணமாக நிறைவேற்றினால் பலன் கிடைக்கும். அங்குப் பிரார்த்தனை தேவைப்படாது. பிரார்த்தனை தேவைப்பட்ட ஒன்றானாலும், பிரார்த்தனையின்றி பலிக்கும். ஏதாவது ஓர் அம்சம் குறையானால்தான் பிரார்த்தனை தேவைப்படுகிறது. தன் பங்கைச் சரிவர முடித்துவிட்ட விவசாயி, மழை தன் கையில் இல்லாததால் பிரார்த்தனை செய்தால் உடனே மழை பெய்யும். பிரார்த்தனையே செய்யாவிட்டாலும் கடமைகளை நிறைவேற்றிய காரணத்தால் மழை தானே பெய்யும் என முன்னரே குறிப்பிட்டேன்.

ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறோம். நம் பங்கைச் சரிவர முடித்துவிட்டோம்; தலைவர் நேரத்தில் வருவதோ, கூட்டம் நடக்கும் பொழுது மின்சாரம் தடைபடாமலிருப்பதோ, நாம் மேடையில் பேசும்பொழுது பேச்சு நினைவுக்கு வருவதோ, நம் கையில் இல்லை. இதுபோல் ஓர் அம்சம் குறைவுபட்டால், பிரார்த்தனை தேவைப்படுகிறது. நம்மால் முடிந்த அத்தனையும் செய்தபின் நம் கையில் இல்லாத அம்சத்தால் குறை வரக்கூடாது என்று செய்யும் பிரார்த்தனை பூரணமாகப் பலிக்கும். நம் திறன் முடியும் இடத்தில் அன்னை செயல்பட ஆரம்பிக்கிறார். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் நம்மால் தீர்க்க முடியாத பிரச்சனை என்று ஒன்று இல்லை என்பதை அனுபவம் காண்பிக்கும்.

அகவுணர்வும் புற நிகழ்ச்சியும்:

ஒரு காரியத்தில் 10 விஷயங்கள் அடங்கியிருக்கும்பொழுது 9 விஷயங்கள் நம் கையில் இருந்தாலும், பத்தாவது விஷயம் நம் கையில் இல்லாவிட்டால், 9 விஷயங்களிலும் நம்மால் செய்யக் கூடியவற்றை முடித்தபின், அன்னை அந்தப் பத்தாவது விஷயத்தை முடிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் நம்பிக்கையால்தான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. நம்பிக்கையால் ஏற்றுக்கொண்டால் போதும். இருந்தாலும், அதற்கும் ஒரு விளக்கம் கொடுக்கலாம்.

ஆன்மிக அடிப்படையில் வெளி நிகழ்ச்சிகளும், மன நிலையும் ஒன்றே. நம் கண்ணுக்குத் தெரிவது வெளி நிகழ்ச்சி; அகவுணர்வு தெரிவதில்லை. தெரிந்தால் புரிவதில்லை. புற நிகழ்ச்சி அகவுணர்வின் பிரதிபலிப்பு என்பது ஆன்மிகக் கருத்து.

(தொடரும்)

*********



book | by Dr. Radut