Skip to Content

பரமனை நாடும் ஜீவாத்மா

மனிதன் புனர்ஜென்மம் எடுப்பதுண்டு. பிறப்பும், இறப்புமில்லாத ஜீவாத்மாவுக்கும் பகவான் ஸ்ரீஅரவிந்தர் புனர்ஜென்மமளிக்கும் யோகம் பூரணயோகம். பிரபஞ்சம் சிருஷ்டி முழுவதும் தழுவியுள்ளது. உலகம் அதனுள் சிறு பகுதி. பிரபஞ்சம் பிரகிருதி. பிரபஞ்சத்திற்கும் ஆத்மாவுண்டு. அதை Universal soul பிரபஞ்சத்தின் ஆன்மா என்கிறார். அதற்கு முன்னேற்றமும், வளர்ச்சியும் உண்டு. அதற்கடுத்த நிலை பரமாத்மா, பரமன், ஈஸ்வரன், புருஷோத்தமன் என்பது. இந்நிலையை பிரபஞ்சம் நாடுகிறது. பரந்து நிற்கும் பிரகிருதியான பிரபஞ்சம் உயர்ந்துறையும் பரமனை நாட வழியில்லை. பிரகிருதி ஆன்மா மூலமே பரமனை அடையமுடியும். பிரபஞ்சம் பிரபஞ்சத்தின் ஆன்மநிலையை உயர்த்தி பரமனையடையவேண்டும். அதை எட்ட, பிரபஞ்சம் தன்னுள் அடர்ந்து செறிந்த புள்ளிகளை மையங்களாக உருவாக்குகின்றது. அவை ஜீவாத்மாக்கள். ஜீவாத்மா சலனமற்றது, அழிவற்றது, மாற்றமில்லாதது, வளராது. வளராத ஜீவாத்மா பிரபஞ்சத்தின் ஆத்மாவாக வளரவேண்டும். இந்த வளர்ச்சிக்கு முதல் நிபந்தனையாக, ஜீவாத்மா தன்னை ஒரு கூட்டுக்குள் அமைத்துக் கொள்கிறது. பட்டுப்பூச்சி தன்னைச் சுற்றி கூடு அமைப்பதைப்போல் வளராத ஜீவாத்மா, வளரும் தன்மை பெற, தன்னை முதலில் ஒரு கூட்டுக்குள் இருத்தி, பிரபஞ்சத்திலிருந்து பிரிகின்றது. கூட்டுக்குள்ளிருக்கும்வரை ஜீவாத்மா தன்னையறியாத, அறிய முடியாத (unconscious) நிலையிலுள்ளது. பிரகிருதி கூட்டுக்குள் செயல்பட்டுத் தன் அனுபவ சாரத்தை ஆன்மாவாகச் (சைத்தியப் புருஷன்) சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டை உடைக்கிறது. தன்னையறியாத சாட்சிப் புருஷன் தன்னையுணர்ந்த சைத்தியப் புருஷனாகும் நிலையில் கூடு உடைந்து ஜீவாத்மா, பிரபஞ்சம் முழுவதும் பரவுகிறது. இதுவே பிரபஞ்சம், பிரபஞ்சத்தின் ஆத்மா ஆகும் பாதை. இது பூரணயோகத்தின் இரண்டாம் படி. புனர் ஜென்மமெடுத்த ஜீவாத்மா பிரபஞ்சம் முழுவதும் பரவி, பிரபஞ்சத்தின் நிலையை - ஆன்மீக நிலையை - உயர்த்துகிறது. மூன்றாம் படியில் பிரபஞ்சத்தின் ஆத்மா தன்னை ஈஸ்வர நிலைக்குயர்த்தி சத்தியஜீவனாகிறது. அகந்தை என்பது ஆன்மாவின் கூடு.

ஜீவாத்மா சைத்தியப்புருஷனாகி, பிரபஞ்சத்துடன் கலந்து பிரபஞ்சத்தின் ஆத்மாவாகி, சமர்ப்பணம் பூரணமாகும் கட்டத்தில் ஈஸ்வர நிலையை சத்திய ஜீவனாக எட்டிப் பிடிப்பது, (spiritual evolution) ஆத்மாவின் பரிணாம வளர்ச்சி. அதுவே பூரணயோகம். அழிவற்ற ஆத்மாவை வளரச் செய்யும் யோகம் இது.

ஜீவாத்மா உலகில் உடலை ஏற்றுக் கொண்டு, மனத்தாலும் பிராணனாலும் ஜீவனாயிற்று. ஜீவாத்மா, பரமாத்மாவை நாடுவது மோட்சப் பாதை. ஜீவன், பரமாத்மாவை நாட சக்திக்கு சரண் அடைந்து, பிரபஞ்சத்தின் ஆத்மாவாகி, ஈஸ்வர நிலையை எட்டும் வழியில் சத்தியஜீவனாவது பூரணயோகம். மோட்சம் பிறவிச் சுழலிலிருந்து ஜீவாத்மாவை விடுதலைச் செய்கிறது. இதையடைய ஜீவாத்மா தான் ஏற்றுக் கொண்ட உடலையும், மனத்தையும் விட்டகன்று, விடுதலையை நாடுகிறது. இதுவே ஜீவாத்மாவின் சுயநலமான செயலின் கடைசிக் கட்டம் என்கிறார் பகவான். தன் பகுதிகளை - உடல், மனம் - மறந்து தனக்கு விடுதலை தேடும் சுயநலம் மோட்சப்பாதை. ஜீவாத்மா, ஜீவனின் எல்லாப் பகுதிகளையும் அரவணைத்தால் விழிப்புறுகிறது. விழிப்புறும் பொழுது சைத்தியப்புருஷனாகிறது.

மனத்தால் வாழும் உடல் ஆன்மாவால் வாழும் ஜீவனாகும் யோகம் இது. இறைவனையடைய ஆர்வம், அக்னியாகி மனித ஜீவனைத் தகிக்கச் செய்தாலன்றி எந்த யோகத்தையும் மேற்கொள்ள முடியாது. அதற்கும் அவன் அழைப்பு தேவை. தானே சிறந்து பூரிக்கும் ஆன்மா புறத்தீண்டுதலால் விழிப்புறாது. புற உணர்ச்சிக்கே காத்திருந்து செயல்பட்ட சுபாவம், பரம்பொருளும் அதுபோல் வரவேண்டும் என்று காத்திருக்கும். கண்மூடி கூட்டுக்குள்ளிருந்தாலும் நேரம் வரும்வரை காத்திருக்கும் சுபாவம் உண்டு. வீறு கொண்டெழுந்தாலும், அங்குலம் அங்குலமாக முன்னேறினாலும், நட்பால் நடத்தப்பட்டாலும், தத்துவத்தால் தன்னை இழந்தாலும், காதில் விழுந்த குரலே அசரீரியாகி ஆன்மபலன் அளித்தாலும் ஜீவன் சுபாவத்தின் சுவட்டையே பின்பற்றும். சுபாவமும், சூழ்நிலையும் அழைப்பின் அமைப்பை நிர்ணயிக்கும்.

ஜீவாத்மா தன்னையுணர்ந்து, தன் நிலையான தன்மையை மாற்றி, சுயநலமாக மோட்சத்தை நாடாமல், அகந்தையிலிருந்து விடுபட்டு, செயல்களைச் சாட்சியாகப் பின்னின்று கவனிக்காமல், செயல்களின் போக்கை நிர்ணயிக்க முயன்று, பரமாத்மாவின் எதிரே வந்து, தனக்குரிய செயல்களை அவனுக்கு அர்ப்பணித்து, தன்னை நேருக்கு நேர் முழுமையாகச் சமர்ப்பணம் செய்வதை பகவான் சரணாகதி என்கிறார். பரமன் இதை ஏற்கிறான். மற்ற நிலைச் சரணாகதிகள் அவனுக்கு ஏற்புடையனவல்ல. சரணாகதியும், அதற்குரிய சமர்ப்பணமும் ஆன்மாவுக்குரியவை. மனம் இங்குச் செய்யக்கூடியது இல்லை. தடையாக இல்லாமலிருப்பதே அதன் பங்கு. முழுத் திறனையும், முடிவையும் சமர்ப்பணத்திற்குச் சாதகமாக்குவதே அதன் பங்கு. ஆன்மா மனத்தைக் கடந்தது. அதன் செயலும் மனத்தைத் தாண்டியதேயாகும். இதயம் சமர்ப்பணத்தை ஏற்று, முழு மூச்சுடன் செயல்பட்டால் அதன் வேகம் ஜீவனைத் தாண்டிவிடும். தாண்டியநிலையில் சமர்ப்பணம் பலிக்கும். புத்திக்குப் புலப்படுவதற்கு வேகமில்லை. சக்தியில்லை. ஜீவனின் சக்தி முழுவதும் மனத்திலில்லை, இதயத்திலிருக்கிறது. இதயவாயில் திறந்து, சமர்ப்பணத்தை ஜீவன் முழுவதும் ஏற்பதுவே சரணாகதியைப் பூர்த்தி செய்யும்.

எது புரிகிறது என்பது பேச்சில்லை.
எதைச் செய்கிறோம் என்பதே முக்கியம்.
ஆன்மாவின் உயர்வை ஏற்க ஜீவனின் பூரணத்தால் தான் முடியும்.
புத்தியின் தெளிவுக்கு இப்பூரணமில்லை.

ஆன்மாவை அறிவது ஞானம். ஞானம் தெளிந்தால் ஞான யோகம் பலிக்கும். மோட்சம் கிடைக்கும். ஆன்மா விடுதலையுறும். நாம் கொண்ட கொள்கை ஆன்மீக உயர்வு, ஏற்றம். யுகாந்திரக் காலமாக ஆன்மா அசைவற்றது என்ற நிலையை மாற்ற வேண்டும். அதை வளரச் செய்தல் அவசியம். வளர்ந்து, உயர்ந்து, பிரபஞ்சம் முழுவதும் ஆன்மாவாக வியாபித்து, பிரபஞ்சத்தின் குறிக்கோளைப் பூர்த்தி செய்யவேண்டும். அதன்பின் ஈஸ்வர நிலையை சத்தியஜீவனாகப் பெற வேண்டும். இதுவரை யோகத்தில் இல்லாத குறிக்கோள் இது. சிருஷ்டியிலும் இல்லாத ஒன்று. இறைவன் சிருஷ்டிக்காத ஒன்றை மனிதன் இறைவனாகி இனி சிருஷ்டிக்க வேண்டும்.

இதை ஜீவனால்தான் செய்ய முடியும். புத்தி விளக்கம் பெறும். ஜீவன் வாழ்ந்து வளர்வது. ஜீவன் இன்று பிரிந்து நிற்கும் பகுதிகளாக இருக்கின்றது. அதன் எல்லாப் பகுதிகளிலுமுள்ள ஆன்மா வெளிப்பட்டால், ஜீவன் ஒருமையுறும். ஆன்மீக வெளிப்பாட்டால் ஒருமையற்ற ஜீவன், ஜீவாத்மாவைச் சமர்ப்பணம் செய்து, சத்தியஜீவனாகும். பகுதிகளால் செயல்படும் ஜீவன் ஒரு பகுதி செயல்படும்பொழுது, அடுத்தது கலந்து கொள்ளாமலிருக்க முடியும். முழுமையாகச் செயல்படும் ஜீவன், முழுமையாகத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்.

சரணாகதி ஜீவாத்மாவுக்குரியது.
சமர்ப்பணம் முழுமையான முயற்சிக்குரியது.
இதுவரை யோகங்கள் மேற்கொள்ளாத முழுமை இது.

அவன் அருளாலே அவனை நாடுகிறோம். வெளிப்படையாகச் செயல்படுவது அவன் வழக்கமன்று. திரைமறைவில், ஆழ்ந்த மனத்தில் அவன் செயல் அருளாக நம்மை அறியாமல் உருப்பெற்றபடியிருக்கின்றது. இது நிறைவு பெற்ற நேரம் வெளிப்பட்டால், நம்மை மீறி அருள் நம்மை அவனிடம் அழைத்துச் செல்லும். ஜீவனில் பூரணன் பெற்ற பூரணம், மனதில் மாற்றமாக எழுந்தால், அது நிலையானது. நம்மையறியாமல் எண்ணம் அவனை நாடி, எண்ணமே ஆர்வமாகி, சமர்ப்பணமானால், அது அருளின் அரவணைப்பாகும். ஜீவனில் சூரியன் உதித்தது போலாகும். அதற்கு மாற்றமில்லை. ஏற்றத்தாழ்வில்லை. குறையும், தடையும், காலைக் கதிரவனை மறைக்கலாம், அழிக்க முடியாது. இருளால் சூழப்பட்ட இரவு நீங்கி, ஒளியால் நிறையும் பகல் உதயமானது போல், மனித வாழ்வின் போக்கு மாறுகிறது. இறைவனை நோக்கிச் செல்கிறது. இறைவனின் அழைப்பைக் கேட்ட இதயம் இனி அதை மறக்காது. எந்தத் தடையும் சொந்த முயற்சிக்கு குந்தகம் விளைவிப்பதில்லை. உயிரும், உடலும், உணர்வால் ஆட்கொள்ளப்படுகின்றன. நெஞ்சத்தின் உறுதி நெகிழ்ந்த வலிமையாகி, குறுக்கே வரும் குறைபாடுகளை விலக்கித் தன்னை இறைவனில் இறுதியாக இருத்திக் கொள்ளும்.

யோகத்தை ஆரம்பிக்கும் வழி இது ஒன்றுதான் என்பதில்லை. பல பிறவிகளில் ஆன்மா தன்னைத் தயார் செய்து கொள்கிறது.நாம் வாழும் அன்றாட வாழ்வை விட நம் சுபாவம் பெரியது. அது ஜீவனின் பகுதி, பெரும் பகுதியாகும். சந்தர்ப்பத்தால் எழும் இலட்சியங்கள் பல. அருகிலுள்ளவர், அன்புக்குரியவர், ஆன்மீகத்தை விழைபவராக இருக்கலாம். அவருடைய சமர்ப்பணம் பூரணமானது என்பதாலும், அவர் இலட்சியம் உயர்ந்தது என்பதாலும், அவரன்புக்கே வாழ மனம் இன்று விழைவதாலும், மனம் அவரையும், அவர் இலட்சியமான இறைவனையும் நாடுவதுண்டு.

மனம் சுபாவத்தின் பகுதி என்பதால், சுபாவம் மனத்தை விடப் பெரியது என்பதால், மனம் நாடியதை சுபாவம் ஏற்றுக் கொள்ளும் நிர்ப்பந்தமில்லை. சுபாவம் அதை ஏற்க மறுத்தால், மனத்தின் ஆர்வம் வெம்பி உதிரும் பிஞ்சு போலாகும். இதுவே நிலைமை எனில் யோகம் பலிக்கவில்லை என்பர். ஜீவனின் ஆழ்ந்த மையம் குறையுடையது எனில் சுபாவம் வழுவும். சுபாவத்தில் சுருதி கூட்டும் இராகம் எழவில்லை எனில், இறைவன் நம்மை ஆட்கொள்ளவில்லை என்று பொருள். யோகப்பாதையில் எந்த முயற்சியும் வீண் போவதில்லை. படித்த புத்தகம் பரீட்சைக்கு உதவவில்லை என்றாலும், படித்தது வீண் போவதில்லை. வருங்கால ஆன்மீகக் குறிக்கோளை இன்று நிர்ணயிக்கும் சிறு முயற்சியாவதுடன் அது நின்றுவிடும்.

மனத்தாலோ, உணர்வால் விழைவதாலோ, உடலால் உழைப்பை நல்க முன் வருவதாலோ, நல்லது செய்ய முடியும். முடிவான பலன் பெறுதல் இயலாது. தூரத்து நட்சத்திரம் ஆன்மாவைத் தூக்கத்திலிருந்து எழுப்பும். வேணுகானம் உணர்வைப் பயித்தியமாக்கும். அவை முன்னேற்றப் பாதையில் முதல் அடிகளாக அமையும். முடிவை எட்ட முழு ஜீவன் தன்னை உவந்து அர்ப்பணித்து மகிழ வேண்டும். யோகத்தை மேற்கொள்பவன் முழுமையுற்ற மனிதன். யோகமே வாழ்வாக அமைந்தவன் பூரணயோகச் சாதகன். முழுமையான அர்ப்பணம் தன்மையான இலட்சியமானால் முடிவான பலனை நாடும் பாதையில் நாம் நடக்க முடியும்.

வாழ்வில் இருளும் ஒளியும் எதிரெதிராக அணிவகுத்து நிற்கின்றன. இருளின் வலிமை இன்று மிகுதியாக நிற்கிறது. அதனால் வாழ்வு மையம் இருளில் அமைந்துள்ளது. ஒளியும், அதன் மையமும் இனி எய்த வேண்டிய இலட்சிய இலக்காக உள்ளன. வாழ்வின் செயல்கள் இருளை உறுதிப்படுத்துகின்றன. இருளை நோக்கிச் செல்லும் நம் சக்திகளை திசை மாற்றி ஒளியை நோக்கி அனுப்புவது யோகம். மனித வாழ்வு பெரும்பாலும் விலங்கின் வாழ்வு. தேவையால் வாழ்வு நிரம்பிய நிலையில் தேவையே இலட்சியமாகிறது. இலட்சியத்தை நோக்கி நம் சக்திகள் குவிகின்றன. இறைவனை நாடும் சக்திகள் அர்ப்பணம் செய்த மனிதனுடையவை. பிழைத்தால் போதும் என்ற வாழ்வின் தேவைகள் அர்ப்பணம் செய்த வாழ்வுக்கு இன்றும் என்றும் எதிரியாய்த் தோன்றுகிறது. திசை மாறி அருளை நாடுவதே யோகம். அப்பாதை கரடுமுரடானது, பள்ளம், படுகுழியால் நிறைந்தது. நாமும், நம் சுபாவமும், சூழ்நிலையும், பழக்கமும், பண்பும், பிரபஞ்ச வாழ்வின் அமைப்பும், முழு மூச்சுடன் நாம் அருளை நாடுவதைத் தடுக்கின்றன. ஆன்மீகப் புனர்ஜென்மம் அவற்றிற்கு விருப்பமானதன்று. எண்ண அலைகளும், பாசவலைகளும் பின்னிக் கொண்டுள்ள வாழ்வின் மையம் இருளின் மையமாகும். வலையை அறுத்து, அலையை நிறுத்தி, மையத்தை மாற்றி, இருளைப் போக்குவதே யோக இலட்சியம். அகலும் இருள் புது மையத்தை ஒளியால் ஏற்படுத்தி நிலை பெறச் செய்யும். புது உலகம் சமைப்பேன் என்றான் அமரகவி. பிரபஞ்சம் ஒளியில் புதுப் பிறவி எடுக்க வேண்டும் என்பது பூரணயோகம்.

மேல் மனம் புறநிகழ்ச்சியால் நிர்ணயிக்கப்படுகிறது. நம்பிக்கை, புற நிகழ்ச்சியின் அமைப்பை நாடுகிறது. இறைவனையே நாடும் உணர்வு இதயத்தின் எழுச்சியாகும். புறத்தை நாடும் மனம் மாறி இறைவனை நாடும் இதயத்தைப் புது வாழ்வு மையமாகக் கொள்ளுதல் அவசியம். தாழ்ந்த உணர்வுகள் புது மையத்தை ஏற்று உயர்ந்த ஞானத்தால் ஒளிவிடச் சம்மதிப்பதும் அவசியம். சுபாவம் மையத்தை சூழ்ந்து வளருதலும் அத்தியாவசியம்.

கரணங்கள் கனிந்து - ஆன்மா, மனம், உடல், உணர்வு - சமர்ப்பணத்தை பூர்த்திச் செய்தால், இறைவன் பூவுலகிற்கு இறங்கி வந்து ஏற்கும் பாத்திரமாக வாழ்வு மாறும். விதியே கதியென சுழலும் உலகில், இது சாத்தியமானதன்று. புது ஒளி எழுந்து, விதியின் கதியே செல்லும் எண்ணத்தை சுண்டி இழுத்து அதுவன்று உன் பாதை, இனிப் புத்தொளி நோக்கிப் போய் புனர்ஜென்மம் எடுப்பதே உன் இலட்சியம் என்பது சிரமம். எண்ணம் ஏற்பது கடினம். ஏற்று வழிவிட்டால் உணர்வை அழைத்தால், அது கோபாவேசத்தோடு பொங்கி எழும். உடல் உன் குரலைக் காதில் வாங்காது. எனினும், எண்ணத்தின் பிரகாசத்தை இழந்து மனம் ஜோதியின் பிழம்பாவது அவசியம். ஆவேசமாக அலையும் உணர்வு பரந்து விசாலமான நித்திய நிலைக்கு மாறுவது அத்தியாவசியம். கூக்குரலிடும் விலங்கெனும் உடல், உள்ளொளிப் பெருக்கால் ஜொலிக்கும் கருவியாய், சுடர்விடும் ஒளிவிளக்காய் இறைவனுக்கு ஊழியம் செய்ய முன் வருதல் தவிர்க்க முடியாத முன் நிபந்தனை.

முடியாத சிரமத்தை மனம் வேண்டாத விரதமென விவரித்து, ஒதுக்கியது. இறைவனை எதிர்க்கும் அசுரனை மனம் கற்பனை செய்தது. அசுரனை விட்டகல வேண்டும் என தனக்குத் தானே கூறியது. கூறியது நம்புதலுக்குரியது. மனம் அதை நம்பவும் செய்தது. அசுரனை ஒதுக்கி, அவன் செயல்களை நசுக்கி, இறைவனை நாடும் தவத்தைத் தவசிகள் மேற்கொண்டது ஆச்சரியமில்லை.

எதிரியோ, எதிரான சந்தர்ப்பங்களோ வாழ்க்கையை ஆக்ரமித்துக் கொண்டிருந்தால், அதிலிருந்து மீறுவது சிரமம். கொஞ்சம் கொஞ்சமாக விடுபட முயன்றால், முயற்சி ஒரு புறம் வெற்றி பெறும்பொழுது அடுத்த பக்கம் தளர்ச்சி ஏற்பட்டு, தோல்வி ஏற்படும். திடீரென விடுபட முயன்றால் வெற்றி கிடைக்கும். வாழ்வை விலக்கி, வெற்றி பெற்ற தவசிகள் அநேகர். எந்த வாழ்வு எதிரியின் ஆக்ரமிப்புக்குள்ளிருக்கிறதோ அதை ஏற்பது பூரணயோகம். எதிரியையும், எதிர்ப்பையும் ஏற்று அதை மாற்ற முயல்வதே இவ்யோகப்பாதை. சிக்கலைக் கண்டு விலக அனுமதியில்லை. வாழ்வை ஏற்றால் சிக்கல் அவிழாது; மேலும் சிக்கலாகும். தூர இருந்து மிரட்டிய வாழ்வு நாம் அதை ஏற்றவுடன் ஆட்கொண்டு ஆட்டிப் படைக்கும். இருப்பினும் யோகம் பலிக்கும். ஒரு கட்டத்திற்குப் பின், சிரமம் உதவியாகும். எதிரியான வாழ்வு துணைவனாகும். தீவிரமாக, விழிப்போடு முழுமையை நாடும் சாதனையேற்ற வாழ்வு எதிர்ப்பை விட்டுத் தம் சாதனையைச் சாதிக்க ஆரம்பிக்கும். அசுரனின் பிடியிலிருந்து பிடுங்கிய ஆயுதம் உலகையும், பூமாதேவியையும் உயிர்ப்பிக்கும் மார்க்கமாகும். முழுமையை நாடுபவன் குறுக்கு வழியில் போக முடியாது. நம்மையும், வாழ்வையும் அசுரனிடமிருந்து ஆண்டவனுக்காக வெல்லும் பாதை இது. நம் ஜீவனையும், ஜீவியத்தையும் அவனிடம் ஒப்படைக்கும் உயரிய யோகம் பூரணயோகம். வாழ்வை அழித்து, ஆன்ம விடுதலைபெறும் நோக்கம் நமக்குரியதன்று. பரப்பிரம்மத்தையே அடையலாம் எனினும், அது பாமரனுக்கும் எட்டும் வகையில் இருந்தாலன்றி நாம் அதை ஏற்கப் போவதில்லை. சொர்க்கவாழ்வு முழுச் சிறப்புடையதன்று. சொர்க்கத்திற்கே அது சிறப்பு. பூலோகச் சொர்க்கம் பூமா தேவியின் பூரணம். பரமபதம் பாமர வாழ்வில் பரிசாகக் கிடைக்கப் பாடுபடுவது நம் இலட்சியம்.

மனிதன் பல பகுதிகளாலானவன் என்பது மட்டுமன்று. ஒவ்வொரு பகுதியும், தனித்தியங்கும் தன்மையுடையது. மற்ற பகுதியை நம்பி வாழாதது. மற்றதுடன் ஒத்துவர வேண்டும் என்ற நிர்ப்பந்தமில்லாதது. எல்லா இலாக்காக்களும் ஒரே சர்க்காரைச் சேர்ந்தவை எனினும், எந்த இலாக்காவும் அடுத்ததுடன் இணைந்து செயல்பட முடியாது. அத்துடன் மனிதன், மனிதனாக மட்டுமல்லாமல், பிரபஞ்சத்தின் பகுதியாக இருப்பதால், அவன் எண்ணம் அவனுக்கு வெளியே யார் மனதிலோ உற்பத்தியாவதால், தன்னுடைய விடுதலையை மட்டும் அவன் தனித்துப் பெறும் யோகப்பாதை பூரண யோகத்திற்குப் பயன்படாது. ஆற்றொழுக்காகப் போன தனி மனிதவாழ்வு, யோகத்தை ஆரம்பித்தவுடன் பிரபஞ்சத்தையோ, பிரகிருதியையோ எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. குடும்பம் நடத்துபவன் உலகை நினைப்பதில்லை. (Industry) தொழில் நடத்துபவனைச் சட்டம், சரக்கு, மார்க்கெட், பாஷன், அத்தனையும் பாதிக்கும், ஏனெனில் தொழில் உலகில் ஒரு பகுதி. யோகத்தை மேற்கொண்டவுடன் தனி மனிதன் தன்னைப் பிரகிருதியின் பாகமாகக் காண்கிறான். மனத்தில் சிக்கல், மனிதனின் பல்வேறுப்பட்ட திறமைகளின் மோதலால் ஏற்படும் முரண்பாடுகள், ஆர்வமாக இயற்கை எழுப்பும் அளவில்லாத குழப்பம், மனிதன் முன் தீர்வு காண வேண்டி எழுகிறது. எளிய மனிதனின் வாழ்வு மந்தத்தை மகிமையாகக் கருதுவது. ஆன்மாவின் ஆழமோ, திரை மறைவில் விரியும் திசை போன்ற பரப்போ, அவனறிந்த அறிவுக் களஞ்சியத்தை எட்டியது இல்லை. எளிய வாழ்வு அறியாமையின் அற்புதம். சின்னம்சிறு ஆசைகள் பல, தானே எழும் சிற்றறிவு, கலையுணர்வு, அர்த்தமற்ற கருத்தை இலட்சியமாக்கும் மனநிலை, நோய், சலிப்பும், சந்தோஷமும் மாறிவரும் வாழ்வின் அலைகள் ஒழுங்கான குழப்பமாக அவன் வாழ்வை உருவாக்குகின்றன. நாகரீகம் அடைந்த மனிதன் மனத்தளவில் அநாகரீகமாக இருக்கிறான். யோகத்தால், ஜீவனில் ஆழ்ந்தபொழுது நாம் காணும் காட்டுமிராண்டியை வென்று அகற்ற வேண்டும் என அறிய முடிகிறது.

பிறரை நம்பி வாழமாட்டேன். எனக்கு எவரும் தேவையில்லை. நான் சுதந்திரப் பறவை. என்னை எவரும் எதுவும் கேட்கக்கூடாது, நான் வணங்காமுடி மன்னன், என்று நினைப்பவர்களை, பேசுபவர்களை நாம் காண்பதுண்டு. பத்து நாள் படுக்கையாகப் படுத்துவிட்டால், பிறர் உதவியில்லாமல் நாள் போகாது, ஆனால் உயிர் போகும் என்ற அனுபவம் வரும். அதையும் தாண்டி நம் உணவு, உடை, வீடு, பணம், காரியங்கள் பூர்த்தியாக நாம் ஆயிரம் பேரை நம்பியுள்ளோம் எனச் சற்றுச் சிந்தனை செய்தால் தெரியும். நாம் விடும் மூச்சு, நம் உள்ளே செல்லும் மூச்சுக்காற்று பிறருக்குள்ளே சென்று வந்தது, ஆற்றில் நீச்சலடித்தால் ஆயிரம் பேர் குளித்த நீர் அது. நாம் பேசும் பேச்சு அனைவரும் நமக்களித்தது எனவும் தெரியவரும். எண்ணங்கள் நமது என நாம் நினைப்பவை நம்முடையனவல்ல, பிறர் மனதில், உலகில், பிரபஞ்சத்தில் எழுபவை, நம் மனம் வழியாகவும் நுழைந்து செல்கிறது. நாம் என்பது ஒரு தோற்றம், உண்மையன்று. நாம் ஒருவரல்லர். நம்முள் பல (personality) மனிதர்கள் உண்டு. அவர்கள் பல திசைகளில் போக முயல்கிறார்கள். மாட்டுச் சந்தை போன்ற மனத்தில் மறுமலர்ச்சியை எழுப்ப நாம் முயல்கிறோம் என்பதை யோகம் நமக்குணர்த்தும். இவற்றையெல்லாம் தாண்டி இயற்கையின் இரகஸ்யம் எது என நாம் காணவேண்டும். அதிலிருந்து ஒளிமயமான ஒழுங்கை ஏற்படுத்த வேண்டும் என்பதே நம் இலட்சியம்.

எதுவுமே முடியாது, எவராலும் முடியும் என்று நினைக்க முடியாது, எக்காலத்திலும் இயலாது என்பது ஆன்மவிடுதலையை நாடியவன் நிலை. மனம் தெளிவின்றிச் செயல்பட்ட காலம். பிராணன் என்றுமே பிடாரி. இருளை உற்பத்தி செய்வதே உடல் எனும்படி காயத்தின் அமைப்பு. ஆன்மாவைக் கண்டவரில்லை. அப்படியொன்று இருப்பதாக அறிந்தவரில்லை. இவற்றையெல்லாம் தாண்டி ஏதோ ஒன்றிருப்பதாகக் கொண்டு அதைத் தேடும் நேரம். ஆனால் அதை இவற்றின் மூலமே அடையமுடியும் என்பது நிலை. ஜீவனுள்ளே போட்டி, எதிர்ப்பு, கடும் போர். மனம் பிராணனை எதிர்க்கிறது. பிராணன் மனத்திற்குப் பரம எதிரி. உடலருகே போனால் சேற்றில் அமிழ்ந்தவனைக் காப்பாற்றப் போனவன் தன்னையும் இழந்ததைப்போல் நம்மை இழக்கலாம் என்ற நிலை. நாம் போவது மனிதனைக் காப்பாற்ற அன்று. சேற்றைக் காப்பாற்ற. சேற்றைச் சந்தனமாக மாற்ற நாம் முனைகிறோம். அதனருகே சென்றவர்கள் அழிந்து மறைவதால் எவரும் அங்கு வருவதில்லை. ஹடயோகி அதனையும் வென்று, அதனுள் உள்ள அன்னமயப்புருஷனைக் கண்டான். எந்த ரிஷியும் மனித சுபாவத்தை வெல்ல முயலவில்லை. பரமஹம்சர் நாம் இறைவனை அறிய முயல்வதை, "உப்பாலான பொம்மை கடலாழத்தை காலால் கணிக்க முயன்றதுபோன்றது" என்கிறார்.

மனிதன் வீரன். எந்த எதிர்ப்பைக் கண்டும் அவன் சளைத்தது இல்லை. அவன் இறைவனை நாடி எப்படியும் சாதிக்க வேண்டும் என்றபொழுது, எதிர்ப்பு ஏராளமாக இருக்கும். ஒரு கரணத்தைப் பற்றுக்கோடாக்கி, தன் இலட்சியத்தைச் சாதித்தான். சிறையில் உள்ளவனுக்குத் தப்பிக்க வேண்டும். எந்தக் கதவு வழியே தப்பிக்கலாம் என்பது அவன் பிரச்சினையன்று. தப்பித்தால் பெருவெளி. எந்தக் கதவும் உதவும். கிடைத்த கதவே இனிக்கும் விடுதலை தரும். சிறைப்பட்டவன் சிறைக் கைதிகளைத் திருத்தி மனிதனாக்கும் முயற்சியை மேற்கொள்வதில்லை. அது தோன்றுவதும் இல்லை. பூரண யோகம் சிறையையே உலகமாக அறிந்து, சிறப்புக்குரிய இடம் சிறையெனக் கணித்து, தப்பித்துப் போக விழையாமல், கைதிகளை திருவுருமாற்றி, சிறப்பான இடமாக மாற்ற முனைகிறது.

ஞானிகளும், பக்தர்களும், கர்மவீரர்களும், ஹடயோகிகளும், விடுதலையை நாடினர். விடுதலையின் வாயில் ஜீவாத்மா எனவும் கண்டனர். அதன் இலக்கு பரமாத்மா என்றும் புரிந்தது. எந்தப் புருஷனும் - அன்னமயப்புருஷன், பிராணமயப்புருஷன், மனோமயப்புருஷன், சைத்தியப்புருஷன் - வாயிலைத் திறப்பான் என அறிந்தனர். அறிவு ஞானமாயிற்று. உலகத்தை மறந்து உள்ளொளியில் கலந்து, உள்ளம் கனிந்து பக்குவமடையும்வரை நிஷ்டையிலாரம்பித்து, சமாதியை நாடினர். நாடியவர், நாடியதை அடைந்தனர். பூரணயோகச் சாதகனுக்குப் பூரணம் தேவைப்படுவதால், அவனுக்கு இது எதுவும் பயன்படாது.

தானும் தன் கரணங்களும் தாங்க முடியாத சுமை என்றறிந்த யோகி, பிரபஞ்சம் தன்னுள் இருப்பதைக் கண்டு, பிரபஞ்சத்தை உள்ளும், புறமும் வெல்ல நினைப்பது, வானத்தைக் கையால் எட்டிப் பிடிக்க முயல்வது போன்றது. பூமியைத் தூக்க முயன்றதாகக் கேள்விப்பட்டோம். அதையே இலக்காகக் கொள்வது பூரணயோகம். தன்னையறியும் மனிதனில்லை என்ற உலகில் தன்னை வெல்லும் முயற்சி எல்லைக்கு அப்பாற்பட்டது. தன்னுள் உள்ள பிரபஞ்சத்தை வெல்ல நினைவு எழுவதில்லை. அதைப் புறத்திலும் வென்று, அகத்தோடு இணைத்து, பூரணம் பெறும் இலட்சியத்தை இதுவரை நினைத்தவர் ஒருவரே; அவரே ஆதியான இறைவன். இறைவனின் திருவுள்ளத்தைத் தித்திக்கப் பூர்த்தி செய்து பூர்த்தி செய்யும் கருவியானதால் திளைப்பது சாதகன் மேற்கொண்ட பாதை.

உலகம் பெரியது. உலகத்தை வெல்ல முயன்றவரில்லை. நினைத்தவர் உண்டா எனத் தெரியவில்லை. பிரபஞ்சத்தை இறைவனுக்காக வெல்லும் முயற்சியை இலட்சியமாக நினைக்க மனிதனால் முடியாது. அந்நினைவு இறைவனுக்கே எழும். இறைவனும் மனிதனானால், மனிதச் சட்டத்திற்கு உட்பட்டே சாதிக்க வேண்டும். ஆனால், மனிதனான இறைவனுக்கு, இறைவனால் எளிதில் முடியும் காரியம் எளிதில் முடியாது. மனிதத் திறமையால் இறைவன் நினைவைப் பூர்த்திச் செய்ய மனிதன் இறைவனாக வேண்டும்.

மௌனத்தை நாடும் தபஸ்வியை சிந்தனை சிதறடிக்கிறது. தவத்தால் நிஷ்டையை நாடினால் உணர்ச்சி கிளர்ச்சியாகும். பக்தனுக்குப் பாசம் தடையாக எழும். ஆசை அனைவருக்கும் உண்டு. மந்தமான உடலை எவராலும் சமாளிக்கமுடிவதில்லை. அவற்றையும் இந்திய ரிஷிகள் சமாளித்துள்ளார்கள். விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்வதற்குப் பரிசோதனைச் சாலைகளை ஏற்படுத்தினர். ரிஷிகள் உடலையே ஆராய்ச்சி நிலையமாக்கினார்கள். உயிரையே சோதனைக்குள்ளாக்கினர். உடலைத் தூய்மைப்படுத்த பிராணாயாமத்தைக் கண்டு பிடித்தனர். தியானம் மனத்தைச் சுத்தப்படுத்துவது. இவற்றுள் ஒன்றை மேற்கொள்ளத் தேவைப்படும் திறன் அளவிறந்தது என்பதால், அதைச் சாதிக்கவே அவர்கள் முனைந்தார்கள். ஒவ்வொருவர் ஒவ்வொன்றில் வெற்றி பெற்றனர். ஞானி, பக்தன், ஹடயோகி ஆகியவர்கள் யோகச் சாதனையில் வெற்றி பெற்று வீரர்கள் ஆனார்கள்.

பூரணயோகத்திற்கு இந்த மலை போன்ற சாதனையும் பயன்படாது. அவர்கள் அனைவரும் ஒரு கரணத்தால் செயல்படுகிறார்கள். பூரணயோகிக்கு அனைத்துக் கரணங்களும் தேவை. ஒரே சமயத்திலும் தேவை. நம்பிக்கையால் செயல்படுபவன் பக்தன். ஞானத்தால் செயல்படுபவன் ஞானி. ஞானம் நம்பிக்கைக்கு எதிரி. சிந்தனையற்ற நம்பிக்கை எழும் ஞானம் பூரணத்தைத் தேடத் தேவைப்படும். வலிமை வீரனுக்குரியது. வீரம் எதிரியை நிர்மூலமாக்கும். அன்பு எதிரிக்கும் அன்பு செலுத்தும். உலகுக்கு அன்பை அளித்த அவதாரம் இயேசு பெருமான். எதிரிகள் அவரை சிலுவையில் அறைந்தனர். எதிரியின் எதிர்ப்பை முறியடித்து வெல்லும் இதமான அன்பு எழ வீரமும், அன்பும் கலந்து ஆன்மாவின் ஆழத்திலிருந்து ஜீவனெங்கும் எழவேண்டும். அவதாரப் புருஷர்களால் அன்று முடியாததைச் சாமானியச் சாதகன் இன்று மேற்கொள்ள வேண்டும் என்பது பூரணத்தை நாடுபவனுக்குத் தேவை. அதற்குரிய முறை இன்றுவரை உலகம் மேற்கொள்ளாதது. கரணங்கள் சேர வேண்டும் என நினைத்தால் உள்ளே யுகப் புரட்சி எழும். ஞானயோகம், ராஜயோகம் தேடிய இலட்சியங்களைக் கடந்து முடிவான இலட்சியத்தை முழுமையாக அடைய பூரணயோகிக்குத் தேவையான தியானம் வேறு.

ஒரே கரணத்தை நாடாமல் எல்லாக் கரணங்களும் அடங்கிய ஜீவனை மையமாகக் கொண்ட தியானம் இத்திறனை அவனுக்கு அளிக்கும். ஊழிக்கூத்தான உள்ளுணர்வின் களேபரத்தை அடக்கி அமைதியின் அன்புருவாக்க வேண்டும். உடலின் கரிய இருளை சத்தியத்தின் ஜீவனுள்ள ஜோதியாக்க வேண்டும். கரணங்களைத் திருவுருமாற்றிச் சேர்க்கவேண்டும். அவற்றின் பூரணம் முழுமை பெறுதல் அவசியம். ஓரிழையோ, ஒரு மணியோ தவறக்கூடாது. குறையின் சாயல் எழக்கூடாது. பரந்த முழுமையான தியானநிலை கடினமானது. கடினமே கடைசி இலட்சியம்.

தியானமே யோகங்களுக்கு அடிப்படை. ஜீவனுடைய முழுமையும் தன்னைச் சமர்ப்பணம் செய்யும் யோகம் பூரணயோகம். எனவே ஜீவனுக்குரிய ஜீவியம் தியானத்தின் பங்கை இங்கு நிறைவேற்ற வேண்டும். பிரம்மம் என்பது சர்வத்தையும் தன்னுள் அடக்கியது. சர்வமும் அடங்கிய பின் பிறிதொன்றில்லை. புறம் என ஒன்று இல்லாதது பிரம்மம். சாதகனின் ஜீவியம் பிரம்மத்தை நாடி அதனுடன் இணைய ஜீவியம் விழித்து, ஜீவனுக்குப் பரந்து மலரும் பூரண விழிப்பை நல்கவேண்டும். பரந்து மலர்வது பூரணம் பெறும் நிலையில், ஜீவனில் புதைந்துள்ள பிரம்மம் விழித்தெழும். அகத்தின் பிரம்மம், புறத்தில் பிரம்மத்தைத் தழுவும் நிலையே சமர்ப்பணத்திற்கு உரியது. தியானத்தில் மனத்தின் ஒரு பகுதியான எண்ணம் ஞானத்தை நாடுவது தியானம். மனம் உள்பட எல்லாக் கரணங்களும் சேர்ந்த ஜீவனின் விழிப்பே நாம் நாடுவது. விழிப்பின் திறன் சாதனையின் பலனை நிர்ணயிக்கும்.

தன்னையறிந்தின்பமுறுதலும், தன்னைத் தாண்டி இறைவனை நாடுதலும் இலட்சியங்களாக எழுந்த காலத்து, மனிதன் இயற்கையை வெல்ல முயன்று, ஆசையை அடக்க முன் வந்தான். மனம், உணர்வை விட உயர்ந்தது என்பதால், ஆசையெனும் உணர்வு மனத்திற்குக் கட்டுப்படும். ஆசை இயற்கையின் அடித்தளத்திலுள்ளது. பூரணயோகமும் இயற்கையை வெல்ல முனைகிறது எனினும், இயற்கையின் உச்சநிலையில் அதை வென்று திருவுருமாற்ற முயல்கிறது. வானை எட்டிப் பிடிப்பது, பூமியைக் கைகளால் தூக்க முயல்வது போன்றது இம்முயற்சி. ஆசையை அடக்குவது மனம். அதையும் தாண்டிய நிலையிலும் மனம் உண்டு. ஆழ்ந்து அவனுள் உறையும் ஆன்மாவான சைத்தியப்புருஷனும் இந்த யோகத்தின் கருவிகளாதலால், இறைவன் உயர்ந்த மனத்தாலும், உள்ளுறை ஆன்மாவாலும் மனிதனை எட்டித் தொடுகிறான், தொட்டிழுக்கின்றான். அவனது தீண்டுதல் வேணுகானம்; அவன் அழைப்பே நம்முள் எழும் அழைப்பாகும்.

ஜீவனுள்ள சமர்ப்பணம் ஜீவாத்மாவுக்கு விடுதலையளிக்கும். நான் இறைவனைக் கண்டதில்லையே? எப்படி அவரை நினைப்பது? நினைவுக்கெட்டாத ஒன்றை நினைப்பதெப்படி என்ற எண்ணம், நமக்கு அவன் அழைப்பில்லை எனப் பொருள். அழைப்பிருந்தால் அறிவு தேவையில்லை. நம்பிக்கையால் செயல்பட முடியாதவனுக்கு யோகமில்லை. சமர்ப்பணமில்லை, சரணாகதி கிடையாது. ஜடமான காயத்தை ஜீவனுள்ள மலராகச் சமர்ப்பணம் செய்யவில்லை எனில் அதை இறைவன் ஏற்கப் போவதில்லை, அது இருந்தால், அவன் இறைவனுக்கு விலக்கில்லை. மார்க்கமோ, மதமோ, முறையோ, கரணமோ, கர்மமோ, இடையில் நிற்காது. அவற்றை ஒதுக்கி இறைவன், சமர்ப்பணத்தை ஏற்றுச் சாதகனை மகிழ்விக்கிறான்.

மனமே கரணங்களின் தலைவன். மனத்தின் எண்ணம் பெரிதானால், சாதனை பெரிதாகும். அவனன்றி ஓரணுவும் அசையாது என்பதையும் மாற்றி அணுவும் அவனே, அசைவும் அவனே எனக் கொள்வது சாலச் சிறந்தது. உயர்ந்த எண்ணத்திற்கு உணர்வுண்டு. உணரும் எண்ணத்திற்கு ஜீவனுண்டு. அதற்குத் திருஷ்டியும் எழும். அத்திருஷ்டியில் இறைவன் காட்சியளிப்பான். ஜீவனுள்ள உணர்ச்சிமயமான எண்ணம் திருஷ்டி பெற்றால் அது அக்னியாக எழுந்து அன்பாக மாறும்.

மனிதன் உயர்ந்தவனில்லை. மனம் தாழ்ந்தது. செயல் அனைத்திலும் தாழ்ந்த எண்ணம் செறிந்து நிற்கும். எதைக் கண்டு கடந்த கால ஞானிகள் அஞ்சினார்களோ அவை நம்மைச் சூழ்ந்து கொள்ளும். அவர் அஞ்சி விலகியதை, விரும்பி ஏற்று திருவுருமாற்றம் செய்வதே சாதனை. ஆசையை ஏற்போம், அது ஆசைப்படுவதை மாற்றுவோம். ஆசையை அழிக்காமல், இறைவனை நாட, ஆசையைக் கருவியாக்குவோம். இறைவனை நாடும் ஆசையும் அதன் தாழ்ந்த தன்மையை இழந்து, தூய்மைப்பட்டு, திருவுருமாறி, அன்பாகும்.

எண்ணம் நாடுவதை, உணர்வும் நாட வேண்டும். அதைச் செயலாக்க முனைய வேண்டும். முனைப்பே முழுமையாக வேண்டும். செயல், இறைவன் செயலானால், ஆசை அழிந்து, அகந்தை கரையும். அகந்தையைக் கரைத்து, ஆசையை அழித்து, செயலை இறைவன் ஏற்கும் செயலாக்குவது இப்பாதைக்குரிய பாணி.

பூரணச் சரணாகதியை நாடுபவர் பூரணச் சமர்ப்பணத்தை ஏற்க வேண்டும். அவனுடைய ஸ்பர்சம் ஜீவனை அசைத்தால், அது மட்டுமே அசைவுக்கு அஸ்திவாரமானால், சமர்ப்பணம் பூரணம் பெறுகிறது. வாழ்வு வளர்ந்து வளர்ச்சியால் மலர்ந்து சமர்ப்பணம் சரணாகதியானால் இது நடைபெறும்.

கண் பார்ப்பது காட்சி. செவி கேட்பது ஒலி. அறிவுக்குப் புலப்படுவது ஞானம். சமர்ப்பணம் தேடுவது இறைவனுடைய காட்சி, கேட்க விழைவது அவன் குரல், அறிய முனைவது ஆன்மீக ஞானம். சமர்ப்பணம் பலிக்கும் நேரம் செயல் முதிர்ந்து, வாழ்வு கனிந்து, ஞானம் ஒளிவீசும் நேரம். முதிர்ந்த செயலாலும், கனிந்த வாழ்வாலும், ஜோதிமயமான ஞானத்தாலும் ஜீவன் ஜீவியமாகி இறைவனைத் தன்னுள்ளே காண்கிறான். அகவுணர்வு புறநிகழ்ச்சியாக இறைவன் அனைவரிலும் காட்சியளிக்கிறான். ஜீவாத்மாவையும், பிரபஞ்சத்தின் ஆத்மாவையும் கண்டவனுக்கு பரமாத்மாவின் தரிசனமும் எட்டுகிறது. கீதை விளக்கிய மூன்று புருஷர்களையும் சமர்ப்பணத்தால் காண்பது சித்தி. பூரண யோகத்திற்குரிய சித்தியாகும் இது. இதுவே முதற்சித்தியாகும்.

இதையடையும் கட்டம் இரண்டாகும்.

1. தாழ்ந்த மனித குணங்களை உயர்ந்த இறைச்சக்தியால் யோகத்திற்குரிய கருவியாக்குதல்.

2. சரணாகதி பூரணமானால், சக்தி பிரவாகமாகப் பாய்ந்து தாழ்ந்ததைத் திருவுருமாற்றும்.

சாதகன் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி மூன்று நிலைகளில் முடிவான பலனைப் பெறுகிறான்.

ஆரம்பநிலையில் தியானம் ஜீவனின் எல்லாக் கரணங்களையும் தன்னுட் கொள்ளும்படி முயன்று வெற்றி பெற்றால், பொய்ம்மையை அழித்து முதற்கட்டத்தை வெற்றிகரமாகத் தாண்டுகிறான். கரணங்கள் அனைத்தும் தியானத்தால் சூழப்பட்டால், ஜீவன் தன் அலைச்சலை இழந்து, அமைதியுற்று, சலனத்தை இழந்து நிற்கும். அமைதியுற்ற ஜீவன் அவனுக்குரிய பாண்டம். அமைதி ஆண்டவனை அழைக்கும். ஆண்டவனின் சக்தி அபரிமிதமாக அவனுள் பாய்ந்து விளக்கமாக அருள் செயல்படும் நிலையை நிரந்தரமாக்குகிறது. இதயத்துள் வாழும் இறைவன் மொட்டு மலர்வதைப் போல் மலரும்படி மனிதவாழ்வு பொய்ம்மையாலும், ஓய்வற்ற சலனத்தாலும் அலையாக எழுந்தபடி இருப்பதால் மொட்டு மலர்வது இல்லை. சலனம் அழிந்து, பொய்ம்மை கரைந்த நிலை இறைவனுக்கு உகந்த நிலையாதலால், இதயத்தின் மொட்டு இறைவன் எனும் மலராக மணம் வீசி மகிழ்கிறது.

*****



book | by Dr. Radut