Skip to Content

4. சிந்தனை மணிகள்

தம் பூரண யோக சாரத்தை 547 மணிகளாக பகவான் ஸ்ரீ அரவிந்தர் தாம் புதுவைக்கு வந்த புதிதில் எழுதினார். ஞானம், கர்மம், பக்தி என்ற தலைப்புகளில் எழுதப்பட்டவை அவை. சாதாரண மனிதனுடைய கருத்துக்குப் புறம்பான வழியில் இறைவன் செயல்படுகிறான் என்பதை விளக்குபவை அவை. இறைவனை உயர்ந்த புருஷனாகக் கருதுவது நம் இயல்பு. உயர்ந்த புருஷனையும், தாழ்ந்த மனிதனையும் படைத்தவன் இறைவன். அவரிருவரும் இறைவனே என்பது பகவான் ஸ்ரீ அரவிந்தர் அனுபவம். அதை விளக்கும் யோகானுபவம் அவர் எழுதிய 547 மணிகள். சுமார் 25 வருஷங்களுக்கு முன்னால் திரு ரா. ஸ்ரீ. தேசிகன் அவற்றைச் "சிந்தனை மணிகள்'' என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அன்னை நூற்றாண்டு வெளியீட்டில் 10ஆவது வால்யூமில் இந்தச் சிந்தனை மணிகளுக்கு அன்னை தனித்தனியே விளக்கம் அளித்துள்ளார்.

ஆஸ்திகன் நல்லவன்; நாஸ்திகன் கெட்டவன் என்பது நம் கருத்து. நாஸ்திகனுக்குள்ள தெய்வ நம்பிக்கை ஆஸ்திகனுடைய தெய்வ நம்பிக்கையைவிட உயர்ந்தது என்பது ஆன்மிக உண்மை. புண்ணியத்தை நாம் வரவேற்கின்றோம். பாவத்தை வெறுக்கின்றோம். அவை இரண்டும் ஆன்மிகப் பாதையிலுள்ள இரண்டு கட்டங்கள் என்பது சித்தி பெற்றவர்களுடைய விளக்கம்.

அதிர்ஷ்டம் ஆண்டவனின் பரிசு, துர் அதிர்ஷ்டம் இறைவனின் தண்டனை என்ற பொதுக்கருத்தை மாற்றி, துரதிர்ஷ்டம் ஆண்டவனுடைய உயர்ந்த பரிசு என்று விளக்குவது யோக சித்தி. பிருந்தாவனத்தில் கிருஷ்ண பரமாத்மா லீலைகள் புரிந்தார் என்பதால் அங்கு யாத்திரை போக விழைவது பக்தனுள்ளம். கிருஷ்ண பரமாத்மாவுடைய பிருந்தாவனம் ஆன்மிக யாத்திரையின் எத்தனையாவது கட்டம் என்று விளக்குவது ஞானம். தேவன் வழிபாட்டுக்குரியவன். அசுரன் கொடூரமானவன் என்பது நம் சட்டம். அசுரன், அதி தீவிரமான பக்தியால் இறைவனைச் சீக்கிரமாக அடைய முயல்பவன் என்பது ஸ்ரீ அரவிந்தர் விளக்கம்.

இந்த 547 மணிகள் விளக்கும் கருத்துகள் ஏராளம். அவற்றுள் பெரும்பாலானவற்றைக் குறிப்பிடுகிறேன்.

ஞானம்; சித்திபெறும் ஆன்மிக ஆர்வம்; பகுத்தறிவு; ஞானமும், மடமையும்; இறைவனின் பரிசு; விவேகம்; மனத்திரை; தந்திரவாதிகள்; ஆன்மா; அழியாமை; இறைவன்; பயங்கரக் காட்சிகள்; இன்றைய அறிவாளி; அகந்தை; தற்செயலாக நடப்பது; விகாரம்; விகாரத்தில் தெய்வம்; வைஷ்ணவம்; கிறித்துவம்; அருளும், தூக்கு மேடையும்; கிருஷ்ண பரமாத்மா; நெப்போலியன்; புண்ணியம்; லீலை; காரண-காரியம்; தண்டிக்கப் பெற்றவர்; அன்பு; துர் அதிர்ஷ்டம்; ஜெருசலம்; பிருந் தாவன்; ஜூலியஸ் சீஸர்; சரித்திரம்; குருக்ஷேத்திரம்; மோட்சம்; மன்னிப்பு; நரகம்; பொய்ம்மை; தர்க்கம்; சிறை; கடமையில் இறைவன்; அழகு; பாவி; சித்து விளையாடுதல்; மதப் போராட்டம்; வருணன்; எமன்;

தர்க்கவாதி; கைதி; காட்டுமிராண்டி; மரணம்; மடையன்; முஸ்லிம்; பாவம்; எண்ணம்; இராமன்; ஜனநாயகம்; சோஷலிஸம்; பயம்; முகஸ்துதி; துன்பம்; பக்தி.

சில சிந்தனை மணிகளைச் சுருக்கமாகவும், ஒரு சிலவற்றை விளக்கமாகவும் மற்றும் சிலவற்றைக் குறிப்பாகவும் எழுதுகிறேன்.

  1. பகுத்தறிவு அழிந்த பின்னரே விவேகம் பிறக்கின்றது. அதுவரை நாம் பெற்றுள்ளது சாதாரண அறிவு.
  2. இறைவன் என் கண்களைத் திறந்த பொழுது விகாரமானவனுடைய கவர்ச்சி எனக்குத் தெரிந்தது. கோர மனிதனின் பெருந் தன்மையும் அந்தத் திருஷ்டிக்குத் தெரிகிறது.
  3. நித்தியத்துவம் என்பது அழியாத ஆன்மா நம் அன்றாட வாழ்வில் செயல்படுவதாகும்.
  4. விலங்கான மனிதனுக்கு எட்டாத நிலையில் உள்ள பொக்கிஷங்கள் என்ன என்பது தெரிந்தால், அதைப் பெறும்வரை மனிதன் ஓயமாட்டான்.
  5. தனது துர்அதிர்ஷ்டத்தைத் தீமை என்று என் மனம் விவரிக்கும்பொழுது, மனிதனுக்குரிய மடமை செயல்படுகிறது என்று நான் அறிவேன்.
  6. தெய்வத்துடன் கண்ணாமூச்சு விளையாடும் தெய்வமே நாத்திகம்.
  1. உலகச் சரித்திரத்தின் பெரு நிகழ்ச்சிகள் நான்கு.

ராய் நகரத்தின் மீது தொடுத்த போர்.

இயேசுவைச் சிலுவையில் அறைந்தது.

பிருந்தாவனத்தில் கிருஷ்ணனிருந்தது.

குருக்ஷேத்திரத்தில் பகவான் அர்ஜுனனுக்குக் கீதோபதேசம் செய்தது.

  1. வேதங்கள் பொய், கிருஷ்ண பரமாத்மா கவிகளின் கற்பனை என்கிறார்கள். அப்படி யானால் அந்தப் பொய்யைச் சொன்னவருக்கும், கற்பனையில் தன்னை இழந்தவனுக்கும் நான் தலைவணங்கி நன்றி சொல்கிறேன்.
  2. ஜீவனற்ற புத்தகத்தை ஜீவனோடு படித்து ஜீவனற்ற நிலையை நன்கு அறிந்தால், நான் மனத்தை வென்றவனாவேன்.
  3. நான் பக்தனில்லை. ஞானியில்லை, இறைவனின் அடிமையுமில்லை. வேறென்ன? இறைவனின் உதட்டுடன் உறவாடும் வேய்ங்குழல் நான்.
  4. இறைவனுக்குரியவர்களெனப் பெருமைப்படுபவர் பலர். நான் இறைவனை நாடவில்லை என்ற பெருமை எனக்குண்டு. அவனே என்னை நாடி வந்தான். வற்புறுத்தி என்னை அவனுடைமை யாக்கினான்.
  5. பயந்து வணங்கும் பக்தன் யூதன். அவனை விழைபவன் இந்து.
  6. நான்கு வகையான வலியை நமக்களிக்கின்றான் இறைவன். முதல் வகை சாதாரண வலி. இன்பத்தைக் கொடுக்கும் வலி அடுத்தது. இன்பமாகவே இருக்கும் வலி மூன்றாம் வகை. தீவிர ஆனந்தமான வலி கடைசி வகை.
  7. என் மனத்தைப் புண்படுத்தியபின், வற்புறுத்தித் தன்னை மன்னிக்கச் சொன்னான் இறைவன். அதற்கீடாக மேலும் என் மனத்தைப் புண்படுத்தினான்.
  8. புன்னகையை அறியாத இறைவன் இந்த ஆனந்த லோகத்தை எப்படிச் சிருஷ்டிக்க முடியும்?

*********



book | by Dr. Radut