Skip to Content

'யோக வாழ்க்கை' என்ற நூலில் சிறியதும் பெரியதும் (The Finite and the Infinite)

நாமறிந்தது பூவுலகம். அது நல்லதும், கெட்டதும் கலந்தது. மேலுலகம் தெய்வங்கட்கும், தேவர்கட்கும் உரியது. அங்கு நல்லது மட்டும் உண்டு. கெட்டதில்லை. தெய்வம் வாழும் இடம் அது. நமக்கு மனம் உண்டு. அது சிந்திக்கும். வாழ்வுண்டு. சிந்தனை வாழ்வை நிர்ணயிக்கும். சிந்தனை நல்லதாகவுமிருக்கும், கெட்டதாகவுமிருக்கும். பலன் சிந்தனை போலவேயிருக்கும். நாம் என்பது நம் உடல். உடலுக்கு நோயுண்டு. நோய் வாராது எனக் கூற முடியாது. உடல் உள்ளவரை நோயுண்டு.

நல்ல எண்ணமும், கெட்ட எண்ணமும் உள்ள மனம் இருக்கும் வரை, அதனால் நிர்ணயிக்கும் வாழ்வுள்ளவரை, நோய் வாய்ப்படும் உடலுள்ளவரை நாம் வாழும் இவ்வுலகில் நல்லது மட்டும் உண்டு எனக் கூறமுடியாது. நல்லது பெரியது. கெட்டது சிறியது எனத் தத்துவம் கூறுகிறது.

  • சிறியது பெரியதாகும்.
  • சிறியது பெரியதானால், நல்லது மட்டும் நடக்கும்.
  • சிறியது பெரியதானால், பூவுலகம், மேலுலகமாகும்.
  • ஸ்ரீ அரவிந்தம் உலகில் சிறியதைப் பெரியதாக்கும் இலட்சியமுடையது.

எது பெரியது? எது சிறியது?

சிருஷ்டிக்கு முன்னால் சிறியதில்லை, பெரியதுமில்லை, சிறியதும் பெரியதும் சிருஷ்டிக்குரியவை. பிரம்மம் ஆதி. ஆதிக்கு உருவமில்லை, சக்தியுமில்லை. பிரம்மம் சக்தியாயிற்று. சக்தி உருவம் பெற்றது. உருவம் சிறியது, பெரியது எனத் தோன்றுகிறது. நாம் கடவுள் என்பதைத் தத்துவம் பிரம்மம் எனக் கூறுகிறது. பிரம்மம் தானே சிருஷ்டியாயிற்று. சிருஷ்டியில் மேல் உலகம், பூலோகம் என்ற பிரிவுகளுண்டு. சிருஷ்டிக்கு 8 நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நிலைக்கும் சக்தியுண்டு. உருவம் உண்டு. ஜட உலகில் சக்தி செயல்படுகிறது. உருவங்கள் ஏற்படுகின்றன. நீர்வீழ்ச்சியில் சக்தியைக் காண்கிறோம். புயல் அதிக சக்தியை உற்பத்தி செய்கிறது. பதினாயிரம் பேர் சுரங்கம் தோண்டுகிறார்கள். பிரம்மாண்டமான சக்தி வெளிப்படுகிறது. சக்தியின் பயனாக நாம் காணும் உருவங்கள் ஆயிரம். மலைக்கு உருவமுண்டு. வீடு நாம் கட்டிய உருவம். மனிதனுக்கும் உருவமுண்டு. உருவமில்லாதவை குறைவு. சிருஷ்டி மனத்திலும் உண்டு. மனத்திற்குரிய சக்தி எண்ணம். எண்ணத்திற்குரிய உருவம் சொல். தீ சிறிய சொல். கலியுகம் நீண்ட சொல். சிருஷ்டி உருவம் என்ற நிலையை அடைந்த பிறகு சிறியது, பெரியது என்ற வேறுபாடு எழுகிறது.

  • பிரம்மம் சக்தியாகி உருவம் பெறுகிறது.
  • சக்தியை பிரம்மம் சிறிய உருவமாகவோ, பெரிய உருவமாகவோ மாற்றுகிறது.
  • ஒரே சக்தியை பிரம்மம் இரு வேறு உருவங்களாக - சிறியது, பெரியது - மாற்றுவதால், சிறியதிலுள்ள சக்தியும், பெரியதிலுள்ள சக்தியும் சமம்.
  • சக்தி ஒன்றே, உருவம் வேறு.
  • அதனால் சிறியது பெரியதாகலாம். பெரியது சிறியதாகலாம் என்பது தத்துவம்.
  • அதை மாற்றும் திறன் அவ்வுருவத்திற்கில்லை. அவ்வுருவத்தைத்தந்த சக்திக்குண்டு.
  • உருவத்தை மறந்து சக்தியை உணர்ந்தால், சிறியது பெரியதாகலாம்.
  • சக்தியும் மறந்து பிரம்மமானால், ஒன்று மற்றதாக மாறமுடியும்.
  • விதை சிறியது, மரம் பெரியது. காலம் சிறிய விதையைப் பெரிய மரமாக்கும்.
  • மரம் பெரியது, விதை சிறியது. காலம் பெரிய மரத்தை சிறிய விதையாக்கும்.
  • நட்பு நல்லெண்ணம், வெறுப்பு கெட்ட எண்ணம்.
  • நல்லெண்ணம் கெட்ட எண்ணமாகும்; கெட்ட எண்ணம் நல்லெண்ணமாகும்.
  • எண்ணத்தை மாற்றுவது மனம்.
  • மனம் மாற்றத்தை க்ஷணத்தில் செய்யும்.
  • மனத்தை விட ஆன்மாவும், ஆன்மாவைவிட சத்தியஜீவியமும் உயர்ந்தவை.
  • உயர்ந்தவை செயல்பட்டால் பெரிய மாறுதல்கள் ஏற்படும்.
  • உயர்ந்தவையால் பெரிய மாறுதல்களையும் குறுகிய நேரத்தில் செய்ய முடியும்.
  • சத்தியஜீவியத்தைக் கடந்தது சச்சிதானந்தம், பிரம்மம் ஆகியவை.
  • பெரியதும், சிறியதும் ஒன்றே.
  • எந்த உருவத்திலும் அவை ஒன்று மற்றதாக மாற முடியும்.
  • மாற்றும் சக்தியுயர்ந்தால் மாற்றம் சீக்கிரத்தில் நடக்கும்.

நிலைகள் எட்டு ஆகும். நமக்குரியவை முதல் மூன்று நிலைகளே. அவை உடல், உணர்வு, மனமாகும். சத்திய ஜீவியம், ஆனந்தம், சித், சத் ஆகிய நிலைகள் நமக்கு நேரடியாகப் பயன்படா. ஒவ்வொரு நிலையிலும் ஜீவியம் consciousness, ஜடம் substance என இரு பகுதிகள் உள்ளன. ஜீவியத்தில் ஏற்படும் மாறுதல்கள் பூரணமானவை. ஆனால் நிலையானவை அல்ல. ஜடத்தில் ஏற்படும் மாறுதல்கள் பூரணமானவை, நிலையானவை. பெரியப்பா பையனை சுவீகாரம் எடுத்துக் கொள்ள முடிவு செய்வது ஜீவியத்திற்குண்டானது. அது பையனுக்கு எல்லா உரிமைகளையும் வழங்கக் கூடியது. ஆனால் தன் சொத்துக்களை தம்பி மகன் பேரில் எழுதுவது ஜடத்திற்குரிய செயல். முதற் செயல் பூரணமானதானாலும், மாறக் கூடியது. ஜடத்தில் ஏற்படும் மாற்றம் நிலையானது. பூரணத்தைத் தன்னுள் கொண்டது. ஒவ்வொரு நிலையையும், உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு நிலைக்கும், அதன் உட்பிரிவுக்கும் உரிய சட்டங்கள் ஆங்காங்கே வேறுபடும். மரம் விதையாக நீண்ட காலம் தேவை. கெட்ட எண்ணம் நல்ல எண்ணமாக, காலம் தேவையில்லை. ஞானம் தேவை.

கருவி, காலம், இடம், சக்தி, முறை போன்றவை நடைமுறையில் வேறுபடுவதை விவரமாக அறியமுடியும்.

  • அந்த விவரமான ஞானத்திற்கு உலகை ஆளும் திறனுண்டு.
  • அத்திறன் ஆன்மிக சக்தி.
  • முடிவான நிலையில் ஜடத்தை ஆன்மா ஆள்வது, ஜடம் ஆன்மாவாக மாறுவது நடைபெறும்பொழுது மனித வாழ்வு தெய்வீக வாழ்வாக மாறும். அதுவே ஸ்ரீ அரவிந்தம்.

அக்ஷயப் பாத்திரம்

அக்ஷயப்பாத்திரத்தில் அனந்தன் ஜடமாக வெளிப்படுகிறான்.

  • எல்லையற்ற பலம். I.765 (யோக வாழ்க்கை)

எதிரி யாராக இருந்தாலும், அவனுடைய பலத்தில் தனக்குப் பாதி வேண்டும் என்று வரம் கேட்டவன் பெற்றது எல்லையற்ற பலம். இது சக்தியில் எல்லையற்றது. சிறிய மனிதன் முடிவற்ற பலத்தைத் தவம் மூலம் பெறுகிறான். இங்கு,

நிலை - உணர்வு(சக்தி, பிராணன், Vital)
கருவி - தவம்
சக்தி - காலத்தைக் கடந்த ஆத்மா.

மனித நிலைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியிது. ஸ்ரீ அரவிந்தம் தவத்திற்குப் பதிலாக சரணாகதியைக் கருவியாகப் பயன்படுத்துகிறது. அதன் சக்தி காலத்தினுள் செயல்படும் காலத்தைக் கடந்த ஆத்மா. ஸ்ரீ அரவிந்தம் சிறிய மனித வாழ்வைப் பெரிய தெய்வீக வாழ்வாக மாற்றும் வகையிது. அன்னை பக்தன் தவமிருந்து வரம் பெறுவதற்குப் பதிலாக, சரணடைந்து சுற்றுப்புற வாழ்வுடன் தொடர்பு கொள்கிறான். தபஸ்வி தவத்தால் காலத்தைக் கடப்பதுபோல் அவன் காலத்தைக் கடந்து செல்வதில்லை. அவன் காலத்திலேயே செயல்படுகிறான். ஆனால் காலத்தினுள் உள்ள காலத்தைக் கடந்த நிலையை, சரணாகதி அவனுக்களிக்கிறது. அவன் தொடர்பு கொள்ளும் பொருள்கள் தங்கள் முழுப் பலத்தை அவனுக்குக் கொடுக்கின்றன. ஒரு பழம் வாங்க முயன்றால் கூடையாகப் பழம் அவனை நாடி வருகிறது.

  • பழம் வேண்டும் என்ற சிறிய எண்ணம், பழங்கள் ஏராளமாக நாடி வரும் பெரிய செயலாக மாறுகின்றது.

எதைச் செய்ய வேண்டுமானாலும் பக்தன் செய்ய வேண்டியது ஒன்று தான். அது அன்னையை அழைப்பது. காலத்தைக் கடக்க பக்தன் அன்னையைக் காலத்திலிருந்து அழைப்பதற்குப் பதிலாக, கடந்த நிலையிலிருந்து அழைக்க வேண்டும். மனம் எண்ண ஓட்டத்திலிருந்தால் அழைப்பு காலத்திலிருந்து எழும். எண்ணமற்று நிதானமாக இருந்து மனம் அன்னையை அழைப்பது, காலத்தைக் கடந்த தவநிலையிலிருந்து அழைப்பதாகும், இரண்டையும் கடந்த நிலை பக்தனுக்குரிய நிலை. எளிய பக்தனால் தவநிலை, எண்ணமற்ற மோன நிலை, அவற்றைக் கடந்த அற்புத நிலையெல்லாம் எட்ட முடியுமா? இவையெல்லாம் கறிக்குதவாத ஏட்டுச் சுரைக்காய் என மனம் கூறும்.

  • பறக்க முடியாத மனிதனை விமானம் பறக்க வைக்கிறது.
  • எதையும் செய்ய முடியாத மனிதனை எதையும் செய்யமுடியும் என்று டெக்னாலஜி மாற்றுகிறது.
  • டெக்னாலஜியை ஏற்றுக் கொண்ட மனிதன் குரல் அமெரிக்காவரை கேட்கும்.
  • அன்னையை ஏற்றுக்கொண்ட பக்தனை அவனால் முடியாததை முடியுமாறு செய்வது அன்னை.
  • எந்த நிலையில் டெக்னாலஜியை ஏற்றாலும் அந்த நிலையில் அது பயன் தருவதுபோல், அன்னையிடமிருந்து பெற அந்நிலையில் அவரை ஏற்க வேண்டும்.

நாம் T.V. யால் பயன்பெற T.V. உலகுக்கு வந்தால் போதாது. வீட்டில் இருக்க வேண்டும். அது நம் பங்கு. அன்னை மனதிலிருக்க வேண்டும். எந்த நிலையில், எந்த ஆழத்தில் அன்னையை மனம் ஏற்கிறதோ, அந்த நிலையில் நம்மால் முடியாதது முடியும். எல்லா நிலைகளும் அன்னையுள் உண்டு. நடப்பதற்குரிய நிலையை நாம் நினைக்க வேண்டும்.

பிரயாணம் செய்கிறோம். அன்னையிடம் பாதுகாப்பு கேட்டு பிரார்த்தனை செய்கிறோம். அப்பிரயாணத்தை மேற்கொண்ட பக்தர்கள் 10 பேரானால், எல்லோருக்கும் அப்பாதுகாப்புக் கிடைத்துவிடும். கிடைக்கும் வகை நாம் அன்னையை மனதால் ஏற்றுக் கொண்ட ஆழத்தைப் பொருத்தது. சிலருக்கு மதர் என்ற சொல்லுக்கு மேல் அன்னை உருவம் மனதில் எழாது. அவருக்கும் பாதுகாப்பு உண்டு. அடுத்தவருக்கு அன்னை நினைவு தானே எழும். மற்றொருவருக்கு அன்னை உருவம் நெற்றியில் தெரியும், மனத்திலும் தெரியும், உருவம் ஒளிமயமாக இருக்கும். வெண்மையாக இருக்கும். பொன்னிறமாக இருக்கும். நினைத்தவுடன் அன்னையும், பகவானும் இருபுறமும் தெரியும், நெஞ்சு நிறையும். நினைவும் உணர்வும் பலவகைப்பட்டன.

பிரயாணத்தில் தேவைப்பட்ட செய்தியைக் கேட்குமுன் காதில் விழும். இது அறிவு மூலம் அன்னை செயல்படுவது. ரயில் ஏறி உட்கார்ந்தவுடன் மனம் பூரிக்கும். இது நெஞ்சு நிறைந்தவர் பெறுவது. புறப்பட ½ மணி முன் நாம் போகுமிடத்திற்குப் போகும் தனவந்தர் தம்முடன் அழைத்துப் போக முன் வருவது, ஒளிமயமான உருவம் தரும் பலனது. அதுபோல் போகும்பொழுது எழுந்த தற்செயலான சொல்வழி பெரிய சம்மந்தம் வரும். ஒளியின் தரத்தைப் பொருத்த பலன் அது.

நிலைகள் பல, பலன்களும் பல.

ஏற்கனவே நாம் அன்னையோடு கொண்டிருந்த தொடர்பு, அன்பர்களுடன் கொண்ட தொடர்பு இப்பிரயாணத்தில் பளிச்சிடும். இருபுறமும் இரு அன்பர்கள் வந்து உட்கார்ந்து அன்னையைப் பற்றிப் பேச ஆரம்பித்து சூழல் அற்புதமான கனம் பெறுவதும் உண்டு. எல்லா நிலைகளிலும் அன்னையை எல்லா நேரங்களிலும் ஏற்பது என்பது அனுபவத்தால் மனம் அறிய வேண்டியதாகும்.

  • கண்டம் நமக்கு அகண்டமாகத் தெரிந்தால்தான் Life Divine விளங்கும். II - 89
  • அகண்டம் தானே விரும்பி கண்டமாகக் காட்சியளிக்கிறது. II - 90
  • கண்டத்தை, அகண்டத்தின் வெளிப்பாடாகக் காணலாம். II - 91
  • கண்டத்தை முடிவானதாகவும், மாற்றமில்லாததாகவும் கருதலாம்.
  • பிரம்ம ஞானத்திற்குச் சோகம் ஆனந்தமாகத் தெரியும். II - 92

  • எதிராக உள்ள நிலைகளை ஏற்கும் திறன் யோகத்திற்கு உண்டு.
  • அகண்டமாகவும், கண்டமாகவுமானவன் அவன் என ஏற்க முடிவதில்லை. II - 94

Life Divine என்ற நூல் பிரம்மம் உலகமானதையும், உலகம் பிரம்மத்திற்கு அது தேடும் பேரின்பத்தைக் கொடுத்த பின் மீண்டும் பிரம்மமாவதையும் பகவான் எழுதுவதை, அகண்டமான பிரம்மம், கண்டமான உலகமாவதைக் குறிக்கும் எனலாம். தெய்வம் குழந்தையுள் விழிப்பாயுள்ளதைக் காண்பவரால் குழந்தையிடம் பிரியம் செலுத்த முடியும் என்பதைப்போல் Life Divine புரிய இந்த அம்சம் சிறியது பெரியதாவது; அகண்டம் கண்டமாவது புரியவேண்டும்.

கண்டம் என்பது துண்டு, சிறியது. அகண்டம் துண்டாக்கப்படாத பிரம்மம். பிரம்மம் உலகமாக விரும்பி, சிறிய கண்டமான உலகமாயிற்று. பிரம்மத்தை வற்புறுத்த முடியாது. தானே விரும்பிச் செயல்பட வேண்டும். இது பெரிய தத்துவம், முடிவான தத்துவம்.

அழகான பெண்ணை அவள் குறைகளையெல்லாம் புறக்கணித்து அழகுக்காக ஆண் விரும்புவதும், தறுதலையான ஆண்மகனை அழகுக்காகப் பெண் அடிமையாக நேசிப்பதும் இதே தத்துவம். பிரம்மத்தின் முதல் சிருஷ்டி நிலை சத், அடுத்தது சித், மூன்றாம் நிலை ஆனந்தம். ஆனந்தம் பிரம்மம் எனப்படும். உலகம் ஆனந்தத்திலெழுந்தது, ஆனந்தத்தால் வாழ்வது, ஆனந்தத்தில் முடிவது. ஆனந்தம் மனிதனுடைய ஆன்மாவுக்கு அன்பாகவும், உணர்ச்சிக்கு சந்தோஷமாகவும்,

  • மனத்தின் பார்வைக்கு அழகாகவும் தோன்றுகிறது.

மனிதன் தெய்வம். அவன் பரமனையடைய பதைபதைக்கிறான். அவனது உயர்ந்த கருவி மனம். மனம் பரமனை அனுதினமும் விழைகிறது. பரமன் என்பது சச்சிதானந்தம். அது சத்தியம், ஞானம், அனந்தம் எனப்படுவது. சத்தியம் ஆத்மா அறியக் கூடியது. ஞானம், வாழ்வு உணரக் கூடியது. ஆனந்தம் மனத்திற்குத் தெளிவுபடும். தெளிவுபடும் நேரம் அது அழகாகத் தென்படும்.

  • அழகைக் காணும் மனம், ஆண்டவனைப் பெண்ணில் காண்கிறது.

கண்டது கவரப்படுகிறது. கவர்ச்சி தாழ்ந்தது. கிளர்ச்சி அதற்குரியது. கவர்ச்சியானாலும், கிளர்ச்சியானாலும் அது பரமனை நோக்கி இதயம் எழும் எழுச்சியாகும். எனவே புனிதமானது. புனிதம் புத்துணர்ச்சியானால், பூலோகம் சுவர்க்கமாகும். அது உயர்ந்த முறை. முறை உயர்ந்ததானாலும், தாழ்ந்த கிளர்ச்சியானாலும் முடிவு ஆண்டவன். முடிவை எட்டும் ஞானம் பிரம்ம ஞானம். பிரம்ம ஞானம் உலகில் வாழ சூழ்நிலை சரியில்லை.

  • சரியில்லாத சூழ்நிலையில் ஞானம் சோகமாகக் காட்சியளிக்கிறது.

பிரம்ம ஞானம் சோகமாகக் காட்சியளிப்பதை மனம் ஏற்பது யோகம். பிரம்ம ஞானமும், சோகமும் எதிரானவை. எதிரானவற்றை ஏற்க மறுப்பது 'பகுத்தறிவு', ஏற்பது யோகம்.

  • பரமனின் பாங்கு பவித்திரத்தால் பாதுகாக்கப்படுகிறது.
  • அனந்தம் கண்டமாவது சிருஷ்டி. II - 629
  • கண்டம் அனந்தமாவது பரிணாமம்.

பரமன், அனந்தம், அகண்டம் மாறி மனிதன், அந்தம், கண்டமாகிறது, ஒன்று சிருஷ்டி. அடுத்தது பரிணாமம்.

  • பரிணாமம் பிரபஞ்சத்தின் வாழ்வு.

சிருஷ்டியில் பிரம்மம் உலகமாகிறது. பரிணாமத்தால் பிரபஞ்சம் பிரம்மமாகிறது. எனவே பரிணாமம் அதன் வாழ்வு. வாழ்வு என்பது பாதை. ஆதியையும், முடிவையும் இணைப்பது பாதை. பாதை வாழ்வாகிறது. வாழ்வு பாதையாகிறது. பாதை பிரம்மத்தை ஜடத்தில் முடிக்கிறது. மறுபாதை

ஜடத்தை பிரம்மத்தில் முடிக்கிறது. முதற்பாதை சிருஷ்டி. மறுபாதை பரிணாமம்.

  • பிரம்மா செய்ததைச் செய்யும் மனிதன். III - 33
  • பிரம்மம் அனந்தமெனில் பிரம்மாவுக்கேயுரியது அனந்தம். III - 37
  • சிருஷ்டியில் பிரம்மம் தன்னை அறிவதே ஆனந்தம். III- 59

சிறியது மறைவதிலிருந்து வெளிவந்து பெரியதாவதை பிரம்மம் உணர்வதே ஆனந்தம்.

பிரம்மா உலகத்தைச் சிருஷ்டித்தார். கொத்தனார் வீடு கட்ட ஒரு முறையைப் பின்பற்றுவதுபோல், இன்ஜீனியர் மெஷினை செய்ய design ஒரு முறையைப் பின்பற்றுகிறார். அதேபோல் பிரம்மா சிருஷ்டிக்க ஒரு முறையைக் கையாள்கிறார். நாம் வீடு கட்டுகிறோம், படிக்கிறோம், பயிரிடுகிறோம். இவற்றிற்கெல்லாம் முறைகள் உள்ளன.

  • வீடு கட்டுவது, மெஷின் செய்வது, உலகைப் படைப்பது ஆகியவை 3 வேறு தொழில்களானாலும், இம்மூன்றிற்கும் பொதுவான இடம் சாரம் essence. அதை அறிவது பிரம்மாவின் சிருஷ்டித் திறனை அறிவதாகும்.

 

  • மெஷின் செய்வதை, பயிரிடுவதுபோல் செய்தால் மெஷின் வாராது.

 

  • பயிரிடவும், மெஷின் செய்யவும் முறை ஒன்றேயானாலும், ஒன்று என்ற essence சாரத்தை மெஷினுக்குரியதுபோல் பயன்படுத்தினால்தான், மெஷின் உருவாகும்.

உள்ளூர் M.L.A. எலக்ஷனில் வீடு வீடாகப் போய் வணக்கம் சொல்லி ஓட்டுப் போடுங்கள் எனக் கேட்கிறார். பிரதமர் ஊர் ஊராகப் போய் கொள்கையைக் கூறி பேச்சை முடிக்கிறார். என் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் எனக் கேட்டதில்லை. இந்திராவும், நேருவும் கேட்டதில்லை. உள்ளூர் M.L.A. வீடுவீடாகப் போய் தம் கொள்கையை விளக்கிக் கூறி 'எனக்கு ஓட்டுப் போடுங்கள்' என்று கேட்காவிட்டால் ஜெயிக்க முடியாது. பிரதமர்போல் கொள்கையை மட்டும் M.L.A. கூறிவிட்டு ஓட்டுக் கேட்காமலிருக்க மனம் உயர்ந்திருக்க வேண்டும். உயர்ந்த மனமிருந்தால் ஜெயிக்க முடியும். ஏகமனதாகவும் ஜெயிக்க முடியும்.

பிரதமர்போல் நடக்கும் M.L.A. , பிரம்மாவின் முறையை அன்றாடம் கடைப்பிடிப்பவர். அவருக்கு சொர்க்கத்தின் பலன், சொந்த ஊரில் கிடைக்கும். அது வெறும் அதிர்ஷ்டமாக இருக்காது. அன்னை அதிர்ஷ்டமாக இருக்கும்.

சிறிய செயலில் சிறியது மறைந்துள்ளது. பெரியது (infinite) தன்னை சிறியதாக்கியுள்ளது. சிறியதனுள் மறைந்துள்ள பெரியது வெளிவருவது ஸ்ரீ அரவிந்தம், அதிர்ஷ்டம், இம்முறை அதைச் சாதிக்கும். பிரம்மம் எனில் அனந்தம். அந்தமில்லாதது அனந்தம். வாழ்வில் எந்தப் பொருளுக்கும் தட்டுப்பாடு எழ வழியில்லை என்ற நிலை அது. சைக்கிளுக்கு காற்றடிப்பது, வெளியில் உள்ள காற்றை டயரில் செலுத்துவதாகும். என்றும், எங்கும், இந்தக் காற்றுக்குத் தட்டுப்பாடு வாராது. காற்றுக்குத் தட்டுப்பாடு வாராததுபோல் உணவு, உடை, ஆரோக்கியம், பணம், சந்தோஷம், அறிவுக்குத் தட்டுப்பாடு எழாத நிலை பிரம்மா செய்ததைச் செய்யும் மனித நிலை. கெட்டதற்ற நல்லது, இருளற்ற ஒளி, தவறற்ற சரியானதுபோல், அந்தமற்ற அனந்தம் பிரம்மாவுக்குரிய அனந்தம்.

வக்கீல், கட்சிக்காரன் கேஸைத் தன் பாஷையில் பேசுகிறார். ஜெயிக்கிறார்; தோற்கிறார். வக்கீல், கட்சிக்காரன் மனநிலையை அறிந்து, அவன்போல் ஜெயிக்க துடித்து, அவனுடைய கண்ணோட்டத்தில் சட்டத்தைப் புரிந்து கொண்டால் அந்த வக்கீலுக்குத் தோல்வியில்லை.

பிரம்மம் உலகை சிருஷ்டித்தது. உலகம் தன்னையறிவது சந்தோஷம். பிரம்மா சிருஷ்டியில் தன்னை அறிவது ஆனந்தம்.

  • வக்கீல் கேஸை, சட்டப்படி நடத்துவது வழக்கம், அதற்கு வெற்றி அல்லது தோல்வியுண்டு.
  • வக்கீல் கட்சிக்காரனைச் சட்டப்படி அறிவது, பிரம்மா சிருஷ்டியை அறிவதாகும்.

உலகம் என்பது இருண்டது. கர்மத்தாலும், காலத்தாலும் கட்டுண்டது. மரணம் அதன் பிறப்பு உரிமை என்பதை ஸ்ரீ அரவிந்தம் மாற்றி,

  • உலகம் என்பது இருள் மட்டுமன்று, ஒளியாலான இருளால் செய்யப்பட்டது.
  • மறைந்துள்ள இருள் வெளிப்பட மனிதன் தன்னைத் தெய்வமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
  • மாறிய மனிதன் செயல் பிரம்மா செயல்படுவது போன்றதாகும்.
  • பிரம்மா செய்ததைச் செய்யும் மனிதன் பூலோகத்தைச் சுவர்க்கமாக்குவான்.
  • மூச்சடைப்பு வந்தால் காற்றில்லை எனத் தோன்றும். III - 116
  • மனித வாழ்வில் ஆயிரம் புதுமைகளை சமூகம் தன்னிலிருந்து சிருஷ்டிக்கிறது. III - 120

நம் நுரையீரல் குறையுடையதானால், மூச்சடைப்பு வருகிறது. சுவாசிக்க காற்றில்லை என நினைக்கும் அளவுக்கு மனம் பேதலிக்கிறது. ஆத்மாவுக்கு பிரம்மம் முடிவானதைப்போல் மனிதனுக்குச் சமூகம் முடிவானது. சமூகம் மனிதனுக்கு பிரம்மம். அதன் சிருஷ்டித் திறனுக்கு அளவில்லை என்பதை நவீனச் சௌகரியங்களை அனுபவிக்கும் மனிதன் அறிவான்.

  • சமூகம் மனித வாழ்வில் ஏற்படுத்திய அற்புதங்களை நாமறிவோம். பிரம்மம் மனித வாழ்வில் ஏற்படுத்தும் அற்புதங்களை நாம் சிருஷ்டிக்க முடியும்.

மனித வாழ்வில் பிரம்மம் செயல்பட்டு அற்புதங்கள் நடக்கும் என ஸ்ரீ அரவிந்தம் கூறுவதை கண்டம், அகண்டம்; சிறியது, பெரியது; பிரம்மம், மனிதன் என்ற இரட்டை தத்துவங்கள் மூலம் விளக்குவதே நோக்கம். மேற்சொன்ன அற்புதங்கள் எப்படியிருக்கும் என்று கூற முடியாது, ஏனெனில் இன்று அதற்கு உதாரணங்களில்லை. அளவை சில உதாரணங்கள் மூலம் கூறலாம். இன்று அமெரிக்கப் பெருநகரங்கள் வாழ்வைப் பலரும் அறிவர். அவர்கள் பெற்ற வசதி, சௌகரியம், பாதுகாப்பு நாம் பெற்றவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

  • அவை சமூகம் மனித வாழ்வில் ஏற்படுத்திய அற்புதங்கள்.
  • நாம் மேல்நாட்டார் ஏற்கனவே பெற்றதை உழைப்பால் பெற முடியும். ஆனால் இன்றும் பெறவில்லை.
  • பிரம்மம் செயல்பட்டு ஏற்படும் அற்புதங்கள், இன்றைய கிராம வாழ்வுக்கும் அமெரிக்கப் பெருநகர வாழ்வுக்கும் உள்ள வித்தியாசத்தை, அமெரிக்க வாழ்வுக்கும் அதற்கும் இடையே ஏற்படுத்தும்.
  • நாம் ஆன்மாவைப் பயன்படுத்த முடியும். அமெரிக்கர் மனத்தைப் பயன்படுத்துகிறார்.
  • நம்மால் ஆன்மாவைப் பயன்படுத்த முடியும் என்பதால் அமெரிக்கர்களைவிட, சீக்கிரம் அவ்வுயர்ந்த நிலையை அடைய முடியும்.
  • நாம் செய்ய வேண்டியது என்ன? பொய் சொல்வதை விட்டு மெய்யை மட்டும் சொல்ல வேண்டும்.
  • பிரம்மம் பொய் மூலம் வெளிப்படாது. மெய் மூலம் மட்டும் வெளிப்படும்.
  • மெய் சொல்வதைப் பூரணமாக ஒருவர் ஏற்றால் அவர் வாழ்வில் பிரம்மம் சத்திய ஜீவியம் மூலம் செயல்படும். அவ்வற்புதங்கள் நிகழும்.

யோக வாழ்க்கை என்ற நூல் உள்ள கண்டம், அகண்டம் என்ற கருத்துக்கள் மூலம் மேலும் பல கோணங்களில் இக்கருத்தை ஆராய்வோம்.

  • சிருஷ்டிக்கு ஜீவனுள்ள மையம் வாழ்வு. II - 178.
  • ஆணை நாடும் பெண் விரும்பிய பின் காத்திருப்பாள் II - 244.
  • சக்தியும் இவ்விஷயத்தில் பெண்ணேயாகும். II - 245.

பரமாத்மா, ஜீவாத்மா, பிரபஞ்சம் மூன்றும் ஜீவனோடு சந்திக்குமிடம் வாழ்வு. நமது அரங்கம் வாழ்வு, அதாவது மனித வாழ்வு. மனித வாழ்வு என்பது உணர்வால் மட்டும் வாழ்வதாகும். தெய்வீக வாழ்வு, யோக வாழ்வு என்பவை ஆன்மாவால் வாழ்வதாகும். அதன் பலனையடைய நாம் மேற்சொன்ன மூன்றும் சந்திக்குமிடமாக வாழ்வை மாற்ற வேண்டும். வாழ்வில் பரமாத்மாவையும், பிரபஞ்சத்தையும், ஜீவாத்மாவையும் காண வேண்டும். அதைக் காணும் மார்க்கங்கள் நாம் நெடுநாளாக அறிந்தவை.

  • கண்டம், அகண்டமாக வேண்டும்.
  • சிறியது, பெரியதாக மாறும்.
  • சிறியதனுள் உள்ள பெரியது வெளிவர வேண்டும்.
  • பிரம்மத்தின் முறையை நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.
  • ஜீவாத்மாவின் பிரதிநிதியான சைத்தியப் புருஷன் மூலம் வாழ்வை நடத்த வேண்டும்.
  • அகந்தைக்குப் பதிலாக சக்தி வாழ்வில் செயல்பட வேண்டும்.

மனித வாழ்வில் பெண் ஆணை நாடிப் போவதில்லை. மனதால் பெண் ஆரம்பித்தாலும், செயலால் ஆண் வரும்வரை காத்திருப்பாள். ஈஸ்வரசக்திவரை இதுவே சட்டம். இந்தச் சட்டம் பின்பற்றப்பட்டால் நம் வாழ்வில் சிறியது, பெரியதாகும். ஆண் என்பதும், பெண் என்பதும் தத்துவங்கள். தலைவன், தொண்டன் சேர்ந்து செயல்படும்பொழுது தலைவன் ஆண்மைக்கும், தொண்டன் பெண்மைக்கும் உரியவராவார்கள்.

  • தொண்டன் தனக்குரியதை கேட்காமல், தானே வரும்வரை காத்திருப்பது இச்சட்டத்தைப் பின்பற்றுவதாகும்.
  • அனந்தமான மனம் சிந்திக்காமல் புரிந்து கொள்ளும்.
  • எண்ணமும் உணர்வும் அற்ற நேரம் சிறியது பெரியதாகும் III -267
  • மனிதனும், இறைவனைப்போல் முடிவற்றவன். III - 275

மனம் சிந்தனைக்குரியது, சிந்திக்கும்வரை மனிதன் மனத்தின் எல்லைக்குள் செயல்படுவான். மனம் அளவுக்குட்பட்டது, சிறியது, கண்டமானது, பகுதி. பகுதியாக்கும் கருவி. ஆன்மா அளவற்றது, பெரியது, அகண்டம், முழுமை. பகுதியை தன் வெளிப்பாட்டில் முழுமையாக்க வல்லது. மனம் சிந்தனையிலிருந்து விலகினால், மௌனமாகப் புரிந்து கொள்ளும். இது அனந்தமாகும் பாதையில் முதற்படி. எனவே அனந்தமான மனம் எனப்பட்டது. எண்ணமற்ற நேரம் மனத்தின் எல்லையைக் கடப்பதைப் போல், உணர்வற்ற நேரம் பிராணன் எல்லையைக் கடக்கிறோம். சிறியது, பெரியதாக முயலும் முதற் படிகள் அவை. இறைவன் ஆதியும் அந்தமுமில்லாதவன். மனிதன், தன் கரணங்களைக் கடந்தால், அவனுள் உள்ள ஆன்மா வெளிப்படும். மனிதனும் இறைவனாவான். ஒரே ஒரு மாறுபாடு. இறைவன் தன்னுள் ஜோதி, ஆனந்தம் போன்ற ஆன்மீக அம்சங்களைக் கொண்டவன். மனிதன் அவையற்றவன். திருவுருமாறிய மனிதன் இறைவனாவான். அவனுள் மறைந்துள்ள அம்சங்கள் வெளிப்பட்ட நிலையிலுள்ள இறைவனாகும்.

  • மேலுலகிலுள்ள இறைவன் முடியாட்சியில் மன்னன். பூவுலகிலுள்ள இறைவன் மக்களாட்சியில் மன்னனாக உயர்ந்தவன்.
  • மனத்தில் ஆன்மாவாக மலர்ந்த இறைவன் திருவுருமாறிய மனிதன்.
  • சிறியது பயந்து விலகும்பொழுது, பெரியது விரும்பி நாடுகிறது. III - 312
  • மரணத்தை நோக்கிச் செல்வதே, முன்னேற்றத்தைத் தரும் கருவி. III - 313.
  • சிறியது + அருள் = பெரியது. அருள் சிறியதைப் பெரியதாக்கும். III 314.

பாரதி திருவனந்தபுரம் மிருகக்காட்சிசாலைக்குப் போயிருந்தார். சிங்கம் அங்குக் கூண்டிலிருந்தது. கூட்டம் தூர இருந்து பார்த்தது. கூண்டைத் திறந்து உள்ளே போக விரும்பினார் பாரதி. "எது வேண்டுமானாலும் செய்யுங்கள், வாயினுள் கை வைக்காதீர்கள்" என்றான் கூட்டைத் திறந்தவன். உள்ளே போய் சிங்கத்தைத் தடவிக் கொடுத்தார். 'மிருகராஜாவே, கவிராஜனுக்கு ஓர் கர்ஜனை கொடு' என்று பாரதி சிங்கத்தைக் கேட்டார். சிங்கம் கர்ஜித்தது. பாரதி உயர்ந்த புருஷன், தைர்யசாலி. அனைவரும் பயந்து ஒதுங்கும் சிங்கத்தை விரும்பி நாடினார்.

பணம் பல குடும்பங்கள் அழியக் காரணம். பணமே பல குடும்பங்களை உயர்த்தியது. பணம் கருவி, பயன் நாம் பயன்படுத்தும் முறையைப் பொருத்தது.

  • பார்வையைப் பொருத்தது பலன். III - 345
  • மாற்றம் தோற்றத்திற்குரியது. III - 347

கதையில் போலீஸ்காரன் ஒரு அடிதடி கூட்டத்தைக் கலைக்கிறான். ரௌடிகள் ஓடிவிட்டனர். அவர்களிடையே அகப்பட்ட ஒருவர் கையிலிருந்த வாத்தைக் கீழே போட்டார். தலையிலிருந்த தொப்பி விழுந்துவிட்டது. போலீஸ்காரர் அவருக்கு உதவ ஓடினார். அவரும் ஓடி எடுத்தார். வாத்தையும், தொப்பியையும் அவர் எடுத்து வந்தார். அதைப் பெற்றவர் இருவர்.

முதல்வர் தொப்பியை பல கோணங்களிலும் சோதனை செய்தார். ஒரு பழைய தொப்பி, இதிலிருந்து என்ன புரியும்? என்று கூறி தொப்பியை வைத்துவிட்டார்.

அடுத்தவர் தொப்பியை எடுத்து 15 நிமிஷம் சோதனை செய்தார். லென்ஸ் மூலம் பார்த்தார். பிறகு அவர் சொன்னது,

  1. தொப்பிக்குடையவர் பெரிய அறிவாளி.
  2. இவர் வசதியாக இருந்தவர்.
  3. இப்பொழுது ஏழ்மையிலிருக்கிறார்.
  4. ஒரு வாரம் முன் முடி வெட்டிக் கொண்டார்.
  5. முன்யோசனையுள்ளவர்.
  6. இவர் மீது மனைவிக்குப் பிரியமில்லை.
  7. இவர் வீட்டில் gas இல்லை.

முதல்வர் அடுத்தவரைக் கேலி செய்தார். எப்படி இவற்றையெல்லாம் சொல்ல முடியும் எனக் கேட்டார்.

  1. தொப்பி பெரியது. அதனால் தலை பெரியது. எனவே புத்திசாலி.
  2. விலையுர்ந்த தொப்பி, பழையது, அதை வாங்கும்பொழுது வசதியாக இருந்திருக்க வேண்டும்.
  3. 3 வருஷமாக ஒரே தொப்பியைப் போட்டிருப்பதால், புது தொப்பி வாங்க வசதியில்லை. எனவே ஏழ்மையிலிருக்கிறார்.
  4. லென்ஸ் சிறு முடி தொப்பியுள் ஒட்டிக் கொண்டுள்ளதைக் காண்பிக்கிறது.
  5. காற்றில் பறக்காமலிருக்க ஒரு நூல் கட்டியுள்ளது முன்யோசனையைக் காட்டுகிறது.
  6. தொப்பியை பிரஷ்ஷால் துடைப்பது மனைவி வேலை. இது துடைக்கப்படவில்லை. மனைவிக்குப் பிரியமில்லை.
  7. தொப்பியில் மெழுகுவர்த்தி துளிகள் பல உள்ளன. கேஸ் இருந்தால் மெழுகுவர்த்தியைப் பயன்படுத்தமாட்டார்.

மாறிய பார்வை ஏராளமான செய்தியை அளிக்கிறது. சிந்தனைக்கு அத்தனை சக்தி. ஒரு பொருளை மனத்தால் கவனித்தால் சிறியது தெரியும். பிரம்மத்தால் கவனித்தால் பெரியது தெரியும். சிறியது பெரியதாவது மாற்றம். பெரியது சிறியதாவதும் மாற்றம். மாற்றம் மேலெழுந்தவாரியானது. ஆழத்தில் மாற்றமில்லை. மேலேயுள்ளது ஜீவியம். ஆழம் ஜடத்திற்குரியது. ஜீவியமும், ஜடமும் சேர்ந்து தோற்றமாகிறது. சிருஷ்டியில் பிரம்மம் சக்தியாகி, சக்தி சிருஷ்டியாகிறது. சக்தி உருவம் பெறுவது சிருஷ்டி. சக்திக்குக் கீழே பிரம்மம் உள்ளது. எல்லா மாற்றங்களும் சக்தியுக்குரியன. பிரம்மம் மாறுவதில்லை.

  • என்றும் பிரம்மம் பெரியது.
  • சக்தி தோற்றம்.
  • சக்தி பெரியதாகவோ, சிறியதாகவோ இருக்கும்.
  • மாற்றம் பிரம்மத்திற்கில்லை.

புலன்கள் மேல்மனத்திலுள்ளன. புலன்கட்கு தூய்மையில்லை. இறைவனை மட்டும் நம்பியிருப்பது தூய்மை. புலன்களைத் தூய்மைப்படுத்த, புலன்கள் புறநிகழ்ச்சிகளை நம்பாமல் அகவுணர்வுகளை மட்டும் நம்ப வேண்டும். தூய்மையான புலன்கள் நம்மை மேலிருந்து உள்ளே அழைத்துச் செல்லும்.

  • சிறியது பெரியதாவது தூய்மை. III - 538
  • தூய்மையை நாடினால் வலி எழும். III - 539
  • எதிரி நண்பனாவது லீலை. III - 540
  • உள்ளே போவது சமர்ப்பணம். III - 541

பகுதிக்குத் தூய்மையில்லை, பகுதி காலத்திலும், அகந்தையிலும், மேல்மனத்திலும் சிறியதாகவுள்ளது. தூய்மை முழுமை. காலத்தைக் கடந்து, அகந்தை அழிந்த நிலையில், ஆழத்திலுள்ளது தூய்மை. இந்த மாற்றம் வலியை எழுப்பும்.

லீலையின் முக்கிய அம்சம் எதிரானவற்றைச் சேர்த்துச் செயல்படுவது. எதிரி நண்பனாவது அது போன்ற செயல். சமர்ப்பணம் மேல் மனத்திலிருந்து நம்மை ஆழத்திற்கு அழைத்துச் செல்லும்.

  • சிறியதன் பெரியது, பெரியதன் சிறியதாகும் III - 558

மனிதனுக்கு தலைவிதி, கர்மம் உண்டு, அத்துடன் முடிவற்ற சுதந்திரம் உண்டு. மனிதன் அளவு கடந்த சுதந்திரமாகத் தன்னிச்சையாகச் செயல்படுவதை பிரம்மம் முன் கூட்டியே நிர்ணயிக்கிறது. நாளைக் காலை நாம் சாப்பிடக்கூடிய 10 வகைப் பண்டங்களில் ஒன்றை எடுத்துச் சாப்பிட்ட பின், பிரம்மத்தின் குறிப்பேட்டில் அது நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

  • அனுபவம் சிறியது, ஆழ்மனம் பெரியது III - 564

புரியும் திறன், அனுபவம், நிதானம் மனிதனுக்குக் குறைவு, சிறியது. ஞானம், ஆத்மானுபவம், நிச்சலனமான நிலை ஆகியவற்றிற்கு மனித மனத்தின் ஆழத்தில் உள்ள வித்து பெரியது.

  • பகுதி சிறியது, முழுமை பெரியது III - 605

சிருஷ்டி, பரிணாமம் என்று இரு பகுதிகளுண்டு. பிரம்மமேயானாலும் ஒன்றில் மட்டும் காண்பது சிறியது. இரண்டிலும் ஒரே சமயத்தில் காண முடிவது பெரியது. அரசியல் தலைவர்கள் குடும்பத்தைக் கவனிக்க முடியாது. குடும்பத்தைக் கவனிக்கும் தலைவர்கள் அரசியலில் வெற்றி பெற முடியாது. மனித சக்தி அளவுக்குட்பட்டது. ஒரு சமயத்தில் ஒன்றுதான் முடியும். இரண்டையும் ஒரே சமயத்தில் காணும் திறன் மனத்திற்கில்லை. காண முடிந்தால் மனம் சத்திய ஜீவியமாகும். சிறியது, பெரியதாகும்.

இரண்டையும் ஒரே சமயத்தில் காண்பதெப்படி?

Omnipresent Reality எங்கும் நிறை பரம்பொருள் என்பது Life Divineஇல் 4ம் அத்தியாயம். அங்கு இத்தத்துவத்தை பகவான் விளக்குகிறார். அதை வாழ்வுக்குரிய முறையில் நாம் புரிந்து கொள்ளலாம்.

விஞ்ஞானி ஜடத்தை ஆராய்ந்து அற்புதங்களை நிகழ்த்தினான். அவன் கண்ணுக்கு ஆன்மா, கடவுள் தெரியவில்லை. எனவே இல்லை என்றான், இருந்தாலும் தனக்கு வேண்டாம் என்றான். சன்னியாசி பிரம்மத்தைக் கண்டபொழுது, உலகம் தூசி என்றான். தனக்கு உலகம் தேவையில்லை என்றான். பூரண யோகி இரண்டையும் ஏற்றுக் கொள்கிறான். யோகி புருஷனை (Being) அடைந்தபொழுது, அதைவிட்டு Non-being அசத்தை நாடுவது வழக்கம். அதற்கு மாறாக புருஷனில் ஊன்றிய காலை எடுக்காமல், அசத்தை நாடினால் யோகியின் நிலையுயர்ந்து, பூரண யோகியாகி, சத்தையும் (புருஷனையும்) அசத்தையும் தன்னுட்கொள்ளும் பிரம்மமாகிறான் எனக் கூறுகிறார் பகவான்.

வாழ்வில் இதை எப்படிச் சாதிப்பது? சிருஷ்டி என்பது வாழ்வு. மேலிருந்து கீழே வருவது. சிருஷ்டியைக் காண்பவன் ஒரு பகுதியைக் காண்கிறான். பரிணாமம் மேலே போவது. இதுவும் பகுதி. சிருஷ்டியையும், பரிணாமத்தையும் ஒரே சமயத்தில் காண்பது முழுமை. குடும்பம் நடத்துபவன் காண்பது குடும்பத்தை மட்டுமாகும். நிஷ்டையிலிருப்பவன் காண்பது தியானமாகும்.

  • தியான நிலையில் குடும்பத்தின் கடமைகளைச் செய்தால், கடமையினுள் கடவுள் தெரிவார். தியானத்துள் கடமைகள் விளங்கும்.

அபிப்பிராயம் என்பதே மனத்தின் சிறந்த கருவி. அபிப்பிராயம் இறைவன் செயலுக்குத் தடை. சரியான அபிப்பிராயம் பகுதி முழுமை ஆவதைத் தடுக்கிறது. தவறான அபிப்பிராயம் பகுதியைத் தவறாக்கும் என்பது ஆன்மிகக் கருத்து. அதைக் கீழ்க்கண்டவாறு கூறலாம்.

  • சரியாக இருந்தாலும் அபிப்பிராயம் என்பது தவறு. III - 711.

சிறியனவெல்லாம் பெரியனவே, பெரியனவாக மாறும் என்றாலும் ஒவ்வொன்றுக்கும் உரிய நிபந்தனைகள் உண்டு. ஆசை, அனுபவம், சந்தோஷம் என்பவை பொருள்களுடன் பிணைந்துள்ளன. பெண்ணின் மீது ஆசைப்படுகிறோம். பொருளை அனுபவிக்கிறோம். கேலி சந்தோஷப்படுத்துகிறது. இவை அனுபவத்திற்குரிய பொருள்கள். பிரியமுள்ள பெண், நாம் அனுபவிக்க வேண்டும் என விரும்பும் பொருள், நம்மை சந்தோஷப்படுத்த முயலும் ஹாஸ்யம் உண்டு. இவை விருப்பமானவை, விரும்பி நமக்கு ஆனந்தம் தருபவை. அவை தம் திறனை விரிவுபடுத்த முன்வந்தால், அளவில்லாமல் விரியும். சைத்தியப் புருஷன் மேலே வந்தபொழுது அது எளிதாக நிகழும்.

  • அனுபவம் ஆனந்தமானால் சிறியது பெரியதாகும். III 718
  • சிறியதன் அம்சங்கள் ஐந்து. III-736
  • தர்க்கம் யதார்த்தத்தில் கரையும். III-738

தர்க்கம், தர்க்கத்திற்கு உண்டு, யதார்த்தத்திற்கு குதர்க்கமாகும்.

  • முக்கியத்துவம் சிறியதற்கு மட்டும் உண்டு III 767
  • தன்னை மட்டும் உணருவது சிறியது. III 829
  • சிறியது பரிணாமத்தால் பெரியதாகிறது, திருவுருமாற்றத்தால் பிரம்மமாகிறது. III 832

சிங்கம் விலங்குகட்கு ராஜா. அதுபோல் பெரியது, சிறியது எங்கும் உண்டு. இது வாழ்வு நிலை. வாழ்வைக் கடந்தது அனந்தம். அங்குச் சிறியது, பெரியது, முக்கியம் என்பதில்லை. நட்சத்திர மண்டலத்தில் முக்கியம் மறந்து போகும். முக்கியம் மனிதனுக்கு மட்டும் உண்டு. உலகம் பெரியது. நம்மைத் தவிர ஆயிரம் பேருண்டு. அனைத்தையும் மனம் ஏற்றால் விசாலமடையும். தன்னை மட்டும் மனம் ஏற்றால் சுருங்கும். நாம் எதை ஏற்கிறோமோ, அதனால் நிர்ணயிக்கப்படுகிறது. பரிணாமம் சிருஷ்டியை ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு உயர்த்துவதால் சிறியது, பெரியதாகிறது. திருவுருமாற்றம் சிறியதை நேரடியாக பிரம்மமாக்குகிறது.

  • சிறியதனுள் பிரம்மம் உண்டு. III 841

சிறியது பரிணாமத்தால் பெரியதாகிறது, திருவுருமாற்றத்தால் பிரம்மமாகிறது. எனவே விதையினுள் மரம் உண்டு. காலத்தால் மரம் வெளிப்படுகிறது. காலம் தொடர்ந்தால் மரம் மீண்டும் விதையை உற்பத்தி செய்யும். விதை மரமாகி, மரம் பிரம்மமாகும். எப்பொருளும் பெரியதாகி பிரம்மமாகும். அதனால் புதைந்துள்ள சக்தி, வாய்ப்புக்கு அளவில்லை.

  • கிராமம் கிராமமாகவேயிருக்கிறது, பரிணாமத்தால் நகரமாகும், திருவுருமாற்றத்தால் பூலோகச் சுவர்க்கமாகும்.
  • மனித வாழ்வு பரிணாமத்தால் தெய்வீக வாழ்வாகும், திருவுருமாற்றத்தால் முழுப் பிரம்மமும் வெளிப்பட்டு பூலோகத்தைச் சுவர்க்கமாக்கும். நம்முள் மண்டிக் கிடக்கும் வாய்ப்புக்கு அளவில்லை, அளவேயில்லை.
  • பகவானுடைய முறைகள் காலத்தைக் கடந்தவை. III 848

சரணாகதி, தியானம், பரிணாமம் போன்ற பல முறைகளை பகவான் பயன்படுத்துகிறார், தோற்றத்திற்கு நாமறிந்ததைக் காண்பிக்கிறார். அதன் அடிப்படையை மாற்றி தெரியாததை எட்டும் வகை செய்கிறார். எந்த முறையும் சிறியதன்று, கடந்ததைப் போற்றுவதில்லை. வியாதியைப் போக்க நம்மை மருந்து சாப்பிட அனுமதிக்கிறார். மருந்தின் அடிப்படை வியாதிக்கு எதிரானது வியாதியைக் குணப்படுத்தும் என்பது. பகவான் இந்த அடிப்படையை ஏற்பதில்லை. நம்பிக்கை செயல்பட மருந்தைக் கருவியாக்கியிருக்கிறார். மருந்து வியாதியைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக நம்பிக்கையை வளர்க்கிறது. வளரும் நம்பிக்கை வியாதியைக் குணப்படுத்துகிறது.

  • கடந்தவை எதையும் முடிவாக பகவான் ஏற்றதில்லை.
  • பெரியதன் பாதையும் பெரியது. III 878

பெரியது சிறியதன் பாதையில் போக முடியாது. அதன் பாதையும் பெரியதாக இருக்கும். அப்பாதை மாறுவதும் அளவு கடந்திருக்கும்.

  • பரப்பிரம்மம் பிரம்மமாகிறது. III 883
  • 'மனம் போல மாங்கல்யம்' எனும் பிரம்மம். III 910

சச்சிதானந்தம் பரப்பிரம்மம் எனப்படும். அதன் சத் புருஷன் மூன்றாகப் பிரிந்து முதல் நிலையில் Self ஆக மாறுவதை பிரம்மம் என்கிறோம். இப்பிரம்மம் க்ஷர, அக்ஷரப் பிரம்மங்களாகின்றன. பரப்பிரம்மம் (Self) பிரம்மத்திற்கு உயர்ந்தது. Absolute பிரம்மம் என்பது ஆதி. அதுவே சிருஷ்டியில் சச்சிதானந்தம் எனும் பரம்பிரம்மமாகிறது. பரப்பிரம்மத்தின் கீழ் Self பிரம்மமும், மேலே Absolute பிரம்மமும் உள்ளன.

Infinite பெரியது என்பது சிறியதற்கு finite எதிரான பெரியது. Infinite என்பது finite, Infiniteஐ தன்னுட்கொண்டது. இரண்டையும் கடந்தது. Self பிரம்மம் என்பது Infinite, finite ஆன உலகத்திற்கெதிரானது. Absolute பிரம்மம் என்பது Infinite. இது எந்த finiteக்கும் எதிரானதல்ல. Self existing Infinite.

Absolute பிரம்மம்

பரப்பிரம்மம் (சச்சிதானந்தம்)

Self பிரம்மம்

பரப்பிரம்மம் Self பிரம்மத்தைக் கடந்தது. Absolute பிரம்மம் பரப்பிரம்மத்தைக் கடந்தது.

  • Self பிரம்மம் நம் பார்வைக்கேற்ற தோற்றத்தைப் பெறும் தன்மையுடையது. சிறிய மனிதனுடைய பார்வைக்குச் சிறியதாகவும், பெரிய மனமுடையவருடைய பார்வைக்குப் பெரியதாகவும், தோன்றி 'மனம் போல மாங்கல்யம்' என்று கூறும்.
  • அவள் தாளினை கைக் கொண்டு மகிழ்ந்திருப்பான். III 147

பெட்டை, பெண், மனைவி, கற்புக்கரசி, லோகமாதா ஆகியவை பெண்மையின் பல்வேறு நிலைகள். முந்தியவை சிறியன. பிந்தியது பெரியது. இன வேறுபாட்டால் பெட்டையாகப் பிறந்தது. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு பெற்று பெண்ணாகிறாள். குடும்பப் பொறுப்பை ஏற்று நிறைவேற்றுபவள் மனைக்குரியவள், மனைவி. மனத்தால் மணாளனுக்குரிய கற்புக்கரசி. தெய்வநிலைக்குயரும்பொழுது அவள் ஈஸ்வரனுக்குரிய சக்தியாகிறாள். இதுவரை மரபுக்குரியவை. .ஸ்ரீ அரவிந்தம் தனக்கேயுரிய சரணாகதி தத்துவத்திற்கு ஈஸ்வரனையும் உட்படுத்துகிறது.

  • ஈஸ்வரன் சக்திக்குத் தன் சரணாகதியைப் பூரணமாக்கிய பின் பூரணம் பெறுகிறான் என்பது ஸ்ரீ அரவிந்தம். இக்கருத்து மரபில் இல்லாதது. ஸ்ரீ அரவிந்தரின் இக்கருத்து யோக சித்தியைக் குறிப்பது.
  • பாரதி இதை 'அவள் தாளினை கைக்கொண்டு மகிழ்ந்திருப்பான்' என்கிறார்.
  • யோகி சரணாகதியால் யோகத்தைப் பூர்த்தி செய்கிறான்.
  • ஈஸ்வரன் சரணாகதியால் சக்தியை லோக மாதாவாக்குகிறான்.

சரணாகதி சிறியதைப் பெரியதாக்கும் தத்துவம். தெய்வத்தின் ஆண்மை பெண்மையைச் சரணடைவதால் ஸ்ரீ அரவிந்தம் பூரணம் பெறுகிறது என்பது ஸ்ரீ அரவிந்தம்.

  • அனந்தமின்றி பிரம்மமில்லை.
  • அக்ஷயப் பாத்திரம் ஜடத்தில் அனந்தம்.

ஆன்மாவுக்கு 12 முக்கிய அம்சங்களுண்டு எனினும் அனந்தம், காலம் கடந்த நிலை, மௌனம், சாந்தி ஆகிய நான்கும் அடிப்படையானவை. இவற்றுள் எதுவும் ஆன்மாவை புருஷனை பிரம்மத்திற்கு அழைத்துச் செல்லவல்லது.

  • ஸ்ரீ அரவிந்தம் பிரம்மத்தை ஜடத்தில் கண்டு, அனுபவித்து வாழ்வது.
  • பிரம்மத்தைக் காணுமுன் ஜடத்தில் அனந்தத்தைக் காண்பது அவசியம்.
  • ஜடத்தில் அனந்தம் என்பது அபரிமிதமான வளம் அன்னை அதிர்ஷ்டம்.
  • Practical concept of infinity அபரிமிதத்தை அறியாதவர் ஸ்ரீ அரவிந்தத்தை அறியாதவர்.
  • மௌனத்தை அறியாத முனிவரில்லை. மௌனம் இல்லாவிட்டால், முனிவர் நிலை இல்லை.
  • வறுமையான செல்வரோ, மடமையான அறிஞரோ இல்லை என்பதுபோல் ஜட வாழ்வில் அபரிமிதம், அதிர்ஷ்டம், வளம் காணாதவர் ஸ்ரீ அரவிந்தத்தை அறியார்.

மனிதன் முடிவானதைத் தேடினான். பிரம்மத்தை முடிவானது எனக் கண்டான். அதுவே முடிவு என்றாகாது. ஏனெனில் முடிவு, முடிவற்றதாகும்.

  • மனிதன் கண்டதே முடிவன்று.
  • எது முடிவு என்று நிர்ணயிப்பவன் மனிதன். III 227

முடிவு என்று ஓரிடமோ, ஒன்றோயில்லை. நாம் முடிக்குமிடமே முடிவு. பண்டை நாளில் க்ஷர பிரம்மம் முடிவாயிருந்தது. தவம் வளர்ந்தபொழுது அக்ஷரப் பிரம்மமே, பிரம்மம் என உபநிஷதம் கூறியது. கீதை எழுதும் வரை அந்த நிலை. கீதை எழுந்தபின் புருஷோத்தமன் முடிவு என்றனர். ஸ்ரீ அரவிந்தம் ஈஸ்வரனை யோகத்திற்கு முடிவாகக் கூறினாலும், பிரம்மமே முடிவு என அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

எது பிரம்மம் என்பது மாறிக் கொண்டே வருகிறது.

அனந்தமான பிரம்மத்திற்கு அந்தமில்லாததற்கு முடிவைத் தேடுவது சரியன்று.

  • முடிவில்லாத ஆர்வம் முடிவில்லாத பலனைக் காண்பது, முடிவில்லாதவனைக் காண்பதாகும். III 563

ஆண்டவன், சொர்க்கம், வையகம், கோலோகம், சிவபதம், வைகுந்தம் ஆகியவை மேல் உலகுக்குரியவை. மோட்சம் பெற்றவர்கள் கண்ட ஆன்மீகச் சுகங்கள் இவை. இங்கு அவர்கள் இறைவனை முடிவில்லாதவனாகக் கண்டார்கள். ஸ்ரீ அரவிந்தம் முடிவில்லாத ஆண்டவனை இங்குப் பூவுலகில் காணலாம் என்று கூறுகிறது. அதையே தெய்வீக வாழ்வு எனவும் கூறுகிறது. அதை அறிய நிபந்தனைகள் உண்டா?

  • பூவுலக மையம் வாழ்வு. வாழ்வின் மையம் செயல்.
  • செயல் முடிவது பலனில். நமக்குப் பலன் முடிவுள்ளது.
  • பலன் முடிவற்றது என்று காண்பது முடிவற்றவனை இங்கு காண்பதற்கு முதற்படி.
  • அதையே காண முடியாதவன் ஸ்ரீ அரவிந்தத்தை அறிய முடியாது.
  • அதற்குரிய தகுதி முடிவில்லாத ஆர்வமாகும்.
  • அறியாமையை விட்டு நகர்ந்தால், அற்புதம் தெரியும். III 647
  • அனந்தனை நாடுகிறது. பரிணாமம் அனந்தனாக்குகிறது.III 814
  • தன் ஆதியை பிரம்மமாக உணரும் சிறியது பெரியதாகும். III 830
  • பிரம்மம் நம்மைச் சிருஷ்டியின் சூழலுக்குள் கொண்டு வருகிறது. III 877
  • ஆன்ம விழிப்பு என்பது சிருஷ்டியாகும். III 876
  • பெரியதன் பாதையும் பெரியது. III 878

அறிவு தன்னைத் தன்னுள் மறைத்து அறியாமையாக்கி உலகம் உற்பத்தியாகியுள்ளது. அறியாமையை விட்டு நகர்ந்தால், உலகம் அறிவு மயமாகும். அறிவுமயமான உலகம் அற்புதக் காட்சியாகும்.

அனந்தன் என்பது பரமாத்மா, ஜீவாத்மா விடுதலை பெற்று, பரமாத்மாவை அடைவது மோட்சம். பரிணாமம் ஜீவாத்மாவை, பரமாத்மாவாக்குகிறது.

சிறியது கல்லானால் தன் ஆதியை பூமி என அறியும். சிறியது சொல்லானால் தன் ஆதியை மொழி எனக் கூறும். கல்லும், சொல்லும் பூமியிலும், மொழியிலும் முடிவனவல்ல. முடிவு பிரம்மம். அதை உணரும் நேரம் சிறியது பிரம்மமாக மாறும். அதன் முன் பெரியதாக மாறும்.

பிரம்மம் தன் இச்சைப்படி சிருஷ்டித்தது என்பது தத்துவம். நாம் இருளில் உள்ளவரை விலங்கு போலிருக்கிறோம். ஆன்ம விழிப்புப் பெற்றால் நம் செயலெல்லாம் பிரம்மத்தின் செயல்போல தன்னிச்சையான செயல்களாக இருக்கும். நாமும் பிரம்மம்போல் செயல்படுவோம். நம் செயலும் சிருஷ்டி போலிருக்கும். அதாவது நம் செயல் குறையோ, தவறோ வாரா.

பிரம்மத்தின் பாதை நிலையாக நிர்ணயிக்கப்பட்ட பாதையில்லை. அளவு கடந்து மாறக் கூடியது. எந்த நேரமும் மாறும் தன்மையுடையது என்பதால் அது பெரிய பாதையாகும்.

பிரம்மத்தை உணர்ந்தால் பெரிய சக்தி எழும். III 559

நமக்கு முடிவானது பிரம்மத்திற்குச் சுதந்திரமானது என்பது பிரம்ம ஞானம். ஞானம் மனதிலிருந்து உணர்வுக்குப் போனால், உணர்வு இந்த ஞானத்தை ஏற்றால் எழும் சக்தி பெரியது. பிரம்மத்தைப்போல் பெரியது. அதே ஞானம் உடலைத் தொட்டால், அந்த சக்திக்கு சாதிக்கும் திறன் எழும்.

  • அனைத்தும் அனந்தம் III 565.

 நம் பொருள்கள், செயல்கள், எண்ணங்கள் அனைத்தும் சிறியவை. சிறியது எதுவானாலும் அதனுள் உள்ள ஜீவியம், சத்தியம், பிரம்மம் வெளிப்பட்டால் சிறிய பொருள்கள், செயல்கள், எண்ணங்கள் பெரிய பொருள்கள், பெரிய செயல்கள், பெரிய எண்ணங்களாகின்றன.

  • தன்னையே பிரம்மமாக உணரும் சிறியதும் பெரியதாகும். III 831
  • பரிணாமம் ஜீவியத்தில் முடியும். அனந்தனிலும் முடியும். III 881
  • சிறியது மனிதன், பெரியது தெய்வம். அன்னையை ஏற்றபின் மனிதன் தெய்வமாகும் வாய்ப்பு முழுவதும் உண்டு. அது பொய்யொழிந்த மனிதனுக்குண்டு.



book | by Dr. Radut