Skip to Content

03. கண்ணுக்குத் தெரியாத லாபம்

கண்ணுக்குத் தெரியாத லாபம்

N. அசோகன்

ஒரு கம்பெனி நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பொழுது அந்த நஷ்டத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். தவிர்க்க முடிந்த நஷ்டம் ஒரு வகை; தவிர்க்க முடியாதது மற்றொரு வகை. தவிர்க்க முடிந்த நஷ்டத்தை நாம் தவிர்க்கும்பொழுது கம்பெனி நஷ்டத்தில் இருந்து மீள்கிறது. இரண்டாம் வகை நஷ்டத்தைக் கருதும்பொழுது ஒரு குறிப்பிட்ட கம்பெனியில் தவிர்க்க முடியாத நஷ்டமாகக் கருதப்படுவது, அதே ஊரில் உள்ள வெற்றிகரமாக இயங்கும் மற்ற கம்பெனிகளில் தவிர்க்க முடியாததாகக் கருதப்படுவது இல்லை. செயல்பாட்டில் ஒரு நேர்த்தியைக் கொண்டு வாராதவர்களுக்கு, தமக்குப் பிடிக்காத விஷயங்கள் தவிர்க்க முடியாததாகத் தெரிகின்றன.

1990க்குப் பிறகு இந்தியாவில் நிலவும் மார்க்கெட் நிலவரத்தைக் கருதும்பொழுது எந்தக் கம்பெனியும் பண நஷ்டம் அடைய வேண்டியது இல்லை. அண்மையில் இந்திய மார்க்கெட்டில் ஒரு மந்த நிலைமை உருவாகியது. ஆனால் இந்தச் சூழ்நிலையிலும் நேர்த்தியான செயல்பாட்டைக் கற்றுக்கொண்டவர்களுக்கு நஷ்டத்தை மார்க்கெட் கொடுப்பதில்லை. தொழிலை அலட்சியம் செய்பவர்கள், நாணயமற்ற நிர்வாகியை நம்புகின்றவர்கள், கையிருப்பைக் கருதாது கொள்முதல் செய்பவர்கள், வரம்புமீறிக் கடன் வாங்கித் தொழிலுக்குச் சம்பந்தம் இல்லாத செலவு செய்பவர்கள் என்று இப்படி பல்வேறு வழிகளில் தொழிலை வீணாக்கிக்கொள்பவர்கள் உள்ளார்கள். இவர்களைப் பற்றி நான் பேசவில்லை.

தொழிலில் ஈடுபாட்டையும், சாமர்த்தியத்தையும் வளர்த்துக் கொண்டு, பணத்தை விரயம் செய்யாமல், தொழிலுக்கு உண்டான விதிமுறைகளின்படி அவரவர் தொழிலை நடத்துபவர்கள் உள்ளார்கள். இப்படி இருக்கும்பொழுதும் ஆண்டுக் கடைசியில் “ஏன் நஷ்டத்தைச் சந்திக்கிறோம்? ஒன்றும் புரியவில்லை” என்று குறைபட்டுக் கொள்வார்கள். இப்படிப்பட்டவர்களைப் பற்றித்தான் நான் குறிப்பிடுகிறேன். நமக்குச் செயல்திறன் (efficiency) உண்டு என்று நினைப்பவர்கள் பலர் உள்ளார்கள். அத்தகைய நினைப்புதான் அவர்களை அற்றவர்களாக ஆக்குகிறது.

இப்படிப்பட்டவர்கள் தாம் செய்கின்ற வேலையைக் கவனமாகச் செய்ய வேண்டும் என்று மிகவும் மெதுவாக வேலையைச் செய்வார்கள். எல்லா வேலைகளையும் இப்படி மெதுவாகச் செய்வதால் காலம் விரயம் ஆகிறது. காலம் விரயமாவது பணம் விரயமாவதற்கு ஒப்பாகும். மூன்று பேர் வேலை செய்யும் பிரிவில் அவசர வேலைக்கு என்று நான்காமவர் ஒருவரைச் சேர்த்துக்கொள்வார்கள். அந்த அவசர வேலை முடிந்த பின்பும் அந்தக் கூடுதல் நபரைத் தொடர்ந்து வேலையில் இருத்திக் கொள்வார்கள். இத்தகைய பழக்கம் நாளடைவில் கம்பெனியின் எல்லாப் பிரிவுகளிலும் பரவும்பொழுது இறுதியில் தேவைக்குமேல் 25 சதவீதம் அதிகமான ஊழியர்கள் இருப்பார்கள். இப்படிக் குறைந்த பட்சம் 20 அல்லது 25 வழிகளில் நஷ்டத்தை விளைவிக்கின்ற பழக்கங்கள் பல கம்பெனிகளில் புகுந்துவிடுகின்றன. இவற்றை எல்லாம் கண்டறிந்து களைந்தால் லாபம் 2 மடங்கு அல்லது 3 மடங்கு கூட உயரும்.

லாபம் என்பது மிகவும் அத்தியாவசியமானது. லாபமின்றி எக்கம்பெனியும் இயங்க முடியாது. லாபத்தைக் கரைக்கக்கூடிய பல அம்சங்கள் எக்கம்பெனியிலும் உருவாகும். ஒரு வியாபார நிறுவனம், ஓர் உற்பத்தி ஸ்தாபனம் என்றாலும் இன்னொரு வகையில் மரியாதை தரக்கூடிய சமூக ஸ்தாபனமுமாகும். பரோபகாரம் மற்றும் சேவை என்ற இவை இரண்டும் மரியாதை தருகின்றன. பெரிய நிறுவனங்களில் இந்தப் பரோபகாரமும், சேவையும் பல வழிகளில் எழுகின்றன. இப்படி எழுகின்ற பரோபகாரமே வருகின்ற லாபத்தை எல்லாம் கரைத்துவிடுகிறது. இத்தகைய பரோபகாரப் பழக்கங்களைக் களைந்தெடுப்பதும் சிரமமான காரியம்தான். கம்பெனி தொலைபேசி மற்றும் பேப்பரை, சொந்தத் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளும் ஊழியர்கள் இருக்கிறார்கள். இதைத் தடுத்து நிறுத்துவது நடைமுறையில் சாத்தியம் இல்லை. விதிமுறைகளை உருவாக்கினாலும் அவற்றை நெடுநாள் கடைப்பிடிக்க முடிவதில்லை. கறாராகக் கடைப்பிடித்தால் கொடுமை செய்வதுபோல் தெரியும். தேநீர் இடைவெளியை நீட்டித்துக்கொள்வது, அலுவலக Xerox machine போன்றவற்றைச் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்துவது, வேலை நேரத்தில் அரட்டை அடிப்பது, உற்பத்தித் திறனுக்கு உண்டான விதிமுறைகளைத் தளர்த்திக்கொள்வதுஎன்று பல வழிகளில் கம்பெனியில் கட்டுப்பாடு தளர்ந்துபோகிறது. இவ்விடங்களில் கம்பெனியைச் சீர்திருத்துவதுஎன்பது விரயத்தைத் தவிர்ப்பதாகும். இதை நடைமுறையில் சாதிப்பதற்கு அறிவு விளக்கம் கொண்ட நிர்வாகக் கொள்கை தேவை.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
டிசம்பர் 5 முதல் டிசம்பர் 9 தேதி வரை, "ஸ்ரீ அரவிந்தரால் முடியவில்லை. நீ என்ன செய்வாய்?' என்று தீய சக்திகள் வருஷம் தவறாமல் அன்னையைக் கேட்பதுண்டு. சந்தேகத்தை ஏற்படுத்துவதே தீயசக்திகளின் கடைசி ஆயுதம். அதையும் தாண்டிய நிலையில், அவை நம் தன்னம்பிக்கையை அழிக்க முயலும்.
 
தீயசக்திகள் நம்பிக்கையை அழிக்கும்.



book | by Dr. Radut