Skip to Content

07. P & Pஇல் உள்ள புதுமைகள்

P & Pஇல் உள்ள புதுமைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

N. அசோகன்

இப்பொழுது இக்கதையில் உள்ள முக்கிய கதாப்பாத்திரங்கள் வெளிப்படுத்தி இருக்கின்ற புதுமையான மனோபாவங்கள் மற்றும் புதுமையான செயல்பாடுகளையும் பார்ப்போம்.

டார்சி: டார்சியினுடைய personalityயில் புதிய மற்றும் வழக்கத்திற்கு மாறான பரிமாணங்கள் காணப்படுகின்றன. உயர்ந்த சமூக அந்தஸ்தும், மிகப்பெரிய சொத்தும் பணவசதியும் கொண்ட டார்சி போன்ற ஒரு பிரபு வம்சத்தைச் சேர்ந்த இளைஞன் லிசி போன்ற சாதாரண குடும்பத்துப் பெண்ணை மணக்க விரும்புவது வழக்கமான சமூக நடைமுறைக்கு மாறான ஒரு புதிய செயல்பாடாகும். ஆனால் தமிழ்த் திரைப்படங்களில் பணக்கார பெரிய இடத்து இளைஞர்கள் சாதாரண ஏழை குடும்பத்து பெண்கள்மேல் விருப்பம் கொண்டு பழக முன்வருவது போன்று நிறைய காட்சிகள் வந்துவிட்டன என்பதால் இது நமக்கு அவ்வளவு புதியதாகத் தெரியாமல் போகலாம். ஆனால் அன்றைக்கு அவன் செய்தது அந்தக் காலத்து சமூக சூழ்நிலைக்குப் புதியது என்பதைதான் நாம் பார்க்க வேண்டுமே தவிர இன்றைய திரைப்படக் காட்சிகளை வைத்து நாம் இது ஒன்றும் புதிதல்ல என்று சொல்லக் கூடாது. ஆனால் அவள் அவனை மறுத்த பிறகும் அவளுடைய அன்பையும், பாராட்டையும் திரும்பப் பெறுவதற்கு அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் அவன் கையாண்ட அணுகுமுறைகளும் முற்றிலும் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறைகளாகும். அவளைப் பார்ப்பதற்காக அவன் அந்த மெரிட்டன் கிராமத்திற்கு மீண்டும் போகவில்லை. மற்றும் திருமண proposalஐ மீண்டும் அவன் உடனே அவளுக்கு வழங்க முயற்சியும் செய்யவில்லை. தெரிந்தவர்கள் மூலமும் தூது அனுப்பவும் இல்லை. லிடியா மற்றும் விக்காமுடைய திருமணத்தை அவன் ஏற்பாடு செய்தபொழுதுகூட இது தான் செய்த ஏற்பாடு என்று லிசிக்கு தெரிய வேண்டும் என்றுகூட அவன் முயற்சி செய்யவில்லை. எல்லாவற்றையும் கார்டினர்தான் செய்தது போலவும், தன்னுடைய ஈடுபாட்டை மிகவும் இரகசியமாக வைத்துக் கொண்டான். தான் அவளை மீண்டும் நாடுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்னும் பொழுது எப்படி அவளை அவன் தன்னுடைய இடத்திற்கே வரவழைத்தான் மற்றும் மீண்டும் proposal கொடுத்தால் ஏற்றுக் கொள்கிறேன் என்று அவளைச் சொல்ல வைத்தான் என்பதில்தான் அவனுடைய புதுமையே இருக்கிறது. இதற்குண்டான பதில் மௌன சக்தியில் இருக்கிறது. தன்னை அவளுக்குப் பிடிக்காமல் போனதற்கும், தன்னிடமிருந்து தள்ளி நிற்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியதற்கும் காரணமாக தன்னிடம் என்ன இருக்கிறது என்பதை அவன் சிந்தித்துப் பார்த்துத் தெரிந்து கொண்டான். தன்னுடைய ஆணவம், தன்னுடைய தனக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்ற double standards, அவனுடைய நண்பனின் பர்சனல் விஷயங்களில் அதிகமாகத் தலையிட்டது, social status மற்றும் ஜீவனில்லாத வெளிப்புறத் தோற்றங்களை அளவுக்கு அதிகமாக மதித்தது இவையெல்லாம் தன்னிடம் குறைபாடுகளாக இருக்கின்றன என்று அவன் உணர்ந்தான். இந்த இடங்களில் எல்லாம் அவன் மாறவும் முன் வந்தான். தன்னுடைய ஆணவத்தை விட்டு பணிவை வரவழைத்துக் கொண்டான். தன்னுடைய கண்ணோட்டத்தையே வலியுறுத்திக் கொண்டிருந்தவன் விட்டுவிட்டு லிசியினுடைய கண்ணோட்டத்தில் இருக்கின்ற உண்மை, பிங்கிலியினுடைய கண்ணோட்டத்தில் இருக்கின்ற உண்மைகளை ஏற்றான். தன் நண்பனான பிங்கிலியிடம் சென்று உன் திருமண விஷயத்தில் நான் இனிமேல் தலையிடமாட்டேன். நான் ஏதோ தவறாகப் புரிந்து கொண்டேன். உன் விருப்பம் போல் நீ ஜேனுக்கு proposal கொடுக்கலாம் என்று தான் ஏற்படுத்திய தடைகளைத் தானே விலக்கிக் கொள்கிறான். மனமாற்றத்திற்கு முன்பு லிசியின் மாமாவும், மாமியும் திரு. மற்றும் திருமதி. கார்டினர் ஆகிய இருவரும் லண்டனில் Cheapside என்ற working class areaவில் இருப்பதாகக் குறை சொல்லிக் கொண்டிருந்தவன் இப்பொழுது அவர்கள் இருக்கும் இடத்தை விட்டுவிட்டு அவர்கள் ஏழைகள் என்றாலும் பண்பில் சிறந்தவர்கள் என்பதை உணர்கிறான். எல்லாவற்றிற்கும் மேலாக பென்னட் குடும்பத்திற்கு லிடியா ஓடிப் போனதால் வந்த அவமானத்திற்குத் தான் conscious responsibility எடுத்துக் கொண்டு நடந்த தவற்றைச் சரி செய்து பரிகாரம் செய்ய தான் முன்வருவது மிகவும் புதுமையான விஷயமாகும்.

  1. சாதாரணமாக இப்படி ஒரு அவமானத்தைத் தான் பட்ட பிறகு பென்னட் குடும்பத்திற்கு வந்த சிரமத்தை நீக்க வேண்டும் என்று டார்சி எந்தப் பொறுப்பையும் உணர வேண்டிய அவசியமோ மற்றும் லிடியாவைத் தேடிக் கண்டுபிடித்துக் காப்பாற்ற வேண்டும் என்ற தேவையோ அவனுக்கில்லை. ஏற்கனவே பென்னட் குடும்பம் manners இல்லாத மட்டமான குடும்பம் என்று தான் புரிந்து கொண்டிருந்ததை இந்தச் சம்பவம் மேலும் உறுதிப்படுத்துகிறது என்று அவன் எடுத்துக் கொள்ளலாம். அதே சமயத்தில் லிசியை டின்னருக்கு அழைக்க வேண்டும் என்று தனக்கு வந்த ஒரு விருப்பத்தையும் மாற்றிக் கொண்டு இனிமேலும் அவளோடும், அவள் குடும்பத்தாரோடும் தொடர்பு வைத்திருந்தால் அது தனக்கு ஒரு களங்கம் உண்டாகும் என்று நினைத்து விலகி இருக்கலாம். இப்படி ஒரு செய்தியை அவள் சொன்னவுடன் அவளை டின்னருக்கு அழைக்காமல் அப்படியே திரும்பச் சென்றிருந்தால் அவனை யாரும் குறை சொல்லியிருக்க மாட்டார்கள். ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் நடந்த அசம்பாவிதத்திற்குத் தானும் ஒரு முக்கிய காரணம் என்று தன் மனதில் ஏற்றுக் கொண்டு யாருக்கும் தெரியாமல் தன்னால் முடிந்த அளவிற்கு வந்த பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கிறான். விக்காமோடு அவனுடைய தங்கை சம்பந்தப்பட்டிருப்பதால் அவன் ஒரு தப்பான பேர்வழி என்று மெரிட்டன் கிராமத்தில் எல்லோரிடமும் சொன்னால் எங்கே தன் தங்கையின் பெயரும் வெளிவந்துவிடுமோ என்று பயந்து விக்காமைப் பற்றி தனக்குத் தெரிந்ததை மூடி மறைத்ததுதான் நடந்த அசம்பாவிதத்திற்கே முழுமுதல் காரணம் என்று அவன் நினைத்தான். லிடியாவும், விக்காமும் ஓடிப்போன விஷயத்தில் பல பேர் சம்பந்தப்பட்டிருந்தாலும், நடந்த எல்லாவற்றிற்கும் தான் மட்டுமே பொறுப்பு என்பது போலவும் மற்றவர்கள் எவருக்கும் எந்தப் பொறுப்பும் இல்லை என்பது போலவும் டார்சி நடந்து கொண்டான். ஆனால் உண்மையில் லிடியாவின் பேரிலும் தவறுள்ளது, விக்காமின் பேரிலும் தவறுள்ளது. தாயார் என்ற முறையில் திருமதி. பென்னட் அவர்கள் தன் மகளைப் போய் "நன்றாக அனுபவித்துவிட்டு வா'' என்று உற்சாகம் ஊட்டி அனுப்பியது திருமதி.பென்னட் செய்த ஒரு பெரிய தவறாகும். மேலும் நிறைய இளைஞர்கள் இருக்கக்கூடிய ஒரு இடத்திற்குக் காதல் வேகம் மிகுந்த தன் மகள் போகத் துடிக்கும் பொழுது அந்த இடத்தில் குடும்பத் தலைவர் என்ற முறையில் தன் அதிகாரத்தைச் செலுத்தி அவளைக் கண்டித்துத் தடுத்து நிறுத்தாமல் திரு. பென்னட் அவர்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டது அவர் செய்த தவறாகும். லிசியை எடுத்துக் கொண்டால்கூட விக்காமைப் பற்றி அவளுக்கு டார்சி மூலம் ஒரு தகவல் வந்திருக்கிறது. அதை அவள் தன் தகப்பனாருக்கு அந்த நேரம் சொல்லியிருந்தால் அவர் உஷாராகி, லிடியா போவதைத் தடுத்திருப்பார். பின்னால் நடந்த விபரீதத்தை இவ்வகையில் தடுத்திருக்கலாம். விக்காம் மேல் அவளுக்கு இன்னமும் ஒரு soft-corner இருந்ததால் அவள் சொல்லாமல் மறைத்தது அவளுடைய தவறு என்றாகிறது. இவ்வளவு பேரிடமும் தவறிருக்கும் பொழுது தன்னைத் தவிர வேறு யார் யார் இவ்விஷயத்தில் தவறு செய்திருக்கிறார்கள் என்று அவன் கண்டறிய முயற்சியே செய்யவில்லை. மற்றவர்கள் யாரையும் திருத்தவும் அவன் நடவடிக்கை எடுக்கவில்லை. நடந்த விபரீதத்திற்குத் தான் முழுப் பொறுப்பு ஏற்றுக் கொண்டு நிலைமையைச் சரி செய்ய தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை அவன் செய்தான். அவன் மௌனமாகத் தன்னைத் தானே திருத்திக்கொண்டான். அந்தத் திருத்தம் ஒன்றுமே செய்ய முடியாது என்று எல்லை மீறிப் போன ஒரு பிரச்சனையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஒரு நல்ல தீர்வை கொடுத்தது. அவனையும் மீறி அவன் செய்த நல்ல உதவி லிசியின் காதுகளுக்கு எட்டி மீண்டும் proposal கொடுத்தால் ஏற்றுக் கொள்கிறேன் என்று அவளைச் சொல்ல வைத்தது. Silent will உடைய power எவ்வளவு மகத்தானது என்று நாம் இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம். மிகவும் சிக்கலான பிரச்சனைகளில்கூட சம்பந்தப்பட்ட ஒருவர் silent willஐ மேற்கொண்டால் விரைவில் நல்ல தீர்வு வருவதை அவர் பார்க்கலாம்.

லிசி: டார்சி எந்தளவு புரட்சிகரமான கதாநாயகனாக செயல்பட்டானோ அதே அளவிற்குப் புரட்சிகரமாக லிசியும் தன்னளவில் செயல்பட்டிருக்கிறாள். அவளிடத்தில் என்ன புதுமையுள்ளது என்பதை நாம் இப்பொழுது பார்க்க வேண்டும். அவள் பழகிக் கொண்டிருந்த சமூகத்திலுள்ள மற்ற பெண்மணிகள் மற்றும் இளம்பெண்கள் ஆகியவர்களைவிட இவள் வேறுபட்டு தனித்து நிற்கிறாள் என்பதுதான் அவளிடம் உள்ள புதுமை. எங்கே, எப்படி வேறுபட்டு நிற்கிறாள் என்று நீங்கள் கேட்கலாம். இந்தக் கதையில் வருகின்ற மற்ற பெண் கதாப்பாத்திரங்களிடம் இல்லாத ஒரு individualityயும் அதாவது தனித்தன்மையும், ஒரு formed personalityயும் அவளிடம் தென்படுகின்றன. Individuality என்றால் என்ன? தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என்பதைப் பற்றி சிந்தித்துத் தனக்கென ஒரு தனிப் பாணி அமைத்துக் கொண்டு தனக்கென்று சில valuesகளையும், இலட்சியங்களையும் ஏற்றுக் கொண்டு மற்றவர்கள் அதை ஏற்கிறார்களோ, இல்லையோ தனக்குச் சரி என்று படுவதைத் தைரியமாகச் செயல்படுத்தும் திறனைத்தான் individuality என்கிறோம்.

ஜேன், ஷார்லேட் மற்றும் கரோலின் போன்ற பெண்கள் ஒரு economic security மற்றும் நல்ல பாதுகாப்பு வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் திருமணத்தை நாடினார்கள். அவளுடைய இன்னொரு சகோதரியான லிடியாவோ இதற்கும் கீழே சென்று வெறும் உடல் சுகத்திற்காக ஆண் துணையை நாடியிருக்கிறாள். ஆனால் திருமண விஷயத்தில் லிசி இப்படி economic securityயோ அல்லது உடல் சுகத்தையோ நாடியதாகத் தெரியவில்லை. தனக்குப் பிடித்தவராகவும், தன் மனதைக் கவர்ந்தவராகவும் இருக்கக்கூடிய ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அவள் உறுதியாக நிற்கிறாள். அதாவது எதிர்கால securityகாகத் திருமணம் செய்து கொள்ளாமல் அன்பிற்காகத் திருமணம் செய்து கொள்வேன் என்று அவள் எடுக்கின்ற முடிவு மற்ற பெண்களிடமிருந்து அவளை வேறுபடுத்திக் காட்டுகிறது. தன்னைப் போன்று சில திடமான valuesகளும், இலட்சிய மனப்பான்மையும் உள்ள ஆண்மகனைத்தான் அவள் தேடினாளே தவிர நல்ல வசதியான இடம், பணமுள்ள இடம், மற்றும் ஒரு அழகான தோற்றமுள்ள இளைஞன் என்று இவற்றைப் பிரதானமாகத் தேடியதாகத் தெரியவில்லை. ஆரம்பத்தில் விக்காமுடைய அழகு மற்றும் இனிமையான பேச்சில் மயங்கினாள் என்றாலும் நேர்மையற்றவன் என்று தெரியும் பொழுது அவனை விட்டு விலகுகிறாள் என்பதையும் நாம் கருத வேண்டும். Economic securityயை அவள் பெரிதாக நினைத்திருந்தால் காலின்ஸ் proposal வழங்கும் பொழுது மறுப்பேச்சில்லாமல் ஒத்துக் கொண்டிருந்திருப்பாள். ஏனெனில் அவன் ஒரு நல்ல வேலையில், நல்ல வருமானத்துடன் இருந்தான். மேலும் அவனை மணந்து கொண்டிருந்தால் அவளுடைய சொத்தும் அவளுடைய குடும்பத்தாருடைய கையை விட்டு வெளியில் போயிருக்காது. ஆனால் காலின்ஸை அவள் நிராகரித்தாள் என்னும் பொழுது economic securityயை அவள் நாடியதாகத் தெரியவில்லை. அழகான மணமகன்தான் வேண்டுமென்று திடமாக முடிவு செய்திருந்தாள் என்றால் விக்காம் நேர்மையற்றவன், மைனர் பெண்ணோடு ஓட முயற்சி செய்தவன் என்று தெரிந்த பிறகும் அவன் மேல் இருந்த மோகம் குறையாமல் அவனுடைய தொடர்பையும் நாடியிருப்பாள். ஆனால், அவன் நேர்மையற்றவன் என்று தெரிந்த பிறகு அவள் விலகினாள் என்னும் பொழுது அழகான தோற்றத்தையும் அவள் பெரியதாகக் கருதினாள் என்று சொல்வதற்கில்லை. டார்சி தன்னைத் திருத்திக் கொண்டு gentleman என்ற சிறப்பிற்குரியவனாக தன்னை நிரூபிக்கும் பொழுதுதான் லிசி அவன் மேல் ஒரு மதிப்பும், மரியாதையும் வைத்து அன்பு காட்ட ஆரம்பிக்கிறாள். அவன் ஆணவம் மிகுந்தவனாகவும், தன் சகோதரியின் திருமண முயற்சிகளைத் தடை செய்பவனாகவும், social statusஐ வலியுறுத்துபவனாகவும் இருக்கும் பொழுது அவன் ஒரு பெரிய எஸ்டேட் மற்றும் மாளிகையுடன் வந்தாலும் அவனை இவள் மதிக்கவில்லை. அகம்பாவத்தை விட்டுவிட்டு பணிவை வரவழைத்துக் கொண்டு அவன் பொதுவாக போகவேப் பிரியப்படாத இடங்களுக்கெல்லாம் சென்று லிடியாவையும், விக்காமையும் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் பொழுதுதான் அவளுடைய அன்பிற்கு அவன் உரியவனாகிறான்.

இதர கதாப்பாத்திரங்கள்: டார்சி மற்றும் லிசியைத் தவிர திரு. பென்னட், ஷார்லேட் மற்றும் கார்டினர் தம்பதிகள் போன்றவர்களும் புதுமையான மற்றும் அவர்கள் இருக்கக்கூடிய சூழ்நிலையில் யாரும் எதிர்பார்க்க முடியாத குண விசேஷங்களையும் வெளிப்படுத்துகிறார்கள். திரு. பென்னட்டை எடுத்துக் கொண்டால் பல வருடங்களாக மனைவிக்கு அடங்கிய கணவராகவும், பொறுப்பற்றக் குடும்பத் தலைவராகவும் நடந்து கொண்டுள்ளார். அவர்கள் நாட்டில் அந்தக் காலக்கட்டத்தில் வீட்டில் பல பெண்கள் இருந்தால் பெரிய பெண்ணை மட்டும்தான் டான்ஸ், பார்ட்டி என்றெல்லாம் அனுப்புவார்களாம். அவளுக்குத் திருமணம் நிச்சயம் ஆகும்வரை மற்ற பெண்களை வீட்டிலேயே நிறுத்தி வைப்பார்களாம். ஆனால் பென்னட் குடும்பத்தில் இஷ்டம்போல் ஐந்து பெண்களையும் எல்லா டான்ஸ் நிகழ்ச்சிகளுக்கும் போய் வருமளவிற்கு பெண்களைக் கட்டுப்படுத்த முடியாமல் சுதந்திரமாக விட்டிருக்கிறார்கள். மேலும் எந்தப் பொறுப்பான குடும்பத் தலைவரும் வருடாந்திரக் குடும்ப வருமானம் சொற்பமாக இருக்கும் பொழுது பெண்களின் திருமணத்திற்கு எதுவும் சேமிப்பு செய்யாமல் எல்லாவற்றையும் செலவு செய்ய மனைவியை அனுமதிக்கமாட்டார். ஆனால் திரு. பென்னட் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறார். இப்படி இத்தனை வருடம் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டிருந்தவர் ஓடிப்போன லிடியாவிற்கு மைத்துனர் தன் செலவில் திருமணம் செய்து வைத்துள்ளார் என்று தெரியும் பொழுது இத்தனை நாள் இல்லாத பொறுப்புணர்வு அவருக்குத் திடீரென்று வருகிறது. மைத்துனர் தான் செய்த செலவை (6000 pounds) ஈடு செய்யுங்கள் என்று கேட்காத பொழுதும், அப்படியே ஈடு செய்ய விரும்பினாலும் இவருக்குப் பல வருடங்களாகும் என்ற நிலை இருந்தபொழுதும், கேட்காத இடத்திலும், முடியாத இடத்திலும் செலவான தொகையைத் தான் திருப்பித் தர வேண்டும் என்ற ஒரு நல்ல முடிவை எடுக்கிறார். இப்படி முடிவு செய்வது அவர் இதுவரையிலும் நடந்து கொண்டதற்கு முற்றிலும் ஒரு புதுமையான செயல்பாடாகும். இம்முடிவை அவர் வெற்றிகரமாக அமல்படுத்த வேண்டுமென்றால் அவர் மேலும் பத்து, பதினைந்து வருடங்கள் கடுமையாக உழைத்திருக்க வேண்டும். குடும்பச் செலவை மிகவும் சுருக்கியிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? அவருக்கு வந்த சிறப்பான மனமாற்றத்திற்கு வாழ்க்கையும், ஒரு சிறப்பான Life Responseஐ வழங்கியது. அதாவது இந்த திருமணத்திற்கான செலவைத் தானே முழுமையாக ஏற்றுக் கொள்வதாகவும், கார்டினரோ, திரு. பென்னட்டோ யாரும் எதையும் திருப்பித் தர வேண்டியதில்லை என்ற ஒரு முடிவை டார்சி எடுக்கிறான். இதிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும். முடியாது என்ற சூழ்நிலையில், முடியாது என்று முடிவு செய்துவிடுவது சுலபம். ஆனால் முடியாத சூழ்நிலையிலும் எது முறையோ அதை நாம் செய்ய வேண்டும் என்று ஒருவர் முடிவு செய்யும் பொழுது நிலைமையே முற்றிலும் மாறி முடிவு எடுத்தவருக்கு சாதகமாக அமைகிறது.

இப்பொழுது ஷார்லேட்டிற்கு வருவோம். அவளுக்கு வயதாகி கொண்டு போகிறது. திருமண proposal கொண்டு வருபவர் எவரும் இல்லை. இத்தகைய சூழ்நிலையில் இருக்கின்ற எந்த ஒரு இளம் பெண்ணும் தன்னுடைய நட்பு வட்டாரத்தில் இருக்கின்ற வேறு எந்தப் பெண்ணிற்கும் திருமண வாய்ப்பு வந்ததென்றால் பொறாமைப்படுவாள், மனம் புழுங்குவாள். ஆனால் இப்படிப் பொறாமைப்படாமல் ஜேன் மேலும், லிசி மேலும் பிங்கிலியும், டார்சியும் interest காட்டுகின்றனர் என்பதை அறிந்து கொண்டு, "நீங்களும் அவர்களுக்கு response வழங்குங்கள். இது ஒரு நல்ல வாய்ப்பு, விட்டுவிடாதீர்கள்'' என்று உற்சாகம் ஊட்டுகிறார். இப்படிப்பட்ட பரந்த மனப்பான்மையும், நல்லெண்ணமும் திருமணத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணிடம் வெளிப்படுகிறது என்றால் இது மிகவும் புதுமையான ஒரு விஷயமாகும்.

ஜேன் ஆஸ்டின் உருவாக்கிய ஒரு பெண் கதாப்பாத்திரத்தினால்தான் இவ்வளவு பாஸிட்டிவாக நடந்து கொள்ள முடியுமே தவிர நிஜ வாழ்க்கையில் கல்யாண வாய்ப்புக் கிடைக்காத எந்த ஒரு இளம்பெண்ணும் இப்படி பெருந்தன்மையாக இருப்பாளா என்பது சந்தேகம்தான். இத்தகைய பெருந்தன்மைக்கு வாழ்க்கை அவளுக்கு ஒரு நல்ல வெகுமதியும் அளிக்கிறது. அதாவது அவளுக்கு ஏற்ற ஒரு மணமகனை அவளிடம் அனுப்புகிறது. அவனும் ஒரு நல்ல சொத்துடன் வருகிறான். ஷார்லேட்டின் நடத்தையையும், கரோலினுடைய நடத்தையையும் நாம் இங்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். லிசியின் பக்கம் டார்சியின் கவனம் திரும்புகிறது என்று தெரிந்தவுடன் லிசியைப் பற்றிக் கிண்டலாகப் பேசுவது, டார்சியின் மனதைக் கெடுக்க முயற்சிப்பது என்றெல்லாம் கரோலின் செயல்படுகிறாள். இதுதான் இளம்பெண்களிடம் நாம் பொதுவாகப் பார்க்கிற போட்டி மனப்பான்மையாகும். ஷார்லேட்டும் இப்படி நடந்துக் கொண்டிருந்தால் நாம் ஆச்சரியப்படுவதற்கேயில்லை. ஆனால் இப்படி போட்டி மனப்பான்மையோ, பொறாமையோ வெளிப்படுத்தாமல் வருகின்ற அதிர்ஷ்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள், பாராமுகமாக இருந்துவிடாதீர்கள் என்று ஷார்லேட் சொல்வதுதான் புதுமையாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது.

இப்பொழுது கார்டினர் தம்பதிகளுக்கு வருவோம். லிசியின் பர்சனல் விஷயங்களில் அவர்கள் தலையிடாமல் ஒரு கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது ஒரு புதுமையான செயல்பாடாகும். இதே நம் நாட்டில் உறவினர்கள் ஒரு வீட்டிற்கு வந்தால் புதிதாக என்ன நடக்கிறது, யார் எப்படி இருக்கிறார்கள், திருமணப் பேச்சு ஏதேனும் நடக்கிறதா, வந்திருக்கும் வீட்டிலுள்ள பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், படித்துக் கொண்டிருக்கிறார்களா, வேலை தேடிக் கொண்டிருக்கிறார்களா என்றிவைகளை எல்லாம் துருவி துருவி கேட்பார்கள். இதுதான் இந்தியாவில் நடக்கும். அதிலும் ஒரு பெண்ணிற்கு நிச்சயம் செய்ய முயற்சி எடுத்து ஏதோ ஒரு காரணத்தினால் அது கூடி வராமல் போய்விட்டது என்றும், இரண்டாவது பெண் மேல் ஒரு ஆண்மகன் interest காட்டுகிறான். ஆனால் அவளோ அவன் proposalஐ ஏற்காமல் மறுக்கிறாள் என்றிதுமாதிரியான ருசிகரமான செய்திகள் எல்லாம் நம் நாட்டில் உறவினர்கள் காதில் எல்லாம் விழுந்தால், ஏன் நிச்சயம் நின்றது, ஏன் இரண்டாவது மகள் நல்ல வசதியுள்ள, அந்தஸ்துள்ள, அழகான இளைஞனை மணக்க மறுக்கிறாள், பின்னணியில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளும்வரை ஓயவேமாட்டார்கள். தூங்கக்கூடமாட்டார்கள். கார்டினரிடம் லிசி டார்சி மிகவும் ஆணவம் பிடித்தவன், அடுத்தவர் சந்தோஷத்தைக் கெடுத்தவன், தன்னைவிட அந்தஸ்தில் குறைந்தவர்களை மதிக்காதவன் என்றெல்லாம் அவனை ஒரு முற்றிலும் நெகட்டிவ் நபராக வர்ணித்திருக்கிறாள். ஆனால் பிம்பெர்லி எஸ்டேட்டிற்கு இவர்கள் வந்த பொழுது அங்கிருக்கும் house keeperரோ தன்னுடைய முதலாளி மிகவும் தங்கமானவர், ஊழியர்களிடம் அன்பாகவும், பிரியமாகவும் பழகுபவர், மிகவும் பண்புள்ளவர் என்றெல்லாம் வர்ணிப்பதை இவர்கள் கேட்கிறார்கள். இப்படி நேரெதிரான வர்ணனைகளைக் கேட்பவர்கள் எவரும், அதுவும் மாமா, மாமி ஸ்தானத்தில் உறவினர்களாக இருக்கும்பட்சத்தில் "என்ன லிசி இது? நீ டார்சி மிகவும் கெட்டவர் என்று வர்ணித்திருக்கிறாய், house keeperரோ அவர் மிகவும் தங்கமானவர் என்கிறார். இதில் நீ சொல்வது சரியா? அவர்கள் சொல்வது சரியா? எது உண்மை?'' என்று நிச்சயம் கேட்பார்கள். ஆனால் அவர்கள் அப்படி அவளை ஒன்றும் கேட்கவில்லை. ஒரு நெருங்கிய உறவினரிடம் இத்தகைய ஒரு கட்டுப்பாடு இருப்பது மிகவும் புதுமையான விஷயமாகும். இத்தகையக் கட்டுப்பாட்டுடன் அவர்கள் நடந்து கொள்வதற்கு வாழ்க்கை எத்தகைய வெகுமதியை அளிக்கிறது என்ற ஒரு கேள்வி வருகிறது. அவர்களுக்கு நிச்சயம் வாழ்க்கை வெகுமதி அளிக்கத்தான் செய்கிறது. அந்த வெகுமதி என்னவென்றால் அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத உயரத்தில் இருக்கின்ற டார்சி அவர்களுடன் பிரியமாகப் பழகி அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அவனுடைய மாளிகைக்கு விருந்தினர்களாக வரலாம், போகலாம் என்று ஒரு உரிமையை அளிக்கிறான். இது அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு கௌரவம் ஆகும்.

இதுவரையிலும் P & P கதாப்பாத்திரங்கள் வெளிப்படுத்தியுள்ள புதுமைகளை நாம் பார்க்கிறோம். பார்ப்பதோடு மட்டும் நாம் நின்றுவிடக் கூடாது. இந்தக் கதையையும் நம்முடைய வாழ்க்கையையும் நாம் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். அதாவது நம்முடைய வாழ்க்கையில் இம்மாதிரி என்னென்ன புதுமைகளைப் புகுத்த முடியும் என்று பார்க்க வேண்டும். நமக்கு மற்றவர்களோடு இருக்கின்ற உறவில் சிக்கல்கள் எழுந்தால், சுமுகக் குறைவு ஏற்பட்டால் டார்சி செய்ததுபோல் அவர்களைத் திருத்த முயற்சி செய்யாமல் நம்மை நாமே திருத்திக் கொண்டு பழையபடி சுமுகத்தை நிலைநாட்ட முடியுமா என்று பார்க்க வேண்டும். நமக்குத் தெரிந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் வருகிறதென்றால் அதை மனதார வரவேற்று ஷார்லேட் போலவும், லிசி போலவும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த முயற்சி செய்யலாம். கார்டினர் தம்பதிகள் போல அடுத்தவர்களின் பர்சனல் விஷயங்களில் அதிகம் தலையிடாமல் ஒரு கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளலாம். இந்தக் கதையைப் பொறுத்தவரையிலும் திருமண விஷயத்தில் power of values மற்றும் நெறியான செயல்பாடு மற்றும் தனித்தன்மை, இலட்சிய மனப்பான்மை இவையெல்லாம் எப்படிச் சிறப்பாக பலிக்கின்றன என்பதைப் பார்க்கின்றோம். திருமண விஷயம் என்று மட்டுமில்லாமல் வாழ்க்கையின் மற்ற எல்லா இடங்களிலும், அதாவது வேலை, குடும்ப வாழ்க்கை, அலுவலக ஈடுபாடு, அன்னை சேவை மற்றும் பொது சேவை என்ற எல்லா இடங்களிலும் மேற்கூறிய values, individuality மற்றும் இலட்சிய மனப்பான்மை என்று எல்லாமே அபரிமிதமானப் பலனைக் கொடுக்கும். இதை நாம் புரிந்து கொண்டு வெற்றிகரமாக நம் வாழ்க்கையில் அமல்படுத்தினோம் என்றால் P & P commentaries மூலம் அப்பா நமக்கு வழங்க விரும்பிய அறிவு, அதிர்ஷ்டம், அருள் என்றெல்லாவற்றையும் நாமும் முழுமையாகப் பெற்றுக் கொண்டோம் என்று வரும். ஆகவே இத்தகைய முயற்சிக்கு முன்வருபவர்களுக்கு என் நல்வாழ்த்துகள்.

முற்றும்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
எதுவும் செய்யாமல் சும்மா இருப்பது என்பது மனித நிலையில்லை;
தெய்வ நிலை.
 

 
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அறிவுக்குப் புலப்படுவது கண்ணுக்குப் புலப்படாத போது, ஆத்மாவுக்குப் புலப்படுவது கண்ணுக்குத் தெரியுமா?
ஊனக் கண்ணுக்குத் தெரியாததை ஞானக் கண் பார்க்கும். ஞானக் கண்ணுக்குத் தெரியாததை ஊனக் கண்ணுக்குக் காட்டச் சொல்வான் மனிதன்.
 
 
********

 



book | by Dr. Radut