Skip to Content

08. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

14. ஒரு விவசாயியின் அனுபவம்

அவர் ஒரு சிறு விவசாயி; நடுத்தர வயதுக்காரர். ஆறு ஏக்கர் புன்செய் நிலம்தான் அவருக்கு இருந்த விளைநிலம். ஆனாலும் அவர் ஊரில் முக்கிய புள்ளிகளில் ஒருவராக இருந்தார். அரசியலிலும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படுகின்ற அரசாங்கத் திட்டங்களுக்கு அங்குள்ள பிரமுகர்களின் ஆதரவு மிகவும் தேவைப்படும். அந்த விவசாயியின் ஆதரவு இல்லாமல் எந்த ஓர் அரசுத் திட்டமும் அந்த ஊரில் தலை நீட்ட முடியாது. அரசு வகுத்த பல திட்டங்களின் விளைவாக அவருடைய கிராமத்திலும் பல வசதிகள் பெருகின. கல்வி, சாலை, மின்சாரம், வங்கியின் உதவி, கூட்டுறவுச் சங்கம் போன்றவை அவற்றில் அடங்கும். அத்தகைய திட்டங்களின் பயனாக அவருக்கும் பல வசதிகள் கிடைத்தன. அதாவது அவருடைய விவசாயத்திற்குத் தேவையான மின்சாரம், குழாய்க் கிணறு, கடன் வசதிகள், புது ரக விதைகள், யாவும் கிடைத்தன. அவர் அந்தக் கிராமத்தில் வேகமாக முன்னேறி வரும் விதரணையான விவசாயியாகவும் இருந்தார். சிறு விவசாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் அவரைப் பாதிக்கவே செய்தன என்றாலும் அவருடைய முன்னேற்றம் பாதிக்கப்படவில்லை.

ஒரு சமயம் அவருக்கு ஆரம்ப முயற்சிகள் யாவும் சாதகமாக அமைந்தன. கடன் உதவிகள் காலாகாலத்தில் கிடைத்தன. மணிலாவைப் பயிர் செய்தார்; நல்ல விளைச்சல். எதிர்பார்த்ததைவிட அதிகமான மகசூல். ஆனால் விலைதான் அதலபாதாளத்திற்குச் சரிந்துவிட்டது. அதனால் வாங்கிய கடனை அவரால் அடைக்க முடியாது போய்விட்டது. அதற்காக அவர் சோர்ந்துவிடவில்லை.

அது கோடைக் காலம். அந்தக் காலத்தில் சாதாரணமாக யாரும் மணிலாப் பயிர் செய்யத் தயங்குவார்கள். அதற்குக் காரணங்கள் பல. தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும்; கோடைக்கால மணிலாப் பயிருக்கெனவே உற்பத்தியாகும் பூச்சிகள் பயிர்களை நாசம் செய்யும்; அதனால் பெரிய அளவில் மகசூல் பாதிக்கும். சிறு விவசாயிகள் சூதாட்டம் போன்ற இந்தக் கோடைக் காலப் பட்டத்தில் மணிலாவைப் பயிர் செய்யத் தயங்குவார்கள். ஆனால் பெரிய விவசாயிகள் இந்தப் பட்டத்தில் மணிலாவைத் துணிந்து பயிர் செய்வார்கள். ஏனென்றால் குறைந்த அளவில் மட்டுமே சிலர் மணிலாப் பயிர் செய்வதால், விலை ஏறி விற்கும். அந்த அதிக விலையைக் குறியாக வைத்து, நஷ்டம் வந்தாலும் பாதகம் இல்லை என்ற துணிச்சலோடு பெரிய விவசாயிகள் மணிலாவைப் பயிர் செய்வார்கள். நம்முடைய சிறு விவசாயியும், பெரிய விவசாயிகளைப் போலக் கோடைப் பட்டத்தில் மணிலாப் பயிர் செய்யத் துணிந்தார். அவருக்குத் தண்ணீர்த் தட்டுப்பாடு வரக் காரணம் இல்லை. ஏனென்றால் அவருடைய "போர்" கிணற்றில் வற்றாது நீர் கிடைத்துக்கொண்டே இருக்கும். பூச்சி ஒரு பிரச்சினைதான். அதிர்ஷ்டம் இருந்தால் பூச்சித் தொல்லையும் இராது. அவர் கூட்டல், கழித்தல் கணக்குகளை அதிகம் போடாமல் ஆறு ஏக்கர் நிலத்திலும் மணிலாவைப் பயிர் செய்தார். பயிர் நன்றாக வளர்ந்தது. நல்லவேளையாகப் பூச்சித் தொந்தரவும் ஏற்படவில்லை. வழக்கம்போல ஏறின விலைக்கு மணிலா விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். கண்ணைப் பிடுங்கும் கடன்கள் தீர்ந்துபோகும். ஆகவே அவர் மணிலா மகசூலை மலைபோல நம்பிக்கொண்டு இருந்தார். அதற்கு அவர் பட்ட கடன் மட்டும் காரணமன்று; அந்தஸ்தும் ஒரு காரணம். பொதுவாக, கிராமங்களில் கடனாளிகளைத் தரக்குறைவாக நினைப்பார்கள். அதனால் அவர் தரத்தையும், "பெரிய மனிதன்' என்ற அந்தஸ்தையும் காப்பாற்றிக்கொள்ள மணிலாப் பயிர் கைக்கொடுத்தால்தான் முடியும். "நிச்சயம் கைக்கொடுக்கும்" என்ற அளவில் பயிரும் செழிப்பாக வளர்ந்துகொண்டிருந்தது.

நாட்கள் நல்லவையாக நகர்ந்தன. பயிரும் அறுவடை செய்ய வேண்டிய பக்குவத்தை அடைந்துவிட்டது. பயிருக்கு இன்னும் ஒரு தண்ணீர் மட்டுமே தேவை. அதற்குப் பிறகு அறுவடைதான். அந்தச் சமயத்தில் திடீரென அவருடைய "போர்' கிணறு காலை வாரி விட்டுவிட்டது. கிணற்றின் அடியில் உள்ள நீர் ஏற்றுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுத் தண்ணீர் இறைக்க முடியாமல் போய்விட்டது. அத்தகைய சந்தர்ப்பங்களில் சிக்கல்களைச் சரி செய்து, "போர்" மூலம் தண்ணீரை இறைப்பதற்கு குறைந்தபட்சம் ஆறு வார காலம் ஆகலாம். அப்பொழுது சித்திரை மாதத்து அக்கினி நட்சத்திர வெயில் நெருப்பாகக் கொளுத்தியது. பூமி வறண்டு, பயிர்கள் காய்ந்தன. இந்த நிலையில் "போரை"ச் செப்பனிடத் தேவையான ஆறு வார காலம் வரை தண்ணீர் இல்லாவிட்டால் பயிர் தாங்காது. என்ன செய்வது? அக்கம்பக்கத்தில் தண்ணீர் இறைத்துக்கொள்ளவும் வசதி இல்லை. ஏனென்றால் அவரைத் தவிர வேறு எவருக்கும் "போர்" கிணறு இல்லை. இப்படியும் ஒரு சோதனையா? தண்ணீர் தட்டுப்பாட்டிலிருந்த பயிரை எப்படிக் காப்பாற்றுவது? அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரே குழப்பம்; வேதனை.

ஒரு நாள் காலை பத்து மணிக்கு அவர் தம் கிராமத்திலிருந்து புறப்பட்டு, நகரில் உள்ள என் வீட்டிற்கு வந்தார். நான் அவரை எதிர்பார்க்கவில்லை. அவர் முகம் அவ்வளவு மோசமாக வாடக்கூடும் என்பதையும் நான் எதிர்பார்க்கவில்லை. "உங்களுக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டேன். "இன்னும் எதுவும் நேரவில்லை. ஆனால் நேர்ந்துவிடுமோ என்று பயப்படுகிறேன். நேற்றுவரை நான் மிகவும் நம்பிக்கையோடு இருந்தேன். இப்பொழுது என் நம்பிக்கையே ஒரு நாகம் போலப் படம் எடுத்து அச்சுறுத்துகிறது. அழுது கதற வேண்டும்போல இருக்கிறது. உள்ளூரில் கத்தினால் கேவலம். ஆறுதலைத் தேடி உங்களை நாடி வந்திருக்கிறேன். கருணைகூர்ந்து நான் சொல்லும் சோகத்தைத் தயவுசெய்து கேட்பீர்களா?" என்று கேட்டுவிட்டுக் கண்களில் நீர் தளும்ப என்னைப் பார்த்தார். "கேட்கிறேன், சொல்லுங்கள்" என்றேன் நான். நான் முன்பு விவரித்ததை எல்லாம் விரிவாகக் கூறினார் அவர். நான் அவர் கூறியதைக் கவனமாகவும், கனிவாகவும் கேட்டேன். சொல்முடி க்கும் பொழுது அவர் முகத்தில் முன்பு காணப்பட்ட சோகமும், வாட்டமும் மறைந்து விட்டிருந்தன. அவர் மனத்தை அதுவரை அழுத்திக்கொண்டிருந்த பாரம் நீங்கியதற்கு அடையாளமாக அவர் கண்களில் ஒரு பிரகாசம் சுடர்விட்டது.

அவருக்கு இப்பொழுது வேண்டியது எல்லாம் நம்பிக்கை. நான் அதைத்தான் கொடுக்க வேண்டும். கொடுத்தேன். "நீங்கள் கடுமையான உழைப்பாளி. பயிருக்குச் செய்ய வேண்டிய அனைத்தையும் கவனமாகச் செய்து இருக்கிறீர்கள். ஆகவே உங்கள் பயிர் வீணாகிப்போகாது". அவர் விவரம் புரிந்தவர்தாம். ஆனால் நான் சொன்னது அவருக்குப் புரியவில்லை. ஆனாலும் கவனமாகக் கேட்டார். "எதையும் பொறுப்பாகச் செய்பவர்களை இறைவன் ஒருபோதும் கைவிடுவதில்லை. அப்படிப்பட்டவர்களை இறைவன் தன் பொறுப்பில் வைத்துக் காப்பாற்றுகிறான்" என்ற கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறினேன்.

நடைமுறைச் செயல்களைப்பற்றி மட்டுமே நன்கு சிந்திக்கத் தெரிந்திருந்த அவருக்கு, என் பேச்சு ஒரு புதிர்போல இருந்தது. ஆனாலும் அது தன்னை எதிர்நோக்கியுள்ள அவல நிலையிலிருந்து விடுபட ஒரு வழியைத் தோற்றுவிக்கும் என்ற நம்பிக்கையை அவரிடத்தில் அரும்பச் செய்துவிட்டது.

அன்னை மையத்தைப்பற்றி அவர் கேள்விப்பட்டிருந்தார். ஆனால் அவர் அங்குச் சென்று வழிபட்டதில்லை; அன்னையைப்பற்றி அறிந்திருக்கவுமில்லை.

"அன்னையைப் பிரார்த்தனை செய்துகொண்டால் உங்கள் பயிர் நிச்சயம் பிழைத்துக்கொள்ளும். ஆனால் "இது எப்படி நடக்கும்?" என்று சிந்தனையை முறுக்கிவிடல் கூடாது. "பயிர் பிழைத்துக்கொள்ளும்" என்று முழுவதுமாக நம்ப வேண்டும். அன்னையிடம், "பயிர் பிழைக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டு வாருங்கள்" என்றேன் நான்.

அவர் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். அக்கணமே சோர்வுக்குத் தீர்வு கண்டுவிட்டதைப் போன்றதொரு தெளிவு அவர் முகத்தில் தெரிந்தது. அதைக் கூர்ந்து நோக்கிய நான், "அவருடைய பயிர் நிச்சயம் பிழைத்துக்கொள்ளும்” என்று நினைத்தேன்.

மறுநாள் இரவு நல்ல மழை. "இங்கு பெய்கின்ற மழை அந்த விவசாயியின் கிராமத்திலும் பெய்தால், அவருடைய பயிர் பிழைத்துக்கொள்ளும். ஒருவேளை அங்கு பெய்கின்ற மழைதான் இங்கு பெய்கின்றதோ?' என்றெல்லாம் எண்ணிக் கொண்டேன் நான்.

அதற்குப் பிறகு பல நாட்கள் உருண்டோடிவிட்டன. ஒரு நாள் அந்த விவசாயி மலர்ந்த முகத்தோடு என் வீட்டிற்கு வந்தார். "நீங்கள் கூறிய வார்த்தைகள் என் சோர்வை அகற்றின; என் மனத்திலிருந்த அவநம்பிக்கையை விரட்டின; எனக்குத் தெம்பை அளித்தன; உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டதும் நேராக வீட்டிற்குச் சென்றேன். பணத்தை எடுத்துக்கொண்டு அன்னை மையம் சென்று அன்னையை தரிசனம் செய்தேன். அங்கு சென்றது அதுதான் முதல் தடவை. அங்கு எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. ஆம், நான் என்னை மறந்து நின்றேன். நான் என்ன வேண்டிக்கொண்டேன்! தெரியவில்லை. என் உடலில் ஆட்டம், அசைவில்லை. எதையாவது நினைத்து, நினைத்து கூச்சலிடும் மனத்தில் இப்பொழுது அலைகள் இல்லை. என்ன ஆனந்தம்! என்ன சுகம்! நான் எத்தனை நேரம் அப்படி ஓய்ந்தும், தோய்ந்தும் போயிருந்தேன்! காலத்தைக் கணக்கெடுக்க முடியாத தவிப்போடு கண்களைத் திறந்து பார்த்தேன். அங்கு வைக்கப்பட்டு இருந்த அழகிய மலர்கள் என்னை ஆசீர்வாதம் செய்தன. பலர் தியானம் செய்துகொண்டு நின்ற காட்சி, அது ஒரு தபோவனம் என்பதை மெய்ப்பித்தது. அமைதியும், ஆறுதலும் என் நெஞ்சம் எல்லாம் நிறைய, நான் மையத்தை விட்டுப் புறப்பட்டு ஊருக்குச் சென்றேன். வீட்டுக்குப் போய்ச் சேர்கின்றவரை எனக்கு எந்த நினைவும் இல்லை. பயிரைப்பற்றிய நினைவுகூட வரவில்லை.

அன்று இரவு நல்ல மழை! மையத்திற்கு போய் வந்த உடனேயே அன்னையின் "கருணை மழை" பெய்துவிட்டது. என் பயிரும் காப்பாற்றப்பட்டுவிட்டது. அன்னையின் அருளை எண்ணி மெய்சிலிர்த்தேன். நன்றியால் தழுதழுத்தேன். மறுநாள் பொழுது விடிந்ததும் நான் என் நிலத்தை நோக்கி ஓடினேன். ஆவலோடு பயிரைப் பார்த்தேன். நேற்றுவரை காய்ந்து போயிருந்த பயிர்கள், இப்பொழுது பசுமையாகத் "தளதள"வென்று இருந்தன. கிணற்றுத் தண்ணீரைப் பாய்ச்சி இருந்தால்கூடப் பயிர் இத்தனை நன்றாகத் தெளிந்து இருக்காது. பயிருக்குத் தேவை ஒரு பாட்டம் தண்ணீர்தான். அது இப்பொழுது தாராளமாகக் கிடைத்துவிட்டது. அதற்குப் பிறகு என்ன, மகசூல் எதிர்பார்த்ததை விட அதிகமாகக் கிடைத்தது. விலையும் சென்ற வருடத்தைவிட அதிகமாகக் கிடைத்தது. அதனால் கடன் முழுவதும் பாக்கி இல்லாமல் அடைந்ததோடு, போக இருந்த என்னுடைய மானம், மரியாதைகளும் காப்பாற்றப்பட்டன. அதற்குக் காரணம் அன்னையின் அளப்பரிய கருணை!" என்று பரவசத்தோடும், தழுதழுப்போடும் கூறி முடித்தார் அவர்.

ஆமாம், அன்னையின் கருணை அளப்பரியது. தம் அன்பர்களைக் காத்து ரட்சிக்க அது எப்பொழுதும் தயார் நிலையில் இருக்கின்றது.

தொடரும்....

******



book | by Dr. Radut