Skip to Content

07. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

13. கண்ணொளி

அவர் என் இனிய நண்பர். அன்னையின் நெடுநாளைய பக்தர். விவசாயம் அவருடைய தொழில்.

அன்றொரு நாள் நான் ஆரோவில்லிலிருந்து வந்த நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அச்சமயத்தில் என்னைப் பார்ப்பதற்காக வந்திருந்த அந்த நண்பர் என் அறைக்கு வெளியே காத்துக்கொண்டு இருந்திருக்கிறார். அது எனக்கு முதலில் தெரிவிக்கப்படவில்லை. எங்களுடைய பேச்சு இப்போதைக்கு முடியும் போலத் தோன்றவில்லை. அது நீண்டுகொண்டே போயிற்று. அந்த நிலையில் எனக்காக வெளியே காத்துக்கொண்டிருக்கும் அந்த நண்பரைப் பற்றிய செய்தி கிடைத்தது.

நான் பேச்சை நடுவில் நிறுத்திவிட்டு எழுந்து போய் நண்பரைச் சந்தித்தேன். அவர் அத்தனை நேரமாகக் காத்துக்கொண்டு இருந்ததில் எனக்கு வருத்தம். "நீங்கள் வந்ததும் எனக்கு ஏன் உடனே சொல்லி அனுப்பவில்லை?' என்று நான் அவரிடம் கேட்க நினைத்தேன். ஆனால் கேட்க முடியவில்லை. ஏனென்றால் அவருடன் இன்னும் இருவர் வந்திருந்தனர். அதனால்தான் அவர் தாம் வந்திருக்கும் தகவலை எனக்கு அனுப்பவில்லை என்பது புரிந்தது.

நண்பருடன் வந்திருந்தவர்களில் ஒருவர் அவருடைய நெருங்கிய உறவினர்; கல்லூரி மாணவர். அவர் கண் அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள இருப்பதாகவும், அன்னையின் பிரசாதத்தைப் பெற்றுச் செல்ல வந்திருப்பதாகவும் தெரிவித்தார் நண்பர். மறுநாள் அன்னையின் பிரசாதத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறினேன் நான். அவர்கள் போய்விட்டார்கள். அவர்கள் நாளைக்கு வரும்பொழுது மாணவரின் கண் சரியாவதற்கு வேறொரு வழியைக் கூறலாம் என்று தீர்மானித்துக்கொண்டேன்.

மறுநாள் என் நண்பரும், அந்த மாணவரும் நான் வரச் சொன்ன நேரத்திற்குச் சரியாக வந்து சேர்ந்தார்கள். ஆசிரமத்திலிருந்து வாங்கி வைத்திருந்த பிரசாதத்தை மாணவரிடம் கொடுத்தேன். அவரை அன்னையின் பக்தர் என்று கூற முடியாது. ஆனால் அவர் என் நண்பரோடு பல தடவைகள் ஆசிரமத்திற்கு வந்திருக்கிறார். அன்னையின் பல தரிசனங்களுக்குக்கூட நண்பருடன் வந்திருக்கிறார். அவர் தம் சொந்த வேலை காரணமாக என் நண்பரைப் பார்க்க வரும்பொழுதெல்லாம் அந்த மாணவர் அவரோடு சேர்ந்து ஆசிரமத்திற்கு வந்து போவார். அதன் மூலம் அன்னையின் அருளைப் பெறுவதற்குரிய பாத்திரமாக இருந்தார் அவர்.

அன்னையின் பிரசாதம் கிடைத்ததில் அந்த மாணவருக்குப் பரம திருப்தி. இருவரும் விடை பெற்றுக்கொள்வதில் அவசரத்தைக் காட்டினார்கள். விசாரித்தேன். அவர்கள் சமாதி தரிசனத்திற்குச் செல்ல இருக்கின்றார்கள் என்பது தெரிய வந்தது.

அதற்கு முன்னால் நான் அந்த மாணவரிடம் தெரிவிக்க நினைத்ததைச் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தேன். நான் அதைச் சொல்வதற்கு முன்னால் மாணவரின் கண்ணைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள விரும்பினேன். கேட்டேன்; அவர் தெரிவித்தார்.

"எனக்குச் சிறு வயதிலிருந்தே ஒரு கண்ணில் பார்வை இல்லை. மற்றவர்களுக்கு என்னுடைய ஒரு கண் பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெரியாத அளவில், அந்தக் கண் அமைந்திருக்கிறது. பல தடவை அது சம்பந்தமாக நான் வைத்தியரிடம் சென்றேன். அவர் ஒவ்வொரு தடவையும், "நீ கட்டாயம் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்" என்று கூறுவார். ஆனால் எனக்கோ, என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ அறுவை சிகிச்சை செய்து கொள்வதில் உடன்பாடில்லை. அறுவை சிகிச்சை பெறாமலே கண்ணைச் சரி செய்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன். "அறுவையைத் தவிர்த்துக் கண்ணைச் சரி செய்யும் சிகிச்சையை எந்த ஒரு வைத்தியராவது அளிக்க மாட்டாரா?" என்ற கேள்விக்குறியோடு நான் எந்த ஊருக்குச் சென்றாலும், அல்லது எங்கள் ஊருக்குப் புதிதாக எந்த ஒரு வைத்தியர் வந்தாலும் ஆவலோடு சென்று என் கண்ணைக் காட்டி, அவர்கள் கருத்தைக் கேட்பேன். அவர்கள் அனைவரிடமிருந்தும் கிடைத்த ஒரே பதில், "நீங்கள் கட்டாயம் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்' என்பதுதான்.

நான் கல்லூரியில் சேர்ந்தவுடன் அதிகமாகப் படிக்க வேண்டியதாயிற்று. அது என் பழுதுபட்ட கண்ணுக்குச் சோதனையாகவும், வேதனையாகவும் அமைந்துவிட்டது. நான் படும் துன்பத்தைக் கண்ட என் பெற்றோர் வருந்தினார்கள். "இனி அலட்சியம் காட்டக்கூடாது; அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழி இல்லை" என தீர்மானித்து, சென்னையில் உள்ள ஒரு கண் மருத்துவரிடம் என்னை அழைத்துச் சென்றார்கள். அவர் என் கண்ணைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, "உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்" என்று கூறி, அதற்காக ஒரு தேதியையும் குறிப்பிட்டுவிட்டார்.

நான் அறுவை சிகிச்சைக்குக் கிளம்புமுன் அன்னையின் பிரசாதத்தைப் பெற்றுத் தருமாறு என் மாமாவிடம் (அதாவது, என் நண்பரிடம்) கேட்டேன். இப்பொழுது அது கிடைத்துவிட்டது. என் மாமா அன்னையைப் பற்றியும், அன்னையின் சக்தியைப் பற்றியும், பிரசாதத்தின் மகிமையைப் பற்றியும், அவை சம்பந்தப்பட்ட பல நிகழ்ச்சிகளைப் பற்றியும், மற்றவர்களிடம் கூறக் கேட்டு இருக்கின்றேன். ஆனால் அவை எனக்கு அவ்வளவாகப் புரிவதில்லை என்றாலும், "அன்னை மகத்தான சக்தி படைத்தவர். பக்தர்களின் துன்பங்களைப் பனி போல மறையச் செய்பவர்" என்பது எனக்குப் புரிந்திருக்கிறது. அந்த நம்பிக்கையின் உந்துதல் காரணமாக அன்னையின் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டுவிட்டேன். இனி நல்ல முறையில் அறுவை முடிந்து பார்வை கிடைக்க, அன்னை அனுக்கிரகம் செய்வார் என உறுதியாக நம்புகின்றேன்".

அந்த மாணவர் கூறியதைக் கேட்டவுடன், அவரிடம் தெளிவான நம்பிக்கை இருக்கின்றது என்பதை உணர்ந்தேன். "உங்கள் கண்ணுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படாது" என்றேன் நான்.

அதைக் கேட்டதும் அவருடைய கண்களில் ஒரு வியப்பு தோன்றி மறைந்தது. மேலும் அந்த மாணவர் நான் கூறியதை வாழ்த்தாகத்தான் ஏற்றுக் கொண்டாரே தவிர, நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் அவர் முக பாவத்திலிருந்து தெரிந்தது. ஆனால் "அறுவை சிகிச்சையை நல்ல விதமாக முடித்துக் கொடுத்து, கண் பார்வை ஏற்படுவதற்கு அன்னை வழி செய்வார்" என்ற அளவில் அவருக்கு நம்பிக்கை இருப்பதும் புரிந்தது.

"அன்னையிடம் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதே சமயத்தில் இதுவரை மருத்துவர்கள் திரும்பத் திரும்பக் கூறியதும் உங்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அறுவை சிகிச்சையை இன்றே செய்தால்தான் ஆயிற்று என்ற நிலையில் நீங்கள் இல்லாததால், உங்கள் பெற்றோரிடம் சொல்லி அறுவை சிகிச்சையை இரண்டு வார காலம் தள்ளிப் போடுவதற்கு ஏற்பாடு செய்துவிட்டு, அன்னை காட்டியுள்ள வழியைக் கையாண்டு உங்கள் கண்ணில் உள்ள குறையை நீக்கிக்கொள்ள முயல வேண்டும். இதை நீங்களும், உங்கள் பெற்றோரும் ஏற்றுக்கொண்டால் மகிழ்ச்சியாக இருக்கும்.

"கண் பார்வையை எப்படிச் சிறப்பாக வளர்க்க வேண்டும்?" என்ற பயிற்சியை அளிக்க, ஆசிரமத்தில் ஒரு பள்ளியை அன்னை நடத்துகின்றார்கள். புகழ் பெற்ற மருத்துவர்கள் அந்தப் பள்ளியை நடத்தி வருகின்றனர். மேல்நாட்டு மருத்துவ முறை ஒன்றை அடிப்படையாக வைத்து, இந்தக் கண் பயிற்சியை அவர்கள் உருவாக்கியுள்ளார்கள். ஆனால் இதில் அன்னையின் அருட்சக்தி மேம்பட்டு நின்று செயல்படுவதால், பயிற்சியினால் ஏற்படும் விளைவு மருத்துவ முறையினால் மட்டும் ஏற்படுவதில்லை. ஆகவே நீங்கள் அங்குச் சென்று உங்கள் கண்ணைக் காட்டுங்கள். அங்குள்ளவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்க்கலாம். நல்ல பலன் ஏற்படுமானால், அது அன்னையின் அருளினால்தான் கிடைத்ததாக இருக்கும்" என்றேன் நான்.

அதைக் கேட்டதும் இருவருக்கும் மிக்க மகிழ்ச்சி. "அறுவை சிகிச்சையை நீக்கிக்கொள்ள வழி இருக்கும்போல் இருக்கின்றதே!" என்ற நம்பிக்கை அவர்கள் மனத்தில் வேரூன்றிப் பரவுவதை உணர்ந்தேன். அதற்குப் பிறகு அதை வலுப்படுத்துவதைப் போல அமைந்தது அந்த மாணவரின் செய்கை.

அவர் தம் பெற்றோரிடம் சென்று நான் கூறியதை எல்லாம் தெரிவித்து, அவர்கள் அனுமதியைப் பெற்று, ஆசிரமத்தின் கண் பள்ளிக்குச் சென்றார். அவருடைய கண்ணைப் பரிசோதித்த மருத்துவர், "இங்கு கொடுக்கப்படுகின்ற பயிற்சிகளைத் தொடர்ந்து 30 நாள்கள் செய்து வந்தால், பார்வை ஏற்பட வழி இருக்கின்றது" என்றார். அதனால் மாணவரின் நம்பிக்கை மேலும் உறுதிப்பட்டுவிட்டது.

"பயிற்சிகளைக் கற்றுக்கொள்ள 7 நாள்கள் போதுமானவை. பிறகு நீங்கள் அந்தப் பயிற்சிகளை உங்கள் வீட்டில் இருந்தபடியே செய்துகொள்ளலாம். எது செய்தாலும், முடிவில் கண் பார்வை கிடைக்க வேண்டுமானால், அதை அன்னையின் அருள்தான் பெற்றுத் தர வேண்டும்'' என்று தெளிவாகக் கூறினார் அந்த மருத்துவர்.

என் நண்பரும், அந்த மாணவரும் கண் பள்ளியிலிருந்து பூரணமான நம்பிக்கையோடு திரும்பி வந்தார்கள். கடந்த 20 வருடங்களாக "அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியே இல்லை' என்று மருத்துவர்கள் கூறி வந்தது, இன்று வேறு விதமாக மாறிவிட்டிருக்கின்றது. "அது எப்படி?" என்பது என் நண்பருக்கோ, மாணவருக்கோ புரியவில்லை. அறிவால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடியதில்லையே அது!

அதன் பிறகு என்னை அடிக்கடிச் சந்தித்த என் நண்பர், மாணவர் கண் பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்று வருவதையும், அதில் அவர் தீவிரமாக முன்னேறி வருவதையும் தெரிவிப்பார். ஒரு வாரத்திற்குப் பிறகு கிடைத்த செய்தி ஆச்சரியமானதாக இருந்தது. அவரின் கண் பார்வையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றதாம்! இன்னும் பல நாள்களுக்குப் பின்னால் ஏற்பட வேண்டிய முன்னேற்றம், அவருக்கு இப்பொழுதே கிடைத்திருக்கின்றது. பிறகு என்ன, அவருக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. அவர் பயிற்சிகளைத் தொடர்ந்து தீவிரமாகச் செய்தார். ஒரு கண்ணுக்குள் புதைந்து கிடந்த பார்வை, மெல்ல மெல்ல மேலே வந்து ஒரு விடியலுக்குத் தயாராகிக்கொண்டிருந்தது. இரண்டே மாதங்களுக்குள் அந்தக் கண் முழுப் பார்வையையும், ஒளியையும் பெற்றுவிட்டது.

பயிற்சிகள் முடிந்து பலனைப் பெற்ற பின்பு ஒரு நாள், அந்த மாணவரை அழைத்துக்கொண்டு என்னைச் சந்திக்க வந்திருந்தார் என் நண்பர். எப்பொழுதும் துன்ப அலைகள் வீசிக்கொண்டிருக்கும் அந்த மாணவரின் முகத்தில், இப்பொழுது அமைதியும் ஆனந்தமும் நிரம்பியிருந்தன. காலம் எல்லாம் அணைந்து போய்க் கிடந்த அந்தக் கண்ணில் இப்பொழுது ஒளி வீசிக்கொண்டு இருந்தது.

என் நண்பர் மூலமாக அந்தச் செய்திகளில் சிலவற்றை அப்பொழுதுதான் அறிந்துகொண்ட நான், "அந்த மாணவர் என்ன சொல்லப் போகிறார்?" என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவர் பக்கம் திரும்பினேன். மகிழ்ச்சியாலும், நன்றியாலும் தழுதழுத்துக்கொண்டிருந்த அவரால் எதுவும் பேச முடியவில்லை.

"அன்னையின் அருளால் பட்ட மரமும் துளிர்க்கும், பாலைக்கும் பார்வை கிடைக்கும்" என்பதை அவரின் தவிப்பும், தழுதழுப்பும் கூறாமல் கூறின.

தொடரும்....

********

ஜீவிய மணி
 
நாம் அன்னையை ஏற்றுக் கொண்டாலும்
வேண்டியவர்களிடம் உள்ள நெருக்கம்
(emotional closeness)
அன்னையிடம் இருப்பதில்லை என்பதே உண்மை.
அன்னை மீது பக்தி; நம்மவர் மீது பிரியம்.
நம் பக்தி பிரியத்தைப் போல் ஆழ்ந்திருப்பதில்லை.
ஆழ்ந்துள்ளவருக்கு பிரச்சினை என்பதே இல்லை.
 

********



book | by Dr. Radut