Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/70) மேல் எழுந்த ஜீவன் என்பது உடல், உள்ளம், மனம் ஆகும். மனிதன் என நாம் அறிவது முழுவதும் மேல் நிலை ஜீவனாகும்.

  • முழு மனிதனும் மேல் நிலைக்குரியவன்.
  • சிறு குழந்தைகள், கிராமத்து படிக்காத மக்கள் உலகத்தை அறிவது அவர்கள் பெறும் பலனால் அறிவதேயாகும்.
  • உலகத்து மக்கள் அனைவரும் டெக்னாலஜி, சர்க்கார், சமூகம், பருவம் போன்றவற்றுள் சிறு குழந்தைகள் போன்றவரே.
  • ஒரு பெரிய எழுத்தாளர் அல்லது கவியின் எழுத்துக்களை ஆராய்ந்தவர் அதைக் கடந்து அவர் மனத்தை அறிய முயன்றால், அவர் அறிவுக்கும் நம் மனத்திற்கும் உள்ளது தூரமில்லை, யுகங்கள் கடந்தவை எனப் புரியும்.
  • ஒரு ஆசிரியர் பல பாத்திரங்கள் மனத்தை அறிந்து பேசுவதை நாம் கற்பனையாலும் அறிய முடியாது.
  • அரிஸ்ட்டாடில் 400 புத்தகம் எழுதினார். அலெக்ஸாண்டர் டுமாஸ் 438 புத்தகம் எழுதினார். வியாசர் எழுதியவை உலகத்தையேயுட்கொண்டது. வால்மீகி இராமாயணமும், கம்பன் இராமாயணமும் அளவிலே கடல், பெரியது. நம் அறிவோடு ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை.
  • பஞ்சாங்கம் எழுதும் சாஸ்திரியும், அரசியல் சட்டம் எழுதிய நிபுணர்களும், சங்கரர் போன்ற சிறு வயது மேதைகளின் அறிவும், ஸ்ரீனிவாச இராமானுஜத்தின் கணித அறிவும் எளிய மனிதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியதில்லை.
  • மேல் மனம் பள்ளிப் படிப்பைப் போன்றது. முழு மனம் நூல் நிலையம் போன்றது. ஏணி வைத்தாலும் எட்டாதது.
  • முழு மனம் கடல், மேல் மனம் உப்பங்கழி.
  • முழு மனம் நாட்டின் பார்லிமெண்ட் தேர்தல். மேல் மனம் உள்ளூர் கோவாப்ரேட்டிவ் சொஸைட்டி தலைவர் தேர்தல்.
  • மேல் மனம் தனி மனிதனின் ஏட்டுப் படிப்பு. முழு மனம் ஞானியின் ஞானம்.
  • மனிதன் வீடு கட்டி ஓர் அறையில் பல ஜன்னல்கட்கிடையே ஆசனத்திலமர்ந்து காற்றோட்டத்திற்காக மின் விசிறியைப் பயன்படுத்துவது மேல் மனம். மொட்டை மாடியின் காற்றோட்டமும், கடற்கரையின் சுதந்திரமும் முழு மனத்திற்குரியவை.
  • பிரம்மம் தன்னை ஒரு குறிப்பிட்ட லோகத்தில் சுருக்கியது பிரபஞ்சம். பிரபஞ்சத்தை அறிவது பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ள அடிமனம். பிரம்மத்தை அறிவது ஐக்கியம். ஐக்கியத்துடன் நேரடி தொடர்புள்ளது யோகியின் ஞானம். அதிலிருந்து பிரிந்து பகுதியாக - கீழ்ப் பகுதியாக - எழுந்தது பிரபஞ்சம். பிரபஞ்சத்தை அதன் அஞ்ஞானம் மூலம் அறிவது அடிமனம். அடிமனம் உள் மனம் வழியாகச் சுருங்கி, தலைகீழ் மாறி ஒருவருடைய மனமாக அகந்தை, காலம், கண்டம், மனம் வழி செயல்படுவது மேல் மனம்.
  • மனிதன் முழுமையானவன், தன் முழுமையை அறியாதவன்.
  • முழுமை பாதாளத்தையும், பரமாத்மாவையும் சேர்த்தது.
  • அதன் ஒளிமயமான மேற்பகுதி பரமாத்மா.
  • அடி மனம் முழுமையின் இருள்மயமான பகுதி.
  • மேல் மனம் அடி மனத்தின் கடுகு போன்ற சிறு பகுதி.
  • மேல் மனத்தால் செயல்படும் மனிதன் அதுவே முழு மனம் என அறிகிறான்.
  • முழு மனமும் அடி மனம் மூலம் தனக்குண்டு என அறிய முடியாதவன் மனிதன்.
  • அடி மனத்திலுள்ளவனுக்கு எவர் எண்ணமும், எந்த இடத்து நிகழ்ச்சியும், எந்தக் காலத்து நடந்தவையும் தெரியும்.
  • சூட்சும மனம் அடி மனத்தைப் பெரும்பாலும் அறியும்.
  • பாரதப் போரைக் குருடனான திருதராஷ்டிரன் பார்க்க விரும்பிய பொழுது கிருஷ்ண பரமாத்மா சஞ்சயனுக்கு சூட்சும திருஷ்டியைத் தந்து அதன் மூலம் போரைத் தெரிவித்தார்.

******

II/71) மாயை வரையறுக்கிறது. மனம் துண்டாடுகிறது. அறியாமை அறிவை விட்டு விலகி ஒருமைப்படுகிறது. அகந்தை சேகரம் செய்கிறது. அகந்தை ஒரு பிறப்புக்குரியது. மற்றவை பொதுவான சக்திகள். பிறவி முடிந்தாலும் தொடரும்.

  • மாயையும், மனமும், ஞானமும் அகந்தையைக் கடந்த அதிகாரமுள்ளவை.
  • மாயை என்பது இல்லாதது, மாயமாய் மறைவது, புரியாமல், புரிந்து கொள்ள முடியாமல் எழுந்து திடீரென மறைவது என உலகம் அறியும்.
  • இச்சொல் வேத காலத்தில் முதலில் எழுந்தது.
  • உலகத்தின் ஆதியை வேதம் பிரம்மம் என்றது.
  • உலகம் பிரம்மத்தினின்று எழுந்தது. எப்படி என நாமறியோம் என்றனர்.
  • பிரம்மம் உருவமற்றது, சக்தியோ, குணமோ இல்லாதது. காலத்தைக் கடந்தது. எல்லாம் வல்லது, எல்லாமறிந்து, எந்த நேரமும் எந்த இடத்திலும் ஆனந்தமானது என்றனர்.
  • மாயை பிரம்மத்தின் இயற்கை என்று பகவான் கூறுகிறார்.
  • மயன், தெய்வ லோக சிற்பியாகும். அவன் பெற்ற சக்தி மாயை.
  • வேதம் மாயைக்குப் பொருள் கூறியது. அளவிட்டு, வரையறை செய்து, வெட்டிப் பிரிப்பது என்றது.
  • பிரம்மம் சிருஷ்டிக்கப்படவில்லை. பிரம்மம் சிருஷ்டிக்காதது. என்றாலும் அனைத்தையும் பிரம்மம் தன்னுட்கொண்டது என்பது பகவான் கூறுவது.
  • பிரம்மம் சிருஷ்டிக்கப் பயன்படுத்தும் 3 சக்திகள்: சுய சிந்தனை, சுய அளவு, சுய கிரகிப்பது.
  • சிந்தனையால் பிரம்மம் அசையாத சத்தியத்தை அசையும் சத்தியமாக்குகிறது.
  • அசையாத சத்தியம் சாரமான சக்தியைப் பெற்றுள்ளது.
  • அசையும் சத்தியம், முறையான சக்தி சிருஷ்டிக்குரியது.
  • இந்த மாற்றத்தைச் செய்வது மாயை.
  • பிரம்மத்தின் புறம் சச்சிதானந்தம்.
  • சச்சிதானந்தத்தின் புறம் சத்திய ஜீவியம்.
  • சத்திய ஜீவியம் காலத்தால் இரண்டாகப் பிரிகிறது.
  • அவற்றிடையே உற்பத்தியாவது மனம்.
  • பிளவால் உற்பத்தியான மனம் பிளக்கும் கருவி.
  • பிரம்மம் உலகை நாடும்பொழுது ஆன்மீகப் பொருளாகிறது.
  • ஆன்மீகப் பொருளை மனம் புலன் மூலம் காண்பது ஜடப்பொருள்.
  • ஜடத்தை மனமும் வாழ்வும் துண்டு செய்து, சேர்க்கின்றன.
  • துண்டானது அணுவாகிறது.
  • அணுக்கள் சேர்க்கப்பட்டது, அதன் தொகுதி, ஜடம்.
  • எனவே ஜடம் பிரம்மம்.
  • ஜடம் சித்தாகும்.
  • ஜடம் அனந்தமாகும்.
  • துண்டு தான் தனி என உணர்வது அகந்தை.
  • ஜடத்தின் அகந்தையை மேலும் பிரிக்க அது அனுமதிப்பதில்லை.
  • பிறவி முடிந்தால் அகந்தையும் அதன் நினைவும் முடிகிறது.
  • பிறவி முடிந்தாலும் ஜீவன் தொடரும்.
  • அதற்கு மறுபிறவி, புனர் ஜென்மம் எனப் பெயர்.
  • மறுபிறவியில் முன்பிறவி நினைவிருக்காது.
  • முன் பிறவியில் பெற்ற திறமை இப்பிறவியில் செயல்படும்.
  • புனர் ஜென்மத்தில் ஜீவன் வளரும்.
  • ஜீவனின் ஞானம் பரிணாமத்தால் வளர்கிறது.
  • ஜீவனின் பரிணாம வளர்ச்சியை ஆன்மீகப் பரிணாமம் என்கிறோம்.
  • பகவானுடைய யோகத்தின் மறு பெயர் ஆன்மீகப் பரிணாம யோகம்.
  • ஆன்மீகப் பரிணாம யோகம் முழுமையுடையது.
  • பூரணமான முழுமை (integrality) புதிய யோகத்திற்குரியது.
  • இதை முதலில் கூறியவர் பகவான் ஸ்ரீ அரவிந்தர்.

தொடரும்....

******

 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அழைப்பு வேறு, அன்னை வேறில்லை.
 

*******



book | by Dr. Radut