Skip to Content

09. நிதானம்

நிதானம்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

உடலில் வண்டு குடைந்து ரத்தம் வரும்பொழுதும் நிதானத்தை இழக்காதவன் க்ஷத்திரியன். வழக்கமாக மகன் தரும் நாற்பதாயிரம் ரூபாய் ஒரு மாதம் நாற்பத்தி ஐந்து அல்லது ஐம்பதாயிரமானால் பெறும் தாயாருக்கு நிதானம் போய் விடும். பத்தாயிரம் ரூபாய் அதிகமானால் சந்தோஷம் வரும். ஐம்பதாயிரத்தைப் பெற்ற தாயாருக்கோ தகப்பனாருக்கோ கை உதறும், சாப்பிடும் தண்ணீர் சிதறும். உடல், நிலையை இழக்கும். நிதானம் மறந்து போகும். நிதானம் வருவது பெரியது, நிலைப்பது அதனினும் பெரியது. தவறு செய்தவன் எவர் கண்ணிலும் படவில்லை எனில் அமைதியாக இருப்பான். தவறு செய்யக்கூடாது என்பதில்லை. மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதே அவனுக்கு முக்கியம். மனச்சாட்சியுள்ளவனுக்கு அது உறுத்தும். அவன் நிதானம் பறிபோகும். ஆபத்து என்றவுடன் நிதானம் போகும். இது ஆபத்து என்றறியும் அறிவு. அறிவில்லாதவனுக்கு நிதானம் போகாது. நிதானம் போகாவிட்டால் உயிர் போகும். சாதுவுக்கும் கோபம் வரும் என்ற நிலையில் நிதானமிருந்தால் பூரண யோகம் செய்ய முடியும். இறைவன் கனவில் வந்து தீட்சை தருவதுண்டு. அது எழுந்தபின் தெரியாது. சில சமயம் தெரியும். எழுந்தவுடன் உடலிலிருப்பது தெரியாது. மனம் ஜோதிமயமாக இருக்கும். உலகில் பிரச்சனைகள் அழிந்து விட்டதாகத் தோன்றும். இரவு, பகலாகத் தோன்றும். மீண்டும் மனித நிலை வரும்வரை சந்தோஷம் பொங்கி வரும். ஒரு பொருளைத் தொட்டால் பிறந்த குழந்தையைத் தொட்டது போலிருக்கும். ஆன்மிக மனநிலையும் தன் நிதானத்தை இழந்தது தெரியும். பரமஹம்சருடைய அத்தை மகன் அவர்மீது குறைப்பட்டதால், தன் கட்டை விரலை அவன் நெஞ்சில் பதித்தார். பெரு வெள்ளமாக ஞானம் அவன் உடலில் பாய்ந்தது. அந்த முரட்டு மனிதனுக்கு ஞானம் தகிக்கும் நெருப்பாயிற்று. ஓடினான், ஆடினான், கங்கையில் குதித்தான், அவன் நிதானத்தையும் நிலையையும் இழந்தான். அதைப் பரமஹம்ஸர் எடுத்த பின்னரே ஓய்ந்தான். உடலிலிருந்து உயிர் பிரிந்தால் உடல், நிலையான நிதானம் - மரணம் - பெறும். உள்ள நிதானத்தை இழக்கக்கூடாது என முயன்றால், ஏராளமான நிலைகள் நிதானத்தை இழக்கும் எனக் காணலாம். உள்ள நிதானத்தை உயர்த்த முயன்றால், உள்ளதைக் காப்பாற்றுவதே சிரமம் எனப் புரியும். நிதானம் நித்தியானந்தம். நிதானம் நித்ய பூரணம். பிள்ளையில்லாதவன் மனம் நிலையையிழக்கும். அது பெருங்குறை. அதைத் தீர்க்க வழியில்லை. அன்பர்கள் பலருக்கு அந்நிலையுண்டு. பிரார்த்தனையால் பெரும்பாலோர் குழந்தையைப் பெற்றனர். ஆசை பேராசையானால் கூலிக்காரன் முதலாளியாக நினைப்பான். முதலாளிக்கு முதலாளியாக நினைப்பான். அரசியலில் தொண்டர்கட்கு ஆசை வராத நிலையுண்டு. அவர் நிலை தொடர்ந்து உயரும். ஆசை பேராசையாகி பிசாசாக உலுக்குபவருண்டு. அவர்கள் M.L.A, M.P. பதவிகளைக் கருதுவதில்லை. முதல் மந்திரியாக நினைப்பதில்லை. பிரதமராக விரும்புவார். அது மணிக்கொரு முறை நிமிஷத்திற்கொரு முறை மனதில் உருவம் பெற்று, பிசாசாகி அவனைப் பல ஆண்டுகள் பிடித்துக் குலுக்கும். அது போன்றவர்க்கு நிதானமில்லை. உள்ள நிலையை விட்டு உயர்ந்த நிலையை பேராசையால் பெற விரும்பியவனுக்கு உள்ள நிலையும் போய் விடும். அதைப் பெற இந்த ஜென்மம் போதாது. நிதானம் என்றால் என்ன என சிந்தனை செய்பவருக்குப் பல விஷயங்கள் புரியும். தெம்பிருந்தால் நிதானமிருக்கும். பொறுமையிருந்தால் நிதானம் நிலைக்கும். ஆசையில்லாமலிருந்தால் அனைத்தும் உள்ளே நிதானம் பெறும்.

இராமபிரான் ஏகபத்தினி விரதமிருந்தார். மனைவியைப் பறி கொடுத்தார். பட்டத்தை ஏற்க வேண்டும் என்ற பொழுதும், துறக்க வேண்டும் என்ற பொழுதும் சித்திரத்திலலர்ந்த செந்தாமரையைப் போல் அவர் முகத்தில் மாறுதலில்லை. அது ஆத்மாவின் நிதானம். மனைவியை இழந்தபின் நிதானத்தை இழந்திருந்தால் மனைவியை மீட்டிருக்க முடியாது. நளன் நாட்டை இழந்தான். ஆனால் நிதானத்தை இழக்கவில்லை. நிதானத்தை இழக்காவிட்டால் இழந்தது மீண்டும் வரும். இராமபிரான் முனிவர் மன அவதாரம். முனிவர் மனம் மௌனத்தால் செயல்படுவது. மௌனத்தைப் பிரதானமாகக் கருதினால் அதன் எதிரான அம்சங்களும் வலுப்பெறும். துர்வாசர் முனிவர், அவதார புருஷனான கிருஷ்ண பரமாத்மாவுக்கு வரம் அளித்தவர். அவரிருப்பது முனிவர் மனம். மௌனம் சிறக்கும் பொழுது அதற்கெதிரான கோபமும் வளர்ந்து அவருக்குத் துர்வாச முனிவர் எனப் பேராயிற்று. லேடி அரபெல்லா சீமாட்டி. அவள் பெரும் சொத்து வில்லங்கமாயிற்று. மகன் 21 வயது அழகன். பணமுள்ள சீமாட்டி மகனை அழகுக்காக மணந்தால் சொத்து வில்லங்கத்தினின்று மீளும். ஆனால் மகன் ஏழை மேரியை மணக்க நினைக்கிறான். தாயாருக்கு மகனைக் கட்டுப்படுத்தும் வலிமையோ கண்டிக்கும் தைரியமோ இல்லை. ஏழை மேரியை விலக்குகிறாள். மகன் அவளைப் போய்ப் பார்ப்பதைத் தடுக்க முடியவில்லை. மேரியைப் போய்ப் பார்த்து “என் மகனை நீ சந்திக்காதே, மணக்காதே’’ எனக் கேட்கிறாள். மேரி மறுத்து விட்டாள். நிலைமை மாறியது. மேரியின் மாமா ரோஜர். அது மேரிக்கோ ரோஜருக்கோ தெரியாது. அவன் £300,000 சொத்துடையவன். அவன் இறந்தான். சொத்து மேரிக்கு வருகிறது. செய்தி கேட்டு மேரி அளவுகடந்து சந்தோஷப்பட்டாள். தனக்கு தடையான ஏழ்மை விலகியது என நினைக்கிறாள். அவள் காதலன் அதனை அறிந்து மகிழ்கிறான். அவன் தகப்பனாரும் அதைக் கேட்டு நிம்மதியடைகிறார். அவர் மனத்திலிருந்த கடன் பாரம் விலகுகிறது. மேரி, காதலன், அவன் தகப்பனாருக்கு செல்வம் வருவது பாரம் நீங்கி நிம்மதி வருவது. செய்தி லேடி அரபெல்லாவுக்கு வருகிறது. இதுவரை அவள் மனத்தில் மேரி மீது வெறுப்பிருந்தது. மேரியால் தன் குடும்பம் அழியும் என பயப்பட்டாள். இந்தச் செய்தி மேரி பணம் படைத்தவள் எனக் கூறுகிறது. அதனால் மகனை மணக்க மனம் சம்மதிக்கிறது. மனம் வெறுப்பிலிருந்து எதிராக மாறி விருப்பாக வேண்டும். மனம் அத்திறன் பெற்றதில்லை. மனம் செய்தியைச் சாட்டையடியாக, வெடி குண்டாக ஏற்கிறது. கேட்டவுடன் மூர்ச்சையானாள். மயக்கத்தில் மனம் மாற முடிவு செய்கிறது. பழைய மனம் அழியவும், புது மனநிலையெழவும் முடிவு செய்கிறது. முடிவை மாறிய மனம் ஏற்றவுடன் விழிப்பு வருகிறது. “Dear Mary” என்று கண் விழித்தாள். சிறிய மனம் பெரிய அதிர்ஷ்டத்தை மனம் எதிராக மாறி ஏற்க மயக்கமடைவது அதற்குரிய நிதானம். லூசி ஏழைப் பெண். லுப்டன் பிரபு. லுப்டனுக்குக் காதல் எழவில்லை. சந்தர்ப்பத்தால் லூசியை மணக்க முடிவு செய்கிறான். லூசிக்கு அது மலை. லுப்டன் தாயார் சம்மதிக்க மாட்டாள். அது தடை என்பதால் மறுத்து விடுகிறாள். தாயார் தடை விலகியது. திருமணம் முடிவு செய்யப்பட்டது. லூசிக்குத் தாங்க முடியாத தலைவலி. பிரபுவின் மனைவியாக தடைகள் விலகியபின்னும் பிரபுவை ஏற்கும் திறனற்ற மனம் வலிந்து வளர ஆரம்பிப்பது அவளுக்குத் தலைவலியாகிறது. மனம் நிதானமாக இருக்க முடியாத நிலை.

காமராஜரைப் பிரதமராக்க விரும்பியவர் பலர். பிரதமராகும் நிதானம் காமராஜருக்கில்லை. இருவரைப் பிரதமராக்கி அந்த நிதானத்தைப் பெற முயன்றார். முயற்சி தோற்றது. அரெஸ்ட் வாரண்ட் வந்தது. அன்னை தரிசனம் பெற்றவரை வாரண்டில் பிடிக்க முடியாது. வாரண்ட் செல்லுபடியாகவில்லை. காமராஜரின் நிதானம் மரணத்தால் பூர்த்தியாயிற்று.

தேவனுடைய துப்பறியும் சாம்பு ஐம்பது கதைகள். சாம்புவுக்கும் நிதானத்திற்கும் நேரடியான தொடர்பில்லை. இந்தக் கதைகளில் தேவனின் மேதைமை வெளிவருகிறது. மேலும் தேவனின் கதை வாழ்வின் மேதை வெளிவர உதவுகிறது. தமிழ் எழுத்தாளர் பத்து வருஷம் அடிக்கடி பாண்டிக்கு வருவார். அவருக்கு முதலில் கண்ணில் பட்டது ஆசிரமம் மற்றும் பாண்டி சொஸைட்டியில் ஆங்கிலம் பேசுவது. அவர் சென்னைவாசியாயிருந்தும் இங்கு ஆங்கிலம் அடிக்கடி காதில் விழுவது ஆச்சரியமாக இருந்தது. “அங்கு அனைவரும் ஆங்கிலம் பேசுகிறார்கள், செடி கொடி உள்பட பேசுவது ஆங்கிலம்’’ என்றார். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பதைப் போன்றது. வாழ்வு எப்பொழுதும் சம நிலையிலிருப்பதால் நாம் செயல்பட முடிகிறது. வாழ்வு சம நிலையைப் புரட்சிக் காலங்களில் இழக்கும். காற்று எந்த நேரம் வீசினாலும் சமநிலை பாதிக்கப்படாமல் வீசும். புயல், சூறாவளி சமயத்தில் சமநிலையை ஆகாயம் இழந்து விடும். ஒருவருக்கு அடுத்தவர் உதவினால் கொடுத்தவர் கொடுத்த அளவுக்குப் பெறுவார். கொடுப்பதும் பெறுவதும் சமமாக இருக்கும். எந்த வகையில் சமம் என்பது தெரிவது எளிதல்ல. ஆனால் அவை சமமாக இல்லாவிட்டால் வாழ்வு நிலைக்காது. தேவனின் மேதைமை கதைகளில் வெளிவருவதைவிட, தேவனின் மேதை வாழ்வின் மேதா விலாசத்தை வெளிக்கொணர உதவுவது எழுத்தின் சிறப்பு. சாம்புவுக்கு நாற்பத்தி மூன்று வயதில் வேலை போய்விட்டது. இவன் மடையன். தலை வழுக்கை, முகம் அசடு வழிகிறது. இவன் மூளை மடையன் மூளையாக அசடாக செயல்படுகிறது. வாழ்வில் ஞ்ஞுணடிதண் உண்டு. அது சில சமயம் வெளிப்படும். சிலர் சேர்ந்து இலட்சியமாகப் பேசும்பொழுது எவர் மனத்திலுமில்லாத ஒரு பெரிய காரியம் பேச்சில் எழும். அது பிற்காலத்தில் பலிக்கும். அதுவே வாழ்வு தன் மேதாவிலாசத்தை வெளியிடும் பாணி. அப்படி ஒரு பல்கலைக்கழகம் எழுந்தது. உலகில் சில பெரிய இயக்கங்கள் அப்படி எழுந்தன. நியூட்டனுடைய ஆகர்ஷண சக்தி அப்படி வந்ததாகும். ராஜாஜி அப்படியே சென்னை முதல்வரானார். மாணவத் தலைவர்களில் பெரும்பாலோர் அப்படி வந்தவர்களே. உப்புச் சத்தியாக்கிரஹம் அப்படியே வந்தது. வாழ்வு அறிவைக் கூர்மைப்படுத்தினால் நேர் எதிரே அறியாமை உருவம் பெறும். அதனுள் கூர்மையான அறிவைவிட அதிக புத்திசாலித்தனமிருக்கும். அதுவே சாம்புவின் ஆழ்மன நிலை. அது அவனுக்குத் தெரியாது. சாம்பு காசி யாத்திரை போன நாய். நாய்க்கு சுவாமி தரிசனம் சுகம். நம்மளவன் தொந்தரவு தாங்க முடியவில்லை என்பது போல் சாம்பு கண்டுபிடிப்பது தானே நடக்கிறது. போலீஸ், குற்றவாளி, பொருளைப் பறி கொடுத்தவன், பத்திரிகை நிருபர் தொந்தரவு அவனுக்குப் பெரிய தலைவலி. அவன் திருட்டைக் கண்டுபிடிக்க முனையவில்லை. சூழலில் திருடு, திருடியவனைக் காட்டிக் கொடுத்து, திருடிய பண்டத்தை எடுத்துக் கொடுப்பது மற்றவர்களைப் போலவே சாம்புவுக்கு ஆச்சரியம். அது ஆச்சரியமில்லை, வாழ்வின் சட்டம் Life Response என்பதை அன்பர் காண்பது ஆச்சரியம்.

மனிதன் அறிவோடு செயல்படுபவன் என்றால் அது கொஞ்சம் பேராகும். எந்த மனிதனும் வாழ வேண்டும். உடலும் உயிரும் ஒன்றாக இருக்க வேண்டும். அந்த அளவில் அது நிலையாக இருப்பது அவசியம். அது நிதானம். கடன் வாங்கியவர் கேட்காமல் திருப்பித் தர மாட்டார் என்பது உலக அனுபவம். கடன் சிறு தொகையானால் கைமாற்றாக தெரிந்தவர், வேண்டியவர்களிடமிருந்து பெறலாம். அவர்கட்குக் கொடுக்கலாம். இது நடைமுறை. இங்கிலாந்தில் கைமாற்று கேட்கும் பழக்கமேயில்லையெனலாம். இருந்தால் அது அரிபொருள். அங்கும் ஒரு நூலாசிரியர் புத்தகத்தைக் கடன் கொடுக்காதே, திரும்பி வராது. என் லைப்ரரியில் உள்ள எல்லாப் புத்தகங்களும் நான் பிறரிடமிருந்து பெற்றவையே என்று கூறுகிறார். மனித சுபாவம் பெற்றதைத் திருப்பித் தராது. சர்க்கார் கொடுத்த கடனைத் திருப்பித் தருவதில்லை. சொஸைட்டி கடன் கொடுத்தால் மீண்டும் வராது. சொஸைட்டியை மூட வேண்டும் என்பன நாட்டு நடைமுறைகள். இந்திய பாங்குகளில் இருபது ஆண்டிற்குமுன் 72,000 கோடி நிலுவையாகி அதை கான்சல் செய்தனர். வருஷத்தில் 200 கோடி விவசாயக் கடன் தருவதை வசூல் செய்ய முனைவதில்லை. இதுபோன்ற நிலையில் 65 பேர் பாங்க் கடன் பெற்றனர். பாங்கு பிராமிசரி நோட்டில் கையெழுத்துப் பெற்று பணம் கொடுத்தது. திருப்பித் தருவதைப் பற்றிப் பேச்சில்லை. வாங்கியவர்கள் கூடி பேசினார்கள். நாள் கடந்தும் பாங்கு வசூலிக்க முன்வரவில்லை. பாங்க் பணத்தைக் கேட்கவில்லை என்றவுடன் சந்தோஷம் வரவில்லை. திகில் வந்தது. மீண்டும் கூடிக்கூடி பேசினர். அறுவடை நெருங்குகிறது. பாங்கிலிருந்து எவரும் வரவில்லை. விவசாயிகட்குப் புரியவில்லை. புது அனுபவமாகிறது. பாங்கிடம் பணத்தை மீட்டும் பவர் ஒன்றிருக்கிறது. நமக்குத் தெரியவில்லை. அதனால் பாங்க் வசூலுக்கு வருமுன் நாமே பணத்தைக் கட்டிவிட வேண்டும் என விவசாயிகள் முடிவு செய்தனர். அதேபோல் பணத்தைக் கட்டினர். நிதானம் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பொய்யனுக்கும் மெய்யனுக்கும் எவருக்கும் வாழ நிதானம் தேவை. அந்த நிதானத்திற்குரிய அறிவுண்டு. அதைப் பொதுவாக மக்கள் அறிவார்கள். அது இல்லாமல் வாழ முடியாது. அன்னை சூழலில் பாங்க் பணம் கொடுத்ததால் இங்கு ஏற்படும் நிதானம் மெய்யின் அடிப்படையிலிருக்கும். திருடனுக்கும் வாழும் நிதானம் உண்டு. அதற்குரிய அறிவுண்டு. அறிவின் அஸ்திவாரமில்லாமல் மனித வாழ்வில்லை. திருடன், கொலைகாரன், கொள்ளையடிப்பவருக்கு அஸ்திவாரமான அறிவுண்டு. உலகில் ஏற்பட்ட பெரும் பணமெல்லாம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்பது கார்ல் மார்க்ஸ் கூறிய தத்துவம். ஓடும் ரயிலுக்கும் ஓடுவதற்கான நிதானமுண்டு. சந்திர மண்டலம் போகும் ராக்கெட்டிற்கும் அதற்குரிய நிதானம் உண்டு. சூரிய மண்டலம் சுழலுகிறது. பிரபஞ்சமே அசைகிறது. வாழ்வென்றிருந்தால் அங்கு அடிப்படையில் நிதானம் உண்டு. அசைவு, ஓட்டமிருந்தால் அதற்கும் அடிப்படை நிதானமே. நிதானம் நித்ய ஸ்வதந்திரம்.

ஒரு வேலையை நிதானமாக செய்கிறோம். அடுத்த வேலை பாதியில் வந்தால் நிதானம் குலையும். மூன்றாம் வேலையும் நான்காம் வேலையும் உடன் வந்தால் கைகால் ஓடாது. தலைகால் புரியாது என்பது அனுபவம். செயல் காலத்திற்குக் கட்டுப்பட்ட நிலையிது. காலம் செயலுக்குக் கட்டுப்பட்டால், செயலைக் காலம் ஏற்கும். செயல் முடியும்வரை காத்திருக்கும். காலம் ஆத்ம வெளிப்பாடு. காலம் கட்டுப்படுவது என்பது ஆத்மா கட்டுப்படுவது. ஆத்மா செயலுக்குக் கட்டுப்படுகிறது எனில் நம் செயல் ஆத்ம கதியை ஏற்கிறது எனப் பொருள். Pride and Prejudice, கோமதியின் காதலன் ஒரு அம்சத்தில் ஒன்றானவை. Pride and Prejudice-இல் பாத்திரங்கள் காலத்திற்குக் கட்டுப்பட்டு ஒரு ஆண்டில் கதை பூர்த்தியாகிறது. தேவன் இங்குக் காலத்தைப் பாத்திரங்கட்குக் கட்டுப்படுத்தி நான்கு நாளில் கதை நிறைகிறது. நமக்கு முக்கியத் திருமணமும் முக்கிய வேலையும் ஒரே சமயத்தில் வந்து திண்டாடுவதுண்டு. 1958 முதல் 1981 வரை 23 ஆண்டுகளில் 115 தரிசன நாட்களில்   வேறு முக்கிய வேலை எனக்குக் குறுக்கே வரவில்லை. நாம் சமர்ப்பணத்திற்குக் கட்டுப்பட்டால் காலமும் நிகழ்ச்சியும் முரண்பாடின்றி நகரும். செயலுக்குப் பின் காலமும், காலத்தின்பின் சமர்ப்பணமும் உள்ளன. சமர்ப்பணத்தை ஏற்றால் நிதானம் வரும். Raphael உலகப் பிரசித்தி பெற்ற ஓவியர். பிரான்ஸில் ஒரு ஓவியர் ஒரு பெண்ணில் தன்னை இழந்து விடுகிறார். அவள் அடுத்தவனை நாடுகிறாள். ஓவியர் என் பக்கத்தில் நீயிருந்தால் Raphael படத்தில் ஒரு கோடு நான் போடுவேன். அதன் மதிப்பு வெகுவாக உயரும் என்றார். அவர் மனம் பெண்ணில் தன்னை இழந்தது. அவர் Raphael போன்றவராக முடியாது. திறமை மட்டும் இருந்தால் அது பிரகாசிக்காது. திறமை நிதானத்தால் பிரகாசமடையும். 10 வயது குழந்தைக்கு பெரும் திறமையிருந்தால் பெற்றோரால் அவனுக்கு நிதானம் தர முடியுமானால், பிள்ளை சிறப்படைவான். நிதானம் யோகத்தை ஏற்றவர்க்கு வரும். யோகம் பலித்தால் உயர்ந்த நிதானம் வரும். அது ஆத்ம நிதானம். யோகம் பலிக்காவிட்டால் வாழ்வின் நிதானம் மனத்தில் பலிக்கும். நமக்கு நிதானமானவர்களை நினைத்துப் பார்த்தால் அவர்கள் எல்லாம் வாழ்வில் உயர்ந்திருப்பார்கள். கல்கி எழுதிய கதையில் பாம்புக் கடியை மந்திரத்தால் முறிக்கும் அய்யர் ஒரு போஸ்ட் மாஸ்டர். அவர் காந்திஜியை போற்றுபவர். அவரால் தீண்டாமை ஒழிப்பை ஏற்க முடியவில்லை. இன்ஸ்பெக்க்ஷனுக்கு வந்த பெத்தண்ண பிள்ளை போஸ்ட் மாஸ்டர் ஒரு விஷக்கடியை உயிர்ப்பித்ததைக் காட்டினார். இந்த மந்திரம் தீட்டுப்பட்டால் பலிக்காது. மீண்டும் குளித்து விட்டு வந்து மந்திரிக்க வேண்டும் என்றார். அவர் கூறுவது 500 ஆண்டிற்குமுன் சரி. காலம் மாறி விட்டது. தீண்டாதவனின் ஜீவியமும் படிப்பாலும் நாகரிகத்தாலும் மாறி உயர்ந்து விட்டது. இன்று மந்திரவாதி சொல்வது சரியில்லை. காந்திஜி சொல்வது சரி. இன்ஸ்பெக்டர் பெத்தண்ண பிள்ளை தான் ஒரு தீண்டாதவன் என்று கூறினார். நிதானம் காலத்திற்கேற்றவாறு சாஸ்த்திரத்தை மாற்றி நடைமுறைக்குக் கொண்டு வரும். அன்று விலக்கியதை இன்று ஏற்க நிதானம் தேவை. வெளியில் போய் திரும்பிய தம்பதிகள் தங்கள் வீட்டின் முன் கூட்டமும் மாடியில் அவர்கள் சிறு குழந்தை மதில் மேல் தவழுவதையும் கண்டனர். ஓடிப்போய் குழந்தையைக் காப்பாற்றினர். நிதானத்தை இழக்காவிட்டால் நிதானம் காப்பாற்றும். இங்குத் தேவைப்படும் நிதானம் உடலுக்கும் உயிருக்கும் உடைய நிதானம். ஓராண்டில் சத்யவான் ஆயுள் முடியும் எனத் தெரிந்து சாவித்ரி அவனை மணந்தாள். Calm was her face, courage was mute முகம் அமைதியாயிற்று தைரியம் சொல்லிழந்தது. சூரிய புத்ரியான சாவித்ரி பூமியின் ஆத்மாவான சத்யவானை மணந்து, அவன் மரணத்தை வென்று திருவுருமாற்ற காலனை அழித்து, அவனை ஒளிமயமான தேவதையாக்கி, சத்யவானுடன் இறைவனைக் கண்டு, அவர் காட்டும் ஆசையை மறுத்து பூமியில் இறைவனின் திருவுள்ளத்தை நிலைநாட்ட முன் வருகிறாள். திருமணத்தின் போது அவள் நிதானம் மனித மனத்தைக் கடந்தது. சத்தியவான் மரணமடைந்தபொழுது நிதானம் அவள் ஆத்மாவிற்குயர்ந்தது. சுமார் நூறு பக்கங்களில் எமனும் சாவித்திரியும் உரையாடுவதை காவியம் கூறுகிறது. அவள் பேச்சைக் கேட்ட காலன் “நீ யார்? அனந்தம் உன் குரலில் தொனிக்கிறதே! நீ லோக மாதாவா? அப்படியானால் உன் திருமுகத்தைக் காட்டு” எனக் கேட்கிறான். அதைக் கண்டு அவன் இருள் கரைந்தது. சத்தியவான் உயிர் பெற்று எழுகிறான். அவளுக்கு என்ன நேர்ந்தது, தனக்கு என்ன நிகழ்ந்தது என அவனால் அறிய முடியவில்லை. அனைத்தும் க்ஷணத்தில் நடந்தது போலவும் பல ஆண்டுகள் கழிந்ததாகவும் தோன்றுகிறது. இருவரும் கைகோர்த்துக் கொண்டு போகும்பொழுது பார்வையையும் நாட்டையும் மீண்டும் பெற்ற தகப்பனார் ராஜாவாக பரிவாரங்களுடன் எதிரில் வருகிறார். அனைவரும் அவள் முகத்தின் ஜோதியைக் கண்டு வியந்தனர். பிரமித்தனர். அவள் மனித உருவின் அம்சமாக நடக்கிறாள். அவளுடைய நிதானம் நம் கற்பனையைக் கடந்தது.

பிரியம் ஏற்பட்டால் ஸ்பர்சம் - தீண்டுவது - அதைப் பூர்த்தி செய்யும். தொண்டனுக்குத் தலைவர்மீது பிரியம். சிஷ்யனுக்குக் குருவின் மீது பிரியம். பையனுக்குப் பெண்ணின் மீது பிரியம். ஏழைக்குப் பணத்தின் மீது பிரியம். பேராசைக்காரனுக்கு ராஜ குமாரி மீது பிரேமை. தீண்டும் சந்தர்ப்பம் இங்கு எங்கும் எழாது. தீண்டுவது பாஸிட்டிவாக இருக்கும். நெகட்டிவாக இருக்கும். தொண்டரைத் தலைவர் கடிந்து கொள்வது, குரு சிஷ்யனை கோபத்தால் ஆள்வது, இளைஞனைப் பெண் காரமாகத் திட்டுவது, காதலன் பின் தொடரும் பெண்ணை வெறுப்புடன் விலக்குவது ஆகியவையும் ஸ்பர்சமே. நெகட்டிவ் ஸ்பர்சம். நெகட்டிவ் ஆனாலும், எதுவும் கிடைக்காதவனுக்கு ஸ்பர்சம் ஏதோ ஒரு வகையில் கிடைத்தவுடன் அவன் அக மகிழ்ந்து போகிறான். அம்மனநிலையில் எரிச்சலை ஒருவர் எழுப்பினால் நம் மனம் அதை இனிமையாக உணரும். எலிசபெத் டார்சியை மோசமாகக் கடிந்து அவதூறாகத் திட்டினாள். சுயநலமி, கர்வி என்றாள். அவள் ஸ்பர்சத்தை அவன் உணர்ந்தான், ரசித்தான். இது நெகட்டிவ். பாஸிட்டிவாக இருப்பது விசேஷம். பாஸிட்டிவ் நெகட்டிவ் இரண்டையும் கடந்து உயர்ந்தால் ஸ்பர்சம் ஐக்கியமாகும். பாஸிட்டிவ் நிதானம் இனிக்கும். இந்த நிலை நிதானம் இனிப்பின் மூலமாகும். இரண்டாம் உலகப் போரில் கிருஸ்துமஸில் போரை நிறுத்துவார்கள். எதிரான சிப்பாய்கள் (ஜெர்மன், ஆங்கிலேயன்) சேர்ந்து கிருஸ்துமஸ் கொண்டாடுவார்கள். வாழ்வில் எதிர்ப்பின் அஸ்திவாரமாக இனிமையான உறவுண்டு. இது நிதானமானது. உறவுக்குரியவரைஇரண்டாகப் பிரிந்து போரிட அனுமதிக்கிறது. நெப்போலியனைத் தோற்கடித்த தளபதி வெல்லிங்டன் நெப்போலியனிறந்த பொழுது சோகமானார் என்பது செய்தி. வெல்லிங்டனும் நெப்போலியனும் போரில் எதிரி. போருக்கு அஸ்திவாரமான வாழ்வில் இருவரும் ஒன்றே. பெரும் தலைவர்கட்கு இந்நிலைக்குரிய நிதானம் உண்டு. 1947-இல் சுதந்திரம் வந்த பொழுது வைஸ்ராய் மௌண்ட்பேட்டன் பிரபலமானார். போகுமிடமெல்லாம் பெருங்கூட்டம் வந்து வரவேற்றது. நேருவுக்கு வரும் கூட்டத்தையும்விட காந்திஜிக்கு வந்த கூட்டத்தையும்விட வைஸ்ராய்க்குக் கூட்டம் வந்தது. எதிரிக்குப் புகழ் மாலை சூட்டியது இந்தியா. இது வாழ்வைக் கடந்த நிலை. ஆழம் அதிகமான நிலையில் உள்ள வாழ்வு. அந்த நிலைக்குரிய நிதானம் (Global) பூலோக நிதானமாகும். துப்பறியும் சாம்பு கதைகளில் முடிவாக இதுபோன்ற நிதானத்தைக் காணலாம். இது எவருக்கும் உரிய நிதானமில்லை. ஊர் உலகம் அறியாத நிதானம். இந்த நிதானம் சமூகத்தையும் கடந்து வாழ்வுக்குரிய நிதானமாகும். ஒரு ஜட்ஜின்முன் வரும் கேசில் அவர் மகன் குற்றவாளியானால், சட்டம் அனைவருக்கும் பொதுவானாலும், மகனுக்குத் தண்டனை கொடுக்கும் நிதானம் ஜட்ஜுக்கு இருக்காது என்பதால் கேஸை வேறு கோர்ட்டிற்கு மாற்றிவிடுவார்கள். மனித நிலைக்கு வரையறையுண்டு. சட்டத்தைக் கடந்தது மனித உறவு, பாசம். நிதானம் நிதானமானது. உறவு, பிறந்த மண், சமூகம், சட்டம், நல்லது, கெட்டது, பாவ, புண்ணியம் ஆகியவற்றைக் கடந்து நிதானம் நிதானமாகக் கொலு வீற்றிருக்கிறது. பல்வலியால் வீங்கிய இடத்தில் அன்னை அறைந்ததை அருள் எனக் கருதும் நிதானம் பூரண யோக நிதானமாகும்.

அடிப்படையான தத்துவங்கள் சுதந்திரம், ஜோதி, அமரத்துவம், ஐக்கியம், சாரம், அனந்தம், சாஸ்வதம் போன்ற பல. இவை துறவி, தபஸ்வி, முனி, யோகி போன்றவர் அனுபவிப்பது. இந்த யோகத்தில் இவை மனித வாழ்வில் அன்பன் பின்பற்றுதல் அவசியம். சுதந்திரம் என்பது விளக்க அனுமதிக்கும். சாவித்திரியில் 63-ஆம் பக்கத்தில் இறைவன் லோக மாதா மூலம் மட்டும் செயல்படுகிறான். அப்படிச் செயல்பட அவளுக்குப் பூரண சுதந்திரம் தந்து அவளைச் சரணடைகிறான் என்பதை ஒரு பத்து அல்லது இருபது வகையாகக் கூறுகிறார். அதிகாரம் என்பதற்குரிய இலட்சணம் அதிக காரம். அதைப் பெற்றவர் தவறாக அதிகாரம் செலுத்தத் தவற மாட்டார்கள். அதனால் கணவன் மனைவிக்குச் சரணடைந்து வாழ்ந்தாலும் அவள் அத்துமீறிப் போகும் பொழுது இழுத்துப் பிடிப்பது அவசியம் என்கிறார். சரணமடைந்த மனநிலையிலும் மனம் எத்தகைய நிதானம் பெற வேண்டும் என்பதின் தத்துவம் இது. அதிகாரத்திற்கும், மையலுக்கும், உயர்ந்த பிரியத்திற்கும் தன்னை மீறி, நிதானமிழந்து செயல்படும் அம்சம் உண்டு. வைப்பாட்டி வீட்டிலே பல நாளிருந்து வீட்டுக்குத் திரும்புபவன் மனைவியை அவள் பெயரிட்டுக் கூப்பிடுவான். காதல் திருமணம் பரவலாக இருக்கும் இந்த நாளில் அதனால் பிள்ளைகட்கும் பெற்றோருக்கும் இடையே ஏற்படும் பூசல்கள் ஏராளம். எண்பது வருஷத்திற்குமுன் அதை நினைத்தும் பார்க்க முடியாது. கு.பா.ரா. எழுதிய பாதிக்கதை “வேரோட்டம்” லலிதாவும் சந்திரசேகரும் காதல் வயப்பட்டு ஹாஸ்டலை விட்டு தனிக்குடும்பம் நடத்துவதை அறிந்து ஆசாரமான இராமநாத சாஸ்திரி கோபவயப்பட்டு மகனைக் காண வந்து லலிதாவைப் பார்த்து அவள் உண்மையை அறிந்து மனம் மாறி அவளை ஏற்கிறார். அது எப்படிப்பட்ட நிதானம். நிதானத்தில் அது உயர்ந்தது. Management என்பது நூறு ஆண்டாக ஏற்பட்டது. 1948-இல் முதலில் பாரிசில் மாநாடு கூடி இது ஆரம்பிக்கப்பட்டது. Peter Drucker இதை ஆரம்பித்தவர். அவர் எழுதிய பல நூல்கள் அறுபது லட்சம் விற்றன. பல்வேறு துறைகளில் மானேஜ்மெண்ட் வளர்ந்துள்ளது. உத்தரவை செயல்படுத்துவது என்ற துறை புறக்கணிக்கப்பட்டது. கல்விக்கு பல்வேறு துறைகள் உண்டு. பரீட்சை பாஸ் செய்ய, முதலாவதாக வர மனப்பாடம் செய்தால் போதும். எந்தத் துறையிலும் பல ஆயிரம் பகுதிகள் திறமைகள் செயல்படும். ஒரு துறையைச் செம்மைப்-(perfect) படுத்தினால் உச்சகட்டத்திற்கு அது உயர்த்தும். பூரண யோகத்தின் தேவைகள், அம்சங்கள், பகுதிகள் ஏராளம். சாஸ்த்திரம், உற்சாகம், குரு, காலம், அசரீரி, தியாகம், சமர்ப்பணம், சரணாகதி, சைத்திய புருஷன், மேல்மனம், திருவுருமாற்றம், தடம் பிறழ்தல், தவறுதல், தோல்வி, முறை, தடை, தாழ்ந்த குணங்களை உயர்ந்த குணமாக்குவது, தீவிரம், அனந்தம், சாஸ்வதம், சத்தியம், பொய், ஐக்கியம், ஜீவியம், சக்தி, அழகு, சந்தோஷம், ஆனந்தம் என அளவு கடந்தவையுண்டு. சமர்ப்பணம் பூரணமானால் உச்சியை ஒரு கணம் தொடலாம். கொடுத்த உத்தரவை நிறைவேற்றுவது மானேஜ்மெண்டில் முக்கிய இடம் பெறுகிறது என்பதைக் கவனிப்பாரில்லை. சில உதாரணங்கள்: 1) மூன்று வேலை கொடுத்தால் முதல் வேலையைச் செய்து மற்றதை மறப்பார்கள். 2) கையில் ஒரு வேலையுள்ளவரை முதலாளி வேறு ஒரு வேலை கொடுத்தால் கையிலுள்ளதைச் செய்து சொன்னதை மறந்து விடுவார்கள். 3) சொன்னதை மாற்றிச் சொல்லும் ஆள் பயன்பட மாட்டான். 4) தனக்கிட்ட வேலையை அடுத்தவரிடம் கொடுத்தால் பொறுப்பு இருக்காது. 5) திறமையற்றவனிடம் வேலை கொடுத்தால் வேலையை அவன் பிரச்சனையாக்கி விடுவான். 6) நாம் சொல்வது அவன் காதில் வேறாக விழும். 7) வேலையைச் செய்தவன் திரும்ப வந்து சொல்லாமல் விட்டு விடுவான். சுமார் இருபது அல்லது முப்பது அம்சங்களைக் கூறலாம். ஒவ்வொரு தவற்றையும் தடுக்க பல வழிகளை நிர்வாகம் கடைப்பிடிக்கிறது. எந்தக் கம்பெனியின் (instructions) உத்தரவு சரியாக நிறைவேற்றப்படுகிறதோ அங்கு ஆண்டுதோறும் கம்பெனி இருமடங்காக வளரும்.

நாம் ஒன்று சொல்லி ஆள் வேறொன்று செய்தால் நிதானம் தவறும், நிதானம் நிலையாகத் தவறும். திண்ணையில் க்ஷவரம் செய்து கொண்டிருந்த மாஜிஸ்ட்ரேட்டிடம் வந்த வைதீகப் பிராமணன் ஊறுகாய் கேட்டு அவர் உத்தரவு கொடுத்து உள்ளே போய் மனைவியிடம் அவள் நகைகளைப் பெற்றது பிரபலமான கதை. இத்தலைப்பில் நூற்றுக்கு மேற்பட்ட பிரிவுகள் உண்டு. நிதானத்தை இழப்பது, இழக்காமலிருப்பதை இதில் கண்டால் இருநூறு பாயிண்ட்டுகள் வரும். அத்தனை வகையான நிதானங்களை அறிவது முழுமையாக அறிவது. அவற்றை அனுபவ மூலமாக அறிவது பூரண ஞானமாகும். விபரம் சில ஆண்டுகளிலும் முழு அனுபவம் நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகளிலும் கிடைக்கும். பூரண சமர்ப்பணத்தை வெற்றிகரமாகப் பயிலுபவர் நிதானத்தைச் சமர்ப்பணம் மூலமாக, உத்தரவைப் பூர்த்தி செய்வதில் முழுமையாக அனுபவ மூலம் தெரிந்துகொள்ள விரும்பினால், அவர் மனம் இம் மனநிலையின் ஆழத்திற்குப் போய் கருத்தைச் சமர்ப்பணம் செய்தால் அதன் முழுச் சாரமும் அவருள் வரும். அதைப் பூர்த்தி செய்யும் அனுபவங்கள் தொடர்ந்து எழுந்து ஓரிரு நாளில் முடியும், பெற்ற அனுபவத்தைப் புற, அக; தாழ்ந்த, உயர்ந்த இடங்களில் பெற்று ஜீவியத்தில் பெற்றதைப் பொருளில் ஏற்றால், சில நாட்களில் ஞானம் இதைப் பொறுத்தவரைப் பூர்த்தியாகும்.

(தொடரும்)

************



book | by Dr. Radut