Skip to Content

12. அன்னை இலக்கியம் - பிரேம பக்தியும் பரிபூரண சரணாகதியும்

அன்னை இலக்கியம்

பிரேம பக்தியும் பரிபூரண சரணாகதியும்

இல. சுந்தரி

கோபிகைகள் சாமானிய மக்கள் அல்லர். அவர்கள் ஆன்மிக உணர்வு நிரம்பியவர்கள். ஆன்மிகமே உருவானவர்கள். எல்லை கடந்த பிரேம பக்தியும் பரிபூரண சரணாகதியும் அவர்களின் இயல்பாகவிருந்தது. யாராக இருந்தாலும் அவனோ அல்லது அவளோ, கல்வியறிவோ, மற்ற உலகத் தகுதிகளோ இல்லாதவர்களாக இருந்தாலும் அந்த ஒரு தன்மை அதாவது பிரேமையும், பரிபூரண சரணாகதியும் இருந்து விட்டால் கண்ணனை நிச்சயம் அடைய முடியும். என்னைப் பொறுத்தவரை கோபியர்கள் தத்துவம் இதுதான்.

ஸ்ரீ அரவிந்தர்

“ஏ புள்ள! தொளசி” என்று உள்நோக்கிக் குரல் கொடுத்தான் ஆறுமுகம்.

“ஏன் அண்ணே” என்று பதில் வந்தது. உள்ளிருந்து “என்ன செய்யுற அங்கன?” என்றான்.

“மாலை கட்டறேன் அண்ணே” என்று பதில் வந்தது.

“ஆமா இதுல ஒண்ணுங் கொறச்ச இல்ல. பெரிய ஆண்டாள். எப்பப்பாரு மால கட்றேன் மால கட்றேன்னு. சரி சரி எந்திரிச்சு வா. ஒரு மொற கூப்டா எந்திரிச்சு வர்றதில்ல” என்றான்.

“இதோ வர்றேன் அண்ணே” என்று தொளசி கூடையையும், கட்டியவரை மாலையையும் அப்படியே வைத்துவிட்டு எழுந்து வந்தாள்.

27 வயதை எட்டிக் கொண்டிருக்கும் திருமணமாகாத இளம்பெண் துளசி. இவள் பாட்டி கண்ணபிரான் மீது பெரும் பக்தியால் இவளுக்குத் துளசி என்று பெயரிட்டாள். ஓயாமல் கண்ணபிரானின் லீலைகளைப் பேத்திக்குக் கதைகதையாய்ச் சொல்லுவாள். அதெல்லாம் இவள் சிறுவயதில். இப்போது பாட்டியோ, அம்மாவோ ஒருவரும் இல்லை. அண்ணன் அண்ணியிடம் இருக்கிறாள்.

“இந்தா புள்ள இந்த ஒரணாவுக்கு மொனகடல (தெருமுனையில் உள்ள பெட்டிக்கடையில்) பொகையில வாங்கியா” என்றான் அதிகாரமாய். உள்ளேயிருந்து வெளிப்பட்ட அவன் மனைவி கமலம் “ஏங்க, பொம்பள புள்ளய அங்கெல்லாம் ஏன் அனுப்புறீங்க. அங்கே எந்நேரமும் நாலு வெடல பசங்க நின்னுகிட்டு இருப்பானுங்க ஏதாச்சும் கேலி பேசுவானுங்க” என்றாள்.

“ஆமா அப்படியே கேலி பேசி கெட்டும் போயிறும் போடி. இந்தத் தரித்திரம் புடிச்ச பொண்ண எந்தலையில கட்டிட்டு அப்பனும், ஆயியும் நிம்மதியாப் போய்ச் சேந்துட்டாங்க. இதை எவனும் கல்யாணம் கட்ட மாட்டன்றான். சாதகத்ல தோஷமாம். இப்படியே எம்மா நாள் வீட்ல வெச்சு தண்ட சோறு போட முடியும். எங்கனா வேலை செஞ்சு பொழைச்சுக்க துப்பில்ல. பெரிய மகாராணியா? வூட்ல குந்தவச்சு சோறு போட”, என்று கல்யாணம் ஆகாத தங்கையைப் பற்றிக் கத்தித் தீர்த்தான். கமலம் ஏன் கேட்டோமென்று உள்ளே போய்விட்டாள்.

ஏழைக் குடும்பம். பொண்ணு வயசுக்கு வந்தாலே கல்யாணம் பேசற காலம். இவள் ஆயி அப்பன் உயிரோட இருந்தப்பவே கல்யாணம் பேச எத்தனையோ முயற்சி செய்தும், ஜாதகம் தோஷம் என்றும் இவளை கட்டிப்பவன் சீக்கிரம் இறந்து போவான் என்றும் கல்யாணம் கூடி வரவில்லை. அப்பன் குடித்துச் செத்தான். ஆத்தாள் மனம் வெடித்துச் செத்தாள்.

இத்தனையும் நடந்தும் எவ்வித பாதிப்புமின்றி சலனமில்லாதிருந்தாள் துளசி. பாட்டியார் சொன்ன ஆண்டாள் கதை மட்டுமே மனதில் தங்கியிருந்தது. சுகம், துக்கம் என்று எதுவுமே இல்லையா இவளுக்கு என்று காண்பவர் வியக்கும் அளவு சமநிலை கைவரப் பெற்றவள். அவள் பூவுலகில் வாழ்ந்தாலன்றோ துன்பப்பட? “உள்ளுலக பிருந்தாவனத்தையும், கோபிகைகளின் லீலைகளையும் உணர்ந்தவனுக்கு, பூரண சமர்ப்பணம் செய்தவனுக்கு, அந்தப் பேரெழில் கண்ட பரவசம் அனுபவித்தவனுக்கு, அந்தக் குழலிசை கேட்டவனுக்கு மற்ற எதுவுமே பொருட்டாகத் தோன்றாது” என்று ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுவது இவளைத் தானோ!

விஷ நோய் பரவுவது போல் இவள் ஜாதகத்தில் தோஷம் என்ற செய்தி பரவி இவளை யாரும் மணம் முடிக்க வரவில்லை. தரித்திரம், தண்டச்சோறு, பிறந்தது சரியில்லை என்று எத்தனையோ பேச்சுக்கள் கேட்டுவிட்டாள். இதனாலெல்லாம் அவள் சுயபச்சாதாபம் கொண்டு நைந்து போகவில்லை. கடவுளின் படைப்பில் அர்த்தமில்லாததேயில்லை என்று பாட்டிக் கிழவி அடிக்கடி சொல்லும் அந்தப் பேச்சை அவள் நம்பினாள். தான் பிறந்ததற்கு நிச்சயம் ஒரு அர்த்தமுண்டு என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் உயிர் வாழ்ந்தாள். யார் என்ன சொன்னாலும் சிரிப்பாள். சூடு சொரணை இல்லையா? என்று அண்ணன் வார்த்தையால் சுடும் போதும் சிரிப்பாள். தனக்குத் தெரிந்த வேலையைச் செய்வாள். திட்டிக்கொண்டே சோறிட்டாலும் பசிக்கு உண்டு விடுவாள். யோகம் மேற்கொள்வோரைப் போல் சாத்வீகமும் சமநிலையும் ஏராளமாய் இயல்பில் அமைந்திருந்தது. ஆனால் விருப்பு வெறுப்புகளை மதிக்கும் உலகம் இவளை மதிக்கவில்லை.

தெருமுனையில் உள்ள பெட்டிக்கடைக்குப் போனாள். அது சிறிய கடை. மரத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கூண்டு போல் உள்ளே அமர்ந்து பக்கவாட்டில் உள்ள கதவு வழியே கடைக்காரர் வெளியே வரமுடியும். மற்றபடி அது வீடு அன்று. அங்குச் சுருட்டு, பீடி, வெற்றிலை, பாக்கு, சோடாதான் முக்கிய வியாபாரப் பொருள். கடையில் ஒரு சிம்னி விளக்கு எரிந்து கொண்டேயிருக்கும். சுருட்டு, பீடி வாங்குபவர்கள் பற்ற வைத்துக் கொள்ள இந்த வசதி. அந்தக் கடைக்கு ஆண்களும், சிறுவர்களும் பெரும்பாலும் வருவார்கள். பெண்கள் பெரிதும் வர விரும்ப மாட்டார்கள்.

அண்ணன் ஏவலுக்குக் கட்டுப்பட்டு துளசி அந்தக் கடைக்கு வந்தாள். விடலைப் பிள்ளைகள் சுருட்டுக் குடித்துக் கொண்டும், சோடா பருகிக் கொண்டும் நிற்பவர்கள் இவள் அங்கு வருவதைப் பார்த்து சாடை மாடையாய்க் கேலி பேசினர். கடைக்காரப் பக்கிரிக்குச் சங்கடமாயிற்று. அவன் மிகவும் நல்லவன். பக்கவாட்டு கதவு வழியே துளசி நின்று கொண்டு, “அண்ணே ஓரணாவுக்குப் பொகையிலை கொடுங்கண்ணே” என்றாள்.

“நீ ஏம்மா இங்கல்லாம் வாற. அண்ணன் வரலாமில்லசு என்று கூறிய வண்ணம் புகையிலையை அவசரமாய்க் கொடுத்தான். மீண்டும் இளைஞர்கள் குறும்பாய் இவளைப் பேசினர். அவ்வழியே வந்த செட்டியார் இதைக் கவனித்துவிட்டார். துளசி எவ்வித பாதிப்பும் இல்லாமல் செல்வதைப் பார்த்து உருகிப் போனார். சற்று தூரம் சென்று “ஏம்மா? நீ ஏன் இங்கெல்லாம் வர்ற. அண்ணன் வரக் கூடாதா?” என்றார்.

“அண்ணன்தான் ஐயா என்னை அனுப்பிவச்சது” என்று பத்து வயது சிறுமி போல் சிரித்த வண்ணம் கூறினாள்.

“இல்லம்மா இங்கெல்லாம் ஒன்னப் போல பொம்பள புள்ளங்க வரக்கூடாது. கல்யாணம் கட்டி ஒரு வீட்ல போய் வாழற பொண்ணு இல்ல நீ” என்றார்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல ஐயா. என் சாதகத்துல தோஷமிருக்காம். அதனால என்ன கல்யாணம் கட்ட ஒரு மாப்பிள்ளையும் வரல. அதனால எங்கண்ணன் என்னைக் கோபமா பேசுது. சோத்துக்கு வழியில்ல. எங்காவது வேலை செஞ்சு பொழச்சுக்கன்னு சொல்லுதுசு என்று கூறும் அவள் பேச்சில் சோகத்தின் இழையேதும் இல்லை. இந்த வாழ்வை அவள் குறையாக எண்ணுவதாகவும் தெரியவில்லை. என்ன பெண்ணிவள்? யாரைப்பற்றியோ சொல்வது போல் சொல்லுகிறாள். செட்டியாருக்கு மனம் நெகிழ்ந்தது. அப்பாவியான இவள் எங்காவது வேலைக்குப் போவதும் ஆபத்துதான் என்று அவர் மனம் எண்ணியது.

“ஒண்ணு செய்யி தாயி. நம்ம வீட்ல போயி அம்மாவுக்கு ஒதவியா கூடமாட வீட்டு வேலை செய்யி. சாப்பாடு, துணியெல்லாம் அம்மாவே தரும்” என்றார்.

“ஆகட்டும் ஐயா” என்றாள்.

வீட்டிற்குப்போய் அண்ணனிடம் புகையிலையைக் கொடுத்துவிட்டு, வழியில் செட்டியார் தன்னைப் பார்த்து அவர்கள் வீட்டில் வேலைக்கு வரச் சொன்னதைச் சொன்னாள். ஆறுமுகத்திற்கு ஆறுதலாயிருந்தது. இதுவரை மனதிலிருந்த பெரிய சுமை இறங்கினாற் போலிருந்தது. குறைந்தபட்சம் அவள் சோற்றுப் பிரச்சனையாவது தீர்ந்ததே என்று நிம்மதியடைந்தான். “கமலம் இவளை சாயந்திரம் செட்டியார் வீட்ல வேலைக்குக் கொண்டு போய் விட்டுவிட்டு வா” என்றான்.

கமலமும் நாத்தியைச் செட்டியார் வீட்டிற்கு அழைத்துப் போய் செட்டியார் மனைவியிடம் இவளை வீட்டு வேலைக்கு அழைத்து வந்ததாய்க் கூறினாள்.

வந்த பெண் சாதுவாக ஏதும் பேசாமல் நின்றாள். “சரிம்மா இவள் இங்கே இருக்கட்டும். வேலை முடிஞ்சு சாயந்தரமா அனுப்பி வைக்கிறேன்” என்றாள் செட்டியார் மனைவி.

“தொளசி! அம்மா இட்ட வேலையை நல்லா செய்து நல்ல பேர் எடுத்துக்கோ” என்று அறிவுரை கூறிவிட்டு கமலம் திரும்பினாள்.

“உள்ள வாம்மா” என்றாள் கனிவுடன் செட்டியார் மனைவி.

உள்ளே வந்ததும் நடுக் கூடத்தில் அழகான கண்ணன் சிலையொன்று டேபிள்மீது பூ வேலைப்பாடு அமைந்த துணி விரிப்பின்மீது நிற்பது கண்டாள். மனம் நிறைந்துவிட்டது. “அம்மா சாமியை கும்பிட்டு வந்திடறேனம்மா” என்றாள் பணிவாக.

செட்டியார் மனைவி புன்னகைத்தாள்.

மெல்லச் சென்று அந்தச் சிலைமுன்பு நின்றாள். அவள் பாட்டியார் கூறும் கதைகளில் வரும் கதாநாயகன் இந்தக் கண்ணன்தான். இடையில் பட்டாடை உடுத்தி, மேலெல்லாம் அழகிய அணிகள் பூட்டி, தலையிலே மயிற்றோகை காற்றில் அசைய, காதுகளில் அழகிய குண்டலங்கள் ஆட, கால்சதங்கை கொஞ்ச, இடையிலே கையை ஊன்றி புல்லாங்குழலுடன் முகமெல்லாம் பூஞ்சிரிப்பாய் இவளைப் பார்த்து “வா துளசி” என்பது போன்றிருந்தது. பதிலுக்கு இவளும் சிரித்தாள். “நீயும் சிலையாகிவிட்டாயா என்ன?” என்றாள் செட்டியார் மனைவி.

“இல்லம்மா” என்று சிரித்துக் கொண்டே வந்தவள், “இந்தக் கண்ணனை எனக்குச் சின்னப்பவே தெரியும்மா. எங்க பாட்டி சொல்லியிருக்கு” என்று தன் ஆத்ம நண்பனைக் கண்ட மகிழ்ச்சியை வெளியிட்டாள்.

இவள் கள்ளமில்லாத பேச்சு இவள் மிகவும் நல்லவள் என்று உணர்த்தியது.

செட்டியார் மனைவி, “உம் பேரு என்ன?” என்றாள்.

“தொளசி” என்றாள் மென்மையாக.

“அதுதான் பக்தி மணக்கிறது” என்றாள் செட்டியார் மனைவி. உள்ளே அழைத்துச்சென்று ஒவ்வொன்றாகப் பணிகளைச் சொல்ல, நெடுநாள் பழகியவள் போல் இயல்பாகத் தடுமாற்றமின்றி நேர்த்தியாகவும், அமைதியாகவும் வேலை செய்யத் தொடங்கிவிட்டாள்.

செட்டியார் மனைவிக்கு இவள் பொறுமை, நேர்த்தி யாவும் மிகவும் பிடித்துவிட்டது. சிறிது நேரம் கூட ஓயாது, அலுப்பில்லாமல் ஏதேனும் செய்து கொண்டே இருந்தாள்.

“அம்மா தோட்டத்தைப் போய்ப் பார்க்கவா?” என்றாள் மெதுவாக.

“பாரேன்” என்றாள் செட்டியார் மனைவி.

தோட்டம் சிறியதுதான். ஓரிரு வாழைக் கன்றுகளும் சில பூச்செடிகளும் இருந்தன. துளசிச் செடி மட்டும் இல்லை.

மாலை 6 ஆனதும் செட்டியார் மனைவி, இவளை “துளசி! இருட்டுமுன் வீட்டிற்குப் போ. பொழுது போனால் பெண் தனியே நடமாட முடியாது. நாளை காலை வந்துவிடு” என்றாள்.

“சரிம்மா” என்று விடை பெற்றுச் சென்றாள். அண்ணனும் அண்ணியும் இவளை விசாரித்தனர்.

நல்ல இடம். நல்ல பாதுகாப்பு. சாப்பாடும் அன்பும் கிடைக்கிறது என்று தெரிந்தது.

மறுநாள் காலை புறப்படும்முன் தோட்டத்திலிருந்து சில துளசிக் கன்றுகளை காகிதத்தில் சுருட்டிக் கொண்டாள். சென்றவுடன் செட்டியார் வீட்டுத் தோட்டத்தில் நட்டு வைத்தாள். தினமும் மற்ற வேலைகளுடன் தோட்டத்தையும் சீர் செய்து செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி, பூக்களைப் பறித்துக் கண்ணனுக்கு மாலை கட்டி அணிவித்து மகிழ்ந்தாள்.

“தொளசி! நல்ல புருஷன் வரணும்னு வேண்டிக்கிட்டு கண்ணனுக்குப் பூப் போடறயா?” என்று செட்டியார் மனைவி கேலி செய்தாள்.

இவள் நாணி முகம் சிவக்கவில்லை. “புண்ணியமும் புருஷனும் கேட்டுப் பூ வைக்கலாமா. பூப்போடறதே புண்ணியம்தானே. எனக்குக் கண்ணனுக்கு மாலை கட்டிப் போடறது ரொம்பப் புடிக்கும்மா” என்றாள்.

பிரதிபலன் வேண்டாத இவள் பக்தியின்முன் கண்ணனே தோற்றுவிடுவான் என்றெண்ணினாள் செட்டியார் மனைவி. கடவுளுடன் பேரம் பேசும் மக்களுக்குள்ளே இவள் விசித்திரமானவள்தான்.

சோர்வு, வெறுப்பு ஏதும் இல்லாத மலர்ச்சியான பெண் இவள் என்று சொல்லும் வண்ணம் ஏதேனும் சுறுசுறுப்பாய் செய்த வண்ணமிருப்பாள். இடையிடையே நடுக்கூடத்து கண்ணன் பொம்மையைக் கண்டு ரசித்துவிட்டுப் போவாள். அவ்வப்போது தன் செயல்களைத் தெரிவித்துப் போவது போலத் தோன்றும்.

வேலைகள் முடிந்த நேரம் தோட்டத்துத் துளசிச் செடியின் அருகே நின்று பாட்டி சொன்ன கண்ணன் கதைகளில் ஆழ்ந்து போவாள். அப்போது அங்கு பிருந்தாவனம் காட்சி தரும். குழலூதும் கண்ணனின் வடிவம் தெரியும். தெளிவாக அந்தக் குழலிசை இவள் காதுகளில் கேட்கும்.

“துளசி! அப்படித் தோட்டத்தில் என்னதான் செய்கிறாய்? செடிகளோடு பேசுகிறாயா?” என்று செட்டியார் மனைவி அழைத்ததும்தான் சுயநினைவு வரும். “இதோ வந்திட்டேம்மா” என்று விரைந்து வருவாள். “உச்சிப் போதில் தோட்டத்தில் நிற்காதே” என்று பரிவாகச் செட்டியார் மனைவி கூறுவாள். காலங்கடந்த பரம்பொருளைக் காணும்போது வாழ்வின் உச்சிக்கே போய்விடும் போது அதெல்லாம் எங்கே தோன்றும். இருந்தாலும், அந்த அன்பிற்குப் பணிந்து “சரிம்மா” என்பாள்.

ஒருநாள் செட்டியார் மனைவிக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. இரவுப்பொழுது கடினமாக இருக்கும்போல் தோன்றியது. தொளசி உடனிருந்தால் ஆதரவாய் இருக்கும் என்று தோன்றியது. ‘துளசி!’ என்று நலிந்த குரலில் அழைத்தாள். “பேசாம இன்னிக்கு இங்கேயே தங்கிவிடுகிறாயா?” என்றாள் பலவீனமாக.

அந்த அன்புத்தாயின் வேண்டுகோளை அவளால் தவிர்க்க முடியாது. வீட்டிற்குப் போய்த்தான் ஆகவேண்டும் என்ற அவசியமும் இல்லை. இவள் இங்குப் பாதுகாப்பாயும், பசியின்றியும் இருப்பது அவள் அண்ணனுக்குப் பெரும் நிம்மதி. “ஆகட்டும் அம்மா. நா ஒங்க கூட இங்கேயே இருக்குறேன் அம்மா” என்றாள் ஆதரவாக.

“நீங்க போய் இவங்க வீட்ல சொல்லிட்டு வந்திடுங்க. இவளக் காணமேன்னு கவலைப்படப் போறாங்க” என்றாள்

செட்டியார் மனைவி செட்டியாரிடம். அவரும் சொல்லிவரப் புறப்பட்டார்.

இவள் செட்டியார் மனைவிக்குக் கஷாயம் வைத்துக் கொடுத்து, நெற்றிக்குப் பற்று அரைத்துப் போட்டு உடம்பு பிடித்துவிட்டு தாய்போல் அன்பு காட்டினாள். மறுநாள் காலை புத்துணர்வுடன் எழந்த செட்டியாரின் மனைவிக்கு இவள் தெய்வப் பிறவியாகவே காட்சி அளித்தாள்.

“துளசி, நீ இங்கேயே எங்களுடன் தங்கிவிடேன். நான் உன்னை வேலைக்காரப் பொண்ணா நெனைக்கல. என் மகளா நெனைக்கறேன்”, என்றாள்.

எவ்வித உணர்வுகளாலும் பாதிக்கப்படாத துளசி அந்தத் தாயின் அன்பில் நெகிழ்ந்து போனாள். “வீட்ல ஒரு வார்த்தை சொல்லிட்டு அப்பால ஒங்ககூடவே இருந்திடறேன்மா”, என்றாள்.

வழக்கமாக வரும் துளசியை, அன்று விசேஷமாய் எதிர்பார்த்து நின்றாள் செட்டியார் மனைவி. ஏதோ ஒதவி ஒத்தாசை என்றனுப்பினால் வீட்டோடு இருக்கச் சொல்கிறார்களே என்று தங்களை இழிவாகப் பேசுவார்களோ, அனுப்ப மாட்டார்களோ, என்று எண்ணிய வண்ணம் தெருவையே பார்த்துக் காத்திருந்தாள் செட்டியார் மனைவி.

சின்னஞ்சிறு துணி மூட்டையுடன் தலைமுடியை தூக்கி முடிந்த வண்ணம் அநாயாசமாய் நடந்து வந்தாள் துளசி. ஒவ்வொரு நாளும் காலையில் அவள் வரும்போது மகிழ்ச்சியாயும், மாலையில் வீடு திரும்பும்போது ஏக்கமாகவும் செட்டியார் மனைவி உணர்வாள். இன்று அவள் நிரந்தரமாய்த் தங்க வந்தவுடன் பெரிய துணை கிடைத்தது போலிருந்தது. “என்னம்மா? தெருவையே பார்த்துக்கிட்டு நிக்கிறீங்க? நான் வராம போயிடுவேன்னு கவலையா?” என்றாள் சிறுமி போல் சிரித்து.

“வருவேன்னு ஆசையாத்தான் பார்த்திட்டு இருந்தேன்” என்றாள் செட்டியார் மனைவி மனங் கொள்ளா மகிழ்வுடன்.

காலையில் எழுந்து வீடு பெருக்கி, பாத்திரம் துலக்கி பூப்பறித்து, காய்கள் அரிந்து கொடுத்து, மோர் கடைந்து இன்னும் என்னென்ன வேலை செய்யக் கூடுமோ யாவும் செய்வாள். ஒவ்வொரு வேலையின் போதும் அவள் தனக்குள்ளே ஏதோ பேசிக் கொள்வது போல் தோன்றும். முகத்தில் சிறிதும் அலுப்போ, வெறுப்போ தோன்றாது. எதையோ கண்டு ரசிப்பது போலவும், யாருடனோ பேசிக் கொண்டிருப்பது போலவும் அவள் முகபாவம் காணப்படும்.

மாலை வேளைகளில் தவறாது செடிகளுக்கு நீரூற்றுவாள். ஒவ்வொரு செடியையும் தடவிக் கொடுப்பாள். துளசிச் செடியை கீரைப் பாத்திப்போல் சதுரமாக வளர்த்துவிட்டாள். நலமாய் இருக்கிறீர்களா என்பது போல் அவற்றைச் செல்லமாய் வருடிக் கொடுப்பாள். காலை, மாலை இரண்டு வேலைகளிலும் பசுமையாய், கண்ணனுக்கு மாலை சார்த்தத் தவறமாட்டாள். கூடம் எந்நேரமும் துளசி மணம் வீசிக் கொண்டிருக்கும். கீழே ஒரு குப்பையோ, தூசியோ கிடந்தாலும் அவற்றை அப்புறப்படுத்தி அந்த இடத்தைச் சுத்தமாக வைக்கத் தவறமாட்டாள். உண்ணும் முன்பும் உறங்கச்செல்லும் முன்பும் கண்ணன் முன் நின்றுவிட்டு வருவாள். செட்டியார் மனைவிக்கு இவள் செயல் வேடிக்கையாய் இருக்கும்.

ஒருநாள் தயிர் கடையும் போது தூணுடன் பொருத்தப்பட்டுள்ள மத்தின் கயிற்றைப் பிடித்த வண்ணம் உட்கார்ந்திருந்தாள். சில நிமிடங்கள் செட்டியார் மனைவி குறுக்கும் நெடுக்குமாய் போகும் போதும் வரும்போதும் இந்தக் காட்சியைக் கண்டாள். சிரிப்பு வந்தது. சிறிது நேரம் கடந்தும் அவள் அப்படியே உட்கார்ந்திருக்கவே, “என்ன தொளசி அப்படியே தூங்கிட்டயா?” என்று கேலி செய்தாள்.

சிரித்துக்கொண்டே, அதற்கும் பதில் சொன்னாள் துளசி. “தூங்கலம்மா ஆயர் பாடிலே கண்ணன் எல்லார் வீட்லயும் போயி, உறில வச்சிருக்கற மோர், தயிர், வெண்ணெயை எல்லாம் திருடி சாப்பிடுவாராம். எல்லோரும் அவங்க அம்மாகிட்ட போய் சொல்லுவாங்களாம். அவங்க அம்மா உரலோட கண்ணனைக் கட்டிப் போடுவாங்களாம். ஆனா கண்ணன் ஒரலோட இழுத்துப் போய் ரெண்டு மரங்களையே சாய்ச்சிட்டாரம். அந்த மரங்கள் அப்படியே சாபம் நீங்கி ரெண்டு பேரா நின்னாங்களாம். அதெல்லாம் இப்போ எம் மனதில் தெரியுது அம்மா!” என்றாள்.

“அப்புறம் இன்னும் என்னவெல்லாம் தெரியுது?” என்று மேலும் செட்டியார் மனைவி கேலி செய்தாள்.

“இப்ப இங்க அந்தக் கண்ணன் வந்தா, வந்து நம்ம வீட்ல மோர் குடிச்சா நமக்கு எவ்வளவு பாக்யம்? நான் நிச்சயமா யசோதம்மா கிட்ட போய் கண்ணனைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்”, என்றாள்.

இவள் அன்புதான் எவ்வளவு வலியது? ஒரு வேளை இவளுக்காகக் கண்ணபிரான் நம் வீட்டிற்கே வந்தாலும் வியப்பில்லை, என்றெண்ணினாள் செட்டியார் மனைவி.

செட்டியார் வெளியே சென்று வந்தவர், “முதலில் எனக்கு ஒரு குவளை மோர் கொண்டுவா, குடித்துவிட்டு நான் போய்க் கண்ணனை அழைத்து வருகிறேன்” என்றார் சிரித்துக்கொண்டே.

“நீங்கள் விளையாட்டாய்ச் சொன்னாலும் அவள் விடமாட்டாள். எப்படியாவது கண்ணனை அழைத்து வந்து விடுங்கள்” என்றாள் அவர் மனைவி. இப்படி இவர்கள் இரண்டு பேரும் இவளைக் கேலி பேசியும் அவள் புன்னகை மாறாத முகத்துடன் இருந்தாள்.

“ஏங்க, தினமும் மாலை கட்டிப் போடறா. மோர் கரைத்து வைக்கிறா, கண்ணன் மட்டும் வரலைன்னா விடமாட்டா” என்றாள் செட்டியார் மனைவி.

“நிச்சயம் ஒரு நாள் வரத்தான் போறார். நீங்களும் பார்க்கத்தான் போறீங்க” என்றாள் ஒரு சிறுமியின் கள்ளமில்லா நம்பிக்கையுடன்.

“அழைப்பும், ஆர்வமும் வலுப்பட்டால் ஆண்டவன் வந்துதானே ஆகவேண்டும்?” என்றார் செட்டியார்.

மறுநாள் முதல் செட்டியார் சிறிது தீவிரமாக ஏதோ வெளியில் போவதும் வருவதுமாயிருந்தார். அது அரசியல் போராட்டக் காலம். இந்தியத் தாய் விடுதலை நோக்கி விரைந்து கொண்டிருந்த காலம். தேசப்பற்றுடையவர்கள் துன்பங்களை எதிர்கொள்வதும் வீரத்தை வெளியிடுவதுமாக செயல் நிகழ்ந்து கொண்டிருந்த காலம். அரசியல் காரணமாய் பாதுகாப்பு வேண்டுவோர் புதுவை வருவது அதிகரித்த நேரம். எனவே, இக்கதை நிகழ்ந்த பாண்டிச்சேரியில் முக்கியஸ்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டிருந்த வேளை அது.

1910-ஆம் ஆண்டு, ஏப்ரல் 4-ஆம் தேதி, ஸ்ரீ அரவிந்த பக்தர்களின் பொன்னேட்டில் பொறிக்கப்பட்ட நன்னாள். அன்று காலை, செட்டியார் தம் மனைவியை அழைத்து மாடி அறையைச் சுத்தம் செய்து நல்ல முறையில் வை. வீட்டில் அந்நியர் நடமாட்டம் இல்லாதபடி பார்த்துக்கொள், என்று ரகசியமாய்ச் சொல்லிச் சென்றிருந்தார். மாடிப்படி ஏறி இறங்கி சுத்தம் செய்வது செட்டியார் மனைவிக்கு எளிதான செயலல்ல. “துளசி! ஐயா வருவதற்குள் மாடியறையையெல்லாம் சுத்தமாய்க் கூட்டி, மெழுகிவிடு. ரொம்ப நாளாயிற்று” என்று இயல்பாகச் செய்வது போல் சொன்னாள்.

கேட்க வேண்டுமா துளசியின் செயல்பாட்டிற்கு? ஒரு மணி நேரத்தில் மாடியறையைப் பெருக்கி, மெழுகி பொருட்களைத் துடைத்து வைத்து எல்லாம் செய்துவிட்டாள். மேலே அறையில் உள்ள கண்ணன் படத்தைத் தூசி போகத் துடைத்து, அதற்கு ஒரு பூமாலையும் சார்த்திவிட்டாள்.

“துளசி! ஐயா வருவதற்குள் வந்துவிடு”, என்று அவசரப்படுத்தினாள் செட்டியார் மனைவி. “எல்லா வேலையும் முடிச்சிட்டேம்மா. நீங்க சொன்னது போல ஐயா கண்ணனை கூட்டிட்டு வந்தாலும் நம்ம வீடு துளசி மணமா தயாரா இருக்கு” என்று சொல்லிச் சிரித்தாள்.

அன்றிரவு நல்ல சாப்பாடு தயாரிக்கச் சொல்லியிருந்தார் செட்டியார். கறிகாய் நறுக்கித் தருவதுதான் துளசியின் வேலை. சமையலைச் செட்டியார் மனைவியே செய்வாள். உள்வேலை முடிந்தவுடன் தோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றப் போய்விட்டாள் துளசி.

செட்டியார் காலையிலேயே, தாம் யாரோ ஒரு முக்கியஸ்தரை அழைத்துவரப் போவதாயும் அவர் அங்கு தங்கப் போகிறார் என்றும் அது ரகசியமாயிருக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்ததால், ஒரு வேளை இப்போது அவர்கள் வந்தாலும் துளசி தோட்டத்தில் இருப்பது நல்லது என்றெண்ணிய செட்டியார் மனைவி அவளைக் கூப்பிடாமலேயே உள்ளே சமையல் வேலை செய்து கொண்டிருந்தாள்.

செடிகளுக்கு நீரூற்றிய துளசி, கூடை நிறைய பசும் துளசி தளங்களைப் பறித்து வந்து கொல்லை நடையில் வைத்து மாலை கட்டிக் கொண்டிருந்தான். எதற்கோ கொல்லைப்பக்கம் வந்த செட்டியார் மனைவி “ஏது இவ்வளவு துளசி?” என்றாள்.

நான்தான் துளசிக்கன்று நிறைய வைத்து தோட்டத்தில் வளர்க்கிறேன். அவையெல்லாம் நிறைய துளிர்த்துவிட்டன. அதனால் இன்று பெரிய மாலை கட்டப் போறேன் என்றாள்.

“சரிதான். நீ மாலை கட்டுற சிரத்தையைப் பார்த்தா அந்த நெஜம் பெருமாளே வந்திடப் போறார்” என்றாள்.

“அப்படியென்றால் இத்தனை நாள் நான் பொய்ப் பெருமாளுக்கு மாலை போட்டேன் என்று நினைக்கிறீர்களா?” என்றாள் துளசி

“இல்லையில்லை அப்படிச் சொல்லவில்லை துளசி. பொம்மை வடிவில் நிற்பவர் எழுந்து வந்துவிடப் போகிறார் என்றேன்” என்று கூறிச் சிரித்தாள் செட்டியார் மனைவி.

“நீங்க வேணுமின்னா பாருங்க ஒங்க வீட்லயே வந்து பெருமாள் எந்துளசி மாலையை ஏத்துக்கத்தான் போறார்” என்று கூறி பக்தியுடன் தொடுத்தாள்.

“அவர் வரப்ப வரட்டும், இப்ப நீ மாலையச் சீக்கிரமா சார்த்திட்டு உள்ள வந்திடு. ஐயா யாராச்சும் கூட்டிட்டு வரப்ப நாம அங்க போக வேணாம். ஐயாவுக்குப் புடிக்காது” என்று ஜாடையாய் எச்சரித்தாள் செட்டியார் மனைவி. அவள் கூடத்துக் கண்ணனுக்கு மாலை கட்டுவதால் அப்படிச் சொன்னாள் செட்டியார் மனைவி.

“ஆகட்டும்மா. இதோ ஆயிடிச்சி” என்ற வண்ணம் விரைவாய் கட்டினாள். அதுவோ திரௌபதியின் சேலை போல் நீண்டது. வழக்கமான கற்பனை வேறு வந்து விட்டது. ஊரை, உலகை அவள் மறந்து போனாள். யமுனையாற்றங்கரையும், கோபியர்களும், கண்ணனும் மட்டுமே அங்குக் கண்டாள். நிலவொளியில் கோபியர் சுற்றிச்சுற்றி ஆடல் புரிய நடுவே உயர் மேடையொன்றில் புல்லாங்குழல் இசைத்த வண்ணம் புன்னகையால் அனைவரையும் கொள்ளை கொள்ளும் கண்ணனைக் காண்கிறாள். அந்தக் கூட்டத்தில் தானும் ஒருத்தியாக ஆகிவிடக் கூடாதா? இந்த மணம் வீசும் மாலையை அவனுக்கே அணிவித்து மகிழ்விக்கக் கூடாதா? என்ற ஏக்கம் எழுகிறது. மாலையுடன் கூட்டத்தில் நுழைகிறாள். கூட்டம் விலகி வழி வகுக்கிறது. திடீரென்று அந்த மாயக்கண்ணன் ஒரு லீலை செய்கின்றான். நான் மயிற்பீலியும், வேய்ங் குழலுமின்றி மாறு வேடத்தில் வருவேன் அப்போது என்னைக் கண்டுபிடித்து என்னிடம் மாலையைத் தரவேண்டும் என்கிறான் கண்ணன். அவளுக்கா கண்ணனை அடையாளம் தெரியாது? கண்டுபிடித்து விடுகிறாள். நீ குழலை மறைக்கலாம். மயில் தோகையை மறைக்கலாம் உன் கண்களில் பொங்கும் கருணையை மறைக்க முடியாதே என்று கூறி, சாதாரண வெள்ளை வேட்டியும், முழுக்கை ஜிப்பாவும் நடுவே வகிடெடுத்து எளிய மனித வடிவில் வந்த கண்ணனைக் கண்டுபிடித்து மாலையை எடுத்துக் கொண்டு அருகே வருகிறாள். திடீரென்று அச்சம்பவம் யாரும் எதிர்பாராமல் நிகழ்கிறது.

ஸ்ரீமான் ஸ்ரீனிவாசாச்சாரியார், ஸ்ரீ.சி சுப்பிரமணிய பாரதி, ஸ்ரீ சுரேஷ் சந்திர சக்ரவர்த்தி, ஸ்ரீ சங்கர செட்டியார் (அந்த வீட்டுச் சொந்தக்காரர்) புடை சூழ நடுவே ஸ்ரீ அரவிந்தர் வருகிறார். அவர் வாசல் படி ஏறி முன் கூடத்திற்கு வரவும் துளசி தன் கற்பனைக் கண்ணனை எண்ணி துளசி மாலையுடன் கூடத்திற்கு வரவும் சரியாயிருந்தது. பகவானின் கண்களில் கருணை அவளை ஈர்த்துவிட்டது. மிகப் பணிவுடன் முன்னே வந்தாள். மாலையை ஸ்ரீ அரவிந்தர் தாமே பெற்றுக் கொண்டு புன்முறுவல் செய்தார். அவர் திருவடிகளை எண்ணி கீழே நமஸ்கரித்தாள். இடக்கையில் மாலையை கைமடிப்பில் ஏந்திய வண்ணம் ஸ்ரீ அரவிந்தர் தமக்கென ஏற்பாடு செய்யப்பட்ட மாடியறைக்கு மாடிப்படிகளில் விரைந்து ஏற அனைவரும் பின் தொடர்ந்தனர்.

**********

கிருஷ்ணாவதாரம் விட்ட இடத்தில் ஸ்ரீ அரவிந்த அவதாரம் தொடங்குகிறது.

ஸ்ரீ கர்மயோகி

யாராக இருந்தாலும் அவனோ அல்லது அவளோ கல்வியறிவோ மற்ற உலகத் தகுதிகளோ இல்லாதவர்களாக இருந்தாலும் அந்த ஒரு தன்மை அதாவது பிரேமையும், பரிபூரண சரணாகதியும் இருந்துவிட்டால் கண்ணனை நிச்சயம் அடைய முடியும். என்னைப் பொறுத்தவரை கோபியர்கள் தத்துவம் இதுதான்.

ஸ்ரீ அரவிந்தர்

***********



book | by Dr. Radut