Skip to Content

06. யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. திறமைகளை முறையோடு பெற்றவன் முடிவுகளை (decision) முறைப்படுத்த முன்வந்தால், அது முடிந்து செறிவடையும் தருணம் உடலுழைப்பிலிருந்து மனத்தின் திறனுக்கு நிலையாக வருவான்.

    செயலைப் பூர்த்தி செய்தால் முடிவு எழும்.
    வாழ்நாள் முழுவதும் உழைத்துப் பெறுவதை ஒரு முடிவு தரும்.

    மக்கின்ஸி உலகப் புகழ் பெற்ற மானேஜ்மெண்ட் நிறுவனம். அவர்கள் இந்தியாவின் இன்றைய நிலையை ஆராய்ந்து கொள்கை அளவில் சில மாறுதல்கள் செய்தால் இந்தியா இரண்டு லட்சம் கோடி ரூபாயை உபரியாகப்பெறும் என்றனர். இன்றைய பட்ஜெட் எட்டு லட்சம் கோடி.

    • 300 ஆண்டுகளில் அமெரிக்கா, ஐரோப்பா 2000 ஆண்டில் சம்பாதித்ததைவிட 10 மடங்கு சம்பாதித்தனர். அதன் சூட்சுமம் உடல், உயிர், மனத்தில் உண்டு. மேற்சொன்னது எப்படி உழைப்பாளி அறிவாளியாகிறான் எனக் கூறுகிறது.
    • மண்வெட்டி எடுத்துக் கொத்துபவன் உழைப்பாளி, கல்லூரிப் பேராசிரியர் அறிவாளி. நான் எழுதுவது அவர்களைப் பற்றியன்று.

      மூட்டை தூக்குபவன் உழைப்பாளி. இன்று அவன் ஒரு நாளைக்கு 300 ரூபாய் சம்பாதிக்கிறான்.

      கோர்ட்டில் வாதாடும் வக்கீல் அறிவால் சம்பாதிக்கிறார். ஒரு நாளைக்கு அவர் 30,000 ரூபாய் பெறுகிறார்.

      உழைப்பாளி அறிவாளியாவது மேற்கூறிய முறை. 300 ரூபாய் சம்பாதிக்கும் கூலிக்காரன் கோர்ட்டில் வக்கீலாக முடியாது. அவன் அவனளவில் அறிவால் உழைத்தால், 30,000 ரூபாய் சம்பாதிக்கலாம். அமெரிக்கர் அதைச் செய்தனர்.

      • "100 ரூபாய்" அன்பர் பெறலாம் என நான் நம்புகிறேன்.
      • ”100 ரூபாய்” என்பது 100 கோடி ரூபாய். வக்கீல் உழைப்பு அறிவின் உழைப்பு.
      • அன்பர் பெறுவது ஆன்மாவின் உழைப்பு, நிச்சயம் பலிக்கும்.
      • மக்கின்ஸி நாட்டளவில் அதை எப்படிச்செய்வது என்கிறார்கள்.
    • மூட்டை தூக்க எல்லோராலும் முடியாது. அதற்குத் திறமை தேவை, சூட்சுமம் தேவை. திறமையற்றவனால் அதைச் செய்ய முடியாது. சிலரால்தான் முடியும். அதை லாவகம் என்று கூறுவார்கள். லாவகமிருந்தால் மூட்டை தூக்க முடியும். 10 மூட்டை தூக்கியவுடன் களைத்துவிடும். லாவகத்துடன் சூட்சுமம் இருந்தால் 30 மூட்டை தூக்கலாம்.

      மூட்டை தூக்குபவனால் 10 பேரைச் சேர்த்து வேலை வாங்க முடியாது. அதற்குப் பழகத் தெரிய வேண்டும். 10 பேர் அவனுக்குப் பணிய வேண்டும். அது மூட்டை தூக்குவதைவிடச் சிரமம். அது வேறு வகையான திறமை, உயர்ந்த திறமை.

      வக்கீல் பேசுவது அதைவிட உயர்ந்தது. இது மனத்தின் திறமை. அறிவு தேவை, விளக்கம் கூற அறிவு தேவை.

      முடிவு எடுக்க மனஉறுதி தேவை. மனஉறுதியுள்ளவன் தொழிலதிபனாவான்.

      மூட்டை தூக்கும் உடலின் சக்தியை பலரைக் கட்டுப்படுத்தும் உணர்வின் சக்தியாக உயர்த்த முடியும். அதை விளக்கம் தரும் அறிவாகவும், முடிவு எடுக்கும் மனஉறுதியாகவும் மாற்ற முடியும்.

      உழைப்பால் உயர்ந்த உத்தமர் பல ஆயிரம் கோடி சம்பாதித்தவர் பலருண்டு.

      அவர்கள் எல்லாம் இதைச் செய்தவர்கள்.

      • மனஉறுதி அறிவின்செயல் மனத்தில் வெளிப்படுவது.
      • மனம், உறுதி பெற்றபின் அதைப் பயன்படுத்தாமல் அமைதியாக இருப்பது ஆன்மீகசக்தி.
      • ஆன்மீகசக்தி பெற்றவர் சாது, தபஸ்வி, முனி, ரிஷி, யோகி. அவர் தொழில்செய்து சம்பாதிக்க வருவதில்லை.
      • ரிஷியின் திறமையை ஆன்மாவில் பெற்று, தொழிலில் உள்ளவர் உண்டு. அவர்கள் அளவு கடந்து சம்பாதிக்கிறார்கள்.
      • அன்பன் ரிஷியின் திறமையைச் சமர்ப்பணத்தால் பெறுகிறான். செயலைச் சமர்ப்பணம் செய்தால், அது ஆன்மீக உழைப்பாகும். அவ்வுழைப்பு "100 ரூபாய்" பெறும்.

      மேற்சொன்ன செய்தி 951ஆம் நம்பர், முதல் வால்யூம் தினசரி செய்தியில் உள்ளது. இதை நான் 1990இல் எழுதினேன்.

      இன்று அன்பர் தூய்மையான நல்லெண்ணத்தால் "100 ரூபாய்" சம்பாதிக்கலாம் எனக் கூறுகிறேன். அம்முறையைக் கூறும் செய்தியிது.

      அழைப்பு அன்பர் அறிவது.

      3 நாள், 5 நாள் அழைப்பு பல அன்பர்கள் அனுபவித்தது.

      அழைப்பைப் பயின்று, அதை இடைவிடாமல் பின்னணியில் பெற்று, நாம் செய்யும் வேலையைச் சமர்ப்பணம் செய்தால் நான் கூறும் பலன் வரும்.

      சமையல் செய்பவரும், தொழிலதிபரும், கிரிக்கெட் ஆட்டக்காரரும், நடிகரும் சமர்ப்பணத்தைப் பொருத்தவரை ஒன்றே.

      சமையல் செய்பவர் "100 ரூபாய்" சம்பாதிக்கலாம் என்பது பொருத்தமற்றதாகத் தெரிகிறது.

      நடிகர் பெருந்தொகை பெறலாம் என்பதை நம்ப முடியும்.

      நம்ப முடியும் வகையில் அன்பர் இம்முயற்சியை மேற்கொள்ளலாம். பலன் உண்டு.

      "100 ரூபாய்" சம்பாதிக்க 100 ஆண்டு தேவையில்லை. சமர்ப்பணம் இடைவிடாமலிருந்தால் சொற்பநாளில் பெறலாம்.

      இது பலிப்பது அருளால். அருள் நம்பிக்கைமூலம் செயல்படுகிறது. நம்பிக்கை திறமைமூலம் செயல்படுகிறது. திறமைக்கு சக்தி வேண்டும். சக்தி எழ உழைப்பு வேண்டும். உழைப்பு உயர ஆர்வம் தேவை.

    • ஆர்வமான, திறமையான உழைப்பு ஆயிரக்கணக்காக, இலட்சக்கணக்காக இப்பொழுது சம்பாதிக்கிறது.
    • அதுவே சமர்ப்பணத்தால் செயல்பட்டால் இலட்சம், கோடியாகும்.
    • எளிய மனிதனுக்கு நல்லெண்ணம் உண்டு. நாடி, நரம்பு நிரம்பி வழியும் நல்லெண்ணம் உண்டு.
    • பிறர் மீதுள்ள நல்லெண்ணம் சமர்ப்பணத்திற்குச் சமம்.
      அதுவே இப்பலனைப் பெற்றுத் தரும்.
  2. பக்தர் அடிக்கடி பெறும் திடீர் உயர்வின் இரகஸ்யம் இதுவே. சத்தியஜீவியசக்தியை அன்னை அவர்கட்கு அளிக்கிறார். அதற்குரிய செயல்திறனை பக்தர்களால் பெறமுடிவதில்லை. அதை எட்ட மேதையின் எண்ணம், வீரனின் செயல், சிகரமான கருத்து, அற்புதத்தை அன்றாட நிகழ்ச்சியாக்கும் பிரார்த்தனை உதவும். அவை மனிதனை சத்தியஜீவியத்துடன் இணைக்கும்.

    முறையை முறையாகப் பூர்த்திசெய்வது அற்புதத்தை அன்றாட நிகழ்ச்சியாக்கும்.

    மனிதனுடைய நிலைகள்:

    1. பிழைக்க முடியாதவன், பிழைக்கத் தெரியாதவன்.
    2. குடும்பத்தில் ஒருவராக இருந்து, குடும்பத்தால் உயிர் வாழ்பவன்.
    3. ஊர் தரும் ஆதரவால் பிழைக்கும் குடும்பத்தை உறுதியாய் பிடித்திருப்பவன்.
    4. ஏதோ ஒரு திறமையால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பவன்.
    5. ஒரு நல்லெண்ணத்தால் வாழ்க்கை ஓடும் மனிதன்.
    6. ஏதோ ஒரு நேரம் வரும் உதவியால் மற்ற நேரத்தை நடத்துபவன்.
    7. உயிர் வாழ உழைக்க முடிந்தவன்.
    8. தகப்பனார் தலைமுறையை ஒருபடி உயர்த்துபவன்.
    9. ஆயுள் முடியும் நேரம் ஊரில் தலைமையை எட்டுபவன்.
    10. ஆரம்பத்திலேயே ஆர்ப்பாட்டமாக முன்னுக்கு வருபவன்.
    11. தன் குடும்பத்துடன் நகரம் போய் வாழ்பவன்.
    12. தன்னையும், தன் குடும்பத்தையும், ஊரையும் உயர்த்துபவன்.
    13. சிறந்த தலைமை நாட்டுக்குப் பயன்படுவது.
    14. உத்தமன்.
    15. ஆன்றவிந்து அடங்கிய சான்றோன்.

     எந்த நிலையிலிருந்தாலும் அன்னையிடம் வந்தால் பல கட்டங்களை அன்பன் தாண்டுவான்.

    உழைப்பாளி அறிவாளியாகி வாழ்வில் உயர்பவனை முன் செய்தியில் கண்டோம். அப்படிப்பட்டவன் அன்பனானால் அவன் அறிவு, விவேகம், வீரச்செயல், தவம், அற்புதம் செய்யும்.

    • அன்னைச் சூழல் வாழ்வில் வாய்ப்பு.
    • அன்பனின் செயல் கருவி.
    • உயர்ந்த செயலுக்குப் பலன் அற்புதம்.
    • உழைப்பவன் உடலால் உழைப்பதை அறிவால் உழைக்க மாற்ற முடியுமானால், அதனினின்று ஆன்மாவால் வாழ்வில் உழைக்க முடியுமானால்,
      • க்ஷணத்தில் வாழ்வு மாறும்.

        பிரச்சினை மறையும். மறைந்து, மாறி வாய்ப்பாகும்.

        நாம் தேடிப்போனவர் நம்மைத் தேடி வருவார்கள்.

        நாம் முயன்று முடித்த காரியங்கள் தாமே முடிக்க முயல்வதைக் காணலாம்.

        உழைப்பு அறிவானால், அறிவு ஆன்மாவானால், செயல் வேகமிழந்து அமைதியுறும். அமைதியான செயல் அதிவேகமாக நடக்கும்.

        செயலுக்கு ஜீவன் உண்டு.

        ஜீவனுக்கு ஆன்மா உண்டு.

        அந்த ஜீவன் விழித்தெழும்.

        விழித்தெழுந்த ஜீவன் அறிவையும், ஆன்மாவையும் வெளிப்படுத்தும்.

        உழைப்பு உயிருக்கு மாறினால், சோர்வு நீங்கிச் சுகமாகும்.

        அறிவே உழைத்தால், வாழ்வு பளிச்சென மாறும்.

        ஆன்மா வாழ்வில் விழித்தால், எல்லாம் தானே கூடிவரும்.

        ஆன்மா அறிவில் விழித்தால், புரியாதது இருக்காது.

        ஆன்மா, வளரும் ஆன்மாவானால், செயல் அற்புதமாவது.

        வளரும் ஆன்மா, வாழ்வின் வண்ணம்.

        உழைப்பவன் கூலிக்காரன்.

        கூலிக்காரன் குத்தகைக்காரனாவது, உயிர் பெறுவது.

        குத்தகைக்காரன் சொந்தமாக நிலம் பெறுவது, விளக்கம் பெறுவது.

        நல்லெண்ணம் எழுந்தால் நாலுபேர் சேர்ந்து அவனைத் தலைவனாக்குவார்கள்.

        நல்லெண்ணம் தொழில் எழுந்தால், தொழிலதிபன் தேடி வருவான்.

        நாலு பேர் நல்லெண்ணம் நம் வாழ்வில் செயல்பட்டால், நாட்டின் பெருமை நம்மை நாடிவரும்.

        மனம் நாட்டைப் பெருமையாக ஏற்றால், நாடு நம்மை ஏற்கும்.

        உண்மை, உயர்வு, உன்னதம், உத்தமம் உள்ளவை.

தொடரும்.......

*****

 

ஜீவிய மணி
 
தோற்றத்தில் வெளிப்படும் விஷயம் ஜீவனுள்ளது.

 

 *****



book | by Dr. Radut