Skip to Content

09. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

அறிவின் விளக்கம் அவரவர் அறிந்த விளக்கம் (P.433 )

இன்று உலகில் பிரபலமானவர் விஞ்ஞானிகள். அவர்களே உலகையாள்பவர் எனலாம். அவருடைய கருவி அறிவு (intellectuality). மேற்சொன்ன கருத்து "அறிவால் அறிய முடியாது, அறிவு தனக்குத் தெரிந்ததையே எடுத்துக்கூறும். புதியதாக அறியும் திறன் அற்றது" என்று கூறுகிறது. பல குருடர்கள் யானையை, காலும், துதிக்கையிலும், தந்தத்திலும், உடலும், வாலும் தொட்டுப் பார்த்து, யானை தூண் போல இருக்கிறது, மலைப்பாம்பு போன்றது, தடி போன்றது, சுவர் போன்றது, கயிறு போன்றதுஎன்றனர். எத்தனை முறை அவர்கள் செய்ததையே செய்தாலும், வேறு கூறப் போவதில்லை. முழுயானையை அவர்கள் எவராலும் பார்க்க முடியாது என்ற கதை விஞ்ஞானியை விளக்கும். இது அறிவின் தன்மை என்கிறார் பகவான். இதுநாள்வரை தன் அனுபவத்தை அறியுமே தவிர தன் வாழ்வானாலும் அதன் உண்மையை அறிய அறிவால் முடியாது என்பது கருத்து. ஏற்பது சிரமம்.

கிராமத்தில் பாங்க் மூலமாகக் கிணறு தோண்ட கடன் கொடுத்த பொழுது உள்ளூர் கோவாப்பரேட்டிவ் சொஸைட்டித் தலைவர் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தார். நான் அவரைக் கேட்டேன், "ஏன் பாங்க்கை எதிர்க்க வேண்டும்? உங்கள் சொஸைட்டியே இக்கடனைத் தரும் உரிமை பெற்றதாயிற்ற" என்று. அவருக்கு அவர் சொஸைட்டியின் உரிமை தெரியவில்லை. பல ஆண்டுகளாகப் பயிர்க் கடன் தருகிறார்கள். எல்லா ஊர்களிலும் அதுவே வழக்கம். வழக்கம் தெரிகிறது, உரிமை தெரியவில்லை. வைஸ்சான்சலருக்கு தம் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கும் உரிமையுண்டு எனத் தெரியவில்லை. கன்ஸல்டண்ட் தொழிலில் நூற்றுக்கணக்கான சிறு தொழிலதிபர்கள், பெருந்தொழிலதிபர்களை நம் அன்பர்கள் சந்தித்துள்ளனர். அவர்கட்கு அவர் தொழிலில் உள்ள வாய்ப்புகளை எடுத்துக் கூறினால், அவர்கள் நம்புவதில்லை. பொருளாதார நிபுணர்கள் அதுபோல் இன்று பணம் பெருகுவதை அறியவில்லை. இந்திய நாட்டில் அனைவருக்கும் வேலை பெறும் உரிமையைக் கொடுத்தபின்னும் மேல்நாடுகள் அது சாத்தியம் என அறியவில்லை.

  • அறிவு தெரிந்ததையே தெரிந்து கொள்ளும்.
  • அறிவால் உள்ளதை ஊடாடிக் கண்டுபிடிக்கத் தெரியாது.
  • அதற்கு ஞானம் தேவை.
  • அறிவு ஞானமாகும் மார்க்கத்தை The Life Divineஇல் பகவான் 100க்கு மேற்பட்ட இடங்களில் எடுத்துக் கூறுகிறார்.

*****

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உடலில் பிரம்மம் சித்திப்பது என்றால், உடல் பழக்கத்தாலும் உணர்வாலும் செயல்படுவதை விட வேண்டும். அதற்குமுன் உணர்வு, எண்ணம், எண்ணமற்ற அறிவு, ஜோதி, நேரடிஞானம், ஆனந்தம், ஜீவியம் ஆகியவற்றாலும் செயல்படுவதை நிறுத்த வேண்டும். முடிவை எட்டும் முன், உடல் சத்தியத்தையும் விட்டுக் கொடுக்க வேண்டும். சத்தியத்தால் செயல்பட மறுக்க வேண்டும்.
 
சத்தியத்தாலும் தீண்டப்படாத உடல் பிரம்மத்தால் செயல்படும்.

*****



book | by Dr. Radut