Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/68) நெருங்கிய இனிய உறவில் வேறொருவரைப் பாராட்டிப் பேசுவது, போற்றுவது உணர்வுக்குத் தீங்கு செய்வதாகும். அதை நியாயம் எனக் கேட்டுக் கொண்டிருப்பது நல்லதல்ல, நாகரிகமல்ல. உணர்வில் உதவாக்கரையாகும்.

  • பிறரைத் தீண்டும் மனம் உறவை விஷமாக்கும்.
  • நட்பிலும், திருமணத்திலும் ஆழ்ந்து பின்பற்ற வேண்டிய சட்டம் இது.
  • ஒரு தரம் தான் சாப்பிட்டேன். அது என் உயிரை எடுத்துவிட்டது என்றால், அது விஷம்.
  • இதற்கு நேர் எதிரானதுண்டு. அது உயிருக்கு அமிர்தம்.
  • என்னை ஒரு முறையே தரிசித்தவருக்கும் ஆயுள் முழுவதும் நான் பொறுப்பேற்கிறேன் என அன்னை கூறுவது அப்படிப்பட்டது.
    • ஒரே முறை என்றாலும் முதல் கொடுத்தவர் உயிர் கொடுத்தவர்.
    • ஒரே சொல்லானாலும் சொல்லியவர் பெரியவரானால், அதுவே வாழ்க்கையை உயர்த்துவதாகும்.

      நேரு என் வாரிசு என்ற காந்திஜியின் சொல் அவரும் அவர் குடும்பமும் 35 ஆண்டு நாட்டை ஆள உதவின.

    • ஒரு முறை செய்த உதவியானாலும், அது லிடியாவின் திருமணம், குடும்பம் தழைக்க உதவியது.
    • பாதிரியார் சொன்ன ஒரு சொல் டான்டேக்கு மனப்பாரம் முழுவதையும் அகற்றியது.

      ஏன் நான் சிறைப்படுத்தப்பட்டேன் என இரவு, பகலாய் 3 ஆண்டு கேட்டு பதிலில்லாமல் தற்கொலை செய்ய முடிவு செய்தான்.

      கேப்டன் பதவிக்குப் போட்டி டாங்லார்ஸ், காதலிக்குப் போட்டி பெர்னாண்ட்.

      நெப்போலியன் கடிதம் தகப்பனாருக்கு எழுதப்பட்டது என்பதால் வக்கீல் அதைக் கொளுத்தியதை பாதிரியார் கூறியவுடன் டான்டே மனம் லேசாயிற்று.

      அவையனைத்தும் ஒரு சொல். அவன் பெற்றது பெரும் செல்வம், பெரிய அந்தஸ்து.

    • மட்டமான ஊரில் அடிக்கடி சொல்லும் கெட்ட வார்த்தை நாகரிகமான ஊரில் ஒரு முறை கூறினால் நட்பு முறியும், உறவு அழியும்.
    • ஒரு முறை போட்ட பொய்க் கையெழுத்தால் வேலை போகும், சிறை வரும்.
    • நட்பு தெய்வீகமானது, திருமணம் அதனினும் உயர்ந்தது.
  • உயர்ந்த நட்பில் ஒரு மட்டமான குணம் ஒரு முறை வெளிப்பட்டால் அந்த நட்பு முறியும்.
    • நண்பனை அந்தஸ்தால் கருதினால் அதே நிமிஷம் அவனை இழந்துவிடுவாய்.
  • திருமணத்தை உயர்ந்த அன்பாக நெகிழ்ந்து 20 ஆண்டு அனுபவித்தவர் ஒருவரிடம் ஒரு மட்டமான சொல் தவறி வாயில் வந்துவிட்டாலும் அந்த 20 ஆண்டு நெருக்கம் பலூனை ஊசியால் குத்தியது போல் போய்விடும்.
  • சில சொற்கள் "நீ நம்ப முடியாதவன்” எனக் காட்டும். அது போதும் கணவன் உயிலை மாற்றி எழுதி மனைவிக்கு ஒன்றுமில்லை எனக் கூற.
    • அடுத்த பெண்ணை மனதால் போற்றியதை 10 ஆண்டு கழித்து மனைவியறியும்படி கூறிய சொல் மனைவியை இழக்கும், மனைவியின் அன்பை இழக்கும், மனைவி படுத்த படுக்கையாய் உலகை விட்டுப் போய்விடுவாள். அதுபோன்ற சொல் வெளியில் போன கணவன் விபத்திலிறக்க உதவும்.
    • மகனை 5 வயதில் உருப்படாதது என்று கூறிய தந்தை அவன் வேலைக்குப் போன பின் சாகும் வரை சந்திக்க முடியவில்லை என்று செய்யும். அன்றே வீட்டை விட்டு வெளியேறிய மகனும் உண்டு.

******

II/69) வேலையும், காலமும் உடலுழைப்பால் வாழ்பவனுக்கு மெதுவாக நகரும். ஆன்மீகவாதிக்குப் பறக்கும்.

  • உடலுக்கு ஊர்ந்து வரும் காலம் ஆன்மீகத்தில் பறக்கும்.
  • வாயு வேகம், மனோ வேகம் என்பதைக் கூறும் உண்மை.
  • சென்னைக்குப் போக பல மணியாகும்.
  • மனம் நினைத்தவுடன் அங்குப் போகும்.
  • மனம் போகும். அதற்குச் செயல் திறனில்லை.
  • மனத்திற்கு எண்ணம், உணர்வு, செயலுண்டு.
  • சிந்தனை மனத்தின் எண்ணம்.
  • காவிய நயம் எண்ணம் ஆழ்ந்து உணர்வாவது.
  • சொரணை எண்ணமும் உணர்வும் கிளர்ச்சியாவது.
  • மூளை செயலுக்குரியது - பொருள்.
  • மனம் சிந்தனைக்குரியது - ஜீவியம்.
  • மனம் சிந்தனை, உணர்வு, செயல் பெற்றிருப்பதுபோல் உடலுக்கும் மனம், உணர்வு, செயலுண்டு.
  • மனத்தின் எண்ணம் சொரணையாகி மூளையைத் தொட்டால் அது உடலின் மனத்தைத் தொடும்.
  • உடல் உடனே செயல்படும்.
  • உடலால் உழைப்பவன் கையால் வேலை செய்கிறான். அவன் ஒரு பொருள் வாங்க எழுந்து கடைக்குப் போக வேண்டும்.
  • உயிரால் உழைப்பவனுக்குப் பதவியுண்டு. அவன் ஒரு பொருள் வாங்க ஆள் அனுப்புவான்.
  • மனத்தால் செயல்படுபவனின் எண்ணம் மற்றவரின் மனத்தைத் தொடும் (Silent will). அது அப்பொருளை அவனுக்குக் கொண்டு வந்து தரும்.
  • ஆன்மா முதிர்ச்சியடைந்தால் ஆன்மீக எண்ணம் செயலாகி அப்பொருளைக் கடையிலிருந்து கொண்டு வந்து தரும்.
  • அப்பொருளை ஆகாயத்திலிருந்து உற்பத்தி செய்து காரைக்கால் அம்மையார் மாம்பழம்போல் கொண்டு வரும்.
  • பொதுவாக அறிவாளிக்கு உழைப்பாளியைவிட எளிதில் காரியம் முடியும்.
  • ஆன்மீகவாதிக்கு அதே தத்துவப்படி காலமும் வேலையும் பறக்கும்.
  • எவரும் கேட்காத பணத்தை நாணயத்தைக் காப்பாற்ற எதுவும் முடியாத நிலையில் திருப்பித் தர முடிவு செய்வது ஆன்மா செய்த முடிவு - Mr.பென்னட்.
  • பணம் சூட்சுமத்தில் உற்பத்தியாயிற்று.
  • திருப்பித் தர முடியாதவரிடமிருந்து திருப்பித் தராத வகையில் பணம் மாயமாய் புறப்பட்டு வந்து மந்திரமாய் பலித்தது.
  • டார்சி இந்நிகழ்ச்சியில் தெய்வமாகச் செயல்பட்டான். பிரெஞ்சுப் புரட்சி சூழலாக அமைந்தது.
  • கார்டினர்களுடைய நல்லெண்ணம் கருவியாகப் பயன்பட்டது.
  • Mr.பென்னட் இந்த விஷயத்தில் ஆன்மாவிலிருந்து செயல்பட்டதால்,
    • கிடைக்காத தம்பதிகள் கிடைத்தனர்.
    • முடியாத திருமணம் முடிந்தது.
    • இல்லாத பணம் எழுந்து வந்தது.
    • கடன் வரமாக, வரப்பிரசாதமாக மாறியது.
    • Mr.கார்டினர் சொல்லியதுபோல் அத்தனைக்கும் தம்பதிகள் தகுதியற்றவர்.

தொடரும்....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பலிக்காத பிரார்த்தனையை மீண்டும் செய்வதற்குப்
பதிலாக, பலிக்கவில்லை என்ற தோல்வியைச் சமர்ப்பணம்
செய்ய வேண்டும்.
 
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பணம் பாதாளம் வரை செல்லும்.
நேரம் வந்தால் பணத்தால் எதுவும் செய்ய முடியாது எனப்
புரியும். அதுவே அதிர்ஷ்டமான நேரம்.
 
 
******



book | by Dr. Radut