Skip to Content

09. அஜெண்டா

அஜெண்டா

Sincerity is Security – Volume-IV, page 193

உண்மை பாதுகாக்கும்

  • நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் நேரம் உண்டு. அந்த நேரம் நம்மிடம் உண்மையிருந்தால் பயமில்லை. உண்மையில்லாதவன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள பொய் சொல்கிறான். அதற்குச் சாதுர்யம் வேண்டும். பிறகு, இன்று சொன்ன பொய் மறந்து விட்டால், ஆபத்து. அதனால் பொய் சொல்பவனுக்கு அதிக ஞாபக சக்தி வேண்டும். நாம் சொல்லும் பொய் எப்படியெல்லாம் வெளிவரும் என்று யோசனை செய்யாமல் பொய் சொன்னால் மாட்டிக்கொள்ள வேண்டும். அப்படியெல்லாம் நெடுநாள் உழன்றவர் வரும் முடிவு,

    உண்மைக்கு அழிவில்லை என்பது.

  • எது உண்மை என்பது தெரிந்தால், உண்மைக்கு எப்படி இந்த பவர் வந்ததுஎனத் தெரியும். ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரி உண்மை என்பது நிரூபிக்கக்கூடியதுஎன்று கூறுகிறது. இது நடைமுறையில் உதவாது. ஏனெனில் ஒரு குற்றம் நடந்த இடத்தில் நாம் இருந்தோம்எனில், அதை நிரூபிக்கலாம். அந்த இடத்தில் நாமில்லைஎன எப்படி நிரூபிப்பது? நிரூபிக்க முடியாவிட்டால், அதை உண்மையில்லைஎன முடியுமா?

    ஆன்மீகத்தில் உண்மைஎன்பது ஆன்மா.
    ஆன்மா என்பது அகம். அது புறத்தில் சத்தியமாகிறது.

    உண்மை என்பது ஆன்மாவானால், ஆன்மாவுக்கு பாதுகாப்பு உண்டு.
    அது நம்மைப் பாதுகாக்கும்.
    உண்மை பாதுகாக்கவில்லையெனவும் நாம் அனுபவத்தில் காண்கிறோம்.
    எப்படி விளங்கும்? உண்மை என்பது நம் மனத்திற்குரியது.
    ஆனால் அது வெளிப்பட, நிரூபிக்கப்பட நாம் மனிதர்களையும் சந்தர்ப்பங்களையும் நம்ப வேண்டியிருக்கிறது.

    மனம் உண்மையாக இருந்து பொய்யான பிறரை நம்பினால், உண்மை தோற்கும்.

  • உண்மை பாதுகாக்கும் எனில், நாம் உண்மையை மட்டும் நம்ப வேண்டும்.
    உண்மையைமட்டும் நம்பினால், அதற்கெப்படி பாதுகாக்கும் பவர் வருகிறது.
    உண்மையைமட்டும் நம்பிய அரிச்சந்திரன் பெற்றது பெரிய அவலம்.
    காந்திஜீ சத்தியசோதனை எழுதினார். உண்மையைத் தெய்வமாகக் கொண்டாடினார். சுட்டுக் கொல்லப்பட்டார்.
    அவர் உண்மை சுதந்திரம் பெற்றது. ஆனால் நாடு துண்டாடப்பட்டது. ஏன்?

    காந்திஜீ பிடிவாதக்காரர். பிடிவாதத்திற்குப் பேர்போனவர்.
    பிடிவாதம் உண்மையன்று; பொய்.
    பொய்மூலம் மெய்யை நிலைநிறுத்த முடியாது.

  • ஏன் அரிச்சந்திரன் அவலத்தை அனுபவித்தார்?
    நாம் அறிவது சமூகம். நடைமுறையில் நம் குடும்பமே நம் சமூகம்.
    சமூகம் வாழ்வின் பகுதி. வாழ்வு உலக வாழ்வின் (existence) பகுதி.
    நாம் உண்மையாக இருந்து, நம் குடும்பம் பொய்யானால், நம் உண்மை வலுவிழக்கும்.
    நாம் உண்மையாக இருந்து, வாழ்வை நம்பினால், வாழ்வு பொய்யானால், நமக்கு வலிமையிருக்காது.
    Existence என்பது உலக வாழ்வு. அது எப்பொழுதும் சத்தியம்.
    அது கைவிடாது.
    அரிச்சந்திரன் சமூகத்தையும், அதன் சட்டங்களையும் நம்பியதால், அவலம் ஏற்பட்டது.
    அந்த நாளில் வாழ்வில் உண்மை குறைவு. பொய் அரசாட்சி செய்தது.

    1956க்குப்பின், அதுவும் அன்பர்கட்கு, வாழ்வில் பொய்யில்லை, பொய்க்கு வலிமையில்லை, இடமேயில்லை. நாமே முயன்று பழைய பழக்கங்களை நாடினால், பழைய பழக்கங்கள் பொய்யான வாழ்வில் வளர்ந்தவை என்பதால், நம்மைக் கைவிடும். வரலட்சுமிநோன்பு உயர்ந்தது. அதற்கு சத்தியம் உண்டு. ஆனால் பரம்பரையாக அந்த நோன்பு பொய்யான வாழ்வில், பொய்யாகச் செயல்பட்டு வருவதால், இன்று அந்த நோன்பு நம் உண்மையைப் பாதிக்கும். பிழைக்கமாட்டார் என்றவர் அன்னை அருளால் அற்புதமாகப் பிழைத்தார். மருத்துவசட்டப்படி நுரையீரல் கெட்டுப்போனால் சரியாகாது. அவருக்கு அதுவும் சரியாயிற்று. இப்படி ஓராண்டு அருளை அனுபவித்தவர் மனைவி வரலட்சுமிநோன்பு எடுத்தார். நோன்பு முடிந்து வந்து, கணவன் பிணமாக இருப்பதைக் கண்டார்.

    • வரலட்சுமி நோன்பு சக்திவாய்ந்தது.
    • அது பொய்யான சூழலில் பொய்யின் கருவியாகிறது.

    மக்களுக்கு உதவ போலீஸ் ஏற்பட்டது. போலீஸில் ஊழல் பரவியுள்ளது. நாம் போலீஸைக் கண்மூடி நம்பினால், போலீஸே நமக்கு உபத்திரவம் செய்யும்.

    • அதனால் போலீஸ் பொய்யாகாது.
    • போலீஸ் பொய்யின் கருவியான நேரம் அதை நம்புபவர் போலீஸால் தண்டிக்கப்படுவர்.
    • போலீஸே திருடனுக்கு ஆதரவான நேரம் உண்டு.
    • போலீஸைக் கண்மூடி நம்புவது ஆபத்து.
    • வரலட்சுமிநோன்பு ஆன்மீகப் போலீஸ்.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அதிர்ஷ்டத்தால் திகைப்பது, அருள் மனத்தில் செயல்படுவதாகும். மழை ஜடத்தில் அருள்போல், திகைப்பு மனதில் அருளின் அடையாளமாகும்.
 
திகைப்பும் மழைபோல அருளாகும்.

 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
கொடுப்பது அனைவருக்கும் இயல்பன்று. தன்னை அர்ப்பணம் செய்வது அரிது.
 
அதைவிட அரிது தன்னை விரும்பி மலர்ந்து
அர்ப்பணிப்பதை, உற்சாகமாக உவந்து ஏற்பது.
 
******

 



book | by Dr. Radut