Skip to Content

11. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

புற ஆராய்ச்சியாலும் அக உணர்வு நெகிழ்வதாலும் சத்தியத்தையடையலாம் (P.7)

புறம், அகம் இரு முகங்கள். ஒன்றால் சாதிப்பதை அடுத்ததால் சாதிக்கலாம். அரசன் கோவில் கட்டினான். அது கல்லாலான கட்டிடம். பூசல் நாயனார் கோயில் கட்டினார். அது நெஞ்சில் எழுப்பிய ஆலயம். இறைவன் அரசனைவிடப் பூசல் நாயனாரைப் போற்றினான். மனக்கோட்டை கட்டுபவரைப் பற்றிய பழமொழி "ஆண்டி மடம் கட்டியதைப்போல்' என்பது. மனத்தில் உண்மையிருந்தால் மடம் முடியும். இறைவன் எழுந்தருளுவார்.

அரசன் நெடுநாளாகப் பாடுபட்டு ஊரைத் திரட்டி, கோயில் கட்டி முடித்து, கும்பாபிஷேகம் செய்ய நாள் குறிப்பிட்ட அன்று கனவில் பெருமான் தோன்றி, அன்றையதினம் தான் வேறு கும்பாபிஷேகத்திற்குப் போவதால் அரசனுடைய விழாவை ஒத்திப் போடும்படிக் கூறினார். "இந்த நாட்டில் என்னையறியாமல் எப்படி ஒரு கோவில் எழ முடியும்!' என்று வியந்த அரசனுடைய ஆராய்ச்சிகள் அவனை பூசல் நாயனாரின் முயற்சியிடம் கொண்டு வந்தது. தாம் கட்டும் கோயில் மனத்துள் உள்ளதுஎனவும், அவர் கையாண்ட முறைகளையும், எவ்வளவு நாள் முயற்சியது என்பதையும் பூசல் அரசனுக்குக் கூறினார்.

புறம் சாதிப்பதை அகமும் சாதிக்கும்.

புறத்தின் முயற்சி ஆராய்ச்சி, முயற்சி.

அகம் மேற்கொள்வது தவம்.

அகத்தின் பிணக்கை அன்பின் புணர்ச்சியாக்குவது தவம்.

அகம் நெகிழ்ந்து சத்தியமாக மலர்வது அகவுணர்வு.

ரிச்மாண்ட் கோட்டை Castle Richmond என்பது அயர்லாந்தில் அமைந்த கதை. ஆங்கில ஆசிரியர் ஆன்தொனி டிராலப் எழுதியது. ஓவன்என்பவர் £ 800 வருமானமுள்ள நிலச்சுவான்தார். பேர் அழகன். 30 வயது. பெற்றோரில்லை. வீட்டில் வேறு எவருமில்லை. சத்தியசீலர் gentleman. நல்லவர் எனப் பெயர் வாங்கியவர். குடும்பமில்லாததால் திருமணமாகாத இளைஞருடன் தவறற்ற கேளிக்கைகளை அதிகமாக அனுபவிப்பவர். அவர் உறவினர் (cousin) ஹெர்பர்ட். இளைஞர், 23 வயது. £ 14,000 வருமானம் உள்ளவர். தாய், தகப்பனார், சகோதரிகளுடன் வாழ்பவர். அருகில் வசிக்கிறார். வருமானமில்லாத (earl) பிரபு பேட்ரிக், 15 வயது சிறுவன், ஆக்ஸ்போர்டில் படிப்பவன். அவன் சகோதரி கிளாரா 16 வயது பெண். அவர்கள் தாயார் மேரி, 38 வயது. மேரி இளம் வயதில் (title) பட்டத்திற்கு ஆசைப்பட்டு வயதான பிரபுவைத் (earl) திருமணம் செய்து, Lady Desmond என்ற பட்டம் பெற்றார். பெண் Lady Clara, மகன் Lord Patric. ஓவன், கிளாரா 7, 8 வயதிருக்கும்பொழுது அவளை மணக்க விரும்பி, மனத்தால் அவளை வரித்துவிடுகிறான். 16ஆம் வயதில் அவளிடம் தன் விருப்பத்தைக் கூறி, சம்மதம் பெறுகிறான். தாயாருக்கு ஓவனுடைய வருமானம் சிறியதுஎன்பதால் அபிப்பிராயம் இல்லை. மகளை மறுக்கும்படிக் கூறுகிறாள். மகள் மறுத்துவிடுகிறாள். மேரி - தாயார் - கிழவரை மணந்து, விரதமான வாழ்வை நடத்தி, விதவையாகி, சொல்ப வருமானத்தில், பெரிய கோட்டையில், Lady Desmond பட்டத்துடன் வாழ்கிறாள். அவள் மனம் அன்பை அறியாது. அவள் வாழ்வில் காதல் மலர்ந்ததில்லை. விதவை மறுமணம் செய்வது அவர் வழக்கம். ஓவன் அழகன். சீரிய குணமுடையவன். பழக்கம் போதாது. மேரிக்கு அவனை மணக்க ஆசை. மேரியைவிட ஓவனுக்கு 10 வயது குறைவு. அவர்கள் நாட்டில் 60 வயது பெண் 30 வயது வாலிபனை மணப்பதுண்டு. மேரிக்கு ஓவன்மீது விருப்பம். ஓவனுக்கு கிளாரா மீது விருப்பம். கிளாரா தாயார் சொற்படி ஓவனை மறுத்துவிட்டாள். ஹெர்பர்ட் அவளை சம்மதம் கேட்டுப் பெற்றுவிட்டான். அது தாயாருக்குச் சம்மதம். சில மாதம் கழித்து ஹெர்பர்ட் தாயார் செய்த திருமணம் செல்லாது என சிக்கல் எழுந்து, ஹெர்பர்ட் தகப்பனார் மனம் உடைந்து இறந்து போகிறார். சட்டப்படி சொத்து ஓவனுக்குப் போகிறது. ஓவன் சட்டத்தைப் புறக்கணித்து, நியாயப்படி நடக்கும் பெருந்தன்மையுடையவர். அவர் சொத்தை ஏற்க மறுத்துவிட்டார். சட்டப்படி எனக்கு வாராத சொத்து எனக்குத் தேவையில்லையென ஹெர்பர்ட் சொத்தை ஏற்க மறுத்துவிடுகிறார். சொத்து ஓவனுக்குப் போவதால் மேரி தம் மகளிடம் ஓவனை மணக்கச் சொல்கிறார். கிளாரா மறுத்துவிடுகிறாள். பணத்திற்காக மனம் மாற அவள் இசையவில்லை. நிலைமை மாறி, திருமணத்தில் எழுப்பிய சிக்கல் பொய்யெனவும், மீண்டும் சொத்து ஹெர்பர்ட்டுக்கு வருகிறது. கிளாரா, ஹெர்பர்ட் திருமணம் நிலையாகிறது. திருமணம் நிலையாகுமுன் பேட்ரிக் ஆக்ஸ்போர்டிலிருந்து வந்து ஓவனை தம் தமக்கையை மணக்கும்படிக் கேட்கிறான். ஓவன் கிளாராவை மணக்க மனம் நிறைய விருப்பப்பட்டாலும், அந்த சொத்தைத் தன்னால் ஏற்க முடியாது என உறுதியாகக் கூறுகிறான். பேட்ரிக் கிளாராவையும், சொத்தையும் மறந்து, ஓவனின் பெருந்தன்மையைப் பாராட்டி, அவனைக் கட்டித் தழுவி கண்ணீர் விடுகிறான். நிலைமை மாறி, கிளாரா, ஹெர்பர்ட் திருமணம் நடைபெற முடிவாகிறது.

மேரிக்கு மகள் திருமணம் மனநிறைவு தந்தது. முதல் முறை ஓவன் மகளை மணப்பதைத் தடை செய்தாள். இரண்டாம் முறை ஓவனை கிளாரா மணக்க நினைத்து, எண்ணம் பலிக்கவில்லை. அவள் மனம் ஓவனால் நிறைந்துள்ளது. மனம் உடைந்த ஓவன் நாட்டை விட்டுப் போவதாகக் கூறி, அவளிடம் ஏற்கனவே விடை பெற்றுப் போனான். அவனைக் காண விரும்புகிறாள். எப்படி ஒரு பெண் ஓர் ஆண்மகனை நாடி 15 மைல் போய் சந்திக்க முடியும்? அது நடைபெறாது. மனம் அவனை நினைக்கிறது; அவன் உறவை நினைக்கிறது. உறவில் உணர்வு சேகரமாகிறது. நெஞ்சம் நிறைகிறது. ஓவன் உள்ளே வந்து எதிரில் நிற்கிறான். நாட்டை விட்டுப் போகுமுன் விடைபெற வந்ததாகக் கூறுகிறான்.

நிறைந்த நெஞ்சம் நினைவைச் செயல்படுத்தியது.

நெஞ்சம் தவறியதில்லை. அதற்குச் சொல் தேவையில்லை, கடிதம் எழுதவேண்டாம். காத தூரமானாலும் கருத்து காற்றுவாக்கில் செல்லும்; பதிலெழும். புறம் செய்வதை அகம் அழகாக முடிக்கும். பெண் என்பதால் போக முடியாத சூழ்நிலை. சொல்லி அனுப்புவதும் முறையில்லை. சொல், சொல்லியனுப்பாமல் போய், பதிலுக்கு ஓவனை அழைத்து வந்தது. அவன் மனம் கிளாராவால் 10 வருஷமாக நிறைந்துள்ளது. மேரி மனம் ஓவனால் நிறைந்துள்ளது. மனம் திறந்து மேரி பேசுகிறாள். ஓவனுக்கு அது காதில் விழவில்லை. விடைபெற்றுச் செல்கிறான்.

  • உள்ளத்தின் போராட்டமானாலும், உலகப் போரானாலும், புறம் சாதிப்பதை அகம் அதிகமாகச் சாதிக்கும்.
  • 1940இல் இங்கிலாந்திடம் எந்த படையும், திறனும், பணமும் இல்லை. சர்ச்சிலும், அவர் மனம் நிரம்பி வழியும் தைரியமும் இருந்தது. அவர் அகம் இங்கிலாந்தின் அகமாகி, உலகை வென்றது.
  • 1947இல் கல்கத்தா கலவரத்தின்பொழுது மகாத்மாவின் உண்ணாவிரதம் குண்டர்கள் மனத்தை மாற்றி, சமாதானத்தை நிறுவியது.
  • புறம் தவறலாம், அகம் தவறாது.
    தவறறியாதது அகவுணர்வு.
    புறமும், அகமும் பகுதிகள்.
    பூரணமுடையது ஆத்மா.

******

 



book | by Dr. Radut